இவன்
– கவிஜி
அவன், அந்த வீட்டின் பின்புற சுவற்றில் ஏறி உள்ளே குதித்தான்….
மனக் கண்ணில் ஒருமுறை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து கொண்டான்…
இதே வீடு தான்…
குறைஞ்ச பட்சம் 200 சவரன் நகை இருக்கும்….வீட்டில் உள்ளவர்கள் அனைவருமே, திருப்பதிக்கு சாமி கும்பிட சென்றிருக்கிறார்கள்.. நம்பகமான இடத்தில் இருந்துதான் செய்தி கிடைத்திருக்கிறது… முதுகில் தொங்கிய பேக்கை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டான்.. ஏனோ புன்னகை வந்தது,…
சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்…அந்த வீட்டை சுற்றி யாரும் இல்லை… பின் கதவை சில பல தொழில் நுட்பத்தோடு திறந்து, உள்ளே சென்றான்…. ஒரு பூனையைப் போல அவன் பாதங்கள் மிதந்தன… மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டே நகை இருக்கும் அறைக்குள் சென்றான்…. நேரத்தைப் பார்த்தான்..
மணி நள்ளிரவு 2.30….
எல்லாம் சரியாக நடக்க வேண்டும்…. போட்ட திட்டப்படி இம்மி பிசகாமல் அத்தனையும் நடக்க வேண்டும்….. மனதை ஒரு நிலைப் படுத்தினான்…. அறையில் ஓரமாய் இருந்த இன்னொரு பீரோவை ஒட்டி ஒரு ஜன்னல் இருந்தது…. மெல்ல ஜன்னலை திறந்து வெளியே பார்த்தான்… மஞ்சள் வெளிச்சத்தில் வீதி உறங்கிக் கொண்டிருந்தது…
பேக்கை திறந்து வைத்துக் கொண்டான்…. வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்…. இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிய வேண்டும்… அறை முழுவதும் புழுக்கத்தால் ஒரு வித சூட்டுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தது….
அவன், அனுமானத்தின் படி….அந்த இரு திருடர்களும் வீட்டுக்குள் நுழைந்து பீரோவுக்கு அருகில் வர..பேக்கில் இருந்த சைலன்சர் போட்ட துப்பாக்கி கொண்டு பட் பட் என்று சுட்டு விட்டு வந்த வழியே ஓடத் துவங்கினான்….
நாளை இரவு கணுவாய் காலனிக்கு போக வேண்டும்… என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்த அவன்… இவன் என்ற ஆபரேசனில் நகரில் எங்கெல்லாம் கொள்ளை நடக்க இருக்கிறதோ அங்கெல்லாம் முன் கூட்டியே சென்று கொள்ளைக்காரர்களை போட்டுத் தள்ளும் ஸ்பெசல் ஆபீசர்….
இவன்…
கவிஜி