நாகேஸ்வரி அண்ணாமலை

அப்போது பாலஸ்தீனம் ஆட்டோமான் பேரரசின் அரசராகிய சுல்தான் ஆளுகையில் இருந்தது.  எப்படியாவது சுல்தானைச் சந்தித்து பாலஸ்தீனத்தில் யூதர்களைக் குடியேற்றுவதற்கு ஒரு ஒப்பந்தத்தை (charter) வாங்கிவிட வேண்டும் என்று ஹெர்ஸல் பல நடுவர்களின் வழி முயன்றார்.  ரஷ்யாவில் நிலைபெற்றிருந்த ரஷ்ய சனாதனக் கிறிஸ்துவ அமைப்பு (Russian Orthodox Church) ஒரு போதும் பாலஸ்தீனம் யூதர்கள் வசம் வருவதை அனுமதிக்கப் போவதில்லை என்பதால் ஹெர்ஸல், ரஷ்ய அதிபர் ஜாரின் (Czar) உதவியை நாடாமல் ஜெர்மன் அதிபர் மூலம் சுல்தானிடம் சம்மதம் பெற முயன்றார்.  அந்த முயற்சியும் வெற்றி பெறாததால் தானே சுல்தானைச் சந்தித்து ஆட்டோமான் பேரரசுக்கு இருந்த கடனைத் தீர்க்க உலகெங்கிலுமுள்ள பணம் படைத்த யூதர்கள் உதவுவார்கள் என்று கூறினார்.  ‘நாடு என்னுடையதல்ல.  அது மக்களுடையது’ என்று கூறி அந்தத் திட்டத்தை சுல்தான் ஏற்க மறுத்துவிட்டார்.  மேலும் யூதர்கள் ஆட்டோமான் பேரரசின் குடிமக்களாகி அதன் இராணுவத்தில் பணிபுரிந்தால் ஹெர்ஸலின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறினார்.

இதை ஏற்க மறுத்த ஹெர்ஸல்  பின் பிரிட்டனின் பக்கம் திரும்பினார்.  பிரிட்டிஷ் அரசு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யாவில் (அப்போது கென்யா பிரிட்டனின் காலனியாக இருந்தது) ஒரு இடத்தை யூதர்களுக்கு ஒதுக்கித் தருவதாகக் கூறியது.  தங்களின் புனித இடமான பாலஸ்தீனத்தில்தான் தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்று வற்புறுத்திக்கொண்டிருந்த யூதர்களுக்கு இது பிடிக்கவில்லை.  கடைசியாகப் பாலஸ்தீனத்திற்குப் போவதற்கு இது முதல் படி  என்று ஹெர்ஸல் கூறியதை  மற்ற யூதர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.   ஹெர்ஸல் இத்தாலிய அரசரையும்  போப்பையும் சந்தித்து இது  பற்றிக் கேட்டபோது, யூதர்கள் கிறிஸ்துவ மதத்தைத் தழுவினாலொழிய அவர்கள் பாலஸ்தீனத்திற்குத் திரும்புவதைத் தன்னால் ஆதரிக்க முடியாது என்று போப் கூறிவிட்டார்.  தன் கனவு பலிக்காமலே 1904-இல் ஹெர்ஸல் இறந்துவிட்டார்.  நாற்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகு (இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட பிறகு) அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வியன்னாவில் அவர் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து அவருடைய உடலை இஸ்ரேலுக்குக் கொண்டுவந்து இஸ்ரேலில் உள்ள ஜெருசலேமிற்கு மேற்குப் பகுதியில் இருந்த குன்றில் புதைத்து அந்தக் குன்றிற்கு ஹெர்ஸல் குன்று என்று பெயரிட்டனர்.  யுத்தத்தில் இறந்த வீரர்களைப் புதைக்கும் இடமாக அது இப்போது விளங்குகிறது.

