Author: கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

  • மழை!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    வற்றிக் கிடக்கும்  வறண்ட பூமியைத்
    தொட்டுத் தழுவும் –
    உனது   தூய  கரங்களுக்குத்தான்  எத்தனை குளிர்ச்சி!

    இரவென்ன  பகலென்ன
    வானம்  கருக்  கொண்டால்…,
    பூமி  மகிழ்கிறது!

    நீ
    இல்லாத நாட்களில்                                        rain-fall
    பொல்லாத புழுக்கம்
    இருக்கின்ற நாட்களில்
    இப் புவியே வழுக்கும்!

    நீ வருகை தருங் காலத்தில்
    வெள்ளம் பாய்ந்தோடும்
    உனது
    விபரீதப் போக்கினால்
    கண்ணீர்  வெள்ளமும்  பாய்ந்தோடும்…!

    நதிக்கரைகளில்  அலையடிக்கும்
    கடற்கரைகளில்
    வெண்நுரைப்  பூக்கள்
    விரிகின்ற  மாரிக்காலம்,
    உன்னைச் சுமந்த மேகங்களின்
    ஊர்கோலம்!

    கண்ணுக்குக் குளிர்ச்சி தரும்
    இந்த –
    மண்ணுக்கே மகிழ்ச்சி  வரும்

    மீனோட…
    நாரைகள் தவமிருக்கும்
    ஏரோடாத கழனிகளில்
    ஏரோட…எங்கும்
    பைங்கூழ் விளைந்திருக்கும்!

    வறுமைத் தளையறுக்கும்
    வல்லமை  உன்னுடையது!
    நீ இல்லையேல்
    எந்த  மண்தான் பொன்னுடையது?

    கொட்டும் …இடிமின்னல் …காற்று…
    ”கூஹ் கூஹ்”வென்று
    குரலை யெழுப்ப
    முட்டும் மரக்கிளைகள்
    மோதிச்  சலசலக்க…
    கார்கால மேகங்கள்
    தாவிச் செல்லும்
    பல்லாக்கிலே –
    நீ வீற்றிருந்து
    விஜயஞ்  செய்கின்றாய்!

    சாகரங்களைச்
    சல்லாப புரியாக மாற்றும்
    சக்தி உன்னுடையது!

    நீ கொடைவள்ளல் –
    அள்ளிக் கொடுக்கும் போதுதான்
    இடையூறு  அதிகம்!

     

     

    Share
  • ஊர் உலகம்

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    சோற்றுப் பீங்கானைக் கையில் எடுக்க
    பூனைக் குடும்பம், காக்கைக் குடும்பம்கப்பெரிய கூட்டமாய்
    அவர்களின் பார்வைகள் –
    என் வாயினைத் திறக்க விடாது தடுத்தன!

    கற்பனையில் ஒரு கவிதை தொடர
    ஊர் உலகம், வாழ்வு தாழ்வு,
    உள்ளத்து உணர்வுகள்
    சோதனைகள் வேதனைகள்
    இத்தியாதி இத்தியாதி
    இதயத்தை முட்கம்பிகளாய்க் கிழித்தன.

    ஆனால்
    அந்த
    மூச்சும், சுவாசமும்
    அன்பும் நட்பும்
    நினைவுகளும் நிஜங்களும்
    அப்படியே இன்றும்
    ஒரு
    துளிகூடக் குறையாமல்
    எனக்குள் நிறைவாக ஊற்றெடுக்கின்றது!

     

    Share
  • சமூகவியல் ஆய்வாளர் சாந்தி சச்சிதானந்தம் கொழும்பில் காலமானார்

    kalai

    தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஆரம்ப கால உறுப்பினரும் ,என் மிக நெருங்கிய தோழியும் அரசியல் விமர்சகரும், சமூகவியல் ஆய்வாளரும், பெண்ணியல் வாதியுமான சாந்தி சச்சிதானந்தம் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழலை காலமானார்.

    நீண்டகாலமாக சுகயீனமடைந்திருந்த நிலையிலும், சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டியதுடன் சமகால அரசியல் நிலைமைகளையும் நாளேடுகளில் விமர்சித்து வந்தார்.

    கொழும்பு – 07 டொரின்டன் அவனியுவிலுள்ள விழுது மேம்பாட்டு மையத்தின் ஸ்தாபகரும், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பதவிவகித்த அவர், ஐக்கிய நாடுகள் சபையிலும் ஆரம்பகாலங்களில் பணியாற்றியிருந்தார்.

    யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சாந்தி சச்சிதானந்தம், மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியாக விளங்கிய போதிலும், அந்தத் துறையில் ஈடுபடாது, சமூகப் பணிகளிலேயே கூடுதலாக ஈடுபட்டுவந்தார்.

    ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும், பாண்டித்தியம் பெற்ற அவர், இரண்டு மொழிகளிலும் ஆக்கங்களை எழுதிஉள்ளார்

    மட்டக்களப்பிலுள்ள மன்று என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் ஸ்தாபகராக விளங்கிய அவர், கிழக்கு மாகாணத்தில் பல சமூக அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபட்டார்.

    விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்ட இவர், இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து பல ஆக்கங்களையும் எழுதியிருந்தார்.

    1958ஆம் ஆண்டு பிறந்த சாந்தி சச்சிதானந்தத்திற்கு 2 பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் மகனும் உள்ளனர். இவரது கணவர் மனோ ராஜசிங்கம் 2009ஆம் ஆண்டு காலமானமையும் குறிப்பிடத்தக்கது.

    அன்னாரின் மறைவுக்கு தடாகக் குடும்பத்தினரும் ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தினருக்கு மிகவும் மன வேதனையோடு தெரிவிக்கின்றோம்

    அமைப்பாளர் -தடாகம்

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    Share
  • இன்று ஓராண்டு !

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

     
    காலம் கரைந்து செல்கிறது.
    நேற்று இருந்தவர் இன்று இல்லை

    வாழ்க்கை என்கின்ற நியதிக்குள் யாவரும் உட்படுகின்றனர்.
    அந்த நியதியையும் வென்று
    மக்கள் மனங்களில் வாழும் உறவுகள்
    என்றென்றும் மதிக்கப்படுகின்றார்கள்.
    நினைவுபடுத்தப்படுகின்றார்கள்

    அவ்வகையில் என் இதயத்தின்
    அடையாளமாக இருக்கக் கூடிய உறவு
    என் றாத்தா சித்தி பௌசியா(ஜெஸிமா ) ‘அவர்கள்
    .

    அவருடைய மறைவு நிகழ்ந்து
    இன்று ஓராண்டு பூர்த்தியாகின்றது.
    நம்ப முடியவில்லை.
    என் றாத்தா என்னுடன் இல்லை என்பதை!
    அவர் என்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
    என்கின்ற உணர்வையே தந்து கொண்டிருக்கிறது.
    அந்த உணர்வு இன்று இக் கவியோடு நிழலாடுகின்றது!
    ……………………………………………………………………………………………..
    நகர்ந்து விட்டது ஓர்ஆண்டு மனத்துயரம் மாறவில்லை

    உடன்பிறப்பு உன்பிரிவால் மகிழ்ச்சி பறந்தது

    சுமையாகிவிட்ட உலகில் சுமக்கமுடியா நிலையிலே நான்

    மனநிம்மதி யில்லாமல் துடிக்கின்றேன் உன்மறைவால்

    வாழுகின்ற வாழ்க்கையில் உன்னைநினைத்து எந்நாளும்

    வடி(க்)கின்ற கண்ணீரை துடைத்து ஏங்குகின்றேன்

    மரணத்தால் என்னை விட்டுச்சென்றீர், தொப்புள்கொடியுறவால்லல்ல

    சுவர்க்கலோகம் சென்றதுபோல் நினைத்திருக்கின்றேன் மண்ணில் .!
    உடன்பிறந்த தங்கையாய் தவிக்கின்றேன் றாத்தா !

    எழுதிடும் கவிதைகள் என்மன நிலைதனை புரிந்து

    இடி விழுந்து சிதறிய மன நிலை போல

    கலங்குகின்றேன் உன்மௌத்தை நினைத்து நினைத்து

    குருவிக் கூட்டம்போல றாத்தா மகிழ்ந்திருந்தோம் நாம்

    இன்று நிலையாகச்சென்றுவிட்டீர் மனதில் வேரூன்றிவிட்டு

    கலண்டர் தாள்களை ஒன்றொன்றாய் கிழித்தாலும்

    மாறாத்துயரத்தை தாங்கிட பொறுமை தா! யாஅல்லாஹ் !

    அன்புத் தோழியாக பாச பிறப்பாக என்னோடு

    இணைந்திருந்து வரம்பெற்ற உறவாக வாழந்துவிட்டு

    இன்று என்னைவிட்டுச் சென்றாலும் உங்களன்பு

    ஒருபோதும் என்னுள்ளத்தைவிட்டு நீக்கிடாது பேணுகின்றேன்

    ஒற்றைத்தாயின் இரட்டைக்குழந்தையாய் வாழ்ந்தோம் பிறப்பிலே

    சுனாமியடித்துச் சிதறிய கிரமாம் போலானேன்

    என்றும் என்னுயிர் இவ்வுலகில் உள்ளவரை

    வருடங்கள்நகர்ந்தாலும் உன் நினைவு என்னைவிட்டுநீங்காது !

    Share
  • திருமண (நாள்) வாழ்த்து!

      என் தோழி பவள சங்கரி திருநாவுக்கரசுக்கு

     DSCN0926காலைச் சுடரொளி கண்களில் படர

    மாலை வான் நிறம் வாங்கிய வதனம் 

    முளரி அரும்புகள் முகிழ்த்த விழிகளில்
    ஒளிரும் புதிய உணர்வுகள் பூத்து
    வாழ்விலோர் திருநாள் கண்ட
    மகிழ்ச்சியில் மனந்தான் பூத்து
    செந்திரு போல் விளங்கும்
    செந்தமிழ் (பவள சங்கரி ) பெண்மை
    மாண்புறும் பெருநாள் உந்தன்
    மணநாளின் நினைவு நாளில்
    (கலைமகள் ஹிதாயாவின் வாழ்தலையை )
    வானத்தின் மழைத்தூ வலாய்
    குளிர்தமிழ்க் கவிதை யாலே
    பெய்திட வந்தேன் வளம்
    பெருக நும் வாழ்வின் வயல்

    வாழ்க்கைத் துணையை வரித்து இன்றென்
    நோக்கினில் உயர்ந்த பாச தோழியே பவள சங்கரி
    தீக்குள் கிடப்பினும் சுடர்விடும் பொன்போல்
    வாழ்கையில் என்றும் மாசின்றி வாழ்க…!!

    மாசணு காத மனத்துள் வாய்மை
    தேசு படர தெளிந்த நீ ரோடையின்
    ஓசையைப் போலும் உண்மையின் நாதம்
    ஆசு கவியாய் அகத்தினில் பொங்கி
    வீசும் தென்றலில் மேதினி பரவ…..!!!

    அண்ணன் (திருநாவுக்கரசு) கருணை மனத்தால்
    (இறைவன் வரமாய் ) தந்த மருமகள்
    இதயத்தை மனைவியின் இருப்பிட மாக்கிய
    (பவள சங்கரி) இன்றுன் வாழ்வின் மண நாளை நினைத்து
    எதிர் வரும் காலம் யாவிலும் துணையாய்,
    பிரிக்க இயலா பிணைப்பாய்,இறைவன்
    பேரரு ளாலே பிணைத்த வாழ்க்கைத்
    தலைவன் திருநாவுக்கரடசோடு சார்ந்து இல்லற
    வாழ்வின் தலைவியாய் வரும் வரும் நாளெலாம்
    வாழ்வாய் உனக்கென வரையிலா வாழ்த்துக்கள்…

    “இல்லறப் பூங்கா எழிலுறும் வண்ணம்
    எழிலாய் அமைந்த தோழி பவள சங்கரி அதன்
    சில் லெனும் நீரே,நீரில் மலர்ந்த
    செவ்வர விந்த மலரே,மலரின்
    உள்ளிருந் துளத்தின் உணர்விற் கலந்த
    உணர்வே,சுகந்த மணமே,கரும்பின்
    வெல்லப் பாகே,பாகுடைச் சுவையே…!
    மேலாம் நிதியே! என்றெலாம் போற்றும் …

    சங்க காலத் தமிழிலக் கியத்தின்
    மங்கா கவிதையின் சுவை நயம் நிறைக…!
    போதலர் தாமரைப் பொய்கையி லூறும்
    சீதள மிகும் இன் சுவை நீர் போலும்
    தீ திலா நெஞ்சில் சுரந்திடும் அன்பு நீர்க்
    வாழ்க்கையில் இருவர் கலந்தொரு மித்து,

    பொய்ப்பட பேசும் புவியின் கயமைகள்
    மெய்ப்படும் வாய்மை மேவிடும் வாழ்வினால்
    பொய்ப்பட ஆக புனித இல்லறத்தின்
    மெய்ப்பொருள் தேர்ந்து விரிகதிர் சுடர்களாய்

    கோபுரம் போலு யர்ந்த
    கொள்கையும்,அகன்ற வான் போல்
    ஆதுரம் மிகு குணமும்
    ஆழி போல் அழ்ந்த (அ)றிவும்
    சீருற பெற்று வாழ
    திகழ் பரம் பொருளாம் வல்ல
    இறைவனின் நெறிகள் பேணி
    சுகம் பெற வாழ்த்துகின்றேன்….!

    “மனைத்தக்க மாண்புடைய ளாகித் தற் கொண்டான்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை…”

    “பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும்
    திண்மையுண்டாகப் பெறின் “என வள்ளுவன்
    தீட்டிய குறளோ வியம் போல் வீட்டில்
    ஏற்றிய தீபம் போல் இருள் கடிந் தொளிர்வாய்..,.!

    பெண்ணின் பெருமையெலாம்
    பேசும் திருக்குறளின்
    நுண்ணரிய கருத்தெல்லாம்
    நுணுகிச் சுவைத்து நலம்
    பண்ணி ஆயிரங் காலப்
    பயிராய் தலைத்திடுவீர்…!

    குழலினில் யாழினில் எழுந்திடும் இசையிலும்
    கோடி இன்பம் கூட்டும் மழலை
    மொழிகளின் இனிமையும்
    செவிகளின் நிறைய….!
    உள்ளங்கள் ஒன்றாய் உணர்வுகள் ஒன்றாய்
    இன்பமும் துன்பமும் ஒருவருக் கன்றி
    இருவர்க் காம் எனும் இயல்பின ராகி….

    நீரோடு கயல்பிரி யாதது போல்
    நிலவொடுஒளிபிரி யாதது போல்
    காரோடு குளிர்பிரி யாதது போல்
    கடலிடை அலைபிரி யாதது போல்

    நூலோடு நயமும் நுதலொடு திலகமும்
    தாளோடு எழுத்தும் தமிழிடை இனிமையும்
    பாலோடு வெண்மையும் பழமொடு சுவையும்
    பூவோடு மணந்தான் பொருந்திய வாறாய்
    என்றும் – தொடந்து வாழ்க !

    “செந்தமிழ் கவிதையாய்
    சிறப்புடன் வாழ வாழ்தும் உங்களன்புத் தோழி

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை

    Share
  • வல்லமைக்கு வயது- 06

     

    வெறும் புகழ்ச்சி அல்லஉண்மை !

    Vallamai_6th_year_300x1251

    வல்லமை யெனும் தேனமுதச்
    செந்தமிழின் –
    சுவையெல்லாம் உய்த்துணர்ந்தேன் !
    சிந்தையெலாம் நிறைந்த
    ஒரு –
    சுகானந்த அனுபவத்தில் திளைத்தேன் !
    களித்தேன் !!

    வல்லமை
    வெண்மையும்
    பசுமையும்
    மெலெழில் பூத்து ,
    இன்றைய தேவையில் –
    வாழ்வில்
    பசுமையும்
    சமாதானமும்
    அமைதியும்
    உணர்த்துவதாக இருகின்றது !

    வல்லமை
    கலை உள்ளங்களின்
    வாழ்வில் –
    செழுமை சேர்த்திருக்கின்றது !

    நல்ல முயற்சி
    பவள சங்கரி திருநாவுக்கரசு,
    அண்ணா கண்ணன்,
    தேமொழி,

    மேகலா இராமமூர்த்தி,,

    அமைதிச் சாரல் (சாந்தி மாரியப்பன்),

    தி. சின்னராஜ்,

    மதுமிதா,

    இன்னம்பூரான்,

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்,

    விஜய திருவேங்கடம்,

    விசாகப்பட்டினம் வெ. திவாகர்,

    ஆமாச்சு (எ) ஶ்ரீராமதாஸ்,

    ஸ்ரீநிவாசன்,
    காமேஷ்,

    செல்வ முரளி,

    முனைவர் நாகபூஷணம்,

    ஆகியோர் துணிவில் மலர்ந்த தூய பணி !
    வல்லமையைப் பார்க்கும் போது
    படிக்கும் போது –
    அதற்கு எழுதும் போது
    நினைக்கும் போது
    நிறைவுகளே நெஞ்சில் நிறைகின்றன !
    வல்லமைத் தளத்தில் நின்று பார்த்து
    சளித்து களைத்தது போதும் !
    இக் குளிர் நீர் பொய்கையில்
    இறங்கி சுவை நீர் பருகி
    சிறிது விடாய் ஆற்றிக் கொள்ள விழைகிறேன் !

    வல்லமை
    கவிப்பூக்களை
    தன் சிற்றலைக் கரங்களால் ஏந்தி
    இசைபாட காலாயிருந்த
    நேசவுள்ளங்களின் துடிப்பு !

    வல்லமை
    இந்திய மண்ணில் ஊற்றெடுத்து
    குதித்தோடி உலகமெங்கும் ஓடிவரும் நதி !
    வயலில் பாய்ந்து
    வளர்த்திடும் செந் நெல் போல ,
    தூய சிந்தையில் ஊறி வரும்
    களம் நீர் தான்
    வளர்க்கும்எங்கள் கலைப் பயிரை !

    வளர் சுடர் போலொளி வீசும்
    வல்லமை –
    அறிவிலும் சிறந்த
    நல் இதயப் பேழை!
    தன்னகம் கொண்ட தமிழ் தளம்
    வல்லமைக்கென் பைந்தமிழ் வாழ்த்து !

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை

    Share
  • என்வீட்டுப் பூனை!

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    ஒரு பூனை
    அடுப்படிச் சாம்பலில்குட்டி போட்டுக்
    கதறித் துடிப்பதாகக்
    கனவு கண்டு
    நித்திரையினைத் தொலைத்தேன்
    நிம்மைதியினை  இழந்தேன்…!

    காக்கா கோழிகளின்
    சங்கீத ராகம்
    என் காதுகளைக் குடையவே
    முற்றத்துப் பக்கம் பாதங்கள்
    கோலம் வரைந்தன
    கண்கள் நிஜங்களைத்
    தேடி அழைந்தன …!

    என் ராக் கனவுகள் –
    என்னை
    ஏமாற்ற வில்லை
    துரோகமிழைக்கவுமில்லை…!
    சில முக நூல் உறவுகளைப் போல்
    மன சந்தோஷத்தால்
    என் இதய மலர்
    சிரித்துக் கொட்டியது
    அழகான குட்டிகளின்
    பிறப்பினைக் கண்டு
    வருகையைக்  கண்டு…!

    நீண்ட தொல்லைகளுக்குப்
    பின் இன்றுதான்
    என் சுவாச மூச்சுக்கு
    மன நிம்மதி கிடைத்தது !

    இரவு நேர இருளில்
    அந்த உடுப்புப் பெட்டிக்குள்
    எலிகளின் அட்டகாசமா…?
    அல்லது
    விளையாட்டு பொம்மைககளின்
    குரலோசைகளா…?
    அல்லது
    உணர்வுகளின் சப்தங்களா…?

    உன் சுவாசம்பட்ட
    வீட்டுச் சந்துபொந்துகள்
    மூலை முடுக்குக்குகள்
    சூரியனைக் கண்ட பனிபோல
    மாறத் தொடங்கியுள்ளன

    உடம்பினைப் போர்த்திய
    துண்டினைப் பார்த்து
    உன் இதயம் –
    அழுது வடிவதேன்..?

    அதனால்தான் போலும்
    உன் உள்ளத்துக் கதவுகளை
    அடிக்கடி மூடித்
    திறந்து எனக்குள்
    உண்ணாவிரதம்செய்தனவோ?
    ஹர்த்தால் ஆர்ப்பாட்டம் புரிந்தனவோ ?

    என் ஜீவன் –
    எலி, பல்லி, கரப்பத்தான்
    நுலும்பு கொசு, எறும்பு
    எதுவுமே அற்ற
    படுக்கையில் மனநிம்மதி நாடி
    உறங்க அழைந்தேன்!

    உன் குட்டிகளைக் கண்ட
    சின்ன எலிகளெல்லாம்
    உன்னைப் போலவே
    மரம் விட்டு மரம் தாவும்
    மந்திகளைப் போலவே
    இடம்மாறித் தடம் மாறிப்போயின
    நிலை மாறி..!

    சில கனவுகள் பலிக்கும்
    நினைவுகள் நிறைவேறும்
    என்ற நம்பிக்கைகள்
    எனக்குள் வாழ்கின்றன
    என் எதிர்பார்ப்புகளின்  இலட்சியங்களில்
    ஆரம்பமாகும்
    திசைகாட்டும் கப்பலைப்போல்
    என் வீட்டுப் பூனைகளும் …!

     

    Share
  • என்னை விட்டுப்பிரிந்த தந்தையின் நினைவாக…

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    எந்தையே எம்முயிரே
    எங்கு நீ சென்றாயோ ?
    சிந்தை நாம் கவல்கின்றோம்
    சோர்வுற்று வாழ்கின்றோம்
    உந்தன் பிரிவாலின்று
    உறு துணை இழந்துநாம்
    வெந்தழலில் புழுவாக
    வேதனையால் துடிக்கின்றோம்!

    மந்த மாருதமாய் நீயே
    மகிழ்வித்தாய் எங்களையே
    சந்தனத் தோப்பாக
    செழிப்புறயெம் வாழ்க்கையும்
    பந்தபாசம் பாசறையில்
    பயில்வித்தாய் எங்களைநீ
    விந்தைமிகு அன்பிற்கே
    வரைவிலக்கணம் ஆனாய்நீ!

    சாய்ந்தமரு தெம்பதியில்
    சகலருமே எப்பொழுதும்
    தூய்மையுறும் உன்னன்பைத்
    துளியேனும் தயக்கமின்றி
    நேயமுடன் மதித்துனது
    நேர்மைநல் லாற்றலோடு
    வாய்மையரும் பண்புகளை
    வாழ்த்திநிதம் மகிழ்ந்தனரே!

    மருத்துவத்தால் பல்லாயிரம்
    மக்களது நோய்தீர்த்த
    அருந்தந்தையே உம் பிரிவால்
    ஆறாகுமெம் வேதனைக்கு
    அருமருந்து இனிநாங்கள்
    ஆரிடம்தான் பெற்றிடலாம்?
    கருணையிறை அருளொன்றே
    கைகொடுக்கும்; ஆறுகிறோம்!

    சன்மார்க்க நெறிபேணிச்
    சாந்தமுடன் நீ வாழ்ந்தாய்
    உன்சேவை மனப்பான்மை
    உள்ளொன்று புறமொன்று
    முன்னொன்று பின்னொன்று
    மிழற்றுகிற பழக்கமின்றி
    நன்னெறிகள் பேணி நிதம்
    நலம்பெறவே வாழ்ந்தாய்நீ!

    சேர்பகையே வந்தாலும்
    சத்தியத்தில் தவறாது
    நேர்மையே நல் கிடவே
    நடத்திடுவாய் என்றென்றும்
    ஓர்மையிறை எண்ணமே
    உன்துணையாம் என்றேநீ
    கூறிய அறி வுரைகளின்னும்
    காதுகளில் ஒலிக்கிறதே!

    அரும்சுவர்க்கத் தலைவாசல்
    அதைவிடவும் அருந்தந்தை
    பெருந்தகுதி உயர்வாமே
    பெருமானார் பொன்மொழியைக்
    கருத்தில்நாம் ஆழமாய்க்
    கொண்டழகாய்  உன்பெயரைத்
    துருப்பிடிக்கா தென்றுமே
    தூய்மையுறக் காத்திடுவோம்!

    கலைமகளாய் நானென்றும்
    கவின்இஸ்லாம் வழியினிலே
    கலைஇலக்கியப் பணிகளையே
    கட்டுப்பாடு ஒழுக்கமுடன்
    நிலையாகத் தொடர்ந்தாற்ற
    நெஞ்சுறுதி தந்தநீயே
    நிலைகலங்க எமைவிட்டே
    நீத்தாயே இவ்வுலகை!

    என்னெழுது கோலுனது
    ஆத்மாவின் சாந்திக்காய்க்
    கண்ணீரை மையாக்கிக்
    கரைபுரளும் பாசத்தைப்
    பொன்னரிய எழுத்தாக்கிப்
    பிரார்த்தனை மாலையாய்
    இன்றிங்கே தொடுகிறதே
    இறையருள்கவே ஆமின்!

     

    Share
  • ஒரு எழுத்தாளர் பன்னூலாசிரியர் காலமானார்

    ஒரு எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், கல்விமானும், ஆய்வாளருமானஅல் -ஹாஜ் எஸ்.எச். முஹம்மது ஜெமீல்காலமானார்

    இவர் சாகுல் ஹமீத், முக்குலத் உம்மா தம்பதியினரின் புதல்வர்

    அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது எனும் ஊரில் 1940ம் ஆண்டு ஒக்டோபர் 18ந்திகதி பிறந்தார்.

    புகழ் பெற்ற குடும்பத்தில் சித்தி ஆரிபாவை திருமணம் செய்து கொண்டார்
    இத்தம்பதியினருக்கு ஒரே ஒரு மகன் முஹம்மது நசீல்.
    தனது ஆரம்பக் கல்வியைஆங்கில மொழி மூலம் காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம்,
    கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி,
    கொழும்பு சாஹிரா கல்லூரி ஆகியவற்றில் கற்றார்

    பின்பு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பாடத்தில் சிறப்புப் பட்டமும்,

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்கல்வித் துறை முதுமாணிப் பட்டமும்

    அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை டிப்ளோமா பட்டமும்,

    ஐக்கிய இராச்சியத்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை சார் பயிற்சியையும், பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பான கல்வியையும் பெற்றுக் கொண்டார்.

    பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் போதனாசிரியராகவும்,

    ‘அருணாசலம் ஹோல்’ உதவி விடுதிக் காப்பாளராகவும் பணியாற்றியா இவர்

    கல்லூரி ஆசிரியராக,
    அதிபராக,
    ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அதிபராக,
    வட்டாரக் கல்வி அதிகாரியாக,
    பிரதம கல்வி அதிகாரியாக,
    பரீட்சைத் திணைக்கள உதவி ஆணையாளராக,
    மட்டக்களப்புகிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளராக,
    முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் செயலாளராக,
    கல்வி, கலாசார விவகாரங்கள் அமைச்சின் மேலதிக செயலாளராக,
    கலாசார, சமய விவகார அமைச்சின் ஆலோசகராக…
    . இப்படிப் பல்வேறு உயர் பதவிகளை வகித்துத்து ஓய்வுபெற்றார்

    ‘எனது ஊர்’ எனும் தலைப்பில் ‘தினகரன் ஞாயிறு பாலர் கழகப் பகுதியில்’ 1949 இல் தனது முதலாவது ஆக்கம் மூலம் கலை உலகில் பாதம் பதித்தார் .

    இலக்கியம்,

    வரலாறு,

    கல்வி,

    நாட்டுப்புறப் பண்பாட்டியல் எனும் துறைகளிலான ஆய்வு முயற்சிகள் வலுப்பெற்று இறுதி வரை 25 நூல்களை எழுதியுள்ளார்.

    சுமார் 110 ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.

    50 நூல்களுக்கான பதிப்புரை, மதிப்புரை, சிறப்புரை வழங்கி உள்ளார்

    வானொலியில் (பிறநாடுகளுட்பட) 130 பேச்சுக்கள்,

    கலந்துரையாடல்கள், நிகழ்ச்சிகள் என்பவற்றிலும்,

    தொலைக்காட்சியில் 10 நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

    தினகரன், வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, நவமணி, தினக்குரல், மணிக்குரல், அல்இஸ்லாம், ஸாஹிரா, மித்திரன், அல் அரப், வளர்மதி, டெயிலிநியூஸ், ஒப்சேவர், எக்கோனோமிக்ஸ் டைம்ஸ் ஆகிய பத்திரிகை, சஞ்சிகைகளிலும் அவ்வப்போது வெளியிடப்படும் விசேட மலர்களிலும் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

    கல்முனை ஸாஹிரா கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் அக்கல்லூரி பல புதிய இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டார்

    மாணவர்களின் எழுத்தாற்றலை வளர்ப்பதற்காக 1976 இல் ஆரம்பிக்கப்பட்ட ‘ஸாஹிரா’ மாதாந்தப் பத்திரிகை பல ஆண்டுகள் வெளிவந்து,

    இன்றுவரை இடைக்கிடையே வந்து கொண்டிருக்கிறது.

    1983இல் இவரது ஆலோசனையில் ஆரம்பிக்கப்பட்ட ‘இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகத்தால்’ 1986இல் வெளியிடப்பட்ட ‘எழுவான் கதிர்கள்’முக்கியதொரு தொகுப்பாகும்.

    இதில் அன்று எழுதிய கவிஞர்கள் இன்று பெரும் புகழும் பெற்று வாழ்கின்றார்கள்

    அதில் என் கவிதையும் இடம் பெற்று உள்ளது

    1990களில் கிழக்கிலேற்பட்ட வன்முறைச் சூழலானது பணியகத்தின் சேவைகளை முடக்கிவிட்டது.

    இருந்தபோதிலும் 2000ம் ஆண்டுவரை 21நூல்களை அது வெளியிட்டுள்ளமை கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.

    முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராகவும் ,ஆலோசகராகவும் கடமையாற்றிய 11 வருட காலத்தில் இவ்வமைச்சு பெருந்தொகையான நூல்களையும், மலர்களையும் வெளியிட்டதிலும் பலரது நூல்களைப் பதிப்பித்ததிலும் எழுத்தாளர் மற்றும் கலைஞர் ஊக்குவிப்பிலும் பெரும் பங்கு வகித்தார்.

    இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றினை ஆய்வுசெய்து, ஆவணப்படுத்தி, மாவட்டரீதியான நூல்களை வெளியிட்டார்

    இவ்வாறு களுத்துறை, அனுராதபுரம், கண்டி, மாத்தளை,மாத்தறை, அம்பாறை, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்ட வரலாற்று நூல்கள், 1992-2000 ஆண்டு காலப் பகுதியில் வெளிவந்தது .இதற்காகப் பல அறிஞர்களின் உதவிகளை பெற்றுக் கொண்டார்

    எ.எம்.எ.அஸீஸ் அவர்களின் கல்விச் சிந்தனைகளும், பங்களிப்பும் (1980)
    சேர். ராஸிக் பரீத் அவர்களின் கல்விப்பணி (1984)
    சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் வரலாறு (1989)
    கல்விச் சிந்தனைகள் (1990)
    நினைவில் நால்வர் (1993)
    கலாநிதி ஜாயாவின் கல்விப் பணிகள் (1994)
    சுவடி ஆற்றுப்படை – முதலாம் பாகம் (1994)
    சுவடி ஆற்றுப்படை – இரண்டாம் பாகம் (1995)
    கிராமத்து இதயம் – நாட்டார் பாடல்கள் (1995)
    இஸ்லாமியக் கல்வி (1996)
    கல்விச் சிந்தனைகள் – இரண்டாம் பதிப்பு (1996)
    சுவடி ஆற்றுப்படை – மூன்றாம் பாகம் (1997)
    கலாநிதி பதியுத்தீன் மஹ்மூதின் கல்விப் பணிகள் (1997)
    காலச் சுவடுகள் (1998)
    நமது முதுசம் (2000)
    சுவடி ஆற்றுப்படை – நான்காம் பாகம் (2001)
    ஆகியவை மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல்அவர்களது நூல்களாகும்

    பொது நிதியியல் (1966)
    துவான் புர்ஹானுத்தீன் ஜாயா (1990)
    அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் (1992)
    அல்லாமா எம்.எம். உவைஸ் (1994)
    அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் (1997)
    கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் (1998)
    Islam in Independent Sri Lanka (1998)
    Sri Lanka Udana (1998)
    புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் (1999)
    ஆகியவை அவரால் தொகுப்பட்ட பதிப்புக்களாகும்

    இவர் தடவிப் பார்த்த விருதுகள் பல அவற்றில் சில இவை
    இலக்கிய ஆய்வுக்கான சாகித்திய மண்டல விருது (1995)
    வடக்கு-கிழக்கு மாகாணசபை – இலக்கியப் பரிசு (1995)
    ஈராக்கில், பக்தாத் நகரில் அரபு நாடுகளின் ஆசிரியர் சம்மேளனம் கேடயம் வழங்கிக் கௌரவித்தமை (1980)
    இந்தியாவில் நடைபெற்ற 6-வது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக மாநாட்டில் ‘தமிழ்மாமணி’ பட்டம் வழங்கிக் கௌரவித்தமை (1998)
    திருச்சி (இந்தியா) M.I.E.T. கல்லூரியில் பொன்னாடை போர்த்தியும், ஞாபகச் சின்னம் வழங்கியும் கௌரவித்தமை (1995)
    மலேசியா, கோலாலம்பூரில் இயங்கும் கவிதாமாலை இயக்கம் ‘தமிழ் அருவி| பட்டம் வழங்கிக் கௌரவித்தமை (1999)
    அட்டாளைச்சேனை தேசியமீலாத் விழாவின் போது ‘நஜ்முல் உலூம்’ பட்டம் வழங்கிக் கௌரவித்தமை (1997)
    ‘சாமஸ்ரீ’ விருது (1999)
    சிந்தனைவட்டம், மலையக கலை கலாசார ஒன்றியம் இணைந்து கண்டியில் ‘இரத்தினதீப’ விருது வழங்கிக் கௌரவித்தமை (2000)
    கொழும்பு தமிழ்ச்சங்கத்தினால் கேடயம் வழங்கி, பொன்னாடை போர்த்திக் கௌரவித்தமை (1999)
    அம்பாறை மாவட்டக் கரையோர ஊடகவியலாளர் சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கிக் கௌரவித்தமை (2000)
    ப்ரிய நிலா கலை, இலக்கிய சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கிக் கௌரவித்தமை (2001)
    அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் கௌரவம் (1998)
    கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக் கௌரவம் (2002)

    20 ஆம் நூற்றாண்டின் பின் அரைக்காலப்பகுதியில்மேற்கிளம்பிய இஸ்லாமியத் தமிழ் கல்விமன்களுள் முக்கிய இடம் பெற்ற எஸ். எச். எம் ஜெமீல் அவர்களின்
    ஆளுமைகளின் மரணங்கள் சமூகத்தில் பாரிய இடைவெளிகளை உண்டாக்கி உள்ளது
    சவுதிஅரேபியாவிலுள்ள இலங்கை சர்வதேசப் பாடசாலையின் அதிபராகவும்,

    பல்வேறு நாடுகளில் நடைபெற்ற ஆய்வு மாநாடுகளிலும் பங்குபற்றியிருந்ததுடன்,

    பல்வேறு அமைப்புக்களின் ஆலோசகராகவும்,

    முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி, மார்கா ஆய்வு நிறுவனம் போன்றவற்றின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.

    கல்வித்துறையில் மிக ஆழமான அறிவினைப் பெற்றிருந்த கல்விமான் மர்ஹும் எஸ்.எச்.எம். ஜெமீல் தமிழ் இலக்கியத்திலும், ஆங்கிலத்திலும் மிகவும் புலமைத்துவமிக்கவராகவும் திகழ்ந்தார்.

    வாழ்நாளில்; தன்னால் எழுதப்பட்ட, தேடப்பட்ட சுமார் 2000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், தொகுப்புக்கள் அடங்கிய நூல்களை அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.

    இவரது சகாக்களான ஏ.பீர் முகம்மது, எஸ்.எல். சியாத் அகமட் மற்றும், மருதூர் ஏ.மஜீட், டாக்டர் தாஸிம் அகமது ஆகியோர் தொகுத்து எழுதிய ஒரு “கிராமத்துச் சிறுவனின் பயணம்” எஸ்.எச்.எம்.ஜெமீலின் வாழ்வியல் தொடர்பான மிகப்பெரிய நூல் ஒன்றினை கடந்தாண்டு வெளியிட்டு அவரைக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

    இவ்வாறு நாட்டுக்கும், தன்சமூகத்திற்கும், கல்வியுலகிற்கும் மாபெரும் தொண்டாற்றிய கல்விமான் மறைந்தது தமிழ்பேசும் நல்லுலகிற்கு மிகப் பெரும் இழப்பாகும்

    .

    கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளரும், கல்முனை ஸாஹிறாவின் முன்னாள் அதிபரும் பிரபல கல்வியயளாலருமான காலாநிதி அல்ஹாஜ் S.H.M.ஜெமீல் அவர்கள் இன்று (27.04.2015) காலமானார்கள்.

    இலக்கியம், கலை, கல்வி, கலாசாரம் முதலிய பல துறைகளில் புத்தகங்களையும், ஆக்கங்களையும் வெளியிட்ட அன்னார், அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகத்திற்கு தனது சேகரிப்புக்களை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    தேசிய ஷூரா சபையின் நிபுணத்துவ ஆலோசனை சபையில் உறுப்பினராகவும் அண்மைக்காலமாக சமூக மற்றும் தேசிய உணர்வுடன் பங்களிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

    சாய்ந்தமருது மண்ணின் தொப்புள்கொடிதந்த குடும்ப உறவு இவர்

    தனது 75ம் வயதில் (27.04.2015)காலை தெஹிவளையில் இறைவனடி போய்விட்டார் .

    இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுஊன்.

    ஒரு காவியம் முற்றுப்புள்ளி பெற்றுவிட்டது;

    எங்கள் குடும்பத்தின் சுடர் அணைந்து விட்டது

    அன்பான அங்களுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை வரமாக்கி கொடுப்பானாக

    நரகத்தை ஹராமாக்கி வைப்பானாக !ஆமின்

    கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    Share
  • யார் சொன்னது…?

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    எத்தனைப் போராட்டம்
    எத்தனை இன்னல்
    எத்தனை சோகம்                                                kamalini
    எத்தனைக் கனவு
    எத்தனை வியாதி
    எத்தனைச் சோதனை
    எத்தனை எத்தனை…
    அத்தனையும் வாழும் வாழ்வில்!

    உடைந்து நொறுங்கிய கண்ணாடித்துண்டுகளாய்
    ஓட்டமுடியாச் சிதறல்கள்!
    உள்ளத்தின் உணர்வுகளில்
    வாழ்வின் தழும்புகள்!

    இதய நாளம்
    உயிர்ப் பிரிவின்
    சோகத்தில் துடிக்கின்றது!

    இதயத்தில் அவள் எண்ணங்களே
    நினைத்து நினைத்து அழுது வடிக்கும்
    என் மனசு!

    மரணம் என்று யார் சொன்னது..?
    மரணித்து விட்டார் என்று!

    கமலினி அக்கா
    ஹயாத்தோடு செல்லுகின்றார்
    மறுமை நாளில் எழுப்பப்படுவார்!

    நாமின்று உயிரோடு வாழ்கின்றோம்
    என்றோ ஓர்நாள் நாம்தான்
    மண்ணில் மரணிக்கப்படுவோம்!

     

    Share
  • கமலினி செல்வராஜன்.

    akk(1954 – 7 ஏப்ரல் 2015) இலங்கைத் தமிழ்நாடக, திரைப்பட நடிகையும், வானொலி ஒலிபரப்பாளரும் ஒளிபரப்பாளரும் ஆவார்.
    இவர் கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவி ஆவார்
    கமலினி இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர்மு. கணபதிப்பிள்ளை,
    வயலின் கலைஞர் தனபாக்கியம்
    ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்தார்.
    கொள்ளுப்பிட்டி சென். அந்தனிஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து,
    பின்னர் பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார்.
    களனிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார்
    . தந்தை மு. கணபதிப்பிள்ளை
    இலங்கை வானொலியில் இலக்கியப் பங்களிப்பு வழங்கியபோது
    அவரது நண்பராக இருந்த கவிஞர் சில்லையூர் செல்வராசனைக்காதலித்துத் திருமணம் புரிந்து கொண்டார்.
    சில்லையூர் செல்வராசன் எழுதிய ‘தணியாத தாகம்’ வானொலித் தொடர் நாடகத்தில், குடும்பத்தின் இளைய மகளாக ‘கமலி’ பாத்திரத்தில் இவர் நடித்தார்.
    இலங்கை வானொலியில்’கலைக்கோலம்’ முதலான சஞ்சிகை நிகழ்ச்சிகள் பலவற்றை தயாரித்து வழங்கியிருக்கிறார்.
    ரூபவாகினியில் ஒளிபரப்பான அருணா
    செல்லத்துரையின்நெறியாள்கையில்
    , கே. எஸ். பாலச்சந்திரன் எழுதிய ‘திருப்பங்கள்’,எஸ். ராம்தாசின் ‘எதிர்பாராதது’, எஸ். எஸ். கணேசபிள்ளை எழுதிய ‘சமூக சேவகி’ போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
    ரூபவாகினியிலும், ஐ.ரி. என் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி வந்தார்.
    இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற கோமாளிகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
    ஆதர கதாவ என்ற சிங்களத் திரைப்படத்தில் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திரமேற்று நடித்திருந்தார்அக்கா கமலினி செல்வராஜன்.
    நாட்டுக்கூத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக கலாசார அமைச்சின் விருது (1995)
    கொழும்பு றோயல் கல்லூரி நாடகத் துறைக்காக ஆற்றிய பங்களிப்புக்காக கொழும்பு றோயல் கல்லூரியின் விருது (2008)
    நோர்வே கலை மன்றம் நாட்டுக்கூத்து பாரம்பரியத்தை பேணி வளர்ப்பதில் காட்டிய ஆர்வத்திற்கான கெளரவ விருது (2010)
    35 ஆண்டு கலைச் சேவையைப் பாராட்டி கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில் இளைஞர் நற்பணி மன்றம் விருது வழங்கி கெளரவித்தது.
    1995 ஆம் ஆண்டில் கணவர் செல்வராசனின் இறப்பை அடுத்து இவர் கொழும்பில் தனது மகன் அதிசயனுடன் வசித்து வந்தார்
    கடுமையான சுகயீனமுற்றிருந்த நிலையில் 2015 ஏப்ரல் 7 இன்று கொழும்பில் காலமானார்.
    அன்பு அக்கா கமலினி செல்வராஜன்.
    Share
  • நிம்மதியாய் வாழும்நாள் என்று பூக்கும்?

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    உழைத் துழைத்து நாமுந்தான் ஓடாய்த்தேய
    உழையாதார் ஊதித்தான் பெருக்கக் கண்டோம்!
    இழைத் தேநாம் இடுப்பொடிய ஈரமில்லா
    இதயத்தார் இருந்துறிஞ்சி “மேலே சென்றார்”!

    முதுகினிலே கூடையினைத் தாங்கி நாமும்
    முதுகொடியக் கொழுந்தெடுத்துக் கொணர்ந்து சேர்த்தோம்
    புதுவாழ்வு எதுவும் நாம் கண்டதில்லை!
    புல்லர்கள் வாழ்வுக்கே உரமாய்ப் போனோம்! 

    ஓட்டை “லயம்” தானெமது உலகும் வாழ்வும்!
    உழைப்புத்தான் உயிர் எமக்கு  ஓய்வோ தூக்கம்!
    காட்டையெல்லாம் கழனிகளாய்ச் செய்தோம் எங்கள்
    கனவுகளோ கண்ணீரில் கரையக் கண்டோம்!

    மலையகத்து இலைகளுக்குப் பசுமை சேர்க்க
    மணிமணியாய் வியர்வையினை வடித்துத் தந்தோம்!
    நிலைமாறி எம் வாழ்வில் பசுமை பூத்து
    நிம்மதியாய் வாழும் நாள் என்று பூக்கும்?

     

    Share
  • இணைந்த இதயங்கள் …

    கலைமகள் ஹிதாயா.

    “வாழ்கையில் துன்பம் வருவது இயற்கை அதை நான் மறுக்க வில்லை. ஆனால் தொடர்ந்து துன்பம் தான் வாழ்க்கையாகி விட்டாள்…வாழ்வதில் என்னடி அர்த்தம்….?”

    “பரீனா, வாழ்க்கை பூராகவும் நீ துன்பத்தைத் தான் அனுவிக்க வேண்டுமென்று இறைவன் தலையில் எழுதியிருந்தால், அதை நானோ, நீயோ தடுத்து நிறுத்த முடியுமா என்ன? “ஓடும் நதி வழியே ஒருத்தி மட்டும் விதி வழியே” என்று கவிஞர் கண்ணதாசன் எழுத எண்ணினாராம். ஆமாம், விதி வழி என்ற ஒரு வழி இருக்கத்தான் செய்கிறது. அதனை ‘இறைவழி’ என்று அழைத்தாலும் பிழை இல்லை என்றே எண்ணுகிறேன். எனவே, எந்த நேரத்தில் எது வந்தாலும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு வாழ்வது தாண்டி வாழ்க்கை. ஆகவே நாம் தான் நாம் மனத்தைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும்.”

    அப்போ, காலமெல்லாம் கண்ணீர் வடித்துக் கொண்டு அவரோடு வாழ்வதற்காகவே என்னை அவரையே திருமணம் செய்யும் படி சொல்கிறாய்”…? பரீனா பரிதாபமாகக் கேட்டாள்.

    “என் உடலில் என் உயிர் உள்ளவரை என்னிதயத்திலிருந்து எந்தச் சக்தியாலும் உன்னைப் பிரிக்கவே முடியாது….உன்னைத் தவிர வேறு ஓர் ஆடவனின் நிழல் கூட என்னில்படுவதை ஒரு போதுமே விரும்பமாட்டேன் என்று, அன்று ஞாயிற்றுக் கிழமை பல்கலைக்கழக கேட்போர் ஹோல் மண்டபத்தில் வைத்து நஜீமிடம் சொன்னவற்றை இன்று கனவாக நினைத்து மறந்து போய் பேசுகின்றாய் என்று நினைக்கின்றேன். அன்று இதயத்திலே பாசம் படரும் போது சத்திய வாக்கை பனித் துளியாக தூவினாயே … நட்பு மலர் காதலாக செழித்து இல்லற வாழ்வில் நறுமணம் நல்லறமாக வீசவேண்டுமென்று எதிர் பார்த்தாயே … ஆனால் அது இன்று உனக்கெங்கே ஞாபகத்துக்குவரப் போகுது எல்லாமே காற்றோடு காற்றாக பறந்துவிட்ட தூசியாகிவிட்டதே” இர்பானா கிண்டலாகப் பேசினாள்.

    “இர்பானா, என் என் நிலைமையை உணராமல் ஏண்டி இப்படியெல்லாம் பேசுகின்றாய். “

    “நீ தான் பரீனா உன் நிலைமையை உணராமல் மூடத்தனமாக நிதானமிழந்து பேசுகிறாயா? பரீனா, கொஞ்சம் சிந்தித்துப்பார். நஜீம் வசதியாக இருந்த போது அவருக்கு காதலியாக இருந்து விட்டு இப்போ நீ ஓர் டாக்டராக மாறிவிட்டாய் என்பதற்காக அவரை விட்டு விலகி வாழ்கிறாயே மரம் விட்டு மரம் தாவும் குரங்குக்கும் உனக்கும் என்னடி வித்தியாசம்.”

    இர்பானா சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் பரீனாவின் உள்ளத்தை கரையான் அரிப்பது போல அரித்தது. பல்கலைக் கழக படிப்பை முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ளத் துடியாத் துடித்தவர்களை பெற்றோர் பிரித்து வைத்தார்கள். பரீனா பெற்றோரின் கட்டுப் பாட்டுக்குளிருந்து மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் டாக்டராக பணி புரிந்து கொண்டிருந்தாள். நஜீம் எதிர்புகளுக்கிடையில் பெற்றோரின் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து விட்டு தனிமையில் வாழத் தொடங்கினான்.

    நஜீம் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரிந்தான். பரீனா நஜீம் இருவருக்கிடையில் கடிதத் தொடர்புகளுமின்றி ஒருவர் நினைவில் ஒருவர் வாழத் தொடங்கினார்கள். இன்பமே நிறைந்திருந்த அந்த இளஞ்ஜோடிகளின் இதயத்தில் திடீரென்று ஒரு நாள் துன்பம் தடவிப் பார்த்தது. நஜீம் பரீனாவின் தற்காலிகப் பிரிவு தாங்கமுடியாமல் அல்சரா புகைப்பதில் பெரிதும் ஈடுபாடு கொண்டான். இதன் விளைவு வயிற்றில் புண்களை உருவாக்கியது. திரும்பத் திரும்ப புகைத்ததால் அல்சராக் கூடி கடுமையாக பாதிக்கப்பட்டான். இதனால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நஜீமை அவனது பெற்றோர் உடனடியாக மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதித்தார்கள்.

    பரிசோதனை செய்வதற்காக வார்ட் நோக்கி வந்த பரீனா நஜீமின் நிலைமையை அறிந்து மனவேதனைப்பட்டாள். பனித் துளிகளைப் போல் கண்ணீரை தூவினாள். நண்பி என்ற முறையில், இர்பானாவிற்கு தன்னால் இயன்ற உதவிகளையெல்லாம் செய்து வந்தாள் பரீனா. தன்னோடு ஓர் தாதியாகவும் சேர்த்துக் கொண்டாள். நஜீம் மீது உயிரையே வைத்திருந்த பரீனா, அவரது கீழ்த்தரமான இந்தச் செயலை நினைத்து நினைத்து இரவு நேரங்களில் தலையனையை ஈர மாக்குவதுடன் சுடுமணலில் துடிக்கும் புழுவைப் போல் துடித்தாள்.

    உடல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாத நஜீம் அவள் காதைப் பிடித்து கட்டிலுக்கு அழைக்கும் போதெல்லாம் அவனது மூளைக்கு அதிகம் வேலை கொடுக்கக்கூடதென்பதற்காக விலகிப் போவாள். சில நேரங்களில் தன்னையும் மறந்து நஜீம் மீது கோபமடைவாள். நாளமையில் அவனது உடல் நிலை பரீனாவிற்கு தாங்க முடியாத துயரத்தையும், சிந்தனைகளையும் ஏற்படுத்தியது. தன் வாழ்க்கை சோகமான வரலாறாகிவிட்டதாக நினைத்தாள். கடைசியில் நஜீம் நினைவை விட்டு விலகி தனிமையில் வாழ முடிவெடுத்தாள்.

    “இர்பானா நீ என்ன சொன்னாலும் சரிடி; நான் எடுத்த இந்த இறுதி முடிவை நான் ஒரு போதும் மாற்றிக்கவே மாட்டேன்டி”.

    “பரீனா …..இப்பத்தாண்டி தெரியுது ….உன் நஜீமை விட்டு விட்டு எதுக்காக நீ ஓர் இறுதி முடிவு எடுத்துள்ளாய் என்பது. எப்படியாவது நஜீம் மூளைக்கு அதிகமான வேலை கொடுக்காமல் அவரை பழைய நிலைக்கு மாற்ற வேண்டுமென்ற என்ற எண்ணம் உனக்கு இருக்கு. தானும் மாற வேண்டுமென்ற எண்ணம் அவருக்கும் உண்டு. இவர் இனி பிழைத்து மனிதராக மாட்டாரோ என்று நீ நினைத்து இப்படி ஓர் முடிவை எடுத்துக் கொண்டாயோ? “

    “அப்படியொரு எண்ணம் என் மனதில் இருந்திருந்தால் எப்பவோ நான் அவரைவிட்டு விலகி என் பெற்றோர் பேசி பிடிவாதமாக கட்டிக் கொள்ளும்படி கூறும் சொந்த மச்சானை திருமணம் செய்திருப்பேன். இத்தனை வருடகாலமாக இவருக்காக நான் இப்படி வாழ்ந்திருக்கவே மாட்டேன்”.

    பரீனா சொல்லி முடித்து தலை நிமிர,  தாதி ஒருவர் வந்து அழைத்தாள். பரீனா எழுந்து சென்று நஜீமை பார்க்கச் சென்றாள்.

    நஜீம், “பரீனா, என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் வருத்தம் நல்லாச் சுகமாகி விட்டது. வீட்டுக்குச் செல்ல ஆசைப்படுகின்றேன். என் டிக்கட்டை வைத்தியசாலையிலிருந்து கட் பண்ணி விடுங்கள்”.

    சற்று நேர மௌனத்திற்குப் பின் பரீனா சொன்னாள் “நஜீம் வசதியான குடும்பத்தில் பிறந்த நீங்கள் சந்தோசமாக வாழ்ந்திருக்கலாமே? நான் உங்களுக்கு என்ன துரோகமா செய்தேன். இப்பே நீங்களாகவே நோயை தேடிக் கொண்டீர்களே”

    திடீரென்று பரீனா … பரீனா … என அழைக்கும் அழைப்பை கேட்டுத் திரும்பினாள்….அழைத்தவள் இர்பானா .

    ” என்னடி வந்திட்டியா?”

    “ஆமாடி “

    “எப்படி நஜீம் வருத்தமெல்லாம்?” இர்பானா கேட்டாள்.

    “கொஞ்சம் பரவாயில்லை இர்பானா “

    “பரீனா நஜீம் பாவம்டி, உன் பிரிவைத் தாங்க முடியாமல்தாண்டி அவர் இந்த நிலைக்கேத் தள்ளப்பட்டார். நீதாண்டி அவருக்கு நோய் ஏற்படக் காரணமாக அமைந்தவள்”

    இர்பானாவை முறைத்துப் பார்த்தாள் பரீனா, அவள் கண்கள் மட்டுமல்ல உள்ளமும் கண்ணீர் வடித்தது.

    “இதோ கேள் பரீனா….நஜீம் என் உடன்பிறந்த தம்பியடி. என் பெற்றோருக்கு இவன் மட்டுந்தாண்டி ஆண் செல்வம். என் தாய் இவனை கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தாள். என் தாய் காலமாக தந்தை இன்னும் ஓர் பெண்ணை திருமணம் செய்து கொண்டவர், இவனையும் கூடவே கூட்டிச் சென்று இந்த நிலைமைக்கு படிக்கவைத்தார். நான் என் சிறிய தாயிடம் இணைந்து கொண்டேன். அதனால் எங்கள் இருவரது பாசங்களும் பிரிவில் வாடியது என் தம்பியின் தரத்திற்கும், என் ஏழ்மையின் நிலைக்கும் இடைவெளிகள் பல…. அதனால்தாண்டி பரீனா என் தம்பியிடம் நான் யார் என்பதை காட்டிக் கொள்ளவில்லை. உன் மனதை விட மேலாக என் மனம் வேதனைத்தீயில் எரிந்து கொண்டிருக்கிறது.”

    “இர்பானா…..அப்போ நீ என் மைனியாடி….? ஏண்டி இத்தனை வருடமும் என்னிடம் மறைத்தாய்….” இறுக கட்டிப் பிடித்துக் கொண்டு இர்பானாவின் தலையை தடவிக் கொண்டே அழுதாள்.

    “இர்பானா என் வாழ்க்கையில் தான் துன்பமும்,வேதனையும் நிறைஞ்சிருக்கின்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். அது உன்னுடைய வாழ்க்கையிலேயும் நிறைஞ்சிருக்கு என்பதை இப்போ நான் தெரிஞ்சுக்கிட்டேன். இன்னும் சொல்லப் போனால், துன்பத்தின் மத்தியில் தான் இன்பமே உண்டு என்பதையும் புரிஞ்சுக்கிட்டேன்……இனிமேல் என்னவரை….ஆமாம், உன் ஆசைத் தம்பி நஜீமை விட்டுப் பிரிந்து ஒரு நிமிடம் கூட விலகி வாழவே மாட்டேன்னம்மா உறுதி”

    கன்னத்தில் கொட்டிக் கொண்டிருந்த கண்ணீர் துளிகளை துடைத்துக்கொண்டே பரீனா இர்பானாவை அழைத்துக் கொண்டு நஜீமை பார்க்கச் சென்றாள். இர்பானா நஜீமை கட்டியணைத்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள் நஜீம் ஒன்றும் புரியாது விழித்தான்.

    பரீனா விடயத்தை விபரமாகச் சொன்னாள். இருவர் கண்களிலும் கண்ணீர் வழிடிந்தோடின. அது ஆனந்தக் கண்ணீர்தான்.

    இர்பானா நஜீமிடம், ” தம்பி, பரீனா ஓர் பெயர் பெற்ற தரமான டாக்டர். இறைவன் துணையால் அவள் உன் நோயை சுகப்படுத்துவாள். முதலில் நீ என்னில்லம் போக வா……இரவைக்கே உங்கள் இருவரையும் நான் மனப்பூர்வமாக இணைத்து வைக்கின்றேன்”, என்று அன்போடு அழைத்தாள். பக்கத்து வீதியில் அமைந்திருந்த ஹோட்டலில் இருந்து வானலை ஊடாக….,
    நல்வாழ்த்து நான் சொல்வேன்………
    நல்லபடி வாழ்கவென்று….
    கல்யாணக் கோயிலிலே
    கணவன் ஓர் தெய்வம்மா……
    எனும் பாடல் தவழ்ந்து கொண்டிருந்தது.

    Share
  • இழக்கக் கூடாததை இழந்தவர்களாய்!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

    உண்மை என்று நம்பியதற்காக
    வெற்றி பெறுவதற்குமுன்
    தீர்த்து விடவா
    இத்தனைப் பட்டாசுகளையும்
    தீர்த்துக் கட்டினாய்?

    தீமைகள்
    நல வழிப்பட்டதென்று
    எமது
    தியாக வரலாற்றின்
    தீர்வுகள்
    இருண்ட சாம்ராஜ்யங்கள்! 

    நமது
    சாவகாசங்கள்
    புஸ்வாணங்களும்
    பட்டாசுகளுந்தான்!
    அதனால்தான்
    நமது பட்டுக்களின் மேல்
    இச்சை தீர்க்கிறான்
    பக்கத்து வீட்டான்! 

    எட்டிப் பாருங்கள்
    எத்தனை யுவதிகள்
    இழக்கக் கூடாததை இழந்தவர்களாய்!

    பொத்திப் பொத்தி வளர்த்தானே
    நம் சகோதரன் – இன்று
    புட்டுக் கொண்டு வருவது
    வீரத்தின் விரல்கள் மட்டுமல்ல
    கதுப்புகளை நனைக்கும் கண்ணீரும்தான்! 

    கட்டுப் போட்டானே
    அச்சம், மடம், நாணம் என்று
    கசக்கிப் போட்டானே – கயவன்
    இச்சை கொண்ட மிருகம் என்று! 

    அமைதி காக்க அத்தாட்சிப் பத்திரங்கள் அதற்கு
    ஏந்தி வந்தான் துப்பாக்கியந்திரங்கள் -இந்தத்
    தப்பான தாத்பரியங்களுக்குத்
    தார்மீகத்தில்
    தியாகத் தீட்சைகள்! 

    அமைதி  ஒப்பந்தங்கள் – இவை
    அரசியல் தீப்பந்தங்ள் – அதில்
    நாம் இழந்தது உரிமைகளல்ல
    இராஜ தந்திரங்கள்
    இராணுவ ரகசியங்கள்! 

    தட்டி எழுப்பியவனே – எம்மைத்
    தட்டி உறங்க வைத்து விட்டுக்
    குரல் வளையை அறுத்துக்
    குருதி குடிக்கின்றான்! 

    காந்தியத்தின் தாயகமே
    கோர வெறியர்களை – நீயும்
    கொள்கைக் கொத்தர்களென்று
    கௌரவிக்கின்றாயே?!

    ஓ…!
    “கொல்” கைக் கொத்தர்கள்
    சேர்ந்து துகிலுரியும்
    கிருஸ்ண பரமாத்மாக்கள்!  

     

    Share
  • கையெழுத்து! தலையெழுத்து!

    -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

    பிச்சை போட வேண்டாம்!
    புகழ் தேட வேண்டாம்!
    ஏழை எளியோரை  நினைத்துப் பாருங்கள் – அந்த 

    அல்லாஹ்வே உங்களுக்குத்  துணையிருப்பார்!

    இருப்பதை வைத்துச் 
    சிறப்பாய் வாழ்வோம் 
    இறைவனை வணங்கி!

    நிம்மதியாய் இருப்போம்
    போட்டி பொறாமை  

    சண்டை சச்சரவு
    இவையெல்லாம் எதற்கு?

    மனதிலே விஷமென்றால் 
    எதற்கு மனிதாபிமானம்?

    மனதில் நச்சுத்துளி கலந்து
    சமூகத்துக்கு எழுதி என்ன பயன்?
    உறவுகளைப் பசிக்க விட்டுவிட்டுப் 
    பணத்தினைக் கட்டிக்காத்து என்ன பயன்?

    மனமும் உடலும் கருகிய பின் 
    குடும்பம் இருந்து  என்ன பயன்?
    சோற்றில் விஷத்தைப் போட்டுவிட்டு 
    வேடிக்கை பார்த்து  என்ன பயன்?
    உறவே சீரழிந்த பின்

    பணமும் பிணமும் எதற்கு?

    எழுத்தில் எல்லா வரிகளும் 
    தலைக்கனம் நோக்கிப் போகிறது!
    உடலும் உள்ளமும் ஊனமுற்றே 
    வாழ்வு வீணாய்ப் போகிறது…

    கையெழுத்து 
    நன்றாகயில்லையெனினும் 
    பரவாயில்லை – தலையெழுத்து 
    நிம்மதியாக அமைய 
    வழிகாட்டுங்கள்…!

    ஒருவனின் கதை கவிதை கட்டுரை அல்ல 
    ஒரு இனத்தின் வேதனை…!

     

    Share