சூரியன் வந்து வாவென்ற போது

மணி ராமலிங்கம்

எப்படி அந்த வரி வந்து விழுந்தது என்று தெரியவில்லை. விழுந்த அந்தக் கணமே தளை அறுந்த மகிழ்ச்சி. பிரசவ சந்தோசம். ஓவ்வொரு வரியும் பிரசவம்தான்.

ஓரிருமுறை தனது வரியை உச்சி  மோர்ந்துவிட்டு, தனது சர்வீஸ் டீமுக்கு அதை தாரை வார்த்துக்கொடுத்துவிட்டு, அப்போது அலுவலகம் விடுத்து இல்லம் ஏகுவான்.

வீட்டில் வளர்ந்து திளைத்து கிடக்கும் சூயஸ்(நாய் பெயர்) தான் அன்றைக்கு அவனின் துணை. அதற்கு தீனி போட்டு இறுக்கி கட்டிக்கொண்டு படுத்து தூங்க முயற்சிப்பான்.

ஆனால் அவனுக்கு தெரியும், இன்றைக்கு கிடைத்தது பெரிய வெற்றி. அதற்காக மூளை உழைத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. இப்போதைக்கு தூக்கத்திற்கு சூயஸ் மட்டும் போதாது.

யாருக்கு போன் செய்யலாம் என்று, நினைத்துக்கொண்டிருக்கும் போதே, தர்த்தி போன் செய்தாள். தர்த்தி – சர்வீஸ் டீம் ஹெட். ரவியின் விளம்பர வரிகளை வாடிக்கையாளர் தலையில் தேய்த்து, சரியென்று சம்மதிக்க வைக்க வேண்டும். [Client Approval]

போனை கிளிக்க,

“ என்ன பாஸ்.. வரவா.. ? “ தர்த்தி. குரல் குழைந்தது.

“ஹீம். யா.. “  வயிற்றுக் கீழே பட்டாம்பூச்சி.

சின்ன மெளனத்திற்கு பிறகு  சொன்னான் “ யா.. தேங்க்யூ.. செல்லம்.. “

*

குளித்து முடிந்து, குடித்த  விஸ்கி சூடாக்கிய மெல்லிய  சூடு – ஏசியின் காற்று காமக்கனலை ஊதிப் பெருக்க முனைந்தது. பட்டணத்தாரின் கோமணம் போல ஜாக்கி அணிந்திருந்தான் ரவி.

தர்த்தி பேசிக்கொண்டேயிருந்தாள். பேச்சு. பேச்சு. அவள் அப்படித்தான். அலை அலையாய் வார்த்தைகள். அதன் ருசி கூட்டும் வியாஞ்ஞானமாய் உடல் மொழிகள்.

பேசியபடியே ரவியின் கையை தனது இடது மார்பில் வைத்துக்கொள்ள செய்தாள். அவளுக்கு அது பிடிக்கும்.

” யூ நோ ரவி.. நான் அந்த லாஸ்டு ஸ்லைடை பிரசண்டு பண்ணினப்போ .. போர்டு ரூமில் எல்லோரும் க்ளீன் போல்டு.. சேர்மேன். எழுந்து நின்றுவிட்டார்… வெரி எக்சைட்டிங்..”

ரவிக்கு தர்த்தியின் சந்தோசம் பிடித்திருந்தது. தனது தொழிலின் பிடித்த கணங்கள். வெற்றியை சக அலைவரிசை தோழியோடு பகிர்ந்து கொள்ளுதல்.

“ கிரிக்கெட் பற்றி இப்படி ஒரு லைன், நியூ அவுட்லுக் வந்ததேயில்லைன்னு.. கஸ்டமர் ஷாக் ஆயிட்டாங்க.. அவங்களோடு புராடாக்டுக்கும் அது அப்படியே ஜிங்க் ஆயிருத்து.. எல்லா மீடியா கவரேஜிம் நமக்குத்தான். ”

தர்த்தியும் ரொம்பவே எக்சைட்டிங்காக இருந்தாள். குதூகலிக்கும்  குழந்தை. இதயம் நடுவில்  மலரும் அன்பு. உடம்பு மலர்த்தும் காம வாசனை.

