-றியாஸ்முஹமட், கத்தார்

ஓட்டமாவடியின்
வரலாற்றைத் தேட
ஏடுகளைப்
புரட்டாதீர்கள்
என் முதுகுப்
பட்டையைப் புரட்டுங்கள்!                    tree

பல நூற்றாண்டுகளாகத்
தீபவம்சம் போல்
வாழ்ந்தேன்!

தீ வைத்தீர்
குழி பறித்தீர்
வழி மறித்தீர்
கோஷமிட்டீர்
கதை முடித்தீர்!

நீங்கள்
பதுங்கு குழிகளிலும்
பள்ளிகளிலும்
படுத்திருக்கும் போது
நான்தானே
தன்னந்தனியாக
முச்சந்தியில்
தனித்திருந்து
விழித்திருந்தவன்!

உங்கள் பாதுகாப்புக்கு
முதல் ‘ஊர்காவற்படை’
வீரன்
நானல்லவா….?!

திறந்து பாருங்கள்
என்
இதயக் கிளைகளை
அது பல
துப்பாக்கி ரவைகளுக்கும்
குண்டுகளுக்கும்
பதில் சொல்லியிருக்கும்!

இலங்கை முதல்
இந்திய இராணுவம் வரை
குண்டடித்துப்
பந்தடித்தார்கள்.
விட்டு கொடுத்தேனா..?

இல்லை
உங்கள் ஊரைக்
காட்டிக் கொடுத்தேனா..?

ஏன் கொடுத்தீர்கள்
இத் தண்டனையை?
தூக்குக் கிடைத்தாலும்
ஒரே நாளில்
போயிருக்கும்
என் உயிர்!

கூலிப் படை
வைத்துக்
கொலை வெறியோடு
வெட்டி வீழ்த்தினாய்!

என்
எச்சிக் கொட்டையை
விழுங்கித்தானே
உங்கள் பிரதேசம்
பசுமை பெற்றது
எழில் கொஞ்சும்
அழகைப் பெற்றது!

அரசியல் என்கிறாய்
அபிவிருத்தி என்கிறாய்
நிறுத்து
உன் பேச்சை!

இல்லை
நிறுத்தி விடுவேன்
உன் மூச்சை!

நன்றி
உள்ளவன் நான்!
நன்றி மறந்தவர்கள்
நீங்கள்!

சாபம்
விடுகின்றேன்
உங்கள்
அரசியல்வாதிகளுக்கு!

உங்கள்
மரணத்திலும்
எடுத்து விடாதீர்கள்
என் மரக்
கட்டையை!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *