திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்.. !

1

பவள சங்கரி

தலையங்கம்

நம் நாடு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்தே நாட்டு மக்களின் நலன் கருதி எத்தனையோ நல்மனம் கொண்ட தலைவர்கள் பலப்பல நல்ல சட்டங்களை இயற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையனைத்தும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. குழந்தைத் தொழிலை ஒழித்து, அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக்கல்வி என்று சட்டம் கொண்டுவந்தால் சமுதாயத்தில் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு இருக்கிறதா….? சிறுவர்களுக்கு பேண்ட் சட்டையும், சிறுமிகளுக்கு சுடிதார் துப்பட்டாவும் கொடுத்து பணியமர்த்துகிறார்கள். இதற்கு வறுமைச் சூழலைக் காரணம் காட்டும் பெற்றோரும் உடந்தையாக இருக்கிறார்கள். கொத்தடிமைச் சட்டத்திற்கும் இதே நிலைதான். அரசாங்க விடுமுறை பெறும் தொழிலாளர்களுக்கும். அரசு விடுமுறை அறிவித்த போதும் பணியிடங்களில் கதவை மூடிவிட்டு, பணியாட்களுக்கு அன்று அதிக ஊதியம் கொடுத்து வேலை வாங்குவதும், பணத்திற்காக பணியாட்களும் அதற்கு உடந்தையாக இருப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மலைவாழ் மக்களுக்கும், மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு அவசியம் என்று சட்டம் கொண்டுவந்தால் அதற்கும் பாராளுமன்றத்தில் ஏகப்பட்ட கூச்சல் குழப்பம். இப்படி எந்த நல்ல சட்டம் இயற்றினாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் ஏகப்பட்ட குளறுபடிகளும், தடைகளும் பல முனைகளிலிருந்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் நம் நாட்டில் 2010ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டச் சட்டம்தான் , “பணி இடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2010”. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்து வெகு சமீபத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டம் எந்த அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்போகிறது, சமுதாயத்தின் பங்கு இதில் என்னவாக இருக்கப்போகிறது என்பதுதான் இப்போதைய ஐயம்.

பணி இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித்தருவதே இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாக இருப்பினும், இதனால் நாட்டின் வளமும் பல்கிப் பெருகும் வாய்ப்பும் அதிகரிக்கும் என்பதும் உறுதியென்றாலும், இதனை நடைமுறைப்படுத்துவதில் எவ்வளவு சிக்கல் வரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதாவது அரசுத் துறையோ அன்றி தனியார் மற்றும் வேறு எந்த நிறுவனங்களோ எதுவாக இருந்தாலும், பெண்கள் பாலியல் தொடர்பான வன்முறைக்கு உட்படுத்தப்பட்டால் , பாதிக்கப்பட்டப் பெண்களின் புகாரின் பேரில் 90 நாட்களுக்குள் விசாரணையை முடித்து உடனே நடவடிக்கை எடுக்கவும் இச்சட்டம் வலியுறுத்துகிறது. மிகவும் வரவேற்பிற்குரிய இச்சட்டத்தினை நடைமுறைக்குக் கொண்டு வருவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கியப் பொறுப்பு. அப்போதுதான் பல ஆண்டுகளாக இதற்காக போராடிக் கொண்டிருக்கும் பலப்பல பெண்கள் அமைப்புகளின் முயற்சிகள் பலனளிக்கக் கூடியதாக அமையும்.

பணியிடங்களில், பெண்கள் பலவிதமான வன்முறைகளுக்கு ஆளாவதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அதனைத்தட்டிக் கேட்கவோ, அது குறித்து புகார் செய்யவோ பெருந்தயக்கம் காட்டி வந்த நிலையில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாதிக்கப்படும் பெண்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்பதில் ஐயமில்லை. 14 வயது முதலே மூன்றில் ஒரு பங்கு பெண்கள் ஏதேனும் ஒரு முறையில் வன்முறைக்கு ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆண்டிற்கு கிட்டத்தட்ட 50000 குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.  இதில் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்படுவது இரண்டும் அடங்கும். சமுதாயத்தில் சரி பாதியாக இருக்கும் பெண்களுக்கு இதுபோன்று கட்டாயச் சட்டம் மூலமாக பாதுகாப்பு அளிக்க வேண்டிய நிலை ஏற்படுவதே வேதனையான விசயம். இதனை நல்ல முறையில் நடைமுறைப்படுத்தும் திட்டமாவது ஒழுங்காக நிறைவேற வேண்டும்.  விவாசாயப் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு இச்சட்டம் பொருந்தாது என்பதும் வருத்தத்திற்குரிய விசயம். அதையும் அரசு கவனத்தில் கொண்டு விவசாயப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலான பெண்களுக்கும் இச்சட்டம் பொருந்த ஆவண செய்ய வேண்டியதும் அவசியம். பத்தோடு ஒன்று பதினொன்றாக இச்சட்டமும் அமிழ்ந்து விடாமல் சரியான முறையில்  நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் அதே சமயத்தில் வரதட்சணை கொடுமைச் சட்டம் பல இடங்களில் தவறாக பயன்படுத்தப்படுவது போன்ற நிலை இச்சட்டத்திற்கும் வந்துவிடக்கூடாது, என்பதும் சமூக ஆர்வலர்களின் விருப்பம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்.. !

  1. நல்ல கட்டுரை! பாராட்டுகள்!
    ஏன்
    //விவாசாயப் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.// என்று கூற வேண்டியிருந்ததாம்??!!
    மிகவும் வியப்பாக இருக்கின்றதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *