ஆன்மீகமும் நானும் .. (18)
நடராஜன் கல்பட்டு
மூன்றாம் முறை அய்யப்ப தரிசனம்
1979. பங்களூரில் பணி புரிந்து வந்த போது மீண்டும் அய்யப்பனைத் தரிசிக்கவேண்டும் என்னும் எண்ணம் வந்தது. அங்கிருந்த ஒரு குழுமத்துடன் இணைந்து பங்குனி மாதம் ஒரு நாள் மாலை அணிந்தேன். மாலை அணிந்து இரு வாரங்களுக்குப் பின் நான் பதினைந்து நாட்களுக்கு பம்பாய் செல்ல வேண்டி வந்தது. பின் அங்கிருந்து நான்கைந்து நாட்கள் கொச்சிக்குச் செல்லவேண்டும். நான் சேர்ந்திருந்த அய்யப்ப பக்தர் குழு பங்களூரில் இருந்து கொச்சி வரை ரயிலிலும் அங்கிருந்து வாடகைக் கார்களிலும் செல்வதாய் இருந்தது. ஆகவே நான் அவர்களிடம் கொச்சியில் சேர்ந்து கொள்வதாகச் சொல்லி விட்டு பம்பாய் கிளம்பினேன்.
பம்பாய் கிளம்பு முன் எனது உறவினர் ஒருவர் தன் பையன் பம்பாய் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் சேர்ந்திருப்பதாகவும் அவன் தாய் தந்தையைப் பிரிந்து இருப்பதற்கு மிகவும் வருந்துவதாகவும், அடிக்கடி அவன் திரும்ப வந்து விடுவேன் எனச் சொல்வதாகவும், அவனை நான் சென்று பார்த்து புத்திமதி சொல்லி விட்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.. அதனால் ஒரு ஞாயிறு மத்தியானம் 11-00 மணிக்கு மாதுங்கா சென்றடைந்தேன். கால்களில் பாத ரக்ஷை இல்லை. ஆடை கருப்பு வண்ணம். வெய்யிலில் உருகி இருந்த தார் கால்களில் ஒட்டிக் கொண்டு பொரித்தது. ரயில் நிலயத்தில் இருந்து பி.ஐ.டீ. யை நோக்கி நடந்தேன். ஆனால் அன்று என் உறவினரின் மகன் சக மாணவர்களுடன் எங்கோ வெளியே போயிருந்தான். பின் ரயில் நிலயம் நோக்கி நடந்தேன்.
ரயில் நிலையம் அருகே சாலையில் நான்காக மடித்த காகிதத் துண்டு கிடந்தது. உடனே குனிந்து அதைப் பொறுக்கி எடுத்ததேன். பிரித்துப் பார்த்தால் ஐந்து புதிய நூறு ரூபாய் நோட்டுக்கள். ஆரம்பித்தது என் மனத்துள் ஒரு குழப்பம்.
‘ஐயோ பாவம் யாரோ ஒருவர் இதைத் தவற விட்டிருக்க வேண்டும். இதைக் காவல் நிலையத்தில் சேர்த்து விட்டால் அவ்ருக்குப்போய்ச் சேர்ந்து விடும். நடப்போம் காவல் நிலையத்திற்கு’ என்று மீண்டும் பி.ஐ.டீ. யை நோக்கி நடந்தேன். அதன் அருகில்தான் இருந்தது காவல் நிலையம்.
பாதி வழியில் ஒரு சந்தேகம், ‘துலைத்தவர் புகார் செய்யாதிருந்தால் காவல்காரர்கள் அல்லவோ இதை எடுத்துக் கொண்டு விடுவார்கள்? நானும்தான் எவ்வளவோ முறை பணத்தைத் துலைத்திருக்கிறேன். ஒருக்கால் அவற்றுக்கு பதிலாகத்தான் கடவுள் இதை எனக்குக் கொடுத்துள்ளாரோ?’ திரும்பினேன் ரயில் நிலயம் நோக்கி.
மீண்டும் ஒரு குழப்பம். ‘அப்படி நானே வைத்துக் கொண்டால் அது பிறர் பொருளுக்கு ஆசைப் பட்டது ஆகி விடாது?’
‘சரி இப்போது போவாயில் இருக்கும் சின்மயா மிஷனின் தலமை அலுவலகத்திற்கு தானே போய்க் கொண்டிருக்கிறோம். அங்கு சுவாமிஜீயிடமே கேட்டு விடுவோம்’ என்று நினைத்து பேருந்தில் ஏறினேன் போவாய்க்கு.
எனது துரதிருஷ்டம் சுவாமிகள் சின்மயானந்தா, தயானந்தா, மற்றும் ஹரிநாமானந்தா ஆகிய மூவரும் வெளியூர் சென்றிருந்தனர். ஏமாற்றத்துடன் திரும்பினேன் நான் தங்கி இருந்த இடத்திற்கு. அந்தப் பணத்தை செலவழித்து விடக் கூடாது என்பதற்காக என் வங்கிக் கணக்கில் செலுத்தினேன். பின் கொச்சி சென்றேன்..
கொச்சியில் இருந்த மேலாளர் கேட்டார், “நடராஜன் சாயங்காலம் என்ன செய்யப் போகிறாய்?” என்று.
“என்ன செய்ய? குளித்து விட்டு ரேடியோகேட்டுக் கொண்டு உட்கார்வேன். வேறு என்ன செய்ய?”
“நீ தங்கி இருக்கும் ஒட்டல் அருகே உள்ள மைதானத்தில் சுவாமி தயானந்தாவின் சொற்பொழிவுத் தொடர் இன்று ஆரம்பமாகிறதே. அங்கு போகலாமே” என்றார் அவர்.
மாலை குளித்து விட்டு மைதானத்திற்குச் சென்று முதல் வரிசையில் அமர்ந்தேன். சுவாமிகள் பேச்சைத் துவக்கினார், “உடலுக்கும் மனதுக்குமான போராட்டம் – உண்மை மதிப்பும் ஏற்றுக் கொண்டுள்ள வேடத்திற்கேற்ற மதிப்பும்.”
“சுட்டெரிக்கும் வெய்யிலில் பம்பாய்த் தெரு ஒன்றில் ஒருவன் நடந்து கொண்டிருக்கிறான். தெருவில் மடித்த நிலையில் காகிதத் துண்டுகள் கண்டு உடனே குனிந்து அதைப் பொறுக்குகிறான். அவனுக்குத் தெரியும் அதன் மதிப்பு. குழந்தையாய் இருந்தபோது எவ்வளவு நேரம் கையை நீட்டினாலும் கடைக்காரன் மிட்டாயை அவனுக்குத் தருவதில்லையே அம்மாவின் காசு கை மாறினால் ஒழிய.
காகிதத்தைப் பொறுக்கியவன் அதை பிரித்துப் பார்க்கிறான். ஐந்து புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டுக்கள். ஆரம்பிக்கிறது அவன் மனத்துள் போராட்டம், காவல் நிலையம் சென்று அதை அவர்களிடம் சேர்ப்பதா அல்லது தானே வைத்துக் கொள்வதா என்று.”
மேலும் தொடர்ந்தார் சுவாமீஜி தன் பேச்சை ‘உண்மை மதிப்பும் ஏற்றுள்ள மதிப்பும்’ (Intrinsic values and acquired values) என்பது பற்றி. அவர் பேசியபோது என் உடலில் உள்ள உரோமங்கள் எல்லாம் செங்குத்தாய் நின்றன. சொற்பொழிவு முடிந்ததும் அவருடனே அவர் அறைக்குச் சென்றேன். (என் அதிருஷ்டம் அவரும் நான் தங்கி இருந்த விடுதியில் தான் தங்கி இருந்தார்.) ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவரை நெருங்கி என் மனக் குழப்பதிற்கு ஒரு விடை காண முடியவில்லை.
மறு நாள் மதிய உணவிற்குப்பின் சுவாமிஜீயின் அறைக்குச் சென்றேன். அப்போது அங்கு அதிகக் கூட்டம் இல்லை. ஐந்தாறு நபர்களே இருந்தார்கள். அவரை நமஸ்கரித்து, “ஸ்வாமீஜீ நேற்று நீங்கள் பம்பாயில் சுட்டெரிக்கும் வெய்யிலில் நடந்த ஒருவன் கதையையும், அவனுக்குக் கிடைத்த ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள் பறியும் பின் அதனைத் தொடர்ந்த அவனது மனக் குழப்பத்தையும் பற்றிச் சொன்னீர்கள். ஆனால் குழப்பம் தீர்வதற்கான விடை தரவில்லையே” என்றேன்.
“என்ன புதிர் போடறே நடராஜா?” என்றார் ஸ்வாமீஜீ.
பத்து நாட்களுக்கு முன்பு எனக்கு பம்பாயில் நேர்ந்த அனுபவத்தைச் சொன்னேன்.
“என்ன தாடி, மீசை வெச்சிண்டு இருக்கே?”
“சபரி மலை போறேன் இன்னும் மூணு நாள்லெ.”
“அப்பொ அந்த ஐநூறு ரூபாயெ அவன் உண்டியல்லெ சேத்தூடு. அவன் அது எங்கெ போய்ச் சேரணுமோ அங்கெ சேத்தூடுவான். ஒன் மனசுலெ இருக்கற பாரமும் கொறெஞ்சூடும்.”
மறு நாள் என் அலுவலகத்தில் ஒரு காசோலையினைக் கொடுத்து ஐநூறு ரூபாய் வாங்கி இரண்டு நாட்களில் சபரி மலை உண்டியலில் சேர்த்தேன்.
பின் ஒரு சமயம் சுவாமி ஹரிநாமானந்தாவைச் சந்தித்த போது அவரிடம் எனது விஜயவாடா, பம்பாய், கொச்சி அனுபவங்களைச் சொல்லிக் கேட்டேன், “எனக்கு ஏன் இப்படி யெல்லாம் நடக்கிறது?” என்று.
“ஒரு சாதகன் முன்னால் இந்த மாதிரியான சில மின்னல்கள் தோன்றும். அதைத் தனக்கு சக்தி பிறந்து விட்டதாக எண்ணி இறுமாப்பு அடைந்தால் கொக்கென்று நினைத்த கொங்கணவனுக்கு ஏற்பட்ட கதி தான் எற்படும்” என்றார் அவர்.
கொக்கென்று நினைத்த கொங்கணவன் கதை நாளை பார்ப்போம்.
(தொடரும்….)