இந்த வார வல்லமையாளர்!
டிசம்பர் 14, 2015
இவ்வார வல்லமையாளர்
அமுதா ஐ.ஏ.எஸ் மற்றும் கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ்
இவர்களைப் போன்ற இந்திய ஆட்சிப் பணியாளர்களே நமக்குத் தேவை என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் மக்கள் ஒருமனதாகப் பாராட்டும் வண்ணம் சிறப்பாகப் பணியாற்றிய அமுதா ஐ.ஏ.எஸ் மற்றும் கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ். ஆகியோர் வல்லமையின் இவ்வார வல்லமையாளர்களாகப் பாராட்டப்படுகிறார்கள்.
அரசு அதிகாரிகள் பேரிடர் காலத்தில் தங்கள் பணியை… கடமையை செய்ததற்குப் பாராட்டுகள் தேவையா என்பது இந்திய அரசியலைப் பற்றிய விவரம் தெரியாதவர்களின் கேள்வியாக இருக்கும். ஆனால் இந்திய அரசியல்வாதிகள் தங்கள் கடமைகளைச் செய்யும் அரசுப்பணியாளர்களுக்கு இடையூறு அளிக்காமல் இருந்ததாகக் கேள்விப்பட்டவரும் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. சீரிய முறையில் பணி செய்யும் அரசு அதிகாரிகள் தங்களது “வளர்ச்சிக்கு” இடையூறு தருபவர்கள் என்று முடிவு செய்து, சிறிய, பெரிய என்ற எந்த நிலையில் உள்ள “தலைவர்களும்” அதிகாரிகளை மிரட்டுவதும், அதிகாரிகள் “ஒத்துழைக்க” மறுத்தால், மேலிடம்வரை சென்று ஒத்துவராத அதிகாரிகளுக்கு “பணிமாற்றம்” என்ற “பரிசு” வழங்க ஏற்பாடு செய்வதும்தான் நமக்குத் தெரிந்த நடைமுறை.
இதுபோன்ற முறையற்ற செயல்களினால், சென்னை நகரத்தின் வளர்ச்சி ஒரு திட்டமிடப்படாத வளர்ச்சியாகக் கடந்த அரைநூற்றாண்டாக ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் அகப்பட்டுக் கொண்டது. விளைவு: சென்னை வெள்ளம் அரசு இயந்திரம் உருவாக்கிய செயற்கைப் பேரிடர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. செல்வாக்கு உள்ளவர்கள் அரசு இயந்திரத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நீர்நிலைகளையும், நீரோட்டத்தின் வழித்தடங்களையும் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி பெரும் செல்வந்தர்களாகப் பொருளீட்டி விட்டார்கள். மனசாட்சியை விற்று சுயநலநோக்கில், அரசியல் ஆதாயம் தேடும் ஆட்சியாளர்களும் பாராமுகமாக நடந்து கொண்டார்கள், இதனால் துயருற்றது பொதுமக்கள். இப்பொழுதோ வெட்கமில்லாமல் அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டுள்ளார்கள். அதற்குக் காரணமும் அடுத்து ஆட்சியைப் பிடிக்கும், அல்லது தக்க வைக்கும் எண்ணம் மட்டுமே.
இவர்களது திருவிளையாடல்களினால் எழுப்பப்பட்டுவிட்ட ஆக்கிரமிப்புகளினால் ஒரு வார பெருமழையைத் தாங்கமுடியாமல் சென்னை வெள்ளக்காடானது, சேர்ந்த வெள்ளமும் வடிய வழியின்றித் தேங்கிப் போன நிலை. தூர்வாருதல் போன்ற பராமரிப்பு இன்றி குப்பைகூளங்கள் அடைத்து, அத்துடன் ஆக்கிரமிப்புகளால் பல இடங்களில் ஆறு, கால்வாய்களின் அகலம் சுருங்கிப் போயின. ஆக்கிரமிப்பு பகுதிகள் பெரும்பாலும் வியாபார நிறுவனங்களாகவும், கடைகளாகவும் இருந்தாலும், மணிமங்கலம் பகுதி கால்வாயை ஆக்கிரமித்து ஒரு கோவிலே கூட கட்டப்பட்டிருப்பது தெரிகிறது. அதை இடிக்க வேண்டாம் என்ற கோரிக்கையும் கூட வைத்துள்ளார்கள் அப்பகுதி மக்கள். அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற பொதுப்பணி துறை நீர்வழித்தடங்களிலும்; ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன் கால்வாய் உள்ளிட்ட மாநகராட்சி நீர்வழித்தடங்களிலும் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.
வெள்ள பாதிப்பு கண்காணிப்பு அலுவலர் தலைமையில் ஒன்பது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒருங்கிணைத்த தமிழக அரசு, இக்குழுவை மீட்புப் பணி, நிவாரணப் பணி, எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது. இராணுவத்தின் துணையோடு இப்பணிகளை அரசு அதிகாரிகள் செயல் படுத்தினர்.
இவர்களில் வெள்ள பாதிப்புக்கான சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா அவர்கள் தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் மக்களை மீட்டதுடன், மீண்டும் வெள்ளம் வந்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்களில் இருந்து ஆற்றுக்குச் செல்லும் வழிகளைச் சீரமைக்கும் பணியில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துப் பல ஆக்கிரமிப்புகளை இடித்துத் தள்ள உதவியுள்ளார். இதனால் ஒருவாரம் வரை வடியாமல் தேங்கிய வெள்ளம் சிலமணி நேரங்களில் வடிந்துவிட்டிருக்கிறது. இவரது பணியை தடை செய்வதற்கு முயன்றவர்களை இவர் பொருட்படுத்தவில்லை. தாம்பரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் இவரது ஆணையினால் அகற்றப்பட்டதால் அப்பகுதியில் அடையாறு ஆற்றுக் கால்வாய் முதலில் இருந்ததை விட மூன்று மடங்கு அகலமாகியுள்ளது.
கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ் அவர்கள் சென்ற அக்டோபரில்தான் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற ஒருமாதத்தில் அவர் மாவட்டம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொண்டது. முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ளநீரில் களமிறங்கி இரவு பகல் பாராது மீட்புப் பணியையும் நிவாரணப் பணியையும் முன்னின்று நடத்தியுள்ளார் கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ். வெள்ள பாதிப்பிற்குக் காரணமான மாவட்டத்தின் பல்வேறு நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளும் இவரது உத்தரவின் பேரில் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன.
ஆக்கிரமிப்புகள் யாவும் அரசின் மெத்தனத்தினால் நிகழ்ந்தவை என்றாலும், பேரிடருக்குப் பின்னர் செய்யும் இது போன்ற பராமரிப்பு நடவடிக்கைகள் இழப்புகளை ஈடுகட்டப் போவதில்லை என்றாலும், இனியாவது வருங்காலத்தில் இழப்புகளை இந்த நடவடிக்கைகள் குறைக்கும் என எதிர்பார்க்கலாம். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமுதா, கஜலக்ஷ்மி போன்றோரின் அதிரடி நடவடிக்கைகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்பதிலும் ஐயமில்லை. தனது பதவிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை சரிவரப் பயன்படுத்தத் தெரியாத பிற அரசு அதிகாரிகளுக்கு இவர்களது நடவடிக்கைகள் நல்லதொரு பாடமாக அமையுமாறு செயலாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமுதா, கஜலக்ஷ்மி ஆகியோருக்கு வல்லமை இதழின் பாராட்டுகள்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]
_____________________________________________
தகவல் தந்து உதவிய செய்திகள்:
அமுதா ஐ.ஏ.எஸ்
அடித்து நொறுக்கும் அமுதா ஐ.ஏ.எஸ்… அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள்… வடிந்தோடும் வெள்ளநீர்!
http://www.vikatan.com/news/coverstory/56265-encroachment-sequestration-amutha-ias.art
அரசியல் கட்சியினரின் மிரட்டல்கள் எடுபடவில்லை தாம்பரம், முடிச்சூர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அமுதா ஐ.ஏ.எஸ். அதிரடி
http://www.dailythanthi.com/News/State/2015/12/10001525/Amudha-removal-of-IAS-invasions-Action.vpf
கஜலக்ஷ்மி ஐ.ஏ.எஸ்.
அடையாற்றில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம் தூள் …தூள்:மாநகராட்சிக்கு வழிகாட்டுகிறார் காஞ்சிபுரம் கலெக்டர்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=1404910
இது ஒரு முக்கியமான பதிவு. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் பலர் கடமையாற்றுவதில் சோடை போனதில்லை. சான்றாக மேற்படி சாதனையாளர்களையும், கடலூரை முழுதும் அறித்து வைத்துள்ள திரு.ககன் சிங் பேடி அவர்களைச் சொல்லலாம். அரசியல் தலையீடுகளை பொருட்படுத்தாதவர்கள் பலர். அவர்களால் தான் நாடு பிழைக்கிறது. ஆனால் கவைக்குதவாதவர்களையும் கையாலாகாதவர்களையும் அரசு அதிகாரிகளின் பிரிதிநிதிகளாக பாவித்து எழுதுபவர்கள் பலர்.