முகில் தினகரன்

‘ஏங்க…கொஞ்சம் இப்படி வர்றீங்களா?’ மூச்சு விடவே திணறியபடி மிகவும் மெல்லிய குரலில் கணவனை அழைத்தாள் வேதவல்லி.

‘என்னம்மா?…என்ன வேணும்?’ பரிவான விசாரிப்போடு தன் மனைவி படுத்திருக்கும் அந்த அறைக்குள் நுழைந்தார் ஜெயராம்.

‘குழந்தைக பட்டாசு கேக்குதுக…ஏதோ கொஞ்சமாவது வாங்கிக் குடுங்க..பாவம்’ சிரமப்பட்டுப் பேசினாள்.

‘என்ன வேதம்…நீயும் புரிஞ்சுக்காமப் பேசறே?…ஏதோ நீ சொன்னேன்னுதான் குழந்தைகளுக்குப் புதுத் துணியே வாங்கினேன்…உனக்கு இருதய ஆபரேஷன் பண்ணிட்டு வந்து ஒரு வாரம் கூட ஆகலை….உன்னைய இந்த நெலமைலே வெச்சுக்கிட்டு இந்த வருஷம் தீபாவளி கொண்டாடணுமா?…சொல்லும்மா…’

‘நம்ம கஷ்டம் நம்மளோட இருக்கட்டும்ங்க…அதுக பாவம் குழந்தைக அதுகளுக்கு இதெல்லாம் புரியவா போகுது? அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளெல்லாம் பட்டாசு வெடிக்கும் போது இதுக மட்டும் சும்மா பார்த்திட்டு இருக்கணுமா?..ஒரு அம்பதோ..நூறோ…செலவாகும் அவ்வளவுதானே?’

‘அய்யோ..நான் செலவுக்காக சொல்லலை வேதம்…..டாக்டர் என்ன சொல்லியிருக்காரு?..’உன்னோட இருதயம் இப்ப இருக்கற கன்டிஷன்ல அதிகப்படியான சத்தங்களைக் கேட்கக்கூடாது…அந்த அதிர்வு மோசமான பாதிப்புகளையும்..விளைவுகளையும் கொடுக்கும்’ன்னு சொன்னாரா இல்லையா?…அக்கம் பக்கத்துல வெடிக்கற சத்தத்துல இருந்து உன்னை எப்படிப் பாதுகாக்கறதுன்னு தெரியாம ஏற்கனவே நான் கவலைப்பட்டுக்கிட்டிருக்கேன்..நீ என்னடான்னா நம்ம பசங்களுக்கே வாங்கிக் குடுக்கச் சொல்றே…அய்யயோ…நான் மாட்டேன்’

‘பரவாயில்லை வாங்கிக் குடுங்க…நான் வேணா என்னோட அறைக் கதவு…ஜன்னல்களையெல்லாம் ‘கப்’புன்னு இறுகச் சாத்திக்கிட்டு உள்ளார படுத்துக்கறேன்…எந்த அதிர்வும் ஏற்படாது’

‘என்ன வேதம் சொன்னா கேட்க மாட்டேங்கறே…இவனுக எப்படியும் நம்ம காம்பௌண்டுக்குள்ளாரதான் வெடிப்பானுக..அப்படி வெடிச்சானுகன்னா…இந்த பில்டிங்கே அதிரும்…உன்னால தாங்க முடியாது…ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடுச்சுன்னா?…,’

‘அதெல்லாம் ஒண்ணும் ஆகாது நீங்க வாங்கிக குடுங்க..’ கண்டிப்புடன் சொன்ன வேதம் தன் படுக்கையருகே மிரண்டு போன குட்டி ஆடுகளாய் நின்று கொண்டிருந்த பத்து வயது ஸ்ரீதரையும், எட்டு வயது ஹரியையும் கை நீட்டி அருகில் அழைத்து ‘கவலைப்படாதீங்க கண்ணுகளா…அப்பாகிட்ட சொல்லிட்டேன்…இன்னிக்கு சாய்ந்திரமே வாங்கிட்டு வந்திடுவார்…போங்க போயி வெளையாடுங்க’

குழந்தைகளிரண்டும் சந்தோஷமாய்க் குதித்துக் கொண்டு ஓட ‘ஹூம்’ என்று அதுகளைப் பார்த்து பெருமூச்சு விட்டபடியே நகர்ந்தார் ஜெயராம்.

 

தீபாவளி.

‘அம்மா…அம்மா…கதவைத் திறம்மா….என்னோட புது டிரஸ் எப்படி இருக்குன்னு பாத்துச் சொல்லும்மா…’ குட்டிப் பையன் ஹரி நிலைமை தெரியாமல் கதவைத் தட்ட,

பாய்ந்து வந்து தடுத்தார் ஜெயராம் ‘டேய்…டேய்…விடுடா…அம்மா தூங்கறாங்க’

‘தீவாளியன்னைக்கு காலைல நேரத்துல எந்திரிச்சுக் குளிக்கணும்ன்னு அம்மாதான் சொன்னாங்க…அப்புறம் ஏன் அவங்களே இன்னும் தூங்கறாங்க?’

பதில் சொல்ல முடியாமல் ஜெயராம் திணறி நிற்க, கதவு திறந்தது.

உள்ளிருந்தவாறே மகனை கை நீட்டி அழைத்தாள் வேதவல்லி.

ஹரி ஓடிப் போய் தன் புது டிரஸ்ஸை திருப்பித் திருப்பிக் காண்பித்தான். வேதவல்லியின் முகத்தில் சோகமான சந்தோஷம்.

‘அடடே…ராஜாவாட்டம் இருக்குதே என் தங்கம்.’ அவனை அருகே அழைத்து நெற்றியில் முத்தமிட்டாள் ‘அது செரி…அவன் எங்கடா?’ அவள் கேட்டு முடிக்கும் முன் எங்கிருந்தோ பறந்து வந்தான் மூத்தவன் ஸ்ரீதர். அவனுக்கும் ஒரு முத்தத்தை தீபாவளிப் பரிசாய் அவள் வழங்கிய போது….

‘பட்…படார்…படார்..’ பக்கத்தில் யாரோ வைத்த சரடிவெடியொன்று அதிர்வை உண்டாக்க கண்களை இறுக மூடி…உதட்டைக் கடித்து அந்த அதிர்வைத் தாங்க முயன்றாள் வேதவல்லி.

ஜெயராம் ஓடிச் சென்று கதவுகளைச் சாத்தினார்.

‘ம்மா…ம்மா…நான் ஒரு செங்கோட்டை வெடி வைக்கறேன்னா அப்பா விட மாட்டேங்குதும்மா..’ தந்தையைக் குறுகுறுவென்று பார்த்தபடியே மூத்தவன் ஸ்ரீதர் சொல்ல வேதவல்லி கணவனிடம் பார்வையால் கெஞ்சினாள். ஜெயராம் தர்ம சங்கடமாய் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்.

‘போப்பா…நீ போய் உன் ஆசைப்படியே செங்கோட்டை வெடி வை…நான் இங்கிருந்தே கேக்கறேன்….’ வேதவல்லி சொல்ல மகிழ்ச்சியுடன் ஓடினான் மூத்தவன்.

‘டேய்..டேய்..இருடா நானும் வரேன்’ சின்னவனும் அவன் பின்னாலேயே ஓடினான்.

நெஞசைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்து படுத்த வேதவல்லி ‘போய்ப் பசங்களைப் பாத்துக்கங்க…கைல கால்ல வெடிச்சுக்கப் போறானுக’ என்றாள். உள் வலியின் தாக்கம் அவள் வார்த்தைகளில் நடுக்கமாய்த் தெரிந்தது.

ஜெயராம்;; அறைக் கதவை இறுகச் சாத்தி விட்டு குழந்தைகளிடம் வந்தார்.

படுத்திருந்த வேதவல்லி தன் மகன் வைக்கப் போகும் செங்கோட்டை வெடியின் சத்தத்தை ரசிக்க தன்னைத் திடப் படுத்திக் கொண்டு காத்திருந்தாள்.

‘பட்…படார்…டமார்…டுமீர்..படார்’

வெடிச் சத்தத்தில் பில்டிங்கே அதிர்ந்தது.

வேதவல்லியின் இருதயம் அந்தச் சத்தத்தில் ஏகமாய் அதிர, அவள் உடல் படபடக்கத் துவங்கியது. அந்த நிலையிலும் அது தன் குழந்தைகள் வைத்த வெடிச் சத்தம் என்கிற மகிழ்ச்சி உதட்டில் பெருமிதப் புன்னகையாய் தோன்றியது.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஜெயராம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர கூடவே ஓடி வந்த ஸ்ரீதர் ‘அம்மா…இப்ப வெடிச்சுதே அது நான் வெச்ச செங்கோட்டை வெடியாக்கும்…..எப்படியிருந்தது?’ தாயின் தாடையைப் பிடித்துக் கேட்டான்.

பதிலில்லை.

‘சொல்லும்மா…’

முகத்தில் உறைந்த பெருமிதப் புன்னகையை மகனுக்கு பதிலாய் வைத்து விட்டு வேதவல்லியின் உயிர்ப்பறவை எப்போதோ பறந்து விட்டிருந்தது.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *