எல்லோரும் அங்கேதான் போறோம்!
எல்லோரும் அங்கேதான் போறோம்!
ஒரு அரிசோனன்
முன்குறிப்பு: இக்கதை நடந்ததாகக் குறிப்பிடும் காலம் பதினெட்டாம் நூற்றாண்டுத் துவக்கம். அப்போதைய தமிழ்நாட்டில் ஆங்கிலம் என்று ஒரு மொழி இருப்பதாகவே பலருக்குத்தெரியாது. மக்கள் தனித்தனிக் குமுகமாக வாழ்ந்தார்கள். அவர்களின் வாழ்வுமுறை முற்றிலும் வேறுவிதமாக இருந்தது. பலவிதமான கட்டுப்பாடுகள் இருந்தன. நான் செவிவழிக்கேட்ட ஒருகட்டுப்பாட்டைப்பற்றி எழுதிய கதையே இது.
“கடைசியாத்து காமாச்சி போயிட்டாளாம். ஒரே அமக்களமா இருக்கு!” என்று தன் தந்தையின் மூன்றாம் தாரத்து மகள் பாரவதி யாரிடமோ சொல்லிக்கொண்டிருப்பது முத்தண்ணா காதில் விழுந்தது. எல்லோருக்கும் அவர் முத்தண்ணாதான். அவர் பெயர் முத்துசுப்பிரமணியம் என்பது அந்த கிராமத்தில் யாருக்குமே தெரியாது. எண்பத்தொன்பது வயதான அவர்தான் அந்த கிராமத்திலேயே மூத்தவர் என்பதாலும், அவருக்கடுத்த முதியவர் அவரைவிட இருபத்திரண்டு வயது குறைந்த மூதாட்டி என்பதுமே காரணம்.
“எலே, கறுப்புக்கண்ணா, இங்கே வாடா!” என்று இரைந்தார் முத்தண்ணா.
“இப்ப கருப்பனை எதுக்குக் கூப்பிடறேள், முத்தண்ணா?” என்று வாசலில் எட்டிப்பார்த்தவாறே பதிலுக்கு இரைந்தாள் அறுபது வயதான பார்வதி.
“உன்னால முடியாத காரியத்துக்குத்தான் அவனைக் கூப்பிடுவேன்! எலே, கருப்பா? எங்கேடா போயிட்டே!” என்று மீண்டும் குரலை உயர்த்தினார் முத்தண்ணா.
“இங்கேதான் இருக்கேன் சாமி. மாட்டுக்கு கழனி காட்டிக்கினு இருந்தேன்.” என்று துண்டை இடுப்பில் கட்டுக்கொண்டு ஓடிவந்தான் கறுப்புக்கண்ணன் என்று அழைக்கப்பட்ட கருப்பன்.
பெயருக்கேற்றபடி கருநீலக்கருப்பு, எடுப்பான நாசி, வேலை செய்துசெய்து உரமேறிய உடல்கட்டு; சுருட்டை சுருட்டையான தலைமயிரைப் பின்னால் இழுத்துப் பெரிய குடுமியாக முடிந்திருந்தான். பத்துப் பதினைந்து நாளாக மழிக்கப்படாத முகத்தில் மிளகுப்போடியில் உப்பை ஆங்காங்கே தூவிவைத்ததுபோல கருப்பில் கொஞ்சம் நரைமுடி கலந்த முடிகள் அரிசி நீளத்திற்கு வளர்ந்திருந்தன. முப்பத்தேழு வயதான அவனுக்குத் நினைவு அறிந்த நாள் முதல் தெரிந்ததெல்லாம் முத்தண்ணாவுக்குச் சேவை செய்வதுதான்.
“கோடியாத்து மாமி போயிட்டானு காதுலே விழுந்தது. அங்கே என்ன நடக்கறதுன்னு பார்ந்த்துண்டு வாடா!” என்று முத்தண்ணா சொன்னதும் தலையைச் சொரிந்தான் கருப்பன்.
“என்னடா மரமாட்டம் நிக்கறே! சொன்னது காதுல விழுந்ததோல்லியோ?” என்று மீண்டும் விரட்டினார் முத்தண்ணா.
அவர் குரலில் அதட்டல் இருந்தாலும், உள்ளத்தில் இல்லை என்று உணர்ந்திருந்த கருப்பன், “என்ன சாமி, இப்படிக் கேக்குறீக? சாமிமாரு வூட்டுல கேதம் விழுந்தா, அங்கிட்டு நா போகலாங்களா? சும்மா உட்டுடுவாகளா?” என்று அவர் சொன்னதைச் தான் செய்ய இயலாத நிலைமையில் இருப்பதைத் தெரிவித்தான்.
“ஆமாம். அது ஒண்ணுதான் இந்த ஊருக்குக் கொறச்சல்! கட்டையிலே வச்சதுக்கு அப்பறம் வேகவைக்கறதையும் இவங்கனுளே செய்வானுங்களா? அப்பமட்டும் தலையாரி வேணாமா இவனுகளுக்கு!” என்று அலுத்துக்கொண்டவர், “ஒனக்குத்தான் கண்ணும் காதும் தீட்சண்யமாச்சே! தள்ளி நின்னு பாத்து, என்ன விவரம்னு தெரிஞ்சுண்டு வா. பார்வதி, என் கைத்தடிய எடுத்துக்கொடு, எங்கேயோ மறந்து வச்சிட்டேன்!” என்று தன் தங்கையும் அதே குரலில் விரட்டினார்.
“நான் என்ன சின்னப் பொண்ணுன்னு நெனப்பா, முத்தண்ணா! சும்மா வெரட்டிண்டே இருக்கேள்!” என்று மெல்ல எழுந்து, அவரது தடியை எடுக்கச் சென்றாள் பார்வதி.
இருபது வயதிலேயே கணவனை இழந்து, பிறந்தவீட்டுக்கு வந்தவள் — தனது தந்தையின் மூத்தமகனும், முப்பது வயதிலேயே மனைவியையும், மூன்று குழந்தைகளையும் வைசூரிக்குப் பறிகொடுத்துவிட்டு, இனித் திருமணமே வேண்டாம் என்று தனிக்கட்டையாக் இருந்துவிட்ட — தன்னைத் தந்தையாக வளர்த்து ஆளாக்கிய தமையன் முத்தண்ணாவுக்குத் துணையாக இருந்துவிட்டாள்.
அண்ணன் தடி எங்கு இருக்கிறது என்று மறந்து போய்த் தன்னை விரட்டவில்லை, வம்பு பேசாதே என்று மறைமுகமாகச் சொல்லுகிறார் என்றையும் உணர்ந்துதான் இருந்தாள். தனக்கு அறுபது வயதாகியும், ஆறுவயதுக் குழந்தையாக நடத்தப்படுவதுதான் அவளுக்குப் புரியாத புதிராக இருந்தது. இருந்தாலும், தந்தையாக நினைக்கும் முத்தண்ணாவை எதிர்க்கேள்வி கேட்கத் தோன்றவில்லை.
“பக்கத்திலேயே கைத்தடியை வச்சுண்டு, ஊர்பூராத் தேடினா, எங்கே கெடைக்குமாம்?” என்ற திட்டலுடன் அவர் அருகில் கிடந்த தடியை எடுத்து, தரையில் ஒரு தட்டுத் தட்டி, அவரிடம் நீட்டினாள்.
“பொணம் போறவரைக்கும் சாப்பிட முடியாது. சமையக்கட்டுலே இருக்கறதத் தூக்கி கழனித் தொட்டீல கடாசு!” என்று தடியை ஊன்றிக்கொண்டு எழுந்தார் முத்தண்ணா.
அவர் வாயிலுக்கு வருவதற்கும், கருப்பன் திரும்ப வருவதற்கும் சரியாக இருந்தது.
‘சாமி, எதோ தகராறு நடக்குது. ஊரு சாமிகளெல்லாம் சேந்து எதோ சத்தம் போட்டுகினு இருக்காக. எளவு வீட்டுச் சின்னசாமி மத்தசாமிகள ஏதோ கெஞ்சிக்கினு இருக்காக. முடியாது, முடியாதுங்கற பேச்சுத்தான் கேக்குது.” கருப்பன் தகவல் தந்தான்.
“ஆமாம், வைத்தா அங்கே இருக்கானா?”
வைத்தாதான் ஊர் விசேஷங்களுக்கு உபாத்தியாயம் செய்பவர். பிறக்குமுன்னர் செய்யும் சடங்குகளில் இருந்து, முடிவுவரை அவர்தான் எல்லாவற்றிற்கும் வரவேண்டும்.
“இருக்காரு சாமி.”
“சரி! என்னோட வா!” என்று தடியை ஊன்றிக்கொண்டு விடுவிவென்று நடந்தார் முத்தண்ணா.
“நா அங்கிட்டு வர்றது சரியா இருக்குமா சாமி? நா வேணும்னா தலையாரிக்குத் தகவல் சொல்லட்டுமா?” தனித்த குரலில் கேட்டான் கருப்பன்.
“நான் பெரியவனா, நீ பெரியவனா? எதுக்கு மேப்பேச்சுப் பேசறே? வேண்டியதில்லை. நான் இருக்கறச்சே எவனும் நீ ஏன் என்கூட வரேன்னு கேக்கமுடியாது. வாய மூடிண்டு வா, என்கூட.” என்று கடிந்துவிட்டு வேகத்தைக் குறைக்காமலேயே நடந்தார் முத்தண்ணா. அமைதியாக அவரைப் பின்தொடர்ந்தான் கருப்பன்.
அந்தச் சிற்றூர் – குக்குடநல்லூர் — எப்பொழுதோ எந்த மன்னனாலோ முத்தண்ணாவின் முன்னோருக்கு பிரமதேயமாக வழங்கப்பட்டதாம். மொத்தம் இருநூறுபேர்களுக்கும் குறைவாகவே உள்ள அந்தச் சிற்றூருக்கு ஒரு தலபுராணமும் உண்டு. அந்தக்கதை இப்போது வேண்டாம்.
ஒவ்வொரு குமுகத்திற்கும் ஒரு கோவில். பதினெட்டு வீடுகள் உள்ள அந்தணர் தெரு, கிட்டத்தட்ட அதே எண்ணிக்கை உள்ள வேளாளர் தெரு, இன்னும் பல குடிசைகள், என்று அவரவர்கள், அவரவர்கள் தொழிலைச் செய்துகொண்டிருந்தார்கள். அதேமாதிரி அந்தந்தக் குமுகங்களுக்கு அவரவர்கள் நீதி, கட்டுப்பாடு. ஒருவர் விஷயத்தில் மற்றொருவர் தலையிடுவதில்லை.
முத்தண்ணாவின் குடும்பம் மட்டுமல்ல, எல்லோரின் குடும்பமுமே பெரிதாகத்தான் இருந்தன. அப்பொழுது குக்குடநல்லூரின் எண்ணிக்கை ஐநூறுக்கும் மேலாக இருந்தது. எப்போதும்போல் திடுமென்று வந்த வைசூரி, முக்கால்வாசிப்பேரை வாரிக்கொண்டுபோய்விட்டது. முத்தண்ணா குடும்பத்தில் மிஞ்சியவர்கள் அவரும், அவர் தங்கையும்தான்.
அந்த ஊரில் முத்தண்ணாதான் மிகவும் கற்றவர். யஜுர்வேதம், சம்ஹிதை, கணம், பல உபநிஷத்துகள், ஜோசியம், இன்னும் வைதிகச் சடங்குகள் எல்லாம் தெரியும். நிறைய நிலபுலங்கள் உண்டு. இருந்தாலும், நிலத்தில் பயிரிடுபவர்களிடம் தடலடி செய்து எதையும் வாங்குவதில்லை. அவர்களாகக் கொண்டுவந்து கொடுப்பதிலேயே வீட்டுக்குதிர் நிரம்பி வழியும்.
அதிலும், தனக்குத் தேவையானதுபோக மிச்சத்தைத் தேவையானவர்களுக்கு வழங்கிவிடுவார். அவரை எதிர்த்துப்பேச ஊரில் எவருக்குமே துணிவுகிடையாது. ஆனால், பின்னர் பேசுபவர்கள் அவர் குமுகத்தில் நிறைய உண்டு…
…”என்ன நடக்கிறது இங்கே? காமாச்சி போய்ட்டானு பார்வதி சொன்னா. இங்கே எதோ தகராறுன்னு கருப்புக்கண்ணன் கண்ணுலே பட்டது. அதான் என்னனு பாக்கலாம்னு வந்தேன்.” என்று தான் வந்த நோக்கத்தை யாரும் கேட்பதற்கு முன்பே கணீர் என்று அறிவித்தார்.
யாரிடமிருந்தும் பதில் வரவில்லை.
“டேய் ராமா, எண்டா பச்ச மட்டை வல்லே? காமாச்சி காஞ்சிரங்காடு (சுடுகாடு இருக்குமிடம்) போக வேணாமா?” என்றவர், “டேய் வைத்தா, அபர காரியத்துக்கு ஒண்ணுமே நீ கொண்டுவல்லையேடா. அவ இங்கேந்து போனாத்தானே நாம புண்டம் திங்கமுடியும்?” என்று வைத்தாவை விரட்டினார்.
வைத்தா தலையை நிமிரவே இல்லை.
“கிச்சா, சொல்லுடா. என்ன தகராறு இங்கே?” என்று கிருஷ்ணசாமியை – இறந்த காமாச்சியின் ஒரே மகனைக் கேட்டார்.
பதினாறு வயதான கிச்சாவின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.
அருகில் சென்று அவன் தலையை வருடினார் முத்தண்ணா.
“சொல்லுடா, கிச்சா! ஒன் கொள்ளுத்தாத்தா வயசாறது நேக்கு. காமாச்சி என் பேத்தி மாதிரி. ஏன் எல்லோரும் பித்துப் பிடிச்சமாதிரி, காரியங்களைக் கவனிக்காம நின்னுண்டிருக்கேள்?”
“யாரும் அம்மாவைக் கொண்டுபோக முடியாதுங்கறா, முத்தண்ணா!” ஓவென்று கதை அழுதான் கிச்சா.
“என்னது? எவண்டாது அப்படிச் சொன்னது?” கிழட்டுச் சிங்கமாக உறுமினார் முத்தண்ணா.
“ஆத்துலே திரண்ட(வயதுக்குவந்த)பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொடுக்காம ரெண்டு வருஷமா ஆத்திலே வச்சிருக்கா. நாங்க என்னசொல்லியும் காமாச்சி கேக்க மாட்டேனுட்டா. நம்ம சம்பிரதாயமே கெட்டுப்போச்சு. திரண்டபொண்ணு சும்மா இருப்பாளா? அவனை, இவனைப் பாத்து வலைவீசமாட்டாளா? இப்படிப்பட்ட, ஜாதிகேட்ட விட்டுக்கு சம்ஸ்காரம் ஒண்ணுதான் கொறச்சல்!” முத்தண்ணா பின்னாலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
“யாரடாது பின்னலேந்து பேசறது? முன்னால வாடா!” என்று அதட்டினார் முத்தண்ணா.
பதிலே வரவில்லை.
“பொம்மனாட்டிப்பசங்க! முன்னால வந்து நிக்காம பின்னால பேசறாங்க, தலையைசெறச்சு முட்டாக்கு போட்டுண்டு ஒக்காந்துக்கவேண்டிய பசங்கல்லாம்! .பார்வதியை பழம்பொடவையைத் தரச் சொல்லறேண்டா, கட்டிக்குங்கடா!” அவர் குரலில் இருந்த உஷ்ணம் எல்லோரையும் சுட்டது.
“நான்தான் சொன்னேன், முத்தண்ணா!” என்று முன்னால் வந்து நின்றார் ஐம்பது வயதான அய்யாச்சாமி.
“நீ எப்பலேந்துடா ஊருக்குப் பெரியமனுஷன் ஆனே?”
“ஏன் முத்தண்ணா, நியாயத்தை எடுத்துச் சொல்ல பெரிய மனுஷனாத்தான் இருக்கவேணுமா? உங்களைத் தவிர வேற பெரிய மனுஷாளே இந்த ஊரில இருக்கப்படாதா?”
“ஓகோ, அப்படியா விஷயம்? என்னடா நியாயம் இங்கே இருக்கு? ஒருத்தி கட்டையிலே போகவேணும். அதைச் செய்யவிடாம தடுக்கறது எந்த விதத்துலடா நியாயம்?”
“உங்களுக்குத் தெரியாததில்லே, முத்தண்ணா! பெரிய மனுஷி ஆகி, மூணுமாசத்துக்குள்ளே கல்யாணம் பண்ணிவைக்கணும், அப்படி இல்லாட்டி, அந்தப் பொண்ணு யாரைவேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சாஸ்திரம் சொல்லிஇருக்கு. அப்படி நடக்கக்கூடாதுன்னுதானே பொண்ணு பெரியமனுஷி ஆகறத்துக்குமுன்னாலே கல்யாணம் பண்ணிவைக்கணும்கற சாஸ்திரத்தை நாம அனுஷ்டிக்கிறோம்! அதை ஒத்தத்தரா மீற ஆரம்பிச்சா, நம்ப சாஸ்திர சம்பிரதாயங்கள்ளாம் காத்தோடபோயிடும்!”
“அதுனால…”
“அதுனாலதான் ஒன் தங்கையைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு…. கிச்சா மாட்டேன்னுட்டான்!”
“அடி சக்கை! ஒனக்கு அம்பது வயசாறது. உனக்கு பதினஞ்சு வயசுப் பொண்ணு கேக்கறதாக்கும்! ஓம் பையனைக் கல்யாணம் பண்ணி வைக்கறதுதானே, அவனுக்கு இருபத்தாறு வயசுதானே ஆறது!” முத்தாண்ணாவின் குரலில் கிண்டல் இருந்தது.
“அதெப்படி? அவனுக்குத்தான் ஒரு பொண்டாட்டி இருக்காளே!”
“இருந்தா என்னடா? ரெண்டு பொண்டாட்டி கல்யாணம் பண்ணிக்கப்படாதுன்னு சாஸ்திரம் எங்கேயாவது சொல்றதா?”
“கிச்சாவோட அப்பன் சொத்தையெல்லாம் கண்ட எடத்துலே கொண்டுபோயி அழிச்சிட்டான். அவனுக்கு எல்லாக் கேட்ட பழக்கமும் இருந்துது. அப்படிப்பட்டவன் பொண்ணை நான் கல்யாணம் செஞ்சுக்கறேன்னு வரதே பெரிசு.”
“எப்படிடா இப்படிப் பேசறே! அப்பன் எப்படி இருந்தா எப்படிடா? காமாச்சியும், அவ கொழந்தைகளும் தங்கக்கம்பிகள்டா! பொண்ணு முக்கியமா, அல்லது செத்துப்போன அவன் அப்பன் முக்கியமா?”
“முத்தண்ணா, என் பையனுக்குக் கல்யாணம் செஞ்சுவச்சா, சீரு செனத்தி என்ன செஞ்சானு கேள்வி வரும். என்னைக் கல்யாணம் பண்ணிண்டா அப்படிக் கேள்வி ஒண்ணும்….”
“சீ! வாயக் கழுவு. வாயால மட்டும் பேசுடா. வேறு இன்னோத்தால பேசாதேடா. அதுக்கும், காமாச்சி பொறப்படறதைத் தடுக்கறதுக்கும் என்னடா சம்பந்தம்?”
“பாடம் கல்பிச்சாத்தான் இனிமே தப்பு நடக்காது.”
“அப்படியாடா அண்ணாவி?” என்றவர், அங்கிருந்த கூட்டத்தை நோக்கிக் கேட்டார். “உங்க முடிவு என்னங்கடா? டேய் வைத்தா, காரியத்தை ஆரம்பிப்பியா, மாட்டியா?” என்று வைதிகர் வைத்தாவை அதட்டினார்.
“முத்தண்ணா, நீங்க சொல்றேள்னு நான் எதையாவது செஞ்சா, என்னை கிராமத்தை விட்டு இவா ஒதுக்கி வச்சுடுவா. நான் மூணு பொண்குழந்தைகளைக் கரையேத்தணும். இப்பவேணும்னா நீங்க என்னை சம்ரட்சணை பண்ணுவேள். அப்பறம்….” என்று இழுத்தார் வைத்தா.
“இன்னும் எத்தனை வருஷம் இருந்து என்னை சம்ரட்சணை பண்ணப்போறேன்னு கேக்கறே! வேற நீ என்னடா பண்ணுவே! அது ஒருவிதத்திலே நியாயம்தான்னாலும், ஒரு பிராமணன், அதிலும் ஒரு வைதிகன், குரு ஸ்தானத்திலே இருக்கறவன், இப்படி சுயநலத்தோட இருந்தா மழை பெய்யுமாடா? நீங்க இப்படி இருக்கறதுனாலதான் வைசூரி, காலரான்னு நாம அழிஞ்சுபோறோம். அதிலேயும் பிராமணன் பண்ற தப்பு இந்த ஒலகத்தையே பாதிக்கும்டா. இதை என்னிக்குத்தான் நீங்க புரிஞ்சுக்கப்போறேளோ?” என்றவர், மற்றவர்களை நோக்கித் திரும்பினார்.
“டேய் பசங்களா! ஊருக்குப் பெரியவன்கற முறையிலே கேக்கறேங்கடா! இப்ப காமாச்சியை வழியனுப்ப நீங்க வரப்போறீங்களா இல்லையா?”
பதிலே இல்லை.
“இங்கே யாருடா உங்களுக்கு மூப்பு, வாடா இந்த முத்தண்ணா முன்னாலே!”
முத்தண்ணாவின் சவாலை ஏற்றுக்கொள்வதுபோல அவர் முன்னால் வந்து நின்றார் அய்யாச்சாமி.
“நான்தான் முத்தண்ணா இவங்களைத் தடுத்தேன்! இப்ப எல்லோரும் என் வார்த்தைக்குத்தான் கட்டுப்பட்டுண்டு இருக்கா. நாங்க எல்லோரும் எங்க வழியைப்பார்த்துண்டு போறதாத்தான் இருந்தோம். நீங்க வரேளேன்னுதான் இங்கே நின்னுண்டு இருந்தோம்.”
அய்யாச்சாமியை ஏற இறங்கப்பார்த்தார் முத்தண்ணா.
“எண்டா அய்யாச்சாமி! அப்ப காமாச்சி இங்கே நாறிண்டே இருக்கணுங்கறதுதான் உங்க தீர்மானமா?”
பதிலே இல்லை.
‘காமாச்சி இங்கே இருக்கறவரை யாராத்திலேயும் அடுப்பு எரியாது. கோவில்லே சாயரட்சை பூஜை நடக்காது. அது பரவாயில்லையாடா நோக்கு?” கேள்வியில் தீப்பொறி பறந்தது.
“அப்ப கிச்சாப்பயலை எங்க வழிக்கு வரச்சொல்லுங்கோ!”
“அப்படீன்னா?”
“அவன் தங்கையை எனக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுக்க சம்மதம்னு சொல்லச்சொல்லுங்கோ!’”
பளார் என்று அய்யாச்சாமியின் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. அதிர்ந்துபோய் இரண்டடி பின்னல் எடுத்துவைத்தார் அய்யாச்சாமி.
“எப்ப, எதைப் பேசறதுன்னு தெரியாத நீ ஒரு மனுஷன், உனக்குப் பின்னால ஒரு பட்டாளம்! தூத்தெறி!” என்று காறி உமிழ்ந்தார் முத்தண்ணா.
“எந்திருந்து போங்கடா, போக்கத்த பசங்களா! காமாச்சியைக் கரையேத்தறது எப்படீன்னு எனக்குத்தெரியும். டேய் வைத்தா, உன் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கொடுன்னு ஒருநாளைக்கு கேப்பான், இந்த அய்யாச்சாமி. அப்ப உன்பாடு, அவன்பாடு. அப்ப அதுக்கு மட்டுமில்லே, எதுக்குமே நீ எங்காத்து வாசல்படி ஏறி வரக்கூடாது. தெரிஞ்சுக்கோ.” என்று உறுமிய அவர், குனிந்து வைத்தாவின் ஒலைப்பையைப் பிடுங்கினார்.
“காமாச்சியை அனுப்பி வச்சுட்டு, இந்தப்பையை தலையைச் சுத்தி வீசி எறியறேன். பொறுக்கிக்கோ!” என்றவர், கருப்பன் பக்கம் திரும்பி, “டேய் கருப்புக்கண்ணா, நெல்மூட்டை ஏத்திண்டு வருவியே, அந்தக் கட்டைவண்டியைக் கொண்டுவாடா! ஏன் என்னன்னு கேள்வி கேக்காதே! பச்ச மட்ட ரெண்டையும் கொண்டுவந்து போடு.” என்று வழக்கம்போல அதட்டும் குரலில் விரட்டினார்.
“இதோ சாமி!” என்று ஓடினவனிடம், “எவனாவது உன்னைத் தடுத்து நிறுத்தினா, அவன் கையைக் காலை உடைச்சிடு. எவன் என்ன பண்ணுவான்னு நான் பார்க்கறேன்!” என்று இரைந்தார். தலையை ஆட்டியபடி ஓடினான் கருப்பன்.
“முத்தண்ணா, நீங்க பண்றது அநியாயம். உங்களுக்கும் ஒருநாள் எங்க தேவை வரும். உங்களையும் நாங்கதான் கரைசேக்கணும் மறந்துடாதீங்கோ!”
குரல் வந்த திசையை நோக்கித் தன் கைத்தடியைச் சுழற்றினார்.
“ஆ!” என்று அய்யாச்சாமியிடமிருந்து ஒரு கத்தல் கிளம்பியது.
“டேய், என்னை எப்படி கரையேத்திக்கணும்னு எனக்குத் தெரியும்டா. உங்க கொட்டத்த எப்படி அடக்கணும்னும் எனக்குத் தெரியுங்கடா. மனுஷனுக்கு மனுஷனா உபகாரம் செய்யலேன்னா, நரகலைத் திங்கற மிருகத்துக்கும் உங்களுக்கும் என்னங்கடா வித்தியாசம்!” என்றவர், கிச்சாவின் வீட்டிற்குள் நுழைந்தார்.
சிரித்து நேரம் சென்று வெளிவந்த அவர், பச்சைமட்டையுடன் கட்டைவண்டியில் வந்த கறுப்பனைப் பார்த்து விரல்களால் சைகை செய்தார்.
கருப்பன் அரிவாளால் மட்டையை வெட்டி, பாடைபின்னத் துவங்கினான்.
நேரம் சென்றது.
“கருப்புக்கண்ணா, உள்ளே வாடா!” என்று முத்தண்ணாவின் அதட்டல் குரல் ஒலித்தது.
“நானா? வூட்டுக்கு உள்ளேயா சாமி?” என்று இரைந்து குரல் கொடுத்தான் கருப்பன்.
“ஆமாண்டா மடசாம்பிராணி! உன்னத்தான். காது செவிடாயிடுத்தா நோக்கு?” என்று திரும்பவும் அதட்டல் வந்தது.
கலைந்து கிடந்த மயிர்க்கற்றையை அள்ளிமுடிந்துகொண்டு உள்ளே போன கருப்பன், காமாச்சியின் உடலைக் குழந்தையைப்போலத் தூக்கிக்கொண்டு வந்தான். முத்தண்ணா கண்ணைக்காட்டவே, பாடையை வண்டியில் தூக்கிவைத்தான் கிச்சா.
காமாச்சியைப் பாடையில் கிடத்தினான் கருப்பன்.
தீச்சட்டியைக் கீழே வைத்த முத்தண்ணா, கிச்சாவைப்பார்த்து தலையை ஆட்டினார்.
தீச்சட்டியை எடுத்துக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் மயானத்தை நோக்கி நடந்தான் கிச்சா.
மாட்டின் மூக்கணாங்கயிறைப்பிடித்தவாறே வண்டியை மெல்ல நடத்திச் சென்றான் கருப்பன்.
தடியை ஊன்றியவாறே அவனைப் பின்தொடர்ந்த முத்தண்ணா, கதறி அழுதுகொண்டிருந்த கிச்சாவின் தங்கையைத் திரும்பி பார்த்து, தனக்கே உரிய உரத்த அதட்டும்குரலில், “நாங்க உங்க அம்மாவைக் கரையேத்திவிடப்போறோம்மா. காலம் கெட்டுக்குக்கெடக்கும்மா, பொறுக்கிநாய்க்கூட்டம் காத்துக்கெடக்கு. கதவைத் சாத்தித் தாப்பாப் போட்டுக்கோ!” என்று இறைந்துவிட்டு நடக்கத் துவங்கினார்.
***************************
அருமையான கதை , அல்ல அல்ல
நம் வரலாறு, காலம் காலமாய் மனிதத்துக்கு முதல் இடம் கொடுத்த மக்கள் நம் மக்கள்
அந்த மனிதம் மறைந்து போய்விட்டது
அன்புடன்
தமிழ்த்தேனீ