பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (45)

10

 

தமிழில் பேசும்பொழுது ஆங்கில ஒலிப்பு வேண்டும் என்பது இல்லை. தமிழ் முறைக்கு முரண் எனில் கூடாது. அதுவும் நம் மொழியை, மொழி மரபுகளைக் கெடுத்துக்கொண்டு வேற்று மொழி ஒலிப்புகளைத் தமிழில் காட்டத் தேவை இல்லை. நெகிழ்ச்சி எனில் ஏன் இந்த நெகிழ்ச்சியை filosofi என்று எழுதுவதில் காட்டக் கூடாது? தமிழில் எழுதும்பொழுது மட்டும் ஏன் அத்தனை விதிமீறல்?

— செ. இரா. செல்வக்குமார்

பதில்

தமிழில் பேசும்போதோ எழுதும்போதோ  ஆங்கில ஒலிகளை அப்படியே கொண்டுவர வேண்டிய அவசியம் நிச்சயம் இல்லை. நான் முந்திய பதில்  ஒன்றில் கூறியது போல, ஒரு சொல்லைப் பேசுவதைப் போலவே  எழுதுவதும், அதன் மூல மொழியின் உச்சரிப்பைப் போலவே எழுதுவதும் எந்த மொழியிலும் இல்லை. தேவையும் இல்லை.

ஒரு மொழியின் மரபு அதை இறுகப் பிடித்துவைத்திருக்கும் சட்டகம்  அல்ல; காலப்போக்கில் மாறாத ஒன்றும் அல்ல. கலப்புத் திருமணம் இன்று மரபிலிருந்து மாறிவரும் ஒரு வழக்கு, அதைக் கடுமையாக எதிர்ப்பவர்கள் இருந்தாலும். இதைப் போன்றுதான் தமிழ் மொழியின் மரபும் மாறிவருகிறது. மரபு மாற்றம் எல்லா மொழியிலும் நிகழும் ஒன்று. ஆங்கிலம் ஏற்றுக்கொண்ட அதன் மொழி மரபு மாற்றங்களைப் பற்றித் தனிக் கட்டுரையே எழுதலாம்.

ஒரு மொழிச் சமூகத்தின் (linguistic community) பார்வையில், எது மரபு, எவை ஏற்றுக்கொண்ட மாற்றங்கள் என்பவையே கவனிக்க வேண்டிய கேள்விகள். இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடும்போதுதான் வழக்கு என்னும் கருத்து முன்னுக்கு வருகிறது. வழக்கு என்பதன் அர்த்தத்தை விளங்கிக்கொளவதற்கு முன் மரபு என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். காலத்தால் முதன்மையானது மட்டும் மரபு அல்ல; ஒரு காலத்து மரபு அடுத்த காலத்தில் மாறிப் புதிதாக ஏற்படுத்தும் வழக்கும் மரபு ஆகும். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித் தமிழும் ஒரு மரபே. அதை மறுப்பதும், மறப்பதும் மொழி வளர்ந்த பாதையை மூடுவதாகும். இலக்கணத்தின் வேலை மொழியின் விதிகளை வரையறுப்பது அல்ல; அது வழக்கில் உள்ள விதிகளை வெளிப்படுத்துவது; புதிய மரபுக்கு வழி வகுப்பது. புதிய மரபில் பண்டைப் பழமையையோ அண்மைப் பழமையையோ முற்றிலும் அழித்துவிட முடியாது.

தமிழின் புதிய மரபு என்பது என்ன, அதை எப்படி இனம்காண்பது என்பவை பற்றிய விவாதம் தமிழ் மொழியின் வரலாற்றில் இக்காலத்தில் நிகழ்வது; நிகழ வேண்டியது; தமிழைப் பற்றிப் பலவிதமான கருத்தாக்கங்களைக் கொண்டவர்கள் கலந்துகொள்ள வேண்டியது. ஒரு மொழியைப் பேசுபவர்கள், எழுதுபவர்கள் எழுத்தில் தவறு செய்வதும், மாற்றம் செய்வதும் இயல்பு. இரண்டையும் பிரித்தறிவது இந்த விவாதத்தின் முதல் அவசியம். தவறு (error) ஒருவரால் திரும்பத் திரும்பச் செய்யப்படாதது; அவரே திரும்பப் பார்க்கும்போது திருத்திக்கொள்ளக் கூடியது; அதன் நிகழ்வு தனி மனிதரைச் சார்ந்தது. புதுவரவு (innovation) மாறி மாறி வராமல் ஒரு நிலையாக (consistent) வருவது; பலரிடம் பொதுவாக இருப்பது; மொழிச் சமூகத்தைச் சேர்ந்தது; பொதுவிதியில் அடங்குவது. பொதுவிதி புதிய விதியாக இருக்கும். மரபுவிதியிலிருந்து வித்தியாசப்படுவதெல்லாம் தவறு ஆகாது.

சில உதாரணங்கள். ஒருத்தன் : ஒருவன் :: ஒருத்தி என்னும் இணைகளில் காலியாக இருக்கும் இடத்தில் ஒருவள் என்னும் சொல்லை அமைப்பது தவறு ஆகாது; புதுவரவு ஆகும். ஆட்டுக்குட்டி, பன்றிக்குட்டி என்னும் வரிசையில் மாட்டுக்குட்டி என்னும் சொல்லை அமைப்பது இன்றைய வழக்கில் தவறு ஆகும். அடுத்த தலைமுறையில் புறனடை பொதுவிதியில் சேர்ந்து பிழையாகக் கருதப்படாமல் புதுவரவு ஆகலாம். அப்பா தம்முடைய பங்கை விற்றுவிட்டார் என்னும் வாக்கியத்தை அப்பா தன்னுடைய / அவருடைய பங்கை விற்றுவிட்டார் என்று எழுதும் இரண்டு வழக்குகளும் புதுவரவில் அடங்கும். தற்சுட்டுப் பெயரில் மரியாதைப் பன்மை இல்லை; தற்சுட்டுப் பெயர் சுட்டுப்பெயரோடு மருவிவரும் என்பவை புதிய விதிகள். அவர் சொன்னவற்றை, அவர் சொன்னவைகளை என்று மருவி எழுதுவதும் பேச்சில் உள்ளதைப் போல அவர் சொன்னதையெல்லாம் என்று எழுதுவதும் தவறு என்பதிலிருந்து புதுவரவு என்னும் தகுதியை நோக்கி நகர்கிறது எனலாம். சுவரில் என்பதை சுவற்றில் என்று எழுதுவது சுவறு என்னும் ஒரு புதுச் சொல்வடிவம் சுவர் என்னும் சொல்வடிவத்தை நீக்கும்வரை தவறு என்று கருதப்படும். அநாதை / அனாதை, அந்நியன் / அன்னியன், இயக்குநர் / இயக்குனர்  என்பதுபோல் அநியாயம் / அனியாயம் என்று பேச்சைப் பிரதிபலிக்கும் வழக்கு வந்தால், அது தவறு ஆகாமல் புதுவரவு ஆகலாம்; அல்லது நியாயம் என்னும் சொல்லோடு உள்ள தொடர்பைப் போற்றித் தவறாகவே கருதப்படலாம். இந்த உதாரணங்களிலிருந்து, மரபிலக்கணத்தில் விதி இல்லை என்பதாலேயே ஒரு வழக்கு தவறு ஆகாது என்பது விளங்கும். இக்காலத் தமிழின் இயல்பை விவரிக்கப் புதிய இலக்கண விதிகளின் தேவையும் விளங்கும்.

இலக்கியத்திற்கு இலக்கணம் என்பது போல், வழக்கிற்கு இலக்கணம். முன்னெழுதிய இலக்கணத்தின்படி வழக்கு இருக்க வேண்டும் என்பது இரண்டிற்கும் உள்ள உறவைத் தலைகீழாகப் பார்ப்பதாகும்.

மரபு இலக்கண விதிகளிலிருந்து  மாறவே கூடாது என்று பிடித்துக்கொள்வதைப்  போன்றதே நேர்மாறாக அந்த விதிகளை மீற வேண்டும் என்பதற்காகவே விடுவதும். இரண்டையும் மொழி கண்டுகொள்ளாது. மொழி சார்ந்த கருத்தாக்கங்களுக்கு மொழி மாற்றத்தில் பங்கு இருந்தாலும், மொழியின் பரிணாம மாற்றங்களையும், சமூகத் தேவைகளுக்கு ஈடுகொடுத்து ஏற்படும் மாற்றங்களையும் தடுத்து நிறுத்தும் வலிமை கருத்தாக்கங்களுக்கு இல்லை. செய்யுளின் யாப்பு, அழகியல் மரபுகளை முறிக்க வேண்டும் என்பதற்காகவே புதுக்கவிதை தோன்றவில்லை. நிலப்பிரபுத்துவச் சமூக வாழக்கையிலிருந்து மாறிய தழிழ்ச் சமூகத்தின் வாழ்வின் அசைவுகளையும் தேவைகளையும் மதிப்பீடுகளையும் வெளியிடுவதற்குத் தேவை இருந்ததாலேயே புதிய கவிதை மரபு தோன்றியது. தமிழுக்குப் புதிய இலக்கணமும் இந்த மாதிரியான காலத் தேவையின் விளைவே.

