என்னை விட்டுப்பிரிந்த தந்தையின் நினைவாக…
-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
எந்தையே எம்முயிரே
எங்கு நீ சென்றாயோ ?
சிந்தை நாம் கவல்கின்றோம்
சோர்வுற்று வாழ்கின்றோம்
உந்தன் பிரிவாலின்று
உறு துணை இழந்துநாம்
வெந்தழலில் புழுவாக
வேதனையால் துடிக்கின்றோம்!
மந்த மாருதமாய் நீயே
மகிழ்வித்தாய் எங்களையே
சந்தனத் தோப்பாக
செழிப்புறயெம் வாழ்க்கையும்
பந்தபாசம் பாசறையில்
பயில்வித்தாய் எங்களைநீ
விந்தைமிகு அன்பிற்கே
வரைவிலக்கணம் ஆனாய்நீ!
சாய்ந்தமரு தெம்பதியில்
சகலருமே எப்பொழுதும்
தூய்மையுறும் உன்னன்பைத்
துளியேனும் தயக்கமின்றி
நேயமுடன் மதித்துனது
நேர்மைநல் லாற்றலோடு
வாய்மையரும் பண்புகளை
வாழ்த்திநிதம் மகிழ்ந்தனரே!
மருத்துவத்தால் பல்லாயிரம்
மக்களது நோய்தீர்த்த
அருந்தந்தையே உம் பிரிவால்
ஆறாகுமெம் வேதனைக்கு
அருமருந்து இனிநாங்கள்
ஆரிடம்தான் பெற்றிடலாம்?
கருணையிறை அருளொன்றே
கைகொடுக்கும்; ஆறுகிறோம்!
சன்மார்க்க நெறிபேணிச்
சாந்தமுடன் நீ வாழ்ந்தாய்
உன்சேவை மனப்பான்மை
உள்ளொன்று புறமொன்று
முன்னொன்று பின்னொன்று
மிழற்றுகிற பழக்கமின்றி
நன்னெறிகள் பேணி நிதம்
நலம்பெறவே வாழ்ந்தாய்நீ!
சேர்பகையே வந்தாலும்
சத்தியத்தில் தவறாது
நேர்மையே நல் கிடவே
நடத்திடுவாய் என்றென்றும்
ஓர்மையிறை எண்ணமே
உன்துணையாம் என்றேநீ
கூறிய அறி வுரைகளின்னும்
காதுகளில் ஒலிக்கிறதே!
அரும்சுவர்க்கத் தலைவாசல்
அதைவிடவும் அருந்தந்தை
பெருந்தகுதி உயர்வாமே
பெருமானார் பொன்மொழியைக்
கருத்தில்நாம் ஆழமாய்க்
கொண்டழகாய் உன்பெயரைத்
துருப்பிடிக்கா தென்றுமே
தூய்மையுறக் காத்திடுவோம்!
கலைமகளாய் நானென்றும்
கவின்இஸ்லாம் வழியினிலே
கலைஇலக்கியப் பணிகளையே
கட்டுப்பாடு ஒழுக்கமுடன்
நிலையாகத் தொடர்ந்தாற்ற
நெஞ்சுறுதி தந்தநீயே
நிலைகலங்க எமைவிட்டே
நீத்தாயே இவ்வுலகை!
என்னெழுது கோலுனது
ஆத்மாவின் சாந்திக்காய்க்
கண்ணீரை மையாக்கிக்
கரைபுரளும் பாசத்தைப்
பொன்னரிய எழுத்தாக்கிப்
பிரார்த்தனை மாலையாய்
இன்றிங்கே தொடுகிறதே
இறையருள்கவே ஆமின்!