இலக்கியம்கவிதைகள்

மனமாற்றம் வேண்டும்…!

-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

எழுத்தாளர் என்கின்றார் எழுதுவோருள்
இவர்தானாம் மாமன்னர் செப்புகின்றார்
“பழுத்தபழம்” போற்பேசும் இவரோயிங்கு
படைத்தவையின் பட்டியலோ பூஜ்ஜியம்தான்!
அழுத்தமுடன் எதைச் சொன்னார் புதுமையாக….?
அசலுண்மை கடல் நீரா உப்பு என்றார்
வெளுத்த நிறம் பாலென்றார்  வானில் நீந்தும்
வெண்ணிலாவின் ஒளி தண்மை என்று சொல்வார்….!

“நா” மெத்தத் தடித்ததனால் “நான்” நானென்று
நலங்கெட்டவார்த்தைகளைக் கொட்டுகின்றார்!
“பா” மெத்தப்படைத்தளித்த பாவாணர் போல்
பல மேடைகண்டவர் போல் பகருகின்றார்!
காமத்தைக் கருவாக கொண்டு ஏதோ
கண்டபடி நாலைந்தைக் கிறுக்கியுள்ளார்
நாமத்தை அச்சினிலே “பெரிதாய்ப்” போட
நாய்படாப் பாடுபல படுகின்றாரே…..!

பெண்ணழகைக் கவி செய்வார் பெண்களே இப்
பெருவுலகில் பேறென்றும் சாற்றி நிற்பார்!
பெண்ணொருத்தி எழுத்துலகில் முன்னே நிற்கப்
பித்தரிவர் “பெருமனது” இடங் கொடாது
வண்டமிழைக் கொண்டு இவர்வசைகள் பாடி
வருத்தமுறச் செய்திடுவார் வார்த்தையாலே
மண்டைதனில் கனம் கொண்டார் அறிவைத்தீட்டி
மனமாற்றம் பெற்றுய்ய வேண்டுகிறேன்…..!

 

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

 1. தேமொழி

  அழுத்தமுடன் எதைச் சொன்னார் புதுமையாக….? …இது மிக மிக நல்ல கேள்வி. 

  ///
  பெண்ணழகைக் கவி செய்வார் பெண்களே இப்
  பெருவுலகில் பேறென்றும் சாற்றி நிற்பார்!
  பெண்ணொருத்தி எழுத்துலகில் முன்னே நிற்கப்
  பித்தரிவர் “பெருமனது” இடங் கொடாது
  ///
  பெண் பெருமை பேசிப் பேசி காலம் கழிப்பார்! தன் பெருமை குலையுமென்றால் பெண்ணை அழிப்பார்…என்ற அக்கால வரிகளை நினைவு கூரும் பொழுது, காலம் காலமாக இதே கதை என்றுதான் தெரிகிறது கவிஞரே.   நானும் இம்மக்கள் மனமாற்றம் பெற்றுய்ய விரும்புகிறேன்.  இடித்துரைக்கும் நல்லதொரு கவிதையை நல்கியதற்கு நன்றி.  

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க