இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …………………. (22)
அன்பினியவர்களே!
வாரமொன்று ஓடியதோ? வியப்பிலெனை ஆழ்த்தியதோ? விந்தையினைப் புகுத்தியதோ? வித்தியாசங்களை விதைத்ததுவோ? என ஒரு வாரத்தைக் காலமெனும் காலன் விழுங்கி விட்டான். ஆனால் மனித வாழ்க்கையில் இந்த ஒருவாரம் நிகழ்த்தும் விந்தைகள் தான் பல. பல பிறப்புகள், பல இறப்புகள், பல சிறப்புகள், பல இழுக்குகள் என பலவிதமான வாழ்க்கை வர்ணங்களை இயற்கை தீட்டிவிட்டு விடுகின்றது.
ஆனால் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் நம்பிக்கை எனும் அத்திவாரத்திலே தான் கட்டப்படுகிறது. இந்நம்பிக்கை இல்லையானால் வாழ்க்கையே இல்லை. அதன்பின்பு வாழ்வில் நடப்பவை எல்லாமே வெற்று வேட்டுகள் போல பலனற்றுப் போய்விடுகின்றன.
இந்நம்பிக்கையின் அதியுச்ச கட்டத்தின் கண்காட்சி இவ்வாரம் லன்டனிலே ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ! அட அப்படி என்னதான் விசேடத்தைக் கண்டுவிட்டீர் ஜயா? உங்கள் கேள்வியும் நியாயமானதுதான். விடைக்கு வருகிறேன் ……
ஒலிம்பிக் போட்டிகளின் பின்னே அதனோடு ஒட்டிக் கொண்டு வரும் மற்றொரு நிகழ்வைத்தான் கூறுகிறேன். ஆம் பராஒலிம்பிக்ஸ் (Paraolympics) எனும் உடல்வளம் குறைந்தவர்கள் பங்கு பற்றும் போட்டிகள் கடந்த வியாழன் 30.08.2012 அன்று அதிகாரபூர்வமாக லண்டனில் ஆரம்பித்தது.
வெறும் தலையிடி, காய்ச்சல் என்றாலே சுருண்டு படுத்து விடும் பழக்கமுடைய எம்மில் பலர் (அத்தகைய பழக்கமில்லாதவர்கள் என்மீது கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்பது என் நம்பிக்கை). அவர்கள் மத்தியில், தமது அங்கத்தில் சிறிது குறையிருந்தும், அதனைச் சமாளித்து ஒலிம்பிக் போன்ற பந்தயத்தில் ஈடுபட்டு வெற்றியீட்டுவதற்கு எத்தகைய நம்பிக்கையை மனதில் வளர்த்திருக்க வேண்டும் ?

சரி. இவ்வகையில் வாழ்வையிழந்தோம் எனும் நிலையில் இருந்தோரையெல்லாம் தட்டியெழுப்பி நம்பிக்கையை விதைக்கும் இந்தப் போட்டியின் ஆரம்பத்தை சிறிது பார்ப்போமே !
யூதரான டாக்டர் லட்விக் கட்மன் (Dr.Ludwig Guttman) ஜெர்மனியில் முதுகெலும்பு நிபுணராக பணிபுரிந்து வந்த நேரத்தில், அப்போதைய ஹிட்லரின் நாஸி வெறித்தனத்திற்கு அஞ்சி 1939ம் ஆண்டு குடும்பத்துடன் இங்கிலாந்திற்கு அகதியாகக் குடிபெயர்ந்தார்.
1943ம் ஆம்டு இங்கிலாந்து அரசாங்கம் இவரை ஸ்டோக் மண்டவில் எனும் ஆஸ்பத்திரியில் இங்கிலாந்து முதுகெலும்பு சிறப்புப் பிரிவொன்றை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொண்டது. அதன்படி இவர் அந்த ஆஸ்பத்திரியில் சிறப்பு முதுகெலும்புச் சிகிச்சைப் பிரிவை ஆரம்பித்தார்.
1948ம் ஆண்டு இரண்டாவது உலகமகாயுத்தத்தின் முடிவுக்குப் பின்னால் நடந்த முதலாவது ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடைபெற்றது. அப்போது இப்போட்டிகள் ஆரம்பித்த தினத்தில் டாக்டர் லுட்விக், தனது பிரிவில் சிகிச்சை பெற்று வந்த, இரண்டாவது உலகமகாயுத்தத்தில் அங்கஹீனமடைந்த இராணுவ வீரர்களின் மனதில் தைரியத்தையும், வாழ்வில் ஒரு பிடிப்பையும் ஏற்படுத்துவதற்காக “சக்கரநாற்காலி விளையாட்டு போட்டிகள்” எனும் போட்டி ஒன்றை சக்கர நாற்காலிகளில் நடமாடுபவர்கள் மத்தியில் ஆரம்பித்தார்.
இதே போட்டிகள் மீண்டும் அடுத்த நான்கு வருடங்களின் பின்னால் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போதும் நடைபெற்றது. 1952ம் ஆண்டு நடைபெற்ற இப்போட்டியில் இங்கிலாந்து சக்கர நற்காலி இரானுவ வீரர்களுடன், டச்சு (Dutch) நாட்டைச் சேர்ந்த சக்கரநாற்காலி இராணுவ வீரர்களும் பங்குபெற்றார்கள். சர்வதேச ரீதியிலான பல்வகைப் போட்டியின் ஆரம்பம் இதுதான்.
1960 ஆண்டு நடைப்பெற்ற போட்டியில் 23 நாடுகளைச் சேர்ந்த 400 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். அதுவரை சக்கர நாற்காலிகளில் அமர்ந்த, ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மட்டுமே பங்கு கொண்டு வந்த இப்போட்டிகள் ஏனையோரும் பங்குபெறறக்கூடியதாக விஸ்தரிக்கப்பட்டது ரோம் நகரில் நடைபெற்ற இப்போட்டிகளின் போதுதான்.
சக்கரநாற்காலிகளில் அமர்ந்தவர்கள் மட்டுமே பங்குகொள்ளக்கூடியதான இப்போட்டிகள் அனைத்து விதமான அங்கஹீனமானவர்களும் பங்கு கொள்ளக்கூடிய வகையில் அமைந்தது 1976ம் ஆண்டு கோடைகாலப்பகுதியில் நடைபெற்ற போட்டிகளின் போது என்பது குறிப்பிடத்தக்கது.
1988ம் ஆண்டு தென்கொரிய நாட்டில் நடைபெற்ற போட்டிகளின் போதுதான் முதன்முறையாக இப்போட்டிகள் ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து நடை பெறத் தொடங்கியது. அத்துடன் இப்போட்டிகளின் போதே இத்தகைய பராஒலிம்பிக்ஸ் எனும் போட்டிகளும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் அதே நாட்டில், அதே நகரில் நடைபெற ஆரம்பித்தது.
2001ம் ஆண்டு உலக ஒலிம்பிக் நிர்வாகத்தினருக்கும், சர்வதேச பாராஒலிம்பிக் நிர்வாகத்தினருக்குமிடையில் ஏற்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இப்போட்டிகளும் ஒலிம்பிக் போட்டிகளுடன் இணைக்கப்பட்டது.
இந்த விசித்திரமானது, இன்று இருப்போர் நாளை இல்லை எனும் விதியைக் கொண்டது. காலம் செய்யும் கோலத்தின் நிமித்தம் பலர் பலவிதமான வழிகளிலே தமது உடலுறுப்புகள் சிலவற்றை இழக்க நேரிடுகிறது, அன்றி அவற்றின் செயலாக்கத்தை இழக்க வேண்டி நேரிடுகிறது.
அதற்காக அவர்கள் மற்றையோரை விட ஏதாவது வகையில் குறைந்தவர்களா? அவர்களின் உணர்வுகள் எவ்வகையில் மற்றவர்களின் உணர்வுகளை விடக் குறைந்து விடும்? மனத்தாழ்வின் அகழியில் சிக்கி அல்லாடும் அவர்கள் வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்து விட்டால் வாழ்வே அவர்களுக்குக் கசந்து விடாதா?
மனதில் நம்பிக்கை இருந்தால் எதனையும் சாதித்து விடலாம் என்பதற்கு இப்போட்டிகளில் ஈடுபடுவோர்களே நல்ல உதாரணமாகின்றார்கள். காலம் தமக்கு கொடுத்த துரதிர்ஷ்டங்களைச் சவால்களாக ஏற்றுக் கொண்டு வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடும் இவர்களே மற்றையோருக்கு தன்னம்பிக்கையின் அடித்தளமாகிறார்கள்.
வாழ்வின் அனைத்து வசதிகள் இருந்தும் சோம்பேறித்தனத்தால் முன்னேற்றப் பாதையில் ஒரு அங்குலம் கூட நகராமல் இருந்து கொண்டு, சுற்றுப்புறக் காரணிகளை குறை கூறிக் கொண்டு வாழ்வோர் அனைவருக்கும் இவர்கள் வழிகாட்டிகளாகிறார்கள்.
இவர்களுக்கான வசதிகளும், வாய்ப்புகளும் மேலைநாடுகளைப் போல நமது பின்புல நாடுகளிலும் வளர வேண்டியது அவசியம்.
இருவாரங்களுக்கு முன்னால் தொலைக்காட்சிகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளையும் பார்த்தேன். இப்போது நடைபெறும் இந்த பாரா ஒலிம்ப்பிக் போட்டிகளையும் பார்க்கிறேன்.
என் இதயத்தில் இந்நிகழ்வுகள் மனிதத்துவத்தின் நெகிழ்வை பிரதிபலிக்கின்றன.
இதை அறிந்துதானோ என்னவோ என் மானசீகக்குரு கவியரசர் “தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ ? உங்கள் அங்கத்திலே ஒரு குறைவிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ?” என்று சொன்னாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அடுத்த மடலில் மீண்டும் சந்திக்கும் வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்
(படங்களுக்கு நன்றி – பி.பி.ஸி இணையத்தளம் மற்றும் விக்கிபீடியா இணையத்தளம்)