சுமையென்று நினைத்து . . .
வில்லவன் கோதை
நாட்டு ஓடு வேயப்பட்ட அந்த வீடு அழுக்கேறிக் கிடந்தது.
மரச்சட்டங்களால் தடுக்கப்பட்டிருந்த அதன் கதவுகளில் பழமையான பூட்டு ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது.
தயங்கித் தயங்கி அந்த வீட்டின் முன் நிற்கிறான் கார்த்தி.. இத்தனைக்கும் அவன் பிறந்து வளர்ந்த வீடுதான். இன்று அவனுக்கே அன்னியமாக தோன்றுகிறது.
நடுத்தர வயதைக்கடந்த மெலிந்த பெரியவர் ஒருவர் குறுக்கிடுகிறார்.
“வாத்தியார் வைரமுத்து …”
கார்த்தி வாக்கியத்தை முடிக்கவில்லை.
“ஆமா தம்பி. .இப்ப அவுரு இல்லீங்க .கொஞ்ச நாளைக்கு முன்னால தவறிட்டாருங்க.“
பெரியவரின் பதில் கார்த்தியின் உடலிலும் உள்ளத்திலும் மெல்லிய அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.
அப்ப அவுரு பொண்ணு.
“பாப்பாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சிங்க. மாப்பிள்ள கும்மோணம் பேங்ல செக்குரிட்டியா இருக்கிறதா கேள்வி. வாத்தியாரு கல்யாணம் முடிஞ்சி கொஞ்ச நாள் இங்கதான் இருந்தாருங்க.அப்ரம் பாப்பாவே கூட்டிகிட்டு போயிடுச்சிங்க.. நீங்க. தம்பி …“
முதன் முறையாக வாத்தியாரின் மூத்த பிள்ளை என்று சொல்லிக்கொள்ள அவன் நா தடுமாறுகிறது. அப்படி ஒன்றும் கார்த்தி தப்பானவன் இல்லை.
“தெரிஞ்சவுங்க..”
“ வடக்குத்தெருவுல சீனுவாசன் டாக்டர் வீட்டுக்கு நேர் எதிர்வீடு. போனா பாப்பாவ பாக்கலாமுங்க. “
கார்த்திக்கு தெரியாமல் நிகழந்துபோன தகவல்களை தொட்டுக்காட்டிய பெரியவர் நகர்கிறார்.
நெஞ்சில் ஒரு இனம் புரியாத படபடப்பு. அவன் நினைவுகள் பின்னோக்கி அலசுகிறது.
கடைசியாக அப்பாவையும் இழந்துவிட்டேன். அன்று நான் செய்த முடிவு என்னைப்பொறுத்தவரை தவறென்று தோன்றவில்லை. இருந்தும் இன்று இந்த மஞ்சுவைக்கூட எதிர் கொள்ள போதுமான துணிவு எனக்கு ஏன் ஏற்படாமற்போயிற்று.
இருபது வருஷம் கழிந்தபின்னும் ஏன் இந்த குற்ற உணர்வு ! மன உருத்தல். !
சொற்ப வருமானத்தில் போராடிக்கொண்டிருந்த அப்பாவை உதறி நான் ஓடியிருக்கக்கூடாது.
கனவுகளோடு கல்யாணத்தை உறுதி செய்து கொண்டிருந்த அந்த புதுப்பெண் , தீராத நோயுற்ற அம்மா , அடுத்த பத்து வருஷத்தில் கரைசேற்க வேண்டிய தங்கை…
நான் பொறுபற்று திரிந்தபோதும் ஓய்வின்றி உழைத்து எங்களைச்சுமந்தவர் அப்பா. அம்மாவின் முடிவற்ற மருத்துவச்சுமைக்கிடையே என்னை முதுகலை பட்டாதாரி ஆக்கி மகிழ்ந்தவர்.
தான் சுமக்கும் சுமைக்கு காலப்போக்கில் இவன் ஒரு சுமைதாங்கியாக இருப்பான் என்று நினைத்திருப்பாரோ என்னவோ.
அவரை தெரிந்தோ தெரியாமலோ ஏமாற்றிவிட்டேன்.
அவர் தேடித்தந்த பலவேறு வேலைகள் அன்று என் கவுரவத்துக்கு இழுக்காக தோன்றிற்று.
ச்சே ! என்ன காரியம் செய்தேன்.
கார்த்திக்கு நினைவெல்லாம் கசந்தது.
அன்று மனைவி உடல் மோசமடைய கார்த்திக்கு கால்கட்டு போட நினைத்தார் வைரமுத்து வாத்தியார்.
பெண்ணுக்கொன்றும் குறையில்லை. கார்த்திக்குகூட சம்மதம்தான். ஆனால் பெண்ணின் வயது முதிர்ந்த பெற்றோர் அவன் நினைவுகளில் இடறினர். அவர்களையும் சுமக்கக்கூடிய சூழல் ஏற்பட்டால் என்ன செய்வதென்ற ஒரு அதீத கற்பனை. கிடைத்திருக்கிற வாழ்க்கையில் சுமையின்றி சுதந்திரமாக பறக்கவிரும்பியவன். அதுதான் அவனுக்கு முக்கியம்.இந்த உறவுக்கு அவன் தயாராயில்லை. .
“ நம்ம குடும்பத்துக்கேத்த நல்ல பொண்ணுடா. ஒன்ன நம்பி நிச்சியம்கூட பண்ணிட்டேன்..இதில ஒனக்கு இஷ்டமில்லேண்ணா அத்தோட உட்டுடு. அப்ரம் என் மொகத்தலயே விழிக்காதே. “
தன் கனவுகள் தன் கண்ணெதிரே நொறுங்கிவிடக்கூடாதென்ற எச்சரிக்கையில் விருட்டென்று எழுந்து கொல்லைபுறம் போகிறார் அப்பா.
கல்யாணம் என்பதையே கால்கட்டு என்றுதானே சொல்கிறார்கள். அந்த கட்டை தானே போட்டுக்கொள்ள விரும்பாமல் வீட்டைவிட்டு வெளியேறி அன்று இரவில் சென்னைக்கு ரெயிலேறுகிறான் கார்த்தி
பையன் யாரையோ லவ் பண்ணியிருக்கான். அதான் விட்டுட்டான் சவாரி !
ஊரே கூடிக்கூடி பேசியிருக்கும். அப்பா முகம் எப்படி இருந்திருக்கும்.
இந்த தேசத்தின் வரைபடங்களில் மட்டுமே அறிந்திருந்த பல்வேறு பிரதேசங்களில் நாயாக அலைந்து இறுதியில் கொல்கத்தா நகரில் ஒரு ட்ராவல்ஸ் நிறுவனத்தில் அடைக்கலமாகிறான்.. அதுவரை அவன் சந்தித்த துயரங்கள் கேட்க சகிக்காதவை.
இருபது வருடம்கள் முடிந்து போனது.
நாடெங்கும் சுற்றிய கார்த்தி இந்தமுறை ஒரு சுற்றுலா குழுவினரோடு தமிழகம் வந்தபோது அவன் நெஞ்சில் புதைக்கப்பட்டிருந்த நினைவுகள் அவனை இங்கே இறக்கிற்று.
வெளி வராண்டாவில் இந்து யாரிடமோ பேசும் குரல் கேட்டு வெளியே வந்தாள் மஞ்சுளா.
“மஞ்சுளா அம்மா வீடு இதுதானேண்ணு இந்த மாமா கேட்டார். மஞ்சுளா வீடுதான் இது. அவுங்க அம்மா வீடுல்லண்ணு சொன்னேன். “
வீட்டுப்பாடங்களை செய்துகொண்டே பதிலளித்தாள் இந்து. பத்து வயது இருக்கக்கூடும். மீண்டுமொருமுறை காணவிரும்பும் வசீகரமான சிவந்த முகம். துருதுருவென்ற பார்வை.
தோளில் கருப்புப்பையொன்றை மாட்டியவாறு கலைந்த முடியோடு நின்றிருந்த அந்த இளைஞனைப்பார்த்தும் இனம் புரியாத குழப்பமும் அதைத்தொடர்ந்து எதிர்பாராத வியப்பும் அடைந்தாள் மஞ்சுளா.ஏறத்தாழ தன்னையொத்த சாயலில் அவன் இருப்பதை உணர்ந்து அவள் அறியாமல் உடலெங்கும் மகிழ்ச்சி அலைகள் பரவின.
அவனுக்கும் அதே மாதிரியான மனநிலைகள் ஏற்பட்டிருக்கக்கூடும்.
“வா ண்ணா ! “
அடுத்த சில நிமிடங்களில் இயல்பு நிலைக்கு திரும்பிய மஞ்சுளா அண்ணனை வரவேற்றாள். உள்ளே நுழைந்த கார்த்தி கைப்பையை கீழே வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தான்.
இந்துவுக்கு நடப்பது வித்தியாசமாய் தெரிந்தாலும் அவள் வீட்டுப்பாடத்தில் லயித்திருந்தாள்.
“நல்லாருக்கியா அண்ணா “
எதிர் இருக்கையில் அமர்ந்த மஞ்சு பேச்சைத்துவக்கினாள்.
கார்த்தி நா வரண்டுபோனதை உணர்ந்தான் .எந்த சொற்களும் அவனிடமிருந்து வெளியேறவில்லை. குளிர்ந்த நீரை ஒரு டம்ளர் நிறைய கொண்டுவந்து வைத்தாள் மஞ்சுளா.
“இருபது வருஷத்ல ஒனக்கு எங்க நெனைப்பு ஒருதடவகூட வரல. அப்பா அன்னிக்கு அவரது இக்கட்டான சூழல்ல சொன்ன ஒரு வார்த்த ஒனக்கு பெரிசா போயிடுச்சி. அவர் கடைசிவரைக்கும் நீ வருவே வருவேண்ணு .. போ . . ண்ணா ! “
ஆத்திரமும் அழுகையும் பீரிட்டு வெளியேறுகிறது. நெஞ்சுக்குழியில் ஏதோ அடைப்பதை உணர்ந்தாள் மஞ்சுளா.
துக்கத்தை மறைத்து அடுக்களைக்குள் நுழைந்த மஞ்சுளா .. .
“அன்னிக்கு நிச்சியம் பண்ண பொண்ணு நெலய நீ நெனச்சி பாத்தியா. ஊரே அப்பா மொகத்ல காரி துப்புச்சி. “
அடுப்பிலிருந்த பாலை இறக்கி பில்டரில் இருந்த டிகாஷத்தை சர்க்கரையோடு அளவாக கலந்து அண்ணனுக்கு முன்னாலிருந்த மோடாவில் வைக்கிறாள்.
காபியின் மணம் அந்த அறையை நிறைக்கிறது. கார்த்தியின் குற்ற உணர்வு அந்த மணத்தை விழுங்குகிறது.
வலதுகையால் முகத்தைத் தாங்கியவாறு பதில் ஏதும் பேசாமல் இருக்கையில் இருந்தான் …
“நீ போயி பத்து நாளைக்கெல்லாம் அம்மா போயிட்டாங்க. பெத்த பெண்ண எப்டி கரைசேர்க்கபோறோம்ங்ற பயம் அப்பாவுக்கு. அப்பாவோட ப்ரண்ட் மூலமா வந்த இவர்தான் எங்கள இக்கட்டான சூழல்லேயிருந்து விடுவிச்சார்.
“அதுமட்டுமல்ல. அப்பா படுத்த படுக்கையா போனப்ப ஒண்டரை வருஷத்துக்கு மேல அவர் செஞ்ச பணிவிடைகள் கொஞ்ச நஞ்சமல்ல.அந்த விஷயத்ல அப்பா குடுத்து வெச்சவர்தான். அவருக்கு எந்த கஷ்டமும் தெரியாம கடைசிவரைக்கும் அவருக்கு தொணையா இருந்தார்.
இப்படியொரு புருஷன் எனக்கு கெடக்கிறதுக்கு நான் பாக்கியசாலிதான். இந்த குடும்பத்ல மூத்தவனா பொறந்த நீ பெத்து வளர்த்த அப்பா ஏதோசொல்லிட்டாருண்ணு ஓடிப்போயிட்ட.
எல்லாம் முடிஞ்சிபோனபிறகு இப்ப ஏண்ணா வந்த..யாராவது உசிரோடு இருக்காங்களாண்ணு பாக்கவா .இல்ல நீ உசிரோட இருக்கிறத காம்பிக்க வா. “
கண்களில் நீர் கொப்புளிக்க எதிர் இருக்கையில் அமர்கிறாள் மஞ்சுளா.
“அப்பா சாகிற வரைக்கும் ஆபீசுலயும் வேல பாத்துகிட்டு ராப்பகலா கண்விழிச்சி . . . . அவர் ரொம்ப பாவம்ண்ணா. போன ஜன்மத்ல அவருக்கு புள்ளையா பொறந்து ஒன்னாட்டம் ஓடிட்டாரோ என்னவோ . “
கார்த்தியின் கண்கள் கலக்கமுற்று கண்ணீரீரை வெளியேற்ற முயன்றது. முகத்தை தாழ்த்தி கட்டுப்படுத்த முயன்றான்.
“சரி! காப்பிய குடிச்சிட்டு வா. வென்நீர் போட்ருக்கேன்.குளிக்கலாம் “
கலங்கிய கண்களை புடவைத்தலைப்பால் அழுந்த துடைத்துக்கொண்டே உள்ளே போனாள் மஞ்சுளா.