மார்பைச் சுற்றி மெல்லிய வளையமிட்டான். அவனித்து எழுந்த தடமுலைகள் இல்லைதான். ஆயினும் எந்த சிந்தனையுமின்றி சந்தோசமாய் அவன் வட்டமிட்டுக்கொண்டிருந்தான். ரவிக்கு அந்தக் கணம் நிறைவாய் இருந்தது.

” எப்படி ரவி.. உனக்குன்னு ஐடியா எப்படி இவ்வளவு சூப்பரா வருது.. “ தலைக்குள் கைவிட்டு அழுத்தி முடி இழுத்தாள். கொஞ்ச முன் குடித்திருந்த விஸ்கியால் பறந்து கொண்டிருந்த ரவியின் தலைக்கு வலி சுகம் கொடுத்தது.

“ It is not game, it is one more religion “ – தான் எழுதிய அந்த விளம்பர வரியை இன்னொரு முறை உதட்டிற்குள் சொல்லிக்கொண்டான்.

மிகப்பெரிய சந்தோசங்கள் பொங்கும் போது, நுரை பொங்க கிடைக்கும் மைசூர் கபேயின் அடியில் கசக்கும் டிகாசன் போல கல்யாணமாகாத குறை. அப்போது தான் அந்த கவலைக் குமிழ் உடைந்து ரொம்ப நாளாய் உள்ளிருந்து அரிக்கும் கல்யாணக் கவலை.

அம்மா சொல்லி சொல்லி பார்த்து, அலுத்து தன் கல்யாணம் பார்க்காமல் செத்தும் போய்விட்டாள். தன் சம்பாத்தியத்தில் பத்தில் ஒரு பங்கு இல்லாவிட்டாலும், தனது தமையன்கள் சென்னையில் ஒண்டிக் குடுத்தினத்தில் இரண்டு குழந்தைகளோடு.

தான் மட்டும் தனிமரமாய்.

ஏன் கல்யாணம் ஆகவில்லை, செய்து கொள்ளவில்லை என்று யோசிப்பதை  தவிர்த்தான்.  அந்த எண்ணப்பயணம் எங்கேயும் நிற்பதில்லை. தனது படைப்புகள் கொடுக்கிற ஒருசில மணித்துளிகளின் இன்பத்தை தவிர வேறு எதுவுமே தன்னை பெரிதாய் பாதிப்பதில்லை என்பதை நினைவில் முட்டியது.

தர்த்தியை இன்று பார்க்க, வித்தியாசமாய் ஒளிர்ந்தாள்.

தர்த்தி.. எத்தனை உதவியாய் இருக்கிறாள். தான் செய்த எல்லா புராஸக்டுகளிலும் இவள் துணையில்லாமல் செய்திருக்க முடியாது. உடுக்கை இழந்த போதும், இழக்காத போதும் இவள் பலமுறை இடுக்கண் களைந்திருக்கிறாள். இவளின் உதவி திருப்பி கொடுத்து ஈடு செய்ய முடியாதது. அவளின் துணை மகிழ்ச்சி தருவது. அந்த மகிழ்ச்சி வெறும் உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல என்று இருவருக்கும் தெரியும்.

இவளுக்கு ஏதாவது செய்ய  வேண்டும்.. அவளை இன்னும் புரிந்து கொண்டு,  அவள் என்ன கேட்டாலும் கொடுத்துவிட வேண்டும். ஹீம்.. ஏதாவது செய்ய வேண்டும். என்ன செய்யலாம் ?

*

அறையிலிருந்து வெளியே வந்து  சோம்பல் முறித்தாள். முறிந்தது.

பாந்திராவின் டிசம்பர் மாதக் கடல் குளிர் காற்று. சில்லிட்ட பால்கனி. இருட்டான பால்கனி. அலைச் சத்தம். கண்ணாடிக்  கதவின் வழியே பார்க்க ரவியின்  ஆழ் தூக்கம்.

ரவி ரிஸி போல நிச்சலமாய் தூங்கிக்கொண்டிருக்கிறான். இந்த உறவில் ஏதோ ஒரு தேவதை தன்மை கூடுவதுபோல உணர்ந்தாள்.

சில்லிட்ட பால்கனி சேரில் உட்கார்ந்து காலை கம்பியின் மேல் அகட்டி வைத்துக் கொண்டாள்.

இளகிய இருட்டு. மணி மூணு, மூணரை இருக்கலாம். இன்னும்  கொஞ்ச நேரத்தில் வெளுக்கும் வானம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காலைச் சூரியனின்  ஆரம்ப கணங்கள். சிறிய வயதிலிருந்தே பிடித்திருக்கும் சூரியப் பயித்தியம். எழும், எரிக்கும், விழும் சூரியனோடான காதல் யுக யுகமாய்.

ஏதோ கொஞ்ச நாளாய் ரொம்ப  ரொம்ப ரொம்ப ரொம்ப .. மகிழ்ச்சியாய். உள்ளுக்குள், வயிற்றுக்கு மேலே நெஞ்சுக்கு கீழே ஏதோ புள்ளியில் ஏராளமாய் பொங்கும் ஆற்றல். அலை அலையாய் சந்தோசம். எதனால் ?.

அலுவலக வெற்றியா ?, ரவியினால் உடல் மலர்தலா ? நோ வே. (No way) . அது மட்டுமேயிருக்க முடியாது.

அலுவலக வெற்றி ஒன்றும்  புதிதல்ல.

ஆறுமாதத்திற்கு முன்பும் இதே போல இன்ஸீரன்ஸ் நிறுவனத்திற்கான  விளம்பரத்தில் பெரிய வியாபார  வெற்றி.  பெருத்த போராட்டங்களுக்கு இடையே கிடைத்த வெற்றி. அன்றைக்கும் இதே போல தானே அழைத்து, தானே கொடுத்து. இடைவிடாத பேச்சு. உடல், அன்பு பரிமாற்றம்.

உடல் மலர்தலும் புதிதல்ல. ரவிக்கும் முன்னும் உடல் மலர்ந்திருக்கிறது.

ஆனால், இப்போது சில காலங்களாய் உடலிலிருந்து எழும் பெரு மகிழ்ச்சி அலை அசாதரணமானது. பொங்கி வழிகிற கருணை. தொடர்ந்து ஊறி பல்கி பெருகி நீரூற்றாய் உடைகிற ஆற்றலை, அந்த புள்ளியை அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த ஆற்றலின் புள்ளி அவளை உடலின் ஆதி மலரலுக்கு கொண்டு சென்றது.

*

”  நான் போகட்டுமா.. ”  கை கூப்பியபடி தனக்கு பிடித்தமான அவன் நின்று கொண்டிருக்கிறான்.  சரியான உயரம், மெல்லியதான வெப்பம், கொஞ்சமான காவிக் கலர் உடை. காற்றில்லாத போதும் பறக்கும் மயிர் கற்றைகள்.

மந்திரம் உண்மையில் பலித்து  விட்டதா.. விளையாட்டு வினையாகி விட்டதா. ரிஸி உள்ளே தூங்கிக்கொண்டிருந்தார்.

அவனைப் பார்க்க, பார்க்க பொங்கி வழிகிற ஆர்வம். வழுக்கி விழுகிற இதயம். இவனா ஒளி கொடுப்பவன். உலகமே தூயில் எழுந்தவுடன் துதிக்கப்படுபவன். இவனா என் உள்ளம் கவர்ந்தவன்.

பிடுங்கித் தின்கிற வெட்கம்  மறைந்து அவனை பார்க்க, உடம்பு மலர பிரயத்தனப்பட்டது. முட்டிக்கொண்டு நின்றன மொட்டுக்களின் முனைகள். மண்ணாலான உடலின் உறுப்புகள் , சுரப்பிகள் வேகமாய் இயங்க  தயாராகின.

மந்திரப்படி அவ்னோடு சேரவேண்டும். சேர்ந்தால், என்னை உதறும் –  கட்டுகள் நிறைந்த உலகம். என் கர்ப்ப பையை கட்டுப்படுத்தும் ராஜாங்கம், நீதி பரிபாலனம். மண்ணாங்கட்டி.

தடுத்தது – மனத்திலிருந்து பயக்குமிழி. அதற்குள்ளே சமூகம், ராஜ குலம், கட்டுமானம், திருமணம், நற்பெயர், பெண், கொஞ்சம் உயரத்தில் ஆண், கர்ப்பம், தகப்பன், தாய் எல்லாம் கலந்து கட்டி. காற்றில் மெல்ல பறந்து, கலைந்து வெடிக்க, பயம் தன் மீது ஈரமாய் ஒட்டியது.

அவன் விழி நோக்கின் பயம் தாண்டத் தூண்டும் மனம். உதவியாய் ம்லரும் உடல். இவன் என் தேர்வல்லவா.. என் தேவனல்லவா. நான் விரும்பிய பிரம்ம புருஸனல்லவா..

மந்திரம் சொல்லியபின்  கூடாமல் போனால், அவன் உடம்பில் பாதி எரிந்துவிடுமாம். நீங்கள் தவறாக அழைத்துவீட்டீர்கள் போல, பரவாயில்லை. மந்திர சாபத்தை உங்களுக்காக நான் ஏற்றுக் கொள்கிறேன். விரும்பிய போது மறுபடி வருகிறேன் என்று கை கூப்பியப்டி சொல்கிறான்.

அந்த பணிவை ரசித்து  உடம்பில் சுரப்பிகளின் தாளம். மொட்டுகளின் முனை முறிந்து பெண்மை ததும்பல்.

“ வேண்டாம்.. இரும்.. “ என்றாள்  கம்பீரமாய்.

அவன் புரிந்து கொண்டான். மெல்லிய நிலவொளியில் அவனின் கையைப்பிடித்து தோட்டத்திற்கு இட்டுச் சென்றாள்.

அவளுள் சுருண்டிருந்த பாம்புகள் சடக்கென உள்ளே தீ விழித்து  தலை நோக்கி பாய்ந்தன. பெரு மகிழ்ச்சி அலை. வயிற்றுக்கு மேலே நெஞ்சுக்கு கீழே ஒரு புள்ளியிலிருந்து நீரூற்றாய் எழுகிற ஆனந்தம். ஆதி மலரல்.

அவன் அவளை மானசீகமாய் நமஸ்கரித்து  பக்கம் நெருங்கினான்.

*

சுற்று முற்றும் வானம், இருட்டு. தூரத்தில் அலைச்சத்தம். அவள் பிரஞ்ஞை முழுவதும் வெற்று வெளி.  தனது கால்களை திறந்து வானம் நோக்கி வைத்துக் கொண்டாள்.

இருட்டு கரைந்து, மெல்லிய  நீலமாகி பின் அவன் ரதத்தோடு வரும் பாதையை யாரும் பார்க்குமுன் தான் பார்த்து நிற்பது.  இந்த வானம் அவளுக்கு பழக்கமான பிடித்த ஓன்று.

அறைக்குள் பார்க்க, ரவி  இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறான். நிசப்தம்.

தர்த்தி கண்களை மூடிக்கொண்டே யோசிக்க ஆரம்பித்தாள். சில நாட்களாய் சிதைந்த கனவுகள், சில பிம்பங்கள். வேலை அசதியால் இருக்கும் என்று விட்டு விட்டாள். வயிற்றிலிருந்து வருகிற துடிப்பு அல்சரா, இல்லை பிரியட் பிரச்சனையா என்று சந்தேகம். இரண்டும் இல்லை என்று முடிவான பின்பு அதை உற்று நோக்க ஆரம்பித்தாள்.

உடலும், மனதும் எதற்கோ தான் தயாராகப் போவதை சமிஞ்ஞையிடுவதாக ஒரு எண்ணம் எழுந்தது.

இப்படியெல்லாம் தான் யோசிப்பதே அவளுக்கு ஆச்சரியம் கலந்த பயம் கொடுத்த்து. வேலை, ஊர் சுற்றல், அடுத்த பதவி, அடுத்த வாடிக்கையாளர், புலன்களால் புது புதிதாய் புலரும் மகிழ்ச்சி என ஓடிக்கொண்டிருக்கும் தான் இப்படி தான் இப்படி யோசிப்பது கொஞ்சநாளில் சரியாகிவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, கனவுகள், வேறு சில சமிஞ்ஞைகள் என்று தான் எங்கோ இழுத்துப் போகப்படுவதாய் நினைத்தாள். நினைவுகளை கலைத்தாள்.

முயக்கம் முடிந்து இலேசான உடம்பு. அகட்டி வைத்துக்கொண்டிருந்த காலின் வழியே நுழைந்து எல்லாயிடமும் குளிர்படுத்தும் காற்று. வயிற்றிலிருந்து மறுபடி பொங்கிச் சீறிடும் ஆற்றல். கண் மூடி அதையே நோக்கிக் கொண்டிருந்தாள்.

மெல்லியதான கூச்சம் தொடையில். சின்னதாய் நடுக்கம். ஆதிகால கன்னிமையை யாரோ வருட வரப்போவது போல.. நன்றாகவும், கிளர்ச்சியாகவும் இருந்தது. நிறைய யுகங்களுக்கு முன்னான உணர்ச்சியின் எச்சமாய் அது இருந்தது.  தோட்டத்தில் படுத்திருந்தது போல உணர்வு.

வயிற்றை தானே தடவிக் கொண்டாள். மேடிட்டு மெல்லிய குற்றவுணர்வை அளிக்கு வயிறு இன்று அப்படியில்லாததை உணர்ந்தாள். சூட்டினால் உடல் ஈரம் துப்பியது. அது இன்னும் சூட்டை கொடுத்தது. தயாராகும் உடல்.

கிளர்ச்சியா.. இது. ஆனால், இன்னொரு புலனால் எழுகிற கிளர்ச்சி அல்ல. இன்று மலர்கிற கிளர்ச்சி, இதுவரை அறியாத புனிதமான உடல் கிளர்ச்சி.

சேரில் சாய்ந்து மார்பை, உடையை தளர்த்திக் கொண்டாள். கண்களை மூடிக் கொண்டாள். இளம் வெயில் தனது உடம்பில் சகல பாகங்களிலும் பரவுவதாய் உணர்ந்தாள்.

திடீரென்று, பிரஞ்ஞையின்  அடியாழத்திலிருந்து தான் அறியாத மொழியிலிருந்து சில  வார்த்தைகள். சூர்யம்.. ப்ரமண்யம்  பகு புத்தார.. தனக்கே புரியாத  வார்த்தைகள். அதுவாக உள்ளிருந்து  எழுந்து, ஆகுதியாய் வளர்ந்து, ஆகுதியில் விழுந்து. அதை  மூன்றாமவள் போல தர்த்தி  பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

இறுக்கமான உடலில் ஏதோ விசை அழுத்த சுருண்ட தூங்கிக் கொண்டிருந்த பாம்பு மறுபடி எழுந்தது. வாயை திறந்து உணவுக்காக உள்ளே காத்திருக்கத் தொடங்கியது.

அப்போது தான் அவன் பறந்து வந்து பால்கனிக்குள் ரதத்தில் இறங்கினான். காற்றில்லாத போதும் அலையும் முடிக்கற்றைகள். நமஸ்கரித்து பக்கம் நெருங்கினான்.

இளஞ் சூடு. இத்தனை காலம், தேங்கியிருந்த யோனியின் யுகக் கசடுகளை நொடியில் சுத்தம் செய்தான்.

யுக யுகமாய் சூரியனுக்காக காத்திருந்த அந்த யோனியின் இதழ் விரித்து அவளின் கருப்பைக்குள் தன்னிலிருந்து வழித்து எடுத்த சூரிய ஓளி கோப்பையை முழுமையாய், இளம் சூடாய் கவிழ்த்தினான்.  அது அவளின் அகத்தை ஆகர்சித்தது.

இதற்குத்தானா இவ்வளவும் ?

*

உறுதியாய் சொல்லிக் கொண்டாள்.

அப்போதும் நீயே நான் தேர்ந்தெடுத்த மகன். மண் தேர்ந்தெடுத்த விதை.  நான் விரும்பி, நானே முடிவெடுத்து, என் ஆதி மலரலில் மலர்ந்தவன் நீ. என் முதல் மரம் நீ.

மற்றவைகளெல்லாம் என் மீது வீசப்பட்டவை தானே. நாட்டுக்காக, போருக்காக என்ற ஏதோ பெயரில்  நான் கட்டாயமாக சுமக்க வைக்கப்பட்டவை.

இந்த பிறப்பில் நீயும், நானும் நமக்காக மட்டும்.

எனக்கு – நானாகவே, நான் விரும்பியபடி தாய்மை அடைந்து,  முழுவதுமாய் தாய்மையின் வளர்ச்சியின் ருசி அறிந்து, புழுங்காமல், யாருக்காவுமின்றி எனக்கான கட்டற்ற வாழ்க்கை வேண்டும். பழைய கணக்கின் பள்ளங்களை நிரப்பும் ஆசைகள். கர்மாக்கள்.

உனக்கு – பிறப்பின் மூலம் தெரிந்து ஒரு முழுமையான வாழ்க்கை வேண்டும். ஒளிவட்டமின்றி, புகழ் புழுக்கமின்றி மெல்லியதாய் தாய் நதியின் பக்கத்திலே ஒடும் ஒரு கிளை நதிபோல.

வாழ்நாள் முழுவதும் நீ தேடுக்க்கொண்டிருந்தது  உன் முழுமையடையா பெண்மையின் இடப்பாகத்தை தானே.  ஆணின் பெண்மை தேடலின் முதலும், முடிவும் தாயில் தானே புதைந்திருக்கிறது. ஆகவே உனக்கான வாழ்க்கை, தாயோடு மட்டும் தனியாய், தனியனாய். எல்லாமே தாயாய்.

அள்ளி அள்ளி கொடுத்த நீ அழுது அழுது கேட்ட போதும் கிடைத்தது கொஞ்ச நேர  மடிதானே. அம்பின் வலியோடும், அவமானமாய் பார்க்கிற கண்களை தவிர்த்தும் என் மார்போடிருந்த  ஒரு சில மணித்துகள்களில்  எப்படி முழு வாழ்நாளின் வலியை  கரைப்பது.

இந்த தடவை இவற்றை கழித்து  விடுவோம். இதிகாசத்தின் கோடிட்டு காலியான இடத்தை நிரப்புவதுதான் இந்த  வாழ்க்கையின் குறிக்கோளோ என்னமோ ?

ரத்த சீழ் வடிந்த அந்த போர்களத்தில் என் மார்பில் நீ மடிந்த போது உடம்பின் ஆசைகள் உதிர்ந்த ஆன்மாவின் அலறலில்  நாம் வார்த்தைகளின்றி நாம் பேசிக்கொண்டதல்லவா இது.

கேட்ட்து நீ, நான் மற்றும்  கீழ் வானத்தில் மறைந்து  கொண்டிருந்த உன் அப்பா.

*

நன்றாக வெளுத்த விட்ட  வானம். எல்லாம் உணர்ந்து கொண்ட தெளிவான மனம். வயிற்றின் கனம். தானே உணர்ந்து கொண்ட காலச்சக்கரம்.

What is next, how to execute – யோசித்தாள் தர்த்தி.

அப்பா பெயரில்லாமல் அவதிப்படாதிருக்க ஒரு பெயர். ரவி. நல்ல பெயர்  தான். ஒரு தொந்திரவு செய்யாத  பெயர் வேண்டும். பொருத்தமாகவும் இருப்பதால் ஒரு சிரிப்பும் வந்தது.

தூங்கி எழுந்த ரவியைப்  பார்த்து நாம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்க நினைத்த தர்த்தி,

“ என் குழந்தைக்கு அப்பாவாகயிருப்பாயா.. “ என்று கேட்டாள்.

ரவி ஆதுரமாய் அவள் கை கோர்த்துக் கொண்டான்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சூரியன் வந்து வாவென்ற போது

Leave a Reply

Your email address will not be published.