வையவன்

வெற்றிவேலின் சொந்த ஊர் சிங்காரப்பேட்டை. திருப்பத்தூரிலிருந்து செங்கம் செல்லும் சாலையில் குறுக்கிடும் சிற்றூர். முப்பது கிலோ மீட்டருக்கு பஸ்ஸில் போக வேண்டும்.

மிகவும் வசதியான குடும்பத்திலிருந்து வந்தவன் வெற்றிவேல். சுற்றுப் பக்கத்தில் நல்ல பள்ளிக்கூடம் இல்லை என்பதற்காகத் திருப்பத்தூரில் அவனுக்கென்று ஒரு வீட்டையே வாங்கினவர் வெற்றிவேலின் தந்தை பழனிச்சாமி. ஒரு சமையல்காரன் சமைத்துப் போட வெற்றிவேல் திருப்பத்தூரில் தங்கிப் படித்தான்.

வெற்றிவேலும் சிவாவும் பள்ளித் தோழர்கள். பின்பு கல்லூரித் தோழர்கள். பலமுறை அவர்கள் வீட்டிற்குச் சிவா சென்றிருக்கிறான். வெற்றிவேலின் தந்தை பழனிச்சாமி முதலியாருக்கு சிவாவை மிகவும் பிடிக்கும். ஏழ்மை இருந்தாலும் எவரிடமிருந்தும் உதவியை ஏற்றுக் கொள்ளாத அவன் சுயமரியாதை அவரை மிகவும் கவர்ந்தது.

ஒரு மணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்து சிங்காரப் பேட்டையில் இறங்கினான். அங்கிருந்து ஊத்தங்கரைக்கு ஒரு தனிச் சாலை பிரிகிறது.

இரண்டு சாலையும் இணையும் சந்திப்பில் ஒரு சிறு ஹோட்டல் உண்டு. ஒரு ஹோட்டல்காரர் அங்கே நெடு நாட்களாக கடை நடத்தி வந்தார். அவருக்கு இவர்கள் இருவர் பற்றியும், இவர்கள் நட்பைக் குறித்தும் தெரியும்.
இறங்கியதும் சிவா நேராக அவரிடம் போனான்.

“வாங்க…வாங்க சிவா! பெரிய எழுத்தாளர் ஆயிட்டீங்கண்ணு கேள்விப்பட்டேன்…” என்று கல்லாவிலிருந்து எழுந்து கை கூப்பியபடியே அவர் வரவேற்றார்.

தெரிந்த மனிதர்களிடம் கிடைக்கும் புதிய மரியாதை சிவாவுக்குச் சங்கடமாக இருந்தது.
“வணக்கம்!” என்று கை கூப்பினான்.

“டேய் கந்தசாமி, சிவா வந்திருக்காரு… கவனி” என்று குரல் கொடுத்தார் அவர்.

“இருக்கட்டுங்க, அப்புறமா வர்றேன். வெற்றிவேல் ஊரில் இருக்கானா?”

“இருக்காரு… வீட்டிலே இருக்க மாட்டாரு! புளியம்பட்டி காட்டு ரோட்லே மலையோரமா புதுசா நெலம வாங்கியிருக்காரு. ஒரு மாசமா ஆளே கண்ணுலே தெம்படறதே அபூர்வம். நெலத்தை சீர்திருத்திகிட்டிருக்காரு.”
இது புதிய செய்தி.

வெற்றிவேலைப் பற்றி இப்படி புதிது புதிதாய்ச் செய்திகள் கேட்டுக் கேட்டுப் பழகியிருந்தாலும் சிவாவுக்கு இது வியப்பாக இருந்தது.

“ஏன் சார், அவரைப் பார்க்கணுமா?”
“பாக்காமே பின்னே?”

“சைக்கிள் எடுத்துணு தான் போவணும். நாலு கிலோ மீட்டருக்கு மேலே ஆவுமே.”
“அப்படியா…”

“அயர் சைக்கிள் எடுத்தாரச் சொல்லட்டுமா?”
“சொல்லுங்களேன்.”

வெளியே நின்ற ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளியை எதிர்ச்சாரியில் ஒரு வாடகை சைக்கிள் எடுத்து வரச் செய்தார் ஹோட்டல்காரர்.

சைக்கிளில் நடுநடுவே வழி விசாரித்துக்கொண்டு கிட்டத்தட்ட மலையடிவாரத்திற்கு சிவா போனபோது நிலத்தருகில் ஒரு சிதை எரிந்து கொண்டிருந்தது.

சுற்றிலும் மேலே ஆடையில்லாத முப்பது நாற்பது கிராமவாசிகள் நின்றனர். வெய்யிலில் அவர்களின் கறுத்த உடம்பு வியர்வையில் மின்னியது.

சற்றுத் தொலைவில் ஒரு மரத்தடியில் பெண்கள் நாலைந்து பேர் நின்றிருந்தனர். அவர்களுள் ஒருத்தி முழங்காலில் தலை புதைந்து பெருங்குரலில் அழுது கொண்டிருந்தாள். அவள் அருகே காக்கி டிராயரும் டீ ஷர்ட்டும் அணிந்து வெற்றிவேல் நின்றான்.

அவளைச் சமாதானப்படுத்துகிறான் என்று சிவாவுக்கு காடும் மலையும் கானாறும் சூழ்ந்த அந்தப் பிரதேசத்தில் முகமறியாத ஒருவரின் தகனக்கிரியையின் போது வெற்றிவேலைச் சந்திக்கப் போய் சேர்ந்தது வினோதமாயிருந்தது.
கையை உயர்த்தி தன் வருகையை வெற்றிவேலுக்கு அறிவிக்க விரும்பிய சிவா தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
அதற்குள் வெற்றிவேல் அவனைப் பார்த்துத் தலையசைத்தான்.

அவனை நோக்கி நடந்து செல்வதற்குள் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தவளை விட்டு விட்டு வெற்றிவேல் அவனை எதிர் கொண்டான்.

எரியும் சிதை சுற்றி நின்றிருந்த பெண்கள் கூட்டத்துக்கு நடுவில் அவர்கள் சந்தித்தனர்.
“எப்போ வந்தே?” என்று கேட்டான் வெற்றிவேல். அவன் கண்கள் கலங்கி யிருந்தன.

“இப்போ தான்” என்று அவன் கலங்கிய முகத்தை உற்றுப் பார்க்காமல் தவிர்த்தபடியே சிவா பதிலளித்தான்.
“யார் செத்துட்டது?”

“எங்க நிலத்திலே ரொம்ப நாளா வேலை செஞ்சுக்கிட்டிருந்த கூலியாள். பீம ராஜுண்ணு பேரு. கெணத்துக்கு வெடிவச்சுட்டு வர்றதுக்குள்ளே ஒரு பெரிய கல் வெடிச்சு வந்து தலையிலே தாக்க உயிர் போயிட்டது.”
“வயசானவனோ”

“இல்லே… நாப்பது வயது இருக்கும். கல்யாணமே இல்லாமே முதலியார் நெலத்திலேயே மண்டையைப் போட்டுடறேண்ணு சொல்லிக்கிட்டிருந்தான். நாங்கள்ளாம் வற்புறுத்தி போன வருஷம் தான் அவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சோம். அதோ அழுதுகிட்டிருக்கே அதான் அவன் மனைவி.”

சிவா அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தான்.
“ஒரு விதத்திலே அந்த பீமராஜு எனக்கு ஒரு குரு.”
வெற்றிவேலின் தொண்டை கம்மி விட்டது.

சிவா அவனைப் பார்த்தான். வெற்றிவேலின் கண்களிலிருந்து இரு கண்ணீர்க்கோடுகள் வழிந்திருந்தன.
“ஹி டாட் மீ தி இம்பார்டன்ஸ் ஆஃப் லேபர். உழைப்பு முக்கியம்னு அவன் போதிச்சான். வாய்ப் பேச்சிலே இல்லே. உண்மையா வாழ்ந்து”

வெற்றிவேல் டிராயர் பாக்கெட்டில் கை விட்டுத் துழாவினான். தேடியது அவனிடம் இல்லை. சிவா தன் கர்ச்சீப்பை அவனிடம் நீட்டினான். முகத்தைத் துடைத்துக் கொண்டு வெற்றிவேல் மேலே பேசினான்.

மரணம் அங்கே ஒரு விநோதமான அமைதியின் கூடாரத்தை நிறுவியிருந்தது. சடசடத்து எரியும் அந்தச் சிதை விறகின் ஒலிகள் மனிதர்கள் ஆரவாரத்திற்கும் பெருமூச்சிற்கும் வைக்கும் இறுதி முத்தாய்ப்பு போல் சப்தித்தன. வெற்றிவேல் தொடர்ந்தான்.

“ஒரு நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு விதியின்படி அவன் சுரண்டப்பட்டவன். அவன் பத்து வயதுப் பையனா இங்கே வந்தான். உழைப்பை அர்ப்பணம் பண்ணியே எங்க வீட்டிலே ஒரு நபர் ஆயிட்டான்.
“போன வருஷம் கல்யாணம் ஆனப்போ அவன் பெண்டாட்டியும் இந்த வீட்டு நபர் ஆனா. அவன் உழைப்புக்கு எந்த கூலியும் இல்லே. அவன் கேட்டதுமில்லே.

அவனை நாங்க கேக்க வச்சதுமில்லே. நீ அவனைப் பாத்திருப்பே. அடையாளம் மறந்திருக்கும். அவன் எப்பவும் நெலத்திலேயே இருப்பான்.”

இடது பக்க பாக்கெட்டில் கையை விட்டு வெற்றிவேல் ஒரு சிகரெட் பெட்டியையும் தீப்பெட்டியையும் எடுத்தான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்தான். ஆழ்ந்த பெருமூச்சுடன் தொடர்ந்தான்.

“ஹி டாட் மீ தி இம்பார்டன்ஸ் ஆஃப் லேபர்” அவன் மீண்டும் ஒருமுறை சொன்னான்.

“இந்த காட்டு நிலத்தை நாங்க தான் வாங்கணும்ணு அவன் பிடிவாதம் பண்ணி வாங்க வச்சான். இதோ அங்கே புல்டேஸர் போயிருக்கு பாரு.. இந்தப் பட்டையெல்லாம் டிராக்டர் உழவு தெரியுதா? இருபத்தி மூணு ஏக்கர்.”
கிழக்கும் மேற்குமாக வெற்றிவேல் ஆள் காட்டி விரலால் சுட்டிக் காட்டினான்.

“இதையெல்லாம் நான் தான் ‘க்ளியர்’ பண்ணினேன். அவன் தான் குரு.”
வெற்றிவேல் சிதையில் எரிந்தவனைச் சுட்டிக்காட்டினான்.

மீண்டும் அவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. சிவாவின் கைக் குட்டையில் அதைத் துடைத்துக் கொண்டே வெற்றிவேல் தொடர்ந்தான்.
“முட்டாள் தனமான அட்வெஞ்சரிஸத்திலிருந்து ஒங்க அப்பா… ஐ’ம் ஸாரி… பாபா ஓம்கார்நாத் என்னைக் காப்பாற்றினார். இதோ இவன் உழைண்ணு மௌனமா எடுத்துச் சொன்னான்.”

சிதையைச் சுற்றியிருந்த கூட்டம் மெதுவாகக் கலைந்ததையும், மரத்தடியில் நின்ற பெண்கள் அழுது புலம்பியவளைத் தேற்றி கைத்தாங்கலாக அழைத்துச் சென்றதையும் மௌனமாய்க் கவனித்தான்.
சிதைக்குக் காவலாய் இருவர் மட்டும் நின்றனர்.

“சிவா… இவன் அதிகமாப் பேசினதில்லே. எப்பவாவது பேசுவான். எங்கிட்டே ரொம்பப் பிரியம். மரியாதை. ரொம்பப் படிச்சிருக்கேன் பாரு, அதனாலே” என்று தன்னைத் தானே வருத்தத்தோடு கிண்டல் செய்வது போல் ஒரு கசந்த சிரிப்புடன் வெற்றிவேல் சொன்னான்.

சிவா அவனுக்கு ஆறுதல் தருவது போன்று அவனது வலது கரத்தைப் பற்றிக் குலுக்கினான்.
“ஒரு நாள் என்ன சொன்னான் தெரியுமா? வாங்கற மூச்சு, குடிக்கிற தண்ணி துண்ற சோத்துக்கு வஞ்சனையில்லாமே ஒழைச்சுடணும் தம்பி. மீதியெல்லாம் மண்ணுலே கலந்து மண்ணாப் போவும்னான்.”
சிவாவுக்கு சிலிர்த்தது.

“அவன் என்ன சொன்னாண்ணு புரியறதா? ஆடம்பரமா படிச்சவர்கள் பாஷையிலே சொன்னா பூமியிலே நீ ஆக்கிரமித்திருக்கிற ஸ்பேஸுக்கு தகுதியுள்ளவனா யிருண்ணு சொன்னான்.”
வெற்றிவேல் சிகரெட்டை உறிஞ்சினான்.

“அது என் கண்ணைத் தெறந்தது. அதைச் சொன்னவன் முப்பது வருஷத்துக்கு முன்னாடி, நான் பொறக்கறதுக்கு முன்னாடி எங்க குடும்பத்துக்கு வந்தவன்.

“எந்த பிரதிபலனும் எதிர்பாராமே எந்த சபலத்துக்கும் ஆளாகாமே எந்த உரிமையும் கோராமே அவன் உழைச்சு உழைச்சு அதோ எரிஞ்சு கிட்டிருக்கான்.”
சிவாவின் மனசுக்குள் ஒரு விம்மல் மடிந்தது.

“என் குடும்பம் அவனுக்கு கடன்பட்டிருக்கு. நானும் கடன்பட்டிருக்கேன். சிவா… ஒண்ணு இப்ப எனக்கு வௌங்கலேடா!”

“என்னது?”
“இந்த வாழ்க்கைக்கு என்னடா அர்த்தம்?”
சிவா நேற்று அம்மாவின் வாயிலிருந்து வந்த சொற்களை நினைவு கூர்ந்தான்.
வாய் பேசவில்லை.

“சொல் சிவா!”
வெற்றிவேலைப் பார்த்துவிட்டு மெதுவாகச் சொன்னான்.
“நாம கற்பிச்சுக்கறது தான்”

“பாபா ஓம்கார்நாத் விடுதலை பெறுகண்ணு சொன்னாரே நினைவிருக்கா?”
“இருக்கு”
“எதிலிருந்து விடுதலை? கற்பித்துக் கொண்ட அர்த்தத்திலிருந்தா? கற்பித்துக் கொள்வதிலிருந்தா…?”
அவன் சிகரெட்டை வீசி எறிந்தான்.

ஒரு பொருத்தமான சொல் தேறித் திரண்டு முத்துப் போல் நெஞ்சில் உருண்டது.
சிவா அதை வெளியிடாது வெற்றிவேல் பேசட்டும் என்று காத்து நின்றான்.
“எல்லாக் கற்பனைகளும் சிதையில் சாம்பலாகின்றன. எல்லா அர்த்தங்களும் இங்கே முக்கியமில்லாமே போகின்றன” என்று வெற்றிவேல் முனகினான்.

“அர்த்தங்கள் சாகிறதில்லே. மனுஷன் தான் செத்துப் போறான்.”
சிவா சொன்ன அந்த வார்த்தைகளை அது அவன் வாயிலிருந்து வந்ததா என்று வியப்பது போல் நிமிர்ந்து பார்த்தான். பின்பு அவன் கையைப் பற்றித் தன்னுடன் பிணைத்துக் கொண்டான்.

“அப்போ விடுதலை எதிலிருந்து?”
“மன உளைச்சலிலிருந்து”
சிறிது நேரம் அங்கே நின்றிருந்துவிட்டுப் பின்னர் சிவாவை அழைத்துக் கொண்டு வெற்றிவேல் அருகாமையில் ஓடிய கானாற்றுக்கு அழைத்துச் சென்றான்.

ஆற்றில் தண்ணீர் தெளித்து ஓடிக் கொண்டிருந்தது. வெற்றிவேல்
ஆடைகளை அவிழ்த்து வைத்ததைக் கண்டு சிவாவும் தன் உடைகளைக் கழற்றினான்.

வெற்றிவேலுடன் முகமறியாத அந்த பீமராஜுவுக்காக மூன்று முழுக்குப் போட்டான் சிவா.
“சூரையங் காட்டிடை கொண்டு போய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே” என்று நெஞ்சை அடைக்கும் துக்கம் தொண்டையில் தழுதழுக்கச் சொன்னான் வெற்றிவேல்.

அந்த சிங்காரப்பேட்டைப் பயணம் சிவாவை என்னமோ செய்தது. அன்று மாலை பஸ் ஏறி மீண்டும் திருப்பத்தூர் வந்த பின்பு எரியும் சிதை ஒன்றின் எதிரில் வெற்றி வேலோடு நின்றதும் பேசியதும் மனசில் அடிக்கடி வந்து போயின.

அந்தப் பயணத்தில் அவர்கள் முற்றிலும் தொடர்பற்ற வேறு எதையோ பேசினார்கள். வேறு எவனோ ஒருவனின் உழைத்து மாண்ட நினைவில் கரைந்தார்கள்.

அம்மாவிடம் விடைபெற்று மறுநாள் சிவா சென்னைக்குப் புறப்பட்டான்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *