தமிழில் பேசும்பொழுது ஆங்கில ஒலிப்பு வேண்டும் என்பது இல்லை. தமிழ் முறைக்கு முரண் எனில் கூடாது. அதுவும் நம் மொழியை, மொழி மரபுகளைக் கெடுத்துக்கொண்டு வேற்று மொழி ஒலிப்புகளைத் தமிழில் காட்டத் தேவை இல்லை. நெகிழ்ச்சி எனில் ஏன் இந்த நெகிழ்ச்சியை filosofi என்று எழுதுவதில் காட்டக் கூடாது? தமிழில் எழுதும்பொழுது மட்டும் ஏன் அத்தனை விதிமீறல்?
— செ. இரா. செல்வக்குமார்
பதில்
தமிழில் பேசும்போதோ எழுதும்போதோ ஆங்கில ஒலிகளை அப்படியே கொண்டுவர வேண்டிய அவசியம் நிச்சயம் இல்லை. நான் முந்திய பதில் ஒன்றில் கூறியது போல, ஒரு சொல்லைப் பேசுவதைப் போலவே எழுதுவதும், அதன் மூல மொழியின் உச்சரிப்பைப் போலவே எழுதுவதும் எந்த மொழியிலும் இல்லை. தேவையும் இல்லை.
ஒரு மொழியின் மரபு அதை இறுகப் பிடித்துவைத்திருக்கும் சட்டகம் அல்ல; காலப்போக்கில் மாறாத ஒன்றும் அல்ல. கலப்புத் திருமணம் இன்று மரபிலிருந்து மாறிவரும் ஒரு வழக்கு, அதைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் இருந்தாலும். இதைப் போன்றுதான் தமிழ் மொழியின் மரபும் மாறிவருகிறது. மரபு மாற்றம் எல்லா மொழியிலும் நிகழும் ஒன்று. ஆங்கிலம் ஏற்றுக்கொண்ட அதன் மொழி மரபு மாற்றங்களைப் பற்றித் தனிக் கட்டுரையே எழுதலாம்.
ஒரு மொழிச் சமூகத்தின் (linguistic community) பார்வையில், எது மரபு, எவை ஏற்றுக்கொண்ட மாற்றங்கள் என்பவையே கவனிக்க வேண்டிய கேள்விகள். இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடும்போதுதான் வழக்கு என்னும் கருத்து முன்னுக்கு வருகிறது. வழக்கு என்பதன் அர்த்தத்தை விளங்கிக்கொளவதற்கு முன் மரபு என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். காலத்தால் முதன்மையானது மட்டும் மரபு அல்ல; ஒரு காலத்து மரபு அடுத்த காலத்தில் மாறிப் புதிதாக ஏற்படுத்தும் வழக்கும் மரபு ஆகும். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித் தமிழும் ஒரு மரபே. அதை மறுப்பதும், மறப்பதும் மொழி வளர்ந்த பாதையை மூடுவதாகும். இலக்கணத்தின் வேலை மொழியின் விதிகளை வரையறுப்பது அல்ல; அது வழக்கில் உள்ள விதிகளை வெளிப்படுத்துவது; புதிய மரபுக்கு வழி வகுப்பது. புதிய மரபில் பண்டைப் பழமையையோ அண்மைப் பழமையையோ முற்றிலும் அழித்துவிட முடியாது.
தமிழின் புதிய மரபு என்பது என்ன, அதை எப்படி இனம்காண்பது என்பவை பற்றிய விவாதம் தமிழ் மொழியின் வரலாற்றில் இக்காலத்தில் நிகழ்வது; நிகழ வேண்டியது; தமிழைப் பற்றிப் பலவிதமான கருத்தாக்கங்களைக் கொண்டவர்கள் கலந்துகொள்ள வேண்டியது. ஒரு மொழியைப் பேசுபவர்கள், எழுதுபவர்கள் எழுத்தில் தவறு செய்வதும், மாற்றம் செய்வதும் இயல்பு. இரண்டையும் பிரித்தறிவது இந்த விவாதத்தின் முதல் அவசியம். தவறு (error) ஒருவரால் திரும்பத் திரும்பச் செய்யப்படாதது; அவரே திரும்பப் பார்க்கும்போது திருத்திக்கொள்ளக் கூடியது; அதன் நிகழ்வு தனி மனிதரைச் சார்ந்தது. புதுவரவு (innovation) மாறி மாறி வராமல் ஒரு நிலையாக (consistent) வருவது; பலரிடம் பொதுவாக இருப்பது; மொழிச் சமூகத்தைச் சேர்ந்தது; பொதுவிதியில் அடங்குவது. பொதுவிதி புதிய விதியாக இருக்கும். மரபுவிதியிலிருந்து வித்தியாசப்படுவதெல்லாம் தவறு ஆகாது.
சில உதாரணங்கள். ஒருத்தன் : ஒருவன் :: ஒருத்தி என்னும் இணைகளில் காலியாக இருக்கும் இடத்தில் ஒருவள் என்னும் சொல்லை அமைப்பது தவறு ஆகாது; புதுவரவு ஆகும். ஆட்டுக்குட்டி, பன்றிக்குட்டி என்னும் வரிசையில் மாட்டுக்குட்டி என்னும் சொல்லை அமைப்பது இன்றைய வழக்கில் தவறு ஆகும். அடுத்த தலைமுறையில் புறனடை பொதுவிதியில் சேர்ந்து பிழையாகக் கருதப்படாமல் புதுவரவு ஆகலாம். அப்பா தம்முடைய பங்கை விற்றுவிட்டார் என்னும் வாக்கியத்தை அப்பா தன்னுடைய / அவருடைய பங்கை விற்றுவிட்டார் என்று எழுதும் இரண்டு வழக்குகளும் புதுவரவில் அடங்கும். தற்சுட்டுப் பெயரில் மரியாதைப் பன்மை இல்லை; தற்சுட்டுப் பெயர் சுட்டுப்பெயரோடு மருவிவரும் என்பவை புதிய விதிகள். அவர் சொன்னவற்றை, அவர் சொன்னவைகளை என்று மருவி எழுதுவதும் பேச்சில் உள்ளதைப் போல அவர் சொன்னதையெல்லாம் என்று எழுதுவதும் தவறு என்பதிலிருந்து புதுவரவு என்னும் தகுதியை நோக்கி நகர்கிறது எனலாம். சுவரில் என்பதை சுவற்றில் என்று எழுதுவது சுவறு என்னும் ஒரு புதுச் சொல்வடிவம் சுவர் என்னும் சொல்வடிவத்தை நீக்கும்வரை தவறு என்று கருதப்படும். அநாதை / அனாதை, அந்நியன் / அன்னியன், இயக்குநர் / இயக்குனர் என்பதுபோல் அநியாயம் / அனியாயம் என்று பேச்சைப் பிரதிபலிக்கும் வழக்கு வந்தால், அது தவறு ஆகாமல் புதுவரவு ஆகலாம்; அல்லது நியாயம் என்னும் சொல்லோடு உள்ள தொடர்பைப் போற்றித் தவறாகவே கருதப்படலாம். இந்த உதாரணங்களிலிருந்து, மரபிலக்கணத்தில் விதி இல்லை என்பதாலேயே ஒரு வழக்கு தவறு ஆகாது என்பது விளங்கும். இக்காலத் தமிழின் இயல்பை விவரிக்கப் புதிய இலக்கண விதிகளின் தேவையும் விளங்கும்.
இலக்கியத்திற்கு இலக்கணம் என்பது போல், வழக்கிற்கு இலக்கணம். முன்னெழுதிய இலக்கணத்தின்படி வழக்கு இருக்க வேண்டும் என்பது இரண்டிற்கும் உள்ள உறவைத் தலைகீழாகப் பார்ப்பதாகும்.
மரபு இலக்கண விதிகளிலிருந்து மாறவே கூடாது என்று பிடித்துக்கொள்வதைப் போன்றதே நேர்மாறாக அந்த விதிகளை மீற வேண்டும் என்பதற்காகவே விடுவதும். இரண்டையும் மொழி கண்டுகொள்ளாது. மொழி சார்ந்த கருத்தாக்கங்களுக்கு மொழி மாற்றத்தில் பங்கு இருந்தாலும், மொழியின் பரிணாம மாற்றங்களையும், சமூகத் தேவைகளுக்கு ஈடுகொடுத்து ஏற்படும் மாற்றங்களையும் தடுத்து நிறுத்தும் வலிமை கருத்தாக்கங்களுக்கு இல்லை. செய்யுளின் யாப்பு, அழகியல் மரபுகளை முறிக்க வேண்டும் என்பதற்காகவே புதுக்கவிதை தோன்றவில்லை. நிலப்பிரபுத்துவச் சமூக வாழக்கையிலிருந்து மாறிய தழிழ்ச் சமூகத்தின் வாழ்வின் அசைவுகளையும் தேவைகளையும் மதிப்பீடுகளையும் வெளியிடுவதற்குத் தேவை இருந்ததாலேயே புதிய கவிதை மரபு தோன்றியது. தமிழுக்குப் புதிய இலக்கணமும் இந்த மாதிரியான காலத் தேவையின் விளைவே.
சுப்பிரமணியன், பாரதிதாசன், ரசம், புத்திரன் என்று எழுதுவதை முறையே ஸுப்ரமண்யன், பாரதிதாஸன், ரஸம், புத்ரன் என்று எழுதுவது தமிழை எழுதும் முறையின் மரபை முறிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதுவதாகும்; சமூகத்தின், மொழியின் தேவையை நிறைவேற்ற எழுதுவது அல்ல. தமிழ்ச் சகரத்திற்கு வருமிடத்தைப் பொறுத்து ஸகர ஒலி உண்டு. அந்த இடங்களில் ஸகரத்தை எழுதுவது தமிழின் எந்தத் தேவையையும் நிறைவு செய்யவில்லை. தமிழில் வழங்கும் புதுவரவுச் சொற்களில் /ph, b/ என்னும் ஒலிகளையும் /ப/ ஆக எழுதுவது -பேதம் என்று எழுதுவதைப்போல- மரபைப் பின்பற்றி எழுதுவதே. இரசம் என்று எழுதுவது மரபைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதற்காகவே எழுதுவது. இதைத் தவிர, தமிழின் எந்தத் தேவையையும் இகரம் நிறைவு செய்யவில்லை.
ஒரு சொல்லை உச்சரிப்பது போல் எழுதுவது, பொது இலக்கண விதிகளைப் புறந்தள்ளிவிட்டு, மொழிக்குத் தேவை இல்லாத நேரத்திலும் பின்பற்ற வேண்டிய கொள்கை அல்ல. எழுத்து மரபு பேச்சு மரபின் அசலான நகலாக இருப்பது மொழிகளில் அபூர்வம். மொழியில் நிகழ்ந்த மாற்றத்தால் உச்சரிப்பு மாறினால், மாறிய உச்சரிப்பை எழுத்தில் பிரதிபலிக்க வேண்டிய தேவை எல்லா மாற்றங்களுக்கும் பொருந்தாது. இன்றைய தமிழில், றகரம் ரகரமாக உச்சரிக்கப்படுகிறது. ஆயினும், மரபைப் பின்பற்றி றகரத்தை எழுதுவது வேறு இலக்கண விதிகளின் எளிமைக்குத் தேவை. ஒலிப்பில் ஒன்றினாலும், றகரம் தன் வல்லொலித் தன்மையை இழக்கவில்லை. றகர ஒற்றுக்குப்பின் வரும் வல்லெழுத்து வன்மையாக ஒலிக்கும், பிற வல்லெழுத்துக்குப்பின் வரும் வல்லெழுத்துக்களைப் போல. கற்பு என்னும் சொல்லில் /பு/, வேட்பு என்னும் சொல்லில் உள்ள /பு/ போலவே ஒலிக்கும். ரகர ஒற்றுக்குப்பின் வரும் வல்லெழுத்துகள் மெலிந்து ஒலிக்கும் (எ-டு) சார்பு. றகரத்தை ரகரமாக எழுதினால் கற்பு என்ற சொல்லை கர்ப்பு என்று எழுத வேண்டியிருக்கும். சொல்லின் இடையில் வரும்போது தவிர மற்ற இடங்களில் வருமிடத்தை வைத்து எழுத்துக் கூட்டலில் றகரத்தையும் ரகரத்தையும், அவற்றின் உச்சரிப்பு ஒன்றாக இருந்தாலும், சரியாக எழுத முடியும். சொல்லின் இடையில் றகரம் தனித்து வருபோது ரகரத்திலிருந்து பிரித்து எழுதுவதில் உள்ள இடர்ப்பாடு, சொல்லின் இடையில் மெய்யோடு வரும்போது எழுத்துக் கூட்டலில் செய்ய வேண்டிய திருத்தங்களால் வரும் இடர்ப்பாடுகளை விடச் சிறியது. றகரத்தால் கிடைக்கும் மற்றொரு இலக்கண எளிமை இது. வேற்றுமை வடிவில் சொல்லின் இறுதியில் றகரம் இரட்டிக்கும்; ரகரம் இரட்டிக்காது. (எ-டு) ஆற்றில், ஊரில். ஆரு என்று எழுதினால் இந்தச் சந்தி விதி சொல்லைத் தெரிந்து செய்யும் விதியாகிச் சிக்கலான விதியாகிவிடும். ஆரில் என்று இந்த ஏழாம் வேற்றுமை வடிவத்தை எழுதினால் அது ஆற்று மணல் என்னும் ஆறாம் வேற்றுமை வடிவத்தில் சிக்கலைத் தோற்றுவிக்கும், பேச்சு மொழியில் இது ஆத்து(மணல்) என்றே உச்சரிக்கப்படுகிறது. ஆரு(மணல்) என்று எழுதினால் பேச்சுக்கும் எழுத்துக்கும் ஒன்றாமையை உருவாக்குகிறோம். சந்தி ஒலியின் அடிப்படையில் நிகழும்; அது சொல்லின் அடிப்படையில் நிகழ்வது அபூர்வம். ஆறு என்ற எண்ணுப்பெயர் ஆறில் என்று சேரும்; நதி என்னும் பொருளுடைய ஆறு என்ற சொல் ஆற்றில் என்று சேரும். இந்த விதிவிலக்கை றகர ஈற்றுச் சொற்கள் எல்லாவற்றுக்கும் நீட்டினால், சந்தி இலக்கணம் சிக்கலாகிவிடும். இதனால் றகர, ரகரத்தை வேறுபடுத்தி எழுதும் சொல்வடிவச் சிக்கலை இலக்கணம் அனுமதிக்கிறது, றகரத்தின் உச்சரிப்பு ரகரத்தின் உச்சரிப்போடு ஒன்றிப்போனாலும். இலக்கணத்தின் பகுதிகள் தங்களுக்கிடையே ஒரு சமன்பாட்டைக் காக்கின்றன.
மேலே சொன்ன விபரங்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கண மாற்றத்தை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் இலக்கணத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்துச் செய்யும் செயல் என்பதைப் புலப்படுத்தும். இந்தப் பண்பு பெரும்பான்மையோரின் வழக்கில் காணப்படுவதை இங்கு குறிப்பிட வேண்டும். பழைய இலக்கண விதிகளிலிருந்து விலகுபவர்கள் புதிய விதிகளின்படி மொழியை வழங்குவார்கள். பெரும்பான்மையினோரின வழக்கை இயக்கும் புது விதி எதுவும் இல்லையென்றால், அந்த வழக்கு தற்செயல் நிகழ்வு (random occurrence) என்றால், அது இலக்கணத் தகுதி பெறுவது கேள்விக்குரியது.
பெரும்பான்மை வழக்கைக் கணிப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இது வெறும் எண்ணிக்கையைப் பொறுத்த விஷயம் மட்டுமல்ல. இணையத்தில் வழங்கும் தமிழ் தமிழின் பல வகைகளில் ஒன்று மட்டுமே. கணினியைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் மட்டும் வழங்கும் வகை. அதில் எழுதுபவர்கள் தாங்கள் எழுதியதைப் பெரும்பாலும் திருப்பிப் படித்துப்பார்த்து, பிழை என்று தங்களுக்குத் தோன்றுவதைக்கூடத் திருத்தும் வாய்ப்பைப் பயன்படுத்துவதில்லை. இணையத்தில் உள்ள பல விவாதங்கள் இதற்கு நல்ல உதாரணம். ஒரு மொழியின் இலக்கணம் பெரும்பான்மை என்னும் மிருகபலத்தினால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஆனால், பெரும்பான்மை வழக்கு இலக்கணத்தில் நிகழும் மாற்றங்களைக் கவனத்திற்குக் கொண்டுவருகிறது. அவற்றில் சிலவோ பலவோ இலக்கணத்தில் இடம்பெற்றுப் புதிய இலக்கணத்திற்கு வழிவகுக்கும்.
வாழும் மொழி தன்னைப் புதுப்பித்துக்கொண்டேயிருக்கிறது. தமிழ் வாழும் மொழி. இதனால் அதன் இலக்கணம் மாறிக்கொண்டேயிருக்கிறது. மாற்றத்துக்கு அணைபோடும் இலக்கண விதிகள், தரமானது என்று சொல்லப்படும் ஒரு மொழி வழக்கை மட்டுமே முன்னிறுத்தி, மொழியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மக்களிடமிருந்து தூரப்படுத்துகின்றன. மொழியைத் தரப்படுத்தும் முயற்சியும் இயல்பான ஒன்றுதான்; எல்லாச் சமூகமும் மேற்கொள்ளும் செயல்தான். அது மொழியின் மேல் அதிகாரம் உள்ளவர்கள் செய்வது. அவர்கள் மக்களின் வழக்கு அனைத்தையும் பிழை வழக்கு என்று புறந்தள்ளிவிட்டால், வீட்டு மொழிக்கும் பள்ளி மொழிக்கும் தூரம் அதிகமாகிவிடும். தூரம் அதிகமானால், தமிழர்கள் தமிழைத் தூர இருந்து வணங்கலாம்; ஆனால் தயக்கமின்றி வழங்குவது குறையும். நமக்குத் தமிழோடு உள்ள உறவு பிள்ளையாருக்கு முன்னால் உக்கிபோடும் உறவாக இருக்கக் கூடாது!

Leave a Reply