பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (47)

கேள்வி:

மொழிகளில் தோற்றம் பற்றிக்  கணிக்க மொழியியலில் நெறிமுறை இருந்தால், அதைக் கொண்டு தமிழின் தொன்மையைக் கணக்கிட முடியுமா?

பதில்

PlosOne என்னும் ஆன்லைன் இதழில் வெளியான Charles Perreault & Sarah Mathew எழுதிய Dating the origin of language using phonemic diversity (http://www.plosone.org/article/info:doi/10.1371/journal.pone.0035289) என்னும் ஆய்வுக்கட்டுரையையும் இதன் எதிர்வினைகளையும் படித்துப் பார்த்த இராமகி tamilmanram@googlegroups.com –இல் தமிழ் ஒலியன்களின் எண்ணிக்கையை (முருகையன் கூறியதாக அவர் கொண்ட 95) வைத்து, கட்டுரை காட்டும் நெறிப்படி கணக்கிட்டால், தமிழின் தோற்றக் காலம் மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் போகும்போல் தெரிகிறது என்னும் ஐயத்தை எழுப்பி, ந.தெய்வசுந்தரத்தின் கருத்தைக் கேட்டிருந்தார். தெய்வசுந்தரம் தமிழ் ஒலியன்கள் 95 அல்ல; அது முருகையனின் கருத்தும் அல்ல என்று மறுத்துவிட்டு, மேலே சொன்ன கட்டுரையைப் பற்றி என்னுடைய கருத்தைக் கேட்டார். என் கருத்து இது.

மேலே சொன்ன கட்டுரையைப் போன்று இன்னொரு ஆய்வுக்கட்டுரை சயின்ஸ் என்ற புகழ்பெற்ற ஆய்விதழில் ஒன்றரை ஆண்டுக்கு முன் (4.15.2011) வெளிவந்தது. அது Quentin Atkinson எழுதிய Phonemic diversity supports serial founder effect model of language expansion from Africa என்னும் கட்டுரை.

தமிழின் தோற்றம் என்னும்போது தமிழ் மொழியின் தோற்றத்தைக் குறிக்கிறோம். தமிழ் இலக்கியத்தின் தோற்றத்திற்கு எழுத்துச் சான்று இருக்கிறது. உலகில் மொழிக்கு எழுத்து முறை தோன்றியது 5500 ஆண்டுகளுக்கு முன்தான். இதனால் மொழியின் தோற்றத்திற்கு எழுத்துச் சான்று எந்த மொழிக்கும் இதற்கு முன்னால் இருக்க முடியாது. எழுதப்படுவதற்கு முன் ஒரு மொழி பேச்சு வழக்கில் நிச்சயம் இருக்கும்.

5000 ஆண்டுப் பழமை உள்ள சிந்துவெளி நாகரிகத்தின் எழுத்து மொழி தமிழ் என்பதன் சான்று உலகின் தொல்லெழுத்து அறிஞர்கள் பொதுவாக ஒப்புக்கொள்ளும் வகையில் இன்னும் நிறுவப்படவில்லை. அது ஒரு திராவிட மொழி என்பதற்குப் பல வாதங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தத் திராவிட மொழி தமிழ் என்பதற்குப் போதுமான சான்று இல்லை.

கல்வெட்டுகளில் தமிழின் முதல் எழுத்துச் சான்று கிடைத்துள்ள கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் பேச்சு மொழியாக இருந்திருக்கும். மொழியின் ஒலியைப் பதிவுசெய்யும் தொழில்நுட்பம் வரும்வரை காற்றோடு போன பேச்சு மொழி எந்த அகச்சான்றையும்  விட்டுப்போக முடியாது. தமிழ் என்று இனங்காணும் நிலையில் உள்ள ஒரு மொழி பேச்சு வழக்கில் இருந்த காலத்தைக் காண்பதற்குத் தமிழுக்கு வெளியே புறச்சான்றைத்தான் தேட வேண்டும்.

