சக்தி சக்திதாசன்

 பலனை எதிர்பார்க்காதே

கடமையைச் செய்து விடு
பகவான் போதித்த கீதையதை
கடைப்பிடிப்போர் ஆசிரியரே

பேதம் பார்க்காது, நதிமூலம் தேடாது
பாடம் அனைத்தையும் போதித்து
நானிலம் தன்னில் நம்மையெல்லாம்
நல்மனிதாராக்கிடும் குருவே தெய்வம்

எண்ணிப்பார்க்கிறேன் எந்த ஆசிரியரை
எத்தனை அன்பாய் எத்துணை அறிவை
எப்படியெல்லாம் எனக்குப் புகட்டிட‌
எத்தனித்தனர் இத்தரை மீதினில்

போதித்த ஆசிரியரில் இன்று உலகில்
பாதிப்பேர் மறைந்தே போயினர் அன்றோ
ஆயினும் அவர்கள் உரைத்த அறிவுரை
அடிமனதினில் பதிந்தே இருக்குது

கடுஞ்சொற்கள் சொன்னாலும் அவர்கள்
பிரம்படி மூலம் தண்டித்தாலும்
கருணை அதனுள் ஒளிந்தே இருக்கும்
காலம் கடந்துதான் உணர்ந்தேன் நானும்

அத்திவாரமின்றி அழகிய கட்டிடம் ஏது ?
ஆசிரியரின்றி அடியேன் அறிந்தது ஏது ?
அவர்தம் பெருமைகளை நினைந்து
அடைகின்றேன் பெருமிதம் நானின்று

கைகளில் வழிந்தோடும் தமிழ் வரிகள்
நெஞ்சினில் அலையாடும் தமிழின்பம்
அனைத்தையும் தந்தவர் ஆசிரியரன்றோ
அவர்தம் பாதங்களில் பணிந்திடுவோம்

எல்லாமும் எனக்கு இன்று இருந்தாலும்
எழுத்தறிவித்த தெய்வங்களாம் ஆசிரியர்கள்
இன்றவர் புனித தினத்தில் நானும் புண்ணிய‌
மலர்கள் தூவி வணங்குகிறேன்

படத்துக்கு நன்றி

http://m.krithikasartgallery.com/#!mainPage

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *