பொறுத்திருந்து பார்ப்போம்

-கவிஞர் ருத்ரா

நிழலைத் தேடி நடக்கிறேன்
நேற்றுச் சொற்பொழிவில்தான் சொன்னார்கள்
எனக்குள்ளே
மாந்தோப்பும் தென்னைமரங்களும் இருக்கின்றன என்று!

கடவுள் தேடிக் கைகூப்பினேன்
முதுகுக்குப்பின்னே
எல்லாவேதங்களையும் மூட்டைகட்டி வைத்திருப்பதாய்
ஏதோ ஒரு ஆனந்தா சொன்னார்

காதலில் விழுந்தேன்
அவள் சிதறிய புன்முறுவலே போதுமானது
மின்னல் விழுதூன்ற‌
தலையணை முகட்டினிலே
தூக்கம் தொலைத்த ஆரண்யங்கள்

வாழ்க்கை என்பதற்கு அர்த்தம் கேட்டேன்
அகராதி புரட்டப்போனவர்கள்
கல்லறைகளில் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்

என்னைச்சுற்றி
என்னையும் சேர்த்துத்தான்
அநியாயங்களும் அக்கிரமங்களும்
மலிந்து போயினவே
என்ன செய்ய‌?
என்று அவர்களைக்கேட்டேன்

கையில் நிறைய
வில் அம்புகளையும்
மழுவாயுதங்களையும்
கோடரிகளையும் கலப்பைகளையும்
சங்கு சக்கரங்களையும்
மயிற்பீலி கிரீடங்களையும்
கொடுத்தார்கள்
நீயே அவதாரம் எடுத்துக்கொள் என்று
’சரி’ என்று கிளம்பினேன்
நில்!
இதையும் எடுத்துக்கொள்!

என்ன இது?
அரிதாரம் என்றார்கள்!
இதோ
அதை அங்கே தூவுகிறேன்
நம் சட்டமன்றங்களிலும் நீதி மன்றங்களிலும்
பொறுத்திருந்து பார்ப்போம்!

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க