பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (46)

 

தமிழில் சந்தி விதிகளை ஒரு சில தமிழ் அறிஞர்களை விட்டு யாரும் பின்பற்றுவதாகவும், தெரிந்து பேசுவதாகவும், அவை பற்றி உறுதியான கொள்கைகளை கொண்டிருப்பவர்களாகவும் தெரியவில்லை. புணர்ச்சிகளில் வல்லினம் மிகுமா மிகாதா என்பது என் கணிப்பில் 99.99% எழுதும் தமிழர்களுக்கு தெரியாது. இந்த அளவு வழக்கிறந்துவிட்ட நியதிகளை தொடர்ந்து பேசுவது நியாயமா?

வன்பாக்கம் விஜயராகவன்

பதில்

ஒரு சொல் உருபுகள் சேர்ந்து அமையும்போது அடுத்தடுத்துச் சாதாரணமாக வராத ஒலிகள் வந்தால்  அவற்றை மாற்றிச் சொல்லொலி அமைப்பைச் சரிப்படுத்துவது  சந்தி. இது உச்சரிப்பையும் எளிமையாக்குகிறது. மாற்றத்தில், ஒரு ஒலியை மற்றொன்றாக்குதல், புதிய ஒலியைத் தோற்றுவித்தல், உள்ள ஒலியை நீக்குதல் ஆகிய மூன்றும் அடங்கும். இந்த மாற்றங்கள் எழுத்திலும் பிரதிபலிக்கும். இது அகச்சந்தி. ஒரு தொடரில் அடுத்தடுத்து வரும் இரண்டு சொற்களிடையேயும் இந்த மாற்றங்கள் நிகழும். இது புறச்சந்தி.

அகச்சந்தி சொல்லை ஒருமைப்படுத்துகிறது. இது பெரும்பாலான மொழிகளில்  உள்ளது. தமிழிலும் துவக்க காலத்திலிருந்து இன்று  வரை உள்ளது. தமிழ் பேசும், எழுதும் அனைவராலும் பின்பற்றப்படுகிறது. சில எடுத்துக்காட்டுகள்: ஆள் + கள் = ஆட்கள், பணம் + காரன் = பணக்காரன், அம்மா + ஐ = அம்மாவை, வீடு + க்கு = வீட்டுக்கு, கல் + த்த் + ஆன் = கற்றான், ஆள் + ந்த் + ஆன் = ஆண்டான். சொல்லாக்கத்தில் உருபுகள் சேரும்போது அவற்றை இணைக்கும் உருபு (சாரியை) தோன்றுவது இக்காலத் தமிழில் குறைந்துவருகிறது. அது + அன் + ஐ = அதனை, வீடு + இன் + க்கு = வீட்டிற்கு, வா + ந்த் + அன் + அன் = வந்தனன் முதலிய சொற்களுக்குப் பதில் அதை, வீட்டுக்கு, வந்தான் முதலிய சொற்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும், இது + அன் + க்கு = இதற்கு என்னும் சொல்லைப் பேச்சில் போல் இதுக்கு என்று எழுதுவதில்லை.

டி. கே. சிதம்பரநாத முதலியார்  அகச்சந்தியைப் பிரித்து எழுதலாம் (எ-டு கல்த்தான்) என்று சொன்ன யோசனை எடுபடவில்லை. சொல்லின் ஒலியமைப்பு முறைமைக்கு இது முரணாக இருப்பதே இதற்குக் காரணம்.

தொகைச் சொற்கள்  தனிச் சொல்லுக்கும் தொடருக்கும்  இடையில் உள்ள அமைப்பு. இவற்றிலும் எல்லாச் சந்தியும் உண்டு. இவை விட்டிசை (pause) இல்லாத ஒரு சொல் தன்மையுடையன என்று சொல்லச் சந்தி உதவுகிறது.

புறச்சந்தி சில மொழிகளிலேயே  உள்ளது. அவற்றுள் தமிழும்  ஒன்று. இக்காலத் தமிழில்  பெரிய மாற்றம் நிகழ்ந்துகொண்டிருப்பது இதில்தான். ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட செய்யுளில் மிகுதியான புறச்சந்தி உண்டு. இப்போது தமிழைச் சிறப்புப்பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களும் சந்தி பிரித்த, அதாவது சந்தி இல்லாத, பதிப்புகளையே படிக்கிறார்கள். புறச்சந்திக்குச் சில காரணங்கள் உண்டு. உயிர்கள் அடுத்தடுத்து வருவதைத் தடுப்பது அவற்றில் ஒன்று. (எ-டு) பார்த்தது + இல்லை = பார்த்ததில்லை, பார்த்த + இடத்தில் = பார்த்தவிடத்தில், இலக்கண + ஆசிரியர் = இலக்கணவாசிரியர். மெய்யை அடுத்து வரும் உயிர் மெய்யின்மீது ஏறி நிற்க வேண்டும் என்பது இன்னொரு காரணம். எ-டு ஊரில் + இல்லை = ஊரிலில்லை; நேரம் + ஆகாது = நேரமாகாது. ஒரு சொல்லில் அடுத்தடுத்து வராத மெய்யெழுத்துகள் சொற்சேர்க்கையால் அடுத்தடுத்து வரும்போது ஒரு மெய்யை மாற்றும் தேவை பிறிதொரு காரணம். (எ-டு) காலம் + கடத்தினான் = காலங்கடத்தினான், காலம் + தாழ்த்தினான் = காலந்தாழ்த்தினான், முதல் + சொல் = முதற்சொல். இக்காலத் தமிழில் இந்தச் சந்தி வழக்கு பெரிதும் குறைந்துவிட்டது. இந்த மாற்றம் தமிழ் வகுப்புகளிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

புறச்சந்தியில்  உயிரில் முடியும் சொல்லுக்குப்பின் வல்லெழுத்தில் துவங்கும்  சொல் வரும்போது அந்த வல்லெழுத்து  மிகுந்து முதல் சொல்லோடு சேர்ந்து ஒற்று மிகுதல் இலக்கண ஆசிரியர்கள் வலியுறுத்தும் சந்தி. தொடரில் சொற்களிடையே இலக்கண உறவைக் காட்டுவதற்காக இது விதிக்கப்படவில்லை என்றாலும், அது இந்தச் சந்தியின் ஒரு பயன். காலைப் பார், காலை பார் என்னும் தொடர்களில் முதலாவதில் காலை இரண்டாம் வேற்றுமை உருபு ஏற்ற பெயர்; இரண்டாவதில் காலை வினையடை. காலைச் சாப்பாடு இல்லை, காலை சாப்பாடு இல்லை என்னும் தொடர்களில் முதலதில் காலை பெயருக்கு அடையாகும் பெயர்; இரண்டாவதில் காலை வினையடை. முன்னுள்ள சொல்லில் வல்லெழுத்து இரட்டித்து நிற்கும்போது பின்னுள்ள சொல்லின் முதல் வல்லெழுத்து மிகுவது ஓசையமைதிக்காக. எ-டு எனக்குக் கொடு, எடுத்துக் கொடு, (வந்து கொடு என்பதில் மிகுவதில்லை), பாட்டுப் பாடு (வீடு பார் என்பதில் மிகுவதில்லை), நேற்றுப் பார்த்தேன், நாளைக்குப் பார்ப்பேன் (நாளை பார், இன்று பார் என்பதில் மிகுவதில்லை). முன்னுள்ள சொல் உயிரில் முடிந்து பின்னுள்ள சொல் வல்லெழுத்தில் துவங்கினால், வேகமாகப் பேசும்போது இடைவெளி போய் வல்லெழுத்து மென்மையாகும் வாய்ப்பைத் தடுப்பதற்கும் ஒட்டு இரட்டிக்கும் சந்தி பயன்படுகிறது. காகம் என்னும் சொல்லின் நடுவில் உள்ள ககரம் முதலிலுள்ள ககரத்தை விட வன்மை இழந்து ஒலிப்பதைப் போல, தலைக்கனம் என்னும் தொகைச்சொல்லில் கனம் என்னும் சொல்லில் உள்ள ககரம், ஒற்று இரட்டிக்காவிட்டால் உரசொலியாக ஒலிக்கும். இப்படிச் சில காரணங்கள் இருந்தாலும், செயவென் எச்சத்திற்குப் பிறகு, சுட்டுப்பெயரடைக்குப் பிறகு என்று பல இலக்கண வடிவங்களுக்குப் பிறகு ஒற்று இரட்டிப்பதற்குக் காரணம் இல்லை.

சுட்டுப் பெயரெச்சத்திற்குப் பின் மிகும் ஒற்று மற்றப் பெயரெச்சத்தின் பின் மிகுவதில்லை. ஒற்று எங்கு இரட்டிக்கும் என்று சொல்ல முடியுமே தவிர ஏன் இரட்டிக்கும் என்று மொழியின் பொது இயல்பு சார்ந்த காரணம் சொல்ல முடியாது.