இன்று சில தொல்மானிடவியல் ஆய்வாளர்களும் மரபணுவியல் ஆய்வாளர்களும் சேர்ந்து ஒரு நிலப்பரப்பில் வாழும் பல மொழி பேசும் குழுக்களின் மொழி அமைப்பிலும் மரபணு அமைப்பிலும் காணும் ஒப்புமை ஒரு குழுவில் இல்லாமல் போகும்போது, குழுவின் மரபணு அமைப்பை வைத்து, அந்தக் குழுவின் மொழி காலத்தால் முந்தியதா, பிந்தியதா என்று ஆராயத் துவங்கி-யிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி துவக்கநிலையில் இருக்கிறது. (http://www.mpg.de/19395/Language_genetics)  திராவிடமொழி பேசுபவர்களையும் ஆரிய மொழி பேசுபவர்களையும் பற்றி இத்தகைய ஆராய்ச்சி இனிமேல்தான் நடைபெற வேண்டும். இது மொழியியலாளர்கள் மட்டும் செய்யக்கூடிய ஆராய்ச்சி அல்ல. மரபணு ஆராய்ச்சிதான் இதன் அடிப்படை. இந்த ஆராய்ச்சி நடந்தாலும், அது மூலத்= திராவிடமொழியின் காலத்தைக் காட்டலாமே தவிர, தமிழின் காலத்தைக் காட்டாது.

மொழியிலாளர்கள் போன நூற்றாண்டில் மொழியின் அகச்சான்றை வைத்து, ஒரு குடும்பத்தைச் சார்ந்த மொழிகளில் ஒவ்வொன்றும் எக்காலத்தில் மூல மொழியிலிருந்து பிரிந்து தனிப் பேச்சு மொழி ஆனது என்று கணிக்க ஒரு நெறிமுறையை உருவாக்கினார்கள். அதற்குச் சொல்வழிக் காலவரிசை (glottochronology) அல்லது சொல் புள்ளீயியல் (lexical statistics) என்று பெயர். இந்த ஆய்வு நெறியின் கருதுகோள் இது: மொழியில் பிரதிப் பெயர்கள், எண்ணுச் சொற்கள், உறவுச் சொற்கள் போன்ற சில வகைச் சொற்கள் பிற மொழிகளிலிருந்து  கடனாகப் பெறப் படுவதில்லை; அவை ஒரு மொழியின் இயல்பான வளர்ச்சிப் போக்கில் மறைந்தால், மறையும் காலவிகிதம் ஒரு வாய்பாட்டிற்குள் அடங்கும். இந்த வாய்பாட்டால் கண்டுபிடிக்கும் கால விகிதத்தை ஒரே மொழிக் குடும்பத்தின் மற்ற மொழிகளின் கால விகிதத்தோடு ஒப்பிட்டு ஒரு மொழி தனிமொழி ஆன காலத்தைக் கணிக்கலாம். 1970-இல் கமில் சுவலபில் போட்ட கணக்குப்படி, தமிழ் கி.மு. நான்காம் – மூன்றாம் நூற்றாண்டிற்கு இடையில் தனி மொழியானது. அதாவது, மூலத்திராவிட மொழியிலிருந்து காலப்- போக்கில் பிரிந்துவந்த மொழிகளிலிருந்து தமிழ் தன்னை வேறுபடுத்திக்-கொண்டது. மேலே சொன்ன தமிழ் ஆவணச் சான்றின்படி இது தவறான கணக்கு என்பது புரியும்.

இது போன்ற முரண்களாலும், கடன் வாங்காத சொல்வகையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஒப்பிடப் பயன்படுத்தும் அடிப்படைச் சொற்கள் குறைந்துகொண்டு போனதாலும் பேச்சுமொழியின் காலத்தைக் கணிக்கும் இந்த மொழியியல் முறை புறந்தள்ளப்பட்டது.

முதலில் சொன்ன கட்டுரைகளில் மொழியின் காலத்தைக் கணிக்க மொழிக் கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன, இந்த ஆய்வுகளைச் செய்தவர்கள் மொழியியலாளர்கள் அல்ல என்றாலும். இந்த ஆய்வு முறை சொற்களுக்குப் பதிலாக ஒலியன்களின் எண்ணிக்கையை வைத்து மொழியின் காலத்தைக் கணக்கிடுகிறது. இந்த ஆய்வின் நோக்கம் மனித மொழி தோன்றிய காலத்தைக் கண்டறிவது. ஒரு மொழியின் ஒலியன்களின் எண்ணிக்கை மிக மெதுவாகவே, மிகப் பெரிய கால இடைவெளியிலேயே, விரியும் என்பது இந்த ஆய்வின் கருதுகோள். இன்றைய ஆப்பிரிக்க மொழிகளில் ஒலியன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது; குறைந்த ஒலியன்களோடு பிறந்த மனித மொழி இந்த அளவு எண்ணிக்கையில் அதிகரிக்கப் பத்தாயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகும்; அதிகரிப்பைக் கணிக்க ஒரு வாய்பாட்டை உருவாக்கலாம்; அதை வைத்து மொழியின் தோற்றதக் காலத்தைக் கணக்கிடலாம் என்று இந்தக் கட்டுரைகள் காட்ட முயல்கின்றன.

அதே நேரத்தில், இன்றைய மனிதனின் முன்னோடிகள், 100000 – 70000 ஆண்டுகளுக்கு முன்னால், ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து வெளியேறி உலகில் பரவியபோது புதிய சூழலில் அவர்களுடைய சில மரபணுக்கள் மறைவது போல, மொழியின் பரவலில் ஒலியன்கள் மறைகின்றன என்றும் இந்தக்  கட்டுரைகள் கருதுகின்றன. எனவே, ஆப்பிரிக்க மொழிகளின் ஒலியன்களின் எண்ணிக்கையை விடக் குறைவாக ஒலியன்கள் உள்ள மொழிகள் காலத்தால் பிற்பட்டவை என்பது இந்த ஆய்வின் மற்றொரு கருதுகோள். ஒரு மொழியின் ஒலியன் எண்ணிக்கைக்குப் பல காரணங்கள் இருந்தாலும், மேலே சொன்ன ஒலியன் தோன்றும், மறையும் விதி சரியானது என்பது இந்தக் கட்டுரைகளின் வாதம். இது மரபணுவின் தோற்றம், மறைவு விதி போன்ற ஒன்றை ஒலியன்களுக்கு ஏற்றிப் பார்க்கின்ற ஆய்வு முறை. ஒலியன்களின் தோற்றம், மறைவு பற்றிய இந்த வாதத்தை மொழியிய-லாளர்கள் பொதுவாக ஒத்துக்கொள்வதில்லை.. இந்த ஆய்வு முறையின் குறைகளைக் காட்டும் பல கட்டுரைகளை Language Typology என்னும் ஆய்விதழ் (Issue 15, 2011) வெளியிட்டிருக்கிறது.

தமிழின் ஒலியன்களின் எண்ணிக்கை உலக மொழிகளின் சராசரி (40) எண்ணிக்கையை விட பெரிதும் வித்தியாசமானது அல்ல. இந்த எண்ணிக்கையை வைத்துத் தமிழ் காலத்தால் பிந்தியது என்று சொல்ல முடியாது.

குமரிக் கண்டத்திலிருந்து இன்றைய மனிதர்களின் முன்னோர்கள் உலகில் பரவினார்கள் என்பதற்கு விஞ்ஞான ஆதாரம் இல்லை. ஆப்பிரிக்காவிலிருந்து உலகில் பரவிய இந்த முன்னோர்கள் –இவர்கள் இன்றைய மனிதர்களின் மூளைக்கு அடிப்டையான மூளை வளர்ச்சி பெற்றவர்கள்- இந்தியக் கண்டத்திற்குப் பரவிய காலத்தைப் பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகள் இருக்கின்றன. சிலர் இது 50000 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்கிறார்கள்; சிலர் 70000 ஆண்டுகளுக்கு முன் என்கிறார்கள். (http://news.nationalgeographic.com/news/2005/11/1114_051114_india.html). இந்த முன்னோடிகள் ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பிய காலத்திற்கு முன்னரே மனிதனின் மொழி தோன்றிவிட்டது. ஆனால், இந்தியக் கண்டத்திற்கு வந்தவர்கள் என்ன மொழி அல்லது மொழிகள் பேசினார்கள் என்று தெரியாது.

அவர்கள் பேசிய மொழியை, எந்தவித ஆதாரமும் இல்லாமல், வரலாற்றுக் காலத் தமிழுக்கு ஒத்த மொழி என்று எடுத்துக்கொண்டாலும்கூட தமிழின் தொன்மையின் மேல் எல்லை 70000-50000 ஆண்டுகள். ஆனால், தமிழ் என்று இன்று நாம் சொல்லும் மொழிக்கு ஒத்த மொழி இந்தக் கால கட்டத்திற்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னாலேயே தோன்றியிருக்கும்.

பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (46)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *