Category: மறு பகிர்வு

மறு பகிர்வு

  • தி லாஸ்ட் செல்ஃபி

    –கவிஜி.

    இந்தப் பயணத்தின் முடிவு எப்படி இருக்குமோ எனக்கு தெரியாது…. இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடோ ஆசையோ இல்லை…

    போகி…………………….றே………………………..ன்…

    என் சொந்த ஊருக்கு, நான் பிறந்த மண்ணுக்கு… நீண்ட நாட்களுக்கு பின்.. இல்லையில்லை நீண்ட வருடங்களுக்கு பின்…போகிறேன்.. மனதுக்குள் ஏதேதோ மாற்றங்கள்.. நொடிக்கொரு தரம் மாறும் மனநிலைக்குள் நான் எந்த நொடி என்பதுதான் எனது பதிலாக இருக்கிறது, மாறாக கேள்வியும் கூட…கேள்விகளினூடாக நினைவுகளும் பயணிக்கத்தான் செய்கிறது….பயணங்களின் ஊடாக நினைவுகளும் நிலைக்கண்ணாடி சுமக்கத்தான் செய்கிறது….

    எங்கள் ஊருக்கு ஜீன்ஸ் பேண்டை அறிமுகப் படுத்தியவன் நானே.. கான்வாஸ் ஷூ.. குளிர் கண்ணாடி.. ஒற்றைக் காதுக் கடுக்கன் என்று 90களின் உலகத்தை ஊருக்குள் கொண்டு சென்றவன் நானே.. அதன் மூலமாக எனக்கு கிடைத்த பெண் தோழிகளின் எண்ணிக்கை அதிகம்.. அதே போல் அதைக் கண்டு பொறாமை கொண்டு எனை வாய்ப்பு கிடைத்தால் அடித்து துவைக்க காத்துக் கொண்டிருந்த ஆண் நண்பர்களுக்கும் பஞ்சமில்லை…ஆனாலும் நானே.. இளவரசன் என்பது போலதான்….. பைஜாமா போட்டுக் கொண்டு ஊர் சுற்றுவதாக இருந்தாலும் சரி…தொடை ஒட்டிய ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு வீதி வலம் வருவதாக இருந்தாலும் சரி… நானே… நாகரிகத்தின் குறியீடாக இருப்பது போலக் காட்டிக் கொள்வேன்.. மற்றவர்களும் காண்பார்கள்….

    எல்லாரும் சாதாரண மிதி வண்டி ஓட்டியபோதே நான் பைக் மாதிரியான மிதி வண்டியை ஓட்டியவன்.. கொஞ்சம் ஆங்கிலமும் தெரிந்தவன் என்பதால் என்னை சுற்றி எப்போதும் படிப்பு தொடபான விஷயங்கள் மொய்த்துக் கொண்டிருக்கும்.. ஊருக்குள் பல பேருக்கு கடிதம் எழுதிக் கொடுத்தும், படித்தும், பேர் வாங்கிய கொஞ்சம் புத்திசாலியும் கூட…..ஊரில் இருக்கும் என்ன மாதிரி பசங்க எல்லாருமே பயந்து கொண்டிருந்த குடுகுடுப்புக் காரனை…. பேயை போல வேஷம் போட்டு ஊர்க்கோடி வரை விரட்டி கொண்டுபோய் விட்டு வந்த கில்லி என்று பெரியவர்கள் மெச்சுவார்கள்….

    அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்து விட்டேன்.. நான் எங்களூருக்கு இப்போது போவது எதற்கென்றால்……?……

    சேப்டர் ஒன்
    அது உங்களில் பல பேருக்கு மொக்கையாக் கூட இருக்கலாம். என்ன செய்வது எனக்கு மொக்கையாக இருப்பது உங்களுக்கு பிடிக்கலாம். உங்களுக்கு மொக்கையா இருப்பது அவருக்கு பிடிக்கலாம்… எல்லாமே சமநிலை யதார்த்தம்தானே…அப்ப,டி அது எனக்கு ஹாபி… இந்த ஸ்டாம்ப்ஸ் எல்லாம் சேர்த்து வைப்பது போல… இந்த பழைய கால நாணயங்களையெல்லாம் சேகரிப்பது போல… சரி அப்படி என்ன ஹாபி என்று யோசிப்பவர்கள் பின் தொடருங்கள்…… சொல்கிறேன்..சொல்லுதல் எல்லாமே சொல்லி விட்டவைகளின் நீட்சி என்று நான் நம்புவதே இல்லை..நம்பியவைகளை எல்லாம் சொல்லிவிடுவதும் இல்லை… ஒரு புதிருக்குள் தலையை மட்டும் விட்டு விட்ட உடலின் வாலின் துடித்தலைப் போலதான் இங்கு வாழ்வின் இரண்டாம் பாகம் துடித்துக் கொண்டேயிருக்கிறது…..

    சுழற்சிகளின் தத்துவ சாரத்தோடு பேருந்தை விட்டு இறங்கிய நான், ஊர்க்கோடியில் இருந்த அந்த மரத்தை நோக்கித்தான் சென்றேன்…. என்னை தாண்டிய சிலருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை… நானும் கண்டு கொள்ளவில்லை… என் மனம் முழுக்க அந்த மரமே வியாபித்திருந்தது…இந்த மரத்தின் யோசனை எத்தனை இரவுகளில் கிளை அசைத்திருக்கும்……மனம் அசைய அசைய மரத்தை பார்த்தும் விட்டேன்….பார்க்க பார்க்க பரவசம்… என் கண் முன்னால் விதைந்து… செடியாகி.. மரமாகி இத்தனை காலத்துக்கு அப்புறமும் இங்கு இப்படி நிற்கிறதே….. காலத்தின் கிளைகளை என்னவென்று வர்ணிப்பது…! அடுப்பில் சட்டினியை வைத்துக் கொண்டு…. “குட்டி…. ஓடிப் போய் கருவாபுல்ல புடிங்கிட்டு வா” ன்னு அத்தை சொல்ல சொல்ல, நான் பாதி மரம் ஏறி இருப்பேன்… அடுத்த கணம் பிடுங்கிய கறிவேப்பிலை சட்டினியில் மணக்க மணக்க வதக்கப் படும்… இன்றும் மணக்கும் நினைவுக்குள் மரம் இன்னும் பெரியதாகி இருந்தது…. இருக்கிறது….இருக்கும்……

    சுற்றும் முற்றும் பார்த்தேன்.. யாரும் இல்லை… பறந்து கிடந்த வெளி எங்கும் வெறும் கட்டடங்களால் சூழ்ந்த ஒரு வேறு பகுதி போல தோன்றினாலும் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கொண்டது புதியதாக இருந்தது…இரவு பகல் பாராமல் வாசல் எங்கும் மக்களின் கூட்டமும்…அப்பத்தாவின் கதையும்…வெண்ணிலவின் குளிரும்.. அடர் வெயிலின் நிறமும்…. தங்கிக் கிடந்த நாட்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை…. தொலைக்காட்சியை முடக்கி வைத்துக் கொண்டார்கள் போல…. ஜன்னல்கள் கூட அடைபட்டே கிடந்தன……மள மளவென ஏற முடியவில்லை என்றாலும்.. பார்த்து பார்த்து ஏறினேன்… அப்பிடி இப்பிடி என்று கறிவேப்பிலை மரத்தின் உச்சிக்கே சென்று விட்டேன்… ஏனோ காலத்தில் பின்னோக்கி ஏறி நடந்து வந்து என் பால்யத்தை அடைந்தது போலவே ஒரு மிரட்சி… மனதுக்குள் மட்டும் கறிவேப்பிலையின் இலையில் தங்கிய நேற்று பெய்த மழையின் குளிர்ச்சி…

    எனக்கு புன்னகையை அடக்கவே முடியவில்லை…சிறு பிள்ளையின் இனிப்புத் தேடல் போல எனது மனம் அலைந்தது….எடுத்தேன் என் செல்போனை… முகத்துக்கு நேராக நீட்டினேன்.. கறிவேப்பிலை மரத்தின் உச்சியிலிருந்து கறிவேப்பிலை பழங்களினூடாக என் முகம் விழுவது போல ஒரு செல்பி எடுத்தேன்… நான் முன்னமே சொல்லாமல் சொன்னது போல என் ஹாபிக்கு என் நினைவுகளின் துளியை விதைக்கும் பயணம் இது என்பது போல… வாழ்வின் சாட்சியாய்…. ஒரு பால்ய நண்பனைப் போல நான் எடுத்துக் கொண்ட இந்த செல்பி… என்னை தாலாட்டியது போல இருந்தது….. தூரத்தில் இன்னுமும் ஏதோ ஒரு வீட்டில் “எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது”…பாட்டு பாடிக் கொண்டிருந்தது….. மெய்மறந்த, என் பிடி விலக… சர சரவென கீழே………..

    சேப்டர் டூ
    நீண்டு கிடந்த தனிமைக்குள் மீண்டும் நான் தேடிக் கொண்ட தனிமையோடு அமர்ந்திருந்தேன்… இதே ரயிலடியில் எத்தனை நாள் விளையாடி இருப்பேன்.. எப்போதாவது வரும் அந்த ஒற்றை ரயிலைக் காண எத்தனை நேரம் காத்துக் கிடந்திருப்பேன்.. ரயில் மீது இனம் புரியாத அச்சம் கொண்ட ஆசை மனதுக்குள் ஓடிக் கொண்டேயிருக்கும், இழுக்காத நிறுத்தல்களைக் கொண்ட குறியீட்டு சொப்பனமாய் நான் மீண்டும் மீண்டும் ஒரு ரயிலின் பாதையாய் இருப்பது போல இன்று அமர்ந்திருந்தேன்…..

    என் இடது பக்க விலா சதையில் இருந்து ரத்தம் கசிவதை துடைத்துக் கொண்டே அமர்ந்திருந்தேன்……கறிவேப்பிலை மரம் செல்பியில் கிடைத்த விழுதலில் இன்னும் கொஞ்சம் கீழே நகர்ந்திருந்தால் சதையை கிழித்த கூர் வாது.. வயிற்றுக்குள்ளும் சென்றிருக்கும்… கடைசி நேரத்தில் கிடைத்த இன்னொரு கிளை உயிர் காத்தது…நினைக்கவே உடல் வேர்த்தது….

    எத்தனை யோசித்தாலும்… என் சிறு வயது ரயிலுக்கு வண்ணம் பூசவே முடியவில்லை….. ஒரு கருப்பு வெள்ளை சினிமா படம் போலதான் ஓடி வந்து என்னைத் தாண்டி செல்லும் ரயிலை நினைக்க முடிகிறது…. ரயிலின் ஞாபகங்கள் எப்போதுமே தாலாட்டும் காலங்களைக் கொண்டவை… ஆனால் இன்று வரை நான் ரயிலில் பயணம் செய்ததே இல்லை என்பதை யோசிக்கும் போது, அன்று ரயிலைப் பார்க்க காத்திருந்த ஆசைக்கு கை கால் முளைத்து ஓட வைத்தது போலத்தான் நினைக்கிறேன்…..

    கண்களாய் நீண்டு விட்ட போதும் முழுக்க தண்டவாளத்தின் நீட்சியே….. ஒரு நதி போல திரும்பி பார்த்த பின்னும் வாலின் திரும்புதலாய் மீண்டும் நீண்டு கிடக்கும் இம் முனையை… இன்னும் கொஞ்சம் நீட்டித்துக் கொள்ளும் கற்பனையோடு இனம் புரியாத புள்ளிக்குள் அடைபட்டவனாக மிதந்தேன்…. தூரத்தில் கேட்கும் ரயிலின் ஓசையை துல்லியமாக இதயம் உள் வாங்கி எதிரொலிப்பதாக நினைத்த மாத்திரத்தில் ஒரு சதுர புள்ளியாக வரத் தொடங்கி இருந்தது ரயில்….

    ‘அதே ரயிலா’- என்று கேட்ட மனதோடு எழுந்து நின்றேன்……. தண்டாவாளத்தில் நடுவில் நின்ற போது மனதுக்குள் ஏதேதோ கிளிக்கியது….. ‘இது என் ரயில்’- என்ற ஒரு வகை இருள் மாப்புடன் என் செல்போனை எடுத்து என் முகத்துக்கு நேராக நீட்டி செல்பி எடுக்கத் தயாராக இருந்தேன்… ரயில் என் அருகே வரும் போது செல்பி எடுத்து விட்டு எட்டிக் குதிப்பதுதான் திட்டம்….

    ரயில் நெருங்கிக் கொண்டிருந்தது… நன்றாகவே சத்தத்தையும்.. வேகத்தையும் உள் வாங்க முடிந்தது…… ஏனோ கை நடுங்கத் தொடங்கியது… காதோரம் வியர்வை கொப்புளங்கள் உடைந்து வழிந்தன……. கால்கள் பலம் இழப்பது போல ஒரு நிஜம் என்னை சுற்றி அலையடித்தது…ரயிலின் பெரும் ஓலம் மிக அருகில் கேட்டது… என் பெரு விரல் வேலை செய்யாமல் இருப்பது போல தோன்ற, நொடியில் ஒரு முறை கிளிக் செய்தேன்… தொடுதிரையில் விரல் படாமலே வேகமாக தன் தலையை எடுத்துக் கொண்டது போல இருந்தது… என்ன செய்வதென்றே தெரியவில்லை.. எதற்கு நிற்கிறேன் என்றே மறந்து போனது…இன்னும் ரயிலின் நேரக்கத்தின் தூரம் குறைந்தது ….மனதை ஒரு நிலைப் படுத்தி, ஒரு சதுரத்தில் குவித்து… கண்களை கூர்மையாக்கி…கிளிக்கி விட்டேன்…. ஆனால் என் உடல் நடுக்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆடி விட.. மீண்டும் மீண்டும் முயற்சிகளில் கிளிக்கிக் கொண்டேயிருக்க…………… இருக்க…………………. க்க……………………. ரயில் என் முதுகுக்கு அருகே வந்து…வந்து……ந்து…………து…. வந்து விட்டதை செல் போன அப்படியொரு பயங்கர சத்தத்தோடு பிரதிபலித்தது……. இதோ.. இதோ.. அடுத்த நொடி….

    சேப்டர் 3
    எல்லா கிராமத்திலும்.. ஒரு கதை சொல்லி இருப்பார்கள்…. கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு தெரிய வாய்ப்பிருக்கும்… இந்த வீடு.. எங்கள் ஊர் கதை சொல்லியின் வீடு.. இந்த திண்ணையில்தான் கதை சொல்லியான எங்கள் எல்லாருக்கும் சொந்தமான, பொதுவான அப்பத்தா உட்கார்ந்திருக்கும்… விடிய விடிய சுவற்றைப் பார்த்து விட்டு விடிந்த பின், “இன்னுமா படம் போடறானுங்க.. நான் போறேன்”- என்று எழுந்த போதுதான்.. தான் திரையைப் பார்க்காமல் திரும்பி அமர்ந்திருந்ததை உள் வாங்கி கொள்ளும் அளவுக்கு ஏதோ ஒரு கதையின் ஓட்டத்தை மனதுக்குள் ஓட விட்டுக் கொண்டேயிருக்கும், ஒரு சுவாரஷ்யமான கதாபாத்திரம் எங்கள் அப்பத்தா………

    வெள்ளிக்கிழமை இரவென்றால் அது பேய் கதைக்கான நாள்.. அதுவும் அடுத்த இரண்டு நாட்கள் பள்ளிகள் விடுமுறை என்பதால் பள்ளி விட்டதுமே வீட்டுக்கு சென்று துணி மாற்றிக் கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று என்னைப் போல உள்ள பசங்களையும், பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு ஏதோ திருவிழாவுக்கு போவது போல படை திரட்டிக்கொண்டு வரும் நான் ஒரு கதாநாயகனாகவேதான் தோன்றுவேன்.. அப்படி ஒரு நினைப்பு….. அப்பத்தாவும்.. கதை சொல்லும் போதெல்லாம் அதிகமாக, என்னையேதான் பார்த்து பேசும்.. அடிக்கடி உதாரணதுக்கு.. “இப்போ இவன் இருக்கானே…” என்று என்னைத்தான் கை காட்டி பேசும்… ரயிலில் அடி பட்டு இறந்த யானை பேயின் கதையை சொன்ன நாளில்தான்.. ஊருக்குள் முதன் முதலாக ஒரு முக்கியமான நபர் வந்தார்… நாங்கள் அவரை கண்டு கொள்ளாமல் யானைப் பேயின் கதைக்குள் மூழ்கிக் கிடந்தோம்……

    அப்பத்தா கதை சொல்ல சொல்ல கதாபாத்திரங்கள் நம் அருகே செல்வதைப் போலவே இருக்கும்…. நம்மோடு கலந்து உரையாடுவது போல இருக்கும்… பேய்க் கதைகளின் பேய்கள் நம்மை ஊடுருவி பார்ப்பது போலவே இருக்கும்…… அப்படி ஒரு ஆளுமை.. வார்த்தை பிரயோகம்… கதைகள், காடு மலைகளைத் தாண்டி ஒரு தேவதையைத் தேடி ஓட வைக்கும்… இரவெல்லாம் விரட்டிய பேயிடம் மாட்டிக் கொள்ளாமல்… கிராமம் கிராமமாக ஓடிக் கொண்டேயிருக்கும் கதை நாயகன் பேயிடம் மாட்டிக் கொண்ட கதையைக் கூட காப்பாற்றியபடியே ஓடிக் கொண்டிருப்பான்……. அவன் ஓட்டம் தடை படும் நேரத்தில் எல்லாம்.. எங்களின் வாய் பிதுங்கும்…… விட்டால் அழுகையே வந்து விடும்…. எங்களின் முக குறிப்பை புரிந்து கொண்டு கதையை சாமர்த்தியமாக நீட்டிக் கொண்டு செல்லும் அப்பத்தா…. புதிர்களின் முடிச்சாகவேதான் தெரிந்தது…..

    ஒரு கதையில்கூட கெட்டவன் வெற்றி பெற்றது போல அப்பத்தா, கதையை முடிக்காது…..

    “தர்மம்தான் ஜெயிக்கணும்..”- என்று அடிக்கடி சொல்லும்.. “தீமை அழியத்தான் வேணும்….. நல்லவனா இருக்கத்தானே இந்த பொறப்பு.. அது கதையா இருந்தா என்ன… நிஜமா இருந்தா என்ன…?.. ரெண்டும் ஒன்னுதான்”- என்று அடிக்கடி அடிக் கோடிட்டு கதையை துவக்கும்… அல்லது முடிக்கும்…..

    அப்பத்தாவுக்கென்று யாரும் சொந்த பந்தங்கள் கிடையாது.. எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து இந்த வீட்டில்தான், அதுவும் இந்த திண்ணையில் தான் உட்காந்திருக்கும்.. தூங்கும்.. பெரும்பாலும் பகலில் தூங்கிக் கொண்டேயிருக்கும்…இரவில் விழித்துக் கொண்டே கதை தேடிக் கொண்டிருக்கும்….கேட்டால் சொல்லும்…. “கதைங்கறது கதையில்ல, அது நிசம்…. அதை தேடிட்டே இருக்கனும்…. விட்டா உசுரு மாதிரி ஓடிப் போய்டும்…”- என்று தொடர்ந்து பேசும்.. பேச பேச பேசிக் கொண்டே இருக்கும் சொற்களின் கூட்டாஞ்சோறுக் குவியலாய் எங்களுக்கு மட்டும் ருசி சேர்ந்து கொண்டேயிருக்கும்……

    சிறுகதை… குறுங்கதை.. தொடர்கதை.. ஒப்பாரிபாட்டு.. பிறந்த நாள் பாட்டு… நாற்று நட பாட்டு… சமைந்த பெண்ணுக்கு பாட்டு…இறப்புக்கு பாட்டு என்று எப்போதும்.. கதைகளும் பாட்டுகளும்தான்….. இவை அனைத்தும் இலக்கியங்கள் என்று தெரியாமலே இங்கேயே வாழ்ந்து இங்கேயே முடிந்தும் போன அப்பத்தாவை நினைக்க நினைக்க மனதுக்குள், விட்ட கதை தொட்ட கதை விடாமலும், தொடாமலும்.. துரத்துவதை உணர முடிந்தது….எத்தனையோ அப்பத்தாக்கள் சொல்ல முடியாத கதைகளோடு, கதைகளாய் ஆகி விடுவதை கோடிட்டுக் கொண்டே இருந்த மனதோடு……ஊருக்குள் தனித்துக் கிடந்த வீட்டில் யாருமில்லாமல் இடிந்து பாழடைந்து கிடந்த திண்ணையின் ஓரத்தில் அமர்ந்தேன்….மனக் கண் முன்னால் அப்பத்தா திண்ணையில் அமர்ந்திருப்பது போலவும் நாங்கள் கீழே அமர்ந்து அப்பத்தாவையே பார்த்துக் கொண்டிருப்பது போலவும் காட்சிகள் முன் பின்னாக ஓடின..அடித் தொண்டையில் அடிக்கடி சிரிக்கும் அப்பத்தாவின் குரல் கூட கேட்பது போலதான் இருந்தது அந்த நிமிடம்…

    அப்பத்தாவின் ஆன்மா எனக்குள் ஏதோ ஒரு கதையை சொல்ல முயற்சிப்பதாக நினைக்கத் தூண்டியது.. அங்கு சட்டென வீச ஆரம்பித்த கறிவேப்பிலை வாசம்…. கறிவேப்பிலை துவையல் மீதிருந்த அப்பத்தாவின் ஆசையை ஞாபகமூட்டியது…

    கதைசொல்லிகளின் மனதில்தான் கதைகளின் ஆரம்பவும் முடிவும் கணக் கச்சிதமாக அமர்ந்து விடுகின்றன……. மனம் கனத்த மௌனத்துக்குள் செல்ல செல்ல.. நான் என் செல்போனை எடுத்தேன்.. ஏற்கனவே எடுத்த செல்பிகளை மீண்டும் தொடுதிரை நகர்த்தி நகர்த்தி பார்த்தேன்….மனம் ஒரு வித அலைக்குள் தடுமாறி ஆழ்ந்த மூச்சு விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டது போல உணர்ந்தேன்….. … கறிவேப்பிலை மர உச்சியில் எடுத்த செல்பி.. என்னை ஒரு சிறு பிள்ளையாக காட்டியது போல இருந்தது….. அடுத்து…………. நகர்த்தினேன்…..அடுத்து…………. நகர்த்தினேன்…. ரயிலின் முன்னால் நொடிகளில் உயிர் தப்பிய செல்பி…. பட படக்கும் காற்றில் மிதந்து செல்லும் ஒரு போர் வீரனைப் போல காட்டியது….. புன்னகைக்க தோன்றியது…. திக் திக் நொடிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பின் ஒரு சமயம் பார்க்கும் போது… கிடைக்கும் திர்லிங்… கைகளின் மயிர்கால்கள் நட்டுக் கொண்டன……. மைக்ரோ நொடிகளில் உயிர் தப்பிய ….செல்பியல்லவா…!

    சிரித்துக் கொண்டே … மெல்ல தலையை சாய்த்து.. அப்பத்தா அமர்ந்திருக்கும் இடத்தோடு தலையைக் காட்டி ஒரு செல்பி எடுத்தேன்.. எடுக்க எடுக்கவே உடலை வளைத்து நின்ற கால்கள்… தடுமாறி…திரும்பி..

    “என் கண்கள்… என் கண்கள்… அப்பத்தா……”………………………… கத்தினேன்…..

    சேப்டர் 4
    “நான் வந்த ரயிலில் தான் அந்த யானை அடி பட்டு செத்து போச்சு”- என்றுதான் எங்களிடம் பேசவே ஆரம்பித்தது ஷைலஜா… எனக்கு ஷைலஜாவைப் பார்க்க பார்க்க ஒரு புது மாதிரியாக இருந்தது…..

    சைலஜா…. எப்டி இருக்கும் என்று எப்படி சொல்வது……?…!….

    இந்த சினிமாக்களில் ஒரு கிராமத்தில் ஒரே ஒரு படித்த பெண், தாவணி பாவாடையில் வெல வெலவென ஒல்லியாக, வளர்ந்து ஜடையை தூக்கி முன்னால் போட்டுக் கொண்டு, மாலை நேரங்களில் சிறுவர்களுக்கு பாடம் எடுப்பார்களே.. அந்த மாதிரி ஒரு பெண்… அந்த மாதிரி எங்கள் ஊரில் எந்த பெண்ணும் இருந்ததில்லை. எப்போதும் குளித்து, தலை முடியை காற்றில் அலைய விட்டு… உதட்டு சாயம் பூசி… பள பளக்கும் குட்டிகுரா பவ்டர் போட்டு… அதுவும் அவ்ளோ உயரத்தில் பார்க்கவே, பார்த்துக் கொண்டே இருக்க தோன்றும் அழகு….

    தூரத்தில் வந்தாலும் மினுங்கும் ஒற்றை மூக்குத்தி… முகத்தை இன்னும் அழகாக்கி காட்டும்.. நான் நிறைய தடவை நேராகவே, “அக்கா நீங்க ரெம்ப அழகு” என்று கூறி இருக்கிறேன்… ஷைலஜா என்னை பிடித்து இழுத்து என் கன்னத்தில் ஆழமாக ஒரு முத்தம் பதித்து…. “என்ன அக்கானு எல்லாம் கூப்ட வேண்டாம்… ஷைலுனு கூப்டு, அதான்.. அழகா இருக்கும்” என்று கண்ணடித்தது..

    நானும்.. முதலில் தயங்கி தயங்கி ‘ஷை…ல் …லு….” என்று மெல்ல முணங்கிக் கொண்டே அழைத்தேன்…. வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் “ஷைலுலுலுலுலுலுலுலு……………..” என்று சத்தமாக கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தேன்… மெல்ல பழகியது…… பல நாள் இரவுகளில் வெண்ணிலா முகம் பிரகாசிக்கும் மொட்டைமாடியில்… நான் அப்பத்தா கூறிய பேய்க் கதைகளை கூறுவேன்… கண்கள் அகல விரிந்து… பின் மெல்ல சுருக்கி … உதடு குவித்து… பின், கதையின் போக்குக்கு தகுந்தார் போல முகம் மற்றும் உடல் விரியும் ஒரு மோகினியைப் போல மாற்றிக் கொள்ளும் ஷைலுவின் பாவங்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே செய்யாது…

    “அப்பத்தா கதை சொன்ன அந்த வெள்ளிக் கிழமையில் வந்த அந்த முக்கியமான ஆள் இந்த ஷைலுதான்…” என்று குழந்தையின் கன்னத்தை பிடித்து இழுப்பது போல நான் அவ்வப் போது செய்வது ஷைலுவுக்கு ரெம்ப பிடிக்கும்…

    “அது ஏன் ஷைலு…….தினமும்.. நம்மூர் ஆம்பளைங்க எல்லாம் தெரியாம தெரியாம இங்க வராங்க.. அப்போ மட்டும் நீ என்னை வீட்டுக்கு போக சொல்லிர்ற….. ஏன்?…..” என்று கேட்ட போது.. என்னை சற்று நேரம் முறைத்து பார்த்து விட்டு,……. ‘வா’…… என்று அருகே அழைத்து இறுகக் கட்டிக் கொண்டது…. அதன் பிறகு நான் கேட்பது இல்லை…….

    ஒரு நாள் நீண்ட நேரம் அழுது கொண்டிருக்கும் போல…. முகம் வீங்கி கண்கள் சிவந்திருந்தது….

    “ஏன் சைலு அழுதிருக்க…. என்னாச்சு….?”- என்று கேட்டேன்..

    என்னைப் பார்க்காமல் எங்கேயோ பார்த்தபடி “சீக்கிரம்… தம்பி பாப்பா பொறக்க போறான்.. எனக்கு பயமா இருக்கு…. இன்னைக்கு என் கூடயே படுத்துக்கோ”- என்று என்னை அணைத்து என் வயிற்றில் முகம் புதைத்து தூங்கிப் போனது…. நான் தூக்கம் வராமல்.. வெகு நேரம் விழித்துக் கிடந்தேன்…

    காலையில், “ஆமா உனக்கு வயசென்னடா.. உன் உயரத்தை வச்சு சொல்லவே முடியல” என்று கேட்டது…

    நான் ’13’ என்றேன்.. மெல்ல திறந்த புன்னகையோடு.

    சிரித்துக் கொண்டே கன்னம் பிடித்து கிள்ளியது ஷைலு…

    அதன் பிறகு…. நான் ஊரை விட்டு போக வேண்டியதாய் இருக்க, எல்லாவற்றையும் விட்டு சென்றது போல ஷைலுவையும் விட்டு சென்றேன்.. காலத்தின் ஓட்டத்தில் மறதி என்பதை விட.. ஞாபகம் என்பதே அதிகம் இருந்தாலும்… தூரம் அதிகமானது போலதான் இருந்தது… என்று யோசித்துக் கொண்டே ஷைலுவைப் பார்க்க சைலுவின் வீட்டு பக்கம் போய்க் கொண்டிருக்கும் போதுதான்.. ஆங்காங்கே சிலர் நிற்பதும், குனிந்து கொண்டு போவதும் வருவதுமாக இருந்தார்கள்….

    கண்களில் பட்டாம் பூச்சிகள் சிறகில்லாமல் பறப்பது போல ஒரு பிரமை…என் கண்ணுக்கருகே வலித்த கன்னப்பரப்பை கையால் தேய்த்துக் கொண்டே முன்னேறினேன்….. அப்பத்தாவை திண்ணையில் கட்டி வைத்திருந்த கம்பி வளையத்தின் முனையில் என் பேண்ட் மாட்டவில்லை என்றால் அப்பத்தாவின் திண்ணையை செல்பி எடுத்த போது உடல் வளைந்த நொடிகளில் தடுமாறி சரிந்து.. பின் சரி செய்து கொள்ள திமிறியதில் அப்பத்தாவின் திண்ணையில், மேல் சட்டத்தில் அடித்திருந்த ஆணி என் தடுமாற்ற விழுதலில் என் கண்ணுக்குள் போயிருக்கும்… கால் தடுமாறியதில் காலம் மெல்ல நகர ஆணிக்குள் போக வேண்டிய கண்ணுக்கு பதில் கன்னம் உரசிப் போனது…

    நினைக்கும் போதே கண்ணுக்குள் ஊசி குத்துவது போல இருந்தது… ஒரு முறை கண்ணை தடவிக் கொண்டே, அப்பத்தாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டே நடந்தேன்…. யாரும் என்னை கண்டு கொள்ளாமல் வேலையைப் பார்த்தபடி இருந்தார்கள்… சொல்லப்போனால் யாருமே யாரையுமே கண்டு கொள்ளவில்லை…ஒரு வேளை என் முகம் மறந்திருக்கலாம்… ஷைலுவின் வீட்டு முன் ஒரு துக்க வீட்டைப் போல, நின்றவர்களின் பாவனை இருந்தது…..

    ஆம்.. அது துக்க வீடுதான்..

    ஷைலு இறந்து விட்டதாம்…. கேட்ட நொடி திக் என்று நின்று யோசித்து… அழுகை, முடியாத மன நிலையில் நான் மெல்ல வீட்டுக்குள் சென்றேன்… வயதான ஷைலுவின் முகம் இன்னும் பழைய முகமாகவே இருந்தது…. கூட்டம், என்னை யாரோ ஒரு வாடிக்கையாளன் என்று கூட நினைத்திருக்கலாம்…. நினைப்பது தானே… நினைப்புக்கு ஏது தொடக்கம் அல்லது முடிவு… யாரும் கண்டு கொள்ளவில்லை.. எனக்கு ஷைலுவைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது…கண்டிப்பாக ஆசை தீர அழுகை தீர கட்டிக் கொள்ள வேண்டும்…எப்படி கட்டிக் கொள்வது…? ஆனால் கட்டிக் கொள்ள வேண்டும்… ஆன்மாவுக்குள் கேட்கும் அலறல் சத்தம் ஷைலுவுக்கு கேட்டிருக்கும்….. நெற்றியில் ஆழமாய் ஒரு முத்தம் பதிக்க வேண்டும்… எத்தனை கதைகளை சொல்ல நினைத்து வந்தேன்… சொல்லவும் முடியாமல்.. சொன்னாலும் கேட்க முடியாத இடத்தில் நான் ஷைலுவைப் ஆழமாய் பார்க்க ஷைலுவும் என்னை மட்டுமே பார்ப்பது போல இருந்தது….

    “என்னதான் இருந்தாலும் அவ பையன் வராம, பொணத்தை எடுக்கறது நியாயம் இல்ல.. அவன் வந்த பின்னால எடுத்துக்கலாம்..வந்துட்டு இருக்கானாம்”- என்ற கூட்டம் மெல்ல கலையத் துவங்கியது…ஏனோ பிணம் காக்கும் இரவில்தான் அதிகமாக பசிக்கிறது….. எனக்கு ஒப்பாரி வைத்து அழ வேண்டும் போல தோன்றியது ….சில பாட்டிகள் ஆங்கங்கே சிணுங்கிக் கொண்டிருந்தார்கள்…

    இரவை துளைத்த நேரத்தில் பிணம் இருந்த அறைக்குள் யாருமே இல்லை… நான் உள்ளே போனதையும் வெளிய தூங்கிக் கொண்டிருந்த சில பெருசுகள் கண்டு கொள்ளவில்லை… நான் உள்ளே சென்று கதவை நன்றாக சாத்தி விட்டு ஓடிச் சென்று ஷைலுவை வாரி அணைத்துக் கொண்டேன்…… கனமாக இருந்து ஷைலுவின் …. காதுக்குள் ரகசியமாய் கூறினேன்..

    “நான் தான் நான்தான் என்று..”

    ம்ஹும்.. அசைவே இல்லை…. எத்தனை அன்பும் அரவணைப்பும் இறந்த உடலை ஒன்றுமே செய்வது இல்லை… கன்னம் பிடித்து கிள்ளிப் பார்த்தேன்….. ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது போல கிடந்தது ஷைலு…. நன்றாக அணைத்து என் மார்போடு ஷைலுவின் தலை இருக்கும்படி வைத்துக்கொண்டேன்.. காலம் முழுக்க யார் யார் தலையையோ தாங்கிய மார்பு இது….. இன்று துக்கப் பட்டு விசனப் பட்டு நொந்து சுருங்கிக் கிடந்தது…. எனக்கு நண்பர் ஒருவர் எழுதிய ஒரு கவிதைதான் ஞாபகம் வந்தது…….

    மென் முலைகள்
    பருத்து, நின்று
    வசீகரித்து,
    செவ்வரிகளாகி, சிவந்து
    காலை மாலை எவ்வேளையும்
    கண் நிரப்பும்
    சிறு மலையாகி
    பின், மெல்ல மெல்ல
    சரிந்து, விழுந்து
    மறந்து போகும்
    நாளில்
    மாராப்பு சரி செய்ய
    தோன்றாத
    மென் நடையோடு
    எங்கள் வீதி அழகி ஒருத்தியின்
    கதையை
    முடித்து வைக்கிறோம்….

    ஷைலுவை சாய்த்துக் கொண்டு தாலாட்டினேன்…ஒரு குழந்தையைப் போல முகத்தை ஏந்திக் கொண்டேன்…தலையின் கனம் நேரம் கூட கூட அதிகமாகிக் கொண்டேயிருக்க தலையை நேராக சாய்க்க நான் சற்று என் உடலைத் திருப்பினேன்… யாரோ என் தலையை இன்னும் சற்று ஷைலுவின் முகத்தைப் பார்த்து வேகமாக இழுத்தது போல இருந்தது ….

    “ஷைலுலுலுலுலுலு” என்று சத்தமே வராமல் கத்தினேன்…

    சேப்டர் 5
    இறுதிச் சடங்குக்கான வேலைகள் நடந்துகொண்டிருக்க, நான் பிணம் போல அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன் … சட சடவென எல்லாம் நடந்தது.. ஷைலுவின் பையன்… வேண்டா வெறுப்பாக தீ மூட்டி விட்டு வேகமாக போய்க் கொண்டிருந்தான்…..ஊரும் அவன் பின்னால் ஒழுக்கத்தின் வரிசையைப் போல போய்க் கொண்டிருந்தது….நான் ஷைலு எரிவதைப் பார்த்துக் கொண்டு கரைந்து கொண்டிருந்தேன்…..கரைதலில் நேற்றைய இரவு மூளைக்குள் கொட்டியது….. நேற்று ஷைலுவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு செல்பி எடுத்த போதுதான் அந்த செந்தேள், மேலே சிதிலமடைந்த கரும்புகை அப்பிய ஓட்டில் இருந்து நேராக என் முகத்தை நோக்கி விழுந்தது….. கண நேரத்துக்குள் யாரோ இழுத்தது போல நான் என் தலையை இடம் மாற்றியதில் அந்த செந்தேள் என் தலை இருந்த இடத்தில் விழுந்தது….என் தலை தப்பியது…

    அடிக்க எதுவும் கிடைக்காத போது… ஷைலுவின் கையைக் கொண்டே செந்தேளை நசுக்கினேன்…. மனதுக்குள் பெரும் புயல் ஓயாமல் வீசிக் கொண்டே யிருப்பது போல என் செல்பி ஆசையும்..உச்சி மழைக் காற்றாய் வந்து போனது…. நினைக்க நினைக்க என் மனநிலை மேல் எனக்கு சந்தேகம் வரத்தான் செய்தது….. எரிய எரிய மெல்ல எழுந்து அமர்ந்த ஷைலுவின் நெஞ்சில் ஒருவன் ஓங்கி ஓங்கி தடியால் அடித்தான்..

    “அட …பாவி…மார்புகளின் சுமையை இறக்கி வைக்கவே விரும்பியவள் ஷைலு…. இன்று இறுகிப் போன பின் இத்தனை அடி எப்படி தாங்குகிறாள்…”-என்னால் அங்கு அமர முடியவில்லை…. எழுந்து நடந்தேன்…. வேகமாக நடந்தேன் ….

    சற்று தூரம் தள்ளி ஒரு தம்பதி ஒரு குழந்தையை அழுதுகொண்டே குழிக்குள் போட்டு மண்ணை தள்ளத் தொடங்கியிருந்தார்கள்…. மரணங்களிலேயே குழந்தையின் மரணம் மிக கொடுமை ஆனது என்று மனம் வேறு திசையில் பயணிக்க தொடங்குகையில் சட்டென உள்ளே இருந்த பிசாசு விழிக்கத் தொடங்கியது…என் செல்போனை எடுத்துக் கொண்டு அந்த குழந்தையின் அருகே செல்பி எடுக்க சென்றேன்…”செல்பி எடுக்காவிட்டால் அந்தக் குழந்தை உயிர் பெற்று விடுமா என்ன?” என்று சமாதானம் வேறு சொல்லிக் கொண்டது மனம்…. அப்போதுதான் ஒன்றை …கவனித்தேன்… அந்த குழந்தை மிகக் குறைவாக மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை நன்றாகவே பார்க்க முடிந்தது……. அது தெரியாமல் கணவனும் மனைவியும் மண்ணை அள்ளி அள்ளி போட்டுக் கொண்டிருந்தார்கள்……

    நான் கத்தினேன்..

    “டேய்… குழந்தை இன்னும் சாகலடா… இன்னும் சாகலடா……..ஏம்மா…. நிறுத்துமா.. குழந்தை சாகல.. உயிர் இருக்கு…”

    யாருக்குமே நான் கத்துவதோ அங்கு நான் இருப்பதோ, கேட்கவில்லை…………… தெரியவில்லை…………………

    சேப்டர் ?
    நேற்றிரவு ஷைலு வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு (அதுவும் பாழடைந்த பழைய வீடுதான் ) சென்று இருட்டுக்குள் வெகுநேரம் அமர்ந்திருந்தேன் ,…. ஒரு கரப்பான் பூச்சி என் கன்னத்தில் உரசுவதும்….பறப்பதுமாக இருக்க ஜன்னலோரம் மெல்ல நகர்ந்து சென்று திறந்திருந்த சாளரத்தின் விளிம்பில் சாய்ந்து நின்றேன்.. அப்போதுதான் நிலா தன்னை வெளிச்சமாக்கிக் கொண்டிருந்ததோ என்னவோ… பளிச்சென ஒரு இரவைக் கண்டேன்…

    வந்து வந்து போய்க் கொண்டும்.. கன்னம் காது மூக்கு நெற்றி என்று பட்டும் படாமல் சிறகடிப்பதுமாக இருந்த கரப்பான் பூச்சியியோடு ஒரு செல்பி எடுக்க சட்டென்று ஒரு குரங்கு மனதுக்குள் தாவியது… கரப்பான் பூச்சி கன்னம் உரசியவுடன் செல்பி எடுப்பதுதான் எனது திட்டம்… திட்டதை தாண்டியும் கரப்பான் பூச்சி என் மூக்கின் நுனியிலே அமைந்தது.. நிலா வெளிச்ச நேரத்தில் சிலு சிலு காற்றில்… தனிமை இருளுக்குள் மௌன சாட்சியாக அந்த கரப்பான் பூச்சி என்னிடம் கொண்ட நட்பின் சாட்சியை செல்பியாய் எடுத்த மறுகணம்… நான் சற்றும் எதிர்பார்க்காத நொடியில் கரப்பான் பூச்சி என் மூக்கினுள் நுழைந்தது, படு வேகமாக….. அவ்ளோ தான்… தலைக்குள் பம்பரம் சுழல்வுது போல நான் கிறுகிறுத்து தடுமாறி…… திரும்பியதில் சுவற்றில் அடித்திருந்த ஆணியில் என் நெற்றியைக் கொண்டு சொருகினேன்……..

    சூடாக என் மூக்கில், கன்னத்தில் வழிந்த குருதியை தொட, தொடவே நெற்றியை வேகமாக வெளியே உருவின சற்று நொடியில் கிறுகிறுத்த தலை சாளரத்தை தாண்டி கீழே சரிய, முழு உடம்பும்…….கீழே சரிந்தது…மாடியில் இருந்து சரிந்த நான் கீழே இருந்த ஒரு கறிவேப்பிலை மரத்தின் நடுவே விழ, குத்தி கிழிக்கப்பட்ட வயிற்றோடு வலி தாங்காமல் மாட்டிக் கொண்ட மரத்திலிருந்து எட்டிக் குதிக்க, நான் எகிறி இப்போது விழுந்தது என் வீட்டுக்கு பின்புறமுள்ள கறிவேப்பில்லை மரத்தை ஓட்டிப் போய்க் கொண்டிருக்கும் தண்டவாளத்தில்…….

    கண நேரத்தில் வந்து போன ரயிலுக்குள் நான் வெறும் சதைகளாகக் கிடந்தேன்.. என்னோடு சில தேள்களும் செத்துக் கிடந்தன….

    இந்த சேப்டர்க்கு நீங்களே எண் கொடுத்துக் கொள்ளுங்கள்…

    Share
  • அம்மாவின் மோதிரம்

    — எம்.ரிஷான் ஷெரீப்.

    அந்த மோதிரத்துக்கு கெட்ட செய்திகளை மட்டும் ஈர்த்துக் கொண்டுவரும் சக்தி இருக்கிறதோ என்று அவன் ஐயப்பட்டது அன்று உறுதியாகிவிட்டது. அந்த மோதிரத்தை விரலில் மாட்டிய நாளிலிருந்து தினம் ஏதேனுமொரு கெட்ட தகவல் வந்துகொண்டே இருந்தது. அணிந்த முதல்நாள் வந்த தகவல் மிகவும் மோசமானது. அவன் தங்கிப் படித்து வந்த வீட்டு அத்தை கிணற்றில் விழுந்து தவறிப்போயிருந்தாள். அன்றிலிருந்து தினம் வரும் ஏதேனுமொரு தகவலாவது அவனைக் கவலைக்குள்ளாக்கிக் கொண்டே இருந்தது. முதலில் அவன் அந்த மோதிரத்தை இது குறித்துச் சந்தேகப்படவில்லை. அதுவும் சாதுவான பிராணியொன்றின் உறக்கத்தைப் போல அவனது மோதிரவிரலில் மௌனமாக அழகு காட்டிக் கொண்டிருந்தது.

    அவனுக்கு ஆபரணங்கள் மேல் எவ்விதமான ஈர்ப்புமில்லை. அவனது தாய், பரம்பரைப் பொக்கிஷமாக வந்த அந்த மோதிரத்தைப் பாதுகாத்து வைத்திருந்து அவனுக்கு இருபத்து மூன்றாம் வயது பிறந்தபொழுதில் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி அதனை அவனது வலதுகை மோதிரவிரலில் அணிவித்து, பின் அவனுக்கு முதலாவதாகப் பிறக்கும் குழந்தைக்கு சரியாக இருபத்து மூன்று வயது பிறக்கும்போது அதனை அணிவித்து விடவேண்டுமென்றும் அதுவரையில் எக்காரணத்தைக் கொண்டும் அதனைக் கழற்றக் கூடாதென்றும் ஆணையிட்டு, நெற்றியில் முத்தமிட்டாள். அவனுக்கு தூக்கக் கலக்கத்தில் எதுவும் புரியவில்லை. அடுத்தநாள் காலையிலும் அம்மா அதனையே சொன்னாள். காரணம் கேட்டதற்குப் பதில் சொல்ல அவளுக்குத் தெரியவில்லை. அவளது அப்பா அப்படிச் சொல்லித்தான் அதனை அவளது இருபத்து மூன்றாவது வயதில் அவளுக்கு அணிவித்ததாகச் சொன்னாள்.

    velli mothiramஅவனும் அம்மோதிரத்தை இதற்கு முன்னால் அவளது விரல்களில் பார்த்திருக்கிறான். அவளுக்கென இருந்த ஒரே மோதிரமும் அவன் வசமானதில் கைவிரல்கள் மூளியாகிப் போனது அவளுக்கு.அது சற்று அகலமானதும் பாரமானதுமான வெள்ளி மோதிரம். நடுவில் ஒரே அளவான சற்றுப் பெரிய இரு கறுப்பு வைரங்களும் ஓரங்களில் எட்டு சிறு சிறு வெள்ளை வைரங்களும் பதிக்கப்பட்டிருந்த அழகிய மோதிரம். வெளிச்சம் படும் போதெல்லாம் பளீரென மின்னுமதன் பட்டையான இருபுறங்களிலும் கூட சின்னச் சின்னதாக அலங்காரங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அதிலிருக்கும் கற்களை விற்றிருந்தால் கூட ஒரு நல்ல வீட்டை விலைக்கு வாங்குமளவிற்குப் பணம் கிடைத்திருக்கக் கூடும். இப்பொழுது வரையில் வாடகை வீட்டிலேயே வசித்து வரும் அம்மாவுக்கும் இந்த எண்ணம் தோன்றியிருக்கும். ஆனால் என்ன கஷ்டம் வந்தபோதிலும் அவள் அதனை விற்கவோ, அடகுவைக்கவோ ஒருபோதும் துணியவில்லை. அவனது இருபத்து மூன்று வயது வரும்வரையில் விரல்களிலிருந்து அவள் அதனைக் கழற்றக்கூட இல்லை.

    அம்மா அவனுக்குச் சரியான பொழுதில் இம் மோதிரத்தை அணிவித்துவிட்டுப் போகவென்றே மூன்று மணித்தியாலம் பஸ்ஸிலும் அரை மணித்தியாலம் நடையுமாகப் பிரயாணம் செய்து அத்தை வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் வந்த நோக்கம் கிஞ்சித்தேனும் அத்தைக்குத் தெரியாது. அத்தை எப்பொழுதும் அப்படித்தான். அம்மாவைப் போல எதையும் கேள்விகள் கேட்டு, தூண்டித் துருவி ஆராய்பவளில்லை. பார்க்கத்தான் கரடுமுரடாகத் தென்பட்டாளே ஒழிய மிகவும் அப்பாவியாக இருந்தாள். எதையும் விசாரித்து அறிந்துகொள்ளும் ஆவல் கூட அவளுக்கு இருக்கவில்லை. அம்மாவும் தானாக தான் வந்த விவரத்தைச் சொல்லவில்லை. மறைத்தாள் என்று இல்லை. மதினி கேட்கவில்லை. அதனால் சொல்லவில்லை என்று இருந்தாள். அன்றைய தினம் அம்மா உறங்கவில்லை. வழமையாக ஒன்பது மணியடிக்கும்போதே உறங்கிவிடும் அத்தைக்கு அருகிலேயே பாய்விரித்து அம்மாவும் படுத்திருந்தாளெனினும் சிறிதும் கண்மூடவில்லை. நடந்துவந்த அசதியை, மகனுக்கு மோதிரம் அணிவித்துவிட்டு உறங்கலாமென்று எங்கோ தூரத்துக்கு அனுப்பியிருந்தாள். கூரையின் கண்ணாடி ஓட்டுக்குள்ளால் நிலா வெளிச்சம் அறைக்குள் ஒரு பெரிய நட்சத்திர மீனைப்போலப் படுத்திருந்தது. பின்சுவரில் ஊசலாடும் பழங்காலக் கடிகாரத்தில் நகரும் முட்களை அவ்வப்போது வேலியோர ஓணானைப் போலத் தலையைத் திருப்பிப் பார்த்தவாறிருந்தாள்.

    அத்தைக்கு அவர்களை விட்டால் வேறு யாருமில்லை. அவளது கணவன் குடித்துக் குடித்து கல்லீரல் கெட்டு செத்துப்போயிருந்தான். அதன் பிறகு அவனது பென்ஷன் பணம் அவள் சீவிக்கப் போதுமானதாக இருந்தது. பிள்ளைகளேதுமற்றவள் கணவனின் இறப்புக்குப் பிறகு அவளது அண்ணனுடன் அதாவது அவனின் அப்பாவுடன் அவர்களது ஊருக்குப் போய்விடுவாளென்றே ஊரில் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அவள் அவனது அம்மா, அப்பா எவ்வளவோ அழைத்தும் கூட வர மறுத்துவிட்டாள். அவளைத் தனியே விட்டுப்போக அவர்களுக்கும் இஷ்டமில்லை. கொஞ்சநாளைக்கு அவன் அங்கே தங்கியிருக்கட்டுமெனச் சொல்லி அவனை மட்டும் விட்டுப் போனார்கள். பள்ளிப்படிப்பு முடித்திருந்தவன் அந்த ஊரிலேயே தங்கி, பிறகு அந்த ஊருக்கு அருகாமையிலிருந்த ஒரு கல்லூரியில் சேர்ந்துவிட்டான். அப்பா அவ்வப்போது அவர்களது வயலில் விளைந்த நெல்லும் பயறும் ஊருக்குப் போகும் அவனிடம் அத்தைக்கென கொடுத்தனுப்புவார். அத்தையும் வீட்டில் சும்மா இல்லை. அருமையாக பனை ஓலையால் பாயும், கூடையும் பின்னுவாள். அதில் உழைத்த பணத்தில் ஒரு முறை அவனுக்கு புது ஆடை கூட வாங்கிக் கொடுத்திருக்கிறாள்.

    மோதிரம் அணிந்த நாளின் பகலில் அவன் ஏதோ பரீட்சை எழுதிக்கொண்டிருந்தபோது தான் அந்த முதல் செய்தி வந்தது. அவன் எழுதிக் கொண்டிருந்த தாளின் பாதிவரை முடித்திருந்தான். செய்திகொண்டு வந்த காவலாளி மேற்பார்வையாளரை வாசல்வரை அழைத்து மூன்று விரல்களை வாய் முன்வைத்து முன்னோக்கி லேசாக மடிந்து மிகவும் பவ்யமாகவும் இரகசியமாகவும் விடயத்தை அவரிடம் சொன்னான். மேற்பார்வையாளர் எழுதிக் கொண்டிருந்தவனை ஒருமுறை பார்த்தார். பரீட்சை முடிய இன்னும் முக்கால் மணி நேரம் இருப்பதை அவதானித்து காவலாளியை திருப்பி அனுப்பிவைத்து அமைதியாக இருந்தார். பரீட்சைத் தாளை அவன் ஒப்படைத்து வெளியேற முற்பட்டபோதுதான் அவர் அவனிடம் விடயத்தைச் சொன்னார். ஏதும் புரியாமல் முதலில் மௌனமாயிருந்து கேட்டவன் பின் கலவரப்பட்டு வீட்டுக்கு ஓடினான். அவனை பஸ்ஸுக்குக் காத்திருக்க வைக்காமல் நல்லவேளை பக்கத்துவீட்டுச் சின்னசாமியின் சைக்கிள் வந்திருந்தது.

    சின்னசாமிக்கு எப்பொழுதுமே சைக்கிளில் ஒரு ஆளை அருகிலமர்த்தி ஒழுங்காக மிதிக்கவராது. பாதையின் எல்லாத் திக்கிலும் சக்கரங்கள் அலைபாயும். எனவே கவலையை மனதுக்குள் புதைத்தபடி அவனே சின்னசாமியை அருகிலமர்த்தி அவசரமாகச் சைக்கிள் மிதித்து அத்தை வீடு போய்ச் சேர்ந்தான். வீடு போய்ச் சேரும்வரை மோதிரமும் வெள்ளிநிற சைக்கிளின் ஹேண்டில் பாரும் ஊர் பூராவும் பரவியிருந்த மதியவெயில் பட்டு மின்னிக்கொண்டே இருந்தது.

    அத்தையைக் குளிப்பாட்டி கூடத்தில் கிடத்தியிருந்தார்கள். நெற்றியில் போடப்பட்டிருந்த வெள்ளைத் துணிக் கட்டில் கருஞ்சிவப்பில் இரத்தம் உறைந்திருந்தாக ஞாபகம். அம்மாவும் இன்னும் ஊரின் சில வயதான பெண்களும் அருகிலிருந்து ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தனர். அம்மா இவனைக் கண்டதும் வெறிபிடித்தவள் போல அவிழ்ந்துகிடந்த கூந்தலோடு ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள். சவமும் எரித்து எல்லாம் முடிந்தபிறகுதான் அவனுக்கு மரணத்தின் காரணம் புரிந்தது.

    காலையில் அவ்வூரில் தெரிந்தவர்கள் சிலரோடு பேசிவரவென அம்மா வெளியே புறப்பட்ட போது அத்தை தன் வீட்டுக் கிணற்றுக்குள் தவறி விழுந்திருந்த பூனைக்குட்டியொன்றுக்கு கயிறு நீட்டியும், வாளி போட்டும் அதனைக் காப்பாற்ற முயற்சித்துக் கொண்டிருந்திருக்கிறாள். அம்மா எல்லோரையும் சந்தித்துவிட்டு வீட்டுக்கு வந்து தேடிப்பார்த்த போது அத்தை கிணற்று நீரில் பிணமாக மிதந்திருக்கிறாள். பழங்காலக் கிணற்றின் உட்புற கருங்கல் சுவரில் தலை மோதி இரத்தம் கிணற்று நீரை நிறம் மாற்றியிருந்திருக்கிறது. வழுக்கி விழுந்திருப்பாளென்பது எல்லோரதும் ஊகம். பிணத்தை எடுத்தபின்னர் ஊரார் சிலர் அக்கிணற்றுக்குள் தென்னை மட்டைகளையும் கற்களையும் குப்பைகளையும் போட்டு பாவனைக்குதவா வண்ணம் ஆக்கிவிட்டிருந்தனர். ஊரின் சிறுவர்கள் அவ்வூரின் கிணற்றடிகளில் கூடி விளையாடும் வாய்ப்பு பெரியவர்களால் தடுக்கப்பட்டது. அத்தை ஆவியாக உருமாறி கிணற்றடிகளில் அலையக்கூடுமெனவும் சிறுவர்களை கிணற்றுக்குள் இழுத்துக்கொள்வாள் எனவும் அவர்களிடம் கதைகள் சொல்லப்பட்டன. எவ்வளவோ தேடியும் முதலில் விழுந்த பூனைக்குட்டியைத்தான் இறுதிவரை காணக் கிடைக்கவேயில்லை.

    அத்தையும் போனபின்னால் வீட்டைப் பூட்டிச் சாவியை எடுத்துக்கொண்டு அப்பா, அம்மாவோடு அவனும் சொந்த ஊருக்கே வந்துவிட்டான். அத்தை வீட்டிலிருந்து வந்த முதல் நாள் மதியவேளை, திண்ணையிலிருந்த கயிற்றுக்கட்டிலில் அவன் தூங்கிக்கொண்டிருந்தபோதுதான் அப்பா பஸ்ஸிலிருந்து தவறிவிழுந்து கால் எலும்பை உடைத்துக் கொண்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகச் செய்திவந்தது. அப்பாவும் அம்மாவும் பக்கத்து ஊர் வரைக்கும் ஏதோ வேலையொன்றுக்கெனப் போயிருந்தார்கள். அவன் அடுத்த பஸ்ஸில் ஆஸ்பத்திரிக்கு ஓடினான். பார்க்காத வைத்தியரில்லை. பண்ணாத வைத்தியமில்லை. கொஞ்ச நஞ்சமாகச் சேர்த்திருந்த பணத்தையும் கரைத்துக் குடித்த காலின் வலி குறைந்ததே தவிர காயமடைந்த கால் முழுவதுமாகக் குணமடையவில்லை. இறுதியாக ஓர் நாள் தாங்கி நடக்கவென்று இரு கட்டைகளைக் கையில் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டது ஆஸ்பத்திரி. வீட்டில் ஒரு நேரம் கூடத் தங்காமல் ஓடியாடி அலைந்தவர் தன்னை பஸ்ஸிலிருந்து தள்ளிவிட்டது அம்மாதான் என்று தினந்தோறும் புலம்பியவாறே ஒரு நத்தையைப் போல வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போனார். விவசாயத்தையும் குடும்பத்தையும் பார்த்துக் கவனிக்கும் பெரும் பொறுப்பு அவன் தலையில் விழுந்தது.

    பிறகோர் நாள் அவர்களது வயற்காடு எரிந்துகொண்டிருப்பதாகச் செய்திவந்த போது அவன் சந்திக்கடையில் கருப்பட்டி கடித்தபடி செஞ்சாயத் தேனீர் பருகிக்கொண்டிருந்தான். அன்று அம்மாவும் வயலைப் பார்த்து வருவதாகப் போயிருந்ததை அவன் அறிவான். கண்ணாடிக் குவளையை மேசையில் வைத்ததும் வைக்காததுமாக அவன் வயலை நோக்கி ஓடத் தொடங்கினான். ஓரத்தில் வைக்கப்பட்டது சாணி மெழுகிய தரையில் விழுந்து உடையாமல் உருண்டது. பாதி வைத்திருந்த பானத்தைத் தரை தாகத்தோடு உறிஞ்சிக்கொள்ளத் தொடங்கியது. இருட்டு வருவதற்குள் எல்லாக் கதிர்களையும் தின்றுமுடித்துவிட வேண்டுமென்ற பேராசையோடு தீ நாக்குகள் உக்கிரமாகவும் ஒருவித வன்மத்தோடும் வயல் முழுவதையும் விழுங்கிக் கொண்டிருந்ததை அவன் கண்டான். அம்மாவுக்கு ஏதுமாகியிருக்கவில்லை. நிழலுக்காக நடப்பட்டிருந்த பூவரச மரத்தடியில் முனகலுடன் வாடிக்கிடந்தவளுக்கு அருகிலிருந்த இருவர் காற்றடித்துக் கொண்டிருந்தனர். இவனைக் கண்டதும் அத்தையின் மரணவீட்டில் நிகழந்ததைப் போலவே நெஞ்சிலடித்துக்கொண்டு அம்மா சத்தமிட்டு அழத்தொடங்கினாள். வயல்வேலைக்கென வந்திருந்த எல்லோரும் போல தீயை அணைப்பதிலேயே மும்முரமாக இருந்தனர். பெரும் உஷ்ணம் கிளப்பி எரியும் நெருப்புக்கு உதவியாகக் காற்றும் அது இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்று கொண்டிருந்தது.

    வயற்காடு எரிந்ததில் பெரும் நஷ்டமும் கடனும் அவர்களைச் சூழ்ந்தது. பலத்த யோசனையோடு சில நாட்களை வீட்டில் கழித்தவனிடம் நகரத்துக்கு வேலை தேடிப் போவது நன்றாக இருக்குமென அம்மா சொன்னாள். உழைக்கும் பணத்தை வீண்செலவு செய்யாமல் அவளுக்கு அனுப்பிவைக்கும் படியும், சீட்டுப்பிடித்துச் சேமித்து அவள் எப்படியாவது கடன்களையெல்லாம் அடைத்துவிடுவதாகவும் அவனுக்கு இரவு உணவிட்டபோது அவள் சொன்னாள். அவளது முடிவு அவனுக்கு எவ்வித வருத்தத்தையும் தரவில்லை. எப்படியாவது கடன் தொல்லைகளிலிருந்து மீண்டு, அவனது மாமா பெண் கோமதியை மணமுடிக்கும் ஆசை அவன் மனதுக்குள் ஒளிந்திருந்தது. அப்பாதான் முதன்முறையாக அவன் பார்க்க ஒரு குழந்தையைப் போல அழுதார். அம்மாவிடம் தன்னைத் தனியே விட்டுப்போகாதே என்பதுபோல மன்றாட்டமான பார்வையை அவனது விழிகளில் ஓட விட்டார். இறுதியாக அவன் நகரத்துக்கெனப் புறப்பட்ட நாளில் தலைதடவி, அவனது நெற்றியில் முத்தமிட்டு ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார். அம்மா வீட்டுப் படலை வரை கூட வந்தாள். அத்தை வீடு அங்கே அனாதையாகக் கிடக்கிறதெனவும் அதனை அவன் பெயருக்கு எப்படி மாற்றுவதெனவும் நகரத்தில் யாராவது தெரிந்த வக்கீல்களிடம் கேட்டுத் தெரிந்து வரும்படி அவளையும் அவனையும் தவிர்த்து வேறு யாருக்கும் கேட்காவண்ணம் மெதுவான குரலில் சொன்னாள். அவர்களிருவரையும் அங்கு மேய்ந்து கொண்டிருந்த கோழிகளையும் தவிர வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த வெக்கை நிறைந்த மதியப்பொழுது வெயில் அவனது மோதிரத்தை வழமை போலவே மின்னச் செய்தபடி ஊர் முழுதும் திரிந்தது.

    நகரத்துக்குப் போய் அவனுடன் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பனிடம் சொல்லி எப்படியோ வேலை வாங்கிவிட்டான். அவனது அறையிலேயே தங்கிக்கொண்டான். அதன்பிறகும் மோதிரத்தை உற்றுக் கவனிக்கவோ, அதன் அழகினை ரசிக்கவோ அவனுக்கு நேரமே கொடுக்காதபடி ஏதேனும் தீய நிகழ்வுகள் நடந்துகொண்டே இருந்தன. ஒருநாள் வீட்டில் அவன் ஆசையாக வளர்த்த புறாக்களெல்லாம் கூண்டைவிட்டுப் பறந்துபோய்விட்டதாகத் தகவல் வந்தது. தொடர்ச்சியாக தினம் தினம் ஊரிலிருந்து இதுபோல ஏதேனுமொரு தீய செய்தி அவனுக்கு எட்டியபடி இருந்தபோதுதான் அவனது நண்பன் விரல்களில் மின்னிய புது மோதிரம் குறித்து வினவினான். அப்பொழுதுதான் அவனும் அதுபற்றிச் சிந்திக்கத் தலைப்பட்டான். ஒருவேளை எல்லா நிகழ்வுகளுக்கும் தான் அணிந்திருக்கும் மோதிரம்தான் காரணமாக இருக்கக் கூடுமோ என எண்ணத் தொடங்கினான். நடந்த நிகழ்வுகளைக் கோர்வையாக மனதிலே ஓட்டிப்பார்த்தான். ஊருக்குப் போய் ஒருநாள் அம்மாவிடம் இது குறித்து விசாரிக்கவேண்டுமென எண்ணி அப்படியே உறங்கிப்போனான். அன்று இரவுவேலைக்கெனப் போன நண்பன் விபத்தில் இறந்தசெய்தி விடியமுன்னர் வந்து சேர்ந்தது.

    பிணத்தை எடுத்துக்கொண்டு நண்பனின் ஊருக்குப்போய் அருகிலிருந்து எல்லாக் காரியங்களும் செய்து முடித்தான். நகரத்துக்கு தனது அறைக்குத் தனியாக வந்தபொழுது கொடியில் காய்ந்துகொண்டிருந்த நண்பனின் சட்டை கண்டு வெடித்தழுதான். சத்தமிட்டு அழுதான். அத்தையின் மரண வீட்டிலும் வயற்காடு பற்றியெரிகையிலும் சத்தமிட்டழுத அம்மாவைப் போலவே கண்ணீரும், திறந்திருந்த வாய்வழியே எச்சிலும் வடிய வடிய கதறிக்கதறி அழுதான். அழுகையெல்லாம் ஓய்ந்தபோது அறையினைப் பெரும் மௌனம் சூழ்ந்ததை உணர்ந்தான். வாழ்க்கை குறித்து முதன்முதலாக அச்சப்பட்டான். அடுத்தநாள் விடிகாலையிலேயே அம்மாவைத் தொலைபேசியில் அழைத்து விபரம் சொல்லி தான் ஊருக்கே வந்துவிடுவதாக மீண்டும் அழுதான். கடனில் பாதி அடைக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் சில மாதங்கள் பொறுத்து ஊருக்கு வரும்படியும் அம்மா சொன்னாள். அப்பா திரும்பவும் இருமுறை வழுக்கிவிழுந்ததாகவும் கால் வீங்கி நடமாடவே முடியாமல் படுத்தே இருப்பதாகவும், தினந்தோறும் காலுக்கு எண்ணெய் தடவிவருவதாகவும் சொன்னாள். மறக்காமல் அன்றும் அத்தையின் வீடு பற்றி நினைவூட்டினாள். அவனுக்கு உடனே அப்பாவைப் பார்க்கவேண்டும் போலவும் கோமதியோடு ஏதேனும் பேசவேண்டும் போலவும் இருந்தது.

    கோமதிக்கும் அவன் மேல் காதலிருந்ததை அவன் அறிவான். இரு தங்கைகளோடும் அவள் தண்ணீர் எடுத்து வரும் வேளையில் இவன் தேனீர்க் கடையருகில் நின்றிருப்பான். அவள் ஓரக்கண்ணால் பார்த்து, பின்னலிலிருந்து தானாக உதிரும் ஒரு பூவைப் போல ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டுப் போவாள். சில அடித்தூரம் சென்று திரும்பிப்பார்த்து மீண்டும் ஒரு சிரிப்பைத் தருவாள். நேர்மோதும் பார்வைகளிலும் சிந்திய புன்னகைகளிலும் சொந்தக்காரர்களென்ற உறவையும் மீறி காதலின் தவிப்பு மிகைத்திருந்ததை இருவரும் அறிந்திருந்தனர். அவளுக்கு அவளது அப்பாவைப் போலவே சிரித்த முகம். எப்பொழுதும் சிரிப்பினை ஒரு உண்டியலைப்போல வாய்க்குள் அடக்கிவைத்திருப்பாள். அவன் அத்தை வீட்டிலிருந்து நிரந்தரமாக வீட்டுக்கு வந்தபோது துக்கம் விசாரிக்க வந்திருந்த அவளது அப்பா, அம்மா, தங்கைகளோடு அவளையும் கண்டான். அடையாளமே கண்டுகொள்ள முடியாத அளவுக்கு அழகாக வளர்ந்திருந்தாள். அவன் அவளுடன் சிறுவயதுகளில் ஒன்றாக விளையாடியதைத் தவிர பெரியவளானதும் எதுவும் பேசியதில்லை. அவன் அவளைப் பெண்கேட்டுப் போனால் மறுக்காமல் மாலை மாற்றிக் கூட அனுப்பிவைக்கும் அளவுக்கு மரியாதையும் அன்பும் நிறைந்த அவனது மாமா குடும்பம் வசதிகளேதுமற்றது.

    அவனது அறைநண்பர்களாக புதிதாக இருவர் வந்து சேர்ந்தனர். ஒரு சின்ன அறைக்குள் மூவராக அறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அதிலொருவன் சற்று வயதானவன். ஓயாமல் வெற்றிலை மென்று ஒரு சொம்பு வைத்து அதில் துப்பிக் கொண்டே இருந்தான். துப்புகையில் தெறிக்கும் சிறு சிவப்புத் துளிகள் சுவரெல்லாம் நவீன ஓவியங்களை வரைந்திருந்தன. அவன் பேசும்போது மேலுதடும் கீழுதடும் வெற்றிலைச் சாற்றினை வழியவிடாமலிருக்கப் பல கோணங்களில் வளைந்தன. மற்றவன் கண்களின் கருமணிகளைப் பெரிதாகக் காட்டும் கண்ணாடி அணிந்திருந்தான். நகரும் ஒவ்வொரு கணமும் ஏதேனும் செய்துகொண்டே இருந்தான். அறையின் மூலையில் நன்றாக இருந்த ரேடியோவைக் கழற்றி மீண்டும் பூட்டி உடைத்து வைத்தான். தினமும் தவறாது டயறி எழுதினான். மாநகரக் குப்பைகளிலிருந்து ஏதேனும் உடைந்த பொருட்களை, பொம்மைகளை எடுத்துவந்து பொருத்த முயற்சித்தான். பத்திரிகைகள் வாங்கி அதில் ஒரு வரி கூட விடாமல் படித்து குறுக்கெழுத்து, சுடோகு நிரப்பினான். சிலவேளை தூங்கினான். தினமும் மறக்காமல் அவ் வயதானவனோடு சண்டை பிடித்தான். அவ் இருவரும் ஒருவரையொருவர் குற்றங்கள் கண்டு சத்தமாகச் சண்டை பிடித்துக்கொண்டார்கள். எல்லாம் ஓய்ந்தபின்னர் இருவரும் திரும்ப ஒற்றுமைப்பட்டு ஒன்றாகவே சாப்பிடவும் போனார்கள். இன்னும் சில மாதங்கள்தானே இவ்வறையில் இருக்கப்போகிறோமென அவன் மட்டும் இதையெல்லாம் அமைதியாக ஒதுங்கிப் பார்த்திருப்பான். இவ்வளவு நாளும் தீய செய்திகளாகக் கொண்டுவந்த மோதிரம் இப்பொழுது தனது நிம்மதிக்கே சாபமென ஒரு கண்ணாடிக்காரனையும் வயதானவனையும் அழைத்துவந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

    அன்றையநாள் அவனுக்கு வந்த செய்தி அவனை முழுவதுமாக உடைத்துப் போட்டுவிட்டது. யாரிடமோ அவனது தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கி என்றுமே அவனுடன் பேசியிராத கோமதி அன்று அவனைத் தொலைபேசியில் அழைத்து அழுதழுது விடயம் சொன்னாள். அவளுக்கு சில தினங்களுக்கு முன்னர் அவசரமாகத் திருமணம் ஆகிவிட்டதாம். அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து மணமுடித்து வைத்தது அவனது அம்மாதானாம். இறுதியாக அவன் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கவேண்டுமெனச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள். கேட்டுக்கொண்டு நின்றிருந்தவனுக்குத் தரை பிளந்து, அப்பிளவு வழியே முடிவேதுமற்ற ஆழக்குழியொன்றுக்குள் தான் விழுவதைப் போல உடல் பதறியது. அவனால் நம்பமுடியவில்லை. செய்தி கொண்டுவந்தவள் அவனது நம்பிக்கைக்குரியவள்.

    அவனது ஊரிலிருந்து வந்து அங்கு ஹோட்டலொன்றில் வேலை செய்துவரும் குட்டியிடமும் இதுபற்றிக் கேட்டுப்பார்த்தான். குட்டி பொய் சொல்லமாட்டான். அதுவும் அவனதும் கோமதியினதும் காதலைக் குறித்து ஏதும் தெரியாதவன் மிகச் சாதாரணமாக, ஊரில் வெக்கை அதிகமெனச் சொல்வதைப் போலத்தான் இது குறித்தும் அவனிடம் சொன்னான். இவனுக்குள் இடி விழுந்ததைப் போல இருந்தது. இவனது காதலைப் பற்றி அம்மாவுக்கு நன்றாகத் தெரியும். கோமதியைப் பற்றி அவ்வப்போது அம்மாவிடம்தான் ஏதேனும் அவளுக்கு விளங்காவண்ணம் விசாரித்துக்கொள்வான். நம்பிக்கைத் துரோகம் செய்தது தனது அம்மாதானா என்பதனை அவனால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. நாளைக் காலை தொலைபேசியிலழைத்து விசாரிக்கவேண்டுமெனத் தீர்மானித்துக்கொண்டான்.

    அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. சத்தமிட்டுப் பெரிதாக அழவேண்டும் போல இருந்தது. காதல் உடைந்து போன துயரம். மலைமலையாகச் சேர்த்து வைத்திருந்த நம்பிக்கைகள் மண்மேடெனச் சரிந்த அவலம். இருவருமாக எதிர்பார்த்திருந்த எதிர்கால வாழ்க்கையினை பெரிதாக வந்து அடித்துப்போன காட்டாற்றுப் பெருவெள்ளம். உழைக்கவும் கடனடைக்கவுமென அவனை ஊரிலிருந்து அகற்றிவிட்டு எல்லாமும் நடாத்திய அம்மாவின் துரோகம். எல்லாம் விழிநீரோடு சிந்தியும் கரைந்தும் போக வேண்டும். அவனுக்கு அழ வேண்டும். அதற்கு அந்த அறை சாத்தியப்படவில்லை.

    அந் நள்ளிரவில் எழுந்து கடற்கரைப்பக்கமாக நடக்கத் தொடங்கினான். கோமதியுடனான காதல் நினைவுகள் ஒரு பெரும் சுமையினைப் போல அழுத்த கால்கள் தள்ளாடத் தள்ளாட அலைகளருகில் வந்து நின்றான். கால் நனைத்த அலைகளோடு, அவற்றின் பெரும் ஓசையோடு, யாருமற்ற அவ் வெளியில் ஓவென்று கதறியழுதான். அத்தைக்காக, அப்பாவுக்காக, நண்பனுக்காக அழுத பல விழிகளைக் கண்டிருக்கிறான். அதுபோல தனது சோகங்களெல்லாம் இரு விழித் துவாரங்கள் வழியேயும் இறங்கிப் போய்விடாதாவென்ற ஏக்கத்தோடு அவன் அழுதான். திறந்திருந்த வாயிலிருந்து எச்சில் ஒழுகியது. நாவில் உப்புச்சுவை வந்து மோதி ஒட்டிக்கொண்டது. அக் கடலையே விழுங்கிவிடும் அளவுக்கு பெரிதாக தாகமெடுத்தது. அப்படியே உட்கார்ந்தான். நழுவிவந்த அலைகள் அவனது இடைவரை நனைத்துச் சென்றன. கைக்கு அகப்பட்ட மணலை வாரியெடுத்து கடலைச் சபித்து எறிந்தான். அதுவரை அக்கடல் கண்டிருக்கும் அத்தனை கோமதிகளையும் அழைப்பதைப் போல கோமதீ… எனப் பெரிதாகச் சத்தமிட்டழுதான். மணலோடு விரலில் இடறிய மோதிரம் நீர்பட்டு நிலவொளியில் மின்னி அவனது பார்வையில் குவிந்தது. எல்லாம் உன்னால்தான் என்பதுபோல ஏதோ ஒரு வெறி உந்தித்தள்ள விரலில் இறுகியிருந்த மோதிரத்தை மணலுரசித் தோலில் இரத்தம் கசியக் கசியக் கழற்றி எடுத்து உள்ளங்கையில் வைத்து வெறுப்பாகப் பார்த்து அதற்குத் தூ எனத் துப்பினான். பின்னர் கடலுக்குள் வீசியெறிந்தான். அவனது மகனது அல்லது மகளது இருபத்து மூன்று வயது வரை காத்திருக்க முடியாமல் போன சோகத்தோடு கறுப்பும் வெள்ளையுமான வைரங்களும், அலங்காரங்களுடனுமான வெள்ளியும் உப்பு நீரின் ஆழத்துக்குள் புதைந்தது. முந்தைய நள்ளிரவில் அம்மா செத்துப் போனதாக அடுத்த நாள் காலையில் அவனுக்குச் செய்தி வந்தது.

    Share
  • பாம்பைக் கண்டால்…. 3

    நடராஜன் கல்பட்டு

    உலகில் உள்ள சுமார் 3,000 வகையான பாம்புகளில் இந்தியாவில் இதுவரை கணக்கில் வந்தவை சுமார் 270.  இவற்றில் மிகக் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் சில பாம்புகளே.
    ஆன்மீக விசாரத்தில் உன்னத நால்வர் என்றழைக்கப் படும் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என்பது போல பாம்புகள் விசாரத்தில் ‘பெரிய நால்வர்’ என அழைக்கப் படும் நல்ல பாம்பு (The Indian Cobra), கட்டு விரியன் (Krait), கண்ணாடி விரியன் (Russell’s Viper), ரம்பச் செதிள் கொண்ட விரியன் (Saw-scaled Viper) மற்றும் இவற்றுடன் ராஜ நாகம் (King Cobra), பவழப் பாம்பு (Coral snake) என்பவையே இந்தியப் பாம்புகளில் மிகக் கொடிய விஷப் பாம்புகள்.  இவை மனிதனைக் கடித்தால் உடனே சரியான வைத்தியம் செய்யப்படா விட்டால் ஓரிரு மணி நேரத்திற்குள்  கடிபட்டவர் இறப்பது நிச்சயம்.
    பாம்புக் கடிக்கான வைத்தியம் பற்றிப் பார்க்குமுன் இந்தப் பாம்புகளைப் பார்க்கலாமா?
    நல்ல பாம்பு :  விஞ்ஞான ரீதியாக இந்தப் பாம்பிற்கு அளிக்கப் பட்ட பெயர் ‘நஜா நஜா’ என்பதாகும்.  ‘நஜா’ என்பது ஒரு போர்ச்சுகீசியச் சொல். நல்ல பாம்பிற்கு போர்சுகீசியப் பெயரா? எப்படி வந்திருக்கும்?  பல நூற்றாண்டுகளுக்கு முன் போர்ச்சுகீசிய மாலுமிகளும் அவர்களுடன் சென்றவர்களும் உலகெங்கிலும் அவர்கள் கண்ட தாவரங்கள், விலங்குகள், பறவைகள் பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டு சென்றனர்.  ‘நாகா நாகா’ என்று நம் மக்கள் கூறியதை ‘நஜா நஜா’ என்று எழுதிக் கொண்டனரோ அல்லது ஹிந்தி பேசுபவர்கள், “அது மிகக் கொடிய விஷப் பாம்பு.  அதன் அருகே போகாதே” என “ந…ஜா ந…ஜா” (Don’t go…don’t go) எனத் தடுத்ததை அவர்கள் அந்தப் பாம்பின் பெயர் ‘நஜா நஜா’ என எடுத்துக் கொண்டனரோ தெரியாது.
    நல்ல பாம்பு மற்ற பாம்புகளைப் போலவே நல்ல பாம்புதான்.  தானாக வந்து மனிதனை கடிக்காது, அதனை மிதித்தாலோ அல்லது கொல்ல முயற்சித்தாலோ தான் தன் விஷப் பற்கள் கொண்டு மனிதனை அது தீண்டும்.
    நல்ல பாம்பின் தலை – முன்னும் பின்னும்
    நல்ல பாம்பு அதன் உயிருக்கு ஆபத்து வருகிறது என்று எண்ணினாலோ, அல்லது அதை நாம் சீண்டினாலோ, படமெடுக்கும்.  தன் உடலின் மூன்றில் ஒரு பகுதியை செங்குத்தாகத் தூக்கி நிறுத்திக் கொண்டு, கழுத்தின் தசைகளைப் பக்க வாட்டில் பட்டையாக விரித்துப் பெரு மூச்சு விட்டு எதிரிகளை, “கிட்டெ வராதே.  வந்தால் கொன்று விடுவேன்” என முன் எச்சரிக்கை செய்யும் ஒரு செய்கையாகும் படமெடுப்பது என்பது.
    நல்ல பாம்பு படமெடுக்கும் போது அதன் விரித்த படத்தின் பின் புறம் மூக்குக் கண்ணாடி போன்ற ஒரு குறியீடு தெரியும்.  இந்த மாதிரி குறியீடு கொண்ட நல்ல பாம்பினை ஆங்கிலத்தில் மூக்குக் கண்ணாடி அணிந்த நல்ல பாம்பு (Spectacled cobra) என்பார்கள்.
    ஒரு வகை நல்ல பாம்பின் தலையில் இது ஒற்றைக் கண்ணாடி வடிவில் இருக்கும்.  இந்த வகை நல்ல பாம்பினை ஒற்றைக் கண்ணாடி அணிந்த நல்ல பாம்பு (Monocled cobra) என்பார்கள்.
    கட்டு விரியன்:  நல்ல பாம்பினும் கொடிய விஷம் கொண்ட பாம்பு இது.  நல்ல வேளையாக பகலில் படுத்துறங்கி இரவில் மட்டும் வெளி வரும் பாம்பு இது.  இதன் குறுக்கு வெட்டுத் தோற்றம் வட்டமாயில்லாமல் ஒரு முக்கோண வடிவில் இருக்கும்.  உடலில் பட்டை அடித்தது போன்ற வண்ணம் கொண்டிருக்கும்.
    http://en.wikipedia.org/wiki/Bungarus
    மஞ்சளும் கருப்புமான பட்டைகள்
    கொண்ட கட்டு விரியன்.
    Photo Credit: Dr. Muhammad Sharif Khan
    கருமை நிறப் பட்டைகளுடன் ஒரு கட்டுவிரியன்.
    கண்ணாடி விரியன்:  இந்த வகைப் பாம்புகளுக்கு இப்பெயர் வரக் காரணம் இதன் உடல் பூராவுமே மூக்குக் கண்ணடிகள் போட்டாற் போன்ற வண்ணத் திட்டுகள் இருப்பது தான்.  கண்ணடி விரியன் களில் பல வகை உண்டு.  அவற்றில் இரண்டு “ரஸ்ஸல்’ஸ் விரியன்  (Russell’s viper), ரம்பச் செதிள் கொண்ட விரியன்  (Saw-scaled viper) என்பவை ஆகும்.
          http://en.wikipedia.org/wiki/File:Daboia_head.jpg                      http://en.wikipedia.org/wiki/File:Echis_carinatus_sal.jpg
    கண்ணாடி விரியன் பாம்பு                                          ரஸ்ஸல் கண்ணாடி விரியன்
    1972ல் விஜயவாடாவில் ஒரு நாள் எனது கிருஸ்துவ சக அதிகாரி ஒருவருடன் எங்கள் வீட்டு வாசல் வராந்தாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.  வாசலில் இருந்த முசுக்கொட்டை செடியருகே (Mulberry tree) பத்துப் பதினைந்து கட்டெறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்வது போல என் கண்ணில் பட்டது.  சற்று கூர்ந்து கவனித்ததில் எனக்குப் புரிந்து விட்டது அது என்னவென்பது. அப்போது விஜயவாடாவில் நாகபஞ்சமி என்ற சினிமா ஓடிக் கொண்டிருந்தது.  நண்பர் திடீரெனக் கேட்டார், “உங்கள் மதத்தில் நல்ல பாம்பினை தெய்வமாகக் கொண்டாடுகிறீர்கள்.  இது உண்மையா? அல்லது கட்டுக் கதைகளா?” என்று.  “அது உண்மையோ இல்லையோ எனக்குத் தெரியாது.  இப்போது உங்களுக்கு ஒரு உண்மையான பாம்பினைக் காட்டவா?” என்றேன்.  “எங்கே? எங்கே” காட்டு” என்றார் அவர்.  நண்பர் மேத்யூ குட்டியை முசுக் கொட்டை செடியருகே அழைத்துச் சென்று அங்கு வளைந்து வளைந்து செல்லாமல் கிட்டத் தட்ட நேர் கொட்டில் சென்று கொண்டிருந்த ஒரு சின்ன பாம்பினைக் காட்டினேன்.  அதன் முன்னே ஒரு குச்சியை நீட்டினேன்.  குட்டிப் பாம்பு தன் உடலை விருட்டென வளைவுகளாக இழுத்துக் கொண்டு குச்சியினை பக்க வட்டாகத் தாக்கியது. பாம்புகளைப் பற்றி சிறிதளவு படித்திருந்த எனக்குப் புரிந்து விட்டது அந்தப் பாம்பு கண்ணாடி விரியனின் குட்டி என்று.  அடுத்த வினாடி ஒரு பெரிய கல்லை அதன் மேல் தூக்கிப் போட்டுப் பரலோகம் அனுப்பி விட்டார் மேத்யூ குட்டி.  ஏன் அவருக்கு நான் பாம்பைக் காட்டினேன் என வருந்தினேன் அன்று.
    ராஜ நாகம்:  (King cobra)  ராஜ நாகம் நல்ல பாம்பில் ஒரு வகை.  ஆனால் இரண்டு வித்தியாசங்கள்.  ஒன்று இதன் உணவுகளில் மிக முக்கியமானது மற்ற  பாம்புகள்  (அதனால் தான் ராஜ நாகம் என்ற பெயரோ?)   மற்றொன்று இது சிறு குச்சிகள் சரகுகளைத் தன் உடலால் நகர்த்தி நகர்த்தி இரண்டடுக்கு ‘வீடு’ (கூடு) கட்டி கீழ் தளத்தில் முட்டைகள் இட்டு, மேல் தளத்தில் படுத்துறங்கும்.  ராஜ நாகம் தன் ‘வீட்டினை’ மிகுந்த ஆக்ரோஷத்துடன் பாது காக்கும்.
    உலகில் உள்ள கொடிய விஷப் பாம்புகளில் மிகப் பெரிய பாம்பு ராஜ நாகம்.  இது சுமார் 18.5 அடி வரை வளரக் கூடும். நல்ல பாம்பினைப் போலவே இந்தப் பாம்பும் படமெடுக்கும்.
    இதன் கண் பார்வை மிக மிகக் கூர்மையானது. சுமார் 300 அடி தூரத்தில் நகரும் ஒரு இரையினை இது கண்டறியும் சக்தி படைத்தது என்கின்றனர் வல்லுனர்கள்.
    பவளப் பாம்பு : (Coral snake). பவளம் என்றதும் பலதேசப் பெண்களுக்கு ஆபரணமாக அணிய ஆசை வரும்.  மஞ்சள், சிவப்பு, கருப்பு வர்ணப் பட்டைகளைக் கொண்ட இந்தப் பாம்பு பார்க்க மிக அழகாக இருக்கும்.
     http://www.team-bhp.com/forum/attachments/4×4-off-roading/91469d1232383511-snakes-coral.jpg
    அழகாக இருக்கிறதே எடுத்து அணியலாமோ என்று எண்ண வேண்டாம்.  மிகக் கொடிய விஷம் கொண்ட பாம்புகளில் இதுவும் ஒன்று.
    சில விஷமற்ற பம்புகள்:  விஷமற்ற பாம்புகள் என்றவுடன் இவற்றுக்கு முற்றிலுமாக விஷம் இராது என எண்ணி விட வேண்டாம்,  இந்த வகையில் சிலவற்றிற்கு விஷம் இருந்தாலும் அது மிக மிகக் குறைந்த வீரியமுடையதாகத் தான் இருக்கும்.  இவ்வகைப் பாம்புகளில் மூன்றினைப் பற்றிப் பார்க்கலாம்.
    1. கொடி அல்லது சாட்டைப் பாம்பு (Vine or Whip snake):  நீண்டு மெலிந்து கொடி அல்லது சாட்டை போல் இருக்கும் இப் பாம்பில் பச்சை நிறத்தில் இருப்பவற்றை பச்சைப் பாம்பு என்றும், பழுப்பு நிறத்தில் உள்ளதை கொம்பேரி மூக்கன் என்றும் நிறத்தினை வைத்து அழைப்பார்கள் நம் தமிழ் நாட்டில்.  இதனை கண் கொத்திப் பாம்பு என்று அழைப்பவர்களும் உண்டு.
    இந்த இரு வகைப் பாம்புகளுமே மிக மிகக் குறைந்த வீரியம் கொண்ட விஷம் உள்ள பாம்புகளே.  அவை கடித்தால் கடித்த இடத்தினைச் சுற்றி சிறிதளவு வீக்கமும், வலியும் இருக்கும்.  மூன்று நாட்களில் வலி குறைந்து அல்லது மறைந்து விடும்.
    இந்தப் பாம்புகள் தாழ்வான மரக் கிளைகள் அல்லது செடிகளில் இருந்து கொக்கி போலத் தொங்கிக் கொண்டு இருக்கும்.  அவ்வாறு தொங்குவது தரையில் ஓடும் தன் இரையான ஓணான், பல்லி, சுண்டெலி இவற்றினைக் கண்டறிந்து தாக்கிப் பிடிப்பதற்கே.
    கொம்பேரி மூக்கனின் தலை மேலிருந்து பார்த்தாலும் சரி, பக்க வாட்டில் இருந்து பார்த்தாலும் சரி ஒரு நீண்ட முக்கோண வடிவில் காணப்படும்.
    http://en.wikipedia.org/wiki/Ahaetulla_nasuta
    பச்சைப் பாம்பில் இரு வகை
    .
    கொம்பேரி மூக்கன் பற்றி நம் நாட்டில் இரு செய்திகள் பரவலாக உலவி வரும்.
    1.  “கொம்பேரி மூக்கன் மனிதனின் கண்களைக் குத்துவதற்காகத் தான் மரக் கிளைகளில் இருந்து தொங்கிக் கொண்டிருக்கும்.”
    2.  “கொம்பேரி மூக்கனை ஒருவர் கொல்ல நினைத்து அடித்தால் அது அவரைத் தீண்டி விட்டு அவர் இறந்தாரா, இறந்தவரின் உடலை எரித்தார்களா இல்லையா எனப் பார்ப்பதற்காக அருகிலேயே தொங்கிக் கொண்டிருக்கும்.  புகை கண்ட பின்னர்தான் அது அங்கிருந்து மறையும்.”
    இந்த இரண்டில் முன்னதில் ஓரளவு உண்மை இருக்கலாம்.  காரணம் இதுதான்.  மரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாம்பினை நாம் அணுகும் போது அது நம் கண்கள் அசைவதைத் தப்பாக தனது இரை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றெண்ணி நம்மைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது.
    இரண்டாவது முற்றிலும் கட்டுக் கதையே.
    நான்கு வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டில் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த இருவர் அடித்துப் பிடித்து உள்ளே ஓடி வந்து, “சார் ஒரு கழி கொடுங்க.  பாம்பு ஒண்ணு வந்துருக்கு” என்றனர்.  கழியைக் கொடுக்காமல் நான் வெளியெ வந்து பார்த்தேன்.  “பாம்பு எங்கே?” என்றேன்.  அவர்கள் ஒரு மல்லிகைச் செடியியைக் காட்டினர்.  அதில் ஒரு பச்சைப் பாம்பு.  அதன் வாலைப் பிடித்து மெல்ல வெளியே இழுத்துத் தூக்கிப் பிடித்தேன். அவர்கள், “சார் அது கண்ணெக் கொத்தீடும்” என அலற நான் சிறிதும் பதட்டப் படவில்லை.  அந்தப் பாம்பினை புதர் மண்டி இருந்த பக்கத்து காலி மனையில் கொண்டு விட்டேன்.  கண் இமைக்குமுன் தன்னுடலை சற்றும் அசைவின்றி புதருக்குள் இழுத்துச் சென்றது அது.  என்ன கொள்ளை அழகு தெரியுமா பச்சைப் பாம்பு?
    ஓலைப் பாம்பு :  ஓலைப் பாம்பு நம் தோட்டங்களில் சாதாரணமாகக் காணப்படும் ஒரு வகைப் பாம்பு.  “ஓலைப் பாம்பு ஒன்றினை அடித்தால் ஒன்பது வரும்”, என்பார்கள்.  இது ஓரளவு உண்மையே.  சொந்த அனுபவத்தில் சொல்கிறேன்.
    ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பது, நாற்பதுகளில் திருச்சி, பொன்மலையில் நான் வசித்து வந்தபோது எங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு நிறைய பாம்புகள் வரும்.  அடிக்கடி அடிப்போம். ஒரு முறை புதராக மண்டிக் கிடந்த கொடி சம்பங்கியில் ஒரு பாம்பினை அடிக்கப் போய் அங்கிருந்து நாலா பக்கமும் பல பாம்புகள் சிதறி ஓடின.  எங்களுக்கு ஒரே ஆச்சரியம், திகில்.  அப்படி நடக்கக் காரணம் ஓலைப் பாம்புகள் கூட்டமாக வாழும் இயல்புடையவை என்பதுதான் எனப் பின் நாட்களில் அறிந்தேன்.
    சாரைப் பாம்பு :  இதன் ஆங்கிலப் பெயர் ‘Rat snake’.  இப் பெயர் ஒரு காரணப் பெயர்.  இந்தப் பாம்பின் பிரதான உணவு எலிகள்.
    http://en.wikipedia.org/wiki/File:Yellowratsnake-1-.jpg
    சாரைப் பாம்புகளில் சுமார் 32 வகையான பாம்புகள் உள்ளனவாம்.
    இப்பாம்பு பற்றிப் பரவலாக நிலவி வரும் எண்ணம் இது நல்ல பாம்பின் காதலன் என்பது.  தவறான ஒரு கருத்து இது.  இப்படி ஒரு தவறான எண்ணம் வரக் காரணம் இதன் உருவமும் நிறமும் நல்ல பாம்பினைப் போல இருப்பதுதான்.
    பாம்புகளைப் பற்றிப் பார்த்தோம்.  அடுத்த கடடுரையில் பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதைப் பார்ப்போம்.
    (தொடரும்)
    Share
  • பாம்பைக் கண்டால்…. 2

    நடராஜன் கல்பட்டு

    சில இந்தியப் பாம்புகளைப் பற்றி சொல்வதற்கு முன் பாம்பின் உடலமைப்பில் உள்ள சில விசேஷங்கள் பற்றிக் கூற விரும்புகிறேன்.
    உடலுருப்புகள்  பாம்பின் உடல் குறுகலாய் நீண்டு ஒரு கொடி போல இருப்பதால் அதன் உள் உருப்புகளும் மெலிந்து நீண்டு இருக்கும்.  மற்ற மிருகங்களைப் போல் அதன் நுரை ஈரல்கள் இராது.  ஒன்றுடன் ஒன்று இணைந்திராமல், வலது ஈரல் நீண்டு உடலின் பாதி தூரம் வரை செல்லும்.  இடது நுரை ஈரல் குட்டையானது.  சில பாம்புகளில் இது இல்லாமல் கூட இருக்கலாம்.  அல்லது மூன்றாவதாக மிகக் குட்டியான ஒரு நுரை ஈரலும் இருக்கலாம்.  இவ்வாறு நீண்ட நுரை ஈரலைக் கொண்டதால் தான் பாம்பு மூச்சு விடுவது மனிதனையோ மற்ற மிருகங்களையோ போல இரண்டு மூன்று வினாடிகளில் முடிந்து விடாமல் பெரியதோர் பலூனிலிருந்து காற்றை விடுவது போல புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……….ஸென்று பல வினாடிகள் நீடிக்கின்றது.
    மூத்திரக் காய்கள் இரண்டு உண்டு.  ஆனால் ஒன்றன் பின் ஒன்றாய்.
    ருசி பார்த்தல் பாம்பினால் செய்ய முடியாத ஒரு காரியம்.  காரணம் அதன் நாக்கு மணம் நுகர்வதர்க்காக மட்டுமே அமைக்கப்பட்ட ஒன்று.  அதனால் என்ன?  கண்ணால் பார்த்து மணம் நுகர்ந்தால் போதுமே தனக்குப் பிடித்த உணவினைக் கண்டு கொள்ள.
    கீழ் வரும் படத்தினைப் பாருங்கள் பாம்பின் உடலுள் உருப்புகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று.
    பாம்பின் வாய்  பாம்பின் தாடைகள், நம் தாடைகளைப் போல் ஒன்றோடொன்று நிரந்தரமாக இணைக்கப் பட்டவை அல்ல.  தேவைப் படும் போது தாடை மூட்டுகள் கழன்று தாடைகளை வேண்டுமளவுக்கு விரித்துக் கொள்ள முடியும்.  அதனால் தான் பாம்பு தன் தலையை விட அதிக பருமனான இரையை கவ்வி விழுங்க முடிகிறது.
    இனப் பெருக்கம்  மிருகங்களை முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பவை, குட்டி போட்டு பால் கொடுப்பவை என இரு வகையாகப் பிரிப்பார்கள்.  ஆனால் பாம்புகளில் மூன்று வகை உண்டு.  முட்டை இட்டுக் குஞ்சு பொரிப்பவை, முட்டையை வயிற்றுக்குள் வைத்திருந்து அது குஞ்சாக வெளி வரும்போது வெளிக் கொணரும் பாம்புகள் மற்றும் வயிற்றுக் குள்ளேயே கருவினுக்கு முட்டையின் வெள்ளைக் கருவினாலும், தொப்புள் கொடி போன்றதொரு அமைப்பின் மூலம் தன் உடலிலிருந்தே உணவு கொடுத்தும் வளர்த்துப் பின் குட்டி வளர்ச்சி அடைந்ததும் வெளிக் கொணரும் பாம்புகள் என்பவை அவை.
    பாம்பின் முட்டைகள் கோழி முட்டை போல கெட்டியான ஓடுகள் கொண்டவை அல்ல.  மெல்லிய தோல் போன்ற ஒன்றுதான் முட்டையின் சட்டை.
    பல பாம்புகள், நல்ல பாம்பு உட்பட, முட்டை இட்டபின் அவற்றைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.  ராஜ நாகம் முட்டைகளை கூடு அமைத்து அதில் இடும்.  மலப்பாம்பு சுமார் முப்பது முதல் நூறு முட்டைகள் வரை இட்டு அவற்றை ஒன்றாகச் சேர்த்து தன் உடலால் சுருட்டி இறுக்க அணைத்துக் கொண்டு அடை காக்கும்.
    “உஸ்ஸ்ஸ்ஸ்………தொந்திரவு பண்ணாதீங்க. நான் அடை காத்துகிட்டு இருக்கேன்.”
    பாம்புகள் குளிர் ரத்தப் பிராணிகள் என்று சொல்வார்கள்.  அதாவது அவற்றின் உடல் உஷ்ணம் நம் உடல்கள் போல ஒரே நிலையில் இருக்காது.  வெளியெ என உஷ்ணமோ அதே நிலையில் இருக்கும்.  ஆனால் அடை காக்கும் மலைப் பாம்பு தன் உடலின் உஷ்ணத்தை முட்டைகள் குஞ்சுகளாக மாறத் தேவையான உஷ்ண நிலையான 88 முதல் 90 டிகிரி ஃபேரன்ஹீட் வரையான நிலையில் வைத்துக் கொள்கிறது.  எப்படித் தெரியுமா?  தன் உடலில் உள்ள தசைகளை இறுக்கி விரிப்பதன் மூலம் இந்த வேலையைச் செய்கிறது மலைப் பாம்பு.
    விரியன் பாம்புகள் குட்டி போடும் இனம்.
    தென் அமெரிக்கப்  பாம்புகளான பச்சை அனகொண்டாவும் போ கன்ஸ்ட்ரிக்டாரும் வயிற்றுக் குள்ளேயே முட்டையியனை வைத்து முட்டைக்குள் இருக்கும் கருவிற்கு, முட்டைக்குள் கருவினைச் சுற்றி இருக்கும் பதார்த்தம் மூலமாகவும், தன் உடலில் இருந்தே தொப்புள் கொடி போன்ற உருப்பின் வழியேயும் உணவளித்து பின் கரு குட்டியாக வளர்ச்சி அடைந்தவுடன் அதை வெளிக் கொணரும்.
    பச்சை அனகொண்டா
    போ கன்ஸ்ட்ரிக்டார்
    பாம்புகள் புணருதல்  நல்ல பாம்பும் சாரைப் பாம்பும் புணர்ந்துதான் பின் நல்ல பாம்புகள் முட்டை இடுகின்றன என்று சிலர் சொல்வார்கள்.  இது ஒரு தவறான கருத்து.  ஒரே இனப் பாம்புகள் தான் புணர்ந்து இனப் பெருக்கம் செய்கின்றன.
    கீரியும் பாம்பும் : பாம்பின் ஜன்ம விரோதி கீரிப் பிள்ளை.  கீரியின் உணவு பாம்பு.  கீரி பாம்புடன் இயற்கைச் சூழலில் சண்டை போடுவது பார்க்க வேண்டிய ஒன்று.  கீரி தன் அடர்ந்த ரோமங்களை சிலிர்த்துக் கொண்டு தன் உருவத்தினை இரு மடங்குக்குமேல் ஆக்கிக் கொள்ளும்.  பின் பாம்பின் பாதி உடலைப் பிடித்துக் கவ்வுவது போல் பாசாங்கு செய்யும்.  பாம்பு அதனைக் கொத்த வரும்போது தன் தலையைத் திருப்பிக் கொண்டு விடும்.  பாம்பு தன் கண்ணுக்கு உடலெனத் தெரியும் கீரியின் ரோமங்களைத் தாக்கும்.  ஆனால் அதன் விஷப் பற்கள் கீரியின் உடலைத் தாக்காது.  ரோமங்களைத் தான் தாக்கும்.  இப்படியே பல முறை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகச் சுற்றிச் சுற்றி வந்து கீரி பாம்பினைக் களைப்படையச்செய்யும்.  பாம்பு முற்றிலுமாகக் களைத்திருக்கும் போது கீரி அதன் தலைக்கு சற்று கீழே கவ்விக் கடிக்கும்.  பாம்பின் உயிர் போனபின் மெல்ல மெல்லத் தலையைத் தவிற மற்ற பாகங்களைத் தின்று விடும்.
    பாம்பின் எதிரி கீரி
    பாம்பின் ஊணவு எலி, பல்லி, பறவைகள், சிறிய  விலங்குகள்.  அது சரி.  பாம்பு யாருக்கு உணவு?  கழுகு, கருடன், கீரி இவற்றுக்கு மட்டும் தானா?
    இல்லை.  பாம்பு மனிதனுக்கும் உணவு.  கிழக்காசிய நாடுகளில் பலருக்கு பாம்பு மிகப் பிடித்த உணவு.  தலையை வெட்டி விட்டால் பாம்பு ஒரு மாமிசப் புடலங்காய்தானே?
    பாம்பின் ரத்தத்தைக் குடித்தால் ஆணின் வீரியம் அதிகரிக்கும் என நம்புவோரும் உள்ளனர் கிழக்காசியாவில், அதுவும் பாம்பு உயிருடன் இருக்கும்போதெ அதன் உடலில் இருந்து எடுக்கப் படும் ரத்தம்!
    “கொடிய விஷமுள்ள பாம்பு எது, விஷமற்ற பாம்பு எது என்று கண்டு பிடிக்க முடியுமா?” என்றால் முடியும் பாம்பின் தலையைப் பார்த்துக் கண்டு பிடிக்கலாம்.
    விஷப் பாம்பைக் கண்டறிதல்
    1. விஷமற்ற பாம்பின் கண்களின் பாப்பா வட்ட வடிவில் இருக்கும்.  விஷமுள்ள பாம்புகளின் கண்களில் இது நடுவில் சற்றே அகன்று மேலிருந்து கீழாக இரு கோடுகள் போலிருக்கும்.
    2.  விஷமற்ற பாம்பின் மேல் தாடையில் கண்களுக்குக் கீழாக செதிள்கள் ஒரு வரிசைதான் இருக்கும்.  விஷமுள்ள பாம்பிற்கு இங்கு இரண்டு மூன்று வரிசைகள் செதிள்கள் காணப்படும்.
    3.  விஷப் பாம்பின் மேல் தாடையில் நாசித் துவாரங்களின் பக்க வாட்டில் சிறிய பள்ளம் இருக்கும்.
    ஆனால் ஒன்று.  பாம்பு நாம் பார்ப்பதற்காக தலையைக் காட்டிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருக்க வேண்டுமே! அதற்கு என்ன செய்ய?
    பாம்பு ஒருவரைக் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாமா?
    (தொடரும்)
    Share
  • பாம்பைக் கண்டால்…. 1

    நடராஜன் கல்பட்டு

    பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்!

    ஆமாம் எனக்கும்தான். பாம்பு பற்றிய பல கட்டுக் கதைகள் கூட சுவையாகத்தான் இருக்கும். எத்தனை திரைப்படம் பாம்பு பற்றி எடுத்தாலும் ஓடத்தான் செய்கிறது. அதென்னமோ பாம்பு என்று சொன்னாலே எல்லோருக்கும் கண்ணில் பளிச்சென்று ஒரு மின்னல் வந்து போகும் இல்லையா?
    சமீபத்தில்  தினமணியில் கண்ட ஒரு செய்தி:
    பாம்புக்கு காது கேட்குமா? தொடர்ந்து குறிவைத்து தாக்குமா? பாம்புக்கு வார்க்கப்படும் முட்டையும், பாலையும் அது குடித்து விடுகிறதா? கொம்பேறிமூக்கன் தன்னால் கடித்து இறந்தவரை எரிக்கும் வரை மரத்தில் மறைந்திருந்து பார்க்குமா? இவையெல்லாம் உதகையில் நடைபெற்ற பாம்புகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற பார்வையாளர்களிடமிருந்து கேட்கப்பட்ட கேள்விகள்.
     புவி வெப்பமடைதல் அபாய அளவுகளைக் கடக்கத் தொடங்கியதிலிருந்து அனைத்து பகுதிகளிலுமே தட்பவெப்பநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பாம்புகளே இல்லையெனவும், அப்படியே இருந்தாலும் அவை விஷத்தன்மை அற்றவையே என்ற நிலைதான் மலை மாவட்டமான நீலகிரியில் இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், சாலையோரங்களிலும் பாம்புகள் காணப்படுகின்றன.
     எனவே, நீலகிரி மக்களும் பாம்புகளைக் குறித்து தெரிந்து கொள்ளவும், அவை கடித்தால் உடனடி முதலுதவி என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இதில் பாம்புகளைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டோர் முதல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்துவோர் வரை பல்வேறு தரப்பினரும்
     பங்கேற்றனர்.
     இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்த உதகை அரசு கலைக்கல்லூரியின் உதவி பேராசிரியரும், சென்னை பாம்பு பண்ணையின் முன்னாள் இணை இயக்குநருமான
     டாக்டர் கண்ணன் நம்மிடம் தெரிவித்ததாவது:
     “”பாம்புகள் என்றாலே ஒருவித பயம் உள்ளது. அதுதான் பாம்புகளைக் குறித்த பல்வேறு தவறான தகவல்களுக்கும் காரணமாகும். பயம், மூடநம்பிக்கை, குறைந்துவரும் வன வளம், வாழ்விடங்கள் குறைப்பு போன்றவை பாம்புகளின் அழிவுக்குக் காரணமாக அமைகின்றன.
     பாம்புகளுக்கு மனிதர்களைப்போல வெளிப்புற செவியில்லாமல் உட்புற செவி மட்டுமே உள்ளதால் அதிர்வுகளை மட்டுமே அவை உணரும். அவற்றிற்குக் காது கேட்காது. அதிர்வுகளுக்கு ஏற்ப நகரும். அதனால், இவை துரத்திச் சென்று மனிதர்களைக் கடிக்கும் என்பது கற்பனையானதே. அதேபோல, பாம்புக்கு மூளைத்திறன் குறைவு என்பதால் அவற்றால் சிந்திக்க முடியாது. எனவே, பாம்புக்கு முட்டையும், பாலும் வைத்தால் அதை அவை குடித்து விடுகின்றன என்பது நம்பிக்கைதானே தவிர, உண்மையல்ல.
     அதைப்போலவே கொம்பேறி மூக்கன் பாம்பு தான் கடித்து இறந்தவரை மயானத்தில் எரிக்கும் வரை அங்குள்ள மரத்தில் மறைந்திருந்து பார்க்கும் என கூறப்படுவதும் தவறானதாகும். கொம்பேறி மூக்கனுக்கு விஷத்தன்மையே கிடையாது. தவறான தகவல்களால்தான் பாம்புகளைக் குறித்து ஒரு பீதி நமக்குள் உள்ளது.
     பாம்புகள் உழவனின் நண்பர்களாவர். சராசரியாக ஒரு ஜோடி எலி ஆண்டுக்கு தனது குடும்பத்தில் 880 குட்டிகள் உருவாக காரணமாக அமைகின்றது. இவ்வாறு நூற்றுக்கண்க்கில் பெருகும் எலிகளை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது. பாம்புகளால் மட்டுமே அவற்றை கட்டுப்படுத்த முடியுமென்பதால் தட்டுப்பாடில்லாமல் உணவு தானியங்கள் கிடைப்பதற்கு பாம்புகள் அவசியமானவையாகும்.
     குளிர் ரத்த பிராணியான பாம்புகளால் நீலகிரி போன்ற குளிரான பகுதிகளில் இருக்க முடியாது என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நீலகிரி மலைப்பகுதியிலும் பல்வேறு வகையான பாம்புகள் வசிக்கத் தொடங்கி
     யுள்ளன.
     இந்தியாவில் 283 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும். இவற்றில் 4 வகையான பாம்புகள் மனிதர்களின் வசிப்பிடங்களைச் சுற்றி மட்டும் வாழும் தன்மை கொண்டவை” என்றார்.

     இக்கருத்தரங்கில் பங்கேற்ற சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் பூபதி கூறியதாவது:

     “”பருவநிலை மாற்றங்களால் பாம்புகளில் பல வகை ஏற்கெனவே அழிந்துவிட்டன. ஒருசில வகையான பாம்புகளும் அழிவின் விளிம்பில் உள்ளன.

     உலகிலுள்ள பாம்புகளில் 10 சத பாம்புகள் இந்தியாவில்தான் உள்ளன. தரையில் உள்ள பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாக இருந்தாலும், கடல் பாம்புகள் விஷத்தன்மையற்றவையாகும். பொதுவாக அவை யாரையும் கடிப்பதுமில்லை. விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு கடித்தால் கண்டிப்பாக மரணம் என்பதும் தவறான தகவலாகும். பயத்தின் காரணமாகவே மனநிலை பாதிக்கப்பட்டு உயிரிழப்பிற்கு ஏதுவாகிறது.

     இந்தியாவில் சுனாமி ஏற்பட்ட பின்னர் நிகோபார் தீவுகள் ஒன்றரை அடி உயரம் கீழேயும், அந்தமான் ஒன்றரை அடி உயரம் உயர்ந்துவிட்டதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற மாற்றங்களும் பாம்புகளின் வாழ்விடங்களை அழிப்பதோடு அவற்றின் இடப்பெயர்ச்சிக்கும் ஏதுவாகிறது.
     எனவே, பாம்புகளைக் குறித்த பீதியை போக்கிக் கொள்வதோடு அவற்றைக் குறித்தும் தெரிந்து கொண்டால் பாம்புகளை நம்மால் காப்பாற்ற முடியும். இயற்கையின் சக்கரத்தில் பாம்புகளுக்கும் பிரதான இடமுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது” என்றார்.

     இந்த கருத்தரங்கைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வெளியேற்றுவதைக் குறித்து வனத்துறையினருக்கான பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது.

    பாம்புகள் பற்றி திரு கல்பட்டு நடராஜன் ஐயா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய மிக சுவாரசியமான தொடரினை அவரது அனுமதியின் பேரில் இங்கு அளிக்கிறேன்.  மிக்க நன்றி ஐயா.  அதன் முதல் பகுதி இங்கே:
    பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது, “கருடா சௌக்யமா? என்று.
    “அவரவர் இடத்தில் இருந்தால் எல்லோரும் சௌக்யமே”, என்றே கருடன் சொன்னது.
    சரி பாம்பின் இடம், அதான் வீடு, எது என்றால் புற்றென்றுதான் எல்லோரும் சொல்வார்கள்.  “அது என்ன பாம்பு தானாகக் கட்டிகொண்ட வீடா? அல்லது வாடகை வீடா?” என்றால் இரண்டும் இல்லை.  பலவந்தமாக ஆக்கிரமித்துக் கொண்ட வீடு அது.
    புற்று என்பது கறையான்கள தாம் வாழக் கட்டிக் கொண்ட வீடு.  அந்தப் புற்றுகளுக் குள்ளோ அல்லது எலி வளைகளுக் குள்ளோ புகும் பாம்புகள் வீட்டு சொந்தக் காரர்களைத் தன் உணவாக்கிக் கொண்டு மிக மிக சௌகரியமாகக் குடும்பம் நடத்தும்.
    வீட்டைக் கட்டியது நாங்கள். குடி வந்தவரோ கூசாமல் தின்கிறார் எங்களை என்கின்றனவோ இந்தக் கரையான்கள்?
    கரையான்
    எலிகளின் கதையும் இதேதான்.  பாம்புகளுக்கு மிகவும் பிடித்த உணவு எலிகளும் தவளைகளும்.
    நம் நாட்டில் உற்பத்தியாகும் தானியங்களில் சுமார் 20 முதல் 25 சத விகித வரையான தானியங்களைத் தின்று தீர்ப்பது எலிகள் என்கின்றனர் நிபுணர்கள்.  அந்த எலிகளின் வளைகளைத் தங்கள் வீடுகளாக்கிக் கொண்டு, எலிகளை உணவாக்கிக் கொண்டு, அவற்றின் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது பாம்புகள்.  இப்போது சொல்லுங்கள் பாம்புகள் நம் நண்பர்களா இல்லையா என்று.
    பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள்.  ஆனால் எல்லாப் பாம்புகளுமே உயிர் கொல்லும் விஷம் கொண்டவை அல்ல.  ஆனால் எவை கடித்தால் உயிருக்கு ஆபத்து, எவை கடித்தால் ஆபத்து இல்லை என்று எப்படித் தெரியும்?  அதனால் தான் பாம்பைக் கண்டவுடன் அதை அடித்துக் கொன்று விடுகிறார்கள் பலரும்.
    பாம்பு தானாகச் சென்று யாரையும் கடிப்பதில்லை.  நாம் அதைத் துன்புறுத்தினாலோ அல்லது தப்பிப் போய் மிதித்து விட்டாலோ தான் அது நம்மைக் கடிக்கும்.
    அன்டார்டிகா கண்டத்தைத் தவிற மற்ற எல்லாக் கண்டங்களிலும் பாம்புகள் உள்ளன. பாம்புகளில் கிட்டத்தட்ட சுமார் 3000 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றுள் சுமார் 534 வகைப் பாம்புகளே மிகக் கொடிய விஷம் கொண்டவை.
    இந்த மூவாயிரம் வகையான பாம்புகளில் பத்தே சென்டி மீடர் நீளத்தில் மண் புழு போன்றிருக்கும் செய்யான் பாம்பிலிருந்து (Leptotyphlops carlae)  அனகொண்டா என்ற 7.5 மீடர் பாம்பு, மற்றும் 9.0 மீடர் நீளமுள்ள மலைப் பாம்பு வரை உள்ளன.  பல ஆண்டுகளுக்கு முன் 15 மீடர் நீளம் வரை உள்ள பாம்புகள் (Titanoboa cerrejonensis) கூட இருந்தனவாம்.
    செய்யான் பாம்பு
    செய்யான் பாம்பிற்குக் கண் பார்வை கிடையாதாம்.
    இந்த செய்யான் பாம்பு மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான பார்படாஸில் மட்டுமே காணப்படுகிறது எனச் சொல்கின்றனர் பாம்பு பற்றி அறிந்தோர்.  ஆனால் இந்தப் பாம்பை நான் பல முறை பார்த்திருக்கிறேன் நம் ஊர்களிலும்.  இது எந்த அளவுக்கு நாம் நம்மைச் சுற்றி உள்ளவை பற்றிக் குறிப்புகள் எடுத்து வைக்கிறோம்,  அவற்றைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்கிறோம் என்பதைக் காட்டுகிறது.
    மிகச் சிறிய பாம்பினைப் பார்த்தோம்.  மிகப் பெரிய பாம்பைப் பார்க்க வேண்டாம்?  அதுதான் மலைப் பாம்பு,  சுமார் 9 மீடர் நீளம் வரை வளரக் கூடியது.
    மலைப் பாம்பு
    மலைப் பாம்பின் உணவு பறவைகள் மற்றும் சிறிய மிருகங்கள் ஆகும்.  வாயினால் கவ்விப் பிடித்த இரையினை தன் உடலால் சுற்றி வளைத்துப் பின்னர் தனது தசைகளை இறுக்கிக் கொண்டே போய் அவற்றின் உயிரை எடுத்து விடும்.  அந்த இறுக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும்.
    மலைப்பாம்பு அதன் உயிருக்கு ஆபத்து என்று வந்தாலொழிய தரையில் மெதுவாகத்தான் ஊர்ந்து செல்லும்.  மரத்தின் மீதும் ஏறும்.  தண்ணீரில் நன்றாக நீந்திச் செல்லும்.
    வயிறு புடைக்க உண்ட பின் சில நாட்கள் பட்டினி கிடக்கும் உண்ட இரையின் உடல் அளவு பொருத்து.  ஒரு பாம்பு இரண்டு வருடம் வரை பட்டினி கிடந்ததாகக் கூடக் குறிப்பில் உள்ளது.
    கட்டுரை என எழுதும்போது “நான்” வருவது தவிர்க்கப் பட வேண்டிய ஒன்று.  ஆனால் இது படித்துப் பட்டம் பெறுவதற்காக எழுதும் கட்டுரை அல்ல.  பாம்பைப் பற்றி ஒரு நிபுணர் எழுதப் போகும் கட்டுரையும் அல்ல.  பாம்பைப் பற்றி ஒரு பாமரன் எழுதப் போகும் கட்டுரை.  ஆகவே நடுவில் “நான்” நுழைவதை நீங்கள் மன்னித்துக் கொள்ளத் தான் வேண்டும்.
    திருச்சியில் சிங்காரத்தோப்பு என்று ஒரு இடம்.  அதில் உள்ள வீடுகள் எல்லாம் கிருஸ்துவர்களாக மாறிய முன்னாள் அந்தணர்கள் வீடுகள்.  அவர்கள் வீட்டில் பேசுவது  அக்ரகாரத் தமிழில்.  ஆடிக்கழைப்பது, தீபாவளி கொண்டாடுவது, தாலி கட்டிக் கொள்வது என எல்லாம் உண்டு.  ஆனால் பொட்டு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.  சர்ச்சுக்குப் போவார்கள். அவர்களில் ஒருவர் கலஞ்சென்ற தம்பு ஐயர்.
    தம்பு ஐயர் ஒரு பிராணிகள் விரும்பி.  அவர் வீட்டில் ஒரு நரி, ஒரு குரங்கு, ஒரு முதலை, கீரிப் பிள்ளைகள், சில முயல்கள், சில பாம்புகள், கிளி, காடை, கௌதாரி என்று பறவைகள் என ஒரு குட்டி மிருகச் சாலையே  வைத்திருந்தார். குறவர்கள் அவரது நண்பர்கள்.  தங்கு தடையின்றி விலங்குகளுக்கு ஆகாரம் வர வேண்டுமே அதற்காகத்தான்.
    அவரது பொக்கிஷங்களை பார்த்துக் கொண்டு வரும்பு போது பாம்புகள் வைத்திருக்கும் இடத்திற்கு வந்தேன்.  “பாம்பிற்கு என்ன உணவளிப்பீர்கள்? எப்படி அளிப்பீர்கள்?” என்று நான் கேட்க அவர், “இதோ பார்”, எனச் சொல்லி பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூண்டிலிருந்து ஒரு கௌதாரியை எடுத்து பாம்பு ஒன்று இருந்த கண்ணாடிப் பெட்டிக்குள் போட்டர்.  அவர் போட்ட அதே கணம் மின்னல் வேகத்தில் மேலெழும்பி அந்தப் பாம்பு கௌதாரியைக் கவ்விப் பிடித்தது.  பின் தன் உடலால் கௌதாரியைச் சுற்றிக் கொண்டு அதனை இறுக்க ஆரம்பித்தது.  ஓரிரு நிமிஷங்களுக்குள் கௌதாரியின் மடங்கி இருந்த கால்களும் விரல்களும் நீண்டு விரிந்தன.  அதன் உயிர் பிரிந்தது.  ஆனால் பாம்பு அதன் பிடியை விடவில்லை.  சில மணி நேரங்கள் வரை அப்படியே இறுக்கிப் பிடித்து வைத்திருக்குமாம் அது..  அவரை ஏன் நான் பாம்பின் இரை பற்றிக் கேட்டடேன் என வருந்தினேன்.
    பின் அவர் வேறு ஒரு கண்ணாடித் தொட்டியில் இருந்த ஒரு குட்டி மலைப் பாம்பின் முதுகில் ரெண்டு தட்டுத் தட்டிக் கையில் எடுத்து அதை என் முன் கையில் வைத்தார்.  அது மெல்ல நகர்ந்து என் கையைச் சுற்றி கொண்டது.  பின் மெதுவாக என் கையை இறுக்குவதை உண்ர்ந்தேன்.  சில வினாடிகளில் அதன் இறுக்கம் அதிகமாகிக் கொண்டே போனது.  என் கையில் ரத்த ஒட்டம் நின்று போனதோ என்னவோ விரல்கள் மறத்துப் போக ஆரம்பித்தன.  நான், “அதை எடுத்து விடுங்கள்”, எனக் கத்தினேன்.  “நீயே எடு” என்றார்.  நான் வாலைப் பிடித்து எடுக்கப் போனேன்.  தம்பு ஐயர் என்னைத் தடுத்து நிறுத்தி முதலில் அதன் முதுகில் மெதுவாக ரெண்டு தட்டுத் தட்டி விட்டு எடு.  இல்லை என்றால் அது உன்னை கடிக்கலாம்.  பின அதன் வாய்க்குள் இருந்து உன் கையை எடுப்பது கடினம்”, என்றார்.   அவர் சொன்னபடி செய்து மெல்ல அதன் வாலைப் பிடித்து சுற்றிச் சுற்றி பாம்பை என் கையிலிருந்து கழற்றினேன்.  அன்று அனுபவத்தில் தெரிந்து கொண்டேன் பாம்பு எப்படி இறுக்கிப் பிடித்துத் தன் இரையைக் கொல்கிறது என்று.  உடும்புப் பிடி என்பார்களே அதை விடப் பல மடங்கு கெட்டியானது தான் பாம்புப் பிடி.
    அன்று இரவு உணவு உண்ணப் பிடிக்கவில்லை.  காரணம் ஓரு கொலை நடக்கத் துணை போன குற்ற உணர்வுதான்.

    சரி என் கதையை விட்டு பாம்பின் கதைக்கே திரும்புவோம்.
    நகர்தல் : பாம்பின் கால் பாம்பறியும் என்பர்.  ஏனெனில்  பிறர் கண்களுக்குத் தெரியும் படியான புறக் கால்கள் இல்லை பாம்பிற்கு.  அதன் ஒவ்வொரு செதிளுமே இரு கால்கள்தான்.  அதன் உடலில் சாட்டை போல் நீளமான முதுகெலும்பில் இருந்து முளைத்துள்ள விலா எலும்புகள் தசைகள் உதவி கொண்டு செதிள் களை இயக்க பாம்பு இடம் விட்டு இடம் நகர்கிறது. மரம் ஏறுகிறது.  நீந்துகிறது.
    மெதுவாகச் செல்லும் போதும், மணல் பாங்கான இடங்களில் செல்லும்போதும் வளைந்து வளைந்து செல்லும் பாம்பு வேகமாக ஓட நினைத்தால் நேர் கோட்டிலே வெகு வேகமாகப் பறக்கும், வானில் அல்ல தரையில்தான்.  அப்படி நேர் கோட்டில் போகும்போது அதன் முதுகில் அலைகளென எழும்பி இறங்கும் அசைவுகள் முன்னிருந்து பின் செல்வதைக் காணலாம்.
    நுகர்தல் :  பாம்பிற்கு மிக நல்ல நுகரும் சக்தி உண்டு.  எலி போன்ற தன் இரை சென்ற பாதையினைக் கண்டறிவது இந்த மிகத் துல்லியமான நுகர் சக்தியால் தான்.  ஆனால் நம்மைப் போல் நாசிகளால் நுகர்வதில்லை பாம்புகள்.  பின் எப்படி நுகர்கின்றன அவை?
    ஒவ்வொரு வினாடியும் தன் இரண்டாகப் பிளந்த நாக்கினை வெளியே நீட்டி இப்படியும் அப்படியுமாக பல திசையிலும் திருப்புகிறதே அது ஏன் தெரியுமா?  நுகர்வதற்காகத் தான்.
    ஒலி கேட்டல் :   “மகுடியின் இசையில் மயங்கியது நாகம்” என்கிறார்களே அது உண்மையா என்றால் இல்லை.  பிடாரனின் கை அசைவுகளை கண் வாங்காது பார்ப்பது, பிடாரன் நம்மைத் தாக்க வருகின்றானா அல்லது நாம் அவனைத் தாக்க வேண்டுமானால் அதற்குத் தக்க தருணம் எது என்ற சிந்தனையில்தான்.
    “இடியேருண்ட நாகம் போல்….” இது எந்த அளவு உண்மை?  உண்மை.  நூற்றுக்கு நூறு உண்மை.  பாம்புகளுக்கு இடியின் ஒலியைக் கேட்கவும் முடியும்.  மற்ற ஒலிகளையும் கேட்கவும் முடியும்.  ஆனால் அவ்வாறு கேட்பதற்கு  நம்மைப் போன்று புறச் செவிகள் கிடையாது.  அகச் செவிகள் உண்டு.  அந்த அகச் செவிகள் அதன் உடலில் உள்ள ஒவ்வொரு செதிளோடும் நரம்புகள் மூலம் இணைக்கப் பட்டிருக்கும்.   ஒலிகள் தரையில் உண்டாக்கும் அதிர்வுகளைச் செதிள்களின் மூலம் உணர்ந்து ஒலிகளைக் கேட்டறிகிறது.
    ஒளி காணல் :  பாம்பின் கண்களுக்கு இமைகள் கிடையாது.  அவை எப்போதுமே திறந்திருக்கும், தூங்கும் போதும் கூட.  தூங்கும் போது வெளிச்சம் இடையூறாக இருக்குமே? என்ன செய்ய?  அப்போது பாம்பு தன் கண்களில் உள்ள பாப்பாவை (Pupa) இடைவெளி இல்லாது இறுக்க மூடிக் கொள்ளும்.
    விஷம் :  “பாம்பிற்குப் பல்லில் விஷம்.  தேளுக்குக் கொடுக்கில் விஷம்.   அந்த ஆளுக்ககு உடம்பு பூரா விஷம்.”  இந்தக் கூற்றுகள் எவ்வளவு தூரம் உண்மை?  பின்னது இரண்டும் நூற்றுக்கு நூறு உணமையாய் இருக்கலாம்.  முன்னது ஐம்பது சத வீதம் உண்மை.  பாம்புக்குப் பல்லில் விஷம் இல்லை.  அது விஷத்தினை வைத்தியர் ஊசி கொண்டு மருந்து ஏற்றுவது போல் பல்லின் வழியாக நம்முள் செலுத்துகிறது.  விஷம் இருப்பது அண்ணத்தின் மேலாக உள்ள பையில்.
    http://encarta.msn.com/media_701681865_761578341_-1_1/snake_fangs.html
    கிலு கிலுப்பை எனத் தன் வாலினால் சல சல ஒலி எழுப்பும் பாம்பு அதன் விஷப் பற்கள் வெளியே தெரிய
    பாம்பு தன் இரு விஷமேற்றும் பற்களை விமான ஓட்டி தரையை விட்டு மேலே விமானம் எழும்பிய உடன் சக்கரங்களை உள்ளிழுத்துக் கொள்வது போல உள்ளிழுத்துக் கொள்ளவோ, மடக்கிக் கொள்ளவோ முடியும்.  அது மட்டுமல்ல. விமான ஓட்டி உள்ளிழுத்த சக்கரங்களைப் பலகைகள் வந்து மூடிக் கொள்வது போல தசைகள் பக்க வாட்டில் இருந்து உள் நோக்கி நகர்ந்து அப் பற்களை மூடிக் கொள்ளும்.
    பாம்பின் விஷம் பிறரைத் தாக்குவதற்காகவோ அதன் தற்காப்பிற்காகவோ அல்ல. அது தன் இரையினைக் கொல்வதற்காகவோ அல்லது மயக்கமுறச் செய்வதற்காகவோ அல்லது இரையினை எளிதாக ஜீரணிப்பதற்குத் தயாராக்கவோ தான்.
    தோலுரித்தல் :  தோலுரித்தல் என்றதும் சிலர் மணி பர்ஸ், இடுப்புக் கச்சை இவை செய்வதற்காகத் தோலை உரிக்கிறார்களே அப்படி என்று எண்ணி விடாதீர்கள்.  பாச்சை, வெட்டுக்கிளி, இடையான், தேள் போன்ற சில பூச்சிகள் வளர்ச்சிக்குத் தடையாக மாறும் கெட்டி அடைந்த தோலின் புறச் செல்களிலிருந்து சட்டையைக் கழற்றி எறிவது போல வளியே எறிகின்றனவே அது பற்றிதான் சொல்கிறேன் இங்கு.  பாம்பு அவ்வப் போது தன் சட்டையைக் கழற்றிப் போடும்.
    பாம்பு சட்டை உரிப்பது வளர்ச்சிக்காக அல்ல.   அதனைக் கடித்து
    சத்தினை உரிஞ்சும் பேன் போன்ற பூச்சிகளிடமிருந்தும், வேறு பல கிருமிகளிடமிருந்தும் விடுதலை பெறவும், கீரல்கள் மிகுந்த மற்றும் இறந்து போன வெளி செல்களை விட்டெறியவும் தான்.
    சட்டை உரிக்கும் நேரம் வந்தால் வெளிப் புறச் செல்களுக்கு உள்ளாக அண்மையில் இருக்கும் செல்கள் திரவமாக மாறி வழுக்கலை அளிக்கிறது.  சட்டையின் வால் பக்கத்தை சொறசொறப்பான குச்சிகளில் ஒட்டச் செய்து அதிலிருந்து தன் உடலை மெல்ல வெளியே இழுத்துக் கொள்கிறது.
    நாக ரத்தினம் :  “வயது முதிர்ந்த பாம்புக்குக் கண் சரியாகத் தெரியாது.  அதன் தலையில் உள்ள விஷம் கெட்டி அடைந்து ரத்தினமாக மாறும்.  அதனை இரவில் பாம்பு கக்கிவிட்டு அந்த ரத்தினம் வீசும் ஒளியில் தன் வேலைகளைச் செய்யும்.”  இது உண்மையா, கட்டுக் கதையா?  பின்னது என்றே நான் சொல்வேன்.
    தொடரும்…
      
    Share
  • இவன்

    – கவிஜி

    இவன் - ஒரு பக்க கதை- கவிஜி

    அவன், அந்த வீட்டின் பின்புற சுவற்றில் ஏறி உள்ளே குதித்தான்….

    மனக் கண்ணில் ஒருமுறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டான்…

    இதே வீடு தான்…

    குறைஞ்ச பட்சம் 200 சவரன் நகை இருக்கும்….வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே, திருப்பதிக்கு சாமி கும்பிட சென்றிருக்கிறார்கள்.. நம்பகமான இடத்தில் இருந்துதான் செய்தி கிடைத்திருக்கிறது… முதுகில் தொங்கிய பேக்கை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டான்.. ஏனோ புன்னகை வந்தது,…

    சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்…அந்த வீட்டை சுற்றி யாரும் இல்லை… பின் கதவை சில பல தொழில் நுட்பத்தோடு திறந்து, உள்ளே சென்றான்…. ஒரு பூனையைப் போல அவன் பாதங்கள் மிதந்தன… மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டே நகை இருக்கும் அறைக்குள் சென்றான்…. நேரத்தைப் பார்த்தான்..

    மணி நள்ளிரவு 2.30….

    எல்லாம் சரியாக நடக்க வேண்டும்…. போட்ட திட்டப்படி இம்மி பிசகாமல் அத்தனையும் நடக்க வேண்டும்….. மனதை ஒரு நிலைப் படுத்தினான்…. அறையில் ஓரமாய் இருந்த இன்னொரு பீரோவை ஒட்டி ஒரு ஜன்னல் இருந்தது…. மெல்ல ஜன்னலை திறந்து வெளியே பார்த்தான்… மஞ்சள் வெளிச்சத்தில் வீதி உறங்கிக் கொண்டிருந்தது…

    பேக்கை திறந்து வைத்துக் கொண்டான்…. வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்…. இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிய வேண்டும்… அறை முழுவதும் புழுக்கத்தால் ஒரு வித சூட்டுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தது….

    அவன், அனுமானத்தின் படி….அந்த இரு திருடர்களும் வீட்டுக்குள் நுழைந்து பீரோவுக்கு அருகில் வர..பேக்கில் இருந்த சைலன்சர் போட்ட துப்பாக்கி கொண்டு பட் பட் என்று சுட்டு விட்டு வந்த வழியே ஓடத் துவங்கினான்….

    நாளை இரவு கணுவாய் காலனிக்கு போக வேண்டும்… என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்த அவன்… இவன் என்ற ஆபரேசனில் நகரில் எங்கெல்லாம் கொள்ளை நடக்க இருக்கிறதோ அங்கெல்லாம் முன் கூட்டியே சென்று கொள்ளைக்காரர்களை போட்டுத் தள்ளும் ஸ்பெசல் ஆபீசர்….

    இவன்…

    கவிஜி

    Share
  • ஆத்மநாதம்

     — நிர்மலா ராகவன்.

    “பின்னிட்டீங்க!”

    “ஒங்களாலேயே இன்னொரு தடவை இவ்வளவு அருமையா பாட முடியுமாங்கறது சந்தேகம்தான்!”  மேடையைவிட்டு இறங்கிய காமவர்த்தனியின் கையை இழுக்காத குறையாகப்  பிடித்துக் குலுக்கினார்கள் பலரும். அந்த ரசிகர்களின் முகத்திலிருந்தபரவசம் அவளையும் தொற்றிக்கொண்டது.

    “போதும். போதை தலைக்கேறிடப்போகுது”. யாரும் கவனிக்காத நிலையில் பக்கத்தில் நின்றிருந்த   கணவன் அடிக்குரலில் சீறினான். “வீடுன்னு ஒண்ணு இருக்கிறது நெனப்பிருக்கா, இல்லியா?”

    அவள் தடுமாறிப்போனாள். அவன் பேசியது யார் காதிலாவது விழுந்திருக்கப்போகிறதே என்ற பதைப்பு உண்டாயிற்று. அங்கிருந்து எங்காவது ஓடிவிட வேண்டும்போல உத்வேகம் எழ, “பாத்ரூம் எங்க இருக்கு?” என்று கேட்டு வைத்தாள்.

    உள்ளே இருட்டாக இருந்தது.

    “இதோ ஸ்விட்ச்!” என்றது ஒரு குரல். ஆண் குரல்.

    பகீரென்றது அப்பாடகிக்கு. “தாங்க்ஸ்” என்றபடி கையைச் சுவற்றின் மேல் நீட்ட, அவளுடைய கரத்தைப் பற்றியது அந்த ஆணின் வலுவான கை. அக்கையை  உதறிவிட்டு வெளியே ஓடினாள்.

    “போகலாங்க,” என்று படபடத்த மனைவியை அதிசயமாகப் பார்த்தான் கணவன். “சீக்கிரமா வந்துட்டே!” என்றான் போகிற வழியில.

    அப்போதுதான் அவள் அந்தத் தவறு செய்தாள்: “அதை ஏன் கேக்கறீங்க!” என்று அப்பாவித்தனமாக ஆரம்பித்து, எவனோ அந்த இருட்டறையில் தன் கையைப் பிடித்த பயங்கர அனுபவத்தைப் படபடப்புடன் விவரித்தாள். தனது கசப்பான அனுபவத்தை அவன்எப்படி எதிர்கொள்வான் என்று அவள் யோசிக்கவில்லை.  ஆனால், கண்டிப்பாக பழியை அவள்மேலேயே திருப்புவான் என்றுமட்டும் அவள் நினைத்தும் பார்க்கவில்லை.

    “அவன்மேல என்னடி தப்பு? நாலு பேர் பாக்கணும்னுதானே இப்படிப் பளபளன்னு டிரெஸ் செய்துக்கிட்டு, மேடை ஏறிப் பாடறீங்க ஒன்மாதிரி பொம்பளைங்க எல்லாம்!”  கணவனது ஒவ்வொரு வார்த்தையிலும் வன்மம் தொக்கி நின்றது. இந்தஅயோக்கியன்களின் பேச்சில் மயங்கி, எவனையாவது இழுத்துக்கொண்டு ஓடிவிட்டால் என்னாவது என்ற இனம்புரியாத அச்சம் அவனை அப்படிப் பேசவைத்தது. அவனுடைய தங்கை இப்படித்தானே கண்டவனோடு ஓடிப்போய், குடும்பத்துக்கு மாறாதஅவமானத்தை உண்டாக்கி இருந்தாள்! அது இந்த ஜன்மத்தில் மறக்கக்கூடியதா!

    இவளை இன்றோடு அடக்கி வைத்துவிட வேண்டும் என்று உறுதி செய்துகொண்டவனைப்போல், “நீ ஆசைப்பட்ட மாதிரியே, அதான் பத்து ஆம்பளைங்க பல்லை இளிச்சுக்கிட்டு ஒன் பின்னாலேயே வந்தாங்களே! பின்னே எதுக்கு என் முன்னாலபயந்தவமாதிரி நடிக்கிறே?” என்று தாக்கினான். தொடர்ந்து,  “ஆரம்பத்தில இப்படித்தான் கையைப் பிடிப்பான், அப்புறம், புடவைத் தலைப்பைப் பிடிச்சு இழுத்து.. !” என்று அடுக்கிக்கொண்டே போனான்.

    அவளுக்குப் பயம் வந்தது — தன்மேலேயே.

    குழப்பம் ஏற்பட்டது — கணவனது போக்கால்.

    ஏன் இவர் அப்பாமாதிரி இல்லை?

    அவளுடைய தந்தைக்குப் பாட்டுதான் உயிர். முப்பது மைல் சுற்றுவட்டாரத்தில் எங்கு சங்கீதக் கச்சேரி நடந்தாலும் தப்பாமல் போய்க் கேட்டு, ரசித்துவிட்டு வருவார். அருகிலிருக்கும் இடங்களுக்கு நான்கு வயதுக் குழந்தையாக இருந்த மகளையும்தோள்மீது படுக்கவைத்து ‘ஆட்டுக்குட்டி’ தூக்கிப்போவார்.

    அதனால்தானே, “நானும் பாட்டு கத்துக்கறேம்பா!” என்று அவள் கொஞ்சலாகக் கேட்டபோது, அவளை இசையில் ஈடுபடுத்தினார், “இன்னொருத்தர் வீட்டுக்குப் போகப்போற பொண்ணுக்கு எதுக்கு பாட்டும், கூத்தும்?” என்று அம்மா ஆட்சேபித்ததையும்பொருட்படுத்தாது!

    அப்போது குழந்தைத்தனமாக அம்மாமேல் ஆத்திரப்பட்டோமே, தன் ஆசைக்கு முட்டுக்கட்டை போடப்பார்க்கிறார்களே என்று!

    இவளது குற்றச்சாட்டைக் கவனமாகக் கேட்ட அம்மா,  “இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்!” என்று நொடித்தாள். “என்னதான் இருந்தாலும், தான் தொட்டுத் தாலிகட்டின பொண்டாட்டியை நாலு ஆம்பளைங்க தொட்டா, சூடு சொரணை இருக்கற எவன்சும்மா இருப்பான்?” என்று மாப்பிள்ளைக்கு வக்காலத்து வாங்கினாள்.

    ஏதோ கீழ்த்தரமான இச்சையுடன் தொட்டுப் பார்க்கவா எல்லாரும் கைகுலுக்கினார்கள்? அவளால் அதை ஏற்க முடியவில்லை. ஆனால், யாரும் அறியாது, அவள் கரத்தைப் பற்ற இருளில் ஒளிந்திருக்கவில்லை ஒரு கயவன்? குழப்பம் அதிகரித்தது.

    அப்பாவாவது தன் பக்கம் பேசுவார் என்ற நம்பிக்கையுடன், பெண் அவர்  முகத்தைப் பார்த்தாள். அவரோ,  தான் ஏதோ தவறு செய்துவிட்ட பாவனையில் குனிந்த தலையை நிமிர்த்தாது அமர்ந்திருந்தார்.

    வெகுநேரம் அங்கு கனத்த  மௌனம் நிலவியது.

    சாப்பிட ஆரம்பிக்கையில், ஒரு கவளம் சோற்றைக் கையில் எடுத்தவர், “இப்படியெல்லாம் கஷ்டப்படறதுக்கு, பாடாமலேயே இருக்கலாம்,” என்றார் ஆழ்ந்த வருத்தத்துடன்.

    “ஒனக்குப் பாட்டே கத்துக் குடுத்திருக்க வேண்டாம்!” என்று ஒத்துப் பாடினாள் அம்மா.

    பெற்றோர் இருவரும் ஒருசேரக் கூறியதை அப்படியே ஏற்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவளுக்கு.

    அப்போது அவளுக்குப் புரியவில்லை, இசை அவளுடைய உயிர்மூச்சிலேயே கலந்திருந்தது என்பது.

    பாட்டு கற்றுக்கொள்ள ஆரம்பித்து இரண்டு, மூன்று வருடங்களில் கீர்த்தனை பயில ஆரம்பித்தபோது, “உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்மா!” என்று புல்லரித்துப்போய் ஆசி கூறினார் அவளுடைய ஆசிரியர்.

    அவர் சொற்படி,  தினமும் விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து, முந்தைய நாளிரவு தாமிரக் குவளையில் பிடித்து வைத்திருந்த நீரைக் குடித்து குரல் தெளிவாக,  ஸ-ரி-க-ம-ப-த-நி-ஸ என்று சரளி வரிசையில் தொடங்கி, ஜண்டை வரிசை, அலங்காரம்முதலான ஆரம்பப் பாடங்களில் இருபது நிமிடங்களுக்குக் குறையாமல் அகார சாதகம் பண்ணிவிட்டு, ஆதி தாளம் அல்லது அட தாளத்தில் அமைந்த ஏதாவது ஒரு வர்ணத்தை மூன்று காலங்களில் பாடி குரல் வளத்தைப் பெருக்கிக்கொள்ள என்னபாடுபட்டிருப்பாள்!

    அந்த நிசப்தமான வேளையில், தான் மட்டும் விழித்துக்கொண்டு அதிசயமாக ஏதேதோ செய்வது பயமாக இருக்க, ஒவ்வொரு மூச்சு எடுத்து விடும்போதும், தன்னெதிரில் உள்ள பிள்ளையாருக்கு வாசமிகுந்த மல்லிகை மலரொன்றினைச் சாற்றுவதுபோல்கற்பனை செய்துகொள்ள, அதுவே தியானமாகி, மனத்திற்குப் பெரும் இதத்தைக் கொடுக்கவில்லை?

    கச்சேரி இருக்கும் நாட்களில் வேறு விதமான கட்டுப்பாடு! இரண்டு நாட்களுக்கு முன்னரே மௌன விரதம்தான், பாடும்போது எங்காவது தொண்டை கரகரப்பாக இருந்துவிடப் போகிறதே என்று. எண்ணையில் பொரித்த எதையும் சாப்பிட மாட்டாள். சுடுநீரில்ஒரு சொட்டு நெய்யைக் கலந்து அடிக்கடி குடிப்பாள், குரல் பிசிறில்லாமல், இனிமையாக இருக்க வேண்டுமென்று. தினமும் இரவில் சுண்டக் காய்ச்சிய பால் — ஒரு ஸ்பூன் தேன் கலந்து.

    “கச்சேரிக்கு போறதுக்கு முன்னால, வயிறு நிரம்ப சாப்பிடாதே. நான் ஒரு தடவை அப்படிப்போய், மூச்சுப்பிடிச்சுப் பாட முடியாம  திணறிட்டேன். அதுவே, வயிறு காலியா இருந்தாலும் கஷ்டம்தான்! குரலே எழும்பாது! கருமிளகு, ஜீரகம், பனங்கல்கண்டு –இதையெல்லாம் பொடிச்சுப்போட்டு, ரெண்டு லோட்டா ஜலத்தைக் காய்ச்சி, ஃபிளாஸ்கிலே மேடைக்கு எடுத்துண்டு போக மறந்துடாதே!”

    குருவின் பற்பல அறிவுரைகளையும்  தெய்வ வாக்காக ஏற்று, அப்படியே கடைப்பிடித்துதான் இவ்வளவு தூரம் முன்னுக்கு வந்திருக்கிறாள். அதுவே வாழ்க்கை முறையாகிவிட்டிருந்தது. கணவருக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காகஎல்லாவற்றையும் தொலைத்துவிட்டு நிற்பது பெரிய வேதனையாக இருந்தது.

    ‘வெளியில்தானே பாடக்கூடாது? சாமிக்கு முன்னால நாலு பாட்டு பாடினா என்ன!’ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு, ஒரு நாள் சந்தியா காலத்தில், குத்துவிளக்கு ஏற்றிவிட்டுப் பாடத் தொடங்கினாள். போதிய பயிற்சி இல்லாததாலோ, மனம் ஒரு நிலைப்படாததாலோ, குரல் ஒத்துழைக்க மறுத்தது. ‘பாடப் பாட ராகம், மூட மூட ரோகம்!’ என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்! துக்கமாக இருந்தது.

    இவள் குரல் கேட்டதுமே பூஜை அறைக்குள் எட்டிப் பார்த்த கணவன் கனகோபத்துடன், “ஆரம்பிச்சுட்டியா?” என்று இரைந்தபடி   வெளிநடப்பு செய்தபோது, பயம் அதிகரித்தது. அவன் வீடு திரும்பாமல், அப்படியே எங்காவது போய்விட்டால்?

    சுருதிப்பெட்டியை ‘கண்டா முண்டா’ சாமான்களுடன், ஸ்டோர் அறையின் ஒரு மூலையில் கொண்டு வைத்தாள். அடிக்கடி கண்ணில் பட்டால்தானே துயரம்!

    சொல்லி வைத்தாற்போல், மறுநாள் ஒருவர் அவளைத் தேடி வந்தார்.

    “எங்க சபாவிலே மும்மூர்த்தி விழா நடத்தறோம்மா. நீங்க வந்து தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி — இவங்க பாடின பாட்டை ஒரு  மணி நேரம் பாடணும். ஒங்களுக்கு நல்ல சிட்சை, பாடாந்திரம் எல்லாம் இருக்கு. சின்ன வயசு வேறயா!நல்லா மூச்சுப்பிடிச்சுப் பாடறீங்க. ஒங்க குரல்  இருக்கே– என்னத்தைச் சொல்றது, போங்க! போன ஜன்மத்தில சுவாமிக்குத் தேன் அபிஷேகம் பண்ணி இருப்பீங்க!” அவர் புகழப் புகழ, அவளுக்குப் பயம் வந்தது.

    கச்சேரிக்குமுன் ஒருவர். முடிந்தவுடன் ஐம்பது பேரா!

    ஒரு பெரிய மூச்சை உள்ளுக்கிழுத்துக்கொண்டு, “இப்போ சௌகரியப்படாதுங்க,” என்று அந்த சமாசாரத்துக்கு ஒரு முடிவு கட்டினாள்.

    சௌகரியமோ, இல்லையோ, பாடவேண்டிய அவசியம் வந்தது.

    இசைவழி தான் தெய்வங்களை ஆராதிப்பதைத் தடுத்த கணவர்மீது கோபங்கொண்டே அவர்கள் அவரைத் தன்னிடமிருந்து விலக்கி எடுத்துக்கொண்டுவிட்டார்கள் என்று தோன்றியது அவளுக்கு. அவளுடைய பெயரைக்கூட அல்லவா பழித்தான்!

    “இது என்ன இப்படி ஒரு பேரு வெச்சிருக்காங்க ஒங்க வீட்டிலே? காமவர்த்தனியாம் காமவர்த்தனி!”

    பள்ளிக்கூடத்தில் அவள் படித்தபோது, தேவி, மாலா, மகேஸ் என்று எல்லாப் பெயர்களிலும் மூன்று, நான்குபேர் இருந்தார்கள். ஆனால், இவள் பெயர் மட்டும் யாரும் கேள்விப்படாததாக இருந்தது. இப்போது கணவனும் அதைப்பற்றிக் கேட்கிறார்! உற்சாகமாக, “அது ஒரு ராகத்தோட பேருங்க! பந்துவராளின்னுகூட சொல்வாங்களே!” என்றாள்.

    ‘காமவர்த்தனி ராகம் இருக்கே, இது ஆயிரத்து இருநூறு வருஷங்களுக்கு முன்னேயே இருந்திருக்கு, ‘ராமக்ரிய’ங்கிற பேரில.  தாய் ராகமானதால, ஏழு ஸ்வரங்களும் இதில இருக்கு! கச்சேரி ஆரம்பத்தில பாடினா, கச்சேரி களை கட்டும்’. என்றோ தந்தைதன்னிடம் கூறியதை அட்சரம் பிசகாது கணவரிடம் தெரிவித்தாள். ஆனால் அவளுடைய பெருமையில் பங்குகொள்ளும் மனநிலையில் அவன் இருக்கவில்லை.

    “ஒன்னோட புத்திசாலித்தனத்தை எங்கிட்டயே காட்டறியா! நீ காமத்தில எப்படிங்கறது என் ஒருத்தனுக்கு மட்டும் தெரிஞ்சாப்போதும்,” என்று அவன் விகாரமாகச் சிரித்தபோது அவளுக்கு உடலெல்லாம் பற்றி எரிவது போலிருந்தது.

    பதினைந்து வயதாக இருந்தபோது, “காமம்னா என்ன அர்த்தம்பா?” என்று கேட்டதற்கு, “காமம்னா ஆசை. அது எந்த ஆசையா இருந்தாலும் சரி. ஆனா,  ஆண்-பெண் உடல் கவர்ச்சிக்கு மட்டும்னு பயன்படுத்தி, அதைக் கெட்ட  வார்த்தைமாதிரி ஆக்கிட்டாங்கஇந்தக் கதை,  கிதை எல்லாம் எழுதறவங்க!” என்று சொன்னார்.  குரல் அடித்தொண்டையிலிருந்து வர, அவரது முகம் இறுகி இருந்தது.

    அவளுக்கும் கோபம் வந்தது — தன்னுடைய அழகான பெயரை அசிங்கப்படுத்தியவர்கள்மேல்.

     singer2

    வாழ்க்கையே அலங்கோலமாக ஆகி விட்டபோதும் விதவைக்கோலம் பூணாது, எப்போதும்போல அலங்கரித்துக்கொண்டு, மீண்டும் கச்சேரி செய்யப்போனாள் காமவர்த்தனி.  தன்னை மறந்து பாடும்போது, அந்தந்த பாடல்களின் பொருளான தெய்வங்களேதனக்குள் ஐக்கியமாகிப் பாடுவதுபோல் நிறைவாக இருந்தது. கூடுமானவரை, ‘நான் ஒங்க ரசிகன்’ என்று சொல்லிக்கொண்டு அருகில் வந்து, தொட்டுத் தொட்டுப் பேசியவர்களைத் தவிர்த்தாள்.

    “வணக்கங்க! எனக்கு ஒங்க பாட்டு ரொம்பப் பிடிக்கும். அதுவும் இன்னிக்கு கரஹரப்ரியாவில ‘சக்கனிராஜ’ பாடினீங்களே! ஆகா! ‘ராஜ பாட்டை இருக்கும்போது, குறுக்குச் சந்திலே போவாங்களா?’ — இது பல்லவி. அனுபல்லவியிலே.. ‘பால் இருக்கையில்,யாராவது மதுவை நாடிப் போவாங்களா?’ அப்படின்னு தியாகராஜர் கேக்கறாரு. அற்புதங்க! என்னையே மறந்துட்டேன். விட்டிருந்தா, ரெகார்ட் பண்ணி, தினமும் கேட்டு ரசிச்சிருப்பேன்!”

    வழக்கமான ரசிகர் கும்பலில் அந்த இளைஞன் வித்தியாசமாக இருந்தான். அவள் வயதுதான் இருக்கும் அவனுக்கும்.

    பக்கத்திலிருப்பவரிடம், ‘இது என்ன ராகம்?’ என்று விசாரித்துத் தெரிந்துகொண்டுவிட்டு, ஒரு பாட்டுக்கும், இன்னொன்றுக்கும் இடையே கிடைத்த அவகாசத்தில், ‘காம்போதி என்னமா இருந்திச்சு!’ என்று முன்னாலிருப்பவரிடம் அளக்கும் சிலரின் பிரதிநிதிஇல்லை இவன். விஷயம் புரிந்து பேசுகிறான்.

    அவள் ஒருவித சுவாரசியத்துடன் அவனைப் பார்த்தாள். “பாடுவீங்களா?” என்று விசாரித்தாள்.

    “அதுக்கெல்லாம் குடுத்து வெச்சிருக்கணுங்க. நான் வெறும் பாத்ரூம் பாடகன்தான்”. அவன் உண்மையான வருத்தத்துடன் பேசுவதாகத்தான் தோன்றியது. “ஒங்களைமாதிரி யாராவது  தாளமும், சுருதியும்  இழைய, அர்த்தம் புரிஞ்சு, பாவத்தோட பாடினாரசிப்பேன்!”

    அடுத்தடுத்து அவளுடைய கச்சேரி எங்கு நடந்தாலும், முரளியும் தப்பாமல் வந்து கேட்டு, அக்குவேறு, ஆணிவேறாகப் பிரித்து விமரிசனம் செய்ய ஆரம்பித்தபோது, ‘இப்படி நமக்குப் பிடித்ததை இன்னொருவர் புரிந்துகொண்டு பேசினால், மனசுக்கு எவ்வளவுரம்மியமாக இருக்கிறது!’ என்று எண்ண ஆரம்பித்தாள்.

    ‘நமக்கு வாய்த்தவர் ஏன் இப்படி இல்லாமல் போனார்?’ என்ற ஏக்கம் காலங்கடந்து எழுந்தது.

    ‘எத்தனை நாளைக்கும்மா நீ இப்படி தனியாவே இருப்பே? எங்களுக்கு அப்புறம் ஒனக்குத் துணை வேண்டாமா?’ தந்தை அடிக்கடி அவள் மறுமணம் செய்துகொள்ளவேண்டிய அவசியத்தைப்பற்றி நாசூக்காகக் கேட்டது நினைவில் எழுந்து கிளர்ச்சியைஉண்டுபண்ணியது..

    இந்த முரளியைக் கல்யாணம் செய்துகொண்டால் என்ன? இருவருக்கும் இடையே பாலமாகப் பாட்டு இருக்கும், என்றென்றும்.

    ராகங்களின் அழகையும், பாடல்களின் அர்த்தங்களையும், அவைகளை இயற்றியவர்களின் பக்தியையும்  ஒத்த மனத்தோடு அசைபோடமுடிவது பெரும்பாக்கியம் என்று தோன்றியது. பரவசத்துடன் கண்ணை மூடிக்கொண்டாள். முரளியினுடைய பெண்மைகலந்த முகச்சாயலோ, ஆஜானுபாகுவான தோற்றமோ அதில் பிரதானமாகத் தெரியவில்லை.

    அவளுடைய எண்ணங்கள் அவன் மனத்திலும் எதிரொலித்து இருக்கவேண்டும்.  அடுத்துவந்த சந்திப்பில்,  “எனக்கு ஒங்ககிட்ட பிடிச்சது ஒங்க பாட்டு மட்டும் இல்லீங்க!” என்று அவசர அவசரமாகச் சொல்லிவிட்டு, ‘கோபித்துக்கொண்டுவிட்டாளோ!’ என்றபதைப்புடன் அவள் முகத்தைப் பார்த்தான் முரளி.

    அவள் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டாள்.

    “ஒங்க குரல், சங்கீத ஞானம், அடக்கம், பக்தி எல்லாமே பிடிச்சிருக்கு. ஒங்களைமாதிரி ஒரு பொண்ணுதான் என்னோட மனைவியா வரணும்னு எனக்கு ஆசை!” என்றான்.

    “என்னை மாதிரியா, இல்லே நானேவா?” என்று கேட்டாள் காமவர்த்தனி. பொங்கியெழுந்த உணர்ச்சிகளை அடக்க முயற்சித்ததில், குரல் பிசிறடித்தது.

    அவன் பூரிப்புடன் சிரித்தான். “நீங்க எப்படி எடுத்துக்குவீங்களோன்னுதான் சுத்தி வளைச்சுப் பேசினேன்!”

    “நான் பாடுவேன்கிறது மட்டும்தான் ஒங்களுக்குத் தெரியும். மத்த விஷயமெல்லாம்..!”

    “தேவை இல்லீங்க!” வன்மையாக மறுத்தான் முரளி. “இப்ப ஒங்க குரலைக் கேக்கறதுக்காக நாப்பது, அம்பது மைல் வரேன். ராத்திரி பகலா, எப்போ வேணுமானாலும் அதைக் கேட்டுக்கிட்டே இருக்கலாம்னு ஒரு நிலை வருமானா.., வாழ்க்கையில வேற என்னசுகம் வேணும், சொல்லுங்க!”

    அவளுக்கு அழுகை வந்தது. இவ்வளவு மனம்திறந்து பேசுகிறானே! தனக்குக் கொடுத்து வைக்கவில்லையோ!

    “என்னோட பூவையும், பொட்டையும் பார்த்து நீங்க ஏதோ தப்பா நினைச்சுட்டீங்க.  நான் விதவைன்னு தெரிஞ்சா, நாலுபேரு சுத்திச் சுத்தி வருவாங்கன்னு பயந்து, நான் போடற வேஷம் இது”.

    அவன் திகைப்பிலிருந்து மீளுமுன் அவள் அப்பால் அகன்றாள். கச்சேரியில் சிறப்பாகப் பாடிவிட்டோமென்ற பூரிப்பு இருந்த இடம் தெரியாது மறைய, அவள் மனம் கனத்திருந்தது.

    ஆனால், அடுத்த கச்சேரிக்கும் முரளி வந்தான்.

    அவளைப் பார்த்துச் சிரித்தான்.

    “ஒங்களுக்கு நல்ல துணையா இருப்பேன்னு நம்பறேன்,” என்றான். வாழ்க்கைத்துணையாக ஆனான்.

    அடுத்தடுத்து வந்த கச்சேரிகள் முடிந்ததுமே அவளுடைய இடுப்பைச்சுற்றித் தன் கரத்தை வளைத்துக்கொண்டு, உரிமையாக முரளி நடந்தது எந்த ஆணையும் மிரளவைக்கப் போதுமானதாக இருந்தது.

    அதையும் மீறி, “இன்னிக்கு ஒங்க பாட்டு அற்புதங்க, காமவர்த்தனி அம்மா. ஷண்முகப்ரியாவிலே, “சரவணபவ எனும் திருமந்திரம்தனை”ன்னு பாபநாசம் சிவனோட உருப்படி ஒண்ணு பாடினீங்களே, அப்படியே முருகன் சந்நிதியையே கண்ணு முன்னாலகொண்டு வந்துட்டீங்க!” என்று ஒரு முதியவர் பாராட்டியபோது, அவள் முகமெல்லாம் விகசித்துப்போயிற்று. தான் எதை எண்ணிப் பாடுகிறோமோ, அது கேட்பவரையும் போய் அடைவது என்ன பாக்கியம்!

    ஆனால், வீடு திரும்பியதும், சாப்பிட்டபடியே,  அவள் பாடிய ஒவ்வொரு ராகத்தையும், பாட்டையும் விரிவாக விமர்சித்து, விளையாட்டாக மதிப்பெண்களும் போடும் வழக்கத்தைக் கொண்டிருந்த முரளி அன்று எதுவும் பேசாது,  நேராகப் படுக்கப்போனபோது குழப்பம்தான் எழுந்தது.

    “ஒடம்புக்கு முடியலியா?” நெற்றியில் வைக்கப்பட்ட அவளது கையை முரட்டுத்தனமாக விலக்கினான் கணவன். படுக்கையில் எழுந்து உட்கார்ந்து, அவளை முறைத்தான். “நீ இனிமே எந்தக் கச்சேரியும் ஒத்துக்க வேணாம்!”

    யாரோ மென்னியைப் பிடிப்பதுபோல் இருந்தது அவளுக்கு. “ஏங்க? முந்தியெல்லாம் நீங்க..?” என்று குழறினாள்.

    “அது அப்போ. மத்தவங்க ஒன் கிட்ட, கிட்ட வந்து சிரிச்சுப் பேசறது எனக்குப் பிடிக்கல!” மறைந்த கணவனே வேறு உருவத்தில் வந்து மிரட்டியதுபோல் இருந்தது.

    ஒருமுறை இசையைப் பறிகொடுத்துவிட்டு, தனது ஆத்மாவின் நாதத்தைத் தொலைத்து நின்ற வேதனை போதாதா? அந்தக் கொடுமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், பூவையும், பொட்டையும் தொலைத்ததுகூடப் பெரிதாகத் தோன்றவில்லையே!

    காமவர்த்தனி அதிநிதானமாகத் தலையை நிமிர்த்தினாள். அவனுடைய கண்களை உற்றுப் பார்த்தாள்.  “ஒங்களுக்கும், என்னோட இசைக்கும் ஒரு போட்டி வெச்சா, நான் பாட்டைத்தான் தேர்ந்தெடுப்பேன். இனிமே இந்தப் பேச்சு வேணாம்!” தெளிவானகுரலில் அவளுடைய பதில் ஒலித்தது.

    இப்போதெல்லாம் தனியாகவே கச்சேரிகளுக்குப் போய்வருகிறாள் காமவர்த்தனி.

    யாராவது தெரிந்தவர்கள், “அவர் எங்கே, கண்ணிலேயே படறதில்லியே?” என்று  விஷமத்தனமாகவோ, வாய் உபசாரமாகவோ விசாரித்தால், “வீட்டில பிள்ளைங்களைப் பாத்துக்க ஆள் வேண்டாமா!” என்று அசட்டுச் சிரிப்புடன் சமாளிக்கிறாள்.

    தான் நினைத்ததில் உறுதியாக இருந்து சாதித்துவிட்டதில் அவளுக்கு நிறைவு ஏற்படவில்லை. மாறாக, வேதனைதான் எழுகிறது, ஒரு நல்ல ரசிகனை இழந்ததற்காக.

    நன்றி: சிறுகதைகள் டாட் காம்

    Share
  • ஆன்மீகமும் நானும் (22)

    சிரத்தையும் சிரார்த்தமும்

    ஒருவர் இறந்த பின் அவரது பிள்ளைகள் இறந்தவர்களுக் கென வருடா வருடம் சிரார்த்தம் செய்கின்றனர் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைந்து சிரார்த்தம் செய்வோரின் குடும்பத்தினை வாழ்த்திடல் வேண்டும் என்பதற்காக. செய்யும் விதம் மதத்திற்கு மதம் வேறு பட்டாலும் செய்வதின் நோக்கம் ஒன்றுதான்.

    இது தேவையற்ற ஒன்று என்பது என் சொந்தக் கருத்து.

    சிலர் சொல்வார்கள் உங்கள் பெற்றோர்களை நினைவில் இருத்திக் கொள்ள ஒரு வழி இது என்று. வருடத்தில் ஒரு நாள்தான் அவர்களை நினைவுக்குக்குக் கொண்டு வரவேண்டும் என்றால் அந்த ஒரு நாள் தான் எதற்கு? தன்னைப் பெற்று, பாசத்தினைப் பொழிந்து, வியர்வையும் ரத்தமும் சிந்தி உழைத்து உங்களை ஆளாக்கியவர்களை என்றுமே அல்லவா மறக்காது நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்?

    சிலர் சொல்வார்கள் ஒருவர் இறந்த பின் அவருக்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யா விட்டால் அவரது ஆத்மா சாந்தி அடையாது. அது உங்களை சபித்து விடும் என்று. வாழ்ந்த நாட்களில் பெற்றோரை மதிக்காது நடந்து கொண்டவர்கள் கூட இந்த பயத்தினால் வருடா வருடம் சிரார்த்தம் செய்வதுண்டு. எந்த ஒரு தாயும் தந்தையும் தன் குழந்தைகள் கஷ்டப் பட வேண்டும் என சபிக்க மாட்டர்கள், குழந்தைகள் அவர்கள் கண்களில் கண்ணீர் வருமாறு நடந்து கொண்டிருந்தாலும் கூட.

    ஒருவர் அவர் தாய் தந்தைக்கு உயிரோடு இருக்கும் போது அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தந்தால் மட்டும் போதாது. அவர்களைத் தங்களுடனேயே வாழ வைத்துக் கொண்டு, என்றுமே அவர்கள் சந்தோஷமாக வாழ வழி செய்ய வேண்டும்.

    கடைசியாக நான் இதுவரை எழுதி வந்ததின் சாராம்சம்

    1. இறைவனைக் காண / அவரிடம் உங்கள் முறையீடுகளை வைக்க இடைத் தரகர்கள் உதவி தேவை இல்லை.

    2. எங்கும் நிறை இறவைன் உங்களுள்ளும் இருக்கிறான்.

    3. வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களைப் படிப்பதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் படித்தவற்றுள் உள்ள நல்ல விஷயங்களை உங்கள் வாழ்வில் முடிந்த வரை கடை பிடியுங்கள்.

    4. எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் பழகுங்கள்.

    5. உங்களால் ஆன உதவிகளைப் பிறருக்குச் செய்யுங்கள்.

    6. உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளுங்கள்.

    உங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பொங்கட்டும்!

    (முற்றும்)

    நடராஜன் கல்பட்டு

    Share
  • ஆன்மீகமும் நானும் (20)

    பேச்சும் நடை முறையும்

    இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே எழுதி இருந்தேன் எனது நோக்கம் யாரையும் என் வழிக்குத் திருப்புவதோ அல்லது யாருடைய மனதையும் புண் படுத்துவதோ அல்ல என்று. இனி வரும் இரு மடல்களைப் படிக்க உங்கள் மனதினை சற்றே திடப் படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். இதைச் சொன்ன உடன் ஏதோ திகில் கதை சொல்லப் போகிறேன் என்று எண்ண வேண்டாம். சராசரி மனிதர்களின் கதை தான் சொல்லப் போகிறேன்.

    1992ல் ஒரு முறை டில்லியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன் எனது நாலரை வயது பேரனுடன். தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் எனக்கு நடு இருக்கையும் எனது பேரனுக்கு மேல் இருக்கையும் அளிக்கப் பட்டு இருந்தது.

    நாங்கள் பயணித்த பெட்டியில் சென்னையில் இருந்து ஹரித்துவார், டெல்லி என்று ஆன்மீகப் பயிற்சிப் பட்டரைக்காகச் சென்று விட்டுத் திரும்பும் சென்னை சின்மயா மிஷன் அன்பர்கள் சுமார் இருபது பேர் இருந்தார்கள். ஏறியதில் இருந்து பயிற்சிப் பட்டரையில் தாங்கள் அனுபவித்த இன்பம் பற்றிப் பேசி வந்தனர்.

    படுக்கும் நேரம் வந்தது. நான் என் அருகில் இருந்தவர்களிடம் கேட்டேன், “இந்தச் சிறுவனுக்கு மேல் இருக்கை கிடைத்திருக்கிறது. தூக்கத்தில் பிரண்டு கீழே விழுந்து அடி பட்டுக் கொண்டு விடுவான். உங்களில் யாராவது ஒருவர் கீழ் இருக்கையை அளிக்க முடியுமா?” என்று.

    “ஹூஹூம். முடியாது” என்றனர் அவர்கள். அன்றிரவு நடு இருக்கையில் பேரனை இடுக்கிக் கொண்டு படுத்து வந்தேன். மறு நாள் பொழுது விடிந்தது. நான் அவர்களிடம் கேட்டேன், “நீங்கள் பேசிக் கொண்டு வருவதில் இருந்து சின்மயா மிஷன் அங்கத்தினர்கள் நீங்கள் என்று தெரிகிறது. பகவத் கீதை படிப்ப துண்டல்லவா?”

    “கட்டாயம் தினசரி படிப்போம்.”

    “பக்தி யோகம் என்னும் பன்னிரெண்டாவது அத்தியாயம்?”

    “அது எங்களுக்கு மனப் பாடமாகத்த் தெரியுமே.”

    “அப்படியா? அதில் ‘அத்வேஷ்டா சர்வ பூதானாம் மைத்ரக் கருண ஏவச’ என்று ஒரு வரி வருகிறதே அதற்கு என்ன பொருள்?”

    “எல்லா உயிகளிடத்தும் நட்பையும் கருணையையும் தவிற வெறுப்பு காட்டக் கூடாது என்பது அதன் பொருள்.”

    “நேற்றிரவு இந்தச் சிறுவனுக்காக உங்களில் ஒருவரது கீழ் இருக்கையைக் கேட்டேன. அதைக் கொடுக்க யாருமே முன் வரவில்லை. பகவத் கீதையைப் பள்ளி மாணவன் வாய்ப் பாடுகளை மனனம் செய்வதுபோல் தினமும் படிப்பதினால் என்ன உபயோகம், அதில் உள்ள ஒரு வரியினைக் கூட உங்கள் வாழ்க்கையில் நடை முறையில் கொண்டு வர முடிய வில்லை என்றால்?”

    என் கேள்விக்கு பதில் இல்லை.

    சின்மயானந்தா உயிருடன் இருக்கும் போதே தயானந்தா பிரிந்து தனியாக ஆசிரமம் ஆரம்பித்தார். ஹரிநாமானந்தா காவி உடையைக் களைந்து விட்டு மணம் செய்து கொண்டு அமெரிக்கா பயணமானார். தஞ்சையில் இருந்த ஒரு பிரும்மச்சாரி தங்கி இருந்த வீட்டு எஜமானரின் இரு பெண் குழந்தைகளுக்குத் தாயான அவர் மனைவியை அழைத்துக் கொண்டு தனி ஆசிரமம் அமைக்கச் சென்று விட்டார். திருச்சியில் இருந்து மேல் பயிற்சிக்காக பம்பாய் சென்ற ஒரு பிரும்மச்சாரி தன் சக மாணவியைக் காதல் புரியத் தூண்ட, அவள் அதை வெறுக்க, அவள் முகத்தில் கத்தியால் அவர் குத்த, அது போலீஸ் வரை போய் விட்டது.

    இதையெல்லம் பார்த்த போது இவர்கள் போதிப்பது என்ன? நடந்து கொள்ளும் விதம் என்ன? படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயிலா? இவர்களும் நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள் தான் எனத் தோன்றியது.

    இறைவன் இருக்கிறான் எல்லாவற்றினுள்ளும். “அவனைக் காண / அடைய உன்னை நீயே கேட்டுப் பார் ‘நான் யார்?’ என்று. அந்தக் கேள்விக்கு விடை கண்டால் உன்னுள் உறையும் ஈசனை நீ காணலாம்” என்ற பகவான் ரமணரின் கூற்று எனக்கு சரியெனத் தோன்றியது.

    எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டு. உன்னால் முடிந்த உதவியைப் பிறருக்கு நீ செய். நேர்மையாகவும் உண்மையாகவும் இரு. இவையே நீ நற்கதி அடைய வழி செய்யும் த்யானம். படித்தால் மட்டும் போதாது வேத, புராண, இதிகாசங்களை. அவற்றில் நீ காணும் நல்லவற்றை உன் வாழ்க்கையில் நடை முறைக்குக் கொண்டு வா. அது தான் நீ செய்ய வேண்டிய பூஜை. இவ்வாறான முடிவிற்கு நான் தள்ளப் பட்டேன்.

    (தொடரும்….)

    நடராஜன் கல்பட்டு

    Share
  • ஆன்மீகமும் நானும் (19)

    நடராஜன் கல்பட்டு

    கொக்கென்று நினைத்தீரோ கொங்கணரே ?

    ​ank

    ஒரு ஊரில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஒருவன் தன் மனைவி, குழந்தைகளை விட்டு விட்டுக் காஷாயம் தரித்துக் காட்டுக்குச் சென்றான் தவம் செய்ய. காட்டில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து தவம் புரிந்தான். உணவு தேவைப் பட்ட போது அருகில் இருந்த ஒரு ஊருக்குச் சென்று பிச்சை யெடுத்து உண்டான். சில நாட்கள் கழிந்தன.

    ஒரு நாள் அவன் தவம் செய்து கொண்டிருந்த போது மரத்தின் மீது வந்தமர்ந்த் கொக்கு ஒன்று அவன் தலை மேல் எச்சமிட்டது. தவம் கலைந்த அவன் கோபக் கனல் வீச மேலே அண்ணாந்து பார்த்தான். அடுத்த கணம் கொக்கு எரிந்து சாம்பலாகிக் கீழே விழுந்தது.

    புதுச் சாமியாருக்குச் சந்தோஷம் தாங்க முடிய வில்லை. ஆகா வந்து விட்டது எனக்கு அபார சக்தி என்று எண்ணியபடி ஊருக்குள் நுழைந்தார். ஒரு வீட்டின் கதவைத் தட்டி, “சாமியார் வந்திருக்கிறேன். பிச்சை போடுங்கள்” என்று உரக்கக் கத்தினார்.

    உள்ளிருந்து ஒரு குரல் வந்தது, “நான் என் கணவருக்கு போஜனம் அளித்துக் கொண்டிருக்கிறேன் சற்றுப் பொருங்கள். வருகிறேன்” என்று. சற்று நேரம் கழித்து மீண்டு கதவை பலமாகவே தட்டி, “சாமியார் வந்திருக்க்றேன். பிச்சை போடுங்கள்” என்று உரத்த குரலில் கத்தினார்.

    சற்று நேரத்திற்குப் பின் கதவு திறந்தது. கையில் அரிசியுடன் வந்த பெண்ணைப் பார்த்துக் கேட்டார் புதிய சாமியார், “எவ்வளவு நாழியாக நான் காத்திருப்பது?” என்று.

    பதிலுக்கு அந்தப் பெண் கேட்டாள், “என்ன என்னையும் கொக்கென்று நினைத்தீரோ?” என்று.

    “கொக்கை நான் எரித்தது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

    “அதுவா? பக்கத்து தெருவில் காதர் பாச்சா என்றொரு கசாப்புக் கடைக்காரர் இருக்கிறார். அவரிடம் போய் கேளுங்கள்” என்றாள் அவள்.

    காதர் பாச்சா வீட்டைத் தேடிக் கண்டு பிடித்த சன்யாசி. கதவைத் தட்டினார்.

    உள்ளிருந்து காதர் பாச்சாவின் குரல் கேட்டது, “செத்த இருங்க வந்தீட்டேன்.”

    சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் கதவைத் தட்டினார் சன்யாசி.

    “வாரேன்னு சொன்னேன் இல்லெ. செத்தப் பொறுமையா இருங்க.”

    பொறுமையிழந்த துறவி கதவில் இருந்த இடுக்கு வழியாக உள்ளே பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி, வயது முதிர்ந்த தந்தைக்குக் குளிப்பாட்டி, உடல் துடைத்து, ஆடை அணிவித்து நாற்காலியில் மெள்ள உட்கார வைத்துத் தட்டொன்றில் இருந்து உணவினை எடுத்து அவருக்கு ஊட்டிக் கொண்டிருந்தான் காத பாச்சா. பின் அவருக்க் வாய் கழுவி விட்டு, மெல்லத் தூக்கிப் படுக்கையில் படுக்க வைத்து விட்டு வந்து வாசல் கதவினத் திறந்தான் அவன்.

    கதவைத் திறந்ததும் கண்ணில் பட்ட சாமியாரைப் பார்த்துக் கேட்டானவன், “யாரு நீங்க? ஒங்களெ பக்கத்துத் தெரு வாசுகியம்மா அனுப்பினாங்களா? என்னா வேணும் ஒங்களுக்கு?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் காதர் பாச்சா.

    துறவி, “அப்பா நான் தேடி வந்தது கிடைத்து விட்டது எனக்கு” என்று சொல்லி மீண்டும் வாசுகியமாள் வீட்டினை அடைந்து கதவைத் தட்டினார். அவள் கதவைத் திறந்ததும் அவள் கால்களில் விழுந்து வணங்கி, “தாயே சரஸ்வதி என் கண்களைத் திறந்து விட்டீர்கள். புரிந்து கொண்டேன் நான் ஒருவனின் முதல் கடமை அவனை நம்பி உள்ளோரைக் காப்பாற்றுதல் என்பதை” என்று .

    துறவியின் காஷாயம் பறந்தது. சாதாரண உடையில் தன் வீட்டை நோக்கிப் பயணித்தான் அவன்.

    (கருப்பு வெள்ளை படம் பிடித்தது ந.க.)

    (தொடரும்….)

    Share
  • தேடல் என்பது உள்ளவரை…

    உங்களுக்கு பிடிச்ச ஒருத்தர பிரிஞ்சிருக்கீங்களா…. அதும்.. 15 வருசமா அவுங்க எங்க இருக்காங்க.. என்ன பண்றாங்கன்னு தெரியாம தவிச்சிருக்கீங்களா….?

    இன்றும் கண் முன்னால் நிற்கிறது அந்தக் கோரக் காட்சி… மனிதர்கள் செத்து செத்து விழுந்த… பூமியெங்கும் ரத்த மழையும், குண்டு மழையும் பொழிந்த மணித் துளிகளில்.. மரணத்தின் கைகளில் விளையாடிக் கொண்டிருந்த மிதுனனும் நியந்தாவும்… ஆளுக்கொரு திசையில் பிரிந்து கிடந்த இடைவெளியை மழை கொஞ்சம்… அழுகை கொஞ்சம்…. துப்பாக்கிக் கொஞ்சம்.. மனித சடலங்கள் கொஞ்சம் என பிரித்தே போட்டது… பிரிவுகளின் கரம்… வெகு நீளமானது… அத்தனை பச்சை ரத்த வாசம் கொண்டவை… அதன் நகங்களின் கோரத்தில் அழுக்கடைந்து நிற்கும் இடைவெளியை எடுக்க எடுக்க தூர் கொண்டு நிரம்பும் ஆதி ரகசியமாய் பிரிவு மிகப் பெரிய நரகத்தை பதிந்தது….

    lady 255கடந்தன 15 வருடங்கள்… எத்தனை அகதி முகாம்களைக் கடந்த பின்னும் அவளைக் காண முடியவில்லை… அவனிடம் இருப்பதெல்லாம் அவளுடைய 6 வயது அன்றைய புகைப்படம் மட்டுமே.. எங்கெங்கு தேடிய பின்னும் ரத்த சுவடுகளில் காய்ந்து ஒழுகிய நடுக்கம் மட்டுமே தோட்டாக்களை பிரசவித்துக் கொண்டிருப்பதாக நினைவுச் சுருள் ரத்தம் சொட்டிக் கொண்டே இருந்தன……இதோ, “இன்று கதவைத் தட்டிக் கொண்டு வீட்டுக்குள் வந்து விட மாட்டாளா…” என்று ஏங்கும் தருணமெல்லாம்… குருதி சொட்டும் கழுகின் வட்டங்களை பிணங்களின் பெரு மூச்சென அவனின் அறையெங்கும் அனல் ததும்பி தலை கீழாய் தூக்கிட்டுக் கொண்டே இருக்கும்.. கண்கள் மூடி நடுங்குவான்…நடுங்குதலின் நேரங்களில்… ஒடுங்குதலின் மூலையென மூளையெங்கும்…விரவி பரவிக் கொண்டே இருக்கும் நியந்தாவின் நினைவில்… ஓங்கி அழும் திறன் கூட மிரட்டும்….

    நியந்தா……

    ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் அல்லது அதிக பட்சம் அவன் வாயில் விழுந்து எழுந்து வெற்றிடக் கவிதையாக வளைந்து நெளிந்து கரைந்து கொண்டே இருக்கும் அல்லது பூத்துக் கொண்டே இருக்கும்… பொருளென அன்றைய மிதுனன் நியந்தாவைக் கொண்டாடிக் கொண்டே இருந்தான்.. இருவரும் சம வயதுக்காரார்கள்தான்.. நியந்தா மூன்று நான்கு மாதங்கள் மூத்தவளாக இருப்பாள்… தன்னை அக்கா என்று கூப்பிட சொல்லி சண்டை எல்லாம் போட்டு இருக்கிறாள்… பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள்.. இருவரின் அம்மாக்களும் சமபாதியாக எல்லா பொருத்தங்களும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தான்… இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் மிதுனனும் நியந்தாவும்… கல்யாணம் செய்து கொண்டு இதே வீட்டினில் அவர்களைப் போலவே இரு குழந்தைகளைப் பெற்று போட்டு நாம் அதுங்களை கொஞ்சி மகிழ வேண்டும் என்பது அவர்களின் தீரா பகலின் பேச்சுக்களின் நீளம்…

    ஓயாத சண்டை…. ஓய்ந்த போது யாருமே இல்லாமல், தான் மட்டும் தமிழகம் வந்து சேர்ந்திருந்தான் மிதுனன்… அழுதான்… அரட்டினான்… எல்லா முகங்களும் அந்நியப்பட்டே இருக்க, அம்மா… அப்பா… அக்கா.. எல்லாரும் செத்துக் கிடந்ததைக் கண்டு உறைந்து நின்ற நினைவினில் நியந்தாவின் பிணம் கூட கிடைக்கவில்லையே…என்று அழுகை அடக்கி தேடத் துவங்கினான்… இதோ 15 வருடங்கள் ஓடி விட்டன.. இன்றும் தேடுகிறான்.. நேற்று நண்பன் ஒருவனிடம் பேசும் போதுதான் “முகப் புத்தகத்தில் தேடிப் பார்த்தால் என்ன?”- என்று ஒரு யோசனை கிடைத்தது.. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு முகப் புத்தகத்தில்…கையில் இருக்கும் நியந்தாவின் ஆறு வயது புகைப்படத்தை…பதிந்து விட்டு….

    “இந்தப் பெண்ணை யாராவது எங்கேனும் பார்த்திருந்தால் அல்லது நட்பு கொண்டிருந்தால்…. தகவல் அனுப்புங்கள்…15 வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படம் இது…இதைத் தவிர வேறு ஒன்று என்னிடம் இல்லை… ஒருவேளை நியந்தாவே இதைப் பார்க்க நேரிட்டாலும் கடவுளைக் கொண்டாடும் தருணமாக அது இருக்கும்… இன்னும் எத்தனை வருடங்கள் பிரிந்து கிடப்பது என்று தெரியவில்லை…மலை உச்சிகளும்… ஆற்று படுகைகளும்.. எங்கள் உலகமாகிக் கிடந்தது ஒரு காலம்…. என்ன உண்டாலும் பாதி பாதி பகிர்ந்து கொண்ட காலம் ஒன்று இருந்தது… அவள் ஆடை நான் அணிந்து கொண்டு அவள் போல நடந்து காட்டிய நாட்களில் வெட்கம் தாளாமல் குசினிக்குள் ஒளிந்து நின்று அவள் பார்த்த காலம் மீண்டும் வேண்டும்…

    கை கோர்த்தபடியே தூங்கிப் போன இரவுகளில் பிரிவுக்கு இருந்த கதவை மூடாமலே எங்கள் வீடு இணைந்திருந்த காலம் தேடிக் கதறுகிறேன்….. எல்லாம் போன பின்னும் எல்லாமாக இவள் இருந்தால் போதும்.. இன்னும் கொஞ்ச நாள் இருந்திடலாம் என்றே 15 வருடங்கள் கடந்து விட்டேன்… காணும் விழியெங்கும் காட்சிகளாய் விரியும் காற்றின் நிறங்களில் விண்மீன் சிதறலென மிதந்து கொண்டே இருக்கும் மனதுக்குள் மெய்ம் மறக்க இவள் வேண்டும்…….அழுதழுதே அடங்கி விடவா நான்… இல்லை,.. அள்ளி அணைத்திடவே நியந்தாவின் இருப்பு வேண்டும்…. இருத்தல் வேண்டும்…கை போன கால் போன உயிர் போன பிணங்களில் ஊடாக ரத்த சகதியில் புரண்டு வெளிறிபோன உடலோடு நானும் நியந்தாவும்… பதுங்கி கிடந்த பதுங்கு குழியின் பெருமூச்சு சுவாசம் இன்றும் ஆழ்மனதில் நினைவிழந்து மூச்சடைக்க வைக்கின்றன… கொத்து கொத்தாய் வீழ்ந்த மனிதர்களிடம் எழும்ப சொல்லி அலறும் 6 வயது தானே அவளுக்கும்…. அதிகாலை ஏது… அந்தி மாலை ஏது… அத்தனையும் அணைத்தபடி கிடந்த நடுக்கம்தானே….சரி எப்படியும் இந்த இரவாவது மிஞ்சிக் கடந்து விடுவோம் என்ற போது தான்… பிரித்து இழுத்துப் போன மிலிட்டரிக்காரன் ஒருவன், முகத்தில் வழிந்த மனித சதைகளை துடைத்தெரிந்தபடியே வெறித்துப் பார்த்துப் போனான்.. வீரிட்டு அழுத என் சத்தம் யார் காதிலும் விழவில்லை.. விழுந்ததெல்லாம் குண்டுகளின் கன மழை……

    எத்தனையோ அதியங்கள் நடக்கும் இந்த உலகில் அவளும் கிடைத்து விடுவாள் என்றே நம்புகிறேன்.. தோழர்களே…. உதவுங்கள்… உங்கள் நண்பர், அவர்களின் நண்பர் என்று இந்த செய்தி பரவட்டும்.. நியந்தாவின் குரல் கூட இதோ இப்போது கூட எனை அழைக்கலாம்…. காத்திருக்கிறேன்….. மிதுனன்….”- என்று முடித்து செய்தியை பரப்பி.. இதோ இரவும் தீர்ந்தது…..

    விடியலில் அவசரமாக கணினியைத் திறந்தான்…..

    அனுதாபங்கள்.. சோக பகிர்வுகள்.. நம்பிக்கை வாழ்த்துக்கள், மற்றும் லைக்ஸ்கள் குவிந்து விரவிக் கிடந்த முகப் புத்தகத்தில்…. “நான் பாத்திருக்கேன் மிதுனன்….” என்று ஒரு செய்தி இருந்தது……உலகம் சற்று நின்று அட நின்றே விட்டது.. என்று கண்கள் திறந்து கத்தினான்… கடவுளுக்கு நன்றி கூறினான்… அழுகையும் சிரிப்பும் மாறி மாறி வந்தன.. வந்த அழுகையெல்லாம் சிரிப்பாக மாற,, மாறிய சிரிப்பெல்லாம் மீண்டும் அழுகையாக மாறியது… கணினியை அணைத்துக் கொண்டான்…. செய்தியை மீண்டும் நன்றாக படித்தான்……

    “நண்பரே வணக்கம்… நான் இந்த புகைப்படத்தை, மட்டும் பார்த்திருக்கிறேன்…… நன்றாக மனதில் இருக்கிறது.. ஆனால் எங்கு பார்த்தேன்.. எப்போது பார்த்தேன் என்று மட்டும் நினைவில் இல்லை… கொஞ்சம் டைம் கொடுங்கள்… எப்படியும் ஞாபகப் படுத்தி சொல்கிறேன்……. நன்றி….” – நிவ்யா

    மனதுக்குள் அதிர்வலைகள் அங்கும் இங்கும் அலைந்து… மறுபடியும் நிவ்யாவுக்கு ஒரு செய்தி அனுப்பினான்….

    “நிவ்யா… கொஞ்சம் யோசியுங்கள்.. தயவு செய்து எப்படியாவது… கண்டு பிடித்து விடுங்கள்… யாருக்குமே தெரியாத இடத்தில அவள் இருக்கிறாள் என்ற போது இதோ நீங்கள் தெரியும் என்கிறீர்கள்.. அப்படி என்றால் கண்டிப்பாக அவளை நான் நெருங்கி விட்டேன் என்றே நம்புகிறேன்…. உதவுங்கள் நிவ்யா.. கொஞ்சம் யோசியுங்கள்..” -மிதுனன்

    பதில்கள் தொடர… நிவ்யாவும்… மிதுணனும் நெருங்கிய நண்பர்களாகிப் போனார்கள்…மிதுனன் கிளம்பி நிவ்யாவின் ஊருக்கே சென்று விட்டான்…. இருவரும் சேர்ந்தே தேடத் துவங்கினார்கள்…. நண்பர்கள், அவர்களின் நண்பர்கள், உறவுகள், அவர்களின் உறவுகள்…. என்று இவர்களின் தேடல் நீண்டு கொண்டே இருந்தன…. நிறைய பேசிக் கொண்டார்கள்…. நிவ்யாவின் ஆறுதல் அவனுக்கு தேவையுமாக இருந்தது…

    அந்தி மாலைப் பொழுதில் வீதிகளில் வெறிச்சோடிய இரவு சாயல்களை நழுவ விட்டுக் கொண்டே இருவரும் நடந்தார்கள்….

    “என்னால் இதுக்கு மேல யோசிக்க முடியல மிது….. என்ன பண்றது”- என்று அழுகவே தொடங்கி விட்டாள் நிவ்யா….

    “இல்ல நிவ்யா….. நல்லா பாரு.. இந்த போட்டோவைத்தான நீ பார்த்தா…?”-என்றான் மிதுனன்… ஒரு குற்றவாளியின் படபடப்போடு….

    “கண்டிப்பா தெரியும் மிது.. இந்த போடோவைத்தான்.. ஒரு மூணு வருசத்துக்கு முன்னால ஏதோ ஒரு வீட்ல பார்த்தேன்.. இங்கதான் எங்கையோ… இதே ஊர்ல… ஆனா… எந்த இடம்னு தெரியல….. சுத்தமா ஞாபகத்து வர மாட்டேங்குது….”-அவள் இயலாமையின் கைகளுக்குள் அகப் பட்டுக் கொண்ட கைப் பிசைதலாய் தடுமாறினாள்….

    “உங்க சொந்தகாரங்க வீடு ஏதாவதா… இல்ல உன் நெருங்கிய தோழிங்க வீடா…. இல்ல ஏதாவது முகாமா… ஏதாவது பள்ளிக் கூடமா… யோசி நிவ்யா.. எனக்கு கிடைச்ச கடைசி ஆயுதம் நீ.. நீயும் உதவலனா இனி அவள நான் பாக்கவே முடியாது…..”-என்று படபடப்போடு கூறி கண்களில் நீர் வழிய காற்றில் வெற்றிடம் நிறைத்தபடியே …வீதியில் போகும் பெண்களில்… கோவிலுக்கு போகும் பெண்களில்… யாராவது தன் நியந்தாவாக இருக்க மாட்டாளா என்று உற்று உற்று கவனித்த மிதுனனின் கையை ஆதரவாக பற்றிக் கொண்டாள் நிவ்யா…

    யாருமே அவள் சாயலில் இல்லை….

    இருவரும் சோர்ந்து பழுப்பேறிய இரவு வீதிகளில் ஒரு காற்றைப் போல நடந்தார்கள்… நாய்களின் கவனம் அவர்களை கலைக்கவே இல்லை.. சில காவலர்கள் விசாரிக்கவும் செய்தார்கள்… தலைக்குள் சுழலும்… வெளிகளின் ரீங்காரத்தை இருவருமே உணர்ந்தார்கள்.. மிதுனன் கண்ணீர் சிந்தி குலுங்கவும் தொடங்கினான்.. அணைத்துக் கொண்ட நிவ்யா….சற்று யோசித்தாள்….. நடந்தபடியே இருந்த மௌனத்தைக் கலைத்தவள், தயங்கியபடியே பேசத் தொடங்கினாள் …….

    “மிது… ஒரு வேளை நான் இந்த போட்டோவ பார்த்து தப்பா முடிவு பண்ணி உங்கிட்ட சொல்லி இருக்கலாம்….. எனக்கென்னமோ நியந்தா வருவான்னு நம்பிக்கை இல்ல…அவ எங்க இருக்கா, என்ன பண்றா எதுமே தெரியல…6 வயது போட்டோவ வெச்சுகிட்டு எப்டி கண்டு பிடிக்கறது மிது… என்னமோ தப்பா இருக்கு….எங்கையோ குழப்பமா இருக்கு…..”-அவள் பேசிக் கொண்டே நடந்தாள் … அவன் பார்த்துக் கொண்டே நடந்தான்..

    நள்ளிரவு பனிகளின் பரவல் இருவரையும் மறைத்து இசைந்து கொண்டே போவதை இருவருமே கவனித்தார்கள்.. சாலையோர திண்டுகளில் எத்தனை உயிர் உடல் போர்த்திக் கொண்டு தூங்குகிறது…. சாலைவாசிகளின் வாழ்க்கை கண் முன்னே வந்து போனது… கவனம் மாறி கண்கள் துடைத்துக் கொண்டான் மிது… மெல்ல மெல்ல நிவ்யா அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள்…

    “இந்த உயிரும் உடலும் விசித்திரம் நிறைந்தவை இல்லையா மிது…!” என்றாள் நிவ்யா….

    தோளில் சாய்ந்திருந்த முகத்தை சற்று நின்று திரும்பிப் பார்த்த மிதுனன்… மெல்ல புன்னகைத்தான்…..

    “நினைப்பது அல்ல வாழ்க்கை.. வாழ்வதுதான் நினைப்பு… என்றான் பதிலுக்கு….

    ‘எத்தனை உறவுகளோடு வருகிறோம்… போகும் போது ஒன்றுமேயில்லாமல் போய்விடுவதில்தான்..மொத்த சூன்யமும் மறைந்து நிற்கிறது …..”

    “சலனங்கள் அற்ற உறவுகளில் ஓர் உயிர் இன்னோர் உயிரைத் தேடியே சார்ந்திருக்கிறது… அதற்கு பயம்.. இந்த வாழ்க்கையின் மீது பயம்…ஏதோ ஒரு பற்றுதல் தேவைப் படுகிறது.. அது கடவுளாக இருக்கலாம்.. புத்தகமாக இருக்கலாம்.. சாத்தானாக இருக்கலாம்.. ஒரு மனைவியாக இருக்கலாம்.. ஒரு தோழனாக இருக்கலாம்.. ஒரு காதலியாக இருக்கலாம்… ஏதோ ஒன்றாக இருக்கலாம்.. முடிச்சு தேவைப் பட்டுக் கொண்ட உயிர்தான் நிம்மதியாக வாழ்ந்து நிம்மதியே இல்லாமால் சாகிறது….”

    “இங்க மரணத்துக்கு மட்டும்தான் மனிதன் பயப்படுகிறான்..அதுவும் தனியாக சாவதை ஒருவரும் விரும்புவதில்லை….அதற்குதான் போர் கொண்டு மொத்தமாக செத்துப் போகிறான்…. மரணம் அவனை மரணித்த பின்னும் விரட்டுகிறது…”

    “சக உயிர்கள் மேல் கொண்ட அன்புதான் அவனை வாழ்ந்து கிடக்க சொல்கிறது… நன்றாக பார்..தற்கொலை செய்து கொள்பவர்களில் பலர் அன்புக்கு ஏங்கியவர்கள்தான்….. தன்னை யாருமே கண்டு கொள்ளாத ஒரு நிலையில்தான் ஒரு வகை வெறுப்பு வருகிறது…. வந்த வெறுப்பு மரணத்தையும் சேர்த்துக் கொண்டு வருகிறது… இது சூன்யக்காடு.. வழிகளற்ற வழிகள் நிறைந்து கிடக்கும், கோடுகளால் வரையப்படாமலே முடிந்து போகின்றன கோட்டோவியங்கள்…”

    அவர்கள் பேசிக் கொண்டே நடந்தார்கள்…நடந்து கொண்டே பேசினார்கள்.. இரவைக் கொண்டாடும் அவர்களின் கண்கள் சூரியனின் உருகுதலைக் கொண்டே வியர்த்தும் கொட்டியது…..

    “என்னால உனக்கு ரெம்ப கஷ்டம்….. .. இல்லையா…நிவ்யா!….. நான் நாளைக்கு ஊருக்கு போய்டறேன்.. நியந்தா வரும் போது வரட்டும்…நாமளும் எத்தன இடத்திலதான் தேடறது… கிடைக்கனும்னு இருந்தா கிடைச்சிருப்பா…. கிடைப்பா… விடு….” என்று அவன் சொல்ல சொல்ல.. நிவ்யாவின் கண்களில் பெரும் சுழற்சி…. பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போனவளின் மனது போல ஒரு இல்லாமைக்குள் நின்றபடியே மாயங்களின் முடிச்சை அவிழ்ப்பவளாக மெல்ல சிரித்தாள்… நெருங்கி வந்து இறுக அவனை அணைத்துக் கொண்ட நிவ்யா…. ஆழ்ந்த மனக் கண்கள் சுழற்சியில் மேல் எழுந்து விட்ட தவிப்பில்…”மிது……. நான் கண்டு பிடிச்சிட்டேன்…கண்டு பிடிச்சிட்டேன்”- என்று கத்த…….சற்று அவளை உற்று நோக்கி நிஜத்தை உள் வாங்கிய மிதுனனும் ஆர்வ மிகுதியில் அவளை தூக்கிக் கொண்டு சுற்றினான்…..

    சுற்றுவது பூமி எனப் படுவது இப்போதுதான் என்பதாக ஒரு வலை அவர்களை பின்னிக் கொண்டே சிரித்தது…

    “என்ன சொல்ற நிவ்யா….?” அவன் கேட்க கேட்கவே……. “வா……. வா…….. “என்று அவனை இழுத்துக் கொண்டு அடுத்த வீதியில் ஓடினாள் நிவ்யா.. வீதியின் முகப்பில் நின்று பார்த்தவர்களுக்கு வீதி முழுக்க இடது புறமும் வலது புறமும்.. அடுக்கி வைத்தார் போல கட்டட வாழ்விடங்கள் நிறைந்து நின்றன…

    அவளின் கண்கள் இரு பக்கமும் சுழன்றன..

    நிறைந்து நின்ற வீடுகளில் நின்ற மிதுவின் கண்கள் ஆச்சரியத்தில் உறைந்து, எப்படி இத்தனை வீடுகளில் கண்டு பிடிப்பது என்பது போல பார்த்தன…… அவள் கண்கள் மூடிக் கொண்டே நகர்ந்தாள்… “இதுவா….? அதுவா…! அதுவா….! இதுவா….? இல்லை இந்த வீடு….. இல்லை அந்த வீடு……” நினைவுக் குழிக்குள் புதையுண்ட அந்த வீட்டுக் காட்சியை நினைவுக்குள் மேல் எழுப்ப முயன்று கொண்டே நடந்தாள்… குழிக்குள் விழுந்த விட்ட ஒரு ரூபாய் நாணயத்தை மேலே நின்றபடியே இரண்டு குச்சி கொண்டு இரண்டையும் ஒரு சேர அழுத்தி இணைத்து இரு குச்சியின் பிடியில் நாணயத்தை சிக்க வைத்து இரண்டு கைகளின் சமரச அழுத்தலில் மேல் கொண்டு வருவது போல.. மனதுக்குள் ஆழ்ந்து காணாமலே போன காட்சியை மேலே கொண்டு வந்து கொண்டிருந்தாள்… அதே சமயம்… அவன் வேறோர் வீட்டு கதவைத் தட்டிக் கொண்டிருந்தான்….

    கண நேர தடுமாற்றத்தில் கிடைத்து விட்ட வழி போல அவள் கண்டே பிடித்து விட்டாள்…இதோ இந்த வீடு தான்…. அந்தக் காட்சி….. நியந்தாவின் புகைப்படத்தை கண்ட அந்த ஓர் நாள், ஒரு கணம்…. அந்த வீட்டு ஜன்னல் அருகே நின்ற போது பிடிபட்டு விட்டது.. மீண்டும் ஒரு முறை மனதுக்குள் காட்சியை நன்றாக ஓட்டிப் பார்த்த நிவ்யா….. “அயோ…..கடவுளே…..” என்று உணர்வுக்குள் மின்சாரம் பாய்ந்தது போல.. சில்லிட்டு நடுங்கி கண்களில் திரண்டு விழும் கண்ணீரை துடைக்காமலே சட்டென அந்த இடத்தைக் கடந்து மிதுனனிடம் ஓடி வந்தாள்……

    அவளின் சோர்வை, தடுமாற்றத்தைக் கண்ட மிதுனன், “என்னாச்சு நிவ்யா…. இன்னும் கொஞ்சம் தேடினா கண்டிப்பா கிடைப்பான்னு நம்பறேன்…ப்ளீஸ்…… இன்னைக்கு மட்டும் தேடலாம்……வா…நிவ்யா…..”- என்று கெஞ்ச கெஞ்ச அவனை இறுகக் கட்டிக் கொண்டாள் நிவ்யா….

    என்ன நடக்கிறது என்று யோசித்து அவளை பார்க்க, “என் பேச்சை கேப்பியா மாட்டியா” என்று கண்கள் கலங்க… கெஞ்சுவது போல பேசினாள் நிவ்யா….. சுற்றும் அமைதியால் நிரம்பிக் கிடந்த வெளியில் பழுப்பு நிறம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிக் கிடந்தது…….

    என்னாச்சு என்பது போல பார்த்த அவனிடம்…. “இங்க இல்ல மிது… நான் தப்பு தப்பா யோசிக்கறேன்.. எனக்கு இன்னும் சரியா தெரியல.. இப்போ நான் தூங்கனும்… ப்ளீஸ்……. வா……….. போலாம்”- என்றபடியே நிவ்யா முன்னோக்கி வேகமாக நடக்க அவள் பின்னால் ஒன்றும் புரியாமல் செயலிழந்து யோசித்துக் கொண்டே நடந்தான் மிது….

    “என்ன நாய் இப்பிடி குலைக்குது” என்றபடியே யாரோ திறந்த வீட்டில் வந்த வெளிச்சத்தில் இருவரும் புகையாகி மறைந்து கொண்டிருந்தார்கள்…

    சற்று முன் அந்த ஜன்னலில் தெரிந்த காட்சிக்குள் வரிசையாக மாட்டப் பட்டிருந்த புகைப்படங்களில் நியந்தாவின் புகைப் படத்துக்கு மட்டும் மாலை போடாமல் வைத்திருந்தார்கள்…. இந்த காட்சியைத்தான் என்றோ ஒரு நாள் நிவ்யா பார்த்திருக்கிறாள்…. அதைத்தான் மறந்து விட்டு பல கட்ட மனத் தேடல் முயற்சிக்குப் பின் இன்றும் பார்த்திருக்கிறாள்….. இப்போதுதான் நிஜம் புரிந்திருக்கிறது……..

    ஆம்….நியந்தா இன்னும் சாகவில்லை…..நியந்தா இன்னும் சாகவேயில்லை….

    சாகாதவளை செத்தவர்கள் உலகத்தில் தேடிக் கொண்டிருக்கும் மிதுவையும் தன்னையையும் நினைத்து ஒரு வகை சுய பச்சாதாபத்தில் அழுகை பொத்துக் கொண்டு வரவே “அவள் இங்கு இல்லை” என்று சமாளித்துக் கொண்டு வேக வேகமாய் அந்த இடத்தை விட்டு நடந்து கொண்டிருக்கிறாள்…..மிதுவையும் அழைத்துக் கொண்டு… எக்காரணம் கொண்டு அவனுக்கு தெரியக் கூடாது என்பதாலும்…

    அந்த அதி காலை நேரத்திலும்…உயிருள்ளவர்களின் உலகத்தில்… ஜன்னலை கொஞ்சமாக திறந்து வைத்துக் கொண்டு மிதுனனின் 6 வயது புகைப்படத்தை முகப் புத்தகத்தில் பதிந்து கொண்டு தேடிக் கொண்டிருந்தாள் 21 வயது நியந்தா….

    Share
  • எமிலி மெடில்டா

    – கவிஜி. 

    முதன் முதலாக காதலை காதலிக்கும் பெண்ணிடம் சொல்வதற்கு பதிலாக அவளின் அப்பாவிடம் சொன்னவன் நானாகத்தான் இருப்பேன்….

    அது ஒரு சனிக்கிழமை….

    கண்டிப்பாக பள்ளி விடுமுறை… அவள் மட்டும்தான் வீட்டில் இருப்பாள்… அவளின் அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போய் விடுவார்கள்.. என்பது சமீப காலமாக அவளைப் பின் தொடர்ந்ததில் நான் தெரிந்து கொண்டவைகள்…ஏற்கனவே, போட்ட திட்டத்தின்படி.. நேற்றே லவ் கிரீடிங்க்ஸ் வாங்கி “இந்த மாதிரி …..இந்த மாதிரி…….” என்று எல்லாம் (இடது கையால்) எழுதி, பெயர் போடாமல்… “உன்னவன்” என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டேன்.. இன்று சனிகிழமை.. போஸ்ட்மென் வருவார்.. அவளிடம் கொடுப்பார்.. அவள் படிப்பாள்.. படிக்கும்போது எவ்வாறு எதிர்வினை புரிகிறாள் என்பதனைப் பார்க்கும் ஆவலில் நான் சற்று தள்ளி கிரிக்கெட் விளையாடுவது போல அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்……

    நேரம் ஓடிக் கொண்டிருந்தது…. 9…..10…..11…. 11.30…..

    நானே பந்து வீசிக் கொண்டிருந்தேன்….. பந்து வீசும் இடத்தில் இருந்தால்தான் அவளை நன்றாக நேருக்கு நேர் பார்க்க முடியும்… அவளும் வெளியே நின்று அவளின் சைக்கிளை கழுவிக் கொண்டிருந்தாள்… அதே குட்டைப் பாவாடை.. எனக்கு பிடித்த அதே சிவப்பு பனியனில் நேற்று தான் இந்தியா வந்த பிரெஞ்ச்காரி மாதிரி இருந்தாள்…

    “முதல் முதல் திருடியதால்…. என்னை முழுசாய் திருடவில்லை…………………..” என்று சுப்ரமணி வீட்டு ரேடியோ… எனக்காகவே பாடுவது போல பாடிக் கொண்டிருந்தது……. நேரம் ஆக, ஆக… எனக்குள் கொப்பளிக்கத் தொடங்கியது, டோபாமைனின் வீரியமா… பயங்களின் அமிலமா…? என்று புரியவில்லை.. புரியாத புள்ளியில்தான் அவளின் அப்பா வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார்….

    நன்றாக கேட்டது……..”போ.. அம்மா கூப்டறா….நான் கழுவறேன்” என்று சொல்லிக் கொண்டே சைக்கிளைக் கழுவத் தொடங்கினார்..

    எனக்கு வியர்த்து விட்டது…. போடுகிற பந்து எல்லாம் நோ பால் ஆகவே போய்க் கொண்டிருக்க……..

    பாலு….. என்னிடம் வந்து “இன்னைக்கு அடி கண்டிப்பாக உண்டு.. பேசாம இங்க இருந்து போய்டு…..”- என்று காதுக்குள் கிசுகிசுத்தான்….

    கையை பிசைய கூட மறந்த விட்ட படபடப்பில்… “என்ன செய்யலாம்”- என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே மகராஜன் போல போஸ்ட்மேன் வந்தார்… நேராக அவரிடமே சென்று …..”உங்க பொண்ணுக்கு போஸ்ட் வந்தருக்கு… குடுத்ருங்க…….” என்று கொடுத்து விட்டு போய் விட்டார்… எனக்கு அழுகையே வந்து விடுவது போல இருந்து… அவர் அங்கேயே பிரித்தார்.. நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன் …… எங்கள் குழுவில் உள்ள 6 பேருமே அவரையேதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்……திக் திக் நொடிகளில்… எங்கள் விளையாட்டு ஆங்காங்கே காலத்தை நிறுத்துவது போல.. நிறுத்தி ஒரே புள்ளியில் குவிந்த வண்ணம் நடுங்கிக் கொண்டிருக்க……..

    “எமி……………………லீ………………………………..” என்று அழைத்தார்.

    அவளும் விரிந்த கூந்தலோடு டீ குடித்துக் கொண்டே வெளியே வந்தாள்.. ‘என்னப்பா’ என்பது போல…

    கிரீட்டிங்கை நீட்டினார்.. அவள் வாங்கிப் பார்த்த மறுகணம் பட்டென்று என்னைப் பார்த்தாள்…… நான் அதற்கு முந்தைய கணமே சட்டென திரும்பிக் கொண்டேன்… அவளின் அப்பா அவள் பார்த்த பார்வையை நூல் பிடித்தது போல சட்டென திரும்பினார்.. அதற்குள் அவள் கப்பென்று குனிந்து கொண்டு “தெரிலப்பா… யார்னு”- என்றபடியே வீட்டுக்குள் வேகமாக சென்று விட்டாள்…நான் கண்களை எதுவரை முடியுமோ அது வரை நீட்டித்தேன்….

    “அப்பறம் என்னதான் ஆச்சு.. சொல்லு………”- என்றேன்…. சைக்கிளை மிதித்துக் கொண்டே….

    “அதை அனுப்பினது நீ தான்னு ஒத்துக்கோ அப்புறம் ஏன்னாச்சுனு நான் சொல்றேன்…”- என்றாள் எமிலி.. என் சைக்கிளில் பின்னால் அமர்ந்து கொண்டு…

    “அயோ இல்லடி.. நான் அனுப்பல…”-என்று சொல்லி மெல்ல சிரித்தேன்….

    “பொய் சொல்லாதடா………….” என்றபடியே என் வயிற்றைப் பிடித்து கிள்ளினாள்…..

    “எனக்கு தெரியும்.. அவளோ தைரியமா உன்ன தவிர எவனும் அந்த வேலையை பண்ணிருக்க மாட்டான்….” என்று என் முதுகில் சாய்ந்து கொண்டாள், செல்லமாய் முகத்தை முதுகினில் உரசிக் கொண்டே…..

    நாங்கள் பயணித்த மழைப் பிரதேசத்தில் சனிக்கிழமை என்பது அத்தனை அழகா என்பது போல இருந்தது… எங்கள் பார்வைக்குள் கிடந்து உருளும் பொன்னிற கூந்தலென மேகங்களும், பனி சாரலும்….வந்து போகும் காற்றெல்லாம் வாடைக் காற்றா என்பது போல… ஓடை நீரில் முகம் தெரியும் சூட்சுமமாக நீர் தெளித்து விளையாடும்…..இயல்புகளில் இன்னிசை சுமக்கும் இயற்கையோடு நான் அவளாக, அவள் நானாக… நாங்கள் நாங்களாக… அல்லது வேறு யாரோவாக…மாறிக் கொண்டிருந்தோம்… இல்லாத தேசத்தில் இருப்பது போல ஒரு கனவுலகைக் கட்டிக் கொண்டே………

    “உனக்கு ஞபாகம் இருக்கா… நாம எப்டி முதல்ல பார்த்தோம்னு”- கேட்டேன்…..

    அவள்…”ம்ம்ம்………….. இருக்கு………………… ஒரு வெங்காயக்காரன்தானே நம்மல சேத்து விட்டான்……….” என்று சொல்லி சிரித்தாள்…

    உருண்டைக் கண்கள்.. கனத்த உதட்டில்… கேரளக்காரி என்பதை அவ்வப்போது.. கண்கள் சுருக்கி….”அய்ய்யே…….” என்று சொல்வதில் காட்டிக் கொண்டே இருப்பாள்…இருந்தாள்…. அவளோடு இருப்பது போல ஒரு வித பரவச நிலை… வேறெங்கும் நான் கண்டதில்லை… ரிலேடிவிட்டி தியரியை புரிந்து கொண்ட கணம் அவளின் அருகாமை… அவளுக்கும் அப்படித்தானாம்.. சொல்லுவாள்.. சில போது வார்த்தைகளை மெல்லுவாள்…

    “எங்கப்பா யார் தெரியுமா… மிலிட்டரி…” என்ற ஒரு நாளில்தான் முதல் முத்தத்தை எதிர் பார்க்காத கணத்தில் கொடுத்து விட்டு ஓடி வந்தேன்… அடுத்த நாள்… காலையில் கல்லூரி செல்லும் பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கையில் என் அருகே கோபமாக வந்து என் தலையில் நங் என்று கொட்டி விட்டு ஓடிப் போனாள்… என் நண்பர்கள் மத்தியில் சிரிப்பதா அழுவதா என்று புரியாமல் பேருந்தில் ஏறி போனது ஞாபகங்களின் கவிதை….

    “ஆங்….. தள்ளுவண்டி வெங்காயக்காரன்…….. இன்றும் எப்போதாவது பார்ப்பேன்…அதே புன்னை கையோடு கடந்து செல்வார்….

    அன்று ஒரு திங்கள் கிழமை…

    நான் தலைக்கு குளித்து விட்டு வாசலில் நின்று தலையைக் காய வைத்துக் கொண்டிருந்தேன்… எனக்கு வலது பக்கத்தில் ஒரு பெண்…………. ம்ம்ம்… ஒரு 11வது படிப்பாள் என்று நினைக்க கூடிய உடல்வாகில்…… துணியை அயர்ன் பண்ணக் கொடுத்து விட்டு காத்துக் கொண்டு நின்றாள்… நான் தலையைத் துவட்டுவதற்கு தலையை அப்படியும் இப்படியும் ஆட்டினேன்… அவளும் எதற்கோ சரி என்பது போல தலையை ஆட்டினாள்… இடையில் வெங்காயக்காரன், என்னையும் பார்த்து விட்டு அவளையும் பார்த்து விட்டு.. “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்………………. “- என்பது போல தலையை ஆட்டினான்… எனக்கு ஒன்றும் புரியவில்லை… நான் வெங்காயக்காரனையும் பார்க்கிறேன்… அவளையும் பார்க்கிறேன்.. அவளும் அப்படியே பார்த்தாள்….. நான் திரும்பி வீட்டுக்குள் வந்து விட்டேன்…

    ஆனால் அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை…என்னமோ செய்தது… யோசிக்க யோசிக்கும், யோசிக்கும் அத்தனை யோசனையும்…ஒரு யோசனையில்தான் போய் நின்றது.. அது அவளின் முகம்..

    “என்னடா இது வம்பா இருக்கு.. நான் ஏன் இப்போ அந்த புள்ளைய நினைக்கறேன்…”- என்று என்னென்னமோ ஓடுகிறது…. காலையில் மந்திரித்து விட்டது போல அதே நேரம் அதே இடத்தில் தலை துவட்டிக் கொண்டு நின்றேன்.. அவளும் அதே இடத்தில் துணி அயர்ன் பண்ணக் கொடுத்து விட்டு காத்துக் கொண்டிருந்தாள்… இன்று வெங்காயக்காரன் இல்லை…. ஆனால் நான் உரிந்து கொண்டு நின்றேன்…எங்கேயோ பார்ப்பது போல பார்த்தேன்.. அவளும் அதே போல் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டாள்…..

    “பேர் என்னவாக இருக்கும்.. என்ன படிப்பாள்…?…”

    அப்போதுதான் கவனித்தேன்… குட்டைப் பாவாடை.. குட்டியூண்டு சட்டை… பொட்டில்லாத முகம்… அழுத்தமான பார்வை… நான் பார்க்க பார்க்கவே துணியை வாங்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்… அழுத்தமான நடை… அத்தனை அழகான கச்சிதமான… கம்பீரமான நடை… நேர் கொண்ட பார்வையில் வேகமாய் போய்க் கொண்டிருந்தாள்….அந்த வீதியே அதிர்வது போல உணர்ந்தேன்… இன்னும் வேறு வகையான மாய சுழலுக்குள் சூழலுக்குள் நான் போவதும் வருவதும் போல கிறு கிறுத்து நின்றேன்.. நிற்பது நானாக இருப்பினும்… நின்றது காதல்தான் என்று உணர்ந்தேன்…

    “நானும் உன்ன பார்த்தேன்… ஆனா… இப்டி உன்னையே பார்ப்பேன்னு யோசிக்கல…”- நாங்கள் மரத்தினடியில் அமர்ந்து கொண்டு இலை உதிரும் சிறு துளிகளில் சில்லிட்டபடியே கண்களும் கண்களும் நோக்க.. நொடிகளைக் கவிதையாக்கி கற்பனைக்குள் நீராடும் மீனாகும் துடிப்போடு… கொஞ்சம் நெருக்கிக் கொண்டே… நெருங்கினோம்… நெருங்கிய பொழுதெல்லாம் நொருங்கினோம்….

    “ம்ம்ம்… நீயே சொல்லு… நீ தான் கதை சொல்லி ஆச்சே……” என்றாள்… நெற்றி பார்த்த முத்தம் பதித்தபடியே…நான் யுத்தம் கண்ட வாளினையப் போல.. சீறிட்டு கூர்மையானேன்…

    அதன் பிறகு…. அவள் போகும் இடம், வரும் இடம் எல்லாம்… பின் தொடர்ந்து…… அதை அவளும் உணர்ந்து……. ஒரு நாள்.. மொட்டை மாடியில் நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்…….

    நன்றாக தெரியும்…. நான் நிற்பது தெரிந்துதான்.. சைக்கிளில் அந்த வீதி முழுக்க சுற்றிக் கொண்டேயிருந்தாள்….அவள் சைக்கிளில் சுற்றினாள்… நான் நின்று கொண்டே சுற்றினேன்….

    “சரி.. இன்று கேட்டு விடுவதுதான் சரி”- என்று நம்பி… காற்றினில் வரைந்து கொண்டே மௌன பாஷையில் “-உன் பேர் என்ன…?” என்றேன்..

    அவளுக்கு புரிந்து விட்டது.. போய் விட்டாள்..

    அடுத்த முறை வரும்போது இடது கையை கேண்டில் பாரில் இருந்து எடுத்து ‘படித்துக் கொள்’ என்பது போல சற்று மேல் நோக்கிக் காட்டினாள்.. உள்ளங்கையில் ஏதோ எழுதி இருந்தது… கண்களை சுருக்கி குனிந்து நன்றாக உற்றுப் பார்த்தேன்.. E- இல் தொடங்கி ஏதோ புரியாத மொழி போல இருந்தது பெயர்…. . சத்தியமாக புரியவில்லை… புரியாத போது இருக்கும் அதீத ஆர்வம் புரிந்த பின் இருப்பது இல்லை… ஆனால் எனக்கு புரிந்த இன்னும் இருந்தது…. புரியாத போது இருந்ததைப் போலவே…

    “என்னடா இது……!!!!!”- என்று தலையைப் பியித்துக் கொண்டிருக்கும் போதுதான் ஒரு காகிதத்தை சுருட்டி மேலே வீசினாள்.. ஓடிப் போய் பிரித்தேன்.. சுருக்கம் நிறைந்த இதயம் சீராக துடிப்பது போல இருந்தது, தீராத வேகம் கொண்ட ரத்தத்தில் புது சக்தி பிறந்ததைப் போல…..

    “எமிலி மெடில்டா”- “என்னால் இந்தப் பெயரைப் படிக்க கூட முடியவில்லை….. என்ன மாதிரி பேர் இது.. இதுவரை கேட்டதே இல்லையே….”- மனம் சுருக்கெழுத்து போட்டிக்குள் தடுமாறுவது போல இருந்தது…

    “இது இங்லீஷ் பேர் மாமா…. உனக்குதான் தெர்ல…”-என்று சொல்லி சத்தமாக சிரித்தாள்.. அவள் இப்படி சிரிப்பதற்காகவே இன்னும் ஒரு முறை தெரியல என்று சொல்லலாம் போல……

    “என் பேர் கூட சொல்ல தெரியல… இதுல என் மேல லவ் வேற…..”- என்றபடியே இன்னும் இறுக்கமாக கட்டிக் கொண்ட ஒரு நாள் மதியத்தில் அவளின் சட்டையை நான் அணிந்திருந்தேன்…….. என் சட்டையை அவள் அணிந்திருந்தேன்……. அவளின் வீடு பட்டாம் பூச்சிகளால் நிரப்பப்பட்டது போல காணப்பட்டது…….. அன்று, அப்படி ஒரு மழை… நாங்கள் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடி மழையை பார்த்துக் கொண்டிருந்தோம். மழையும் எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது…. காலங்கள் நின்று போன காலம் அது… ஒரு வித இளம் சூட்டில் இருவருமே… மெல்ல புன்னகைத்துக் கொண்டோம்… பின்மதிய நேரம் கூட இருள்மாலை போல கவிழ்ந்திருந்தது… அவள் கழுத்தின் வாசத்தில் மெய்ம் மறந்த காலம் அது… என் கழுத்துக்குள் முகம் முயங்கிக் கொண்டிந்த காலத்தை யாரோ தடுத்து நிறுத்தியது போல… எங்கள் பின்னால் யாரோ நிற்பது தெரிந்தது…..திரும்பினோம்.. பயந்து கொண்டே…

    அவளின் அம்மா..

    நான் எதுவுமே சொல்லாமல் சட்டையை கழற்றினேன்.. அவளும் நடுங்கிக் கொண்டே பயந்தபடியே… சட்டையை அங்கேயே கழற்றினாள்…

    “அப்புறம் என்னாச்சுடி……” என்று பல முறை கேட்ட பிறகும்.. எமிலி ஒன்றுமே சொல்லாமல்…….” உங்க அத்தைகிட்ட ஓகே வாங்கவேண்டியது என் பொறுப்பு …..” என்று என் தலையைக் கலைத்து விட்டாள்….

    இன்றும் கூட கலைத்து விட்டாள்… நானும் அவள் கூந்தலை கழற்றி விட்டேன்… மலை உச்சி காற்றுக்கு அது குடையாக நீண்டு கொண்டே இருந்தது….. “குடை வேண்டுமா… மழை வேண்டுமா…” என்று முனங்கும் இதழில் “இதழ் வேண்டுமே…இனி மீண்டுமே…” என்று கொஞ்சினேன்…கண்கள் கொண்டு கவிதை செய்தாள்…. படிக்க முடியவில்லை……தொடர்ந்தேன்….

    அவளின் கழுத்தினோரம் நான் முயங்கி சரிந்து கொண்டேன்….

    “ரசனைக்கார மாமா டா நீ ……” என்று செல்லமாக கன்னத்தில் கடித்து வைத்தாள்…

    “உனக்கொரு பேர் வைக்கட்டா…?”- என்றாள் ஒரு கிறிஸ்மஸ் நாள் அன்று…

    “ம்ம்.. வையேன்…” என்றேன்…

    ம்ம்ம்……என்று ….. யோசித்தபடியே… “பிரான்சிஸ் எடின் பாரோ” என்றாள்…

    ‘என்னடி பேர் இது….. உன் பேர் மாதிரியே வாய்க்குள்ள நுழையவே மாட்டேங்குது”- என்றேன்……

    சிரித்துக் கொண்டே …” செம பேர் மாமா…… நம்ம கல்யாண பத்திரிகையில இந்தப் பேர்தான் இருக்கணும் சரியா……?” என்றாள்..

    “எப்படியோ என்னை மதம் மாற சொல்ற.. இல்லியா…”

    “ஏன் மாமா…. மாற மாட்டியா”..

    “உனக்காக மதம் என்ன….. மதத்தையே கூட மாத்துவேன்……..”

    ‘அப்போ நானும் மாறிக்குவேன்…. எனக்கொரு பேர் வையேன்…”

    “ம்ம்ம்….. ரத்னா…. எங்க பாட்டி பேர்…”

    அத்தனை கூட்டத்திலும் கை கோர்த்துக் கொண்டாள்….

    “என்னது ஒன்பதுதான் படிக்கறயா… ஓகாட்……”- என்று புலம்பிய ஒரு டியூசன் நாளில்தான்… நீ லவ் கன்பாம் பண்ணின……. ஞாபகம் இருக்கா..?”- அதற்கும் சிரித்தாள்….

    “11வது படிக்க வேண்டிய வயசு… 3வதுல ஒரு தடவை… 7வதுல ஒரு தடவை பெயில்னு சிரிச்சுட்டே சொன்ன பாரு… நான் முடிவே பண்ணிட்டேன்.. கட்டினா உன்னதான்டின்னு…”-
    அதற்கும் சிரித்தாள்….

    அவள் சிரிப்போடு நான் என் அழுகையை மறந்த காலங்கள்தான் பொற்காலம்… மழை ரசிக்கத் தொடங்கிய காலம் அது… மறுகன்னம் காட்டத் துவங்கிய காலம் அது..காலங்களின் காலம் அது…. அது முழுக்க நாங்கள் மட்டுமே…

    அதன் பிறகு… மலை ரசித்தோம்… மௌனம் புசித்தோம்… முத்தங்களில் இதழ்கள் புதுமைகள் படைத்தன… நாட்கள்….. வருடங்கள்……. நகர…… நகர……. நான் முதுகலைப் பட்டம் வாங்க போய் விட, அவள் இளங்கலை பட்டத்துக்குள் நுழைந்தாள்… வயதும் ஆனது… ஒரு நாள், அந்த ஒரு நாள், நான் மீண்டும் தூக்கம் இல்லாமல் போன அந்த நாள்.. அதை நன்றாக ரீவைண்டிங் செய்து பார்க்க முடிகிறது……

    ஆம்….அவள் என்னை விட கொஞ்சம் உயரமாகியிருந்தாள்… இல்லையே……… நன்றாகத் தெரியும்.. நாங்கள் பழக ஆரம்பிக்கும் போது, அவள் என்னை விட உயரம் குறைவு.. ஆனால் இப்போது எப்படி உயரமாகியிருக்கிறாள்…?…

    “ஹீல்சா”- என்று பார்த்தேன்…. இல்லை…

    அதன் பிறகான நாட்களில்…… அவள் நன்றாக என்னை விட வளர்ந்து விட்டிருந்தாள்… இப்போது அவள் நிஜமாலுமே ஒரு பிரெஞ்சுக்காரியைப் போல தான் இருந்தாள்…இன்னும் இன்னும் அழகாக ஆகி இருந்தாள்….. என்னால் சைக்கிளில் அமர்ந்து கொண்டுதான் அவளிடம் பேச முடிந்தது..

    “ஏன் மாமா.. கிட்ட வரவே மாட்டேங்கற”- என்று ஒரு நாள் கேட்டாள்…வழக்கம் போல ஒரு பார்வை கொண்டு…

    நான் தடுமாறி எக்கி… ஹீல்ஸ் வைத்த ஷூவுடன்….. அருகில் சென்று நின்றும், என்னால் பேச முடியவில்லை…. என் கவனம் முழுக்க உயரத்தில் நின்று விட… அவள் பேசிய வார்த்தைகள் உள்ளுக்குள் போக மறுத்தது… இனம் புரியாத தவிப்புக்குள் நான் கரை புரளத் தொடங்கினேன்…பின் சின்ன சின்ன சண்டைகளை நானே முளைக்க வைத்தேன்…. காரணம் அறியேன் என்று கூறினாலும்… கனன்று கொண்டிருந்த உயரம் என்னை இன்னும் இன்னும் தாழ்த்திக் கொண்டே இருந்தது……நான் அவளைத் தவிர்க்கத் தொடங்கினேன்….தவிர்த்தலின் ஊடாக ஒரு மெல்லிய கோடு.. ரத்தம் கசிவதைக் கண்டேன்…

    “உயரம் ஒரு பொருட்டா.. காதலில்..”- என்று இன்று என்னால் வாய் கிழிய பேச முடியும்.. ஆனால் அன்று பேசவும் முடியவில்லை.. யாரிடமும் பகிரவும் முடியவில்லை…முடியாதவைக்குள்… முயங்கி சரிந்து கொண்டேன்…

    “ஏன் மாமா என்னை பிடிக்கலையா…..?” என்று ஒரு நாள் அழுது கொண்டே கேட்டாள்……

    நான் பதிலே பேசாமல்… கடந்து விட்டேன்… காரணமே இல்லாமல் ஏன் பிரிய வேண்டும் என்று நண்பர்கள் கூட கேட்டார்கள்… ஆனால் யாரிடமும் எதுவும் பேச இயலவில்லை…. இயலாமையின் உச்சம் கூட கீழே எங்கேயோ இருந்தது போலதான் இருந்தது…

    என் ரசனைகள் உடைந்து சுக்கு நூறாகின… நான் நிறைய பயந்து நடுங்கிய நாட்கள் அவை… அவளும் நானும் நாளை ஒன்றாக நடந்து சென்றால் ஊர் பேசும் கேலியை என்ன செய்வது என்று உள்ளுக்குள் புழுங்கிய நாட்கள் அவை…..வேண்டும் என்றே சைக்கிளைக் கழுவியபடி கிரிக்கெட் விளையாடும் என்னை பார்த்து அழுது கொண்டே நிற்பாள்.. நான் அவள் பக்கம் திரும்பவே மாட்டேன்…திரும்ப திரும்ப திரும்பிய காலங்கள் திரும்பாலே திரும்பிக் கொண்டது போல அவள் திரும்பாமலே என் திரும்பதலுக்கு நிற்பாள்… நான் அப்போதும் திரும்ப மாட்டேன்…. திரும்புதலில் நேர்கோடு புரிய மறுக்கின்றன.. எனக்கும் அன்று புரியவில்லை… இரவினில் அவள் வாசலைக் கடப்பதை தவிர்க்கத் தொடங்கினேன்… அவள் பெயர் எழுதிய என் புத்தக பக்கங்களைக் கிழித்தெறிந்தேன்… என்னால் பழையபடி யாரிடமும் சிரிக்க முடியவில்லை….. சிரிப்பது போல கூட இருக்க முடியவில்லை…. மொத்தத்தில் இருக்கவே முடியவில்லை……… ஒரு ஓட்டம் துரத்திய மலை உச்சியில் கால் வலிக்க நின்ற காலங்களை நினைக்காத போதும் நான் மலை உச்சியில் தனியாக சுற்றி..நகர்ந்து நகர்ந்து… ஒரு குட்டைப் பாவாடையைக் கடந்து வர எனக்கு அத்தனை சுலபமாகவும் இருந்து…. ஒரு சிவப்பு பனியனை நான் சுத்தமாக மறந்து போனேன்… மறப்பது ஒன்றுமே இல்லை…… மண்ணாங்கட்டி மனம்.. அதையும் சேர்த்து தான் சொல்கிறேன்……

    நாட்கள்….. மாதங்கள்.. வருடங்கள்… கடந்த ஒரு பத்தாண்டுக்கு பின்னால் ஒரு நண்பனின் திருமணத்திற்கு கோவையில் உள்ள பிரபலமான ஒரு ஆலயத்துக்கு சென்றிருந்தேன்..

    அங்கே ஒரு சிஸ்டர்… என்னையே பார்த்துக் கொண்டிருந்தது போல இருந்தது…… திருமணம் முடிந்து சாப்பிட ஹாலுக்குள் செல்லும் போது நிதானமாக என் அருகே வந்து நின்றார் அந்த சிஸ்டர்…

    நான் பார்த்ததும் தெரிந்து கொண்டேன்……. மனதுக்குள் கிழிந்து பறந்த ஒரு கோடி விவிலியங்கள் எரிந்து கொண்டிருப்பதைப் போல உணர்ந்தேன்…….

    “என்னைத் தெரியுதா?….. என்றார்…….

    நான் தலையைப் பிடித்து கொண்டு சரிந்தேன்… எனக்கு அருகே அத்தனை உயரத்தில் ஒரு ஏசுவைப் போல நின்று கொண்டிருந்தாள் எமிலி மெடில்டா….

    அவள் எனக்கு எழுதிய கடைசி கடிதத்தின் கடைசி வரிகள் அங்கே மீண்டும் ஒலிப்பதாகத் தோன்றியது…………

    “என் ஆதியும் நீயே என் அந்தமும் நீயே…”

    Share
  • சிவப்பு பக்கங்கள்

    – கவிஜி

    “இந்த விருது கிடைக்கும்னு நினைச்சிங்களா…..?”

    mystery 340“இந்த விருதுன்னு இல்ல… ஏதோ ஒரு விருது கிடைக்கும்னு நினைச்சேன்……”

    “இன்னொரு கேள்வி….”

    “கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டீங்க.. அதுல என்ன இன்னொரு கேள்வி.. எல்லாமே கேள்வி தானே…”

    “உங்க எழுத்து மாதிரியேதான் சார் இருக்கு.. உங்க பதிலும்…”

    “நன்றினு சொல்லிட்டு உங்கள கடந்து போகத்தான் நினைக்கறேன்… ரெண்டுமே முடியல…”

    (சிறு புன்னகை இரண்டு பக்கமும்…)

    “அதென்ன சார்… எழுத்தாளன் அப்டினாவே… ஒரு மாதிரி கோபமா.. முரட்டுத்தனமா இருக்கனுமா என்ன…?”

    “அப்டி எல்லாம் இல்லையே… என்ன மாதிரி தாடி வச்சிட்டு குடுமி கூட வெச்சுக்கலாமே…”

    (சிறு மௌனம் இரண்டு பக்கமும்) -(சில கிளிக்ஸ்…..)

    “கடைசி கேள்வி…..”

    “அப்போ… வில்லங்கம்தான்…”

    “ஹ ஹ ஹா….”

    “சிலை சிரிக்கற மாதிரி…(மைண்ட் வாய்ஸ்)….ம்ம்ம்ம்

    “அது ஏன் உங்க எல்லாக் கதைகளும்,…. ஒரு மாதிரி அமானுஷ்யங்களாவே இருக்கு…..”

    அறைக்குள் அங்கும் இங்கும் அலைந்தான் பிரான்சிஸ் எடின் பாரோ…அந்தக் கேள்வி நீரலையாய்… வெப்பச் சலனமாய், வேகத் தடையாய் மூளைக்குள் ஒளிந்து கொண்டும்… ஓடிக் கொண்டும் இருந்தது….. சரியான கேள்விதான்….எல்லா கேள்விக்கும் பதில் வேண்டுமா என்ன…? ஏன் அப்படிக் கேட்டாள்…! அதுவும் உண்மை தானே.. இது வரை எழுதிய 65 சிறுகதைகளிலும்… அமானுஷ்யங்கள்தானே கிளைமேக்ஸாக இருக்கிறது… சரி இருந்தால் என்ன…? சிலருக்கு காதல் பாணி.. சிலருக்கு காமம்.. சிலருக்கு கொலை.. சிலருக்கு கடவுள். சிலருக்கு வன்முறை… அவனுக்கு பேய் ஆவி.. பூதம்…. எத்தனை சொன்னாலும் இந்த மனம் மட்டும் சமாதானம் ஆவதே இல்லை.. இல்லாத தொடர்புக்கு, இருப்பது போல ஒரு கூட்டு முறை பிராத்தனையை இறக்கிக் கொண்டே துளி துளியாய், பின் மொத்தமாய் கயிறாய் விட்டு விடும் மாய யதார்த்தமாக… அவனுக்குள் இறங்கிக் கொண்டே இருந்தது கேள்வி… இதே கேள்வியை அம்மு கூட ஒரு முறை கேட்டதுண்டு….அவன் சொன்ன பதிலில் அவளின் பதில்கள் கேள்விகளானது வேறு விஷயம்…

    அம்முகூட ஒரு கதையின் கதாபாத்திரமாகத்தான் அவனுக்கு அறிமுகம் ஆனாள்…….. கதைகளின் வாயிலாக அவனுக்கென்று ஒரு உலகை சிருஸ்டித்துக் கொண்ட கதவற்ற புத்தகம்தான் எடின்….இரவைத் தூங்குவதற்கு என்று எவன் சொன்னது.. அது கொண்டாடுவதற்கு… இரவின் கண்களுக்குள் நீ தெரியும் நாளில்தான் பூமியின் மறுபக்கம் உனக்குள் பிரவேசிக்கும் என்பது அவனின் சித்தாந்தம்… சித்தாந்த தத்துவங்களில் அடிக் கோடிட்ட வரியாக இருப்பதே அவனின் பேனாவின் வலிமை…. உன் பேனாவில் மட்டும் வலி’மை’யை ஊற்றி எழுதுகிறாய் என்று அம்மு அடிக்கடி சொல்வது, அவனுக்குள் ஊற்றெடுத்த பெருவாகம் என்பது விதி.. விதி என்பது மேலே கையைக் காட்டும் தலை கீழ் விகிதமல்ல.. அது காலச் சூத்திரம்…

    திறந்திருந்த ஜன்னலில் இரவின் நீலம்…….. தொலைந்து கொண்டே போனதை, முடிந்தவரையில் பார்த்தவனுக்கு அந்தக் கேள்வி மட்டும் பெரும் சித்துகளை கொட்டிக் கொண்டேயிருந்தது…. இருப்பதும் ஒன்றுதான்.. இல்லாமல் போவதும் ஒன்றுதான்… மாற்றி யோசித்த கணங்களை பின்னோக்கி, வாரிய மண் புதையலாய், சூடு பனியாகி கொண்ட வெள்ளோட்டக் கரையில் வழிந்திட்ட நிழல் யாருடையது என்பதுபோல அந்தக் கேள்வி.. கேள்வியின் நாயகன் அல்ல.. நாயகி… இப்படி ஒரு கேள்வியை ஏன் கேட்டாள்.. கேட்கத்தானே கேள்வி… என்று மீண்டும் மீண்டும் யோசிக்கத் தொடங்கினான்.. தொடக்கத்தைப் போல சோம்பல் எதுவும் இல்லை… மதுவுக்குள் முகம் பிரகாசித்தது..அவனை அவனே இப்போது கேட்டுக் கொண்டான்..

    ஏன்… நீ ….. ஏன் அமானுஷ்யக் கதைகளையே எழுதுகிறாய்…?….. பிடித்திருக்கிறது என்று சொல்லி நழுவிச் செல்ல தோன்றவில்லை…

    போதை ஏற
    புத்தி மாறுவதில்லை
    எழுதுபவனுக்கு…

    வாய் கிழியப்
    பேசும் நாளில்
    போதையே இருப்பதில்லை…

    இருப்பது போதையாக
    இருப்பினும் அது
    இரவுக்குள் இருப்பதால் திறக்கப்படவில்லை……

    அட கவிதை கொட்டும் கணங்களிலும் கனத்துக் கிடக்கும் கேள்வியை என்ன செய்வது…..?

    அவனுக்கு ஒரு பழக்கம் இருந்தது… இரவுகளில்….வீட்டில் மின்சாரம் உபயோகிப்பது இல்லை…எப்போதும் இருள் சூழ்ந்த சூழலே அவனுக்கு வெளிச்சம்……. வீட்டுக்குள் எங்கு, என்ன இருக்கிறது என்று அவனுக்கு நன்றாக தெரியும்….. இருட்டுக்குள் நடந்து கொண்டே ஒரு பேயைப் போல இருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுவார்கள், ஏதோ பேய் கூட குடும்பம் நடத்தியது போல…… அவன் நிழலைக் கண்டுதான் பின் வீட்டுத் தாத்தா இறந்து போனார் என்பது காலத்தால் அழிக்க முடியாத குற்றச்சாட்டு….

    அதற்கு அவன் கூறிய பதில்-

    “இறப்பவன் நிழல் பார்க்காமல் கூட இறப்பான்..” என்பது.

    தலையை பிடித்துக் கொண்ட இன்னொரு பாட்டி இன்னும் மருத்துவமனையில் இருப்பதாக தகவல்… வெறும் தகவல்களை அவன் ஒருபோதும் உள் வாங்குவதேயில்லை… கூடு விட்டு கூடு பாயும் சிந்தனைகளை ஒன்று குவிக்கவே, இருள் என்பது கொஞ்ச வெளிச்சம் என்பான் பாரதியைப் போலவே… இங்கு எல்லாமே மாதிரிதான்.. போலதான்.. என்பது…அறிவின் கூட்டு சதி…

    அவன் யோசித்தான்…. இன்னும் ஒரு போத்தல் வோல்கா தேசம் உள்ளே போனது…. அறை சுற்றத் தொடங்கியது கேள்வியாக…

    “ஏன் அமானுஷ்யக் கதைகளையே எழுதுகிறேன்…….? நான் எங்கு எழுதுகிறேன்…..(!)” என்று உள்ளுக்குள் இருந்து ஒரு பதில் அன்று முதன் முதலாக தூண்டில் போட்டது. அகப்பட்டவன் போல…… கண்ணாடி முன் நின்று பார்த்தான். கண்ணாடியும் கருப்பாக கொஞ்சம் வெளிச்சத்தில் அவனைப் போலவே பார்த்தது…. நன்றாக நினைவுக் கிண்ணங்கள் உருளத் தொடங்கின…… எந்தக் கேள்விக்குள் அவன் போக தயங்கினானோ அந்தக் கேள்வி அவனைக் கை பிடித்து கால் பிடித்து இழுத்துப் போனது… இதுவரை எழுதிய கதைகளின் தலைப்பை ஒவ்வொன்றாக யோசித்தான்….. ஜன்னலுக்குள் ஒரு வால் நட்சத்திரம் சிதறி விழுந்தது போல இருக்க ஜன்னல் தன் அளவைக் குறுக்கிக் கொண்டு நட்சத்திரத்துக்கு வழி விட்டதாக ஒரு காட்சி… வாராமலே போனது….

    “நியந்தாவின் வண்ணங்கள், குடைக்குள் மழை, 1984 டிச 28, யாதுமாகிய நிவ்யா, தசையினை தீ சுடினும், ஜிப்ரானின் செல்மா, குருதி சொட்டும் கழுகின் வட்டங்கள், யாரது இடைவிடாமல் இசைப்பது”- இப்படி எல்லாக் கதைகளுமே அமானுஷ்யங்களோடு முடிந்தவைதான் …. அவனுக்குள் ஒரு கிணறு மூடிக் கொண்டே வருவது போல… ஒரு வகை அதீத சப்தம்…. புகை போல கிளம்பிக் கொண்டே இருந்தது….. அவன் உணரத் தொடங்கினான்… உயரப் பறப்பது போல.. உலகின் சிறகை வெட்டிக் கொண்டே வெளி எங்கும் பால்வீதி தூவிக் கொண்டே ஒரு புள்ளிக்குள் கவனம் சிதைக்கிறான்… ஆம்.. அந்த கதைகளை அவன் எழுதத் துவங்கும் போது இருந்த கரு, மெல்ல மெல்ல ஒரு அமானுஷ்யக் கதைக்குள், கருவுக்குள், முடிவுக்குள் சென்று விடுவதை உணர முடிந்தது.. திக் என்று வியர்த்துக் கொட்டியது… சூடு…

    எழுதும் போது இருந்த மன நிலை… உடல் நிலை.. அறை சூழல் என்று ஒவ்வொன்றாக நினைவு படுத்தி பார்த்தான்…..ம்ஹும்…. ஒன்றும்… நினைவுக்கு வரவில்லை…..

    “அது எப்படி, நான் எழுத நினைத்த கதை தானாக ஒரு அமானுஷ்யக் கதையாக மாறும்….?”-

    முதன் முதலாக ஒரு நடுக்கம் தோன்றியது… முதன் முதலாக இருட்டுக்குள் ஒரு புள்ளி அவன் கண்களுக்குள் சுழன்றது.. அது தீவிர தோட்டாவின் வேகம் போல வெளி துளைத்துப் போய்க் கொண்டேயிருந்தது…மெழுகுவர்த்தி பற்ற வைத்தான்… அது பயந்து கொண்டே அழுவது போல இருந்தது… கீற்று வெளிச்சம், இரவைக் கீறிய வெளிச்சம்….

    இரவைக் கெடுக்கும் எதையும் அவன் விரும்புவதில்லை… ஆனாலும் சோதனை முயற்சிக்காக அவன் அதை செய்தான்…. அது எப்படி… தானாக கதை மாறும்…..?

    அப்படி என்றால்… என்னோடு யாரோ இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்..”-அவன் நெற்றி சுருக்கி யோசித்தான்…

    அவன் எழுதிய அனைத்து கதைகளுமே இதே அறையில் வைத்து அதிகாலை வெளிச்சத்தில் எழுதுதவைகள் தானே… இரவுகளில் எழுதுவது அவனுக்கு பிடிக்காது… எழுதுவதற்கா இரவுகள்…? இரவுகள் இரவுகளுக்காக… “அயோ…………………………”

    அவன் தலையை பிடித்துக் கொண்டான்… இழுத்துக் கொண்டே செல்லும் கற்பனைக் கரப்பான் பூச்சிகளின் மெல்லசைவில் கூச்செறியும் மயிர்களின் புல்லரிப்பில் கட்டுப் படுத்திக் கொண்டே… எழுதத் தொடங்கினான்…

    ஒரு சாதாரண எழுத்தாளனின் கதை…

    “ஒரு எழுத்தாளன் கஷ்டப் பட்டு எழுதி ஒரு நாவலை முடிக்கிறான்…. அதை பிரசுரிக்க முடியாமல் அவனுக்கு பைத்தியம் பிடிக்கிறது….” இதுதான் ஒன் லைன்… …. இதுல அமானுஷ்யம் எங்கேயும் இல்லை… பார்க்கலாம்… இப்படிதானே அவன் எல்லாக் கதைகளையும் ஆரம்பிக்கிறான்…. ஆனால் எழுதி முடித்து அச்சாகி வரும் போது.. அது அமானுஷ்யக் கதையாக முடிந்து, பலத்த ஆதரவையும் பெற்று விடுவதன் முடிச்சை இன்று எப்படியாவது அவிழ்ந்து விட வேண்டும் என்றுதான் இதோ எழுதிக் கொண்டிருக்கிறான்….

    அவன் எழுத எழுத அந்த அறை ஒரு வித இளஞ்சிவப்புக்குள் இருந்து கொண்டிருப்பது போன்ற ஒரு நொடிநேரப் பயணங்களை உணர முடிந்தது…..முன் அறையில் யாரோ இருப்பது போல தோன்றும் நிமிடங்கள் வரத் தொடங்கியது…. கண்டிப்பாக தெரியும்…. தெரிவது போல ஒரு கண்டிப்பும் இருக்கத்தான் செய்தது….. மனமெங்கும்.. மூளையெங்கும்… அறையெங்கும்… சொட்டு சொட்டாய் கொட்டிக் கொண்டேயிருக்கும் இருளின் ஊடாக.. நிழலற்ற ஒன்றாய் ஏதோ நடப்பதும், இருப்பதும்… அமர்வதும்..என்று சூழல் சூழ்ந்து கொண்டேயிருந்தது….. அவன் விரல்களில் எழுதுகோல், நாட்டியம் ஆடுவதைக் கண்டு கொண்டே யாரோ கை தட்டுவது போல… மூச்சடைத்த காற்றின் வேகம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு வேகமாய் சுழலத் தொடங்கியது…..

    கதையை முடித்து விட்டு… தலை நிமிர்ந்தான்….. அதுவரை அவனை யாரோ பார்த்து கொண்டு நின்றுது போல ஏதோ ஒன்று சட்டென மறையத் தொடங்கியது… மறைவதும் தோன்றுவதும் என்ன வகை கட்சி பிழைகள் என்று யோசித்துக் கொண்டே படிக்கத் தொடங்கினான் எழுதிய கதையை… திக் திக் நொடிகளுக்குள் பக் பக்.. பட படப்புடன்…. அப்படி எதுவும் இருந்து விடக் கூடாது.. என்ற பயத்துடன் படிக்கத் தொடங்கினான்……. கதை நன்றாக போய்க் கொண்டிருக்கிறது……

    “தமிழ்நாட்டில் எழுத்தாளனாய் இருப்பதை போல ஒரு சாபம் வேறொன்றுமில்லை……. அயல் தேசத்தார் எழுத்தாளனைக் கொண்டாடுகிறார்கள்.. இங்கோ.. ‘ஏன் நல்ல படிக்க மாட்டியா…….(?) எழுத போய்ட்ட’ என்கிறார்கள்.. அட முட்டாள்களே… எழுதுபவன்… ஆக சிறந்த படிப்பாளியாகத்தான் இருக்க முடியும்.. படிப்பு என்பதே பள்ளி, கல்லூரி, முனைவர் பட்டம் என்று நினைக்கும் கூமுட்டைகளுக்கு எங்கு இருந்து கதையை ஆரம்பிப்பது….?”

    படிக்க படிக்கவே அவ்வப்போது திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டான்… அவன் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம்.. இருளுக்குள் ஒரு வெளிச்சம் இடம் மாறிக் கொண்டே இருப்பதை உணர முடிந்தது…. நன்றாக தெரிந்தது, முதுகுக்கு பின்னால் யாரோ அமர்ந்திருப்பது…!!!!

    விட்ட இடத்திலிருந்து மீண்டும்.. படிக்கத் தொடங்கினான்… அவன் கண்கள் இன்னும் கூரானது….

    “இல்லை இது நான் எழுதவில்லை…. நான் எழுதவில்லை…நான் எழுதவே இல்லை… ஒரு வேளை எழுதியிருப்பேனோ…?” அவன் யோசித்தான்..

    சற்று கடந்து விட்ட கணங்களை பின்னோக்கி வலுக்கட்டாயமாக இழுத்து வந்து பிரித்துப் பார்த்தான்.. இல்லை.. அவன் எழுத வந்தது… “நாவல் பிரசுரம் ஆகாத மனநிலை, மெல்ல மெல்ல மனப் பிறழ்வுக்குள் போவது பற்றி ..” ஆனால் எழுதி இருப்பது……, அவன் கோபத்தில் தன் தலையை சுவற்றில் ஓங்கி ஓங்கி முட்டுகிறான்…. அவனோடு.. யாரோ இருக்கிறார்கள்.. அவனை ‘போ..போ.. போய்.. தூக்கில் தொங்கு, தொங்கு’ என்று கொக்கரிக்கிறார்கள்.. அந்த அறையே மெழுகுவர்த்திகளால் நிறைந்து காணப் படுகிறது ..

    ‘மரணத்தைப் போல ஒரு ஜோதி எங்கும் இல்லை.. போ.. உன் மரணத்தை நடத்து..அது ஒரு கொண்டாட்டம்.. விழா எடு… அழகான உயர் தர கயிறு கொண்டு உன் கழுத்தில் சுருக்கு போட்டுக் கொள்…மிக மிக மென்மையாக சுருக்கில் தொங்கு.. கால்களை பட படவென உராயாதே… கழுத்து இறுகும் போது, நுண்ணிய நரம்புகள் அறுபட அறுபட அதை அனுபவி… உணர்… மரணத்தை உள் வாங்கு.. பயப்படாதே.. “காலா சற்றே என் காலடியில் வாடா.. சற்றே உன்னை மிதிக்கிறேன்..” என்பது போல.. மிதி… சிரி.. கண்கள் வெளியே தள்ளும்… விடாதே.. நாக்கு வெளியே வரும் விடாதே… அற்புதமான கணங்களை கடந்து செல்… உன் சுதந்திரம் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறது….. போ…”- சொல்வது சாத்தனா கடவுளா.. என்று திரும்பிப் பார்க்கையில்… நடுக்கம்,உடம்பு, மூளை, மனம் எங்கும்……

    அந்த அறையில் நீண்ட நெடிய இரைச்சல் ஓங்காரமிடத் தொடங்கியது……… கதை முடிந்த இடத்தில்… ‘பிரான்சிஸ் எடின் பாரோ” என்று கையொப்பம் இட்டு… 20 10 1870 என்று எழுதி இருந்தது…. இன்னும் தூக்கி வாரிப் போட்டது… எதிரே இருந்த கேலண்டரில் 20 10 2014 என்று இருந்தது….. தலை சுற்றியது…… எழுதிய கதையில் பாதியை அவன் எழுதவேயில்லை… என்று உணர உணரவே…….

    யாரோ கதவைத் திறக்கும் சப்தம் கேட்டது….

    திறந்து கொண்டு கையில் விருதோடு உள்ளே வந்த பிரான்சிஸ் எடின் பாரோ.. … இருட்டு வீட்டுக்குள் ஜன்னல் வழியே தெரிந்த வெளிச்சத்தில் கிடந்த காகிதங்களைக் கண்டான்……

    “இன்னைக்கு எழுதி பார்த்து, ஏன் எல்லாமே அமானுஷ்யக் கதைகளா ஆகுதுன்னு கண்டு பிடிச்சிடனும்” என்று முனங்கிக் கொண்டே எழுதத் தொடங்கினான்…..

    காகிதத்தில் ஏற்கனவே பதிந்திருந்த எழுத்துகள் உயிர் பெறத் தொடங்கின….அவன் பின்னால் யாரோ அவனைப் பார்த்துக் கொண்டே நிற்கிறார்கள்…

    Share
  • ஆன்மீகமும் நானும் (21)

    கல்பட்டு நடராஜன்

    நீங்களும் ஆகலாம் செத்தும் கொடுத்த சீதக்காதி

     

     

    ஒருவர் இறந்த பின் அவரது உடல் அழுகிக் கிருமிகளை உண்டாக்கக் கூடிய ஒன்று. ஆகவே அதை உடனே அப்புறப் படுத்தியாக வேண்டும். இல்லை யென்றால் அக்கிருமிகள் அருகில் உள்ள மற்றவர்களைப் பாதிக்கும்.

    இறந்தவர்களின் உடல்களை நம்மிடையே இருந்து அப்புறப் படுத்துவதில் பழக்கங்கள், மதத்திற்கு மதம், சாதிக்குச் சாதி வேறு படுகிறது. கிருஸ்துவர்களும், முஸ்லீம்களும் அவற்றைப் புதைக்கின்றனர். இந்துக்களில் சிலர் புதைக்கின்றனர். சிலர் எரிக்கின்றனர். பார்ஸீக்கள் என்றழைக்கப் படும் சூரிய வழிபாடு செய்யும் சொராஷ்ற்றியர்கள் இறந்தவர்களின் உடலை உயரமான ஒரு இடத்தில் அதற்கெனெப் பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட நிசப்தக் கிணறு (Tower of silence) என்ற ஒன்றில் எறிந்து விடுகின்றனர். அது கழுகு, காகம் போன்ற பறவைகளுக்கு உணவாகிறது.

    புதைப்பதால் இடம் ஆக்கிரமித்துக் கொள்ளப் படுகிறது. அது மட்டுமின்றிப் பின் நாட்களில் அவற்றைத் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் சேதப் படுத்தி விட்டால் மக்களிடையே கலவரங்களுக்கு வழி வகுக்கிறது.

    எரிப்பதால் பஞ்ச பூதங்களால் ஆன இவ்வுடல் அந்த பஞ்ச பூதங்களுடனேயே சேர்க்கப் படுகிறது. அதிக நிலப் பரப்பும் வீணாவதில்லை.

    ஆனால் இந்த மூன்று வழிகளைத் தவிற நான்காவதாக ஒரு வழியும் இருக்கிறது. அதுதான் உடல் உறுப்புகள் தானம். இறந்தவரின் உடல் மூன்று மணி நேரத்திற்குள் அதற்கான வசதிகள் கொண்ட மருத்துவமனைக்குச் சேர்ப்பித்தால் அந்த உடலில் இருந்து கண், கல்லீரல், மூத்திரக் காய்கள், இருதயத்தில் உள்ள வால்வுகள் போன்றவை அறுவடை செய்யப் பட்டு தேவையானவர்களுக்குப் பொருத்தப் பட்டு அவர்களுக்கு உயிர் தானம் அளிக்கப் படும். இதனால் நீங்களும் செத்தும் கொடுத்த சீதக்காதி ஆகலாம். என்றுமே சிரஞ்சீவியாக வாழலாம்.

    எனது மனைவியும், நானும் எங்கள் உடலை ராமச்சந்திரா மருத்துவ மனைக்குத் தானமாக அளிக்க ஒப்புதல் கடிதங்கள் கொடுத்துப் பதிவு செய்து கொண்டுள்ளோம். என்ன ஒன்று, இவ் விஷயம் எனது மூன்று மகள்களின் சம்மதம் வாங்கிக் கொண்டு செய்யப் பட்ட ஒன்று என்றாலும் நாங்கள் இறக்கும்போது அருகில் இருப்பவர்கள் மருத்துவ மனைக்குத் தெரியப் படுத்தி உடலினை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

    (தொடரும்….)

    Share
  • ஆன்மீகமும் நானும் .. (18)

    நடராஜன் கல்பட்டு 

    மூன்றாம் முறை அய்யப்ப தரிசனம்

    1979. பங்களூரில் பணி புரிந்து வந்த போது மீண்டும் அய்யப்பனைத் தரிசிக்கவேண்டும் என்னும் எண்ணம் வந்தது. அங்கிருந்த ஒரு குழுமத்துடன் இணைந்து பங்குனி மாதம் ஒரு நாள் மாலை அணிந்தேன். மாலை அணிந்து இரு வாரங்களுக்குப் பின் நான் பதினைந்து நாட்களுக்கு பம்பாய் செல்ல வேண்டி வந்தது. பின் அங்கிருந்து நான்கைந்து நாட்கள் கொச்சிக்குச் செல்லவேண்டும். நான் சேர்ந்திருந்த அய்யப்ப பக்தர் குழு பங்களூரில் இருந்து கொச்சி வரை ரயிலிலும் அங்கிருந்து வாடகைக் கார்களிலும் செல்வதாய் இருந்தது. ஆகவே நான் அவர்களிடம் கொச்சியில் சேர்ந்து கொள்வதாகச் சொல்லி விட்டு பம்பாய் கிளம்பினேன்.

    பம்பாய் கிளம்பு முன் எனது உறவினர் ஒருவர் தன் பையன் பம்பாய் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் சேர்ந்திருப்பதாகவும் அவன் தாய் தந்தையைப் பிரிந்து இருப்பதற்கு மிகவும் வருந்துவதாகவும், அடிக்கடி அவன் திரும்ப வந்து விடுவேன் எனச் சொல்வதாகவும், அவனை நான் சென்று பார்த்து புத்திமதி சொல்லி விட்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.. அதனால் ஒரு ஞாயிறு மத்தியானம் 11-00 மணிக்கு மாதுங்கா சென்றடைந்தேன். கால்களில் பாத ரக்ஷை இல்லை. ஆடை கருப்பு வண்ணம். வெய்யிலில் உருகி இருந்த தார் கால்களில் ஒட்டிக் கொண்டு பொரித்தது. ரயில் நிலயத்தில் இருந்து பி.ஐ.டீ. யை நோக்கி நடந்தேன். ஆனால் அன்று என் உறவினரின் மகன் சக மாணவர்களுடன் எங்கோ வெளியே போயிருந்தான். பின் ரயில் நிலயம் நோக்கி நடந்தேன்.

    ரயில் நிலையம் அருகே சாலையில் நான்காக மடித்த காகிதத் துண்டு கிடந்தது. உடனே குனிந்து அதைப் பொறுக்கி எடுத்ததேன். பிரித்துப் பார்த்தால் ஐந்து புதிய நூறு ரூபாய் நோட்டுக்கள். ஆரம்பித்தது என் மனத்துள் ஒரு குழப்பம்.

    ‘ஐயோ பாவம் யாரோ ஒருவர் இதைத் தவற விட்டிருக்க வேண்டும். இதைக் காவல் நிலையத்தில் சேர்த்து விட்டால் அவ்ருக்குப்போய்ச் சேர்ந்து விடும். நடப்போம் காவல் நிலையத்திற்கு’ என்று மீண்டும் பி.ஐ.டீ. யை நோக்கி நடந்தேன். அதன் அருகில்தான் இருந்தது காவல் நிலையம்.

    பாதி வழியில் ஒரு சந்தேகம், ‘துலைத்தவர் புகார் செய்யாதிருந்தால் காவல்காரர்கள் அல்லவோ இதை எடுத்துக் கொண்டு விடுவார்கள்? நானும்தான் எவ்வளவோ முறை பணத்தைத் துலைத்திருக்கிறேன். ஒருக்கால் அவற்றுக்கு பதிலாகத்தான் கடவுள் இதை எனக்குக் கொடுத்துள்ளாரோ?’ திரும்பினேன் ரயில் நிலயம் நோக்கி.

    மீண்டும் ஒரு குழப்பம். ‘அப்படி நானே வைத்துக் கொண்டால் அது பிறர் பொருளுக்கு ஆசைப் பட்டது ஆகி விடாது?’

    ‘சரி இப்போது போவாயில் இருக்கும் சின்மயா மிஷனின் தலமை அலுவலகத்திற்கு தானே போய்க் கொண்டிருக்கிறோம். அங்கு சுவாமிஜீயிடமே கேட்டு விடுவோம்’ என்று நினைத்து பேருந்தில் ஏறினேன் போவாய்க்கு.

    எனது துரதிருஷ்டம் சுவாமிகள் சின்மயானந்தா, தயானந்தா, மற்றும் ஹரிநாமானந்தா ஆகிய மூவரும் வெளியூர் சென்றிருந்தனர். ஏமாற்றத்துடன் திரும்பினேன் நான் தங்கி இருந்த இடத்திற்கு. அந்தப் பணத்தை செலவழித்து விடக் கூடாது என்பதற்காக என் வங்கிக் கணக்கில் செலுத்தினேன். பின் கொச்சி சென்றேன்..

    கொச்சியில் இருந்த மேலாளர் கேட்டார், “நடராஜன் சாயங்காலம் என்ன செய்யப் போகிறாய்?” என்று.

    “என்ன செய்ய? குளித்து விட்டு ரேடியோகேட்டுக் கொண்டு உட்கார்வேன். வேறு என்ன செய்ய?”

    “நீ தங்கி இருக்கும் ஒட்டல் அருகே உள்ள மைதானத்தில் சுவாமி தயானந்தாவின் சொற்பொழிவுத் தொடர் இன்று ஆரம்பமாகிறதே. அங்கு போகலாமே” என்றார் அவர்.

    மாலை குளித்து விட்டு மைதானத்திற்குச் சென்று முதல் வரிசையில் அமர்ந்தேன். சுவாமிகள் பேச்சைத் துவக்கினார், “உடலுக்கும் மனதுக்குமான போராட்டம் – உண்மை மதிப்பும் ஏற்றுக் கொண்டுள்ள வேடத்திற்கேற்ற மதிப்பும்.”

    “சுட்டெரிக்கும் வெய்யிலில் பம்பாய்த் தெரு ஒன்றில் ஒருவன் நடந்து கொண்டிருக்கிறான். தெருவில் மடித்த நிலையில் காகிதத் துண்டுகள் கண்டு உடனே குனிந்து அதைப் பொறுக்குகிறான். அவனுக்குத் தெரியும் அதன் மதிப்பு. குழந்தையாய் இருந்தபோது எவ்வளவு நேரம் கையை நீட்டினாலும் கடைக்காரன் மிட்டாயை அவனுக்குத் தருவதில்லையே அம்மாவின் காசு கை மாறினால் ஒழிய.

    காகிதத்தைப் பொறுக்கியவன் அதை பிரித்துப் பார்க்கிறான். ஐந்து புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டுக்கள். ஆரம்பிக்கிறது அவன் மனத்துள் போராட்டம், காவல் நிலையம் சென்று அதை அவர்களிடம் சேர்ப்பதா அல்லது தானே வைத்துக் கொள்வதா என்று.”

    மேலும் தொடர்ந்தார் சுவாமீஜி தன் பேச்சை ‘உண்மை மதிப்பும் ஏற்றுள்ள மதிப்பும்’ (Intrinsic values and acquired values) என்பது பற்றி. அவர் பேசியபோது என் உடலில் உள்ள உரோமங்கள் எல்லாம் செங்குத்தாய் நின்றன. சொற்பொழிவு முடிந்ததும் அவருடனே அவர் அறைக்குச் சென்றேன். (என் அதிருஷ்டம் அவரும் நான் தங்கி இருந்த விடுதியில் தான் தங்கி இருந்தார்.) ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரை நெருங்கி என் மனக் குழப்பதிற்கு ஒரு விடை காண முடியவில்லை.

    மறு நாள் மதிய உணவிற்குப்பின் சுவாமிஜீயின் அறைக்குச் சென்றேன். அப்போது அங்கு அதிகக் கூட்டம் இல்லை. ஐந்தாறு நபர்களே இருந்தார்கள். அவரை நமஸ்கரித்து, “ஸ்வாமீஜீ நேற்று நீங்கள் பம்பாயில் சுட்டெரிக்கும் வெய்யிலில் நடந்த ஒருவன் கதையையும், அவனுக்குக் கிடைத்த ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள் பறியும் பின் அதனைத் தொடர்ந்த அவனது மனக் குழப்பத்தையும் பற்றிச் சொன்னீர்கள். ஆனால் குழப்பம் தீர்வதற்கான விடை தரவில்லையே” என்றேன்.

    “என்ன புதிர் போடறே நடராஜா?” என்றார் ஸ்வாமீஜீ.

    பத்து நாட்களுக்கு முன்பு எனக்கு பம்பாயில் நேர்ந்த அனுபவத்தைச் சொன்னேன்.

    “என்ன தாடி, மீசை வெச்சிண்டு இருக்கே?”

    “சபரி மலை போறேன் இன்னும் மூணு நாள்லெ.”

    “அப்பொ அந்த ஐநூறு ரூபாயெ அவன் உண்டியல்லெ சேத்தூடு. அவன் அது எங்கெ போய்ச் சேரணுமோ அங்கெ சேத்தூடுவான். ஒன் மனசுலெ இருக்கற பாரமும் கொறெஞ்சூடும்.”

    மறு நாள் என் அலுவலகத்தில் ஒரு காசோலையினைக் கொடுத்து ஐநூறு ரூபாய் வாங்கி இரண்டு நாட்களில் சபரி மலை உண்டியலில் சேர்த்தேன்.

    பின் ஒரு சமயம் சுவாமி ஹரிநாமானந்தாவைச் சந்தித்த போது அவரிடம் எனது விஜயவாடா, பம்பாய், கொச்சி அனுபவங்களைச் சொல்லிக் கேட்டேன், “எனக்கு ஏன் இப்படி யெல்லாம் நடக்கிறது?” என்று.

    “ஒரு சாதகன் முன்னால் இந்த மாதிரியான சில மின்னல்கள் தோன்றும். அதைத் தனக்கு சக்தி பிறந்து விட்டதாக எண்ணி இறுமாப்பு அடைந்தால் கொக்கென்று நினைத்த கொங்கணவனுக்கு ஏற்பட்ட கதி தான் எற்படும்” என்றார் அவர்.

    கொக்கென்று நினைத்த கொங்கணவன் கதை நாளை பார்ப்போம்.

    (தொடரும்….)

    Share