விசாலம்

என் பள்ளியில் வருடாந்திர பரிசு விழாவின் போது ஓரு வித்தியாசமான நடனம் வைக்க எண்ணி மூங்கில் நடனம்  ஒன்றைத்தயாரிக்க முயற்சித்தோம்  {bamboo dance}. இதற்காக நாகாலாந்து பெண்மணியை அழைத்தோம். அவள் தில்லியில் இருந்ததால் எங்கள் பள்ளிக்கு வர ஒப்புத்துக்கொண்டு நடனம் சொல்லிக்கொடுக்கவும் ஆரம்பித்தாள். அவளிடம் பழகியதில் நாகாலாந்தின் மக்கள், கலாச்சாரம் பற்றி பல விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன்.  அவள் எனக்கு நல்ல தோழியும் ஆனாள். அவள் சொன்னதில் சில பகுதிகளை இங்கு எழுதுகிறேன். அவளது பெயர் என் வாயில் நுழையவில்லை. ஆதலால் அவளை ரீமா என்று பெயரிட்டு அழைத்தேன்.

“ரீமா, உங்கள் இடத்தில்  எது மிகவும் பெயர் போன இடம்? எங்கு எல்லோரும் வருகை தருகிறார்கள்?”

“அதுவா … முதலில் கோஹிமாவைச் சொல்லலாம்.”

“உங்களைப் பார்க்க கொஞ்சம் சீனா, கொஞ்சம் ஜப்பான்  மக்களின் சாயல் தெரிகிறதே. “

“இல்லை இல்லை. நாங்களும் பாரதத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்று எங்கள் முன்னோர்கள் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். இந்தியர்களைப் போலவே  எங்களுக்கும் மந்திரம், பூஜை,  இசை எல்லாம் உண்டு. நாட்டுப்பாடல்கள் அதிகமாக பாடுவோம். எங்கள் ஊரில் எங்கள் முன்னோர்கள் இருந்த இடத்தில் 12 அடி நீளம் 4 அடி அகலம் கொண்ட ஒரு கல் வைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி கேள்விப்பட்டதில்லையா மேடம்?”

“இல்லையே! ஏன் அந்தக் கல்லில் என்ன விசேஷம்?”

“கேஸாகேனோமா என்ற குடியிருப்பு பகுதியில் இந்தக் கல்லைக் காணலாம். இந்தக் கல்லுக்கு கிடைக்கும் மரியாதை அபாரம். மக்கள் தினசரி இங்கு வந்து பயபக்தியுடன் கண்களை மூடியபடி தியானித்து பின் காணிக்கை செலுத்துவர். வீட்டிற்கு வரும் விருந்தாளிகளையும் இங்கு அழைத்து வந்து அவருக்காக ஆசிகள் வேண்டி மந்திரங்களை படிப்பார்கள்.”

“ரீமா,  இது ரொம்பவே இன்டெரெஸ்டிங், இன்னும் இந்தக் கல்லைப் பற்றி  சொல்லு.”

“எங்கள் முன்னோர்கள் காலத்தில் இந்தக்கல்லுக்கு ஒரு மேஜிக் சக்தி இருந்ததாம். காலையில் இந்தக்கல்லின் மேல் நெற்மணிகளைப் பரப்ப  மாலையில் அது இரண்டு பங்காக வளர்ந்து விடுமாம். இந்தக்கல்லை வைத்தவர்கள் இதைப்பயன்படுத்திக்கொண்டார்களாம்.  அந்தக் கதையைச் சொல்லட்டுமா?”

“ஆஹா! இதைத்தான்  நான் எதிர்ப்பார்த்தேன். சொல்லு.”

“நாகர்களின் பாரம்பரிய வரலாறு இது. அவர்களின்  ஆதி முன்னோருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்கு திருமணம் ஆனது  குடும்பத்தைக் காப்பாற்ற  விவசாயம் கைக்கொடுத்தது. அப்போதுதான் ஒரு கல் அவர்கள் கண்ணில் பட்டது. அந்தக் கல்லில் மந்திரம் உருவேற்றப்பட்டதால் அதில் ஒரு மாதிரி தெய்வ சக்தி இருந்தது . இதை அந்தப் பிள்ளைகள் கண்டுபிடித்தனர். ஒரு நாள் அந்தக் கல்லின் மேல் காலையில் தானியங்களைக் காய வைக்க  மாலையில் அது இரண்டு மடங்கு அதிகமாகி இருந்தது. இதைக் கண்டப்பின் தினமும் அந்த மூன்று சகோதரரும் போட்டிப்போட்டுக்கொண்டு  அந்தக் கல்லின் மீது தானியங்களைப் பரப்ப ஆரம்பித்தார்கள். இதனால் அவர்களுக்குள் சண்டை வராமல் இருக்க அந்த மூன்று பிள்ளைகளும் ஒரு அட்டவணைப் போல் போட்டுக்கொண்டு அதன் பிரகாரம் அவரவர்கள் முறை வரும் போது தானியங்களைப் பரப்பி அதை இரட்டிப்பாக ஆக்கிக்கொண்டனர் ஆனாலும் பேராசை யாரை விட்டது! தானியங்களுக்கு பதிலாக செல்வத்தை வைக்க ஆரம்பித்தனர். அதுவும் இரு மடங்கு ஆனது. அவர்கள் நடுவே போட்டியும் சண்டையும் வந்தது. அவர்களது தந்தை இதைப் பார்த்து நொந்துப் போனார். பின்னர் அந்தக் கல்லினால் தானே  ஒற்றுமை குறைந்து சண்டை வருகிறது என்று அந்தக்கல்லை நெருப்பில் போட்டார். இதனால் அந்தக் கல்லில் விரிசல் உண்டானது. அந்தக் கல்லின் ஒளியும் குறைந்தது. அந்தக் கல்லில் இருந்த ஆத்மா சுவர்க்கத்திற்கு போய்விட்டது. கல்லுக்கு இருந்த மேஜிக் சக்தியும் போய்விட்டது.”

“அப்புறம் என்ன ஆச்சு? அந்தப் பிள்ளைகள் என்ன செய்தார்கள்?”

“அவர்கள் மூன்று திசைகளில் தனித்தனியே சென்று பிரிந்து விட்டனர். அவர்கள் வழி வந்த மலை வாசிகளே அங்காமா, சேமா, லோத்தா போன்றவர்கள். அவர்கள் பலவேறு நாக மக்களை உண்டுபண்ணினர். ஒரு நாள் அந்தக்கல்லில் திரும்ப  தெய்வீக அம்சம் திரும்பும் என்ற நம்பிக்கை வைத்திருக்கின்றனர்  அந்த  மக்கள்.”

“வந்தால் நன்றாக இருக்கும் இல்லயா ரீமா? நானும் அதில் என் ரூபாய் நோட்டுக்களை அடுக்கவா?” என்று சொல்லி சிரித்தேன்.

“இன்னும் கேள். இதைத் தவிர அந்தக் கிராமத்தில் ஒரு ஸ்பெஷல் மரம் இருக்கிறது. அங்கு பறவைகளுக்கு ஆண்டு விழா நடைப்பெறும் இது எப்படி இருக்கு?”

“அட  பறவைகளுக்கு ஆண்டு விழாவா? கேட்கவே ஜாலியாக இருக்கிறதே!”

“ஆம் அந்த மரத்தில் ஆயிரக்கணக்கான  பறவைகள் வாழ்ந்து வருகின்றன.  டிசம்பர் மாதம் இந்த விழா நடக்கும். நாகர்களின் யாராவது ஒருவன்  தான் ஒரு மகானாக மிகச்சிறந்தவனாக ஆக வேண்டும் என்றால் அவன் அந்த மரத்திலிருந்து ஒரு பறவை பிடித்து வரவேண்டும். அப்படி செய்தால்தான் அவனுக்கு வழிபாடு செய்ய அதிகாரம் கிடைக்கும் அந்த அதிகாரமும் மிகுந்த மரியாதையுடன் ஒரு சடங்கு போல் நடத்தப்படும். எங்களது  விசேஷ  நாட்களில்  எங்கள்  அருகில் குடியிருக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் விருந்து வைக்கும் பழக்கம் எங்களிடம் உண்டு.”

“ஆமாம் ரீமா  நாங்களும் முக்கிய பண்டிகையின் போது பல உறவினர்கள் கூடி கொண்டாடி மகிழ்வோம். ஆனால் இந்த வழக்கம் கிராமத்தில்தான் இன்னும் நிலைத்து நிற்கிறது. நகரத்தில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது .”

“எங்கள் கிராமத்தவருக்கு விருந்து வைத்தப்பின் அது ஒரு  ஸ்பெஷல் தினம் என்பதை அறிவிக்க ஒரு கல்லை அங்கே நிறுத்தப்படுகிறது. இந்தக்கல் நாட்டும் பழக்கம் இப்போதும் தொடருகிறது. விருந்தோம்பல் என்பது எங்களுக்கு மிக முக்கியம் . நாங்கள் எந்த அன்னியரையும் மனம் திறந்து வரவேற்போம். பணிவிடையும் செய்வோம்.”

“ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் வெகுகாலத்திற்கு முன்பாகவே  நெருங்கிய  தொடர்ப்பு  இருந்திருக்க வேண்டும் ஆரியர்கள் போலவே  நீங்களும்  திருவிழாக்களை மந்திரம். இசை, நாட்டுப்படல்களுடன் கொண்டாடுகிறீர்கள். நாங்கள் சில இடங்களில் சுயம்புவாக வரும் கல்லில் சிவலிங்கத்தையும், மாரியம்மனையும், பிள்ளையாரையும், அனுமாரையும் காண்கிறோம். அங்கு பூஜையும் செய்கிறோம். நீங்களும் மந்திரத்துடன் பிரதிஷ்டை செய்யும்  கல்லை தெய்வரூபமாக பார்க்கிறீர்கள். எல்லா இடங்களிலும் செயல்படும் விதம் வித்தியாசமாக இருக்கிறதே தவிர நம்பிக்கை மூலதனமாக இருக்கிறது இல்லையா?”

“ஆம் எல்லாமே நம்பிக்கையின் மேல் தான்  நடக்கிறது.  முன்பு ஜப்பானிய போரில்  ஜப்பானிய படை கோஹிமாவிலும் வந்தது பாரத சிப்பாய்களில் இருந்த வீர நாகர்கள்  அணி திரண்டு  அவர்களை மேலே வரமுடியாமல் செய்து விட்டனர். அவர்களும் எப்படியாவது முன்னேறி விடவேண்டும் என்று பிரயத்தனம் செய்தனர். ஆனால்  நாகர்கள்  அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டனர். அந்த மகிழ்ச்சியில் வெகு தூரத்திலிருந்து ஒரு கல்லை எடுத்து வந்தனர் அதை மணிப்பூர். பீமாபூர் சந்திக்கும் நாற்சந்திக்கு இடையே நிறுவப்பட்டு இருக்கிறது. அதில் ஒரு வாசகமும் எழுதப்பட்டிருக்கிறது,

“நீங்கள் உங்கள் வீடு செல்லுங்கள். நாங்கள் உங்களுக்கு அடிக்கடி சொல்வது இதுவே. நீங்கள் நாளை உயிரோடு வாழ நாங்கள் இன்றே விடுதலை வழங்குகிறோம்.”

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *