நூல் அறிமுகம்- நினைவோடை-சுந்தர ராமசாமி

2

 

தி.ந.இளங்கோவன்

 

சுந்தர ராமசாமி-நினைவோடை- சி.சு.செல்லப்பா

காலச்சுவடு பதிப்பகம்

திருத்திய மறு பதிப்பு – 2005

தொகுப்பு: அரவிந்தன்.

விலை: ரூ 40

 

ஒரு 60 வருடத்துக்கு முன்பு தொடங்கி, இந்த நூற்றாண்டு வரை தனக்கும், சி.சு.செல்லப்பாவுக்கும் இடையில் இருந்த நட்பு பற்றியும், செல்லப்பா என்ற படைப்பாளியைப் பற்றிய, செல்லப்பா என்ற தனி மனிதனைப் பற்றிய தன்னுடைய கண்ணோட்டங்களையும் சொல்ல முற்பட்டிருக்கிறார் சுந்தர ராமசாமி.

எழுத்தாளர்களின் படைப்புகளில் வரும் பாத்திரங்களின் தன்மைகளையும், உணர்வுகளையும் அறிந்த அளவு, நாம் எழுத்தாளர்களின் உணர்வுகளை அறிவதில்லை. அதற்கு பொதுவாக வாய்ப்புகளும் இல்லை. இது போன்ற புத்தகங்கள் அந்தக் குறையைத் தீர்க்கின்றன. நாம் மிகவும் போற்றும் எழுத்தாளர்களின் மனவோட்டங்கள், சக எழுத்தாளர்களுடன் அவர்கள் கொண்டிருந்த நட்பு, கருத்து வேறுபாடுகள், சாதாரண மனிதர்கள் போன்றே அவர்களுக்குள்ளும் இருந்த நிறைவேறா ஆசைகள் போன்றவை இந்த நூலில் பகிரப் பட்டிருக்கிறது.

செல்லப்பா பற்றிய நினைவோடை என்றாலும் கூட, தேவையான அளவு க.நா.சு, பிரமீள், அழகிரிசாமி, வெசா, மௌனி, பி.எஃஸ்.ராமையா ஆகியோரைப் பற்றியும், இவர்களில் ஒரு சிலருக்கும் செல்லப்பாவுக்கும் இடையேயான நெருக்கம், இடைவெளி, பார்வைக் கோண மாறுபாடுகள் இவைகளைப் பற்றியும் மிக நுண்ணியமாகப் பதிவு செய்திருக்கிறார் சு.ரா.

செல்லப்பா என்ற தனி மனிதர், க.நா.சு வுடன் ஒரு வகை போட்டி மனப்பான்மையோடு இருந்தார் என்ற கருத்து ஏற்படும் வகையில் நிறைய அனுபவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. கடைசி வரையில் செல்லப்பாவுக்கு, சு.ரா தன்னிடம், க.நா.சு விடம் இருந்த அளவு விசுவாசமாக இல்லை என்ற எண்ணம் மேலோங்கித்தான் இருந்திருக்கிறது. ஒரு வகையில் செல்லப்பாவின் கணிப்பு உண்மைதான் என்றும் தோன்றுகிறது. நூலாசிரியர், செல்லப்பா என்ற தனி மனிதனை விட க.நா.சு என்ற தனி மனிதனை மிகவும் ஆகர்ஷித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

“புளியமரத்தின் கதை” க்கான செல்லப்பாவின் மனந்திறந்த பாராட்டோ, விமர்சனமோ கிட்டாதது குறித்து சு.ரா மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார். அந்த படைப்பு எவ்வளவு வரவேற்பைப் பெற்றதென்பதை நாமெல்லாம் அறிந்திருப்பினும், செல்லப்பாவின் கருத்து கிட்டாமை என்பது சு.ரா வை நிறைய பாதித்திருக்கிறது.

எழுத்து பத்திரிக்கைக்கு வாரிசு பற்றிய சர்ச்சைகளும், விவாதங்களும் எவ்வளவு அர்த்தமற்றதாகிப் போய் விட்டன. “காலத்தின் தீர்ப்புதனை யாரறிவாரோ” என்ற திரைப்படப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

செல்லப்பாவின் உழைப்பைப் பற்றி சொல்லும்போது, படிக்கும் நமக்கு கண்ணில் நீர் வருகிறது. எழுத்துப் பிழைக்காக, ஒரு பக்கத்தை திரும்ப அச்சடிக்க சொன்னதில் இருந்த உறுதியும், sincerity of purpose ம், இன்று வெளி வரும் இணைய இதழ்களில் கூட இல்லாதது மிக்க வருத்தத்தை தரக் கூடிய ஒன்று.

எப்படி செலவைக் குறைக்கலாம் என்று அவர் திட்டமிட்ட விதம், ப்ரௌன் பேப்பரை எப்படி வெட்டி உபயோகப் படுத்த வேண்டும் என்று திட்டமிட்டது போன்றவை எல்லாம் செல்லப்பாவின் உழைப்புக்கு ஒரு எடுத்துக் காட்டாகவும், ஏழ்மை ஒரு படைப்பாளியை எப்படியெல்லாம் படுத்தலாம், அதை அவரை போன்ற மனிதர்கள்  எங்ஙனம் எதிர் கொண்டார்கள், போராடினார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

ஒன்றுக்குள் ஒன்றாய் இருந்தவர்கள் விலகியதும், விரோத மனப்பான்மை கொண்டு, விமர்சிப்பது என்பது எழுத்தாளர்களுக்குள்ளும் இருந்திருக்கிறது என்பதை சிவராமுவின் செல்லப்பாவைப் பற்றிய பின்னாளைய விமர்சனம் உறுதி செய்கிறது. சிவராமு- செல்லப்பாவின் இறுதி சந்திப்பில் என்ன பேசியிருப்பார்கள்? விடை தெரியாக் கேள்வி..

ஒரு மனிதரைப் பற்றி ஒரு தளத்தில் நாம் கொண்டுள்ள கருத்து, அதே மனிதரைப் பற்றிய இன்னொரு தளத்தைக் குறித்த நமது நோக்கில் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது நடைமுறை வாழ்க்கையில் நாம் கண்ட உண்மையாயினும், சு.ரா, அவ்வாறு நிகழாவண்ணம் செல்லப்பாவை வெவ்வேறு தளங்களில் தனித்ததொரு நோக்கில் கண்டு மிக நேர்மையாக அலசியிருக்கிறார் என உணர முடிகிறது.

மொழிபெயர்ப்பைப் பற்றிய செல்லப்பாவின் கண்ணோட்டம், க.நா.சுவின் கண்ணோட்டம், அவர்களின் மொழி பெயர்ப்பு முயற்சிகள் குறித்த தகவல்கள் மிக முக்கியமானவை, இன்றைய, எதிர்கால மொழிபெயர்ப்பாளர்களுக்கு. இணையத்தில் மொழி பெயர்ப்பு முயற்சிகள் நிறைய நிகழும் இன்றைய காலகட்டத்தில், இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை இந்நூல் ஏற்படுத்தக் கூடும்.

படைப்பாளிகளுக்கிடையே அந்த காலங்களில் இருந்த தொடர்பை,  நெருக்கத்தை, போட்டியை, கொள்கை வேறுபாடுகளை சுவாரசியம் குன்றாமல் சொல்லியிருக்கிறார் சு.ரா.

செல்லப்பா என்ற படைப்பாளியைப் பற்றி, தமிழிலக்கியத்தில் மாற்றம் கொணர முயன்ற, கொணர்ந்த ஒரு சாதனையாளனைப் பற்றி, தன்னுடைய நினைவுகளின் உதவியோடு பதிவு செய்திருக்கிறார் சு.ரா.

20ம் நூற்றாண்டில் இலக்கிய வளர்ச்சிக்கான முயற்சிகளைப் பற்றியும், அதற்கு முயன்ற எழுத்தாளர்களைப் பற்றியும், இந்த கால கட்டத்தில் வாழ்ந்த எழுத்தாளர்களிடையே இருந்த பிணைப்புகளைப் பற்றியும் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று.

பி.கு: சு.ராவின் இதே நினைவோடை வரிசையில் க.நா.சு, ஜீவா, கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, பிரமீள் மற்றும் தி.ஜா ஆகியோரைக் குறித்த பதிவுகளும் வெளி வந்துள்ளன. 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நூல் அறிமுகம்- நினைவோடை-சுந்தர ராமசாமி

  1. ‘வல்லமை’யின் வலிமை கூடுவது கண்டு மகிழ்வு. ‘எழுத்தாளர்களின் படைப்புகளில் வரும் பாத்திரங்களின் தன்மைகளையும், உணர்வுகளையும் அறிந்த அளவு, நாம் எழுத்தாளர்களின் உணர்வுகளை அறிவதில்லை.’ என்பது நிதர்சனம். அதற்கான வாய்ப்பை வாசகர்கள் கொடுப்பதில்லை என்று தான் தோன்றுகிறது. ஆங்கில இலக்கியத்தின் வளர்ச்சிக்கு, அந்த வாய்ப்பு தான் காரணம். தமிழில் விமர்சனத்துக்கு இடம் குறைவு. சி.சு.செ. அவர்களும், க.நா.சு. அவர்களும் தான் அதற்கு வித்திட்டனர். கையை சுட்டுக்கொண்டனர், நிதி இழந்து, நட்பு குலைந்து. சு.ரா. அவர்களே மதிப்புக்குரிய படைப்பாளர். சி.சு.செ. vs க.நா.சு. அந்தக்காலத்தில் கொடிகட்டி பறந்த இலக்கிய வரவுகள்/இழப்புக்கள். Sir Joseph Addison & Sir Richard Steele இருவரும் முற்றிலும் வித்தியாசமான மனிதர்கள். அவர்கள் இணைந்து பணியாற்றிய இலக்கிய வரவுகள் பிரமாதம். நமக்கு அத்தகைய வரவு, இவர்கள் இருவரிடமிருந்தும் வந்திருக்கலாம். இல்லை. நினைவோடைகள் இலக்கியத்துக்கு அணி சேர்ப்பவை.
    சி.சு.செ. அவர்களின் இல்லறம் பற்றியும், மாமியின் நற்குணங்களை பற்றியும், பென்னேஸ்வரன் சொல்லி கேட்கவேண்டும். கண்ணீர் பொங்கி வழியும்.

  2. /*சி.சு.செ. அவர்களின் இல்லறம் பற்றியும், மாமியின் நற்குணங்களை பற்றியும், பென்னேஸ்வரன் சொல்லி கேட்கவேண்டும். கண்ணீர் பொங்கி வழியும்.*/

    உண்மைதான் ஐயா. பென்னேஸ்வரனின் “சனி மூலை” யில்  நிறைய இவை குறித்த தகவல்களை பதிவு செய்திருக்கிறார். படிக்கும்போதே மனம் கனத்துப் போகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *