கல்பட்டு நடராஜன்

நீங்களும் ஆகலாம் செத்தும் கொடுத்த சீதக்காதி

 

 

ஒருவர் இறந்த பின் அவரது உடல் அழுகிக் கிருமிகளை உண்டாக்கக் கூடிய ஒன்று. ஆகவே அதை உடனே அப்புறப் படுத்தியாக வேண்டும். இல்லை யென்றால் அக்கிருமிகள் அருகில் உள்ள மற்றவர்களைப் பாதிக்கும்.

இறந்தவர்களின் உடல்களை நம்மிடையே இருந்து அப்புறப் படுத்துவதில் பழக்கங்கள், மதத்திற்கு மதம், சாதிக்குச் சாதி வேறு படுகிறது. கிருஸ்துவர்களும், முஸ்லீம்களும் அவற்றைப் புதைக்கின்றனர். இந்துக்களில் சிலர் புதைக்கின்றனர். சிலர் எரிக்கின்றனர். பார்ஸீக்கள் என்றழைக்கப் படும் சூரிய வழிபாடு செய்யும் சொராஷ்ற்றியர்கள் இறந்தவர்களின் உடலை உயரமான ஒரு இடத்தில் அதற்கெனெப் பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட நிசப்தக் கிணறு (Tower of silence) என்ற ஒன்றில் எறிந்து விடுகின்றனர். அது கழுகு, காகம் போன்ற பறவைகளுக்கு உணவாகிறது.

புதைப்பதால் இடம் ஆக்கிரமித்துக் கொள்ளப் படுகிறது. அது மட்டுமின்றிப் பின் நாட்களில் அவற்றைத் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் சேதப் படுத்தி விட்டால் மக்களிடையே கலவரங்களுக்கு வழி வகுக்கிறது.

எரிப்பதால் பஞ்ச பூதங்களால் ஆன இவ்வுடல் அந்த பஞ்ச பூதங்களுடனேயே சேர்க்கப் படுகிறது. அதிக நிலப் பரப்பும் வீணாவதில்லை.

ஆனால் இந்த மூன்று வழிகளைத் தவிற நான்காவதாக ஒரு வழியும் இருக்கிறது. அதுதான் உடல் உறுப்புகள் தானம். இறந்தவரின் உடல் மூன்று மணி நேரத்திற்குள் அதற்கான வசதிகள் கொண்ட மருத்துவமனைக்குச் சேர்ப்பித்தால் அந்த உடலில் இருந்து கண், கல்லீரல், மூத்திரக் காய்கள், இருதயத்தில் உள்ள வால்வுகள் போன்றவை அறுவடை செய்யப் பட்டு தேவையானவர்களுக்குப் பொருத்தப் பட்டு அவர்களுக்கு உயிர் தானம் அளிக்கப் படும். இதனால் நீங்களும் செத்தும் கொடுத்த சீதக்காதி ஆகலாம். என்றுமே சிரஞ்சீவியாக வாழலாம்.

எனது மனைவியும், நானும் எங்கள் உடலை ராமச்சந்திரா மருத்துவ மனைக்குத் தானமாக அளிக்க ஒப்புதல் கடிதங்கள் கொடுத்துப் பதிவு செய்து கொண்டுள்ளோம். என்ன ஒன்று, இவ் விஷயம் எனது மூன்று மகள்களின் சம்மதம் வாங்கிக் கொண்டு செய்யப் பட்ட ஒன்று என்றாலும் நாங்கள் இறக்கும்போது அருகில் இருப்பவர்கள் மருத்துவ மனைக்குத் தெரியப் படுத்தி உடலினை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

(தொடரும்….)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.