சுப்பிரமணியன், பாரதிதாசன், ரசம், புத்திரன் என்று எழுதுவதை முறையே ஸுப்ரமண்யன், பாரதிதாஸன், ரஸம், புத்ரன் என்று எழுதுவது தமிழை எழுதும் முறையின் மரபை முறிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதுவதாகும்; சமூகத்தின், மொழியின் தேவையை நிறைவேற்ற எழுதுவது அல்ல. தமிழ்ச் சகரத்திற்கு வருமிடத்தைப் பொறுத்து ஸகர ஒலி உண்டு. அந்த இடங்களில் ஸகரத்தை எழுதுவது தமிழின் எந்தத் தேவையையும் நிறைவு செய்யவில்லை. தமிழில் வழங்கும் புதுவரவுச் சொற்களில் /ph, b/ என்னும் ஒலிகளையும் /ப/ ஆக எழுதுவது -பேதம் என்று எழுதுவதைப்போல- மரபைப் பின்பற்றி எழுதுவதே. இரசம் என்று எழுதுவது மரபைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதற்காகவே எழுதுவது. இதைத் தவிர, தமிழின் எந்தத் தேவையையும் இகரம் நிறைவு செய்யவில்லை.

ஒரு சொல்லை உச்சரிப்பது  போல் எழுதுவது, பொது இலக்கண விதிகளைப் புறந்தள்ளிவிட்டு, மொழிக்குத் தேவை இல்லாத நேரத்திலும் பின்பற்ற வேண்டிய கொள்கை அல்ல. எழுத்து மரபு பேச்சு மரபின் அசலான நகலாக இருப்பது மொழிகளில் அபூர்வம். மொழியில் நிகழ்ந்த மாற்றத்தால் உச்சரிப்பு மாறினால், மாறிய உச்சரிப்பை எழுத்தில் பிரதிபலிக்க வேண்டிய தேவை எல்லா மாற்றங்களுக்கும் பொருந்தாது. இன்றைய தமிழில், றகரம் ரகரமாக உச்சரிக்கப்படுகிறது. ஆயினும், மரபைப் பின்பற்றி றகரத்தை எழுதுவது வேறு இலக்கண விதிகளின் எளிமைக்குத் தேவை. ஒலிப்பில் ஒன்றினாலும், றகரம் தன் வல்லொலித் தன்மையை இழக்கவில்லை. றகர ஒற்றுக்குப்பின் வரும் வல்லெழுத்து வன்மையாக ஒலிக்கும், பிற வல்லெழுத்துக்குப்பின் வரும் வல்லெழுத்துக்களைப் போல. கற்பு என்னும் சொல்லில் /பு/, வேட்பு என்னும் சொல்லில் உள்ள /பு/ போலவே ஒலிக்கும். ரகர ஒற்றுக்குப்பின் வரும் வல்லெழுத்துகள் மெலிந்து ஒலிக்கும் (எ-டு) சார்பு. றகரத்தை ரகரமாக எழுதினால் கற்பு என்ற சொல்லை கர்ப்பு என்று எழுத வேண்டியிருக்கும். சொல்லின் இடையில் வரும்போது தவிர மற்ற இடங்களில் வருமிடத்தை வைத்து எழுத்துக் கூட்டலில் றகரத்தையும் ரகரத்தையும், அவற்றின் உச்சரிப்பு ஒன்றாக இருந்தாலும், சரியாக எழுத முடியும். சொல்லின் இடையில் றகரம் தனித்து வருபோது ரகரத்திலிருந்து பிரித்து எழுதுவதில் உள்ள இடர்ப்பாடு, சொல்லின் இடையில் மெய்யோடு வரும்போது எழுத்துக் கூட்டலில் செய்ய வேண்டிய திருத்தங்களால் வரும் இடர்ப்பாடுகளை விடச் சிறியது. றகரத்தால் கிடைக்கும் மற்றொரு இலக்கண எளிமை இது. வேற்றுமை வடிவில் சொல்லின் இறுதியில் றகரம் இரட்டிக்கும்; ரகரம் இரட்டிக்காது. (எ-டு) ஆற்றில், ஊரில். ஆரு என்று எழுதினால் இந்தச் சந்தி விதி சொல்லைத் தெரிந்து செய்யும் விதியாகிச் சிக்கலான விதியாகிவிடும். ஆரில் என்று இந்த ஏழாம் வேற்றுமை வடிவத்தை எழுதினால் அது ஆற்று மணல் என்னும் ஆறாம் வேற்றுமை வடிவத்தில் சிக்கலைத் தோற்றுவிக்கும், பேச்சு மொழியில் இது ஆத்து(மணல்) என்றே உச்சரிக்கப்படுகிறது. ஆரு(மணல்) என்று எழுதினால் பேச்சுக்கும் எழுத்துக்கும் ஒன்றாமையை உருவாக்குகிறோம். சந்தி ஒலியின் அடிப்படையில் நிகழும்; அது சொல்லின் அடிப்படையில் நிகழ்வது அபூர்வம். ஆறு என்ற எண்ணுப்பெயர் ஆறில் என்று சேரும்; நதி என்னும் பொருளுடைய ஆறு என்ற சொல் ஆற்றில் என்று சேரும். இந்த விதிவிலக்கை றகர ஈற்றுச் சொற்கள் எல்லாவற்றுக்கும் நீட்டினால், சந்தி இலக்கணம் சிக்கலாகிவிடும். இதனால் றகர, ரகரத்தை வேறுபடுத்தி எழுதும் சொல்வடிவச் சிக்கலை இலக்கணம் அனுமதிக்கிறது, றகரத்தின் உச்சரிப்பு ரகரத்தின் உச்சரிப்போடு ஒன்றிப்போனாலும். இலக்கணத்தின் பகுதிகள் தங்களுக்கிடையே ஒரு சமன்பாட்டைக் காக்கின்றன.

மேலே சொன்ன விபரங்கள்  ஒரு குறிப்பிட்ட இலக்கண மாற்றத்தை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் இலக்கணத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்துச் செய்யும் செயல் என்பதைப் புலப்படுத்தும். இந்தப் பண்பு  பெரும்பான்மையோரின் வழக்கில் காணப்படுவதை இங்கு குறிப்பிட வேண்டும். பழைய இலக்கண விதிகளிலிருந்து விலகுபவர்கள் புதிய விதிகளின்படி மொழியை வழங்குவார்கள். பெரும்பான்மையினோரின வழக்கை இயக்கும் புது விதி எதுவும் இல்லையென்றால், அந்த வழக்கு தற்செயல் நிகழ்வு (random occurrence) என்றால், அது இலக்கணத் தகுதி பெறுவது கேள்விக்குரியது.

பெரும்பான்மை வழக்கைக் கணிப்பதில் ஒரு சிக்கல்  இருக்கிறது. இது வெறும் எண்ணிக்கையைப்  பொறுத்த விஷயம் மட்டுமல்ல. இணையத்தில் வழங்கும் தமிழ் தமிழின் பல வகைகளில் ஒன்று மட்டுமே. கணினியைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் மட்டும் வழங்கும் வகை. அதில் எழுதுபவர்கள் தாங்கள் எழுதியதைப் பெரும்பாலும் திருப்பிப் படித்துப்பார்த்து, பிழை என்று தங்களுக்குத் தோன்றுவதைக்கூடத் திருத்தும் வாய்ப்பைப் பயன்படுத்துவதில்லை. இணையத்தில் உள்ள பல விவாதங்கள் இதற்கு நல்ல உதாரணம். ஒரு மொழியின் இலக்கணம் பெரும்பான்மை என்னும் மிருகபலத்தினால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஆனால், பெரும்பான்மை வழக்கு இலக்கணத்தில் நிகழும் மாற்றங்களைக் கவனத்திற்குக் கொண்டுவருகிறது. அவற்றில் சிலவோ பலவோ இலக்கணத்தில் இடம்பெற்றுப் புதிய இலக்கணத்திற்கு வழிவகுக்கும்.

வாழும் மொழி தன்னைப் புதுப்பித்துக்கொண்டேயிருக்கிறது. தமிழ் வாழும் மொழி. இதனால் அதன் இலக்கணம் மாறிக்கொண்டேயிருக்கிறது. மாற்றத்துக்கு அணைபோடும்  இலக்கண விதிகள், தரமானது என்று சொல்லப்படும் ஒரு மொழி வழக்கை மட்டுமே முன்னிறுத்தி, மொழியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் மக்களிடமிருந்து தூரப்படுத்துகின்றன. மொழியைத் தரப்படுத்தும் முயற்சியும் இயல்பான ஒன்றுதான்; எல்லாச் சமூகமும் மேற்கொள்ளும் செயல்தான். அது மொழியின் மேல் அதிகாரம் உள்ளவர்கள் செய்வது. அவர்கள் மக்களின் வழக்கு அனைத்தையும் பிழை வழக்கு என்று புறந்தள்ளிவிட்டால், வீட்டு மொழிக்கும் பள்ளி மொழிக்கும் தூரம் அதிகமாகிவிடும். தூரம் அதிகமானால், தமிழர்கள் தமிழைத் தூர இருந்து வணங்கலாம்; ஆனால் தயக்கமின்றி வழங்குவது குறையும். நமக்குத் தமிழோடு உள்ள உறவு பிள்ளையாருக்கு முன்னால் உக்கிபோடும் உறவாக இருக்கக் கூடாது!

முந்தைய கேள்வியும், பதிலும்

 

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on “பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (45)

 1. அண்ணாமலையாரின் கருத்துகளுடன் நான் பெரும்பாலும் ஒத்துப்போகிறேன். ஆனால் இந்த இடத்தில் அல்ல.

  ..

  “சுப்பிரமணியன், பாரதிதாசன், ரசம், புத்திரன் என்று எழுதுவதை முறையே ஸுப்ரமண்யன், பாரதிதாஸன், ரஸம், புத்ரன் என்று எழுதுவது தமிழை எழுதும் முறையின் மரபை முறிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் எழுதுவதாகும்;” .

  புத்ரன் , ஸுப்ரமணியம், பாரதிதாஸன் என எழுதுவோரின் நோக்கத்தைப் பற்றி நாம் அவர்களை கேட்காமல் அனுமானம் செய்து கொள்வது சரியல்ல. உதாரணமாக, புத்ரன் என்ற சினிமா படமே சமீபத்தில் வந்திருக்கிரது.

  https://www.vallamai.com/movie/1460/ .

  ”ஜெயபாரதியின் அடுத்த படம், புத்ரன்” . சினிமா தலைப்புகள் மக்களுக்கு உடனே புரியும்போல்தான் வைக்கப்படுகின்ரன. அதனால் புத்ரன் மக்கள் அங்கீகாரம் உள்ள சொல் என சொல்லலாம், அது சரியான தமிழ் எனவும் சொல்லலாம். `புத்ரன்` என பெயர் வைத்துக் கொண்டு பல தமிழர்கள் உள்ளனர் (உம்: கவிஞர் மனுஷ்ய புத்ரன்) – அவர்கள் மரபை முறிக்க வேண்டும் என நோக்கத்தில் உள்ளனர் என்பது வேண்டாத குற்றச்சாட்டு.

  அதைப்போல்தான் தாஸன், ஸுப்ரமணியம் என்ற பெயர்களும். நாம் மற்றவர்கள் `நோக்கத்தை` ` a priori அடிப்படையில் அனுமானிக்க வேண்டாம் . .

  வ.கொ.விஜயராகவன்

 2. மொழி பற்றிய தன் கருத்துகளே சரியானது என்று தன் கருத்துகளை திணிக்காது , மற்றவர்கள் பேசுவதும்/எழுதுவதும் சரிதான் என்பதுதான் தற்கால மொழியியலின் அடிப்படை.
  . பார்க்க : Key Concepts in Linguistics by R.L.Trask – Published by Routledge 1999
  .

  descriptivism The policy of describing languages as they are found to exist. A prominent feature of traditional grammar is the frequent presence of prescriptivism: identifying and recommending forms and usages favoured by the analyst and condemning others not favoured by the analyst. Excepting only in certain educational contexts, modern linguists utterly reject prescriptivism, and their investigations are based instead upon descriptivism. In a descriptivist approach, we try to describe the facts of linguistic behaviour exactly as we find them, and we refrain from making value judgements about the speech of native speakers. Of course, our descriptions sometimes include the observation that speakers themselves regard certain usages as good or bad, but that is a very different thing from expressing our own opinions.
  Descriptivism is a central tenet of what we regard as a scientific approach to the study of language: the very first requirement in any scholarly investigation is to get the facts right. Prescriptivism, in great contrast, is not a scientific approach. The strong opinions of prescriptivists may be variously regarded as recommendations about good style, as an aspect of social mores, as a consequence of our educational system, or perhaps even as a matter of morality, but they are not statements about actual behaviour, and hence they are not scientific.

  .
  செல்வா போன்றவர்கள் மொழி துப்புரவிலிருந்து மொழி விவரணைக்கு மாறவேண்டும்.

  .

 3. ஆங்கிலம் ஏற்றுக்கொண்ட அதன் மொழி மரபு மாற்றங்களைப் பற்றித் தனிக் கட்டுரையே எழுதலாம்..
  ~ வாஸ்தவம். பல நூல்கள் வந்துள்ளன. இது தான் அந்த அகில உலக மொழியின் ஆத்மா.

  மொழி பற்றிய தன் கருத்துகளே சரியானது என்று தன் கருத்துகளை திணிக்காது , மற்றவர்கள் பேசுவதும்/எழுதுவதும் சரிதான் என்பதுதான் தற்கால மொழியியலின் அடிப்படை.
  . பார்க்க : Key Concepts in Linguistics by R.L.Trask – Published by Routledge 1999
  ~ வாஸ்தவம். அது தான் நாடித்துடிப்பு.

 4. இ-சார்

  , தமிழ் சூழ்நிலையில் இதுவரை prescriptivists தான் கோலாச்சி வருகின்றனர் . அதுதான் தமிழின் உரைநடை வளர்ச்சிக்கு தடையாக நிற்கிரது. தமிழ் prescriptivists தங்கள் சாய்வுகளை பின்பற்றாதவர்கள் தமிழை அழிக்க முயல்கின்றனர் என emotional blackmail செய்தே மற்றவர்கள் தர்க்கங்களை அடக்க பார்க்கின்றனர். Prescriptivism என்றால் என்ன என அதே புஸ்தகம் சொல்கிறது:.

  .
  .
  Prescriptivism The imposition of arbitrary norms upon a language, often in defiance of normal usage. Every language exhibits a good deal of regional and social variation. If very many people want to use a language for a number of different purposes, then it is convenient and even necessary to have a single agreed form of the language—a standard language —known and used by everybody, or at least by all educated speakers. Otherwise, if people insist on using their own particular varieties, the result will be confusion and misunderstanding. But, since languages are always changing, there will always be doubts and disagreements over which forms and usages should be recognized as part of the standard language.

  Prescriptivism consists of the attempts, by teachers and writers, to settle these disagreements by insisting upon the use of those particular forms and usages which they personally prefer and by condemning those others which they personally dislike. Of course, some degree of prescriptivism is necessary, particularly in education: people who naturally use forms which are blatantly not accepted as standard by the community as a whole must learn to use the standard forms, at least in those circumstances which call for the standard language, or else they will be severely disadvantaged.
  .

  But the problem is that many prescriptivists go too far, and try to condemn usages which are in fact perfectly normal for even educated speakers, and to insist instead upon usages which were current generations or centuries ago but which are now effectively dead, or even upon usages which have never been normal for anybody.
  .

  A famous example concerns the so-called split infinitive. For generations, virtually all English-speakers have spontaneously said things like She decided to gradually get rid of the teddy-bears she had spent twenty years collecting. Here the sequence to gradually get rid of is the ‘split infinitive’. Many prescriptivists have condemned this usage, on the supposed ground that to get is a single verbform, the ‘infinitive’, and therefore ‘logically’ cannot be split up. Such people typically insist instead on something like She decided gradually to get rid of. …
  But this is all wrong. First, the proposed ‘correction’ is badly misleading: it suggests that it is the decision which is gradual, rather than the disposal. Second, the sequence to get is not an infinitive, nor is it a verb-form, nor is it even a grammatical unit at all. The true infinitive here is get, while to is nothing but a linking particle. The adverb gradually logically belongs next to get rid of, and that’s where speakers normally put it. That to get is not a grammatical unit can be shown in a number of ways, not least of which is the observation that speakers regularly break it up. (Another test is the construction illustrated by She has asked me to change my hairstyle, but I don’t want to, in which the understood change is deleted while to is obliged to remain—hardly possible if to change were really a unit.) Hence the prescriptivists’ position is ignorant and wrong-headed: it represents an attempt to replace normal and elegant usage by something which is silly, unnatural and hard to understand, and which is used by nobody except some prescriptivists and those few who take them seriously.
  .

  Many prescriptivists also object to the familiar English practice of ending a sentence with a preposition, apparently on the bizarre ground that this construction is not possible in Latin. They take exception to ordinary English utterances like Who were you talking to?, What’s this gadget for? and That’s something I just can’t put up with, demanding instead unnatural things like To whom were you talking?, For what is this gadget?, and I have no idea what they would do about the last one.
  .

  Prescriptivists also reject such ordinary utterances as Who do you trust?, demanding instead Whom do you trust?, a form which was current hundreds of years ago but is now dead, except in frostily formal styles of speech and writing. There is clearly a need for informed commentary on usage. Some forms, while widely used, are unquestionably not accepted as part of the standard language, while others are ambiguous, pretentious, clumsy or hard to understand, and drawing attention to these matters is valuable: this is the good face of prescriptivism. But it is deeply unfortunate that so many commentators have seen fit to lose touch with reality and to pursue their own absurd little bugbears at such length and with such passion..
  . .
  .ஆங்கிலத்திலேயே prescriptivists அவ்வளவு லூட்டி அடிக்கின்றனர் என்றால், தமிழில் கேட்கவே வேண்டாம். .

  .

  வன்பாக்கம் விஜயராகவன்

 5. /`புத்ரன்` என பெயர் வைத்துக் கொண்டு பல தமிழர்கள் உள்ளனர் (உம்: கவிஞர் மனுஷ்ய புத்ரன்) /

  இவர் மனுஷ்யபுத்திரன் என்றுதான் தன் பெயரை எழுதி வருகிறார்; புத்ரன் என்று இல்லை. பார்க்க – http://manushyaputhiran.uyirmmai.com/

 6. தன் வலைப்பக்கத்தில் மனுஷ்யபுத்திரன் எனத்தான் எழுதிவருகிறார். பலர் எழுதும்போது மனுஷ்யபுத்ரன் என எழுதுகின்றனர், ஏனெனில் அது ஸ்வபாவமாக வருகின்றது. ஒரு தூரப்பார்வையில் ஸ்வபாவமான மொழி – பேச்சு மொழிக்கு – இலக்கணம் வளைந்துதான் ஆக வேண்டும். . பாரதிதாசனை பலர் அவ்ர் காலத்திலேயே பாரதிதாசன் எனதான் குறிப்பிட்டு வந்தனர்.

  .

  http://www.tamilheritage.org/old/text/ebook/b_dasan/b_dasan.html அவருடைய கவிதை முதலில் பிரசுரமானபோது பாரதிதாஸன் என்ற பெயர் இருந்தது. இன்று கூட பாரதி தாஸன் என்ற ஈழத்தமிழ் அதிகாரி இருக்கிறார்.
  http://www.bbc.co.uk/tamil/news/story/2010/11/printable/101126_jaffwater.shtml .

  The long and short of it is that many Tamils spontaneously pronouce and write as பாரதிதாஸன் அல்லது மனுஷ்யபுத்ரன். அமானுஷ்யபுத்ரன் என ஒரு கவிஞர் எழுதிகிறார்.

  http://www.vaarppu.com/printer.php?id=1307&cat=1

  .

  வகொவி

 7. ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நடிகர் சூர்யா சொல்வது போல் “மாற்றம் ஒன்றே மாறாதது” என்பது போல், மாற்றம் என்பது ஏற்பட்டுக் கொண்டு தானிருக்கும்.   திருவள்ளுவர் காலத்து தமிழா தற்சமயம் உபயோகத்திலிருக்கிறது?   சமீப காலத்தில் ‘லை’, ‘ளை’ எழுத்துக்களையே பழைய முறையிலிருந்து மாற்றம் செய்யவில்லையா?  இன்னும் என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றனவோ?  ஒரு வேளை, ‘ஷ’, ‘ஸ’ என்ற எழுத்துக்களையே தமிழ் அகராதியிலிருந்து நீக்கி விடக்கூடும்.  ஆங்கிலக் கலப்பு முடிந்த இடங்களில் தவிர்க்கலாம், ஆனால் அறவே ஒழிக்க முடியாது.   சில தொ(ல்)லைக் காட்சிகளில்செய்தி வாசிப்பவர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அனைவரும் பேசும்  தமிழ் உச்சரிப்பு எவ்வாறு இருக்க்றது என்று அனைவரும் அறிந்த ஒன்று.  ‘வட இந்தியாவில் வெள்ளம்’ என்பதற்கு பதிலாக, ‘வட இந்தியாவில் வெல்லம்’ என்கின்றனர்.   ‘மழையை’  ‘மளை’ என்றவாறெல்லாம் சொல்லி,  சொல்லின் பொருளையே மாற்றி விடுகின்றனர்.  இவற்றையெல்லாம்  திருத்த முயற்சிகள் காணோம், இருந்தால், போதாது.  மொழிப்பற்று நிச்சயம் தேவை. ஆனால், அதுவே மொழி வெறியாக மாறும் போது தான் கோளாறுகள்   ஏற்படுகின்றன.    பல இடங்களில், அரசு ஆணைகள் உட்பட, தமிழில் எழுதுகிறோம் என்று தமிழில் மொழிபெயர்ப்பு செய்து, அவற்றைப் படிக்கும் ஏராள தமிழர்களுக்கே என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது புரியாமல், தலையப் பிய்த்துக் கொள்ளும் நிலை.  நமது இந்திய நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட பின்பு தான் பிரச்சினைகள் தீர்க்க முடியாத அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பது பலரின் எண்ணம்.   

 8. According to me, language, a means of communication, should be enjoyed and appreciated through speeches, articles, poems, stories, etc., even when other language usage come in between if the contents demand so..   As far as practical life is concerned, it is not entirely possible to stick to one’s mother tongue alone.  In that case, the respective State Governments must provide job opportunities and comfortable life to the citizens within their own State so that none from the State may go to other States or countries.  Similarly, communications from a State to other States or countries, Government-wise or otherwise, if done only in that State language, what will happen?  Let us all create conducive situations for language lovers to love their language and understand it,  not make it difficult for them and ignore.  Tamil Nadu is the only State in India where Hindi is not learnt as needed.  Who is the loser?   We have a senior family friend in Singapore who is a Tamil Lover but who now regrets that he was deprived of learning Hindi in Tamil Nadu owing to political reasons.  When the entire world looks small and embraces globalisation, in the interest of  opportunities for growth and progress of citizens and  the respective State, one should welcome positive, constructive  and progressive changes in all walks of life. 

 9. செல்வா “தமிழில் பேசும்பொழுது ஆங்கில ஒலிப்பு வேண்டும் என்பது இல்லை.” என கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில் தமிழர்கள் “ஆங்கிலம்”” பேசுவதும் “ஆங்கிலேயர்கள் ஆங்கிலம்” இல்லை. உதாரணமாக ஆங்கில No Go Zone என்பதை தமிழரும், ஆங்கிலேயரும் உச்சரிப்பதை கேளுங்கள் , இரண்டும் வெவ்வேறாக இருப்பதை கேட்கலாம். Mayor , awe, beau shore, sure போன்ற வார்த்தைகள் தமிழர்கள் உச்சரிப்பு ஆங்கிலேயர் உச்சரிப்பிலிருந்து பல மைல் தூரம். ஆங்கில எழுத்துகளான M , L, N என்பதை தமிழர்கள் yem , yel, yen எனதான் உச்சரிக்கின்ரனர் – இதை பேரா.ராஜமும் முன்னொரு இடத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். .

  .
  தமிழர்கள் ஆங்கிலமே இந்த லக்ஷணம் என்றால், தமிழர்கள் மற்ற தமிழர்களூடன் பேசும் பேச்சில் கலக்கும் ஆங்கில வார்த்தைகளோ, அல்லது ஆங்கில மூல வார்த்தைகளோ “ஆங்கில உச்சரிப்பு” என சொல்லமுடியாது. அவை “தமிழ்மயம்” ஆக்கப்பட்டுள்ளன. – மேலும் வார்த்தை ஆங்கில மூலம் என்றாலும் , உச்சரிப்பு மட்டுமல்லாது இலக்கண ரீதியிலும் “தமிழ்மயம்” ஆக்கப்பட்டுள்ளன. .

  வ.கொ.விஜயராகவன்

 10. வி.ராமசாமி “ ஆங்கிலக் கலப்பு முடிந்த இடங்களில் தவிர்க்கலாம், ஆனால் அறவே ஒழிக்க முடியாது..” .
  .
  `முடிந்த இடங்களில்` என்றால் யாரால் , எப்போது, எவ்விடங்களில் ? ஆங்கிலக்கலப்பு பற்றி பேசுகிறவர்கள் ஆங்கிலத்தில்தான் தொழில் நடத்துகின்ரனர் . ”முடிந்த இடங்களில் தவிர்க்கலாம்” என்ற கோஷம் மற்றவர்களை குற்றம் சொல்ல ஒரு ஆயுதமே தவிர , அது எந்த விதத்திலும் செயல்முறையாக்கப்படும் திட்டம் இல்லை. . வகொவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *