-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

வற்றிக் கிடக்கும்  வறண்ட பூமியைத்
தொட்டுத் தழுவும் –
உனது   தூய  கரங்களுக்குத்தான்  எத்தனை குளிர்ச்சி!

இரவென்ன  பகலென்ன
வானம்  கருக்  கொண்டால்…,
பூமி  மகிழ்கிறது!

நீ
இல்லாத நாட்களில்                                        rain-fall
பொல்லாத புழுக்கம்
இருக்கின்ற நாட்களில்
இப் புவியே வழுக்கும்!

நீ வருகை தருங் காலத்தில்
வெள்ளம் பாய்ந்தோடும்
உனது
விபரீதப் போக்கினால்
கண்ணீர்  வெள்ளமும்  பாய்ந்தோடும்…!

நதிக்கரைகளில்  அலையடிக்கும்
கடற்கரைகளில்
வெண்நுரைப்  பூக்கள்
விரிகின்ற  மாரிக்காலம்,
உன்னைச் சுமந்த மேகங்களின்
ஊர்கோலம்!

கண்ணுக்குக் குளிர்ச்சி தரும்
இந்த –
மண்ணுக்கே மகிழ்ச்சி  வரும்

மீனோட…
நாரைகள் தவமிருக்கும்
ஏரோடாத கழனிகளில்
ஏரோட…எங்கும்
பைங்கூழ் விளைந்திருக்கும்!

வறுமைத் தளையறுக்கும்
வல்லமை  உன்னுடையது!
நீ இல்லையேல்
எந்த  மண்தான் பொன்னுடையது?

கொட்டும் …இடிமின்னல் …காற்று…
”கூஹ் கூஹ்”வென்று
குரலை யெழுப்ப
முட்டும் மரக்கிளைகள்
மோதிச்  சலசலக்க…
கார்கால மேகங்கள்
தாவிச் செல்லும்
பல்லாக்கிலே –
நீ வீற்றிருந்து
விஜயஞ்  செய்கின்றாய்!

சாகரங்களைச்
சல்லாப புரியாக மாற்றும்
சக்தி உன்னுடையது!

நீ கொடைவள்ளல் –
அள்ளிக் கொடுக்கும் போதுதான்
இடையூறு  அதிகம்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.