ஒரு எழுத்தாளர் பன்னூலாசிரியர் காலமானார்
ஒரு எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், கல்விமானும், ஆய்வாளருமானஅல் -ஹாஜ் எஸ்.எச். முஹம்மது ஜெமீல்காலமானார்
இவர் சாகுல் ஹமீத், முக்குலத் உம்மா தம்பதியினரின் புதல்வர்
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது எனும் ஊரில் 1940ம் ஆண்டு ஒக்டோபர் 18ந்திகதி பிறந்தார்.
புகழ் பெற்ற குடும்பத்தில் சித்தி ஆரிபாவை திருமணம் செய்து கொண்டார்
இத்தம்பதியினருக்கு ஒரே ஒரு மகன் முஹம்மது நசீல்.
தனது ஆரம்பக் கல்வியைஆங்கில மொழி மூலம் காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம்,
கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி,
கொழும்பு சாஹிரா கல்லூரி ஆகியவற்றில் கற்றார்
பின்பு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பாடத்தில் சிறப்புப் பட்டமும்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்கல்வித் துறை முதுமாணிப் பட்டமும்
அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை டிப்ளோமா பட்டமும்,
ஐக்கிய இராச்சியத்தின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை சார் பயிற்சியையும், பல்கலைக்கழக நிர்வாகம் தொடர்பான கல்வியையும் பெற்றுக் கொண்டார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் போதனாசிரியராகவும்,
‘அருணாசலம் ஹோல்’ உதவி விடுதிக் காப்பாளராகவும் பணியாற்றியா இவர்
கல்லூரி ஆசிரியராக,
அதிபராக,
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அதிபராக,
வட்டாரக் கல்வி அதிகாரியாக,
பிரதம கல்வி அதிகாரியாக,
பரீட்சைத் திணைக்கள உதவி ஆணையாளராக,
மட்டக்களப்புகிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளராக,
முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் செயலாளராக,
கல்வி, கலாசார விவகாரங்கள் அமைச்சின் மேலதிக செயலாளராக,
கலாசார, சமய விவகார அமைச்சின் ஆலோசகராக…
. இப்படிப் பல்வேறு உயர் பதவிகளை வகித்துத்து ஓய்வுபெற்றார்
‘எனது ஊர்’ எனும் தலைப்பில் ‘தினகரன் ஞாயிறு பாலர் கழகப் பகுதியில்’ 1949 இல் தனது முதலாவது ஆக்கம் மூலம் கலை உலகில் பாதம் பதித்தார் .
இலக்கியம்,
வரலாறு,
கல்வி,
நாட்டுப்புறப் பண்பாட்டியல் எனும் துறைகளிலான ஆய்வு முயற்சிகள் வலுப்பெற்று இறுதி வரை 25 நூல்களை எழுதியுள்ளார்.
சுமார் 110 ஆய்வுக் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.
50 நூல்களுக்கான பதிப்புரை, மதிப்புரை, சிறப்புரை வழங்கி உள்ளார்
வானொலியில் (பிறநாடுகளுட்பட) 130 பேச்சுக்கள்,
கலந்துரையாடல்கள், நிகழ்ச்சிகள் என்பவற்றிலும்,
தொலைக்காட்சியில் 10 நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
தினகரன், வீரகேசரி, தினபதி, சிந்தாமணி, நவமணி, தினக்குரல், மணிக்குரல், அல்இஸ்லாம், ஸாஹிரா, மித்திரன், அல் அரப், வளர்மதி, டெயிலிநியூஸ், ஒப்சேவர், எக்கோனோமிக்ஸ் டைம்ஸ் ஆகிய பத்திரிகை, சஞ்சிகைகளிலும் அவ்வப்போது வெளியிடப்படும் விசேட மலர்களிலும் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
கல்முனை ஸாஹிரா கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் அக்கல்லூரி பல புதிய இலக்கிய முயற்சிகளை மேற்கொண்டார்
மாணவர்களின் எழுத்தாற்றலை வளர்ப்பதற்காக 1976 இல் ஆரம்பிக்கப்பட்ட ‘ஸாஹிரா’ மாதாந்தப் பத்திரிகை பல ஆண்டுகள் வெளிவந்து,
இன்றுவரை இடைக்கிடையே வந்து கொண்டிருக்கிறது.
1983இல் இவரது ஆலோசனையில் ஆரம்பிக்கப்பட்ட ‘இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகத்தால்’ 1986இல் வெளியிடப்பட்ட ‘எழுவான் கதிர்கள்’முக்கியதொரு தொகுப்பாகும்.
இதில் அன்று எழுதிய கவிஞர்கள் இன்று பெரும் புகழும் பெற்று வாழ்கின்றார்கள்
அதில் என் கவிதையும் இடம் பெற்று உள்ளது
1990களில் கிழக்கிலேற்பட்ட வன்முறைச் சூழலானது பணியகத்தின் சேவைகளை முடக்கிவிட்டது.
இருந்தபோதிலும் 2000ம் ஆண்டுவரை 21நூல்களை அது வெளியிட்டுள்ளமை கவனத்திற் கொள்ளத்தக்கதாகும்.
முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராகவும் ,ஆலோசகராகவும் கடமையாற்றிய 11 வருட காலத்தில் இவ்வமைச்சு பெருந்தொகையான நூல்களையும், மலர்களையும் வெளியிட்டதிலும் பலரது நூல்களைப் பதிப்பித்ததிலும் எழுத்தாளர் மற்றும் கலைஞர் ஊக்குவிப்பிலும் பெரும் பங்கு வகித்தார்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றினை ஆய்வுசெய்து, ஆவணப்படுத்தி, மாவட்டரீதியான நூல்களை வெளியிட்டார்
இவ்வாறு களுத்துறை, அனுராதபுரம், கண்டி, மாத்தளை,மாத்தறை, அம்பாறை, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்ட வரலாற்று நூல்கள், 1992-2000 ஆண்டு காலப் பகுதியில் வெளிவந்தது .இதற்காகப் பல அறிஞர்களின் உதவிகளை பெற்றுக் கொண்டார்
எ.எம்.எ.அஸீஸ் அவர்களின் கல்விச் சிந்தனைகளும், பங்களிப்பும் (1980)
சேர். ராஸிக் பரீத் அவர்களின் கல்விப்பணி (1984)
சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் வரலாறு (1989)
கல்விச் சிந்தனைகள் (1990)
நினைவில் நால்வர் (1993)
கலாநிதி ஜாயாவின் கல்விப் பணிகள் (1994)
சுவடி ஆற்றுப்படை – முதலாம் பாகம் (1994)
சுவடி ஆற்றுப்படை – இரண்டாம் பாகம் (1995)
கிராமத்து இதயம் – நாட்டார் பாடல்கள் (1995)
இஸ்லாமியக் கல்வி (1996)
கல்விச் சிந்தனைகள் – இரண்டாம் பதிப்பு (1996)
சுவடி ஆற்றுப்படை – மூன்றாம் பாகம் (1997)
கலாநிதி பதியுத்தீன் மஹ்மூதின் கல்விப் பணிகள் (1997)
காலச் சுவடுகள் (1998)
நமது முதுசம் (2000)
சுவடி ஆற்றுப்படை – நான்காம் பாகம் (2001)
ஆகியவை மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல்அவர்களது நூல்களாகும்
பொது நிதியியல் (1966)
துவான் புர்ஹானுத்தீன் ஜாயா (1990)
அனுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் (1992)
அல்லாமா எம்.எம். உவைஸ் (1994)
அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் (1997)
கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் (1998)
Islam in Independent Sri Lanka (1998)
Sri Lanka Udana (1998)
புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள் (1999)
ஆகியவை அவரால் தொகுப்பட்ட பதிப்புக்களாகும்
இவர் தடவிப் பார்த்த விருதுகள் பல அவற்றில் சில இவை
இலக்கிய ஆய்வுக்கான சாகித்திய மண்டல விருது (1995)
வடக்கு-கிழக்கு மாகாணசபை – இலக்கியப் பரிசு (1995)
ஈராக்கில், பக்தாத் நகரில் அரபு நாடுகளின் ஆசிரியர் சம்மேளனம் கேடயம் வழங்கிக் கௌரவித்தமை (1980)
இந்தியாவில் நடைபெற்ற 6-வது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக மாநாட்டில் ‘தமிழ்மாமணி’ பட்டம் வழங்கிக் கௌரவித்தமை (1998)
திருச்சி (இந்தியா) M.I.E.T. கல்லூரியில் பொன்னாடை போர்த்தியும், ஞாபகச் சின்னம் வழங்கியும் கௌரவித்தமை (1995)
மலேசியா, கோலாலம்பூரில் இயங்கும் கவிதாமாலை இயக்கம் ‘தமிழ் அருவி| பட்டம் வழங்கிக் கௌரவித்தமை (1999)
அட்டாளைச்சேனை தேசியமீலாத் விழாவின் போது ‘நஜ்முல் உலூம்’ பட்டம் வழங்கிக் கௌரவித்தமை (1997)
‘சாமஸ்ரீ’ விருது (1999)
சிந்தனைவட்டம், மலையக கலை கலாசார ஒன்றியம் இணைந்து கண்டியில் ‘இரத்தினதீப’ விருது வழங்கிக் கௌரவித்தமை (2000)
கொழும்பு தமிழ்ச்சங்கத்தினால் கேடயம் வழங்கி, பொன்னாடை போர்த்திக் கௌரவித்தமை (1999)
அம்பாறை மாவட்டக் கரையோர ஊடகவியலாளர் சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கிக் கௌரவித்தமை (2000)
ப்ரிய நிலா கலை, இலக்கிய சங்கத்தினால் பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கிக் கௌரவித்தமை (2001)
அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் கௌரவம் (1998)
கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக் கௌரவம் (2002)
20 ஆம் நூற்றாண்டின் பின் அரைக்காலப்பகுதியில்மேற்கிளம்பிய இஸ்லாமியத் தமிழ் கல்விமன்களுள் முக்கிய இடம் பெற்ற எஸ். எச். எம் ஜெமீல் அவர்களின்
ஆளுமைகளின் மரணங்கள் சமூகத்தில் பாரிய இடைவெளிகளை உண்டாக்கி உள்ளது
சவுதிஅரேபியாவிலுள்ள இலங்கை சர்வதேசப் பாடசாலையின் அதிபராகவும்,
பல்வேறு நாடுகளில் நடைபெற்ற ஆய்வு மாநாடுகளிலும் பங்குபற்றியிருந்ததுடன்,
பல்வேறு அமைப்புக்களின் ஆலோசகராகவும்,
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி, மார்கா ஆய்வு நிறுவனம் போன்றவற்றின் ஆலோசகராகவும் பணியாற்றினார்.
கல்வித்துறையில் மிக ஆழமான அறிவினைப் பெற்றிருந்த கல்விமான் மர்ஹும் எஸ்.எச்.எம். ஜெமீல் தமிழ் இலக்கியத்திலும், ஆங்கிலத்திலும் மிகவும் புலமைத்துவமிக்கவராகவும் திகழ்ந்தார்.
வாழ்நாளில்; தன்னால் எழுதப்பட்ட, தேடப்பட்ட சுமார் 2000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், தொகுப்புக்கள் அடங்கிய நூல்களை அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.
இவரது சகாக்களான ஏ.பீர் முகம்மது, எஸ்.எல். சியாத் அகமட் மற்றும், மருதூர் ஏ.மஜீட், டாக்டர் தாஸிம் அகமது ஆகியோர் தொகுத்து எழுதிய ஒரு “கிராமத்துச் சிறுவனின் பயணம்” எஸ்.எச்.எம்.ஜெமீலின் வாழ்வியல் தொடர்பான மிகப்பெரிய நூல் ஒன்றினை கடந்தாண்டு வெளியிட்டு அவரைக் கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு நாட்டுக்கும், தன்சமூகத்திற்கும், கல்வியுலகிற்கும் மாபெரும் தொண்டாற்றிய கல்விமான் மறைந்தது தமிழ்பேசும் நல்லுலகிற்கு மிகப் பெரும் இழப்பாகும்
.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளரும், கல்முனை ஸாஹிறாவின் முன்னாள் அதிபரும் பிரபல கல்வியயளாலருமான காலாநிதி அல்ஹாஜ் S.H.M.ஜெமீல் அவர்கள் இன்று (27.04.2015) காலமானார்கள்.
இலக்கியம், கலை, கல்வி, கலாசாரம் முதலிய பல துறைகளில் புத்தகங்களையும், ஆக்கங்களையும் வெளியிட்ட அன்னார், அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகத்திற்கு தனது சேகரிப்புக்களை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேசிய ஷூரா சபையின் நிபுணத்துவ ஆலோசனை சபையில் உறுப்பினராகவும் அண்மைக்காலமாக சமூக மற்றும் தேசிய உணர்வுடன் பங்களிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
சாய்ந்தமருது மண்ணின் தொப்புள்கொடிதந்த குடும்ப உறவு இவர்
தனது 75ம் வயதில் (27.04.2015)காலை தெஹிவளையில் இறைவனடி போய்விட்டார் .
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுஊன்.
ஒரு காவியம் முற்றுப்புள்ளி பெற்றுவிட்டது;
எங்கள் குடும்பத்தின் சுடர் அணைந்து விட்டது
அன்பான அங்களுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை வரமாக்கி கொடுப்பானாக
நரகத்தை ஹராமாக்கி வைப்பானாக !ஆமின்
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி