தமிழ்த்தேனீ

மிஸ்டர் ரமேஷ் இந்தப் ப்ராஜக்டை  இந்தவாரம் எப்பிடியும்  முடிச்சிருவ்விங்கன்னு  நம்பறேன். இதுக்கு உங்களுக்கு என்ன உதவி வேணுமோ  நீங்க தயங்காம கேளுங்க. ஆனால் முடிக்கணும் சரியா என்று கேட்டுவிட்டு அதில் தனக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாதது போல் சென்ற மேனேஜரைப் பார்த்து சரிசார் முடிச்சிடறேன் என்று கூறிவிட்டு சலிப்புடன் நாற்காலியில் வந்து கம்ப்யூட்டர்  முன் உட்கார்ந்தான் ரமேஷ்

செல்போன்  அழைத்தது எடுத்து ரமேஷ் ஹியர் என்றான். உடனடியாக அழைப்பு துண்டிக்கப்பட்டது. எண்ணைப் பார்த்தான், தெரிந்த எண்ணாகத் தோன்றவில்லை , யாராவது தவறாக எண் போட்டு அவரை அழைத்திருப்பார்கள்.  செல்போனை வைத்துவிட்டு மீண்டும் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

உங்களுக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது தேவையானால் உபயோகியுங்கள் ,அல்லது நிராகரியுங்கள்  என்று ஒரு சிணுங்கலுடன் இனிய குரலில் அறிவித்தது  செல்போன் . எடுத்து செய்தியைப் படித்தான், அதில் மன்னிக்கவும்  தவறுதலாக உங்கள் எண்ணைப் போட்டு உங்களை தொல்லைப் படுத்திவிட்டேன். மன்னிக்கவும்   என்றிருந்தது.

அடேடே  தவறுக்கு வருந்தும் மனிதர்களும்  இருக்கிறார்களே என்று அதே  செய்தியில் அதனால் பரவாயில்லை வருந்தவேண்டாம் என்று எழுதி  செய்தியை திருப்பி அனுப்பினார். செய்தி அனுப்பப்பட்டது  என்று அறிவித்தது .மீண்டும் ஒரு செய்தி  மிக்க மகிழ்ச்சி ,உங்கள்  இணைப்பு எண் மிகவும் மாடர்னாக இருக்கிறதே  நீங்கள் யாரென்று அறிந்து கொள்ளலாமா? என்றிருந்தது.

மீண்டும் நான் யாரென்று தாராளமாக அறிந்து கொள்ளலாமே ,நான் ஒரு கம்ப்யூட்டர் இஞ்சினீயர்  என் பெயர் ரமேஷ். காக்னிசென்ட் டெக்னாலஜிஸ் சில் வேலை செய்கிறேன் என்று எழுதி அனுப்பிவிட்டு மீண்டும் வேலையைத் தொடர்ந்தான்..

மீண்டும் ஒரு செய்தி ! அதில்  மிக்க மகிழ்ச்சி நீங்கள் மிகவும் பொறுமையாக பதில் கூறுகிறீர்கள் நன்றி , நீங்கள் எங்கிருக்கிறீர்கள் ?என்று செய்தி கேட்டது.

நான்  அண்ணா நகரில் இருக்கிறேன், ,இவ்வளவு அக்கரையாக கேட்கிறீர்களே நீங்கள் யார் ,உங்கள் பெயரென்ன?

என் பெயர் ப்ரவீணா நானும் கம்ப்யூட்டர் இஞ்சினீயர்தான். நான் அடையாறில் இருக்கிறேன்.நான் மேக்னம் கம்ப்யூட்டரில் வேலை செய்கிறேன்.  வேலைக்கு நடுவே சற்றே ஊக்கப்படுத்திக்கொள்ளலாம் என்றுதான் உங்களுக்கு தகவல் அனுப்பினேன், தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் . அடுத்தடுத்து  செய்திகள் பறிமாறிக்கொள்ளப்பட்டன

அதனால் பரவாயில்லை, உண்மையிலேயே  தலைபிய்ச்சிக்கற வேலைக்கு நடுவுலே இது மாதிரி சின்னச் சின்ன சந்தோஷங்கள் இருந்தால்தான் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும் ,மகிழ்ச்சி.

அடுத்து செல்லில் அழைப்பு  வந்தது . எண்ணைப் பார்த்தான் ரமேஷ், அவள்தான். மனம் சுறுசுறுப்பாயிற்று.  ஹலோ என்றான் ரமேஷ்

நான்தான் ப்ரவீணா ,இப்போது  தெரிந்தே சரியாகத்தான் அழைத்திருக்கிறேன்  என்றாள் அவள். .  ஓ மகிழ்ச்சி! உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருக்கு என்றான் ரமேஷ்

நன்றி, நீங்களும் நன்றாகத்தான் பேசுகிறீர்கள், உங்கள் குரல்லேயும் ஒரு கவர்ச்சி இருக்கு என்றாள் அவள்.

நன்றி  சற்று நேரம் என்ன பேசுவதென்றே தெரியாமல் சிறு மௌனம். மீண்டும் ப்ரவீணா கலகலவென்று சிரிப்பது கேட்டது. மேலே என்ன பேசுவது என்று தெரியவில்லையா, எனக்கும் அதே நிலைதான். நாம் நேரில் சந்திக்கலாமா என்றாள் அவள்.

காத்திருந்ததைப் போல  ஓ சந்திப்போமே இன்று  சந்திக்கலாம் மாலை ஐந்து  மணிக்கு, நானும் உங்களைப் பார்க்க  ஆவலாய் இருக்கிறேன் என்றான்  ரமேஷ்.   ஹும்  எங்கே சந்திக்கலாம், நான் உங்களை எப்படி அடையாளம் தெரிஞ்சிக்கறது ?

நான் இன்று பச்சைக்  கலர் டாப்ஸும் ஜீன்ஸும் போட்டிருக்கேன்.. நீங்கள் என்ன உடை போட்டுக்கொண்டு வருவீர்கள் என்றாள் ப்ரவீணா

நான் இன்று ஆபீஸுக்கு  வந்திருக்கும் உடையிலேயே  வரேன். கையில் மஞ்சள் நிற வானிடி பேக் வைத்திருப்பேன். காந்தி சிலையருகே நிக்கறேன் என்றாள் ப்ரவீணா..

மாலை ஐந்து மணி  காந்தி சிலை அருகே ரமேஷ்  சென்ற போது ப்ரவீணா தூரத்தில் தெரிந்தாள் அவன் மனம் உற்சாகமானது.

அருகே சென்று  வாவ் அழகா இருக்கே  நீ என்றான்  ரமேஷ்.

தேங்க்யூ ரமேஷ் நீங்களும்தான் என்றாள் ப்ரவீணா வெகுநாட்கள் பழகியதைப் போன்று.

இருவரும் ஒருவரை ஒருவர் எடைபோட்டுக்கொண்டே  பார்வையால் விழுங்கியபடி அருகருகே அமர்ந்தனர். ரமேஷ்  கொண்டு வந்திருந்த மல்லிகைப் பூவையும் இனிப்பையும் அவளிடம் கொடுத்தான்.

ப்ரவீணா அவள் கொண்டு வந்திருந்த புத்தம் புது கீ செயினை அவனிடம் கொடுத்தாள் . இருவரும் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தனர். யுகம் யுகமாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்களைப் போன்ற உணர்வு இருவருக்குமே, சூழ்நிலையே மறந்து போய் இருவரும் ஒருவரில் ஒருவர் லயித்திருந்தனர். ஒருவரை ஒருவர் பார்வையாலேயே விழுங்கிக் கொண்டிருந்தனர். .

திடீரென்று ஒரு  கூக்குரல், முன்னபின்ன தெரியாத  எவனையாவது விவரமே தெரியாம  காதலிக்க வேண்டியது, அப்புறம் அவன் கைவிட்டுட்டான்னு  இப்பிடிக் கடல்லே விழுந்து தற்கொலை செஞ்சிக்க வேண்டியது,

வரவர விவஸ்தையே  இல்லாம போச்சு நாடு. ஒரு நாளாவது  நம்மை நிம்மதியா இருக்க விடறானுங்களா  இந்தக் காலத்துப்  பசங்க. அவங்க கல்யாணம் செஞ்சிகிட்டு  தாலிகட்டிக்கிட்டு அந்த்த் தாலியை மதிக்கறாங்களோ  இல்லையோ  நம்ம தாலியறுக்கறானுங்க.

பெத்தவங்க இப்பிடியே  கவனிக்காம விட்டுட்டு அப்புறம் அய்யோ  போச்சேன்னு கதர்றாங்க. கவனிக்க வேண்டிய காலத்திலே  கவனிக்காம அப்புறம் வாயிலே வயித்திலே அடிச்சுகிட்டு  என்னா ப்ரயோசனம் என்று முனகியபடி , 507   பொதுமக்களை  தள்ளிப் போகச்சொல்லுயா கூட்டம் போடவேணாம் . அப்புறம் ஏதாவது முக்கியமான தடையம் காணாமப் போயிடும் என்றார் காவல்துரை அதிகாரி கேசவன்.

அந்த போட்டோ கிராபரை நிறைய கோணத்திலே படம் எடுக்க சொல்லுய்யா,  வேன் வந்திருச்சா, போட்டோ எடுத்தப்புறம் ஏதாவது தடையம் கிடைக்குதான்னு பாரு, யாரு ,எந்து ஊருன்னு கண்டுபிடிக்கலாம் , சே  என்னா பொழைப்புய்யா இந்தப் போலீஸ்காரன் உத்யோகம் ,ஒரு நாளாவது ஒழுங்கா வீட்டுக்கு சரியான நேரத்திலே போக முடியுதா?.பொண்டாட்டி புள்ளை குட்டிகளைக் கவனிக்க முடியுதா? என்று சலித்துக்கொண்டே வேலையைத் தொடர்ந்தார் அவர்.

ப்ரவீணா ரமேஷிடம் குனிந்து ரகசியக் குரலில்   இங்கே இருந்து போயிடலாம் ,அதோ அந்தப் போலீஸ்காரர் என் அப்பா என்றாள் .

                              சுபம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *