பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (42)

 

பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (41)

 

தமிழ் இலக்கணப்படி  ஓர் அரசன், ஒரு மன்னன் என்றுதான் எழுத வேண்டுமா?

-ஒரு தமிழாசிரியர்

பதில்:

உயிரெழுத்தில் துவங்கும் பெயருக்கு முன் வரும் எண்ணுப் பெயரடை நெடிலிலும், மெய்யெழுத்தில் துவங்கும் பெயருக்கு முன் வரும் எண்ணுப் பெயரடை குறிலிலும் இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரிந்தவரை எந்த மரபிலக்கணத்திலும் விதி இல்லை. பழைய இலக்கியத்தில் இந்த வேறுபாடு பெரும்பான்மை வழக்காக இருக்கலாம். அதே சமயம் மாறான வழக்கையும் பழைய இலக்கியத்தில் பார்க்கலாம்.

தமிழில் ஒரு  சொல்லில் ஒலிமாற்றம் ஏற்படும்போது ஓசையமைதிக்காக குறில்-நெடில் மாற்ற்ம் தோனறலாம். துகள் என்னும் சொல்லில் ககரம் கெடும்போது தூள் என்று முதல் உயிர் நெடிலாகும். பகல்-பால் (பிரிவு என்ற பொருளில்) முதலிய சொற்கள் இதற்கு வேறு சில எடுத்துக்காட்டுகள். வா-வரு, தேர்-தெரி என்பவை வேறுவகையான் எடுத்துக்காட்டுகள். ஓர்-ஒரு, ஈர்-இரு என்பவை இந்த வகையைச் சேர்ந்தவை. நெடிலுள்ள சொற்களின் இறுதியில் ஒரு உயிர் சேரும்போது நெடில் குறிலாகிறது. இரண்டு வடிவங்களிலும் உயிர்களின் மொத்த அளபு இரண்டு மாத்திரை. இது ஓசையமைதி. இதற்கும் இச்சொல்லை அடுத்து வரும் சொல்லுக்கும் தொடர்பு இல்லை. துகள்-தூள் போல், ஒரு-ஓர் ஒரு சொல்லின் இரு வடிவங்கள். அவ்வளவே.

இன்றைய தமிழ்  வழக்கில், எண்ணுப்பெயர்த் தொகையில்மட்டும் பெயர் உயிரில் துவங்கும்போது எண்ணுப் பெயர் நெடில் வடிவத்தில் இருப்பது பெருவழக்கு. ஓராயிரம், ஈராண்டு ஆகியவை சில எடுத்துக்காட்டுகள்.

ஓராயிரம் பேர் வந்திருப்பார்கள், ஒரு ஆயிரம் பேர் வந்திருப்பார்கள் என்னும் வாக்கியங்களில் ஒர், ஒரு என்ற சொற்களுக்குப் பொருள் வேறுபாடு உண்டு.

எண்ணுப் பெயருக்கு  மட்டுமன்றிப் பண்புப் பெயரடைகளுக்கும் இரு வடிவங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டு: பெருவழக்கு, பெரியப்பா பேராசிரியர். இந்தத் தொகைச்சொற்களில் ‘பெரும்’, ‘பெரி’, ‘பேர்’ ஆகிய்வை அடை.

இக்காலத் தமிழ்ப்  புலவர்கள் சிலர் நல்ல தமிழின்  இலக்கணம் என்று தாங்களே  கற்பித்துக்கொண்ட சில இலக்கணக் கொள்கைகளின் அடிப்படையில் புதிய இலக்கண விதிகள் கூறுகிறார்கள். ஒரு-ஓர் பயன்பாட்டு விதி இவற்றில் ஒன்று; பழைய இலக்கண நூல்களில் இல்லாத ஒன்று. இதில் ஆங்கிலத்தில் a, an பயன்பாட்டு விதியின் சாயலைக் காணலாம். இரு-ஈர் சொல் வடிவங்களுக்கு இரு மன்னர்கள், ஈர் அரசர்கள் என்னும் பயன்பாட்டை வலியுறுத்தி இந்த விதியை இவர்கள் சொல்லாதது இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது.
 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (42)

 1. உயிரெழுத்தில் (உயிர்மெய் எழுத்தில் உள்ள உயிர்) முடியும் எண்ணுப்பெயர்கள் அடையாக வரும் பொழுது அடுத்து வரும் பெயர்ச்சொல் உயிரெழுத்தில் தொடங்கினால், இரண்டு உயிர்கள் அடுத்தடுத்து வருவது இயல்பான ஒலிப்பிற்குத் தடையாகும். இதனாலேயே ஒரு + அரசன் என்பதை ஓர் + அரசன் என்று மாற்றிக்கொண்டால் ர்+அ = ர என இணைந்து ஓரரசன், ஒரு–> ஓர் + ஊர் = ஓரூர் என்று கூறுதல் இயல்பு. ஆங்கிலத்திலும் இதே காரணத்தால் தான் a cat ஆனால் an apple. அங்கே n என்னும் எழுத்தைப் பெய்து, அடுத்துவரும் உயிரெழுத்தோடு சேர்ந்தொலிக்க உதவுமாறு அமைத்துள்ளார்கள்.

  புணர்ச்சி விதிகளில் விட்டிசைத்தல் என்றும் ஒன்று உண்டு. அப்படி விட்டிசைக்கும் பொழுது இந்த விதி தேவை இல்லை, ஏனெனில் இடையே போதிய நேரம் உள்ளது. (இது வல்லினம் மிகும் இடங்களிலும் வரும் சூழல்). ஒரு ஆயிரம் பேர் வந்திருப்பார்கள் என்பதில் பொருள் மாறுபடுவது போலவே ஒரு என்பதற்கு அடுத்து வரும் கால இடைவெளியும் கூடுதல் (இது விட்டிசைத்தல்) என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

  //இதில் ஆங்கிலத்தில் a, an பயன்பாட்டு விதியின் சாயலைக் காணலாம். // என்னும் உங்கள் கூற்று பொருத்தமற்றது, உண்மையுமற்றது!!
  இரண்டு உயிரொலிகள் அடுத்தடுத்து வருகையில் பல மாற்றங்கள் பல மொழிகளில் நடக்கின்றன. ஒவ்வொருமொழியும் ஒவ்வொரு விதமாக அணுகுகின்றன. ஆங்கிலத்தில் ‘சாயல்’ தமிழில் இல்லை இங்கு!! அடிப்படைக் கொள்கை (ஈருயிர் அடுத்தடுத்து வருதலைத் தடுக்கும் முகமாக ஆக்கும் மாற்றங்கள்) ஒத்திருப்பதைக் குறிப்பிடலாம். தமிழின் சாயல் ஆங்கிலத்திலோ, ஆங்கிலத்தின் சாயல் தமிழிலோ இல்லை!

  அகம்-ஆம், துகள்-தூள், பகல்-பால், மகன் – மான், செகப்பு-சேப்பு போன்று நூற்றுக்கணக்கான சொற்கள் உண்டு, அங்கு நிகழும் நீட்டம் முற்றிலும் வேறானது. அது இரண்டு உயிரெழுத்துகள் அடுத்தடுத்து வருவதால் அன்று.

  நீங்கள் கூறும் வா-வரு, தேர்-தெரி என்பனவும், இந்த ஒரு-ஓர், இரு-ஈர் என்னும் எண்ணுப்பெயர் மாற்றங்கள் -அடுத்து வரும் சொல்லால், அதனோடு இயையும் தன்மைக்காக மாறுவனவும்- வேறுவேறானவை. (வா, தேர் என்பன ஏவல் வினை வடிவங்கள் அவற்றோடு ஏன் குறைவினை வடிவங்களைக் கூறுகின்றீர்கள்?!)

  //இரு-ஈர் சொல் வடிவங்களுக்கு இரு மன்னர்கள், ஈர் அரசர்கள் என்னும் பயன்பாட்டை வலியுறுத்தி இந்த விதியை இவர்கள் சொல்லாதது இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது. // என்னும் உங்கள் கருத்தில் வலு இல்லை
  என்பது என் கருத்து! ஈராண்டு, ஈராயிரம், ஈருயிர் என்று எத்தனையோ வடிவங்கள் உள்ளனவே. ஈரரசர் என்று கூறவதும் முறையே. ஓரரசன் என்று கூறுவதும் அரிதே. அதிகம் வழங்காததால் அது செல்லாதது என்பது போன்ற உங்கள் கூற்று ஏற்கத்தக்கதன்று!!

 2. பே.அண்ணாமலையின் விளக்கங்களுக்கு நன்றி.
  இந்த ஒரு-ஓர் வேண்டாத இலக்கண விதியைப்போல் , இன்னொரு `விதி` , அ, இ யை ர, ல முன் போடுவது. தற்காலத்தில் ர , ல சொற்களின் முதலில் வருவது சகஜமாகி விட்டது. ஆனால் இன்னும் சிலர் ரகர சொற்களின் முன் அ,இ போடுவதும், லகர சொற்களின் முன் இ போடுவதும் , வேண்டாததாகவும், archaic ஆகவும் உள்ளது. வழக்குதான் இலக்கணத்தை நிர்ணயிக்கின்றது என்றால், இதைப்போல் காலத்திற்க்கு ஒவ்வாத நியதிகளை தள்ளிவிடுவதுதான் நியாயமாக உள்ளது. பேராசிரியர் என்ன நினைக்கிறார்.
  விஜயராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *