இ.அண்ணாமலை

பேராசிரியர் இ.அண்ணாமலை, இலக்கியத்திலும் மொழியியலிலும் பயிற்சி பெற்றவர். உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் இவற்றைப் படிக்கும் வாய்ப்புப் பெற்றவர். இலக்கியத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தெ.பொ.மீ.யிடமிருந்தும், மொழியியலைச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நோம் சாம்ஸ்கியின் மாணவரும், பின்னாளில் மாற்றுக் கொள்கை உருவாக்கியவருமான ஜிம் மெக்காலேயிடமிருந்தும் கற்றார். இவர் உலகின் பல நிறுவனங்களில் ஆய்வுப் பணி ஆற்றியுள்ளார். இவற்றில் அண்ணாமலை நகர், சிகாகோ, டோக்கியோ, லெய்டன், மெல்போர்ன், லெய்ப்சிக், நியு ஹேவன் முதலிய இடங்களில் உள்ள நிறுவனங்கள் சேரும். இவர் அதிக காலம் பணியாற்றியது, மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மைய நிறுவனம் ஆகும். ஓய்வு பெறும் போது இவர் இதன் இயக்குநர். இவருடைய அண்மைப் பணி, யேல் பல்கலைக்கழகத்தில். மனிதரின் கலாச்சாரம், சமூகம், அரசியல் ஆகியவற்றைக் காட்டும் கண்ணாடியாக இவர் மொழியை அணுகுகிறார். மனித மனத்தின் சிந்தனைத் திறனை விளக்கும் கருவியாகவும் பார்க்கிறார். தமிழ் மொழி ஆய்விலும் இந்த அணுகுமுறையைப் பின்பற்றுகிறார். தமிழில் ஈடுபாட்டைக் காட்டும் இவருடைய ஆய்வு, அதே நேரத்தில் அறிவு நெறியோடு பிணைந்தது. தமிழைத் தனித்து நிற்கும் பொருளாகப் பார்க்காமல் வரலாற்றோடும் சமூகத்தோடும் இணைத்தே பார்ப்பது இவருடைய சிறப்பு. ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் தவிர, தமிழ்க் கல்விக்கு இவருடைய பங்களிப்பில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியும், வழக்குத் தமிழ் என்ற பயிற்று நூலும் அடங்கும்.