சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..- கவியரசு கண்ணதாசன் – விஸ்வநாதன் ராமமூர்த்தி
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து..
மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்கள் கொண்ட மனிதன் அவைகளை அடக்கியாளுகின்றானா? அல்லது அவைகளுக்குள் அடங்கிப் போகின்றானா? ஆறறவில் ஆறாம் அறிவாம் பகுத்துணர்வால் இன்னும் பக்குவப்படுகின்றானா? இல்லை.. ஆசையென்னும் தீயால் அவனே அவதிப் படுகின்றானா? இவை அனைத்தும் கலந்த கலவையே மனித வாழ்க்கை என்று இறைவன் எழுதி வைத்தானா?
தன்னைச் சுற்றியிருக்கும் தாவரங்கள்.. மரம், செடி, கொடி என பசுமை நிறம்காட்டி வண்ணவண்ணப் பூக்களுடன் காட்சிதரும் இயற்கை தன் அழகையெல்லாம் இதமாக அள்ளி வழங்க.. சோலைவனங்களும், நிழல்தரும் மரங்களும்.. அவற்றுள் கூடுகட்டி வாழும் பறவைகளும்.. பச்சைக்கிளிகளும்.. குழலோசை போல் குரல்கொடுக்கும் குயில்களும் வசந்தகால வரவல்லவா?
விண்ணோக்கிப் பார்க்கும்போது எண்ணிலா இயற்கையின்பம்.. மேகக்கூட்டங்களும் – வானவில் தோற்றங்களும், கண்சிமிட்டும் நட்சத்திரங்களும், கவிதை சொல்ல உலா வரும் நிலவும், கட்டுக்கடங்காத கனலைக் கொட்டியபடியே இவ்வுலகம் இயங்கிட கடமையாற்றும் கதிரவனும் – சற்றே விண்ணிலிருந்து மண்ணுலகு நோக்கி வந்துவிழும் மழைத்துளியும் – எல்லாம் இயற்கையின் சீதனமா? நாம் இன்புறவே நலம்பாடும் செல்வங்களா? உயர்ந்துநிற்கும் மலைத்தொடர்கள்.. அவற்றினிடையே கொட்டுகின்ற வெள்ளிநீர்வீழ்ச்சிகள்.. துள்ளிக்குதித்து வரும் நதிமகள்கள்.. பாயும் இடமெல்லாம் பச்சைவயல்களென வரிசை வரிசையாய் அழகு ஒய்யாரமாய் பவனி வரும் – இவ்வுலகை மூன்று மடங்காக விஸ்வரூபம் எடுத்து தாங்கிநிற்கும் கடல் அன்னையும், கடற்கரையோரமெல்லாம் பாடும் அலைகளென நுரை சிந்தும் நூதனமும் எழுதப்படிக்கத் தெரியாதவரையும் ரசித்து மகிழச் செய்துவிடும் இயற்கை வளங்கள் அல்லவா?
ஒரு கவிஞன் தான் எழுதும் பாடலில் இந்த அழகையெல்லாம் தான் ரசித்ததோடு மட்டுமின்றி கவிதைமொழிபெயர்ப்பும் தந்துவிடுகிறான். அப்படி கண்ணதாசன் காட்டும் திரைப்பாடலிது.. பி.சுசீலாவின் குரலில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் புதிய பறவைக்காக .. இந்த மந்தகாருசப் பாடல் நம் மனதைத் தடவிக்கொண்டே இருக்கிறது!
இந்த மண்ணின் மரபுமாறாமல்.. பெண் தன் ஆசைகளை உவமைநயம் காட்டித்தான் உணர்த்துவாள்.. என்னும் உன்னதத்தையும் உள்ளடக்கிய பாடல்!
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே..
கதாநாயகி தான் பாடும் இப்பாடலில் கவிஞரின் கற்பனைச் சிறகுகள் விரிந்து பறந்து வழங்கியிருக்கும் சொற்கோலங்களில் கொஞ்சம் சொக்கிப் போகலாமே! அற்புத இசைக்கோர்வையில் பல்லவிமுதல் சரணங்கள் எல்லாம் உற்சாக மழை பொழிகிறது!
எல்லாம் சரி.. எத்தனையோ பறவைகளிருக்க.. பச்சைக்கிளிகளைக்கூட விட்டுவிட்டு சிட்டுக்குருவியை பல்லவியில் ஏன் தேர்ந்தெடுத்தார் கண்ணதாசன் என்கிற கேள்விக்கு பதில் என்ன? தன் அலகுகளால் ஒன்றையொன்று அழகாய் முத்தமிட்டுக்கொள்ளும் பேரழகை.. அதுவும் தவிர.. அத்தகு எண்ணிக்கையம் மற்ற பறவைகளிலிருந்து சிட்டுக்குருவியை முன்னிலைப்படுகிறது! அட.. சிட்டுக்குருவி லேகியம் என்றுகூட விற்பனை செய்கிறார்களே! கண்ணதாசனே.. உனது பாடலில்தான் எத்தனை எத்தனை ரகசியங்கள்?
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே ஹோய்
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
ஆ..ஆ..ஆ..ஹாஹா…ஹா..ஹா..
பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னமோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
ஆ..ஆ..ஆ..ஹாஹா…ஹா..ஹா..
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா…ஹோய்
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
திரைப்படம் – புதிய பறவை..
பாடல் – கண்ணதாசன்
இசை – விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடியவர் – பி. சுசீலா
—
என்றும் அன்புடன்,
காவிரிமைந்தன்
(மு.இரவிச்சந்திரன்)
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
சென்னை 600 075
தற்போது – ருவைஸ், அபுதாபி..
00971 50 2519693