பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 39

2

 

நினைவு கூரல், நினைவு கூறல் எது சரி?
-சிறீதரன்

கூரினார் என்று கூறுதல் என்பது சரியன்றுதானே? கூரப்பட்டது என்பது செயப்பாட்டு வினைதானே? ஆனால் சேரப்பட்டது என்னும் செயப்பாட்டு வினை வடிவம் கிடையாதே?
-C.R. செல்வக்குமார். கூகுளில் தமிழ்மன்றக் குழுவினரிடம் நடந்த விவாதம்

நினைவுகூரல் / கூர்தல் என்பதே வழக்கு. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியில் ‘கூர்’ என்னும் வினைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பல பொருள்களில் ‘மிகு’ என்னும் பொருளே இலக்கியத்தில் அதிகமாக வருவது. ஓருயிரிலிருந்து பல்லுயிர் ஆதல் என்னும் பொருளில் கூர்தலறம் ‘evolution’ என்ற கலைச்சொல் படைக்கப்பட்டது. நினைவுகூரலில் இந்தப் பொருள் இல்லை எனலாம். கூர்ப்படுத்துதல், கூர்மையாக்குதல் என்னும் பொருளிலே இந்த வினை வருகிறது எனலாம். ஆனால், இந்தப் பொருளில் ‘கூர்’ என்று ஒரு வினை இப்போது வழக்கில் இல்லை. கூர்முனை என்னும் தொகையைப் பெயர்த்தொகை என்றும் சொல்லலாம்; வினைத்தொகை என்றும் சொல்லலாம். கூரிய கத்தி, கூர்த்த மூளை என்னும் தொடர்கள் இருப்பதால் ‘கூர்’ என்று ஒரு வினை இந்தப் பொருளில் இருந்திருக்கும் என்று அனுமானிக்கலாம்.

‘கூர்’ என்ற வினையின் இறந்தகால வடிவம், ‘சேர்’ (சேர்ந்தார்) என்ற வினையைப் போல, கூர்ந்தார் என்பதே; ‘கோர்’ (கோரினார்) என்ற வினையைப் போல *கூரினார் அல்ல. ஓடிய என்ற சொல்லோடு தொடர்புடைய ஓடினார் என்னும் வினைமுற்று இருப்பது போல, கூரிய என்ற சொல்லோடு தொடர்புடைய வினைமுற்று வடிவம் இல்லை.

செயப்பாட்டு வினை வடிவம் செயப்படுபொருளை ஏற்கும் வினைகளுக்கே உண்டு. ‘சேர்’ போன்ற வினைகள் செயப்படுபொருளை ஏற்காமலும் ஏற்றும் வரும். இந்த வேறுபாடு கால உருபு ஏற்ற வினை வடிவத்தில் தெரியும். முதலாவது, சேர்ந்தார் என்றும், இரண்டாவது, சேர்த்தார் என்றும் வரும். முதலாவதற்கு, *சேரப்பட்டார் என்ற செயப்பாட்டு வினை வடிவம் இல்லை; இரண்டாவதற்கு, சேர்க்கப்பட்டார் என்ற செயப்பாட்டு வினை வடிவம் உண்டு. கூர்த்த என்னும் குறிப்புப் பெயரெச்சம் *கூர்த்தார் என்னும் செயப்படுபொருள் ஏற்கும் வினை இருந்திருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது. இதற்கு இலக்கிய ஆதாரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அகராதிகள் இந்த வடிவத்தைத் தரவில்லை. இது எச்சரிக்கை விட்டார் / விடுத்தார் என்று பொருள்வேற்றுமை இல்லாமல் இரண்டு வேறு கால உருபுகளை ஏற்று ஒரு வினை வருவது போலவும் இந்த வழக்கு இருக்கலாம். தக்க/ தகுந்த(நேரம்) என்னும் இரட்டைவடிவம். இன்னொரு உதாரணம். போய்த் தொலைந்தார் / தொலைத்தார் என்ற வழக்கில் இரண்டாவது வினைமுற்று செயப்படுபொருள் குன்றிய வினையாக இருப்பது போலவும் இருக்கலாம்.

இன்றைய தமிழில், கூர்ந்தார் என்பது செயப்படுபொருள் குன்றாத வினையாக இருக்கிறது, மறந்தார் என்னும் வினையைப் போல. இதன் செயப்படுபொருள் நினைவு, நினைவுகூர்தல் நினைவைக் கூர்தல் என்று (கூர்மைப் படுத்துதல், அதாவது மறந்த ஒன்றை நினைவுக்குக் கொண்டுவருதல், என்னும் பொருள்கொண்டு) விரியும். நினைவுகூர்தல், (அவர்) முகம் மலர்(ந்தார்), (அவர்) படம் வரை(ந்தார்), (அவர்) பேட்டி கண்டார் என்பவை போல, கூட்டுவினை. அதாவது, பெயரும் வினையும் சேர்ந்து ஒரு வினையாக வரும் கூட்டுவினை (complex predicate). இதனாலேயே, சில கூட்டுவினைகள் வாக்கியத்தில் ஒரு செயப்படுபொருள் இருக்கும்போதே தன்னுள் இன்னொரு செயப்படுபொருளைக் கொண்டிருக்கும். என்னைப் படம்வரைந்தார், என்னைப் பேட்டிகண்டார் என்பனவற்றைப் போன்றது என்னை நினைவுகூர்ந்தார் என்பதும். (அவர்) முகம் மலர்(ந்தார்) என்னும் வாக்கியத்தில் ‘அவர்’, ‘முகம்’ இரண்டும் எழுவாய்.

நினைவுகூர் என்னும் கூட்டுவினை தமிழ்மொழியின் சில வரலாற்று உண்மைகளைக் காட்டுகிறது. வினைகள் தனி வழக்கு ஒழிந்து மற்றொரு சொல்லோடு சேர்ந்துமட்டுமே இக்காலத்தில் வரலாம். அப்படி வரும்போது கூட்டுவினை உருவாகலாம். ஒரு வினை ஒன்றுக்கு மேற்பட்ட இறந்தகால உருபை ஏற்கலாம். இலக்கண நூலில் சொல்லாத மாற்றங்கள் தமிழில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 39

 1. பெருமதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு

  வணக்கம்

  பெண்வழிச்சேறல் என்பதன் சரியான பொருள் என்ன?

  இங்கு வல்லின “ற ” செய்யும் பணி என்ன?

  “ஏறு”, “அல்” ஆகிய சொற்கள இங்கு மறை நிலையாய்ப் பொதிந்துள்ளனவா?

  பொதுவாக, செய்யவேண்டியவறையும் (Dos), விலக்கவேண்டியவற்றையும் (Don’ts) தெளிவாக உரைப்பதில் வல்லவாரன வள்ளுவர், இங்கு உண்மையில் என்ன சொல்லவருகிறார்?

  வணக்கம்

 2. பெண்வழிச்சேறல்

  ’சேறல்’ என்பது ‘செல்லுதல்’ என்னும் பொருளில்வருகிறது.
  அன்பில்லதாபெண்ணின் சொற்கேட்டு நடக்ககூடாது என்பதைக்கூறும் அதிகாரம். அவள்வழிச்செல்லக்கூடாது. (’வழியில் செல்லக்கூடாது’ – ‘இல்’என்னும் ஆறாம்வேற்றுமைத்தொகை, வலிமிகும் (ச்))

  கிழக்குநாடு – கீழைநாடு என்பதில் ‘கி’ நெடிலாவதுபோல், ‘செல்’ என்பது ‘சே’வென நெடிலாகிறது. இவ்வாறு மேலுமெடுத்துக்காட்டுகள் உள்ளன.

  ‘சேறல்’ – Tamil Lexiconனில் தேடுவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *