சுரேஜமீ

peak11

வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை; வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை!

மனிதன் மாறிவிட்டான்!! – கண்ணதாசன்

கவிஞனின் சிந்தனைத் தெளிவு, கற்றவர் அறிந்திட்டால், வாழும் மண்ணே சொர்க்கம் எனலாம். அறிய மறுக்கிறோமா அல்ல தன் தேவை எதுவரினும், தரணியைக் கெடுத்தேனும் பெற்றிட எண்ணும் அறியாமை நிழல் நம்மைத் தடுக்கிறதா? விடை சொல்ல மறுக்கும் ஒவ்வொரு கணமும், இப்புவியில் ஏதேனும் ஓரிடத்தில் ஒரு சீற்றம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

இதுவரை நாம்

சென்ற கட்டுரையின் தொடர்ச்சியாக, இப்புவியின் இருப்பைக் கெடுக்கும் இயற்கையின் தலையாய பிரச்சினைகளைப் பட்டியலிட்டு அலசுவதில், முதல் நான்கு நிலைகளாக,

1. மக்கள் தொகை
2. காலநிலை மாறுபாடுகள்
3. பல்லுயிர்ப் பெருக்கங்களின் இழப்புகள்
4. வேதிப்பொருட்களின் சுழற்சி

பற்றி சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டோம். மற்ற காரணிகளைப் பற்றி சுருக்கமாக இந்தக் கட்டுரையில், உங்கள் சிந்தனைக்குச் சில செய்திகளை இட்டுச் செல்ல விரும்புகிறேன்.

5. தண்ணீரின் தேவை

இந்த உலகம் மூன்றில் ஒரு பங்கு நீரால் சூழப்பட்டு இருந்தாலும், மக்களுக்குத் தேவையான சுத்தமான அல்லது சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரின் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒன்றும் வியப்பான செய்தி அல்ல. உலக ஆராய்ச்சி வல்லுநர்கள் விடுக்கும் எச்சரிக்கை என்ன தெரியுமா? உலக மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை என்பதும், இதே நிலை நீடித்தால், மிகக் கடுமையான விளைவுகளைச் சந்தித்து, மூன்றில் இரண்டு பங்கு மக்கள் குடிநீருக்காக தன்னை வருத்தும் நிலையும், அது சார்ந்த சமூகக் குற்றங்களும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

நண்பர்களே, இது ஏதோ படித்துவிட்டு நகர்ந்து செல்லக் கூடிய செய்தி அல்ல! சற்று யோசியுங்கள். என்றாவது எதிர்பார்த்து இருப்போமா நாம் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் காலத்தை? உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? வளைகுடா நாடுகளில் குடிநீரின் விலை திரவ எரிபொருளை விட (Petrol) அதிகம் என்பது!

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவன் ஒரு குறளில் தண்ணீரின் இன்றியமையாமையை இப்படிக் கூறுகிறான்!

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை!

விவசாயிகள் உணவுப் பொருள் உற்பத்தி செய்வதற்காக மட்டுமல்லாமல், அவர்களுக்கு ஒரு நல்ல உணவாகவும் பயன்படுகிறது வான் மழை என்று சொன்னால், அதை நாம் சிறப்பாகச் சேமிக்க வேண்டாமா? இதன் உட்பொருளே, நாம் நீரைச் சேமிக்க வேண்டும் என்பதுதான்!

வான்மழை நமக்கு மட்டுமல்ல! புவியில் உருவாகும் அனைத்து உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கும் இன்றியமையாதது என்று சொன்னால், நாம் இனி ஒரு கணம் கூட மரங்களை வெட்டுவதற்கும்,, நீர்நிலைகளை மூடுவதற்கும், இயற்கையை அழிப்பதற்கும் அனுமதிக்கக் கூடாது என முடிவெடுத்து, குறைந்த பட்சம், இருக்கும் இயறகையைக் காப்பாற்றி, நீரின் அவசியத்தையும், அதை எப்படிச் சேமிப்பது என்பதோடு மட்டும் நின்று விடாமல், உபயோகிக்கப் பட்ட கழிவு நீரைக்கூட, தாவரங்களுக்குச் சென்றடையும் வகையில் செய்யவேண்டும்.

முடிந்த வரை ஒவ்வொரு மனிதனும், எங்கெங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் மரம் நட்டு, பாதுகாத்து, வான்மழை செழிக்க வகை செய்ய வேண்டும்!

6. கடல்நீர் அமிலமயமாதல்

அபரிமிதமான தொழிற்சாலைகளின் வளர்ச்சியும், அதன் விளைவாக வெளியாகும் கரியமில வாயுவின் அதிகப்படியான உற்பத்தியும், கடல்வாழ் உயிரினங்களைக் கிட்டத்தட்ட அதன் அரிச்சுவடு கூட இல்லாமல், அழித்திடும் நிலையை உருவாக்கி இருக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு இணையாக அதன் தேவைகளை நிறைவு செய்வதற்கு, தொழிற்சாலைகள் தேவை என்பதில் இரு கருத்து இல்லை. ஆனால், அவைகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் பற்றிய அறிவுபூர்வமான சிந்தனை தேவை என்பதையும் நாம் அறிய வேண்டும்.

குறிப்பாக, கரியமில வாயுவின் 25% கடலில் கலப்பதாகவும், அதன் காரணமாக ஏற்படும் அமிலங்கள், கடந்த 250 வருடங்களில் சுமார் 30% கடற்பரப்பில் அமிலத் தன்மையை உருவாக்கி இருக்கிறதென்றும், இன்னும் நூறு வருடங்களில், இது ஐந்து மடங்கு அதிகரிக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

7. மாசு படிதல் (Pollution)

ஒரு நல்ல வெள்ளை நிறக் கைக்குட்டையைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டுக்கு அருகில் இருக்கும் சாலையில், ஒரு இரண்டு நிமிடம் நடந்து செல்லுங்கள். அதன்பின்னர், உங்கள் முகத்தைக் கைக்குட்டையால் துடையுங்கள். இப்போது, கைக்குட்டையின் நிறத்தைப் பாருங்கள். என்ன புரிகிறதா? நிறம் மாறி இருக்கிறதா? இந்த நிறம் மாற்றத்திற்கான காரணத்தை என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? எதைக் கொடுத்தாவது, நம் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற கட்டாயம், நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து, குடிக்கும் நீர் வரை இந்த அண்டத்தை மாசு படித்தியிருக்கிறதென்றால், அதற்கு முழுக்காரணமும்; நம் நவீன வாழ்க்கை முறைதான் என்றால் நீங்கள் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். நாம் உபயோகப்படுத்தும் வீட்டு சாதனங்கள் தொடங்கி, வாகனத்திற்கு உபயோகிக்கும் திரவ எரிபொருட்கள், கனரக தாதுக்கள், நெகிழிப் பொருட்கள் மற்றும் செயற்கை இழைபொருட்கள், நம் சுற்றுச் சூழலில், அளவுக்கதிகமான நச்சுத்தன்மையை ஏற்படுத்தி, நம் வாழ்விற்கு சவாலாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இயற்கை வளத்தையும் அழிக்கிறது.

என்றைக்கு மனதளவில் நாம் தெளிந்த சிந்தனையோடு, இயற்கையின் வரத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறோமோ, அன்றுதான் நம்மால், ஒரு சுகாதாரமான, இயற்கையோடு ஒன்றிய வாழ்விற்கு, நம்மைத் தயார்படுத்தி, மனித வாழ்வின் பயனை நுகரமுடியும் என்பதை நாம் உணரவேண்டும்.

நண்பர்களே நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், நமக்கோ இயற்கைக்கோ ஊறு நேராமல் இருந்தால், அதுதான், இந்த உலகிற்கு நாம் செய்யும் ஒப்பற்ற உதவி என்பதோடு மட்டுமல்ல, வளரும் சமுதாயத்திற்கு நாம் காட்டும் வழி என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது! இயற்கைப் பிரச்சினைகளைப் பற்றிய இந்த சிந்தனைகள், எவ்வளவு உணர்ச்சி பூர்வமானவை என்பதை நான் அறிவேன்.

இணைந்த கைகளாக இருப்போமேயானால், இந்த பூமி நம்மை வாழ்த்தும்!

தொடர்ந்து சிந்திப்போம்…..சிகரம் நோக்கி!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.