அச்சும் அதோடு  நிறுத்தக்குறிகளும் வந்த பிறகு தமிழில் சந்தி  பற்றி மறுபார்வை ஏற்படுகிறது. நிறுத்தக்குறி சில வகை  விட்டிசையைச் சுட்டுகிறது. விட்டிசை உள்ள இடத்தில் சந்தியை விடுவது இயல்பாகிறது. தொடரில் உள்ள சொற்கள் பிரிந்து விட்டிசையோடு உச்சரிக்கப்படுவதால், இரு உயிர்களின் தொடர் வரவு, மெய்யேறாமல் உயிர் வருவது, சொல்லில் இல்லாத மெய்மயக்கத்தைத் தடுப்பது முதலனாவற்றைச் செய்யும் சந்தி விதிகளை இக்காலத்தில் பயன்படுத்துவதில்லை.  பார்த்த இடத்தில், இலக்கண ஆசிரியர், ஊரில் இல்லை, நேரம் ஆகாது, காலம் கடத்தினான், முதல் சொல் முதலியனவும், நான் வெளியே போக, தம்பி தூங்கிவிட்டான்; கடைக்குப் போக, பணம் என்னிடம் இல்லை; விலையைக் கேட்டு, பொருளைப் பார்த்து, பணத்தைக் கொடு முதலியனவும் சந்தி இல்லாமல் எழுதப்படுகின்றன. சந்தி இன்று ஒரு தொடரையோ சொல்லையோ ஒலிக்கும் முறையைப் பிரதிபலிக்கிறது. எழுத்தில் காற்புள்ளி, அரைப்புள்ளி முதலியவற்றைப் பேச்சில்  சுருதி ஓசை (intonation) காட்டும்போது சந்தி தேவையற்றதாகி விடுகிறது. இது ஒற்று இரட்டிக்கும் சந்திக்கும் பொருந்தும்.

தனி எழுத்தை ஒலிக்கும்  முறையையும் சந்தி பிரதிபலிக்கிறது. தோசை என்ற சொல்லின் முதல்  மெய் ஒலிப்புடன் (voiced) இருப்பதாலும், சாம்பார் என்ற சொல்லின் முதல் மெய் உரசலுடன் (fricative) இருப்பதாலும், சுட்டுப் பெயரடைக்குப் பின் இவை ஒற்று மிகாமல் இந்த தோசை, இந்த சாம்பார் என்று எழுதுவதே இன்று பெருகிவரும் வழக்கு. இரண்டு பெயர் சேர்ந்து வரும் தொகையிலும் இப்படியே: நெய் தோசை, கத்தரிக்காய் சாம்பார்

தமிழ்ச் சமூகத்தில் வாசிப்பு பரவலாகும் மாற்றம்  ஏற்பட்டபோது வாசித்துப் பொருள் விளங்கிக்கொளவதற்குத் துணையாகச் சொற்களைச் சந்தியால் சிதைக்காமல், அவை தனித்து நிற்கும்போது கொள்ளும் வடிவத்திலேயே, தொடரிலும் தொகையிலும் எழுதும் மரபு பெருகியது. சளிப் பிடித்தது, சொன்னாற்போல, பற்பொடி என்று சந்தியோடு எழுதும் வழக்கை விட சளி பிடித்தது, சொன்னால்போல, பல்பொடி என்று சந்தி இல்லாமல் எழுதும் வழக்கு பெருகியுள்ளது. சொற்களைச் சந்தியால் சேர்த்து நீளமாக எழுதுவதைத் தவிர்க்கும் விருப்பமும் சந்தியைக் குறைக்கிறது.

சமூகத்திலும் மொழியிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சந்தி உபயோகத்தை மாற்றியுள்ளன. இக்கால எழுத்து வழக்குக்குப் புதிய சந்தி விதிகள்  எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவை எழுதப்படாமல், இன்றைய வழக்கிற்குத் தொடர்பில்லாத பழைய சந்தி விதிகளைப் பள்ளிகள் வலியுறுத்துவதால் மக்களிடையே குழப்பம் இருக்கிறது. சிலர் அகச்சந்தியும் இல்லாமல் சொல்லைப் பிரித்து வீட்டில் இருந்து வந்துகொண்டு இருக்கிறான் என்று எழுதுவதையும் பார்க்கிறோம். குழப்பத்தைப் போக்க, மக்களின் வழக்கை ஒட்டிய புதிய சந்தி விதிகள் இக்காலத் தமிழுக்கு வேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (46)

 1. சமீபத்தில் Tamil Internet Conference என்பதற்கு இதைப்போல் தமிழ் வெளியீடு இருந்தது.

  .

  ”உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப……………. ………….

  அண்ணாமலை பல்கலையும் இணைந்து நடத்தும்…… …………. …….”

  ஒருவர் இதைப்பார்த்து இரு சந்திப் “பிழைகளை” `கண்டுபிடுத்து` விட்டார்.

  இப்படி தமிழில் படித்து, தமிழில் ஆர்வம் உள்ள நபர்களே எழுதுவதும், எழுதாதவதும் எப்படி “பிழைகள்” ஆகும் என்ற வினா எழுகிறது. இப்படி நாம் சந்தி நியதிகளை -அது மட்டும் அல்ல, மற்ற இலக்கண நியதிகளை கூட செயல் முறையிலும் , pragmatic அடிப்படையிலும் யோசித்து, முடிவு எடுத்து, உறுதியாக நிற்காத வரை “பிழைகளை” கண்டு பிடித்து, மற்றவர்களை மட்டம் தட்டுவது எளிதாக போய்விடுகிறது . தமிழில் பலர் எழுதத் தயங்குவதற்கு அது ஹேதுவாகவும் உள்ளது.

  .

  வ.கொ.விஜயராகவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *