இந்த வார வல்லமையாளர்!
டிசம்பர் 29, 2014
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு திருவாளர் திரு.ஜாதவ் பயேங் அவர்கள்
ஜான் ஜியானோ (Jean Giono) என்ற ஃபிரென்ச் எழுத்தாளர், 1953 ஆம் ஆண்டு “தி மேன் ஹூ ப்ளாண்ட்டெட் ட்ரீஸ்” (The Man Who Planted Trees) என்ற நூலை எழுதி வெளியிட்டார். எல்சார்ட் பூஃபியர் (Elzeard Bouffier) என்ற ஒருவர் மரங்கள் நடுவதில் ஆர்வம் மிக்கவராக அந்நூலில் சித்தரிக்கப்பட்டிருந்தார். அவர் விவரித்த நிகழ்வுகள் மிகவும் உண்மைத் தன்மை நிரம்பியதாக இருந்ததால் அந்த மனிதரை அறியும் முயற்சிகள் அந்நூலின் வாசகர்களால் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், நூலின் ஆசிரியர் அக்குறிப்பிட்ட மனிதர் தனது கற்பனையில் உருவாக்கப்பட்ட நாயகன் என்றும், மக்களுக்கு மரங்களின் மீது ஆர்வம் வர வேண்டியே அவர் தனது நூலில் நிகழ்வுகளைப் புனைந்ததாகவும் கூறினார். அவர் கற்பனையில் கண்ட மனிதர் நூல் வெளிவந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் நமது இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறார். அவரது பெயர் திரு.ஜாதவ் பயேங் (Jadav Payeng). பிரம்மபுத்திரா நதியின் நடுவில் உள்ள 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவிலான மணல்திட்டில் தனியொரு மனிதராக ஒரு காட்டையே உருவாக்கியிருக்கிறார் இந்த அதிசய மனிதர் ஜாதவ். இப்பொழுது அக்காட்டில் அழிவின் நிலையில் இருந்த பல்வேறு மிருங்கங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் குறைந்தது ஐந்து புலிகளும் அடங்கும், அவற்றில் ஒன்று சமீபத்தில் இரு குட்டிகளையும் ஈன்றுள்ளது. இவரது சாதனைப் பற்றிக் கேள்விப்பட்ட வல்லமையின் எழுத்தாளரும், வாசகருமான திரு. ந. உ . துரை அவர்கள் வல்லமையாளர் விருதிற்கு ஜாதவ் பயேங்கை பரிந்துரைத்துள்ளார்.
ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவிலான மணல்திட்டில் உள்ள இந்தக் காடு உள்ளூர் மக்களால் ஜாதவின் செல்லப்பெயர் “முலாய்” என்பதை ஒட்டி “முலாய்யின் காடு” (Molai Kathoni = Molai’s woods) என்று அழைக்கப்படுகிறது. இதனை உருவாக்கத் துவங்கியபொழுது ஜாதவிற்கு வயது பதினாறு. தற்பொழுது ஜாதவிற்கு வயது ஐம்பது ஆகிறது, 35 ஆண்டிகளில் தனியொருவராக இந்தக் காட்டை உருவாக்கியுள்ளார் ஜாதவ். இவரது முயற்சியின் தொடக்கதிற்குக் காரணம் 1979 ஆண்டு பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளம். அந்த வெள்ளத்தில் பல விலங்குகள் இறந்தன. வெள்ளம் வடிந்த பிறகு இப்பொழுது காடு இருக்கும் மணல்திட்டில் பல பாம்புகள் இறந்து கிடப்பதைப் பார்த்தார் ஜாதவ். வெள்ளத்தினால் அடித்து வரப்பட்டு, மணல்திட்டில் ஒதுங்கிய பாம்புகள் மரநிழலின்றி வெய்யிலில் காய்ந்து இறந்திருந்தன. அவற்றைக் கண்டு கலங்கிய ஜாதவ், அந்த மணல்திட்டில் மரங்கள் நடுமாறு கோரிக்கை வைத்து காட்டிலாகா அதிகாரிகளை அணுகினார். அவர்களோ எந்த மரமும் வளரும் தன்மை அந்த மண்ணிற்கில்லை, வேண்டுமானால் மூங்கிலை வளர்ப்பதை முயற்சிக்குமாறு ஆலோசனை வழங்கி தட்டிக் கழித்துவிட்டனர். ஜாதவிற்கு உதவி செய்வோர் யாருமில்லை, அந்த வேலையும் கடினமாக இருந்தது, ஆனாலும் ஜாதவ் தளரவில்லை.
தனது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு தானே விரும்பி தனிமை வாழ்க்கையை ஏற்று அந்த மணற்திட்டிற்கே குடியேறினார் ஜாதவ். பல மூங்கில்களை நட்டு காலையும் மாலையும் நீரூற்றிப் பராமரித்தார். சில ஆண்டுகளில் மூங்கில்கள் வளர்ந்து சிறிய மூங்கில் காடு உருவாகியது. அதனையொட்டி பிறவகை மரங்களையும் சேகரித்து அங்கு நட்டு வளர்க்கத் தொடங்கினார். அவரது கிராமத்திற்குச் சென்று சிவப்பு கட்டெறும்புகளைச் சேகரித்து வந்து விலங்குகள் உயிர்வாழாத அந்த திட்டில் வளர்த்தார். சிறிது காலத்திற்குப் பிறகு அந்த மணல்திட்டின் மண்ணின் பண்பு அந்த எறும்புகளால் மாற்றப்பட்டது. அச்சமயம் “சமூகக் காடுகள் வளர்ப்பு” திட்டத்தின்படி வனத்துறையினர் மற்றும் சில தொழிலாளர்களும் இணைந்து 200 ஹெக்டேர் மணல் படுகையில் மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது. அவர்கள் சென்ற பின்னர் அந்த மரங்களின் பராமரிப்பையும் ஜாதவ் மேற்கொண்டார். மரங்கள் வளர்ந்ததைத் தொடர்ந்து எந்த உயிருமே வாழத் தகுதியற்று இருந்த அந்த மணல்திட்டில் பல உயிரினங்களும் குடியேறத் துவங்கின.
அவ்வாறு குடியேறிய விலங்குகளில் இனஅழிவு ஆபத்தை எதிர்நோக்கியிருக்கும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களும், வங்காளப் புலியும் அடங்கும். பன்னிரு ஆண்டுகள் கழித்து வல்லூறு போன்ற பறவைகளும், வலசை போகும் பறவைகளும் பிற பறவையினங்களும், பல முயல்களும், நூற்றுகணக்கான மான்களும், மற்றும் பல சிறு விலங்குகளும் அக்காட்டை தங்கள் வாழிடமாக ஏற்றுக் கொள்ளத் துவங்கின. மான்கள், மாடுகள் போன்ற சிறு உயிரினங்களால் கவரப்பட்டு பெரிய விலங்குண்ணிகளும் அக்காட்டில் குடியேறத் துவங்கின. மரங்களே வளராது என்று கூறிய பகுதியில் தேக்கு, அகில், சந்தனம், கருங்காலி, ஆச்சா போன்ற மரங்களும் மூங்கில் காடுகளும் அடர்ந்து வளரத் துவங்கின. நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் ஆண்டின் ஆறு மாதங்கள் அக்காட்டில் வந்து தங்கி குட்டிகளையும் ஈனுகின்றன. மரங்களின் மீது கொண்ட அன்பால் ஜாதவ் தனது கிராமத்தைத் தவிர்த்துக் காட்டிலேயே சிறு குடில் போன்ற வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டு தனது மனைவி, இருமகன்கள் மற்றும் மகள் ஒருவருடன் வாழ்ந்து வருகிறார். குடும்பச் செலவிற்கு மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருமானம் ஈட்டுகிறார்.
அஸ்ஸாம் மாநில வனத்துறையினர், ஜாதவ் தனது முயற்சியைத் துவங்கி முப்பதாண்டுகள் கழித்தே அந்தக் காட்டைப் பற்றி அறிந்து கொண்டனர். அந்தக்காட்டின் அருகில் உள்ள கிராமங்களின் வயல்வெளிகளை உணவிற்காக நூற்றிற்கும் அதிகமான யானைகள் சேதம் செய்யத் துவங்கின. அவற்றை வனத்துறையினர் விரட்டிவர, அவை ஓடி வந்து முலாய்யின் காட்டில் அடைக்கலம் புகுந்தன. அரசின் பதிவேடுகளில் இடம் பெறாத ஒரு காட்டை அங்கு கண்ட வனத்துறை அதிகாரிகள் வியப்படைந்தனர். அன்றுதான் முலாய்யின் புதிய காடு அவர்களது கவனத்திற்கு வந்தது. யானைகளால் இழப்பு நேர்ந்தவர்கள் அந்தக் காட்டை அழிக்கக் கோரிக்கை வைத்தார்கள். ஜாதவ் அதற்குக் காட்டையும் விலங்குகளையும் அழிப்பதற்குப் பதில் என்னைக் கொன்றுவிடுங்கள் எனத் தீர்மானமாகச் சொல்லவும், வனத்துறையினர் ஜாதவிற்கு உதவ உறுதி பூண்டார்கள். மத்திய அரசின் கவனத்திற்குச் சென்றது ஜாதவின் சாதனை, முலாய்யின் காட்டை இப்பொழுது வனவிலங்குகளில் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சுற்றலாப் பயணிகளையும், திரைப்பட வெளிப்புறக் காட்சி படம் பிடிப்போரது கவனத்தையும் கவர்ந்துள்ளது முலாய்யின் காடு. தனியொரு மனிதராக இந்த சாதனையைச் செய்த ஜாதவ் பயேங், இதனை ‘தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை’ என்றும் அரசின் வனத்துறை காட்டின் பராமரிப்பை ஏற்றுக் கொண்டால் வேறு ஓரிடம் சென்று புதிய காடோன்றை உருவாக்கவும் தயார் என்று சொல்கிறார். சுற்றுச்சூழல் கல்வி, மரம் நடுதல் பள்ளி நாட்களிலேயே தொடங்கப்பட வேண்டும், ஒவ்வொரு மாணவரும் பள்ளி முடிக்கும் முணர் இரண்டு மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் கூறுகிறார். இயற்கையில் இருக்கும் உணவுச் சங்கிலியைக் காப்பது நம் கடமை, நம் போன்ற மனிதர்களைவிட்டால் வேறு யாரால் உயிரினங்களைக் காக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்புகிறார் ஜாதவ். அனைவரையும் சுற்றுச்சூழலின் மீது கவனம் கொள்ளவும், மரங்களை வளர்ப்பதற்கு ஊக்குவிக்கும் முன்மாதிரியாக இருக்கும் ஜாதவ் பயேங் என்னும் காட்டுமனிதர் முலாய் அவர்களை வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.
தகவல்கள் உதவி: டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ் தளத்தின் பல செய்திகளின் தொகுப்பு
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
ஒரு பக்கம் விதிகளை மீறி.. மரம்வெட்டிகள் பிழைப்பு நடத்த.. இவரோ.. காடு உற்பத்திக்கு வழிவகுக்கிறார்! ஒரு தனிமனிதனால் இதெல்லாம் இயலுமா என்கிற கேள்விக்கு விடையிறுக்கிறார்! பிரமிப்பின் எல்லையைத் தொட வைக்கிற செயல்வீரரரைப் போற்றுவதும் பாராட்டுவதும் நம் கடமை! வல்லமையாளர் விருதளித்து மகிழ்வது நமக்கேப் பெருமை!!
அன்புடன்..
காவிரிமைந்தன்
வல்லமையாளர் ஜாதவ் பயேங் (Jadav Payeng) அவர்களுக்கு வாழ்த்துகள்.