பழமொழி கூறும் பாடம்

தேமொழி.

பழமொழி: குழுவத்தார் மேயிருந்த என்றூடு அறுப்பினும் மன்று

 

அறிவன்று அழகன்று அறிவதூஉம் அன்று
சிறியர் எனப்பாடும் செய்யும் – எறிதிரை
சென்றுலாம் சேர்ப்ப ! குழுவத்தார் மேயிருந்த
என்றூடு அறுப்பினும் மன்று.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
அறிவு அன்று அழகு அன்று அறிவதூஉம் அன்று
சிறியர் என பாடும் செய்யும் எறி திரை
சென்று உலாம் சேர்ப்ப குழுவத்தார் மேயிருந்த
என்று ஊடு அறுப்பினும் மன்று

பொருள் விளக்கம்:
அறிவுள்ளோர் செயலும் அல்ல, பண்புடையோருக்கு அழகுமல்ல, அறநெறி கடைபிடிப்போர் செயலும் அல்ல (என்ற வகையில்), சிறுமதி கொண்டோரின் இழிவான செயலாக அமைவது (யாதெனில்); காற்று நீரை வாரி வீசுவதால் அலைகள் கரையில் உலா வரும் இடத்தில் வாழ்பவரே, சூரியனையும் எதிர்க்கத் துணியலாம், ஆனால் அறிஞர்கள் நிரம்பிய சபையில் அவையடகமின்றி பணிவின்றி பேசுவது ஒருவருக்கு மதிப்பைத் தராது.

பழமொழி சொல்லும் பாடம்: அறிஞர்கள் நிறைந்த அவையில் அவையடக்கத்தை கைவிடல் பெருமை தராது

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற. (குறள்: 95)

அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது என்று திருக்குறள் காட்டும் பண்புகளை இங்கு ஒப்பு நோக்கலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பழமொழி கூறும் பாடம்

  1. அன்பு யாழ்பாவாணன், உங்கள் பாராட்டிற்கும் ஊக்கமூட்டும் சொற்களுக்கும் மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *