ஜனவரி (2013) மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்!
வெங்கட் சாமிநாதன்
எல்லாக் கதைகளையும் படித்தேன். இந்தத் தடவை வந்த கதைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. நிறைய கதைகள் எழுதி வந்தவர்கள் கூட இம்முறை எழுதவில்லை. ஒரு வேளை ஏமாந்த மனக் கசப்புடன் இருக்கிறார்களோ என்னவோ.
வந்த கதைகளில் முற்றிலும் திருப்தி அளித்த கதைகள் என்று சொல்லமுடியாவிடடாலும் தமிழில் சாதாரணமாக எழுதப்படாத, சரி, வல்லமையில் சாதாரணமாக எழுதப்படாத விஷயங்களை கையாண்டு பெரும்பாலும் நன்றாகவே எழுதப்பட்டவை என்று சொல்லப்படவேண்டியவை இரண்டு. ஒன்று, அம்மாவின் தேன் குழல் மாதவன் இளங்கோ எழுதியது; இரண்டாவது நாலடி கோபுரங்கள் ஜெயஸ்ரீ ஷங்கர் எழுதியது.
பெரும்பாலும் நன்றாக எழுதப்பட்டவை என்று சொன்னேன். மாதவன் இளங்கோ எனக்கும் ஒரு வேளை வல்லமைக்கும் கூட புதியவர். எங்கோ இருப்பவர். ப்ரஸ்ஸல்ஸும் மயிலாப்பூரும் இணையாதவை. இணைக்க முடியும். ஆனால் இணையாதவர்கள் இரண்டு முனைகளி. நன்றாகத் தான் ஒரு நல்ல விஷயத்தைத் தான் எழுதியிருக்கிறார். ஆங்காங்கே சில வார்த்தைகள், சில வாக்கியங்கள் melodrama வாக இருக்கின்றன. அதைப் பெரிது படுத்த வேண்டாம். போகப் போக சரியாகும். கடைசியாக், வரும் சில பாராக்களை ஒதுக்கியிருக்கலாம். ”இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தேன என்னும் வரியோடு கதை முடிகிறது. அடுத்து வருபவை வேண்டாம்.
ஜெயஸ்ரீ ஷங்கர் கதை இது காறும் அவர் வல்லமையில் எழுதிய கதைகளிலிருந்து நாலடி கோபுரங்கள் மாறுபட்டது. தாய் தந்தையரால் கூட உதறிவிடப்பட்ட ஒரு குள்ள மனிதனின் அனுபவங்கள், கேலியும் தனக்கு மறுக்கப்பட்ட வாழ்க்கையும் கூட பாதிக்கவில்லை. அதெல்லாம் சரி. கடைசியில் லிப்டிலிருந்து குழுந்தையைக் காப்பாற்றியது – இது நடக்கலாம் தான் ஆனால் – இது வரை இயலப்பாக எழுதப்பட்டது இங்கு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டது போல தோன்றுகிறது. அதேபோல முன்னரும் கூட தன்னை மாற்றச் சொல்லி கடிதமாக எழுதி ராஜாவிடமே கொடுத்தது. இது மறைவாகச் செய்யப்பட்டது பின் ராஜாவின் காதில் விழுகிறது என்றிருந்தால் அது இயல்பாக இருந்திருக்கும்.
எப்படியாயினும் இந்த இருகதைகளும் என் தேர்வுகள். மாதத் தேர்வு தானே. அதனால் பரவாயில்லை. இரண்டும் உற்சாகப்படுத்த தகுதி கொண்ட எழுத்துக்கள்.
இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.
வெ.சா.
இந்த மாதப் போட்டிக்கான சிறுகதைகள்
1. கண்ணாள் ஓதுகம்
2. பச்சைக் கிளி
3. ஆசான்
4. பட்டி நோம்பி
5. “வடு”
6. காதல் கீதை …
7. அம்மாவின் தேன்குழல்
8. பொய் வாழ்க்கை
9. பலிபீடம்
10. ஆத்ம சாந்தி
11. நாலடிக் கோபுரங்கள்…!
போட்டியில் வெற்றி பெற்ற திரு மாதவன் இளங்கோ மற்றும் திருமதி ஜெயஸ்ரீ ஷங்கர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகள். பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து தங்கள் படைப்புகளை அனுப்புங்கள். பரிசினை வெல்லுங்கள்!
அன்புடன்
பவள சங்கரி
ஜனவரி மாதச் சிறுகதை முதற்பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள் ஜெயஶ்ரீ,
விசுவாமித்திரர் உனக்கு ரிஷி பட்டம் அளித்துள்ளார். பெரு மகிழ்ச்சி. அன்புடன், சி. ஜெயபாரதன்
மாதவன் இளங்கோ மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
வல்லமை ஆசிரியருக்கு,…. பொங்கல் சிறப்பிதழ் கதைகள் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படாதா? நான் பொங்கல் சிறப்பிதழுக்கு எழுதிய கதையை இந்தப் பட்டியலில் காண முடியவில்லையே?
….. தேமொழி
வாழ்த்துக்கள் மாதவன்.. உங்கள் எழுத்தின் வல்லமை வளரட்டும்
மாதவன் இளங்கோ, ஜெயஸ்ரீ இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
வல்லமை இதழுக்கு நான் அனுப்பிய கதை, மதிப்பிற்குரிய திரு. வெங்கட் சாமிநாதன் அவர்களின் ஆய்வுக்கும், விமர்சனத்திற்கு உட்படப்போகிறது என்பதையே பெரிய வரமாக நினைத்திருந்த எனக்கு, திரு.வெ.சா அவர்கள் எழுதியுள்ளதைப் படித்த பிறகு என்னசெய்வதென்று புரியாமல் சிறிது நேரம் மௌனத்தில் மூழ்கி விட்டேன். உண்மைதான். அதீத மகிழ்ச்சியில் மனம் ஸ்தம்பித்து விடுகிறது.
திரு. வெ.சா அவர்களின் கருத்துகள் எனது எழுத்தை செம்மைப் படுத்திக்கொள்ள எனக்குக் கிடைத்த பெரும் வரம்! இன்று என்னுடைய எழுதும் ஆர்வம் இன்னும் பன்மடங்கு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்.
இலக்கிய உலகில் எனக்கு யாருடனும் பழக்கமில்லை. என்னைப் போன்ற பல ஏகலைவன்களுக்கு பல துரோணர்களின் புத்தகங்களே துரோணர்கள்!! அப்படி இருக்க, துரோணர்களையே கண்முன் நிறுத்திக் கற்றுக் கொடுத்து பிரமிக்க வைக்கிறது வல்லமை இதழ். உண்மையாக!
இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து வரும் வல்லமை இதழுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்! குறிப்பாக நேற்று இரவு சுமார் எட்டு மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஒரு மணி) – GTALK-இல் தொடர்பு கொண்டு வாழ்த்திய வல்லமை ஆசிரியர் பவளசங்கரி அவர்களுக்கு நன்றி!
எனக்கு வல்லமை இதழை அறிமுகப்படுத்திய எனது சகோதரன் சந்தோஷ் அவர்களுக்கு நன்றி!
திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!
வாழ்த்திய ஜெயபாரதம் ஐயா அவர்களுக்கும், தேமொழி அவர்களுக்கும் நன்றி!
நண்பர் மாதவன் இளங்கோ,
வல்லமை இலக்கிய நோபெல் பரிசு பெற்றமைக்கு என் இனிய வாழ்த்துக்கள். பாராட்டுகள். அன்புடன், சி. ஜெயபாரதன்
வாழ்த்துகள் …இளங்கோ , இந்தியஉணர்விற்க்கும் சேர்த்துதான்….
//எனது சகோதரன் சந்தோஷ் //
எங்க பனைநிலத் தமிழ்ச்சங்கத் தூணுக்கும் சேர்த்து வாழ்த்துகள்!!
திரு. மாதவன் இளங்கோ மற்றும் திருமதி. ஜெயஸ்ரீ சங்கர் ஆகிய இருவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். இரண்டு சிறுகதைகளுமே சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளன. வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்…
மதிப்பிற்குரிய திரு.வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு,
இந்த மாதச் சிறுகதையில் “நாலடிக் கோபுரங்கள்” என்ற இந்தச் சிறுகதைக்கு இரண்டாவது பரிசை அளித்து என்னை பாராட்டியதற்கு மிக்க நன்றி.
கடந்த சில நாட்களாக நான் ஊரில் இல்லாததால், என்னால் உடனே எனது நன்றியைத் தெரிவிக்க இயலவில்லை. தாமதத்திற்கு வருந்துகிறேன்.
மேலும் பாராட்டி வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும்…திரு.சி.ஜெயபாரதன், திருமதி.தேமொழி, திருமதி.பவளசங்கரி, திரு.கே.எஸ்.சுதாகர். திரு.மாதவன் இளங்கோ, திருமதி.மேகலா இராமமூர்த்தி, திரு.அரவிந்த் சச்சிதானந்தம் , ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் ,
ஜெயஸ்ரீ ஷங்கர்