தங்கையின் பேச்சைக்கேட்கக்கேட்க கார்த்திக்கு ஓருபக்கம் தன்மீதே வெருப்பாகவும் இன்னொருபக்கம் மஞ்சுவை பார்க்க பார்க்க வியப்பாகவும் இருந்தது
மஞ்சுவா இப்படி பேசுகிறாள். காலம்தான் மனிதர்களை உடலாலும் உள்ளத்தாலும் எத்தனை எளிதாக பக்குவப்படுத்துகிறது.
குளியலறைக்குள் நுழைந்த கார்த்தி உடல் அசதி தீர குளித்தான். உள்ளத்தில் ஊறிக்கிடந்த நெடுநாள் குழப்பங்கள் ஓரளவுக்கு வெளியேறியதை உணர்ந்தான்.
தன்னுடைய பொறுப்பற்ற தன்மையும் எங்கிருந்தோ வந்த ஒருவனின் அசாத்திய பண்புகளையும் எண்ணிப்பார்த்தான். தான் கற்றிருந்த உயர்கல்வி தனக்கு இதை எள்ளளவும் போதிக்கவில்லை என்ற எண்ணமே ஓங்கிற்று.
“இந்து ! மாமாவுக்கு டவல் கொண்ட குடு. “
அடுக்களையிலிருந்து குரலெழுப்பினாள் மஞ்சு.
“ஒனக்கு இப்பிடியொரு அண்ணன் இருக்கிறதை இதுவரை சொல்லவே இல்லியே“
என்றவாறே புதிய டவல் ஒன்றை கொண்டுபோனாள் இந்து.
“சொல்ற மாதிரியா அவன் நடந்துகிட்டான் ! “
மெல்ல முணுமுணுத்த படியே கார்த்திக்கு சுடசுட உணவு பரிமாரினாள் மஞ்சு.
“ஒன் பொண்ணு ஒன்னாட்டம் ரொம்ப சமத்தா இருக்காளே ! இன்னிக்கு சண்டேதானே. அத்தான் எங்க போயிருக்கார். “
முதன் முறையாக சாப்பிடுவதற்குமுன் வாயைத்திறந்தான் கார்த்தி.
“அவுரு மேனேஜரோட ஹெட் ஆபீசுக்கு கேம் போயிருக்கார். நாளை காலேலதான் திரும்புறார். “
“எங்க ட்ராவல்ஸ் கோச் ஈவினிங் கும்பகோணம் வருது.அதுக்குள்ள நான் போயிடணும். “
“நாளைக்கு இருந்து அவர பாத்துட்டு போ அண்ணா. அவரு ரொம்ப சந்தோஷப்படுவார். “
‘’இல்ல மஞ்சு .இன்னும் மூணுமாசத்துக்குள்ள நான் சென்னைக்கு மறுபடி வருவேன்.. அத்தான் கிட்ட சொல்லு. அவர் மொகத்ல விழிக்கக்கூடிய தெம்பு எனக்கு மொதல்ல வரணும்.”
அவனுக்கு பிடித்தமான வத்த கொழம்பையும் கத்தரிக்காய் வருவலையும் நெடு நாட்களுக்குப்பிறகு தங்கை கையால் சாப்பிட நேர்ந்ததை எண்ணி மகிழ்ந்தான்.
மஞ்சுவால் மேற்கொண்டு பேசமுடியவில்லை. அவனை பார்த்த இந்த தருணங்களே அவளுக்கு பெரிதாயிருந்தது.
“மஞ்சு ஒன் கல்யாணத்துக்காக நான் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த பணம். இது .இந்துவுக்காவது ஒபயோகமா இருக்கட்டும். “
அய்ந்து லட்சத்துக்கான ஒருகாசோலையை மஞ்சுவின் பெயரெழுதி இந்துவிடம் கொடுத்தான் கார்த்தி.
“மாமா ஒரு நாள் இருங்க மாமா. “
“நிச்சியமா இன்னொருமுறை வர்றம்மா. “
கண்கலங்க விடை கொடுத்தாள் மஞ்சு.
சந்தோஷம் என்பது பொறுப்பற்று திரிவதில் இல்லை. சகமனிதர்களிடம் அன்பை பகிர்ந்து கொள்வதில்தான் இருக்கிறதென்பதை கார்த்தி உணர்ந்து கொண்டான்.
உறவுகளும் நட்புகளும் ஏற்பட்டிருப்பது அதற்காகத்தான்.