பேரா. இ. அண்ணாமலையின் பதில்கள் – 48

இன்றைய எழுத்துத் தமிழும்  பேச்சுத் தமிழும் வேறுவேறு மொழிகளா?

-இணையக் குழுக்களில்  விவாதிக்கப்படும் கேள்வி

வல்லமையில் என்  முப்பத்தைந்தாம் கேள்வி-பதிலில்  இன்றைய எழுத்துத் தமிழுக்கும்  பேச்சுத் தமிழுக்கும் உள்ள சில இலக்கண வேறுபாடுகளை  எழுதினேன். மேலே உள்ள கேள்வி அந்த மாதிரியான இலக்கண வேறுபாடுகள்  இரண்டு தமிழையும் வேறு மொழிகள்  ஆக்குகின்றனவா என்று கேட்கிறது. அதாவது, வேறுபாடு நடை அல்லது வெளிப்பாட்டு வேறுபாடா, அல்லது மொழி வேறுபாடா என்பதே கேள்வி.

இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு முன் சில விளக்கங்கள் தேவை. எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்ற பெயர்கள் பெரும்பான்மை வழக்கு பற்றித் தரப்பட்ட பெயர்கள். மேடைப் பேச்சும் எழுத்துத் தமிழில் அடங்கும்; எழுதப்படும் கதைகளின் பாத்திரங்களின் உரையாடல்களும் சிரிப்புத் துணுக்குகளும் பேச்சுத் தமிழில் அடங்கும். எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்னும் வேறுபாடு, மொழி வெளிப்படும் ஊடக வேறுபாட்டைக் காட்டுவது மட்டுமல்ல; அது தமிழை வழங்குவோர்களிடையே உள்ள உறவின் தூரத்தையும் நெருக்கத்தையும் பொறுத்து வேறுபடுவது. இந்த வேறுபாடு மொழியின் இலக்கணத்தில் அல்லாமல் நடையிலும் பிரதிபலிக்கலாம். ஆனால், தமிழில் இலக்கணமும் இந்த வேறுபாட்டைப் பிரதிபலிக்கிறது. ஆகவே, இந்த இலக்கண வேறுபாடு மொழியை இரண்டாக்குகிறதா என்பதே கேள்வி.

கொச்சைத் தமிழும்  கலப்புத் தமிழும் மட்டுமே  பேச்சுத் தமிழ் அல்ல. எல்லாரும்  பொதுவாகப் பொது இடங்களில்  பேசும் தமிழ் ஒன்று உண்டு. அதுவே எழுத்துத் தமிழோடு ஒப்பிடப்படுகிறது. இதைப் போலவே, பண்டிதர்கள், அறிவியல், சட்டம், ஆட்சியை நடைமுறைப்படுத்துவர்கள் எழுதும் தமிழ் மட்டுமே எழுத்துத் தமிழ் அல்ல. சிறப்புத் துறை சாராமல் பொதுக்கல்வி உடையவர்கள் எழுதும் தமிழே இங்கே பேச்சுத் தமிழோடு ஒப்பிடப்படுகிறது.

ஒரு மொழிக் குழுவின் (linguistic community) மொழி வழக்கில் பல்வேறு மொழிகள் இருக்கலாம்; இதைப் பன்மொழியம் (multilingualism) என்பார்கள். ஒருவருடைய மொழி வழக்கில் பல வட்டார மொழிகளும் பல நடைகளும் இருக்கும். இது இயல்பு. இதைப் பன்மொழியம் என்பதில்லை; இதைப் பல்வழக்கியம் எனலாம். தமிழைப் பள்ளிகளில் கற்றவர்களிடம் உள்ள எழுத்து மொழி சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட மொழி வழக்கு, இருமொழியியமா, இருவழக்கியமா என்பதே கேள்வி.

ஒரு மொழி இலக்கணத்தின் கட்டுமானம். இந்த இலக்கணம் மொழியின் கட்டை ஒரு கணித வாய்பாடு போல விளக்கும் வரையறை; மொழிக்குச் சட்டம் போலக் கட்டுப்பாடு விதிக்கும் குற்றக் கையேடு அல்ல. மொழி கலாச்சாரத்தின் கட்டுமானமும்கூட. அதன் கலாச்சாரத்தின் கட்டுமானத்தில் மொழிக்குழுவின் வரலாறும் அரசியலும் பெரும் பங்கு பெறும். தன்னை இனங்காட்டுவதாக வரித்துக்கொண்ட மரபுச் செல்வமும் வரலாற்றில் அடங்கும். மரபுச் செல்வத்தில் இலக்கியமும் தொன்மங்களும் பெரும் இடம் பெறும். எழுத்துத் தமிழை அறியாத தமிழர்களும் அதில் உள்ள இலக்கியம் தங்கள் மரபுச் செல்வம் என்ற உணர்வை உடையவர்கள். எழுத்துத் தமிழை அறிந்தவர்களும் காலந்தோறும் மாறிவரும் தமிழ் இலக்கியத்தின் வழிவருவதே இன்று பேச்சு மொழி கலந்து எழுதப்படும் தமிழ் இலக்கியம் என்று பார்ப்பவர்கள். தமிழகத்தின் பேச்சுத் தமிழுக்கு இலங்கையின் பேச்சுத் தமிழோடும் மலையாளத்தோடும் உள்ள தூரம் ஒப்பிடக் கூடியது என்றாலும், இலங்கைத் தமிழ் தனி மொழி அல்ல என்று தமிழின் மொழிக்குழு நினைப்பதற்கு இரண்டையும் பேசுபவர்கள் இலக்கியத்தை இருவருக்கும் பொதுவான கலாச்சாரப் பாரம்பரியமாகக் கொள்வது முக்கியமான காரணம். இதற்கு மேல் அரசியல் காரணமும் இருக்கிறது. இரண்டையும் வேறாகப் பார்ப்பதை விட ஒன்றாகப் பார்ப்பதில் அரசியல் நன்மை இருக்கிறது. மலையாளத்தைப் பொறுத்தவரை இந்த நன்மை தலைகீழானது. கலாச்சாரக் கட்டுமானம் என்னும் வகையில் எழுத்துத் தமிழும் பேச்சுத் தமிழும் ஒரு மொழியே. இது சமூக மொழியியலாளர்களின் பார்வை.

இலக்கண மொழியிலாளரின்  பார்வையில், இரண்டு வழக்குகள் அவற்றைப் பேசுபவர்கள் பயிற்சி இல்லாமலே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் அளவீடு முக்கியமானது. ஒரு வழக்கில் மற்றவருக்குப் புரியாத பகுதி பத்து அல்லது இருபது சதவிகிதத்திற்குள் இருந்தால், அந்த வழக்குகள் ஒரே மொழி என்று சொல்ல அவர்களுக்குத் தடை இல்லை. ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் பகுதி இலக்கண ஒற்றுமையாலும் அகராதி ஒற்றுமயாலும் அமையும். ஒரு மொழியைப் புரிந்துகொள்வது என்பது துல்லியமாகக் கணிக்க முடியாத ஒன்று; மேலும் நபருக்கு நபர் அவருடைய பின்னணியைப் பொறுத்து மாறும் ஒன்று. ஒரே மொழி என்றால் பயிற்சி இல்லாமல் புரிந்துகொள்ளக் கூடியது என்ற கருத்துக்கும் ஒரே மொழி எனபது கலாச்சாரத்தால் கட்டப்படுவது என்ற கருத்துக்கும் முரண்பாடு இருந்தால், பின்னைய கருத்தின் முடிவையே மொழிக்குழு ஏற்றுக்கொள்ளும். பேச்சில் இந்தி பேசுபவர்கள் உருதுவையும் உருது பேசுபவர்கள் இந்தியையும் புரிந்துகொள்ள முடியும் என்றாலும், அவர்களுக்கு இரண்டும் வேறு மொழிகள். இந்த எண்ணம் எழுத்துமுறை முதலாக அரசியல் ஈறாக உள்ள வரலாற்று விளைவினை ஒட்டி எழுவது. இந்தியர்கள் பேசும் ஆங்கிலத்திற்கும் ஆங்கிலேயர்கள் பேசும் ஆங்கிலத்திற்கும் புரிந்துகொள்வதில் அதிகமாகவே இடைவெளி இருந்தாலும் இரண்டும் ஆங்கில மொழியே என்று கருதுவது  வரலாற்றின் பிரதிபலிப்பு.

நேரடியாக இலக்கண இடைவெளியை  வைத்து ஒரு மொழி, இரு மொழி என்று வேறுபடுத்தலாம் என்பது வரலாற்று மொழியியலாளரின் கொள்கை. அதாவது, இலக்கண மாற்றங்கள் ஒரு அளவிற்கு மேல் அதிகமானால், ஒரு மொழி பிரிந்து இரண்டாகும் என்பதே இந்தக் கொள்கையின் அடிப்படை. ‘எந்த அளவிற்கு’ என்பதற்குப் புரிதலோடு தொடர்பில்லாத ஒரு துல்லியமான கணக்கு இல்லை. எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் உள்ள வேறுபாடு அவற்றின் இலக்கண விதிகளுக்கு (அதாவது வாய்பாடுகளுக்கு) இடையே உள்ள வேறுபாடு; அது அளவில் அதிகம்; அதனால் அவை இரு வேறு மொழிகள் என்பது ஒரு வாதம். வேறு சிலர், அது இலக்கண விதிகளின் வேறுபாடு அல்ல; இலக்கண விதிகளை மீறுவதால் வரும் வேறுபாடு என்பார்கள், இவர்கள் இலக்கணத்தைக் காலத்தால் மாறாத சட்டப்பெட்டகமாகப் பார்ப்பவர்கள்; இந்தப் பார்வையில் புதிய விதிகள் தோன்றுவது பேசுபவர்களின் சோம்பேறித்-தனத்தாலோ கெட்ட புத்தியாலோ நடக்கும் செயல்; அதனால் மொழி விவாதத்தில், இது –தமிழ் பேசும் எல்லாரும் செய்யும் செயலாக இருந்தாலும்- ஒரங்கட்ட வேண்டிய செயல் என்று வாதிடுபவர்கள். இது ஒரு கற்பனையான நிலையை மொழி வழக்கில் பார்த்து, தமிழ் ஒன்றா, இரண்டா என்னும் கேள்விக்கே இடம் இல்லாமல் செய்ய முயலும் செயல்.

பேச்சுத் தமிழுக்கென்று  ஒரு இலக்கணம் உண்டு என்று ஒப்புக்கொள்பவர்களில் சிலர் சில எளிய விதிகளின் மூலம் எழுத்துத் தமிழைப் பேச்சுத் தமிழோடு இணைக்கலாம். இரண்டுக்கும் உள்ள இலக்கண இடைவெளி பொருட்படுத்தத் தக்கது அல்ல என்று வாதிடுவார்கள். ஆனால். இதை மறுக்கும் தரவுகள் உண்டு. தமிழ்க் குழந்தை பேச்சு மொழிக் கலப்பில்லாத எழுத்துத் தமிழைப் பள்ளியில் கற்க நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எழுத்துத் தமிழ்மட்டும் படித்துவிட்டுப் பேச்சுத் தமிழைப் படிக்கும் வெளிநாட்டவருக்கு அதைப் படிக்கத் தனி மொழி படிக்கும் அளவிற்கு நேரம் எடுக்கிறது. அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தால் பேச்சுத் தமிழ் பத்துச் சதவிகித அளவுதான் புரிகிறது. (தமிழர்கள் தமிழை வேகமாகப் பேசுவதும் இதற்கு ஒரு காரணம் என்பார்கள்!). தமிழ் பேச மட்டும் தெரிந்தவர்கள் மேடைப் பேச்சை அமர்ந்து கேட்கிறார்கள் என்றால், அவர்களுடைய புரிதல் நூறு சதவிகிதம் என்று அர்த்தமல்ல. இன்னொரு மொழியில் இசைக் கச்சேரி கேட்பதைப் போல, ஒலியின் இனிமைக்கும் பேச்சாளரின் தமிழ்த் திறனுக்கும் மயங்கி இவர்கள் பேச்சைக் கேட்பதும் உண்மை. இதற்குப் புரிதல் முக்கியமல்ல.

எழுத்துத் தமிழுக்கும்  பேச்சுத் தமிழுக்கும் இடைவெளி  எப்படி இருந்தாலும், பல சமூகக் காரணங்களால் இருபதாம் நூற்றண்டிலிருந்து இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. பேச்சு மொழியின் புதிய தொடரிலக்கணக் கூறுகளும் சொற்பொருளின் கூறுகளும் எழுத்து மொழியில் இடம் பெறுகின்றன. அதில் எழுத்து மொழிக்கே உரிய கூறுகளும் பேச்சு மொழியிலிருந்து வந்துசேர்ந்த கூறுகளும் சேர்ந்து உள்ளன. இதனால் எழுத்து மொழியில் ஒன்றைக் கூற ஒன்றிற்கு மேற்பட்ட அமைப்பு முறைகள் உள்ளன. சொல்லின் உள்ளமைப்புக் கூறுகளும் இப்படியே. இரண்டும் அதிகமாக வித்தியாசமாக இருப்பது சொல்லின் ஒலியமைப்பில் மட்டுமே. சொல்லிலக்கணத்தில் காணப்படும் பெரும்பான்மை வேறுபாடுகள் ஒலியமைப்பால் வருவன. இதற்கான சான்றுகளை என்னுடைய Social Dimensions of Modern Tamil என்ற நூலில் (க்ரியா வெளியீடு) காணலாம்.

மொழிப் பயன்பாட்டிலும் இடைவெளி குறைந்துவருகிறது. மேடைத் தமிழில் நகைச்-சுவைக்கும், வகுப்பறையில் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே நடக்கும் கலந்துரையாடலிலும், செய்தித் தாள்களின் செய்தித் தலைப்பிலும், பேட்டிக் கட்டுரையிலும், திரைப்படத்தின் தலைப்பிலும் பாடலிலும் பேச்சுத் தமிழ் இடம் பெறுகிறது. பேச்சில் புதிதாக உருவாக்கப்பட்ட எழுத்து மொழிக் கலைச்சொற்கள் இடம் பெறுகின்றன.

இயல்பாக நடக்கும் இந்த மாதிரியான  இடைவெளிக் குறைப்பை ஊக்குவிப்பதே தமிழ் ஒன்றா, இரண்டா என்ற கேள்வியின் தேவையைக் குறைக்கும். இடைவெளிக் குறைப்பில் எழுத்து மொழியில் பேச்சு மொழியின் தாக்கமே அதிகப் பங்கு வகிக்கிறது. இதற்கு மாறாக, தூய தமிழ் –அதாவது பழைய தமிழ்- வேண்டும் என்று பின்னோக்கிப் போய்ப் பழைய இலக்கண நூல்கள் சொல்லுவதைப் போல எழுத விரும்புவது இடைவெளியைக் கூட்டும். அப்படி எழுதுவதைப் போல் பேசி இடைவெளியைக் குறைக்கலாம் என்று சொல்வது எந்த மொழி வரலாற்றிலும் காணாத ஒன்று. தமிழை உன் தாயிடம் படிக்காதே, பழங்கால ஆசானிடம் மட்டுமே படி என்று சொல்வதைப் போன்ற நடக்க முடியாத செயல். இது சூடிதார் போடும் மகளைப் புடவைதான் கட்ட வேண்டும் என்று கட்டளையிடும் மனப்பாங்கின் வெளிப்பாடு. இதைச் செய்ய முடிந்தாலும், அது சர்வாதிகாரத்தினால்தான் முடியும். தமிழின் இயல்பான வளர்ச்சிக்குக் கடிவாளம் போடுவது தமிழை –தமிழ் பேசுபவர்களை- அடக்கியாளும் செயல். தமிழ் அதன் வரலாற்றில் என்றும் அடக்கியாளப் பட்டதில்லை; அதனாலேயே தமிழ் வழங்கு மொழியாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on “பேரா. இ. அண்ணாமலையின் பதில்கள் – 48

 1. பேரா.. அண்ணாமலைக்கு ஒரு முக்கிய விஷயத்தை பற்றி ஆர்வம் தூண்டுவதற்கு நன்றிகள்.
  சூடிதார் போடாதே, புடவை கட்டு என மகளை பாத்துச் சொல்லும் தாய் , நம் தொல்காப்பியத்தை நடைமுறையாக்க முயலும் ‘”தூயதமிழ்’ வாதிகளுக்கு நிகர் அல்ல. முன்னது எல்லா காலத்திலும் சமூகத்திலும் நிகழும் சந்ததி இடைவெளிதான், பெற்றோர்கள் பொதுவாக தான் செய்ததை குழந்தைகள் செய்ய வேண்டும் என எதிர்ப்பார்ப்பது. ஆனால் ‘தூயதமிழார்’ லூட்டி வேறு வகை . தான் செய்யாததையே மற்றவர்களிடம் எதிர்பார்க்கின்றவர்கள் தூயதமிழாளர்கள். ஆனால் சிந்தனை அளவில் தூயதமிழை எதிர்த்து, அதை ஒதுக்கும் அளவுக்கு தமிழ் சமுதாயம் இன்னும் மனோபலம் அடைந்து விடவில்லை. தூய தமிழர்கள் குழப்பம் தவிர வேறு எதையும் இதுவரை சாதிக்கவில்லை.

  விஜயராகவன்

 2. டோக்ரா ஸாஹிப் , உங்கள் வேலையையும் மக்கள் மொழியையும் தீவிரமாகவும், சாகசத்துடனும், சிரத்தையுடனும் அணுகுவதை மெச்சுகிறேன். நீங்க இன்னும் பேச்சுத்தமிழில் எழுதினால் நன்னா இருக்கும். நீங்க எப்படி எழுத வேண்டும் என உங்க ஜட்ஜ்மெண்டுக்கு விட்டுவிடுகிறேன். நீங்கள் தமிழ்நாட்டுக்கு 200 வருஷங்கள் முன்னால் வந்த எல்லிஸ் போல் தமிழில் தீவிர ஆர்வம் காட்டுவது சந்தோஷத்தை கொடுக்கிறது. வாழ்க உங்கள் பணியும் , சிரத்தைகளும்.

  தமிழை தமிழர் அல்லாதவர்கள் எப்படி கற்றுக்கொள்வது என பல சர்சைகள் நடக்கின்றன. தமிழை எப்படி கற்றுக் கொள்வது என்பதற்க்கு நீங்கள் ஒரு மாடல்.
  விஜயராகவன்

 3. திரு விஜயராகவன் அவர்களே,
                                                                    உங்கள் ஊக்க வார்த்தைகளுக்கு நன்றி. இயன்றளவு செய்து வருகிறேன். இன்னும் நிறைய செய்ய ஆசை.                                                              
   நீங்கள் என் இணையதளத்தில் ‘புதிய தமிழ்’ என்னும் என் கட்டுரையைப் படித்த பின்பே இந்த குறிப்பை எழுதியிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். அந்தக் கட்டுரையை சில மாதங்களுக்கு முன் பேச்சு தமிழில் எழுதினேன். இப்பொழுது திரு அண்ணாமலை அவர்களின் கட்டுரையைப் படித்த பிறகு எழுத்து வடிவமாக மாற்றுவதுடன் கடந்த 5-6 மாதங்களில் தமிழ் மொழியின் பயன்பாட்டைப் பற்றிய என் அனுபவங்களின் அடிப்படையில் விரிவாக்க ஆரம்பித்துள்ளேன். கட்டுரையை அன்றைய தினம் எழுதியபோது பேச்சு தமிழில் எழுதப் போவதை நியாயபடுத்தும் நோக்கத்துடன் எழுதினேன். இப்பொழுது இதைப்  பேச்சு-எழுத்து என்ற விவாதத்திற்கு ஒரு தளமாகவே மாற்ற விரும்புகிறேன். 

  பேச்சு தமிழில் எழுத வேண்டும் என்று என் வாதம் அல்ல. பேச்சு தமிழை எழுத்து வடிவத்திலிருந்து மிகவும் விலகிப் போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் வாதம். பேச்சு தமிழை எழுத்து சாதனமாக நான் பயன்படுத்தியதை யாரும் குறை சொல்லவில்லை. ‘இது பேச்சு தமிழாகவும் இல்லை, எழுத்து தமிழாகவும் இல்லை’ என்றுதான் நண்பர்கள் சொன்னார்கள். அது நியாயமானதாகவே பட்டது. அதனால் மீண்டும் என் எழுத்துக்களை எழுத்து வடிவத்திற்கு மாற்றினேன்.  கட்டுரையில் நான் கூற முற்பட்டதை இன்னும் தெளிவாக விளக்க வேண்டும் என்று உணர்ந்தேன்.

  இந்த விஷயம் இன்னும் ஆழமாக விவாதிக்கப்பட வேண்டியதொன்று என்பதை உணர்ந்தும், திரு அண்ணாமலை அவர்களின் கட்டுரையால் உந்தப்பட்டும் ‘புதிய தமிழ்’ கட்டுரையை அடுத்த சில நாட்களில் படிப்படியாக விரிவாக்கவும் தெளிவாக்கவும் போகிறேன்.

  என் பணியில் நீங்கள் காட்டிய அக்கறைக்கு மிக்க நன்றி.

  நன்மதிப்புடன்,
  டோக்ரா

 4. பேரா. அண்ணாமலை ”பேச்சுத் தமிழுக்கென்று ஒரு இலக்கணம் உண்டு என்று ஒப்புக்கொள்பவர்களில் சிலர் சில எளிய விதிகளின் மூலம் எழுத்துத் தமிழைப் பேச்சுத் தமிழோடு இணைக்கலாம். இரண்டுக்கும் உள்ள இலக்கண இடைவெளி பொருட்படுத்தத் தக்கது அல்ல என்று வாதிடுவார்கள்” . இப்படி “சில எளிய விதிகள்” வழியாக எழுத்துத்தமிழில் இருந்து பேச்சு மொழிக்கு போய் விடலாம் என்பதில் பல தீர்க்கமுடியாத பிரச்சினைகள் உள்ளன. முதலாவதாக அவை எத்தை விதிகளில் என்பதில் மாறுபாடு உண்டு. சிலர் 12 என சொல்வார்கள், சிலர் அதற்கு மேல் சொல்வார்கள். இது சிக்கல்களைத்தான் உண்டாக்கும். மேலும் “விதியில்” வரமுடியாத பல இடைவெளிகள் உள்ளன. கடைசியாக இந்த “விதிகள்” எழுத்திலில் இருந்த் பேச்சுக்குத்தான் உள்ளன. பேச்சில் இருந்து எழுத்துக்கு எந்த விதியும் இல்லை. அதற்கு எழுத்து > பேச்சு “விதிகளை” தலைகீழாக போட முடியாது. அதற்கு மேல் இன்னும் பல சிக்கல்கள் உள்ளன. பொதுவாக ர, ற இவற்றின் வித்யாசமும், ந, ன வின் வித்யாசமும் பேச்சில் மறைந்து விட்டன. இன்னும் பலர் பேச்சில் ழ மறைந்து விட்டது. இலங்கைத் தமிழில் எழுத்துகள் வேறு விதமாக பிரயோகம் ஆகிறன. உதாரணமாக டோரண்டோ என தமிழ்நாட்டு தமிழில் எழுதுவதை றோரண்ரோ என ஈழத்தமிழில் எழுதுகிறனர். ஈழத்தமிழ் எழுதுவதில் ற முதலில் வரலாம். இதெல்லாம் தமிழ்நாட்டவரை தலை சுற்ற வைக்கும். இதற்கு மேல் “தூய தமிழ்” ஆதரவாளர்கள் கிரந்த எழுத்துகளை உதறித்தள்ளி தொல்காப்பிய 30 எழுத்துகளே போதும் என நினைக்கிறனர். 1500 ஆண்டுகள் மாற்றத்தை தூக்கி எரிந்து சங்க காலத் தமிழை அடையலாம் என பகல் கனவு காண்கின்றனர். இந்த குழப்பங்களின் விளைவு என்ன? தமிழ் படிப்பு , பேச்சு, உழைப்பு புலங்களில் இருந்த வீரியத்தை இன்று இழந்து கொண்டு இருக்கிறது. அதை அறிந்த தமிழக அரசே அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கில மீடியம் கொண்டு வந்து விட்டது. கடந்த 60 வருஷங்களாக அரசாங்க ஆதரவு இருந்தும் தமிழில் எல்லோருக்கும் படிக்கும் வண்ணம் நல்ல புத்தகங்கள் இல்லை. தமிழ்நாடு அரசு இனையத் தளத்திற்க்கு போனால் பெரும்பாலான தஸ்தாவேஜுகளும் ஆவணங்களும் ஆங்கிலத்தில்தான் உள்ளன. இதெல்லாம் “உண்மைத் தமிழை” உதாசீனம் செய்து தனித்தமிழ் வழியில் சென்றதன் விளைவு. வ.கொ.விஜயராகவன்

 5. எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பது தமிழின் உயிர்ப்புக்குத் தேவையான ஒன்று. இது சமூக வளர்ச்சியின் விளைவாகக் குறைந்து வருகிறது. இதற்குச் சமூக அங்கீகாரம் காலப்போக்கில் வருவதைத் தடுக்க முடியாது. இன்றைய தேவை பேச்சுத் தமிழுக்கு ஒரு எழுத்து முறை (spelling) உருவாக்குவது. இது பேச்சுத் தமிழைக் கற்றுக்கொடுப்பதற்குத் தேவை; இன்றைய வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இலக்கியத்தைப் படைக்கத் தேவை; மனத்தின் உணர்வுகளை உள்ளபடி எழுத்தில் வெளியிடத் தேவை.
  எந்த மொழியிலும் எழுத்துமுறை பேச்சை அப்படியே எழுத்தில் வடிப்பதில்லை. Spelling வேறு; transcription வேறு. கொச்சையை எழுத்தில் கொண்டுவருவது வேறு; பேச்சு மொழிக்கு எழுத்து முறை உருவாக்குவது வேறு.
  இந்த நோக்கில் நான் பேச்சு மொழியைக் கற்றுக் – கொடுக்க, வேறு காரணங்களுக்கும் பயன்படுத்த நான் உருவாக்கியுள்ள எழுத்து முறையை (Spelling System for Standard Spoken Tamil) http://www.crea.in என்னும் இணைய தளத்தில் காணலாம். பிரெஞ்சு மொழியில் போல, இதைப் பயன்படுத்தச் சில உச்சரிப்பு விதிகள் வேண்டும்.
  இ.அண்ணாமலை

 6. நன்றி, அதை டௌன்லோட் செய்தேன், வேகமாக படித்ததில் உங்கள் ரெகமண்டேஷன்கள் சரி போலத்தான் . இன்னொருதரம் மெதுவாக படிக்கணும்

  வகொவி

 7. பாமினி எழுத்துரு, உள்ளீட்டுமுறை உருவாக்குனரிடமிருந்து ஒரு கேள்வி? கணினித் தமிழ் உள்ளீடுகளில் முற்றாக வட எழுத்துருக்களை நீக்கிவிட்டால் என்ன? ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் தமிழைத் தமிழாகவும் எழுதலாமல்லவா! அடுத்த சந்ததியேனும் மொழிக் கலக்கத்திலிருந்து விடுபட ஏதுவாக இருக்குமல்லவா?

 8. நாம் பேசும் தமிழ் குறித்தும்,எழுதும் எழுத்துத் தமிழ் குறித்தும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது.றமணன் என்றே குறிப்பிட்டு எழுதப்பட்ட புத்தகம் உள்ளது.இது குறித்து சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் வாதிட்டனர்.
  முதலில் தமிழ் அழியாமல் இளந்தலைமுறையினரிடம் போய்ச் சேவேண்டும்.அதற்குக் கணினியில் எடுத்து வர வேண்டும்.ஒவ்வொரு செயலிலும் தவறு பூதக்கண்ணாடி கொடுத்துப் பார்க்கும்போது நடக்கவேண்டியவையும் நடக்காது.
  எழுதுகின்ற தமிழில் இருந்தாலே போதுமானது.

 9. என் போன்றோர் புலப்பெயர் வாழ்வில் 30 ஆண்டுகளைத் தொைலத்துவிட்்டோம்! நாம் தாயகத்திலிருந்து புறம்படும்போது இருந்த பேச்சு-எழுத்துத் தமிழுக்கும் இன்றைய மொழிக்கும் பாரிய மாற்றங்கள் இருக்கின்றது. குறிப்பாக ஒலிப்பில் தமிழ் மொழிக்கே உரித்தான (தலைக் குரல் – Head Voice) ஒலியலையிலிருந்து மாறுபட்டு, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தையொட்டிய ஒலியலை (மார்புக் குரல் – Chest Voice) இல் அதிகமாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது! எமது குழந்தைகள் இங்கு பிறந்து வளர்கின்றார்கள், அவர்களுக்கு இப்புதிய மாற்றங்கள் தமிழ் கற்பதில் பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக: தமிழ் வல்லினத்தில் (க, ச, ட, த, ப, ற) அல்லாத  (சதுர்வர்க்க) வடமொழித் தொனியில் பரவலாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. உ+க: காந்தி – Gandhi, சமையல் – ஸமயல், செய்தி – ஸெய்தி, தேசிய – Dhesiya, பாரதி – Bharathi, புத்தகம் – Budhagam, பூமி – Bhoomi….! தமிழ்மொழியினது இவ்வல்லினத் தனிப்பண்புதான் ஏனைய இந்திய மொழிகளிலிருந்து தமிழைக் காத்துவைத்துள்ள ஒரு சிறப்பாகும். இதை நாம் இழக்கலாமா?

  இன்றைய சந்ததிக் குழந்தைகள் இப்புதிய சொற்களை எப்படி எழுதுவதென்று கேட்கிறார்கள்! தமிழ் அரிச்சுவடியில் மேலும் புதிய வட எழுத்துகளை புகுத்தி மேலும் சிதைப்பதுதான் சிறப்புத் தருமா? யாமறிந்தளவில், இன்று இந்தப் பூமிப் பந்தில் தமக்கேயான மொழி, பண்பாடு, கொடி, எல்லைகளைக் கொண்டுள்ள நாடுகளிலெல்லாம் அவரவர் தாய்மொழிக்குப் பின்புதான் அனைத்துமே! ஆரம்பப் பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் வரை தாய்மொழியில் தேறாது அடுத்து எந்தப் படிநிலை உயர்வும் கிடையாது! தாய் மொழியில் தேறாதவன் எதற்கும் உதவான் என்பதே அவர்கள் மறை! தாய்மொழிப் பற்றில்லாதவனுக்கு எப்படி தாய்நாட்டுப் பற்று வரும்? ஆரம்பப் பள்ளியில் திருத்தப்படாத குற்றமே இன்று ஊடகம் வரை வந்து நின்று தமிழ் பேசத் திணறுகின்றார்கள்! உலகத் தமிழர்களுக்கெல்லாம் தமிழ்மொழி ஒரு மொழியே! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *