சிரிப்பழகி
–றியாஸ் முஹமட்.
“என்ன அப்படி பார்க்கிறீங்க, சும்மா?”
“பார்த்தேன்.. ஏன் பார்க்கக் கூடாதோ..?”
“இல்ல அப்படி என்னதான் இருக்கு எங்கிட்ட பார்க்க?” சிரிப்புடன் கேட்டேன்.
“உங்கிட்ட என்னடா இல்ல?”
அழகன்டா நீ, மனசிலே ‘மின்னல்’ அடித்தது ஒரு பெண் அழகு என்று சொன்னதும். யாரு இவள் முதல் பேச்சிலேயே ‘டா’ போடுகிறாள்? எல்லோரிடமும் சகஜமாகப் பேசுகிறாள் கெட்டிக்காரியும் கூட. சிரிக்கவே பிறந்தவள் மாதிரி. வகுப்பில் அடிக்கடி என்னையே பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு பிடித்தும் பிடிக்காதது போல காட்டிக் கொண்டேன். நண்பர்கள் என்ன நினைப்பார்கள்?
ஒரு நாள் கேட்டு விட்டேன் “இப்படி அடிக்கடி பார்க்காதீங்க வகுப்பில் மற்றவங்க தப்பாக நினைக்கப் போறாங்க”
சொன்னதுதான் தாமதம் அவள் முகம் என்னவோ போல் ஆகி சிவந்த விட்டது…அட, சே’.. ஏன்டா இப்படிக் கேட்டேன் பாவம்…. எனக்கோ இருப்பு கொள்ள வில்லை. அன்றிலிருந்து அவள் அதிகம் பார்ப்பதில்லை எப்போதாவது ஒரு முறை பார்ப்பாள் அதுவும் முறைத்து. அவள் சும்மா பார்ப்பதை விட முறைத்து பார்ப்பது பிடித்திருந்தது பல மாதங்களாக அவள் முறைப்பு பார்வையிலேயே பல வகுப்புகள் கழிந்தது.
அன்று ஒரு நாள் சரியான மழை, யாருமே இன்று பின்னேர வகுப்புக்கு வரமாட்டார்கள் என்று நினைத்தவாறே என் சைக்கிளை ‘சன்ரைஷ்’ டியூட்டரியின் பக்கமாக மிதித்தேன். அங்கே மழைத்தூறலில் குடையுடன் அவசர அவசரமாக ஒரு உருவம் நடந்து செல்கிறது. யாராக இருக்கும் நெருங்கும் போதே தெரிந்து விட்டது அதே சிரிப்பழகி என்று…
சவனாட்டு சந்தியின் ரயில்வே கடவையை கடக்கும் முன்பே அவளை விரட்டி மடக்கி பிடித்து விட வேண்டும் என்ற ஆசை பேராசையாக மாற பறந்தது என் சைக்கிள்….என்னைக் கண்டதும் அவள் முகத்தில் குட்டி சந்தோசம், ஆனாலும் காட்டிக் கொள்ளவே மாட்டாள். கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்குகிறாள் என்று மட்டும் லேசாக புரிந்தது. ஹுதா பள்ளி ரோட்டில் வடிந்தோட வழியில்லாது சிதறிக்கிடக்கும் தண்ணீரை அவள் கடந்து செல்லும் அழகோ அழகு எத்தனைபேர் போனாலும் நம்ம பிகரை பார்ப்பது அது ஒரு தனி சுகம்தானே!
அன்று வகுப்பில் யாருமேயில்லை எங்கள் இருவரையும் தவிர வெள்ளம் ‘சன்ரைஷ்’ டியூட்டரியின் உள்ளே வரட்டுமா என்று அனுமதி கேட்டுக் கொண்டிருந்தது. நாங்களும் மழையில் உள்ளே இருக்கவும் முடியாது வெளியே போகவும் முடியாது அவதிப்படுவதும் இருவருக்குமே நன்கு புரிந்தது. எப்படியாவது பேச மாட்டாளா என் மனம் ஏங்கித்தவித்தது.
ஒருவாறு சுதாகரித்துக் கொண்டு பேசினேன், “என்ன.. உங்கள் நண்பிகள் வரவில்லையா? ”
“மழையால கூட்டப் போக வில்லை அப்படியே வந்து விட்டேன்..”
ஓஓ..மழையும் பாராது படிப்பில் இவ்வளவு அக்கறையோ? இல்ல என்னை பார்க்கத்தான்…..
“உங்கள் நண்பர்கள் யாரும் வரல..?” அவள் கேள்வி என் எண்ணத்தை திருப்பியது.
“இல்ல நானும் அப்படியே வந்து விட்டேன், யாரையும் கூட்ட போகல குடையைக் கூட எடுக்கல பாருங்களேன்” … ஒரு சிரிப்பு. ஆனாலும் ரொம்ப ஓவராக பேசிவிடக் கூடாதென மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்…ஒருவேளை இவளும் நம்மைப்போல் நினைத்து விட்டாள் அவளைப் பார்க்க வந்தேன் என்று..சேசே.. அப்படி நினைக்கமாட்டாள் நினைத்தாலும் அதுதானே உண்மை கிளாஸ் கட் அடிக்காம வாரதே அவளுக்காக தானே என்னையே சமாதானப்படுத்தினேன்.
விடுபட்ட பாடங்களை எழுதிக் கொண்டிருந்தாள். தூரத்திலிருந்த என் கண்களுக்கு விருந்து படைத்துக் கொண்டிருந்தது அவள் எழுத்து. உடல் சிலிர்த்து, அந்த மழையிலும் வியர்த்ததே என் கழுத்து! மழை சற்று ஓய்ந்து விட காற்று வீசியது டியூட்டரி கதவை இரண்டு குடைகள் முட்டியது.
வருவது என் நண்பர்களாகவோ இல்ல அவள் நண்பிகளாகவோ இருக்கக் கூடாது உள் மனதில் பிராத்தித்தவனாக யாரோ மழைக்கு ஒதுங்குகிறார்கள் என்று நினைத்தேன். இல்ல அவர்கள் எங்களை நோக்கிதான் வருகிறார்கள் எனத் தெரிந்தது. அங்கே, மழையில் நனைந்த தும்பிகளாக அவளின் நண்பிகள்குடையை மடக்கியவாறே உள்ளே நுழைந்தார்கள்…
பெரும் ஏக்கத்தோடு படபடத்து ஓய்ந்தது எங்கள் இருவரின் விழிகள் …
இங்கு விழியின் வலிகளும் வரங்கள் அல்லவா…!!
றியாஸ் முஹமட்
கத்தார்
Picture Source:
http://www.merlinsilk.com/2011/04/23/men-crying-in-public/
http://sarahflanigan.com/category/faith/