குறளின் கதிர்களாய்…(52)
-செண்பக ஜெகதீசன்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு. (திருக்குறள்:211-ஒப்புரவறிதல்)
புதுக் கவிதையில்…
மண்ணிடம் பலனேதும்
எதிர்பார்க்காமலே
மழை பொழிகிறது…
அதுபோல்தான்
சான்றோர் செய்யும் உதவியும்
கைம்மாறு கருதியல்ல…!
குறும்பாவில்…
மண்குளிர மழை பெய்வதும்,
சான்றோர்தம் உதவியும்
பிரதிபலன் எதிர்பார்த்தல்ல…!
மரபுக் கவிதையில்…
மண்ணில் மழையது பெய்தேதான்
மண்ணின் வளத்தைப் பெருக்கிடுதல்
மண்ணிடம் பலனெதிர் பார்த்தல்ல,
மழையின் குணமும் அதுதானே,
கண்ணின் இமையாய்க் காக்கும்நற்
குணத்தை யுடைய சான்றோர்கள்
மண்ணில் மற்றவர்க் குதவிடுதல்,
மழைபோல் மறுபலன் பாராததே…!
லிமரைக்கூ…
மண்ணிடம் மழையது எதிர்பார்ப்பதில்லை பலனை,
மாந்தரில் மழைபோல் சான்றோர்
பிரதிபலன் எதிர்பாராமல் பேணுவர்பிறர் நலனை…!
கிராமிய பாணியில்…
மழபெய்யுது மழபெய்யுது
மண்ணுகுளுர மழபெய்யுது,
மண்ணுகிட்ட மறுஒதவி
கேக்காமலே மழபெய்யுது…
மனுசருலயும் மழபோல
மத்தவனுக்கு ஒதவிசெய்ய
மனசுவுள்ள மனுசருண்டு,
அவுரு
மறுஒதவி எதயுமே
மனசாலயும் கேக்கமாட்டாரே…
மழபெய்யுது மழபெய்யுது
மண்ணுகுளுர மனசுகுளுர
மழபெய்யுது மழபெய்யுது…!