நாகேஸ்வரி அண்ணாமலை 

நான் சிறுமியாக இருந்த போதே எளியவர்களையும் பலவீனமானவர்களையும் வலியவர்கள் துன்புறுத்தியதைப் பார்த்து மிகவும் மனம் நொந்து போயிருக்கிறேன். எங்கள் உறவினர்களில் ஒருவருக்குத் தாயும், தகப்பனும் இல்லை. அவருடைய தந்தையும் அவருக்காக விட்டுப்போன செல்வமும் அப்படியொன்றும் பெரிதில்லை. அவர் அவருடைய தாய் வழிப்பாட்டியால் வளர்க்கப்பட்டார். பள்ளியிலும் அவர் சரியாகப் படிக்கவில்லை. மொத்தத்தில் அவர் ஒரு பலவீனமான நபர். அவர் அவருடைய சொந்த உறவினர்களாலேயே – அதாவது அவருடைய சொந்தச் சித்தியின் பையன்களாலேயே – கேலி செய்யப்பட்டார். பாட்டிக்கு அந்த மகளைப் பிடிக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்த மகளால் அந்தத் தாய்க்கு எந்தக் கஷ்டமும் இல்லை. அதனால் அந்த மகளின் குடும்பத்தினர் யாவரையும் அந்தப் பாட்டிக்குப் பிடிக்கும். மூத்த மகள் இறந்த பிறகு அந்த மகளின் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு அந்தத் தாயின்மேல் விழுந்து விட்டதாலோ என்னவோ இறந்துபோன மகளின் பிள்ளைகளின் மீது பாசம் இருந்தாலும் மற்றவர்கள் கேலி செய்யும் போது அதைக் கண்டு கொள்வதில்லை. இதையெல்லாம் பார்த்து நான் மிகவும் மனம் நொந்து போயிருக்கிறேன்.

அப்போது என் மனதில் ஏற்பட்ட பாரம் இன்று வரை என் மனதில் இருக்கிறது. இப்போதும் எளியவர்களை வலியவர்கள் கேலி செய்தால், துன்புறுத்தினால் என் மனம் மிகவும் வேதனைப்படும். கல்லூரியில் புதிதாகச் சேருபவர்களை ஏற்கனவே அங்கு படித்துக் கொண்டிருப்பவர்கள் ‘ரேகிங்’ என்ற பெயரால் துன்புறுத்துவதையும் அதனால் சில மாணவர்கள் தங்கள் படிப்பையே தொடராமல் விட்டு விடுவதும் சிலர் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்கிப் படிப்பைத் தொடர முயன்று பின் முடியாமல் தற்கொலை செய்து கொள்வதையும் கண்டு மிகவும் மனம் நொந்திருக்கிறேன். இதைத் தடுக்க யாராலுமே முடியாதா என்று ஏங்கியிருக்கிறேன்.  கல்லூரிகளில் எல்லோரையுமே ‘ரேகிங்’ செய்கிறார்கள் என்றாலும் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் எளியவர்கள்தான்.

ரட்கெர்ஸ் பல்கலைக்கழக (Rutgers University) முதல் வருட மாணவன் தருண் ரவி. சம்பவம் நடந்த போது இவனுக்கு வயது 18. இவன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன். மாணவர் விடுதியில் ஒரே அறையில் இவனோடு தங்கியிருந்த இன்னொரு மாணவனின் பெயர் டெய்லர் கிளெமென்டி. இவன் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுடையவன் என்று கூறப்படுகிறது. தன்னுடைய ஓரினச் சேர்க்கை பார்ட்னரைத் தன்னோடு ஒரு நாள் தங்க வைத்துக்கொள்ளத் தனக்கு அறை வேண்டும் என்று டெய்லர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தருண் ரவி தங்கள் அறையை அவனுக்கு விட்டுக் கொடுத்தான். ஆனால் அதோடு விடவில்லை. டெய்லர் தன் பார்ட்னரோடு ‘ரகசிய உறவில்’ ஈடுபட்டிருந்ததை வெப்காம் என்ற கேமிராவின் மூலம் படமெடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டதோடு தன்னுடைய நண்பர்களை அதைப் பார்க்கும்படி அவர்களுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பினான். இரண்டு நாட்களுக்குப் பிறகு டெய்லர் மறுபடியும் தன் பார்ட்னரைத் தன் அறைக்கு அழைத்து வந்தான். ட்விட்டரில் தன் அந்தரங்கம் வெளியானதைத் தொடர்ந்து தர்மசங்கடத்திற்கும் அவமானத்திற்கும் உள்ளான டெய்லர் நியு ஜெர்ஸி மாநிலத்திலுள்ள வாஷிங்டன் பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டான். அதைத் தொடர்ந்து தருண் ரவி என்னும் மாணவன் மீது வழக்குத் தொடரப்பட்டு மார்ச் 16, 2012 அன்று அவன் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் இந்த வாரம் பரபரப்புச் செய்தியாக வெளி வந்து கொண்டிருக்கிறது.

தருண் ரவியின் வழக்கறிஞர் அவன் சிறு பிள்ளைத்தனமாக அந்தத் தவறைச் செய்து விட்டதாகவும் தன்னுடைய அறை மாணவன் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுடையவன் என்பதற்காக அவனை வெறுத்து இப்படிச் செய்யவில்லை என்றும் வாதாடினார்.  அமெரிக்காவில் ஒரு பிரிவினரைப் பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களை வெறுத்து அவர்களுக்குத் தீங்கு இழைத்தால் அது பெரிய குற்றம். இதனால்தான் டெய்லர் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுடையவன் என்பதற்காக அவனை வெறுக்கவில்லை என்று அவனுடைய வழக்கறிஞர் வாதாடினார். ஆனாலும் டெய்லரின் அந்தரங்கத்தில் (privacy) தலையிட்டான் என்றும் வெப்காம் மூலம் அவனை வேவு பார்த்தான் என்றும் டெய்லர் இறந்த பிறகு ட்விட்டரிலும் டெக்ஸ்ட் மூலமும் வெளியிட்ட செய்திகளை அழித்ததின் மூலம் தடயங்களை மறைக்க முயற்சித்தான் என்பதும் போன்ற குற்றங்களை தருண் மீது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சுமத்தியிருக்கிறார்கள்.

அமெரிக்க நீதி மன்றங்களில் நடைமுறையில் இருக்கும் ஜூரி முறை பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். ஒரு வழக்கை எடுத்துக் கொள்ளும் போது குற்றம் செய்தவர்களுடைய படிப்பு. வேலை, சமூக நிலை ஆகியவற்றுக்குத் தகுந்தாற்போல் ஜூரிகளைத் தேர்தெடுப்பார்கள். ஜூரிகளின் எண்ணிக்கையும் வழக்கிற்குத் தகுந்த மாதிரி வேறுபடும். இந்த வழக்கில் ஏழு பெண்களும் ஐந்து ஆண்களும் ஜூரிகளாக நியமிக்கப்பட்டனர். வெறுப்பு ஏற்படுவதால் செய்யும் குற்றம் என்ன என்பதை நிர்ணயிப்பது சிரமமான காரியம் என்பதால் ஜூரிகள் எப்படி அது குற்றம் என்று நிர்ணயிக்க வேண்டும் என்பது பற்றி ஜூரிகளுக்கு விளக்க நீதிபதி ஒரு மணி நேரம் எடுத்தாராம். குற்றம் சாட்டப்பட்டவர் மீதுள்ள குற்றம் சரியானதுதானா என்று எல்லா ஜூரிகளும் ஏகமனதாக ஒப்புக் கொள்ள வேண்டும். இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதங்களை முடித்த பிறகு ஜுரிகள் தங்களுக்குள் விவாதித்து முடிவுக்கு வர வேண்டும். பதின்மூன்று நாட்கள் நடந்த இந்த வழக்கில் ஜூரிகள் மூன்று நாட்கள் பதின்மூன்று மணி நேரம் விவாதித்து தருண் குற்றவாளி என்று தீர்மானித்தனர். 

தருணுக்கு மேல் முறையீடு செய்ய வாய்ப்பு இருந்தாலும் அவனுடைய வழக்கறிஞரால் புதிதாக எந்த வாதத்தையும் வைக்க முடியாது. தருண் சில தடயங்களை அழித்திருந்தாலும் நவீனத் தொழில்நுட்பம் மூலம் எல்லாத் தடயங்களையும் தோண்டி எடுத்து விட்டனர் அரசு தரப்பு வக்கீல்கள். அவற்றை மாற்ற முடியாது. தருணுக்கு ஐந்து முதல் பத்து வருடம் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்கிறார்கள். இந்த ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி நீதிபதி எத்தனை ஆண்டு தண்டனை என்று தீர்மானிப்பார். 

அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டவரிடம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் தண்டனை குறைவாகக் கிடைக்கும் என்றும் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படியும் கேட்பார்களாம். இப்படிப் பலரைச் செய்யாத குற்றத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு. இந்த வழக்கிலும் தருணுக்கு அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டதாகவும் அப்படி அவன் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டால் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டதாம். ஆனால் அவன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாதலால் வழக்கு நடந்து இப்போது அவன் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. தருண் அமெரிக்கப் பிரஜை இல்லையாதலால் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பப்படும் வாய்ப்பும் இருக்கிறதாம்.

என்னை இந்த வழக்கில் மிகவும் பாதித்தது பதின்ம வயதுப் பையன், கல்லூரி மாணவன் ஒருவன் இப்படி நடந்து கொண்டானே என்பதுதான். ஏன் இவன் இப்படி அவனுடைய அறையைப் பகிர்ந்துகொண்டவனைக் கொடிய கேலிக்கு ஆளாக்கினான் என்பதே.  அவனுடைய அந்தரங்கத்தைப் படம் பிடித்து எல்லோரும் பார்க்கும்படியான ட்விட்டரில் போடுவானேன்? இப்படிப்பட்ட கீழ்த்தரமான, அற்பப் புத்தியுள்ள ஒரு பையனை அவனுடைய பெற்றோர்கள் அவன் இப்படி நடந்துகொள்வான் என்று எப்படி எதிர்பார்க்காமல் இருந்தார்கள்? வளரும் பயிர் முளையிலே என்பார்கள். இவன் வளர்ந்து வரும்போதே இப்படிப்பட்ட சின்னப் புத்தியைத்தான் கொண்டிருந்திருப்பான். இதை எப்படிப் பெற்றோர்களாகிய அவர்கள் கவனிக்காமல் விட்டார்கள்?

பெற்றோர்களுக்கெல்லாம் நான் விடுக்கும் வேண்டுகோள் இதுதான். உங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் வளரும்போதே அவர்களுக்கு நல்ல மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுங்கள். டெய்லரின் தந்தை வழக்கு முடிந்ததும் பள்ளியில் படிக்கும் பையன்களுக்குக் கீழ்க்கண்டவாறு அறிவுரை கூறியிருக்கிறார்: “உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எத்தனையோ பேரைச் சந்திப்பீர்கள். சிலரை உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அதற்காக அவர்களுக்கு எதிராக ஒன்றும் செய்யாதீர்கள். யாராவது பிறருக்குத் தீங்கு செய்வது உங்கள் கவனத்திற்கு வந்தால் அதைத் தடுத்து நிறுத்துங்கள். உலகில் மாற்றங்கள் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அது உங்களால்தான் முடியும்”.  இந்தத் தந்தையின் துயரத்தைப் பெற்றோர்கள் எல்லாரும் நன்றாக உணர வேண்டும். மற்றப் பெற்றோர்களின் வேதனைக்குத் தங்கள் பிள்ளைகள் காரணமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறு வயதில் பிள்ளைகள் சீராக வளர்வதற்குப் பெற்றோர்கள் முக்கிய காரணம் என்பதைத் தயவுசெய்து மனத்தில் கொள்ளுங்கள்.

 

படத்திற்கு நன்றி:http://www.shockya.com/news/2012/03/16/dharun-ravi-found-guilty-of-invasion-of-privacy-in-rutgers-webcam-case

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *