Advertisements
இலக்கியம்சிறுகதைகள்

வசந்த காலங்கள்

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

சிந்தனைச் சுழல்கள் என் இதயத்தை வலம் வந்து கொண்டிருந்தன. கடந்து போன என் வாழ்க்கையிலே நடந்து முடிந்த சம்பவங்கள் எத்தனையோ! நான் அநாதையாய் ஆகி விட்ட பின்னும் அன்போடு பராமரிக்கப்பட்டேன். பெற்றோரின் அரவணைப்பைக் காண முடியாத பாவியாகி விட்ட போதிலும் அந்த சுகங்களைக் காணும் பாக்கியத்தை இறைவன் அளித்திருந்தான்.

ஆமாம்! எனது மாமியினதும் மாமாவினதும் பாசப்பிணைப்பில் நான் பராமரிக்கப்பட்டேன். அன்பை, ஆதரவை ஏன் அனைத்தையும் பெற்றேன். குறைகளின்றியே இன்று  குமரிப் பருவத்தையும் அடைந்து விட்டேன். அந்த மாமி மாமாவின் அன்பை நினைக்கையிலே என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிறையும். என் மாமிக்கு ஒரே ஒரு மகன் தான் இருந்தான். அழகும் அறிவும் கொண்ட என் மச்சான் ருவைஸ் மிகவும் கெட்டிக்காரன். என்னோடு போட்டி போட்டுக் கொண்டே எந்நேரமும் படிப்பான். படிப்பில் மட்டும் தான் போட்டி. மற்றபடி நானும் அவனும் மிக அன்பாகவே இருந்தோம். பாடசாலையில் கூட ஜெபரீன், ருவைஸ் என்றால் எல்லோருக்குமே தெரியும். படிப்பிலே எம்மைத் தவிர யாரும் முந்திக் கொண்டதேயில்லை. மாமிக்கும், மாமாவுக்கும் சந்தோஷம் நிறைந்து வழியும். கண்ணை இமை காப்பது போலக் காத்து வந்தார்கள். இறைவனருளால் நானும் மச்சானும் ஒன்றாகவே படித்து ஒன்றாகவே பல்கலைக்கழகம் சென்று ஒன்றாகவே டாக்டர்களாக வெளியேறினோம்!

“என்ன ஜெபரீன் யோசிக்கிறீங்க ?” என்று கேட்டவாறே மச்சான் என்னருகில் வந்தததும் நான் யோசனைகளில் இருந்து விடுபட்டேன். “இல்ல….அடுத்த மாசம் களுத்துறைக்கு மாற்றம் கிடைச்சிருக்கு. அதுதான் யோசிக்கிறேன்” என்றேன். “உம்மா கூடச் சொன்னாங்க… என்னையும் உங்களோட  துணைக்குப் போகட்டாம்” என்றார் மச்சான். ஒரு நாளும் இல்லாதவாறு மச்சான் என்னை உற்று நோக்கி அவ்வார்த்தைகளைச் சொன்னதும் எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. இவ்வளவு நாட்களாக இப்படி வெட்கம் வந்ததில்லை. ஆனால் நேற்றில் இருந்து மனமெங்கும் ஒரே பரபரப்பாகவே இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது. எனக்கு களுத்துறைக்கு இடமாற்றம் கிடைத்ததையிட்டு மாமியும் மாமாவும் முடிவு ஒன்றை எடுத்திருந்தார்கள்.

ஆமாம்! என்னை மச்சானுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டு ஒன்றாகவே களுத்துறையில் குடியிருத்தவே அவர்கள் நினைத்தார்கள். இதை என்னிடம் மாமி சொல்லிய போது …நான் பதில் சொல்லாமலே  தலை குனிந்தேன். மௌனம் சம்மதத்துக்கு அறிகுறிதானே ! மாமி சிரித்து  விட்டு போய் விட்டார். மச்சானிடமும் அதைச் சொல்லித்தானே இருப்பார்கள். அதுதான் மச்சான் ஒரு நாளும் இல்லாதவாறு இப்படி பார்க்கிறார்! எனக்கு வழமை போல உட்கார்ந்து மச்சானுடன் கதைக்க முடியவில்லை….எழுந்து நிற்கிறேன்.

“என்ன நான் துணைக்கு வருவது ஜெபரீனுக்கு விருப்பமில்லையா…? இன்னும் யோசிக்கிறீங்களே!” என்றார் மச்சான்.எனக்கு வெட்கத்தில்  வார்த்தை வரவில்லை. நான் ரூமிற்குள் ஓடி விட்டேன். இதைக் கண்ட மாமி சிரித்துக் கொண்டே எமக்கு திருமணம் செய்யும் நாள் பற்றி ஆலோசித்தார்கள். இறைவன் நாட்டம் வேறு மாதிரி இருந்தது! விரைவில் மச்சானை லண்டனுக்கு வரும் படி அழைப்பு வந்திருந்தது. புலமைப் பரிசிலில் அவர் எடுபட்டிருந்தார். மேற்படிப்புக்காக லண்டன் செல்ல அவர் சின்ன வயதில் இருந்தே ஆசைப்பட்டார். அவரின் ஆசைகள் எனக்குத் தெரியும். மாமிக்கு எப்படியும் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்கிற ஆசை! ஆனால் மச்சானுக்கோ திருமணம் முடிந்தவுடன் என்னைப் பிரிய வேண்டுமே என்ற துயரம். அதனால் நான் தான் சொன்னேன் “மச்சான் படித்து விட்டு வரட்டுமே ” என்று. அது ஒருவாறு தீர்மானமாகி முடிவாகியது. மச்சான் லண்டனுக்குப் புறப்படும் போது என் விழிகள் ஏனோ குளமாகின. என் ரூமிற்குள் வந்த மச்சான் நான் அழுவதைக் கண்டு துடித்து விட்டார். “ஜெபரீன் …! படிக்கத்தானே போறேன்.மூணே மூணு  வருஷம். அப்புறம் வந்து இந்த ஜெபரீனோடேயே இருப்பேன்! ” என்று என் கைகளைப் பற்றி முத்தமிட்டார். அந்த அரவணைப்பும் ஆறுதலும் அப்போது எனக்குத் தேவைப்பட்டது. சிறுபிள்ளை போல நான் மச்சானின் மார்பில் முகம் புதைந்து அழுதேன். நேரம் போனதே தெரியாமல் நான் மச்சானோடு பேசிக்கொண்டு இருந்தேன். மனம் தைரியம் பெற்றது! அவர் லண்டனுக்குப் போய்விட்டார். காலம் தான் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே!

இன்று வீடு மிகவும் கோலமாக இருந்தது. ருவைஸ் வந்ததும் திருமணம் தான்! எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்கள். ருவைஸ் மச்சான் நாளைக் காலை கொழும்பு வந்து அங்கிருந்து மட்டக்களப்பிற்கு ரயிலில் வருவதாக அறிவித்திருந்தார். எப்போது விடியும் என்று நான் பார்த்துக் கொண்டேயிருந்தேன். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு விடிந்த பின் அசந்து தூங்கி விட்டேன்! வீட்டிலே பெரிய சலசலப்புக் கேட்டு துடித்து எழும்பிய போது தான் அந்தக் கோரச் சத்தம் எனக்கு எட்டியது! மட்டக்களப்பிற்கு வந்த புகையிரதம் பொலன்னறுவைக்கு  அண்மையில் தடம் புரண்டதால் பல பிரயாணிகள் இறந்ததாகச் செய்தி கிடைத்தது! எனக்கு  எதுவுமே தெரியவில்லை. மயங்கிச் சாய்ந்தேன். நான் விழித்துப் பார்த்த போது புதிய இடத்திலிருப்பது எனக்கு தெரிந்தது. என்னைச் சுற்றிலும் பல ஆட்கள் நிறைந்து நின்றனர்.நடந்தது நினைவுக்கு வந்தது. என் விழிகள் மச்சானைத் தேடின. “உன் மச்சானுக்கு ஒன்னும்மில்ல ஜெபரீன். அவன் பஸ்ஸில தான் வந்திருக்கான்” என்று சொல்லவும் மச்சான் என்னருகில் வரவும்  சரியாக இருந்தது. அழுகையை அடக்க முடியாமல் நான் மீண்டும் மச்சானைக் கண்டு அழத் தொடங்கினேன். என்னை எல்லோரும் தேற்றினார்கள்.வீட்டிற்கு வந்த போது அந்த இனிய நாளை எண்ணி நான் புதிய ஜெபரீனானேன்! மச்சான்  என்னை குறும்புடன் நோக்கினார். நான் இப்போது வெட்கப்படவில்லை! வசந்த காலங்கள் தொடர்ந்தும் என் வாழ்வில் வீசுவதை எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டே தொழுவதற்கு ஆயத்தமானேன்.

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க