வலி உமிழ்ந்த பூ!
தி. சுபாஷிணி
குளமாய்ப் பொங்குது
சந்தோஷம்!
உறவிற்குப பாலம்
பூத்ததும் ஈன்றதும்
ஆயாச உறக்கம் !
வெண்மை ஆடையில்
தூங்குது தூளியில்
பூவாய்!
சிணுங்கலும் சிரித்தலும்
கூடுதல் அழகு !
ஆடி ஆடி
அள்ளித் தூவுகிறது
அறை எங்கும் !
கிடத்திடில் சிணுங்கும்
எடுத்திடில் சிரிக்கும்
தூங்கும் எனில் தூங்காது
தூங்காது எனத் தூக்கிடில்
தூங்கி வழியும்
ஆவலாய்க் குடிக்கும்
அஞ்சே அஞ்சு நிமிஷம்தான்
அந்த மயக்கமும் மந்த ஹாசமும் !
திடிக்கிட்டு அழும் திடீரென்று !
விழித்து விளையாடும் !
அலைகழிக்கின்றான்
அனுதினமும்
அரும்பிய அழகன் துருவன் !
மெல்ல விழி திறப்பன்
புருவம் நெறிப்பன்
நிலைத்து நோக்குவன்
மெல்லிய இதழ்
சற்றே சரித்து சிரிப்பன்
மென்நீள் விரல்கள் மடக்கி
கைகள் தூக்கி
உடல் முறிப்பன்
அத்தனை வேலைகளையும்
தானே செய்ததது போல் !
அழுவன் எதிர்பாராத போது
கையில் தங்கான்
தூளியிலும் தரியான்
வயிற்று வலியோ எனக்
கலங்க அடிப்பன்
வானுறைத் தெய்வங்கள்
அத்தனையையும்
அழைக்கச் செய்வான்!
நொந்து நூலாகி
நொடிக்கும்போது
‘நானா’ எனச் சிரிப்பன்
நொடியில் மறக்கடிப்பன் !
அம்மாடி ! ஆத்தாடி! தாங்கலையே!
அத்தனையும் அனுபவம்!
அள்ளித்தரும் ஆனந்தம்!
காதொலி கேட்டு
கண்ணொளி நகர்த்த
கால்கள் உந்த
உடல் மேலெழும்ப
கொடி அசைய
அதனுடன் பேச
அதுவும் அரை நிமிடம்தான்
அப்புறம்
ஆயசந்தான்
உஷ்…….
அழகன் துருவன்
தூங்கத் தொடங்கி விட்டான்!
பூவாய்!
அந்த அற்புத அனுபவத்தை அருமையான வார்த்தைகளில் அழகாக வடித்திருக்கின்றீர். பாராட்டுக்கள்.
அந்தத் ‘தாய்’மொழி,
அனுபவ வாய்மொழி
அருமை…!
-செண்பக ஜெகதீசன்…
Anbum, Aravanaippum irukkum ullathin… Arumaiyana Anupava mozhikal!! Nandri