கேள்வி

தற்காலத் தமிழ் – மலையாளத்துக்கு இடையே இயந்திர மொழிபெயர்ப்பு முயற்சி செய்யும் போது இலக்கண மாற்றமும் நிகழவேண்டும். அவ்வாறெனில் இலக்கணத்தில் எவ்வெக்கூறுகள் மாற்றப்பட வேண்டும்? மலையாளம் தமிழ் மொழியோடு மிகவும் ஒன்றுபட்டு இருப்பதால், தற்காலத்தமிழ் இலக்கணத்திற்கு எழுதப்பட்ட நூல்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் இலக்கண அமைப்பின் கண்ணோட்டத்தோடு மலையாள மொழியைப் பார்க்கலாமா? எல்லா மலையாள இலக்கணக் கூறுகளையும் தமிழை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஒப்பிட்டு நோக்கலாமா?

விஜயராஜேஸ்வரி, கேரளப் பல்கலைக்கழகம்

பதில்

இயந்திர மொழிபெயர்ப்பைப் பற்றிப் பேசும்போது, சில உண்மைகளை மனதில் கொள்ள வேண்டும். மனிதத் தலையீடு இல்லாமல் இயந்திரமே முழுவதும் செய்யும் மொழிபெயர்ப்பு ஒரு குறிப்பிட்ட மொழிப் பயன்பாட்டு வட்டத்தில் (specific domain), ஒரே வகையான வாக்கிய அமைப்பையும் சொல்லாட்சியையும் எதிர்பார்க்கலாம் என்பதால், சாத்தியம் ஆகும். பொருள் மயக்கம் இல்லாத, ஊகப் பொருள் இல்லாத, அறிவியல் பிரதிகளில் உள்ள மொழி வகையிலும் அது சாத்தியம். இந்த மொழிபெயர்ப்புச் சூழல்களில் மொழியின் முழு இலக்கணத்துக்கும் முக்கியத்துவம் தராமல், மொழியில் எண்ணிக்கையில் மிகுந்து திரும்பத் திரும்ப வரும் கூறுகளைக் (repetitive elements) புள்ளியியல் அடிப்படியில் கணக்கிட்டு இயந்திர மொழிபெயர்ப்புச் செய்யும் சாத்தியம் இருக்கிறது.

இன்னொரு வகை இயந்திர மொழிபெயர்ப்பு ஒரு மொழியின் பிரதியில் உளள சாரத்தை இன்னொரு மொழியில் தருவதோடு திருப்தி அடையும். மொழிபெயர்ப்பு இலக்கண சுத்தமாக இருக்கத் தேவை இல்லை. பொருளை மாற்றாமல் இருந்தால் போதும்; இலக்கணத் தவறுகள் இருந்தாலும் பொருளை ஊகித்துப் பொருள் கொள்ள முடிந்தால் போதும்.

மற்ற இயந்திர மொழிபெயர்ப்புகளில் இரண்டு மொழிகளையும் ஒப்பிட்டு அவற்றின் இலக்கண அமைப்பை நிரல்நிறை (algorithm)ச் செய்துகொளவது அவசியம். இந்த ஒப்பீட்டில் இலக்கண ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் அடங்கும். பொருளோடு கூடிய சொற்களஞ்சியமும் அடங்கும், இரண்டு மொழிகளின் இலக்கணம் மிகவும் வேறுபட்டிருக்கும்போது அவற்றின் நிரல்நிறைகளும் மிகவும் வேறுபட்டிருக்கும். அதனால் இரண்டையும் பொருத்தும் முயற்சியும் கடினமாக இருக்கும். இலக்கண ஒப்பீட்டுக்கு எந்த மொழிக்கும் முற்ற முடிந்த இலக்கண விளக்கம் தேவை இல்லை. வாக்கிய அமைப்பின் வகைகளை இனம் கண்டாலே போதும். அதோடு சேர்ந்துவரும் பொருத்தம் இல்லாத சொற்சேர்க்கைகளையும் (word combinations) இனம் காண வேண்டும்.

தமிழ்-மலையாளம் போன்று மிக நெருங்கிய இலக்கணம் உள்ள மொழிகளிடையே இலக்கண ஒற்றுமையால் இயந்திர மொழிபெயர்ப்பு எளிதாக இருக்கும். இருப்பினும், போலி ஒற்றுமைகளை (false positives) கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, சொற்சேர்க்கையிலும் சொற்பொருளிலும் இதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மொழிபெயர்ப்பில் இலக்கண மாற்றம் இலக்கண அமைப்புகள் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் செல்வதை (transfer) குறிக்கிறது. இயந்திரத்தைப் பொறுத்தவரை எல்லா இலக்கணக் கூறுகளும் மாற்றம் செய்யப்படுகின்றன. ஒத்த இலக்கண அமைப்புகள் மாறுதல் (change) இல்லாமல் இடமாற்றம் செய்யப்படுகின்றன. வேறான இலக்கண அமைப்புகள் மாற்றி இடமாற்றம் செய்யபடுகின்றன. இப்படிப் பார்க்கும்போது எல்லா இலக்கண அமைப்புகளும் இடமாற்றம் செய்யப்படுகின்றன. இயந்திரத்தின் வேலைக்கு முன்னால், மனிதன் இரண்டையும் நிரல்நிறையில் அடையாளம் காட்ட வேண்டும். மலையாள இலக்கணம் தற்காலத் தமிழ் இலக்கணத்தோடு ஒத்திருப்பதால் இந்த இலக்கணதோடான ஒப்பீடே மொழிபெயர்ப்பு வேலையை எளிதாக்கும்.

இயந்திரம் மொழிபெயர்ப்பு வேலையை முடித்தபின் எதிர்பாராது வந்த பிழைகளை மனிதன் திருத்தம் செய்ய வேண்ண்டியிருக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 37

  1. கூகிள் மொழிபெயர்ப்பே ஒரு தரத்தை தொட பல பல ஆண்டுகள் ஆகும்.
    கூகிள் மொழிபெயர்ப்பு புள்ளியியல் அடிப்படையில் இயந்திர மொழிபெயர்ப்பு செய்கிரது. அதனால் ஒரு மொழியில் இன்னும் கோடிக்கணக்கான பக்கங்கள் இருக்கும்போது, மொழி பெயர்ப்பு இன்னும் தரமாக இருக்கும். இன்று இணையத்தில் மிக அதிகமாக வளர்ந்து முன்னணியில் இருப்பவை ஆங்கிலமும் ஜெர்மனும். அப்படி இருந்தும் ஆங்கில-ஜெர்மன் அல்லது ஜெர்மன் ஆங்கில மொழி பெயர்ப்பு பல முறை வேடிக்கையாக அல்லது அபத்தமாக உள்ளது. இயந்திர தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்பு கேக்கவே வேண்டாம், அது ஒரு தரத்தை தாண்ட 15 அல்லது 20 வருடங்கள் ஆகும். தற்கால தமிழ் இலக்கணத்திற்க்கு எழுதப்பட்ட நூல்கள் தற்கால தமிழை அவ்வளவாக தொடுவதில்லை. தொல்காப்பிய நன்னூல் அடிப்படை இலக்கண நூல்கள் 18ம் நூற்றாண்டு வரை இருந்த செய்யுள் தமிழை தழுவியே இருந்தன. தமிழ் “ அறிஞர்களுக்கே” இலக்கணம் என்றால் என்னவென்று தெரியவில்லை, அதனால் இப்போது எழுதப்படும் இலக்கண நூல்களும் தற்கால தமிழை அதுவும் பேச்சுத்தமிழை வர்ணிப்பவை அல்ல. தற்கால தமிழ் இலக்கன நூல்களை நம்பி பயனில்லை. அதைவிட “காக்னிடிவ் மேப்பிங்” செய்யும் வேர்ட்நெட் போன்ற இயந்திரங்கள் உபயோகமக இருக்கும் . வன்பாக்கம் விஜயராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *