Month: February 2013

  • ஜனவரி (2013) மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்!

    வெங்கட் சாமிநாதன்

    எல்லாக் கதைகளையும் படித்தேன். இந்தத் தடவை வந்த கதைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.  நிறைய கதைகள் எழுதி வந்தவர்கள் கூட இம்முறை எழுதவில்லை. ஒரு வேளை ஏமாந்த மனக் கசப்புடன் இருக்கிறார்களோ என்னவோ.

    வந்த கதைகளில் முற்றிலும் திருப்தி அளித்த கதைகள் என்று சொல்லமுடியாவிடடாலும் தமிழில் சாதாரணமாக எழுதப்படாத, சரி, வல்லமையில் சாதாரணமாக எழுதப்படாத விஷயங்களை கையாண்டு பெரும்பாலும் நன்றாகவே எழுதப்பட்டவை என்று சொல்லப்படவேண்டியவை இரண்டு. ஒன்று, அம்மாவின் தேன் குழல் மாதவன் இளங்கோ எழுதியது; இரண்டாவது  நாலடி கோபுரங்கள்  ஜெயஸ்ரீ ஷங்கர் எழுதியது.

    பெரும்பாலும் நன்றாக எழுதப்பட்டவை என்று சொன்னேன். மாதவன் இளங்கோ எனக்கும் ஒரு வேளை வல்லமைக்கும் கூட புதியவர். எங்கோ இருப்பவர். ப்ரஸ்ஸல்ஸும் மயிலாப்பூரும் இணையாதவை. இணைக்க முடியும். ஆனால் இணையாதவர்கள் இரண்டு முனைகளி. நன்றாகத் தான் ஒரு நல்ல விஷயத்தைத் தான் எழுதியிருக்கிறார். ஆங்காங்கே சில வார்த்தைகள், சில வாக்கியங்கள் melodrama வாக இருக்கின்றன. அதைப் பெரிது படுத்த வேண்டாம். போகப் போக சரியாகும்.  கடைசியாக், வரும் சில பாராக்களை ஒதுக்கியிருக்கலாம்.  ”இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தேன  என்னும் வரியோடு கதை முடிகிறது. அடுத்து வருபவை வேண்டாம்.

    ஜெயஸ்ரீ ஷங்கர் கதை இது காறும் அவர் வல்லமையில் எழுதிய கதைகளிலிருந்து  நாலடி கோபுரங்கள் மாறுபட்டது.  தாய் தந்தையரால் கூட உதறிவிடப்பட்ட ஒரு குள்ள மனிதனின் அனுபவங்கள், கேலியும் தனக்கு மறுக்கப்பட்ட வாழ்க்கையும் கூட பாதிக்கவில்லை. அதெல்லாம் சரி. கடைசியில் லிப்டிலிருந்து குழுந்தையைக் காப்பாற்றியது – இது நடக்கலாம் தான் ஆனால் – இது வரை இயலப்பாக எழுதப்பட்டது இங்கு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டது போல தோன்றுகிறது. அதேபோல முன்னரும் கூட தன்னை மாற்றச் சொல்லி கடிதமாக எழுதி ராஜாவிடமே கொடுத்தது. இது மறைவாகச் செய்யப்பட்டது பின் ராஜாவின் காதில் விழுகிறது என்றிருந்தால் அது இயல்பாக இருந்திருக்கும்.

    எப்படியாயினும் இந்த இருகதைகளும் என் தேர்வுகள். மாதத் தேர்வு தானே. அதனால் பரவாயில்லை. இரண்டும் உற்சாகப்படுத்த தகுதி கொண்ட எழுத்துக்கள்.

    இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    வெ.சா.

    இந்த மாதப் போட்டிக்கான சிறுகதைகள்

    1. கண்ணாள் ஓதுகம்

    2. பச்சைக் கிளி

    3. ஆசான்

    4. பட்டி நோம்பி

    5. “வடு”

    6. காதல் கீதை …

     

    7. அம்மாவின் தேன்குழல்

    8. பொய் வாழ்க்கை

     

    9. பலிபீடம்

     

    10. ஆத்ம சாந்தி

    11. நாலடிக் கோபுரங்கள்…!

     

     

    போட்டியில்  வெற்றி பெற்ற திரு மாதவன் இளங்கோ மற்றும் திருமதி ஜெயஸ்ரீ ஷங்கர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.  பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  தொடர்ந்து தங்கள் படைப்புகளை அனுப்புங்கள். பரிசினை வெல்லுங்கள்!

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 4

     

    தேமொழி

     

     

    சூறைக்காற்று மோதினால்
    தோணி ஓட்டம் மேவுமோ
    வாழ்வில் துன்பம் வரவு…சுகம் செலவு…இருப்பது கனவு
    காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்…

    ஆசையே அலை போலே
    நாமெல்லாம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவொமே…வாழ்நாளிலே

    வரிகள்: கண்ணதாசன்

     

     

    << வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 5                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 3>>

    Share
  • சூரியன் வந்து வாவென்ற போது

    மணி ராமலிங்கம்

    எப்படி அந்த வரி வந்து விழுந்தது என்று தெரியவில்லை. விழுந்த அந்தக் கணமே தளை அறுந்த மகிழ்ச்சி. பிரசவ சந்தோசம். ஓவ்வொரு வரியும் பிரசவம்தான்.

    ஓரிருமுறை தனது வரியை உச்சி  மோர்ந்துவிட்டு, தனது சர்வீஸ் டீமுக்கு அதை தாரை வார்த்துக்கொடுத்துவிட்டு, அப்போது அலுவலகம் விடுத்து இல்லம் ஏகுவான்.

    வீட்டில் வளர்ந்து திளைத்து கிடக்கும் சூயஸ்(நாய் பெயர்) தான் அன்றைக்கு அவனின் துணை. அதற்கு தீனி போட்டு இறுக்கி கட்டிக்கொண்டு படுத்து தூங்க முயற்சிப்பான்.

    ஆனால் அவனுக்கு தெரியும், இன்றைக்கு கிடைத்தது பெரிய வெற்றி. அதற்காக மூளை உழைத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. இப்போதைக்கு தூக்கத்திற்கு சூயஸ் மட்டும் போதாது.

    யாருக்கு போன் செய்யலாம் என்று, நினைத்துக்கொண்டிருக்கும் போதே, தர்த்தி போன் செய்தாள். தர்த்தி – சர்வீஸ் டீம் ஹெட். ரவியின் விளம்பர வரிகளை வாடிக்கையாளர் தலையில் தேய்த்து, சரியென்று சம்மதிக்க வைக்க வேண்டும். [Client Approval]

    போனை கிளிக்க,

    “ என்ன பாஸ்.. வரவா.. ? “ தர்த்தி. குரல் குழைந்தது.

    “ஹீம். யா.. “  வயிற்றுக் கீழே பட்டாம்பூச்சி.

    சின்ன மெளனத்திற்கு பிறகு  சொன்னான் “ யா.. தேங்க்யூ.. செல்லம்.. “

    *

    குளித்து முடிந்து, குடித்த  விஸ்கி சூடாக்கிய மெல்லிய  சூடு – ஏசியின் காற்று காமக்கனலை ஊதிப் பெருக்க முனைந்தது. பட்டணத்தாரின் கோமணம் போல ஜாக்கி அணிந்திருந்தான் ரவி.

    தர்த்தி பேசிக்கொண்டேயிருந்தாள். பேச்சு. பேச்சு. அவள் அப்படித்தான். அலை அலையாய் வார்த்தைகள். அதன் ருசி கூட்டும் வியாஞ்ஞானமாய் உடல் மொழிகள்.

    பேசியபடியே ரவியின் கையை தனது இடது மார்பில் வைத்துக்கொள்ள செய்தாள். அவளுக்கு அது பிடிக்கும்.

    ” யூ நோ ரவி.. நான் அந்த லாஸ்டு ஸ்லைடை பிரசண்டு பண்ணினப்போ .. போர்டு ரூமில் எல்லோரும் க்ளீன் போல்டு.. சேர்மேன். எழுந்து நின்றுவிட்டார்… வெரி எக்சைட்டிங்..”

    ரவிக்கு தர்த்தியின் சந்தோசம் பிடித்திருந்தது. தனது தொழிலின் பிடித்த கணங்கள். வெற்றியை சக அலைவரிசை தோழியோடு பகிர்ந்து கொள்ளுதல்.

    “ கிரிக்கெட் பற்றி இப்படி ஒரு லைன், நியூ அவுட்லுக் வந்ததேயில்லைன்னு.. கஸ்டமர் ஷாக் ஆயிட்டாங்க.. அவங்களோடு புராடாக்டுக்கும் அது அப்படியே ஜிங்க் ஆயிருத்து.. எல்லா மீடியா கவரேஜிம் நமக்குத்தான். ”

    தர்த்தியும் ரொம்பவே எக்சைட்டிங்காக இருந்தாள். குதூகலிக்கும்  குழந்தை. இதயம் நடுவில்  மலரும் அன்பு. உடம்பு மலர்த்தும் காம வாசனை.

    மார்பைச் சுற்றி மெல்லிய வளையமிட்டான். அவனித்து எழுந்த தடமுலைகள் இல்லைதான். ஆயினும் எந்த சிந்தனையுமின்றி சந்தோசமாய் அவன் வட்டமிட்டுக்கொண்டிருந்தான். ரவிக்கு அந்தக் கணம் நிறைவாய் இருந்தது.

    ” எப்படி ரவி.. உனக்குன்னு ஐடியா எப்படி இவ்வளவு சூப்பரா வருது.. “ தலைக்குள் கைவிட்டு அழுத்தி முடி இழுத்தாள். கொஞ்ச முன் குடித்திருந்த விஸ்கியால் பறந்து கொண்டிருந்த ரவியின் தலைக்கு வலி சுகம் கொடுத்தது.

    “ It is not game, it is one more religion “ – தான் எழுதிய அந்த விளம்பர வரியை இன்னொரு முறை உதட்டிற்குள் சொல்லிக்கொண்டான்.

    மிகப்பெரிய சந்தோசங்கள் பொங்கும் போது, நுரை பொங்க கிடைக்கும் மைசூர் கபேயின் அடியில் கசக்கும் டிகாசன் போல கல்யாணமாகாத குறை. அப்போது தான் அந்த கவலைக் குமிழ் உடைந்து ரொம்ப நாளாய் உள்ளிருந்து அரிக்கும் கல்யாணக் கவலை.

    அம்மா சொல்லி சொல்லி பார்த்து, அலுத்து தன் கல்யாணம் பார்க்காமல் செத்தும் போய்விட்டாள். தன் சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பங்கு இல்லாவிட்டாலும், தனது தமையன்கள் சென்னையில் ஒண்டிக் குடுத்தினத்தில் இரண்டு குழந்தைகளோடு.

    தான் மட்டும் தனிமரமாய்.

    ஏன் கல்யாணம் ஆகவில்லை, செய்து கொள்ளவில்லை என்று யோசிப்பதை  தவிர்த்தான்.  அந்த எண்ணப்பயணம் எங்கேயும் நிற்பதில்லை. தனது படைப்புகள் கொடுக்கிற ஒருசில மணித்துளிகளின் இன்பத்தை தவிர வேறு எதுவுமே தன்னை பெரிதாய் பாதிப்பதில்லை என்பதை நினைவில் முட்டியது.

    தர்த்தியை இன்று பார்க்க, வித்தியாசமாய் ஒளிர்ந்தாள்.

    தர்த்தி.. எத்தனை உதவியாய் இருக்கிறாள். தான் செய்த எல்லா புராஸக்டுகளிலும் இவள் துணையில்லாமல் செய்திருக்க முடியாது. உடுக்கை இழந்த போதும், இழக்காத போதும் இவள் பலமுறை இடுக்கண் களைந்திருக்கிறாள். இவளின் உதவி திருப்பி கொடுத்து ஈடு செய்ய முடியாதது. அவளின் துணை மகிழ்ச்சி தருவது. அந்த மகிழ்ச்சி வெறும் உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல என்று இருவருக்கும் தெரியும்.

    இவளுக்கு ஏதாவது செய்ய  வேண்டும்.. அவளை இன்னும் புரிந்து கொண்டு,  அவள் என்ன கேட்டாலும் கொடுத்துவிட வேண்டும். ஹீம்.. ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம் ?

    *

    அறையிலிருந்து வெளியே வந்து  சோம்பல் முறித்தாள். முறிந்தது.

    பாந்திராவின் டிசம்பர் மாதக் கடல் குளிர் காற்று. சில்லிட்ட பால்கனி. இருட்டான பால்கனி. அலைச் சத்தம். கண்ணாடிக்  கதவின் வழியே பார்க்க ரவியின்  ஆழ் தூக்கம்.

    ரவி ரிஸி போல நிச்சலமாய் தூங்கிக்கொண்டிருக்கிறான். இந்த உறவில் ஏதோ ஒரு தேவதை தன்மை கூடுவதுபோல உணர்ந்தாள்.

    சில்லிட்ட பால்கனி சேரில் உட்கார்ந்து காலை கம்பியின் மேல் அகட்டி வைத்துக் கொண்டாள்.

    இளகிய இருட்டு. மணி மூணு, மூணரை இருக்கலாம். இன்னும்  கொஞ்ச நேரத்தில் வெளுக்கும் வானம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காலைச் சூரியனின்  ஆரம்ப கணங்கள். சிறிய வயதிலிருந்தே பிடித்திருக்கும் சூரியப் பயித்தியம். எழும், எரிக்கும், விழும் சூரியனோடான காதல் யுக யுகமாய்.

    ஏதோ கொஞ்ச நாளாய் ரொம்ப  ரொம்ப ரொம்ப ரொம்ப .. மகிழ்ச்சியாய். உள்ளுக்குள், வயிற்றுக்கு மேலே நெஞ்சுக்கு கீழே ஏதோ புள்ளியில் ஏராளமாய் பொங்கும் ஆற்றல். அலை அலையாய் சந்தோசம். எதனால் ?.

    அலுவலக வெற்றியா ?, ரவியினால் உடல் மலர்தலா ? நோ வே. (No way) . அது மட்டுமேயிருக்க முடியாது.

    அலுவலக வெற்றி ஒன்றும்  புதிதல்ல.

    ஆறுமாதத்திற்கு முன்பும் இதே போல இன்ஸீரன்ஸ் நிறுவனத்திற்கான  விளம்பரத்தில் பெரிய வியாபார  வெற்றி.  பெருத்த போராட்டங்களுக்கு இடையே கிடைத்த வெற்றி. அன்றைக்கும் இதே போல தானே அழைத்து, தானே கொடுத்து. இடைவிடாத பேச்சு. உடல், அன்பு பரிமாற்றம்.

    உடல் மலர்தலும் புதிதல்ல. ரவிக்கும் முன்னும் உடல் மலர்ந்திருக்கிறது.

    ஆனால், இப்போது சில காலங்களாய் உடலிலிருந்து எழும் பெரு மகிழ்ச்சி அலை அசாதரணமானது. பொங்கி வழிகிற கருணை. தொடர்ந்து ஊறி பல்கி பெருகி நீரூற்றாய் உடைகிற ஆற்றலை, அந்த புள்ளியை அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.

    அந்த ஆற்றலின் புள்ளி அவளை உடலின் ஆதி மலரலுக்கு கொண்டு சென்றது.

    *

    ”  நான் போகட்டுமா.. ”  கை கூப்பியபடி தனக்கு பிடித்தமான அவன் நின்று கொண்டிருக்கிறான்.  சரியான உயரம், மெல்லியதான வெப்பம், கொஞ்சமான காவிக் கலர் உடை. காற்றில்லாத போதும் பறக்கும் மயிர் கற்றைகள்.

    மந்திரம் உண்மையில் பலித்து  விட்டதா.. விளையாட்டு வினையாகி விட்டதா. ரிஸி உள்ளே தூங்கிக்கொண்டிருந்தார்.

    அவனைப் பார்க்க, பார்க்க பொங்கி வழிகிற ஆர்வம். வழுக்கி விழுகிற இதயம். இவனா ஒளி கொடுப்பவன். உலகமே தூயில் எழுந்தவுடன் துதிக்கப்படுபவன். இவனா என் உள்ளம் கவர்ந்தவன்.

    பிடுங்கித் தின்கிற வெட்கம்  மறைந்து அவனை பார்க்க, உடம்பு மலர பிரயத்தனப்பட்டது. முட்டிக்கொண்டு நின்றன மொட்டுக்களின் முனைகள். மண்ணாலான உடலின் உறுப்புகள் , சுரப்பிகள் வேகமாய் இயங்க  தயாராகின.

    மந்திரப்படி அவ்னோடு சேரவேண்டும். சேர்ந்தால், என்னை உதறும் –  கட்டுகள் நிறைந்த உலகம். என் கர்ப்ப பையை கட்டுப்படுத்தும் ராஜாங்கம், நீதி பரிபாலனம். மண்ணாங்கட்டி.

    தடுத்தது – மனத்திலிருந்து பயக்குமிழி. அதற்குள்ளே சமூகம், ராஜ குலம், கட்டுமானம், திருமணம், நற்பெயர், பெண், கொஞ்சம் உயரத்தில் ஆண், கர்ப்பம், தகப்பன், தாய் எல்லாம் கலந்து கட்டி. காற்றில் மெல்ல பறந்து, கலைந்து வெடிக்க, பயம் தன் மீது ஈரமாய் ஒட்டியது.

    அவன் விழி நோக்கின் பயம் தாண்டத் தூண்டும் மனம். உதவியாய் ம்லரும் உடல். இவன் என் தேர்வல்லவா.. என் தேவனல்லவா. நான் விரும்பிய பிரம்ம புருஸனல்லவா..

    மந்திரம் சொல்லியபின்  கூடாமல் போனால், அவன் உடம்பில் பாதி எரிந்துவிடுமாம். நீங்கள் தவறாக அழைத்துவீட்டீர்கள் போல, பரவாயில்லை. மந்திர சாபத்தை உங்களுக்காக நான் ஏற்றுக் கொள்கிறேன். விரும்பிய போது மறுபடி வருகிறேன் என்று கை கூப்பியப்டி சொல்கிறான்.

    அந்த பணிவை ரசித்து  உடம்பில் சுரப்பிகளின் தாளம். மொட்டுகளின் முனை முறிந்து பெண்மை ததும்பல்.

    “ வேண்டாம்.. இரும்.. “ என்றாள்  கம்பீரமாய்.

    அவன் புரிந்து கொண்டான். மெல்லிய நிலவொளியில் அவனின் கையைப்பிடித்து தோட்டத்திற்கு இட்டுச் சென்றாள்.

    அவளுள் சுருண்டிருந்த பாம்புகள் சடக்கென உள்ளே தீ விழித்து  தலை நோக்கி பாய்ந்தன. பெரு மகிழ்ச்சி அலை. வயிற்றுக்கு மேலே நெஞ்சுக்கு கீழே ஒரு புள்ளியிலிருந்து நீரூற்றாய் எழுகிற ஆனந்தம். ஆதி மலரல்.

    அவன் அவளை மானசீகமாய் நமஸ்கரித்து  பக்கம் நெருங்கினான்.

    *

    சுற்று முற்றும் வானம், இருட்டு. தூரத்தில் அலைச்சத்தம். அவள் பிரஞ்ஞை முழுவதும் வெற்று வெளி.  தனது கால்களை திறந்து வானம் நோக்கி வைத்துக் கொண்டாள்.

    இருட்டு கரைந்து, மெல்லிய  நீலமாகி பின் அவன் ரதத்தோடு வரும் பாதையை யாரும் பார்க்குமுன் தான் பார்த்து நிற்பது.  இந்த வானம் அவளுக்கு பழக்கமான பிடித்த ஓன்று.

    அறைக்குள் பார்க்க, ரவி  இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறான். நிசப்தம்.

    தர்த்தி கண்களை மூடிக்கொண்டே யோசிக்க ஆரம்பித்தாள். சில நாட்களாய் சிதைந்த கனவுகள், சில பிம்பங்கள். வேலை அசதியால் இருக்கும் என்று விட்டு விட்டாள். வயிற்றிலிருந்து வருகிற துடிப்பு அல்சரா, இல்லை பிரியட் பிரச்சனையா என்று சந்தேகம். இரண்டும் இல்லை என்று முடிவான பின்பு அதை உற்று நோக்க ஆரம்பித்தாள்.

    உடலும், மனதும் எதற்கோ தான் தயாராகப் போவதை சமிஞ்ஞையிடுவதாக ஒரு எண்ணம் எழுந்தது.

    இப்படியெல்லாம் தான் யோசிப்பதே அவளுக்கு ஆச்சரியம் கலந்த பயம் கொடுத்த்து. வேலை, ஊர் சுற்றல், அடுத்த பதவி, அடுத்த வாடிக்கையாளர், புலன்களால் புது புதிதாய் புலரும் மகிழ்ச்சி என ஓடிக்கொண்டிருக்கும் தான் இப்படி தான் இப்படி யோசிப்பது கொஞ்சநாளில் சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, கனவுகள், வேறு சில சமிஞ்ஞைகள் என்று தான் எங்கோ இழுத்துப் போகப்படுவதாய் நினைத்தாள். நினைவுகளை கலைத்தாள்.

    முயக்கம் முடிந்து இலேசான உடம்பு. அகட்டி வைத்துக்கொண்டிருந்த காலின் வழியே நுழைந்து எல்லாயிடமும் குளிர்படுத்தும் காற்று. வயிற்றிலிருந்து மறுபடி பொங்கிச் சீறிடும் ஆற்றல். கண் மூடி அதையே நோக்கிக் கொண்டிருந்தாள்.

    மெல்லியதான கூச்சம் தொடையில். சின்னதாய் நடுக்கம். ஆதிகால கன்னிமையை யாரோ வருட வரப்போவது போல.. நன்றாகவும், கிளர்ச்சியாகவும் இருந்தது. நிறைய யுகங்களுக்கு முன்னான உணர்ச்சியின் எச்சமாய் அது இருந்தது.  தோட்டத்தில் படுத்திருந்தது போல உணர்வு.

    வயிற்றை தானே தடவிக் கொண்டாள். மேடிட்டு மெல்லிய குற்றவுணர்வை அளிக்கு வயிறு இன்று அப்படியில்லாததை உணர்ந்தாள். சூட்டினால் உடல் ஈரம் துப்பியது. அது இன்னும் சூட்டை கொடுத்தது. தயாராகும் உடல்.

    கிளர்ச்சியா.. இது. ஆனால், இன்னொரு புலனால் எழுகிற கிளர்ச்சி அல்ல. இன்று மலர்கிற கிளர்ச்சி, இதுவரை அறியாத புனிதமான உடல் கிளர்ச்சி.

    சேரில் சாய்ந்து மார்பை, உடையை தளர்த்திக் கொண்டாள். கண்களை மூடிக் கொண்டாள். இளம் வெயில் தனது உடம்பில் சகல பாகங்களிலும் பரவுவதாய் உணர்ந்தாள்.

    திடீரென்று, பிரஞ்ஞையின்  அடியாழத்திலிருந்து தான் அறியாத மொழியிலிருந்து சில  வார்த்தைகள். சூர்யம்.. ப்ரமண்யம்  பகு புத்தார.. தனக்கே புரியாத  வார்த்தைகள். அதுவாக உள்ளிருந்து  எழுந்து, ஆகுதியாய் வளர்ந்து, ஆகுதியில் விழுந்து. அதை  மூன்றாமவள் போல தர்த்தி  பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

    இறுக்கமான உடலில் ஏதோ விசை அழுத்த சுருண்ட தூங்கிக் கொண்டிருந்த பாம்பு மறுபடி எழுந்தது. வாயை திறந்து உணவுக்காக உள்ளே காத்திருக்கத் தொடங்கியது.

    அப்போது தான் அவன் பறந்து வந்து பால்கனிக்குள் ரதத்தில் இறங்கினான். காற்றில்லாத போதும் அலையும் முடிக்கற்றைகள். நமஸ்கரித்து பக்கம் நெருங்கினான்.

    இளஞ் சூடு. இத்தனை காலம், தேங்கியிருந்த யோனியின் யுகக் கசடுகளை நொடியில் சுத்தம் செய்தான்.

    யுக யுகமாய் சூரியனுக்காக காத்திருந்த அந்த யோனியின் இதழ் விரித்து அவளின் கருப்பைக்குள் தன்னிலிருந்து வழித்து எடுத்த சூரிய ஓளி கோப்பையை முழுமையாய், இளம் சூடாய் கவிழ்த்தினான்.  அது அவளின் அகத்தை ஆகர்சித்தது.

    இதற்குத்தானா இவ்வளவும் ?

    *

    உறுதியாய் சொல்லிக் கொண்டாள்.

    அப்போதும் நீயே நான் தேர்ந்தெடுத்த மகன். மண் தேர்ந்தெடுத்த விதை.  நான் விரும்பி, நானே முடிவெடுத்து, என் ஆதி மலரலில் மலர்ந்தவன் நீ. என் முதல் மரம் நீ.

    மற்றவைகளெல்லாம் என் மீது வீசப்பட்டவை தானே. நாட்டுக்காக, போருக்காக என்ற ஏதோ பெயரில்  நான் கட்டாயமாக சுமக்க வைக்கப்பட்டவை.

    இந்த பிறப்பில் நீயும், நானும் நமக்காக மட்டும்.

    எனக்கு – நானாகவே, நான் விரும்பியபடி தாய்மை அடைந்து,  முழுவதுமாய் தாய்மையின் வளர்ச்சியின் ருசி அறிந்து, புழுங்காமல், யாருக்காவுமின்றி எனக்கான கட்டற்ற வாழ்க்கை வேண்டும். பழைய கணக்கின் பள்ளங்களை நிரப்பும் ஆசைகள். கர்மாக்கள்.

    உனக்கு – பிறப்பின் மூலம் தெரிந்து ஒரு முழுமையான வாழ்க்கை வேண்டும். ஒளிவட்டமின்றி, புகழ் புழுக்கமின்றி மெல்லியதாய் தாய் நதியின் பக்கத்திலே ஒடும் ஒரு கிளை நதிபோல.

    வாழ்நாள் முழுவதும் நீ தேடுக்க்கொண்டிருந்தது  உன் முழுமையடையா பெண்மையின் இடப்பாகத்தை தானே.  ஆணின் பெண்மை தேடலின் முதலும், முடிவும் தாயில் தானே புதைந்திருக்கிறது. ஆகவே உனக்கான வாழ்க்கை, தாயோடு மட்டும் தனியாய், தனியனாய். எல்லாமே தாயாய்.

    அள்ளி அள்ளி கொடுத்த நீ அழுது அழுது கேட்ட போதும் கிடைத்தது கொஞ்ச நேர  மடிதானே. அம்பின் வலியோடும், அவமானமாய் பார்க்கிற கண்களை தவிர்த்தும் என் மார்போடிருந்த  ஒரு சில மணித்துகள்களில்  எப்படி முழு வாழ்நாளின் வலியை  கரைப்பது.

    இந்த தடவை இவற்றை கழித்து  விடுவோம். இதிகாசத்தின் கோடிட்டு காலியான இடத்தை நிரப்புவதுதான் இந்த  வாழ்க்கையின் குறிக்கோளோ என்னமோ ?

    ரத்த சீழ் வடிந்த அந்த போர்களத்தில் என் மார்பில் நீ மடிந்த போது உடம்பின் ஆசைகள் உதிர்ந்த ஆன்மாவின் அலறலில்  நாம் வார்த்தைகளின்றி நாம் பேசிக்கொண்டதல்லவா இது.

    கேட்ட்து நீ, நான் மற்றும்  கீழ் வானத்தில் மறைந்து  கொண்டிருந்த உன் அப்பா.

    *

    நன்றாக வெளுத்த விட்ட  வானம். எல்லாம் உணர்ந்து கொண்ட தெளிவான மனம். வயிற்றின் கனம். தானே உணர்ந்து கொண்ட காலச்சக்கரம்.

    What is next, how to execute – யோசித்தாள் தர்த்தி.

    அப்பா பெயரில்லாமல் அவதிப்படாதிருக்க ஒரு பெயர். ரவி. நல்ல பெயர்  தான். ஒரு தொந்திரவு செய்யாத  பெயர் வேண்டும். பொருத்தமாகவும் இருப்பதால் ஒரு சிரிப்பும் வந்தது.

    தூங்கி எழுந்த ரவியைப்  பார்த்து நாம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்க நினைத்த தர்த்தி,

    “ என் குழந்தைக்கு அப்பாவாகயிருப்பாயா.. “ என்று கேட்டாள்.

    ரவி ஆதுரமாய் அவள் கை கோர்த்துக் கொண்டான்.

    Share
  • “ வறு கடலை “

    தமிழ்த்தேனீ

    மிஸ்டர் ரமேஷ் இந்தப் ப்ராஜக்டை  இந்தவாரம் எப்பிடியும்  முடிச்சிருவ்விங்கன்னு  நம்பறேன். இதுக்கு உங்களுக்கு என்ன உதவி வேணுமோ  நீங்க தயங்காம கேளுங்க. ஆனால் முடிக்கணும் சரியா என்று கேட்டுவிட்டு அதில் தனக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாதது போல் சென்ற மேனேஜரைப் பார்த்து சரிசார் முடிச்சிடறேன் என்று கூறிவிட்டு சலிப்புடன் நாற்காலியில் வந்து கம்ப்யூட்டர்  முன் உட்கார்ந்தான் ரமேஷ்

    செல்போன்  அழைத்தது எடுத்து ரமேஷ் ஹியர் என்றான். உடனடியாக அழைப்பு துண்டிக்கப்பட்டது. எண்ணைப் பார்த்தான், தெரிந்த எண்ணாகத் தோன்றவில்லை , யாராவது தவறாக எண் போட்டு அவரை அழைத்திருப்பார்கள்.  செல்போனை வைத்துவிட்டு மீண்டும் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

    உங்களுக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது தேவையானால் உபயோகியுங்கள் ,அல்லது நிராகரியுங்கள்  என்று ஒரு சிணுங்கலுடன் இனிய குரலில் அறிவித்தது  செல்போன் . எடுத்து செய்தியைப் படித்தான், அதில் மன்னிக்கவும்  தவறுதலாக உங்கள் எண்ணைப் போட்டு உங்களை தொல்லைப் படுத்திவிட்டேன். மன்னிக்கவும்   என்றிருந்தது.

    அடேடே  தவறுக்கு வருந்தும் மனிதர்களும்  இருக்கிறார்களே என்று அதே  செய்தியில் அதனால் பரவாயில்லை வருந்தவேண்டாம் என்று எழுதி  செய்தியை திருப்பி அனுப்பினார். செய்தி அனுப்பப்பட்டது  என்று அறிவித்தது .மீண்டும் ஒரு செய்தி  மிக்க மகிழ்ச்சி ,உங்கள்  இணைப்பு எண் மிகவும் மாடர்னாக இருக்கிறதே  நீங்கள் யாரென்று அறிந்து கொள்ளலாமா? என்றிருந்தது.

    மீண்டும் நான் யாரென்று தாராளமாக அறிந்து கொள்ளலாமே ,நான் ஒரு கம்ப்யூட்டர் இஞ்சினீயர்  என் பெயர் ரமேஷ். காக்னிசென்ட் டெக்னாலஜிஸ் சில் வேலை செய்கிறேன் என்று எழுதி அனுப்பிவிட்டு மீண்டும் வேலையைத் தொடர்ந்தான்..

    மீண்டும் ஒரு செய்தி ! அதில்  மிக்க மகிழ்ச்சி நீங்கள் மிகவும் பொறுமையாக பதில் கூறுகிறீர்கள் நன்றி , நீங்கள் எங்கிருக்கிறீர்கள் ?என்று செய்தி கேட்டது.

    நான்  அண்ணா நகரில் இருக்கிறேன், ,இவ்வளவு அக்கரையாக கேட்கிறீர்களே நீங்கள் யார் ,உங்கள் பெயரென்ன?

    என் பெயர் ப்ரவீணா நானும் கம்ப்யூட்டர் இஞ்சினீயர்தான். நான் அடையாறில் இருக்கிறேன்.நான் மேக்னம் கம்ப்யூட்டரில் வேலை செய்கிறேன்.  வேலைக்கு நடுவே சற்றே ஊக்கப்படுத்திக்கொள்ளலாம் என்றுதான் உங்களுக்கு தகவல் அனுப்பினேன், தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் . அடுத்தடுத்து  செய்திகள் பறிமாறிக்கொள்ளப்பட்டன

    அதனால் பரவாயில்லை, உண்மையிலேயே  தலைபிய்ச்சிக்கற வேலைக்கு நடுவுலே இது மாதிரி சின்னச் சின்ன சந்தோஷங்கள் இருந்தால்தான் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும் ,மகிழ்ச்சி.

    அடுத்து செல்லில் அழைப்பு  வந்தது . எண்ணைப் பார்த்தான் ரமேஷ், அவள்தான். மனம் சுறுசுறுப்பாயிற்று.  ஹலோ என்றான் ரமேஷ்

    நான்தான் ப்ரவீணா ,இப்போது  தெரிந்தே சரியாகத்தான் அழைத்திருக்கிறேன்  என்றாள் அவள். .  ஓ மகிழ்ச்சி! உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கு என்றான் ரமேஷ்

    நன்றி, நீங்களும் நன்றாகத்தான் பேசுகிறீர்கள், உங்கள் குரல்லேயும் ஒரு கவர்ச்சி இருக்கு என்றாள் அவள்.

    நன்றி  சற்று நேரம் என்ன பேசுவதென்றே தெரியாமல் சிறு மௌனம். மீண்டும் ப்ரவீணா கலகலவென்று சிரிப்பது கேட்டது. மேலே என்ன பேசுவது என்று தெரியவில்லையா, எனக்கும் அதே நிலைதான். நாம் நேரில் சந்திக்கலாமா என்றாள் அவள்.

    காத்திருந்ததைப் போல  ஓ சந்திப்போமே இன்று  சந்திக்கலாம் மாலை ஐந்து  மணிக்கு, நானும் உங்களைப் பார்க்க  ஆவலாய் இருக்கிறேன் என்றான்  ரமேஷ்.   ஹும்  எங்கே சந்திக்கலாம், நான் உங்களை எப்படி அடையாளம் தெரிஞ்சிக்கறது ?

    நான் இன்று பச்சைக்  கலர் டாப்ஸும் ஜீன்ஸும் போட்டிருக்கேன்.. நீங்கள் என்ன உடை போட்டுக்கொண்டு வருவீர்கள் என்றாள் ப்ரவீணா

    நான் இன்று ஆபீஸுக்கு  வந்திருக்கும் உடையிலேயே  வரேன். கையில் மஞ்சள் நிற வானிடி பேக் வைத்திருப்பேன். காந்தி சிலையருகே நிக்கறேன் என்றாள் ப்ரவீணா..

    மாலை ஐந்து மணி  காந்தி சிலை அருகே ரமேஷ்  சென்ற போது ப்ரவீணா தூரத்தில் தெரிந்தாள் அவன் மனம் உற்சாகமானது.

    அருகே சென்று  வாவ் அழகா இருக்கே  நீ என்றான்  ரமேஷ்.

    தேங்க்யூ ரமேஷ் நீங்களும்தான் என்றாள் ப்ரவீணா வெகுநாட்கள் பழகியதைப் போன்று.

    இருவரும் ஒருவரை ஒருவர் எடைபோட்டுக்கொண்டே  பார்வையால் விழுங்கியபடி அருகருகே அமர்ந்தனர். ரமேஷ்  கொண்டு வந்திருந்த மல்லிகைப் பூவையும் இனிப்பையும் அவளிடம் கொடுத்தான்.

    ப்ரவீணா அவள் கொண்டு வந்திருந்த புத்தம் புது கீ செயினை அவனிடம் கொடுத்தாள் . இருவரும் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர். யுகம் யுகமாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்களைப் போன்ற உணர்வு இருவருக்குமே, சூழ்நிலையே மறந்து போய் இருவரும் ஒருவரில் ஒருவர் லயித்திருந்தனர். ஒருவரை ஒருவர் பார்வையாலேயே விழுங்கிக் கொண்டிருந்தனர். .

    திடீரென்று ஒரு  கூக்குரல், முன்னபின்ன தெரியாத  எவனையாவது விவரமே தெரியாம  காதலிக்க வேண்டியது, அப்புறம் அவன் கைவிட்டுட்டான்னு  இப்பிடிக் கடல்லே விழுந்து தற்கொலை செஞ்சிக்க வேண்டியது,

    வரவர விவஸ்தையே  இல்லாம போச்சு நாடு. ஒரு நாளாவது  நம்மை நிம்மதியா இருக்க விடறானுங்களா  இந்தக் காலத்துப்  பசங்க. அவங்க கல்யாணம் செஞ்சிகிட்டு  தாலிகட்டிக்கிட்டு அந்த்த் தாலியை மதிக்கறாங்களோ  இல்லையோ  நம்ம தாலியறுக்கறானுங்க.

    பெத்தவங்க இப்பிடியே  கவனிக்காம விட்டுட்டு அப்புறம் அய்யோ  போச்சேன்னு கதர்றாங்க. கவனிக்க வேண்டிய காலத்திலே  கவனிக்காம அப்புறம் வாயிலே வயித்திலே அடிச்சுகிட்டு  என்னா ப்ரயோசனம் என்று முனகியபடி , 507   பொதுமக்களை  தள்ளிப் போகச்சொல்லுயா கூட்டம் போடவேணாம் . அப்புறம் ஏதாவது முக்கியமான தடையம் காணாமப் போயிடும் என்றார் காவல்துரை அதிகாரி கேசவன்.

    அந்த போட்டோ கிராபரை நிறைய கோணத்திலே படம் எடுக்க சொல்லுய்யா,  வேன் வந்திருச்சா, போட்டோ எடுத்தப்புறம் ஏதாவது தடையம் கிடைக்குதான்னு பாரு, யாரு ,எந்து ஊருன்னு கண்டுபிடிக்கலாம் , சே  என்னா பொழைப்புய்யா இந்தப் போலீஸ்காரன் உத்யோகம் ,ஒரு நாளாவது ஒழுங்கா வீட்டுக்கு சரியான நேரத்திலே போக முடியுதா?.பொண்டாட்டி புள்ளை குட்டிகளைக் கவனிக்க முடியுதா? என்று சலித்துக்கொண்டே வேலையைத் தொடர்ந்தார் அவர்.

    ப்ரவீணா ரமேஷிடம் குனிந்து ரகசியக் குரலில்   இங்கே இருந்து போயிடலாம் ,அதோ அந்தப் போலீஸ்காரர் என் அப்பா என்றாள் .

                                  சுபம்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (43)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    மனிதன் தோன்றிய காலம் முதல் இன்றுவரை அவனுடைய சரித்திரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. கலாச்சாரம், மொழி, வாழ்க்கைமுறை என்று பலதரபட்ட மாற்றங்களுக்குள்ளாகிய சரித்திரம் மனித சரித்திரம் என்பதுவே உண்மையாகும்.

    அத்தகைய மாற்றங்களுக்குட்பட்டதொன்றே தற்கால போக்குவரத்து முறைகளாகும். இத்தகைய முன்னேற்றங்களில் முன்னிடம் வகித்தது மேலைத்தேசங்களில் இங்கிலாந்து என்று சொன்னால் மிகையாகாது.

    2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி இங்கிலாந்து தேசத்தின் போக்குவரத்து முன்னேற்றம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும்.

    என்ன அது ? அப்படி அது என்ன பெரிய சாதனை ? உங்கள் கேள்வி புரிகிறது.

    “London Underground ” இலண்டன் நிலத்துக்குக் கீழான சுரங்க இரயில் சேவை ஆரம்பித்து அன்று 150வது வருடமாகும். ஆமாம் லண்டனின் முதலாவது சுரங்க ரயில் ஓடத் தொடங்கியது 1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதியாகும்.

    இன்றைய லண்டன் “சுரங்க இரயில் ” இன்றி இயங்க முடியாது எனும் நிலையை எட்டியுள்ளது. இச்சுரங்க இரயில் மூலம் தமது அன்றாடப் பய்ணங்களை தமது வேலைத்தளங்களுக்கு மேற்கொள்ளும் பிரயாணிகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    நான் இங்கிலாந்தில் காலடி வைத்து இப்போ 37 வருடங்கள் ஓடி விட்டன. நான் மாணவனாக லண்டனில் வலம் வந்த நேரம் இரவு நேரங்களில் பகுதி நேர காவலாளியாகப் பணிபுரிந்து விட்டு பகல் பொழுதுகளில் கல்லூரி செல்ல வேண்டிய நிலை அப்போது.

    18/19 வயதுகளில் மிதந்த நான் அன்று எனது வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள உதவியது இந்த இலண்டன் சுரங்க ரயில் சேவையே. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு விரைவாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய தேவை இருந்த நேரத்தில் இந்த ரயில் சேவையின் மகத்துவம் புரிந்தது.

    லண்டனில் வாழ்ந்த சார்ள்ஸ் பியர்சன் என்பவரின் வாழ்க்கைக் காலம் 1793 தொடக்கம் 1862 வரையுமாகும். இல்ண்டனில் ஒரு நிலத்துக்குக்கீழான சுரங்க இரயில் சேவை அமைப்பதை கற்பனையில் உருவாக்கியவர் இவரேயாகும்.

    இவரது கனவுக்கு செயலாக்கம் கொடுக்கும் பணி 1817 தொடக்கம் 1898 வரை வாழ்ந்த ஜான் வவுலர் என்பவருக்கு அளிக்கப்பட்டது.

    இத்திட்டம் செயல்வடிவம் கொடுக்கப்பட்டது 1860ம் ஆண்டு  பெப்பிரவரி மாதம் ஆகும். ஜான் வவுலர் இத்திட்டத்தை செயல் வடிவப் படுத்தத் தொடங்கினார். ஆனால் இது முழு வடிவம் பெற்ற போது இதக் கற்பனையில் தீட்டிய சார்ல்ஸ் பியர்சன் உயிருடன் இருக்கவில்லை.

    மெட்ரோபொலிட்டன் சேவை என அழைக்கப்பட்ட முதலாவது லண்டன் சுரங்க இரயில் சேவை படிங்டன் Padington)  எனும் இடத்திற்கும் பரிங்டன் (Farringdon) எனும் இடத்திற்கும் இடையில் முதன் முதலாக 1863ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் நீளம் நான்கு மைல்களாகும்.

    இச்சேவையின் பரீட்சார்த்த ஓட்டம் அன்று முடிவுற்றதும் அடுத்த நாளே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இச்சேவை ஆரம்பித்து சில மாதங்களில் நாளொன்றிற்கு சுமார் 26000 பயணிகள் இச்சேவையை உபயோகித்தார்கள்.

    இச்ச்சேவை பிரத்தியேக கம்பெனியின் நிதி உதவியுடனேயே முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.

    1884ம் ஆண்டு உள்ளடங்கிய வட்டத்தில் சுமார் 800 சுரங்க இரயில்கள் ஓடின என்று கூறப்படுகிறது. இச்சுரங்க இரயில்களுக்கான நிலத்துக்குக் கீழான சுரங்கமைப்புக்கான யோசனை 1840ம் ஆண்டளவில் தேம்ஸ் நதிக்குக்கீழாக சுரங்கப்பாதை அமைத்த பொறியியலாளர் ப்ரூனல் என்பவரின் செலாக்கத்தினாலேயே உருவானது எனப்து குறிப்பிடத்தக்கது.

    முதலாவது இலவச சுரங்க இரயில் பாதைக்கான வரைபடம் 1908ம் ஆண்டே வழங்கப்பட்டதாம். முதலாவது உலக மகாயுத்தத்தின் போது ஆண்கள் ஆனைவரும் இராணுவத்தில் இணைந்ததினால் ஏற்பட்ட ஊழியர் பஞ்சத்தைத் தீர்க்கவே இச்சுரங்க இரயில் சேவையில் முதன்முதலாக பெண்கள் இணைக்கப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

    இச்சேவையின் முக்கியத்துவத்தை அதை உபயோகித்து அனுகூலத்தை அனுபவித்தவன் எனும் வகையில் நான் பெருமையுடன் நினைவு கூறுகிறேன். இத்தகைய கண்டுபிடிப்புகள் மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு ஈடர்ன வகையில் சேவையாற்றியிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • சிந்தையால் கேள்

    வருணன்
    
    ஓலமிடும் தரணியின் 
    துயர் துடைக்க
    சிறியன் நான் என் செய்வேனென
    திகைக்கிறாயா நண்பா?
    
    ஒன்றுமில்லை
    குருவியின் தலையில்
    பனங்காய் சுமக்கத்
    தேவையில்லை.
    
    இயன்றதைச் செய்தாலே
    இவ்வுலகம் பிழைத்திடும்.
    
    கசக்கி எறிந்து வீணடிக்கும்
    ஒவ்வொரு காகிததிலும்
    ஒரு மரக் கிளையின்
    கண்ணீர் துளியின்
    பிசுபிசுப்பு உணர். 
    
    விசிறியடிக்கும்
    ஒவ்வொரு ஞெகிழிப் பையும்
    பூமித் தாயின் மூச்சுக் குழாய்
    அடைக்கிறது.
    புரி!
    
    நிறைய கனவு காண்
    கள்ளமில்லா காற்று
    மாசில்லா நீர்நிலை 
    கருஞ்சாலை நதியின்
    கரையெங்கும் 
    நிழல் காய்க்கும் மரங்கள்…
    
    கனவோடு நில்லாதே 
    காரியம் கெடும்.
    முயற்சி வடம் பிடித்து
    கனவுத் தேர் இழு !
    
    விதைகளைப் பதியனிடு
    எதிர்காலம் விருட்சமாகும்.
    
    உன் சந்ததியின்
    உயிர் துடிப்பை
    தளிர்களின் சலசலப்பில்
    கேள் !
    
    தோழா !
    போகிக்குக் கொளுத்திட
    குப்பைகள் 
    மண்டிக் கிடக்கிறது ஏராளமாய்
    மனவீட்டின் கொல்லையில்…
    
    பின் எதற்கு தெருக்களில்?
    சிந்திப்பாய் …!
    
    படத்துக்கு நன்றி
    http://www.novadesk.com/go-green-with-nova/ 
    Share
  • வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போமா! (1)

    பவள சங்கரி

    ’நாம்’ நாமாகவே இருப்பதற்கு நம் எண்ணங்களே காரணம். நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் நம்மை நல்வழிப்படுத்தி, வெற்றிக்கனியை எட்டிப் பறிக்கச் செய்யும் என்ற நம்பிக்கை உடையவர் நீங்கள் என்பது உண்மையானால் இத்தொடர் உங்களை அக்காரியத்தை மென்மேலும் ஊக்குவிக்க வல்லது என்பது சத்தியம். நம்பிக்கை என்ற ஒன்றே வாழ்க்கையில் நம்மை உயரத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது. நம் எண்ணங்கள் மேம்படும்போது நம் வாழ்க்கைத் தரமும் உயரும். நம் எண்ணங்களை எப்படி மேம்படுத்தப் போகிறோம் என்பதையே இத்தொடரில் விவாதிக்கப் போகிறோம். நல்ல எண்ணங்கள் மட்டுமே நம் சுய வல்லமையை ஊக்குவிக்கும் ஒரு உன்னத காரணி.

     உறுதியான எண்ணத்தால் உயர்ந்து நிற்போம்!

    நற்சிந்தையாலும், நல்ல ஆரோக்கியத்தினாலும், நல்லொழுக்கத்தினாலும் உயர்ந்து நிற்பதால் வெற்றிக்கான அடித்தளத்தை உறுதியாக்கிவிட்டோம் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது இடையில் வரும் தடைகளை எளிதாகத் தகர்த்தெறியும் வல்லமை பெறுகிறோம். இதனால் உங்கள் பயணத்தில் அன்பைத் தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் எவருக்காகவும் நீங்கள் தலை வணங்கத் தேவையில்லை..

    முதலில் நம் உடலளவில் உயர்ந்து நிற்போமே. ஒரே ஒரு உடல் மொழியால் ஓராயிரம்  எண்ணங்களை உணர்த்தக்கூடும். அத்தகைய உடலை முதலில் சரியாகக் கையாள வேண்டியது அவசியம். முத்ற்பார்வையிலேயே வெளித்தோற்றம் மட்டுமே ஒருவரை எடை போடச் செய்கிறது. கருப்போ, சிகப்போ, நெட்டையோ, குட்டையோ, செல்வந்தரோ, வறியவரோ எவராயினும் நம் புறத்தோற்றம் எப்படி இருந்தாலும், நாம் அதை வெளிப்படுத்தும் விதமே நம்மைப் பற்றிய மதிப்பீட்டை உருவாக்குகிறது.

    தன்னம்பிக்கை உடைய ஒருவர் தம் தோற்றம் மூலமே அதனை எளிதாக அடுத்தவரை உணரச் செய்ய முடியும். வளைந்து, நெளிந்து, கூனிக் குறுகி ஒருக்காலும் நிற்க மாட்டார் தன்னம்பிக்கை உடையவர். பாரதியின் நிமிர்ந்த நன்னடை பார்த்தவுடன் மரியாதை அளிக்கக்கூடிய தோற்றப் பொலிவைக் கொடுக்கக் கூடியது. அந்த நிமிர்ந்த நன்னடைக்கு மனதில் நம்பிக்கை வேறூன்றியிருக்க வேண்டும். அந்த நம்பிக்கைக்கு அச்சாரம் என்பது நேர்மையும், சுய கட்டுப்பாடும், உண்மையான உழைப்பும்தான்.

    தெருவோரத்தில் மசாலாப் பொறிக்கடலை கடை போட்டு பிழைப்பு நடத்தும் ஒருவர், சுறுசுறுப்பான வியாபார நேரத்தில், பம்பரமாய்ச் சுழலுகிறார். ஒரு பாத்திரத்தில் இரண்டு கை பொறியை அள்ளிப்போட்டு அதில் துருவிய கேரட், பீட்ரூட், கொத்தமல்லி இலைகள், கொஞ்சம் புதினாத் தொக்கு, எல்லாம் போட்டு, இறுதியாக மசாலாப் பொடியும், மிளாகய்த்தூள், உப்பு கலந்த கலவையையும் அப்படியேத்தூவி, அதன் மீது சிலத் துளிகள் எலுமிச்சைச் சாறும் தெளித்துக் கொடுப்பார். சுவையான சுவைதான் போங்கள். நாம் இங்கு அந்தச் சுவையில் மெய்மறந்து இருக்கும் போது, அந்த வழியாகக்  கடந்து போகும் ஒரு இரு சக்கர வாகன ஓட்டியின் கண்களில் பறந்து போய் விழுந்த அந்த மிளகாய்ப்பொடி படுத்திய பாடு, மனிதர் ஒரு பெரிய விபத்திலிருந்து தப்பி வந்தார் பாவம். இதை அறியும்போது அந்த மசாலாப்பொறிக் கடைக்காரர் எப்படி நிமிர்ந்த நன்னடையுடன் நடமாட இயலும். அவர் தூவும் அந்த மசாலாப் பொடிகள் அடுத்தவரின் பார்வைகளை பதம் பார்க்காதவாறு ஒரு மறைப்பான் வைத்து தம் சமுதாய அக்கறையை வெளிப்படுத்தியிருந்தால் அவர் அடுத்தவர் முன்போ, தம் மனசாட்சியின் முன்போ கூனிக்குறுகி நிற்க வேண்டியதில்லை. அடுத்தவர் வந்து முறைப்படுத்த வேண்டும் என்று எண்ணாமல் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டாலே தலை நிமிர்ந்து நிற்கலாமே.

    தூக்கணாங்குருவிக் கூட்டைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு பெருத்த ஆச்சரியமாக இருக்கும். மரத்திலோ, குட்டிச் சுவற்றிலோ, கிணற்றினுள்ளோ,  அப்படியே தொங்கிக் கொண்டிருக்கும் அதை அது எப்படித்தான் கட்டியிருக்குமோ என்று. எத்தனை பொறுமை வேண்டும். ஒவ்வொரு புல்லாகக் கொண்டு வநது கீழே விழுந்தாலும் மீண்டும், மீண்டும் பொறுக்கி எடுத்து கூடாக்கிவிடும். காற்று பலமாக வீசினாலும், ஆடுமே தவிர அறுந்து விழாது. ஒரு சின்ன குருவிக்கு இருக்கும் அந்த வல்லமை ஆறறிவு படைத்த நமக்கு இல்லாமலா போகும்?

    தொடரும்

    படத்திற்கு நன்றி :

    http://www.great-inspirational-quotes.com/stand-tall-like-the-sunflower.html

    Share
  • மறியிடைப் படுத்த மான் பிணை….

    முனைவர். ப. பானுமதி


    காலம் வெகுவாக மாறி விட்டது. ஒரு காலத்தில் தமிழ்ச்சமுதாயம் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தது. ஒரு பெரிய கூடம் (ஹால்) இருக்கும். குறைந்தது 20 பேரை நிம்மதியாகப் படுத்து உறங்க வைக்கும் கொள்ளளவு அந்தக் கூடத்திற்கு இருக்கும். ஒரே நேரத்தில் முப்பது அல்லது 40 பேருக்குப் பந்தி வைக்க வேண்டும் என்னும் கொள்கை அளவும் அதற்கு இருக்கும். இதை பட்டாசாலை என்று கூறும் வழக்கம் இருந்துள்ளது. இதற்கு அடுத்து அங்கணம் என்று கூறப்படும் சின்ன பட்டாசாலை ஒன்று இருக்கும். இதிலும் சுமார் 20 பேர் படுக்கலாம். இது இன்னும் சில வீடுகளில் நிலா முற்றம் எனப்படும் நிலவொளி உள்ளே விழும் அமைப்பில் கம்பிகள் மட்டும் மேற்கூறையாகப் போட்டு அமைந்திருக்கும்.

    இவை தவிர, ரேழி ஒன்று இருக்கும். முன்னறைக்கும் வாசலுக்கும் இடைப்பட்ட பகுதியைத்தான் ரேழி என்று கூறுவது வழக்கம். அறை என்று சொன்னால் பொதுவாக ஒன்றோ இரண்டோ அறைகள் சின்னஞ்சிறிய அளவில் இருக்கலாம். ஒன்று அந்த வீட்டு மாப்பிள்ளை வந்தால் தங்க வைப்பதற்கு. மாப்பிள்ளைகள் வந்தால்….? கூடி கும்மாளம் அடிக்க வேண்டியதுதான். மற்றொன்று சாமான்கள் வைக்கும் ஸ்டோர் ரூம். மற்றபடி சமையல் அறை ஒன்று பெரிதாக இருக்கும். ஒத்தார் ஓர்ப்படிகள் ஒன்றாய்க் கூடி கும்மியடிக்கும். தப்பு தப்பு சமையல் செய்யும் இடம்.

    ஆமாம் இப்போது எதற்கு இந்த வாஸ்து சாஸ்திரம் என்று கேட்கத் தோன்றுகின்றதா? தோன்றவில்லை என்றால் நீங்கள் ஏதோ இயந்திரத்தனமாக இந்தக் கட்டுரையைப் படிக்கத் தொடங்கி உள்ளீர்கள் என்று பொருள்.

    சங்க இலக்கிய மான் குடும்பத்துக் காட்சி ஒன்றை இப்போது கூறுவது இக்கட்டுரைப் பொருளுக்குப் பொருத்தமாக இருக்கும். தமிழில் எதைச் சொல்லப் புகுந்தாலும் சங்கத்தில் இருந்து எடுத்துக்காட்டிச் சொல்வது தமிழுக்குப் பெருமை என்பதை விடவும் அதைச் சொன்னவருக்கே பெருமை அதிகம் . “எத்தனைதான் தேக்கு இருந்தாலும் பர்மா தேக்கு போல வராது என்பார்கள். அது போலத்தான் பக்தித்தமிழ், பாமரத்தமிழ், இலக்கியத்தமிழ் என்று பல சொன்னாலும் சங்கத்தமிழ் என்பதில் உள்ள பெருமை மற்ற எதிலும் இல்லை” என்று பேரா. தி. இராசகோபாலன் சொல்வார். விளக்க முற்படும் எந்தச் செய்திக்கும் சங்கச் சான்றே தங்கச் சான்றாக ஒளிவீசும் என்பதில் ஒருவருக்கும் ஐயம் இருக்காது. உயர் மதிப்பையும் அள்ளித் தருவது. தமிழனின் அறவியல், அறிவியல், உடலியல், உளவியல் நுட்பத்தை எடுத்துக் கூறும் சான்றுகளின் கருவுலமும் அதுவே எனலாம்.

            தான் காதலித்த தலைவனோடு உடன் போக்கு சென்று விடுகிறாள் தலைவி. அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்து விடுகின்றது. அப்போதும் அவளது தாயும் தந்தையும் அவள் மீது கோபத்துடன் இருக்கின்றனர். ஆனால் அவளை வளர்த்தச் செவிலித்தாயால் அப்படி இருக்க இயலவில்லை. அவள் சென்று தலைவியைப் பார்த்துவிட்டு வருகிறாள். தான் கண்டு வந்த காட்சியைச் சொன்னால் நற்றாய் மனம் மாறி, தலைவி மீது கொண்டுள்ள சினத்தை மாற்றிக் கொள்வாள் என்று நினைக்கிறாள். தலைவியின் கடிமனைக்குச் சென்று வந்த செவிலி உவந்த உள்ளத்தினளாய் நற்றாய்க்குப் பின்வருமாறு கூறுகிறாள்.

                    மறியிடைப் படுத்த மான்பிணை போல,

    புதல்வன் நடுவணன் ஆக நன்றும்

    இனிது மன்றஅவர் கிடக்கை; முனிவின்றி

    நீல் நிற வியலகம் கவைஇய

    ஈனும் உம்பரும் பெறலருங்குரைத்தே!

    காட்டில் குட்டியை ஈன்ற காதல் மான்கள், குட்டி இடையில் படுத்திருக்க அதனைத் தழுவிக் கலைமானும்(ஆண்மான்) பிணை மானும் (பெண்மான்) படுத்திருக்குமாம். அது போல, புதல்வன் நடுவே படுத்திருக்க, அவனைத் தழுவியவாறு தலைவனும் தலைவியும் படுத்திருக்கும் காட்சி இனிமையானது. பரந்து விரிந்த நீல வானத்தைத் தழுவிக்கொண்டிருக்கும் இந்த மண்ணுலகத்திலும் இதற்கு அப்பாற்பட்ட தேவர் உலகமாகிய விண்ணுலகத்திலும் இந்தக் காட்சி கிடைப்பது அரிது என்று கூறுகிறாள். இதில் தலைவன், தலைவி இருவரும் தம் குழந்தை மீது கொண்ட காதலை விளக்குகிறாள். இருவரது அன்பையும் பற்றி கூறுகிறாள். அப்போதும் மனம் மாறாத நற்றாயைப் பார்க்கிறாள். மற்றொரு காட்சியையும் கூறுகிறாள்.

    “புதல்வன் கவையினன் தந்தை; மென்மொழிப்                                          புதல்வன் தாயோ இருவரும் கவைஇயினள்

    இனிது மன்ற அவர் கிடக்கை

    நனி இரும் பரப்பின் இவ்வுலகுடன் உறுமே”

    உன் மகள் எப்படிப் பட்ட தாயாக இருக்கிறாள் தெரியுமா? தலைவன் தன் புதல்வனாகிய உன் பேரனைத் தழுவியபடி படுத்திருக்கிறான். உன் மகளோ தான் ஈன்றெடுத்த மகனான உன் பெயரனையும் தன் காதல் தலைவனையும் ஒரு சேர ஒரு தாயாக தழுவிக்கொண்டு படுத்திருக்கிறாள் என்னும் கருத்து தொணிக்கப் பாடுகிறாள். அப்போதும் சினம் தணியாத தாய்க்கு அங்கு அரங்கேறிய மற்றொரு காட்சியையும் படம் பிடிக்கிறாள்.

    புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி

    நசையினன் வதிந்த கிடக்கை, பாணர்

    நரம்பு உளர் முரற்கை போல

    இனிதால் அம்ம! பண்புமார் உடைத்தே!

     

    இப்போது புதல்வனை அரவணைத்துக் கொண்டு படுத்திருக்கிறாள் தலைவி. அவளின் முதுகுப் புறத்தைத் தழுவி, விருப்பத்தோடு படுத்துக் கொண்டிருக்கிறான் தலைவன். அவர்களை அவ்வாறு காண்பது மிகவும் இனிய காட்சி. அது பாணர்கள் தங்கள் யாழின் நரம்புகளை மீட்டி இசைக்கும் இசையைப் போல இனியது; மிகுந்த பண்பும் உடையது” என்கிறாள். இப்படிப் பட்ட அழகொளிரும் இல்லறக் காட்சிகளை அமைக்கிறார் பேயனார் என்னும் சங்கத் தமிழ்ப் புலவர்.

    பூனைக் குட்டிகளைப் பாருங்கள். தாய்ப்பூனை அருகில் இருக்கும்போது பாதுகாப்பு உள்ளது என்னும் உணர்ச்சியில் அச்சமற்று நன்கு உறங்கும். தாய்ப்பூனை வெளியில் சென்றிருக்கும்போது அவை அச்சத்துடன் திரு திருவென விழித்துக் கொண்டிருக்கும்.

    ஐந்தறிவே உள்ள மான்கள் தங்கள் குட்டியை அணைத்துக் கொண்டு படுக்கின்றன என்கிறது முதல் பாடல். வீட்டு விலங்குகளான பூனை, நாய் முதல் சிங்கம், புலி முதலிய விலங்கினங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பருவம் வரைத் தம் மக்களைத் தனியாகப் படுக்க வைப்பதில்லை.

    நம் பண்டைய பண்பாட்டுத் தமிழர்கள் தங்கள் குழந்தையைத் தனியாகப் படுக்க வைத்ததில்லை. ஒரு வேளை செல்வந்தர்களின் இல்லங்களில் இணையர் தனியறையில் படுக்க நேர்ந்தால் அவர்களின் குழந்தைச் செல்வங்கள் பாட்டன், பாட்டியுடன் கதை கேட்டு, பாட்டுக் கேட்டு மகிழ்வாகப் படுத்துறங்கும்.

    கூட்டுக் குடும்பம் நலிந்து தனிக்குடும்பம் மலிந்த, நாகரிகத்தில் முற்றிப்போன இன்றைய சமுதாயத்தில் தனியறையில் குழந்தைகளைப் படுக்க வைப்பதும் மலிந்து போனது. எட்டுக்கு எட்டு அறை ஒன்றில் குழந்தையையும் அதற்கென ஒரு கணிப்பொறி மற்றும் இத்யாதி இத்யாதிகளையும் வாங்கி அடைத்து விடுகின்றனர். அணைப்பாரற்ற அந்தக் குழந்தை அன்பு, பாசம் என்னும் ஏக்கத்தால் மூச்சு முட்டியபடியே உறங்குகிறது. உயிர் வாழ்கிறது.

    இதனினும் பெருங்கொடுமை மகிழ்வுந்துப் பயணம். இப்போதெல்லாம் அம்மாவும் அப்பாவும் வெளியில் செல்கின்றார்கள் என்றால் குழந்தைகள் வரமாட்டேன் என்று அடம் பிடிக்கின்றன.  காரணம் காரில் முன் இருக்கையில் கணவனுடன் மனைவிதான் அமர வேண்டும். இது இன்றைய நாகரிகம். அதாவது கணவரது எஜமானியாம் மனைவி. அவர்கள் இருவரும் பாட்டுக் கேட்டுக்கொண்டோ, அல்லது ஆங்கிலத்தில் பேசிக்கொண்டோ தம் குழந்தையைச் சட்டை செய்யாமல் முன்பக்க இருக்கைகளில். அந்தக் குழந்தையோ பின் இருக்கையில் சோர்ந்த வாடிய முகத்துடன் ஜன்னலில் இருந்து வெளியே வெறித்துப் பார்த்தபடி.

    இந்நிலையில் அக்குழந்தைக்கு எப்படி மன ஆரோக்கியம் இருக்கும்? அக்குழந்தையின் உலகம் எந்திரங்களாக ஆன பின்பு அக்குழந்தையும் பாசம், பந்தம், அன்பு, கருணை, இரக்கம் என்னும் நற்பண்புகள் எதனையும் புரிந்து கொள்ள முடியாத எந்திரமாகவே ஆகிவிடுகின்றது. அதனால் எதிராளியின் துன்பத்தைக் கூடப் புரிந்து கொள்ளவோ, உதவவோ முடியாமல் போய்விடுகின்றது. சற்று அழுத்தமாகக் கூறவேண்டுமென்றால் எதிராளியைத் துன்புறுத்துவதும் கூடிப் போகிறது என்று கூறலாம்.  குழந்தைகள் வளரும்போது இக்குணமும் படிப் படியே வளர்ந்து வன்முறையாளர்களாக அவர்களை மாற்றிவிடுகின்றது.

    இளமையில் தம்மைத் தனிமைப் படுத்திய பெற்றோர்களை முதுமையில் அவை தனிமைப் படுத்திவிடத் துடிக்கின்றன. முதியோர் இல்லங்களில் பெற்றோர்களைப் போடுகின்றன. ஐந்தில் விளைவுதுதான் விளைவு. குழந்தையின் பத்து வயதிற்குள் அதன் சிந்தையில் என்ன நற்பண்புகள் பதிகின்றதோ அதுதான் எப்போதும் ஒளிவிடும். இவற்றை உணராது ஐயோ முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டனவே என்று அங்கலாய்த்தலில் ஒரு பயனும் விளையப் போவது இல்லை.

    ஆய்வு என்று எதையும் மேற்கொள்ளாத சங்கத் தமிழன் இந்த உளவியல் சார்ந்த உண்மைகளை உணர்ந்தவன். இதற்குச் சான்றுகளே மேற்கூறிய பாடல்கள்.

    ஆனால் இதனை இத்தனை ஆண்டுகள் கழித்து ஆய்ந்து கண்டவர்கள் டென்மார்க் ஆய்வாளர்கள். 2 முதல் 6 வயது வரையிலான 500 குழந்தைகளை ஆய்வு செய்த. டென்மார்க் ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர். நன்னா ஓல்சன் கூறுவதாவது, “பெற்றோருடன் உறங்கும் குழந்தைகள் உடல் மற்றும் மன நலத்துடன் இருக்கிறார்கள் என்கின்றனர். முக்கியமாக பாதுகாப்பு உணர்வு இருப்பதால் நிம்மதியாக  உறங்குகின்றனர். ஹார்மொன்கள் அளவாகச் சுரக்கின்றன. அவர்களது செரிமானம் சீராக இருக்கறது. அதனால் அவர்கள் குண்டாவதில்லை.

    தனியாக உறங்கும் குழந்தைகள் அச்சத்துடன் சரியாக உறங்குவதில்லை. தூக்கத்தில் தொந்தரவு ஏற்பட்டால், அது ஹார்மோன்களைப் பாதித்து உடல்பெருக்கத்தைத் தூண்டும். சரியான உறக்கமின்மையால் உண்ட உணவு சரியாக செரிப்பது இல்லை. அதன் காரணமாகக் குண்டாக இருக்கின்றனர். பெற்றொருடன் படுத்து உறங்கும் குழந்தைகளைவிட தனியாகப் படுத்து உறங்கும் குழந்தைகளின் உடல் எடை மூன்று மடங்கு கூடுதலாக உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது” என்கிறார்.

         மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

          சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”

    என்பார் திருவள்ளுவர். மழலைகளின் மெய்யை வருடுவது குழந்தைக்கு இன்பம் தரும். பெற்றோர்க்கு பேரின்பம் தரும். அந்த இன்பப் போதையில் மூழ்கித் திளைத்த மீசைக்காரனும்,

     

    கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி!
    உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!”

    என்று பாடிப் பரவசமடைந்து படிப்போரையும் பரவசத்துள் ஆழ்த்துகின்றான்.

    குழலையும் யாழையும் தம் இனிய குரலில் இசைத்து நம்மை இன்பமாக இசைவிக்கும் மழலைகளைத் தனியாக உறங்க விடாதீர்கள். ஏக்கத்தின் தவிப்பில் உழலவும் விடாதீர்கள். இனியேனும் பெற்றோர்கள் விழித்துக்கொள்வீர்களாக. தங்கள் குழந்தையை பதமாக அணைத்து இதமாக உறங்க வைப்பீர்களாக! ஒரு மன, உள நோயற்ற குழந்தையின் பெற்றோர் என்னும் பெருமையுடன் உலாவருவீர்களாக!

    Share
  • ” நா ஜீவோ தாரா “

    விசாலம்

    ஸ்ரீ த்யாகராஜ ஆராதனை பகுள பஞ்சமி அன்று திருவையாற்றில் அவரது பிருந்தாவனத்தில் மிகச் சிறப்பாக நடக்கும் அன்றைய தினம் பெரிய சங்கீத மேதைகள் அவர் இயற்றியப் பஞ்ச ரத்ன கீர்த்தனங்கள் பாடுவார்கள்.அப்போது அவரது சிலைக்கும் அபிஷேகம் ஆராதனை, பூஜைகள் நடக்கும் . அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்  இது  .அவர் தன் ஐந்து வயதிலிருந்தே ஸ்ரீராமநாமத்தை ஜபிக்க ஆரம்பித்தார் சுமார் 95கோடிகள் ஜபித்திருக்கிறார், ஒரு சமயம் அவ்ர் திருப்பதி கோவிலுக்குப் போய் திரும்பி வந்துக் கொண்டிருந்தார் அப்போது ஒரு இடத்தில்ஒரே கூட்டம் , என்னவென்று விஜாரித்ததில் ஒருவன் கிணற்றில் விழுந்து இறந்து விட்டான்  என்றுத் தெரிய  வந்தது அதாவது ஒரு பிராமணன் தன் மனைவி, குழந்தையுடன்  அங்கிருக்கும் ஒரு கோவிலுக்குப் போனான்,  இருட்டிவிட்டது ஒரு ஆலயத்திற்குள்   சென்று இரவைக் கழித்துவிட்டுச் செல்ல நினைத்தான் ஆனால் அந்தக் கோவில் உள்ளேத் தாழிடப்பட்டிருந்தது என்ன செயவது  என்றுத் தெரியாமல் அங்கிருக்கும் மதில் மேல் ஏறி உள்ளேக் குதித்து பின் உள் இருக்கும் தாழ்ப்பாளைத் திறக்கலாம் என்று எண்ணி உள்ளே   குதித்தான்  அவ்வளவுதான்   டம்  என்றச் சத்தத்துடன் கிணற்றில்  விழுந்து விட்டான் நீரில் மூழ்கி  தத்தளித்து  செத்துப்போனன் ,.அவள் மனைவி வாசலில்  தன் கணவன்  இவ்வளவு நாழியாகியும்  வெளியில் வரவில்லையெ என்றுக் கவலையுடன் அழுது    ஊரைக் கூட்டினாள் /எல்லொரும் கோவில் உள்ளேத்தேடி  பின் அவனைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள்.     அவன் கழுத்தில்  துளசி மாலை
    இருந்தது  அவன் சிறந்த விஷ்ணு பக்தன் என்று   தெரிந்து, கொண்டார்

    “நா ஜீவோ தாரா” என்றுத் தெலுங்கில் ஒரு பாட்டு    அதாவது  அந்த மனிதனின்  உயிரைத் தந்துவிடு ராமா என்று உள்ளம் உருகிப் பாடினார்    தியாகராசர்      அந்த உயிர்ப் போன மனிதன் உறங்கி எழுந்தவன் போல உயிர்ப் பெற்று நின்றான் .என்னபக்தி! என்ன ராம நாமத்தின் மகிமை ,,,
    ,
    அவர்  பாடிய  பாடல்

    நாஜீவாதா ர நாநோமு ப லமா

    ராஜீவலோசந ராஜ ராஜ சிரோமணி

    நா சூபு ப்ரகாசமா

    நா நாஸிகா பரிமளமா

    நா ஜபவர்ண  ரூபமா

    நாது பூஜா ஸூமமா த்யாக ராஜநுத

    இதன்  பொருள்

    என்னுடைய ஜீவனுக்கு ஆதாரமாயுள்ளவனே

     நான் பார்க்காத ஒளியாய் உள்ளவனே
    நான் என்னுடைய சுவாசத்தினால்  உன்னுடைய சுகந்தத்தை முகர்கிறேன்
    நான்  ஜபிக்கும்   அக்ஷரத்தின் ரூபமாய் உள்ளவனே ,
    என்னுடைய பூசையின் புஷ்பமாய் உள்ளவனே
    தியாகராஜனால் துதிக்கப்பட்டவனே …..

    பாகவதத்தில்  துருவசரித்திரத்தில்  துருவனுக்கு மஹாவிஷ்ணு பிரத்த்யட்சமான்வுடன்  ஒருஸ்லோகம் வரும் அதன் பொருள் இந்தப்பாட்டுப்போல் தான் இருக்கும்

    ” எவர்  என்னுள் பிரவேசித்து  தூங்கிக்கொண்டிருந்த வாக்கு கை கால்  காது கண்கள் ,தேகம் முதலியவைகளைத் தன் சக்தியினால்
    ஜீவிக்குமாறு செய்தாரோ அந்த மஹாபுருஷனான மஹாவிஷ்ணுவை   நமஸ்கரிக்கிறேன்

    ஸ்லோகம்

    யோந்த பிரவிக்ய மம வாசாமிமாம் ப்ரஸிப்தம்
    ஸஞ்ஜீவயதியகில சக்திதர ஸ்வதாம்னா
    அன்யாம்ச ஹஸ்த சரணா ஸ்ரவண த்வகாதீன
    பிராணான் நமோ பகவதே புருஷாய துப்யம் ‘

    இந்தப்பாட்டிலும் ஸ்ரீ தியாகராஜர் ஆரம்பத்திலேயே “என்னுடைய ஜிவனுக்கு ஆதாரமானவனே “ என்கிறார் இதில் “அஹம் பிரும்மாஸ்மி “என்ற தத்துவம்  சொல்லி அந்த இறந்தவன் ஜீவனுக்கும் நீதான் ஆதாரம் என்று சொல்லாமல் சொல்லி பாடுகிறார் ……. கீதையில்
    பத்தாவது அத்தியாயம்  20 ஸ்லோகத்திலும் இது சொல்லப்பட்டிருக்கிறது  என்று தெரிந்துகொண்டேன்

    அவருடைய பாடலிலும்   “நா ஜீவோ தாரா”   என்பது இதைக்குறிக்கிறது என  நினைக்கிறேன்

    அந்த மனிதனின்  உயிரைத் தந்துவிடு ராமா  என்ற  பொருள்  பட பாடிய பாடலால் அந்த உயிர்ப் போன மனிதன் உறங்கி எழுந்தவன் போல உயிர்ப் பெற்று நின்றான் .என்னபக்தி! என்ன ராம நாமத்தின் மகிமை ……   “ராம நாமம்” ஒரு சிறந்த  மந்திரம்  இதை எப்போதும் ஜபிக்கலாம் ப்டுக்கையிலும்  ஜபிக்கலாம்   அதன் சக்தியே  தனி வாருங்கள்  நாமும் ராம  நாமம்    சொல்லலாமே !

    படத்திற்கு நன்றி:

    http://devotionalonly.com/wp-content/uploads/2010/04/sri-ramchandraji-ki-jai.jpg

    Share