நடராஜன் கல்பட்டு

கொக்கென்று நினைத்தீரோ கொங்கணரே ?

ank

ஒரு ஊரில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஒருவன் தன் மனைவி, குழந்தைகளை விட்டு விட்டுக் காஷாயம் தரித்துக் காட்டுக்குச் சென்றான் தவம் செய்ய. காட்டில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து தவம் புரிந்தான். உணவு தேவைப் பட்ட போது அருகில் இருந்த ஒரு ஊருக்குச் சென்று பிச்சை யெடுத்து உண்டான். சில நாட்கள் கழிந்தன.

ஒரு நாள் அவன் தவம் செய்து கொண்டிருந்த போது மரத்தின் மீது வந்தமர்ந்த் கொக்கு ஒன்று அவன் தலை மேல் எச்சமிட்டது. தவம் கலைந்த அவன் கோபக் கனல் வீச மேலே அண்ணாந்து பார்த்தான். அடுத்த கணம் கொக்கு எரிந்து சாம்பலாகிக் கீழே விழுந்தது.

புதுச் சாமியாருக்குச் சந்தோஷம் தாங்க முடிய வில்லை. ஆகா வந்து விட்டது எனக்கு அபார சக்தி என்று எண்ணியபடி ஊருக்குள் நுழைந்தார். ஒரு வீட்டின் கதவைத் தட்டி, “சாமியார் வந்திருக்கிறேன். பிச்சை போடுங்கள்” என்று உரக்கக் கத்தினார்.

உள்ளிருந்து ஒரு குரல் வந்தது, “நான் என் கணவருக்கு போஜனம் அளித்துக் கொண்டிருக்கிறேன் சற்றுப் பொருங்கள். வருகிறேன்” என்று. சற்று நேரம் கழித்து மீண்டு கதவை பலமாகவே தட்டி, “சாமியார் வந்திருக்க்றேன். பிச்சை போடுங்கள்” என்று உரத்த குரலில் கத்தினார்.

சற்று நேரத்திற்குப் பின் கதவு திறந்தது. கையில் அரிசியுடன் வந்த பெண்ணைப் பார்த்துக் கேட்டார் புதிய சாமியார், “எவ்வளவு நாழியாக நான் காத்திருப்பது?” என்று.

பதிலுக்கு அந்தப் பெண் கேட்டாள், “என்ன என்னையும் கொக்கென்று நினைத்தீரோ?” என்று.

“கொக்கை நான் எரித்தது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“அதுவா? பக்கத்து தெருவில் காதர் பாச்சா என்றொரு கசாப்புக் கடைக்காரர் இருக்கிறார். அவரிடம் போய் கேளுங்கள்” என்றாள் அவள்.

காதர் பாச்சா வீட்டைத் தேடிக் கண்டு பிடித்த சன்யாசி. கதவைத் தட்டினார்.

உள்ளிருந்து காதர் பாச்சாவின் குரல் கேட்டது, “செத்த இருங்க வந்தீட்டேன்.”

சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் கதவைத் தட்டினார் சன்யாசி.

“வாரேன்னு சொன்னேன் இல்லெ. செத்தப் பொறுமையா இருங்க.”

பொறுமையிழந்த துறவி கதவில் இருந்த இடுக்கு வழியாக உள்ளே பார்த்தார். அங்கு அவர் கண்ட காட்சி, வயது முதிர்ந்த தந்தைக்குக் குளிப்பாட்டி, உடல் துடைத்து, ஆடை அணிவித்து நாற்காலியில் மெள்ள உட்கார வைத்துத் தட்டொன்றில் இருந்து உணவினை எடுத்து அவருக்கு ஊட்டிக் கொண்டிருந்தான் காத பாச்சா. பின் அவருக்க் வாய் கழுவி விட்டு, மெல்லத் தூக்கிப் படுக்கையில் படுக்க வைத்து விட்டு வந்து வாசல் கதவினத் திறந்தான் அவன்.

கதவைத் திறந்ததும் கண்ணில் பட்ட சாமியாரைப் பார்த்துக் கேட்டானவன், “யாரு நீங்க? ஒங்களெ பக்கத்துத் தெரு வாசுகியம்மா அனுப்பினாங்களா? என்னா வேணும் ஒங்களுக்கு?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் காதர் பாச்சா.

துறவி, “அப்பா நான் தேடி வந்தது கிடைத்து விட்டது எனக்கு” என்று சொல்லி மீண்டும் வாசுகியமாள் வீட்டினை அடைந்து கதவைத் தட்டினார். அவள் கதவைத் திறந்ததும் அவள் கால்களில் விழுந்து வணங்கி, “தாயே சரஸ்வதி என் கண்களைத் திறந்து விட்டீர்கள். புரிந்து கொண்டேன் நான் ஒருவனின் முதல் கடமை அவனை நம்பி உள்ளோரைக் காப்பாற்றுதல் என்பதை” என்று .

துறவியின் காஷாயம் பறந்தது. சாதாரண உடையில் தன் வீட்டை நோக்கிப் பயணித்தான் அவன்.

(கருப்பு வெள்ளை படம் பிடித்தது ந.க.)

(தொடரும்….)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.