பல யூதர்களின் மனதில் கடவுளால் தங்களுக்கு அளிக்கப்பட்ட இடமான பாலஸ்தீனம் தேனும் பாலும் பாயும் இடம் என்ற எண்ணத்தை உண்டுபண்ணியிருந்தது.  ஆனால்  பாலஸ்தீன் கரடு முரடான, மலைகளும் பாலைவனமும் நிறைந்த இடம்.  இது 1517-லிருந்து ஆட்டொமான் பேரரசின் கீழ் இருந்தது.  மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் இருந்த இதில் யூதர்களும் பாலஸ்தீன அரேபியர்களும் அடுத்தடுத்து வாழ்ந்து வந்தனர்.  1897-இல் முதல் யூத மாநாடு நடந்த போது இங்கு 50,000 யூதர்களும் 4,00,000 அரேபியர்களும் இருந்தனர்.  இங்கிருந்த யூதர்களில் பலர் ஐரோப்பாவில் வாழ்ந்து வந்த வசதிபடைத்த யூதர்கள் நன்கொடையாக அளித்த பணத்தால் எப்படியோ வாழ்க்கையை ஒட்டிக்கொண்டிருந்தனர்.  பின்னால் வெளியிலிருந்து பாலஸ்தீனத்திற்கு வந்த யூதர்கள் தங்கள் புண்ணிய பூமியில் தங்கள் இறைவனை வணங்குவதற்காகவும், முடிந்தால் அந்த மண்ணிலேயே இறந்து புதைக்கப்படுவதற்காகவும் பணத்தோடு வந்தனர்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் பாலஸ்தீனத்திற்கு வந்தவர்களோ அவர்கள் வாழ்ந்த நாடுகளில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அஞ்சி ஓடி வந்தவர்கள்.

ஹெர்ஸல் யூதர்களின் தேசம் நிறுவப்படுவதற்குப் போராடிக்கொண்டிருக்கும்போதே பல நாடுகளிலிருந்தும் யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறிக்கொண்டிருந்தனர்; பல ஸ்தாபனங்களையும் நிறுவிக்கொண்டிருந்தனர்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஜெருசலேமில் 10,000 யூதர்கள் வசித்துவந்தனர்.  1870-இல் போலந்து, லித்துவேனியாவிருந்து வந்தவர்கள் சாஃபேட் (Safed), அக்ரே (Acre), ஜாஃபா (Jaffa) ஆகிய இடங்களில் குடியேறினர்.  ஆட்டோமான் அரசின் ஒப்புதலோடு பிரான்ஸிலிருந்து வந்த ஒரு யூதக் கல்வியாளர் மிக்வா இஸ்ரேல் என்னும் இடத்தில் ஒரு விவசாயப் பள்ளியை நிறுவினார்.  ரஷ்யப் படுகொலையிலிருந்து தப்பித்து வந்த யூதர்கள் விவசாயக் குடியிருப்புகளையும் கிராமங்களையும் நிறுவினர்; பின்னால் பல பள்ளிகளை நிறுவினர்.  இப்படியாக, பல இடங்களிலிருந்து வந்த யூதர்கள் தங்களுக்கென்று பல ஸ்தாபனங்களை நிறுவிக்கொண்டனர்.  இந்த ஸ்தாபனங்களுக்குத் தேவைப்பட்ட இடங்களை பாலஸ்தீனத்திலிருந்த அரேபியர்களிடமிருந்தும் துருக்கியர்களிடமிருந்தும் (துருக்கி ஆட்டோமான் பேரரசின் மையப் பகுதி) வாங்கினார்கள்.  ஹீப்ரு மொழிப் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது.  யூதர்களின் முதல் மருத்துவமனை அரேபியர்களின் துறைமுகமான ஹைபாவில் ஜெர்மனியிலிருந்து பாலஸ்தீனத்திற்குக் குடிபெயர்ந்த ஒரு மருத்துவரால் 1911-இல் ஆரம்பிக்கப்பட்டது.  1912-இல் அமெரிக்கப் பெண்கள் யூத அமைப்பு (American Jewish Women’s Organization), தன் இரு அங்கத்தினர்களை ஜெருசலேமில் ஒரு கிளினிக் ஆரம்பிக்க அனுப்பியது.  அமெரிக்க யூதர் ஒருவர் ஜெருசலேமில் ஒரு மருத்துவமனையை நிறுவப் பணம் கொடுத்தார்.  (1948-இல் இஸ்ரேல் நாடு உருவாக்கப்படும் வரை அமெரிக்காவில் குடியேறியிருந்த பணக்கார யூதர்கள் பாலஸ்தீன யூதர்களுக்கு நிறையப் பண உதவி செய்துகொண்டிருந்தனர்.  ஆனால் இஸ்ரேல் உருவாகி அரை மணி நேரத்திலேயே அமெரிக்கா அதற்கு அங்கீகாரம் அளித்தது.  அதன் பிறகு அமெரிக்க அரசின் பணமும் – அங்குள்ள யூதர்களின் கட்டாயத்தினால் – இஸ்ரேலுக்குக் கிடைக்கத் தொடங்கியது.  இப்போதும் அமெரிக்காவின் ஆதரவும் பண உதவியும் இருப்பதால்தான் இஸ்ரேல் பலம் பெற்று விளங்குகிறது.) 1913-இல் பெண்களுக்கான விவசாயப் பண்ணை தொடங்கப்பட்டது.  1919-இல் ஹீப்ரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.  இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யூதர்களின் தேசிய நிதி (Jewish National Fund) ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது.  இந்த நிதியிலிருந்து பல ஸ்தாபனங்களுக்கு நிதியுதவி கொடுக்கப்பட்டது.

இந்த நிதியிலிருந்து 43 குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன.  அப்போது யூதர்கள் விவசாயிகளாகவும்  விவசாயப் பண்ணைகளில் வேலைபார்ப்பவர்களாகவும் இருந்தனர்.  சிலர் தொழில் வல்லுநர்களாகவும் கடைச்  சொந்தக்காரர்களாவும் இருந்தனர்.  இந்தச் சமயத்தில் பாலஸ்தீனத்தில் யூதர்களின் எண்ணிக்கை 90,000-ஆகப் பெருகியிருந்தது.  யூதர்களின் வரவால் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், தங்கள் நலனைக் காத்துக்கொள்ள பாலஸ்தீனத்திலிருந்த அரேபியர்கள் ஆட்டோமான் அரசியலில் பங்கு பெறத் தொடங்கினர்.  ஜெருசலேமைச் சேர்ந்த இரண்டு அரேபியர்கள் கான்ஸ்டாண்டினோபிளில் இருந்த ஆட்டோமான் பார்லிமெண்டிற்குத் தேர்தெடுக்கப்பட்டனர்.  ஆட்டோமான் அரசும் யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் வருவதைத் தடுக்கப் பல நடவடிக்கைகள் எடுத்தது.  முதல் உலகப் போர் 1914-இல் ஆரம்பித்ததும், பிரான்ஸ், பிரிட்டனுடன் ரஷ்யாவும் ஆட்டோமான் அரசின் எதிரி ஆயிற்று.  பாலஸ்தீனத்தில் அப்போதிருந்த யூதர்களில் பலர் ரஷ்யாவிலிருந்து வந்தவர்களாகையால், ஆட்டோமான் அரசு அவர்களின் மீது வெறுப்பைக் காட்டி அடக்குமுறையையும் அவிழ்த்துவிட்டது.  இதனால் பல யூதர்கள் பக்கத்து நாடான எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில் தஞ்சம் புகுந்தனர்.

யூத சமுதாய நிறுவன இயக்கத்தில்  (Zionist Movement) சம்பந்தப்பட்டிருந்தவர்களை ஆட்டோமான் அரசு நாடு கடத்தியது.  இதனால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்று பயந்த ஜாஃபாவைச் சேர்ந்த யூதர்கள் தங்களுக்குள் ஒரு படையை நிறுவி நேசநாடுகளோடு (பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா) சேர்ந்து போர்புரியத் தயாராகினர்.  ஆட்டோமான் அரசுக்கு எதிராகப் போரிட்டால் தங்களுடைய கோரிக்கையான பாலஸ்தீன நாட்டைத் தங்களுக்கு நேசநாடுகள் உருவாக்கிக் கொடுப்பார்கள் என்று அவர்கள் நம்பினர்.

துருக்கியைத் தோற்கடித்து  மத்திய கிழக்கில் தன் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற பிரிட்டனின் சுயநலமும்  இதற்கு ஒத்துப் போகவே, பாலஸ்தீன யூதர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரிட்டிஷ் வெளிநாட்டு மந்திரி லார்ட் ஆர்த்தர் ஜேம்ஸ் பேல்ஃபர் (Lord Arthur James Balfour), இங்கிலாந்திலுள்ள யூதர்களின் தலைவரான லார்ட் வால்டர் ராத்சைல்ட்க்கு (Lord Walter Rothschild) 1917 நவம்பர் 2-இல் எழுதிய கடிதத்தில் பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு ஒரு தனி நாடு அமைக்க பிரிட்டன் உதவும் என்று கூறினார்.  அப்படி நாடு அமைக்கும் பட்சத்தில் அங்கேயே இருக்கும் யூதரல்லாத மற்றவர்களின் உரிமைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.  இது பேல்ஃபர் அறிக்கை (Balfour declaration) எனப்படும். இருபது ஆண்டுகளுக்கு முன் ஹெர்ஸல் ஆட்டோமான் சுல்தான்களிடமிருந்து இம்மாதிரியான ஒரு ஒப்பந்தத்தைப் பெற முயன்று அதில் தோல்வி கண்டிருந்தார்.  பேல்ஃபர் அறிக்கை, அப்போது பலம் மிகுந்த நாடாக விளங்கிய பிரிட்டனிடமிருந்து வந்ததால் முக்கியம் வாய்ந்ததாக யூதர்களால் கருதப்பட்டது.

இந்த பேல்ஃபர் அறிக்கையின் முக்கிய காரணகர்த்தா செயிம் வெயிஸ்மேன் (Chaim Weizmann).  (இவர் பின்னால் இஸ்ரேலின் முதல் ஜனாதிபதியானார்.)  முதல் உலக யுத்தத்தின்போது ஆயுதங்கள் தயாரிக்கத் தேவையான அசிடோன் (acetone) என்னும் பொருளை ஜெர்மனி கையகப்படுத்திக்கொண்டதால் பிரிட்டனால் ஆயுதங்கள் தயாரிக்க முடியாமல் இருந்தது.  செயிம் வெயிஸ்மேன் என்பவர் ஒரு விஞ்ஞானி என்பதோடு பிரிட்டனில் வாழ்ந்த யூதர்களின் தலைவரும் கூட.  இவருக்கு ஹெர்பெர்ட் சாமுவேல் என்னும் யூத பார்லிமெண்ட் அங்கத்தினர் ஒருவர் நண்பர்.  வெயிஸ்மேன் அசிடோன் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தது பிரிட்டனுக்கு மிகவும் உதவியாக இருந்தது.  அதோடு யூதர்களுக்கு ஒரு சொந்த நாட்டை உருவாக்கினால், அமெரிக்காவிலுள்ள யூதர்கள் அமெரிக்காவை முதல் உலக யுத்தத்தில் கலந்துகொள்ளத் தூண்டுவார்கள் என்றும் பிரிட்டன் கணக்குப் போட்டது.  அதோடு, ரஷ்ய யூதர்கள் ரஷ்யாவில் புரட்சி நடத்தி வந்த போல்ஷிவிக் கட்சியோடு அதிகத் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் அதனால் தொடர்ந்து ரஷ்யா பிரான்ஸோடும் பிரிட்டனோடும் சேர்ந்து முதல் உலக யுத்தத்தில் ஈடுபடும் என்றும் நினைத்தனர்.  இதையெல்லாம் விட இன்னொரு முக்கிய காரணம் யூத இனம், பழைய கிரேக்க இனத்திற்குப் பிறகு தோன்றிய சிறந்த இனம் என்றும், அவர்களுக்கென்று சொந்த நாடு அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றும் அதுவும் பிரிட்டன் அதைச் செய்ய வேண்டும் என்றும் பேல்ஃபரே விரும்பினார் என்பது.

வெயிஸ்மேன் ரஷ்யாவில் 1874-இல் பிறந்தவர்.  பள்ளிப்படிப்பை முடித்த பிறகு வேதியலில்  மேற்படிப்புப் படிப்பதற்காக ஜெர்மனி சென்றார்.  அங்கிருந்து  இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர்  பல்கலைக்கழகத்தில் வேதியல்  பேரசிரியராக வேலை கிடைத்து, இங்கிலாந்து வந்து அங்கேயே குடியுரிமை பெற்றார்.  இவர் இரண்டு முறை உலக யூதர்களின் அமைப்பிற்குத் தலைவராக (1920-1931, 1935-1946) இருந்திருக்கிறார்.

பேல்ஃபர் அறிக்கை  வெளிவந்தபோது 90,000 யூதர்களும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட அரேபியர்களும் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வந்தனர்.  அதாவது ஜனத்தொகையில் 87 சதவிகிதம் அரேபியர்கள்.  பாலஸ்தீனத்திலும் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் வாழ்ந்த யூதர்களுக்கு பேல்ஃபர் அறிக்கை பெரிய வெற்றியாகத் தோன்றியது.  ஆனால் பல பாலஸ்தீன அரேபியர்களுக்கு தங்கள் நாட்டை யூதர்களோடு பங்கு போடுவது பிடிக்கவில்லை.  சுற்றியிருந்த அரபு நாடுகளுக்கும் தங்களுக்கிடையில் யூத நாடு உருவாவது பிடிக்கவில்லை.

1918-இல் பிரிட்டிஷ்  படை ஆட்டோமான் அரசின்  கீழ் இருந்த பாலஸ்தீனத்தை  வென்று ஜெருசலேமிற்குள் புகுந்தது.  பாலஸ்தீனம் முழுவதும் பிரிட்டனின் கைக்கு வந்தது.  இதோடு பாலஸ்தீனத்தில் அது வரை இருந்த ஆட்டோமான் ஆட்சி முடிவிற்கு வந்தது.  பாலஸ்தீனம் பிரிட்டனின் அதிகாரத்தின் கீழே வந்ததும், யூதர்கள் அங்கு சிறுபான்மையினராக இருந்தபோதிலும், ஜெருசலேம் நிர்வாகத்தில் தங்களுக்கு அரேபியர்களோடு சம உரிமை வேண்டுமென்றும், ஒரு யூதர் ஜெருசலேம் மேயராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்க அலுவல்களில் ஹீப்ருவுக்கும் அரேபிய மொழியோடு சம அந்தஸ்து வேண்டும் என்றும் கோரினர்.  (பாலஸ்தீனத்தில் உள்ள ஒரு பழமையான நகரம் ஜெருசலேம்.  இங்குள்ள யூதக் கோயிலில் இருந்த குருமார்களும் செல்வந்தர்களும் ஏழைகளுக்கு எதிராகச் செய்த கொடுமைகளைத் தட்டிக் கேட்ட இயேசுவை இங்குதான் சிலுவையில் அறைந்தார்கள்.)  இந்த உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டாலும், தங்களுக்கு எப்படியும் பிரிட்டன் தனி நாடு அமைத்துக் கொடுக்கும் என்று யூதர்கள் நம்பினர்.  இதற்குப் பிறகு ரஷ்யாவிலிருந்தும் போலந்திலிருந்தும் பல யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு வந்தனர்.  இப்படி வந்தவர்கள் சாலைகள் அமைப்பது, சதுப்பு நிலங்களைச் சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளைச் செய்ததோடு தற்காலிகக் கூடாரங்களில் வசித்துக்கொண்டு, தங்கள் வருமானத்தை எல்லாம் ஒரு மத்திய கமிட்டிக்கு அனுப்பினர்.  இந்தச் சமயத்தில்தான் ஹீப்ரு மொழியை வளர்ப்பதிலும் இவர்கள் ஆர்வம் காட்டி, அம்மொழியில் நிறைய கவிதைகள் இயற்றினர்.  மதச் சடங்குகளில் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வந்த ஹீப்ரு மொழி அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்தப்பட்டு வளரத் தொடங்கியது.  அதன் பிறகு அது வாழும் மொழியாக புனர்ஜென்மம் எடுத்தது.  .

படங்களுக்கு நன்றி:

http://wis-wander.weizmann.ac.il/chaim-weizmann#.UOVSXqxa6RM

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *