திருமண (நாள்) வாழ்த்து!
என் தோழி பவள சங்கரி திருநாவுக்கரசுக்கு
மாலை வான் நிறம் வாங்கிய வதனம்
முளரி அரும்புகள் முகிழ்த்த விழிகளில்
ஒளிரும் புதிய உணர்வுகள் பூத்து
வாழ்விலோர் திருநாள் கண்ட
மகிழ்ச்சியில் மனந்தான் பூத்து
செந்திரு போல் விளங்கும்
செந்தமிழ் (பவள சங்கரி ) பெண்மை
மாண்புறும் பெருநாள் உந்தன்
மணநாளின் நினைவு நாளில்
(கலைமகள் ஹிதாயாவின் வாழ்தலையை )
வானத்தின் மழைத்தூ வலாய்
குளிர்தமிழ்க் கவிதை யாலே
பெய்திட வந்தேன் வளம்
பெருக நும் வாழ்வின் வயல்
வாழ்க்கைத் துணையை வரித்து இன்றென்
நோக்கினில் உயர்ந்த பாச தோழியே பவள சங்கரி
தீக்குள் கிடப்பினும் சுடர்விடும் பொன்போல்
வாழ்கையில் என்றும் மாசின்றி வாழ்க…!!
மாசணு காத மனத்துள் வாய்மை
தேசு படர தெளிந்த நீ ரோடையின்
ஓசையைப் போலும் உண்மையின் நாதம்
ஆசு கவியாய் அகத்தினில் பொங்கி
வீசும் தென்றலில் மேதினி பரவ…..!!!
அண்ணன் (திருநாவுக்கரசு) கருணை மனத்தால்
(இறைவன் வரமாய் ) தந்த மருமகள்
இதயத்தை மனைவியின் இருப்பிட மாக்கிய
(பவள சங்கரி) இன்றுன் வாழ்வின் மண நாளை நினைத்து
எதிர் வரும் காலம் யாவிலும் துணையாய்,
பிரிக்க இயலா பிணைப்பாய்,இறைவன்
பேரரு ளாலே பிணைத்த வாழ்க்கைத்
தலைவன் திருநாவுக்கரடசோடு சார்ந்து இல்லற
வாழ்வின் தலைவியாய் வரும் வரும் நாளெலாம்
வாழ்வாய் உனக்கென வரையிலா வாழ்த்துக்கள்…
“இல்லறப் பூங்கா எழிலுறும் வண்ணம்
எழிலாய் அமைந்த தோழி பவள சங்கரி அதன்
சில் லெனும் நீரே,நீரில் மலர்ந்த
செவ்வர விந்த மலரே,மலரின்
உள்ளிருந் துளத்தின் உணர்விற் கலந்த
உணர்வே,சுகந்த மணமே,கரும்பின்
வெல்லப் பாகே,பாகுடைச் சுவையே…!
மேலாம் நிதியே! என்றெலாம் போற்றும் …
சங்க காலத் தமிழிலக் கியத்தின்
மங்கா கவிதையின் சுவை நயம் நிறைக…!
போதலர் தாமரைப் பொய்கையி லூறும்
சீதள மிகும் இன் சுவை நீர் போலும்
தீ திலா நெஞ்சில் சுரந்திடும் அன்பு நீர்க்
வாழ்க்கையில் இருவர் கலந்தொரு மித்து,
பொய்ப்பட பேசும் புவியின் கயமைகள்
மெய்ப்படும் வாய்மை மேவிடும் வாழ்வினால்
பொய்ப்பட ஆக புனித இல்லறத்தின்
மெய்ப்பொருள் தேர்ந்து விரிகதிர் சுடர்களாய்
கோபுரம் போலு யர்ந்த
கொள்கையும்,அகன்ற வான் போல்
ஆதுரம் மிகு குணமும்
ஆழி போல் அழ்ந்த (அ)றிவும்
சீருற பெற்று வாழ
திகழ் பரம் பொருளாம் வல்ல
இறைவனின் நெறிகள் பேணி
சுகம் பெற வாழ்த்துகின்றேன்….!
“மனைத்தக்க மாண்புடைய ளாகித் தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை…”
“பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மையுண்டாகப் பெறின் “என வள்ளுவன்
தீட்டிய குறளோ வியம் போல் வீட்டில்
ஏற்றிய தீபம் போல் இருள் கடிந் தொளிர்வாய்..,.!
பெண்ணின் பெருமையெலாம்
பேசும் திருக்குறளின்
நுண்ணரிய கருத்தெல்லாம்
நுணுகிச் சுவைத்து நலம்
பண்ணி ஆயிரங் காலப்
பயிராய் தலைத்திடுவீர்…!
குழலினில் யாழினில் எழுந்திடும் இசையிலும்
கோடி இன்பம் கூட்டும் மழலை
மொழிகளின் இனிமையும்
செவிகளின் நிறைய….!
உள்ளங்கள் ஒன்றாய் உணர்வுகள் ஒன்றாய்
இன்பமும் துன்பமும் ஒருவருக் கன்றி
இருவர்க் காம் எனும் இயல்பின ராகி….
நீரோடு கயல்பிரி யாதது போல்
நிலவொடுஒளிபிரி யாதது போல்
காரோடு குளிர்பிரி யாதது போல்
கடலிடை அலைபிரி யாதது போல்
நூலோடு நயமும் நுதலொடு திலகமும்
தாளோடு எழுத்தும் தமிழிடை இனிமையும்
பாலோடு வெண்மையும் பழமொடு சுவையும்
பூவோடு மணந்தான் பொருந்திய வாறாய்
என்றும் – தொடந்து வாழ்க !
“செந்தமிழ் கவிதையாய்
சிறப்புடன் வாழ வாழ்தும் உங்களன்புத் தோழி
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை
தம்பதிகள் பவள சங்கரி – திருநாவுக்கரசு இருவரும் பல்லாண்டு உடல் நலமோடு நீடு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
திருமண நினைவு நாளில் தம்பதிகளுக்கு ஓர் அரிய வாழ்த்துப்பா ஆக்கிய, திருமதி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுக்குப் பாராட்டுகள்.
பல்லாண்டு வாழ்க பவளா நா வுக்கரசு,
வல்லமை பெற்று வளம்பெறுக – இல்லறமே
நல்லறம், நற்பேறே நல்வழி, நன்னெறி
சொல்வதே வாழ்க்கைப் பயன்.
சி. ஜெயபாரதன்.
திருமண நாள்
அன்பும் அறனும், உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. என்பது வள்ளுவன் வாக்கு .
கணவன் என்றாலே (கண்+அவன்) என்பதாகும்,
அவன் வழியே உலகை காண்பவள் மனைவியாகும் !
ஆயிரம் கைகள் மறைத்தாலும், ஆதவன் மறைவதில்லை
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் மனைவி, கணவனை மறப்பதில்லை !
காலமும், காட்சிகளும், என்றும் மாறும் ,
கணவன், மனைவி உறவே என்றும் நிலைத்து வாழும்1
எட்டெழுத்தில் (திருநாவுக்கரசு) என்றும் ஏழு அடங்கும்
பவள சங்கரி எனும் பெயரும் விளங்கும் !
உலகில் பிரிக்க முடியாதது பாசம், பந்தம்
உலகில் ஒத்துக்க முடியாதது நட்பும், உறவும் !
இல்லற வாழ்க்கையே திருமணத்தின் தொட்டக்கமாகும்
இதற்குள்ளே எல்லாமே அடங்கி இருக்கும் !
இல்லறத்தில் இணைந்திட்ட திருநாள்
வாழ்வில் இன்பத்தை காணும் நாள்
இருமனம், ஒருமனமாய் ஒன்றுபட்ட நாள்
இதுவே திருமதி பவள சங்கரி, திரு.திருநாவுக்கரசு திருமண நாள்!
தம்பதிகளுக்கு என் மனமார்ந்த ஆசிகள் !!
ரா.பார்த்தசாரதி
அருமைச் சகோதரி பவளசங்கரி மற்றும் மதிப்புக்குரிய கணவர் திருநாவுக்கரசு அவர்களின் திருமணநாள் என்ற செய்தி மனமகிழ்வைத் தருகிறது!
பொருந்தும் மனைபார்த்து
பெற்றவர் உற்றவர் மகிழ்வோடு
நாளும் கோளும் கூடி
நாயகன் கைப்பற்றி
போகும் திசையெலாம்
பின்னேகும் பக்குவமாய்
ஏழ்பிறப்பும் தொடர்பந்தம்
ஏகும் மணபந்தம்
ஆறின் சுவையிருக்க
அறுமுகன் துணையிருக்க
ஐக்கிய குணங்கொண்டு
ஐயம் அறவின்றி
நாலும் கடந்துவரும்
நல்லதோர் வாழ்க்கையிது
மூன்று முடிச்சுடன்
அகங்கள் இணைந்தனவே
இரண்டும் ஒன்றாக
ஒன்றே வாழ்வாக
இன்பமும் மகிழ்ச்சியும் இடையறா துணைநிற்க
இல்லற வாழ்வே வரமாக வாய்த்திருக்க
இனிவரும் நாளெலாம் இதுபோல் தொடர்ந்திருக்க
இன்முகம் பன்முகமாய் இல்லம் சிறந்திருக்க
பவளம் அரசரோடு பல்லாண்டு வாழ்ந்திருக்க
பரந்தாமன் அருகிருந்து குடும்பம் தழைத்தோங்க
வாழ்த்துகிறேன்!
அன்புடன்
சுரேஜமீ
தமிழும் இனிமையும் போல்
என்றும் இனிதாய் இன்னும் பல் ஆண்டு வாழ வாழ்த்துகிறேன்….
மிகச் சிறப்பான வாழ்த்து சகோதரி ஹிதாயா ரிஸ்வி