காயத்ரி பாலசுப்பிரமணியன்

மேஷம்: பொது சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் , உங்களைத் தேடி வருபவர்களுக்கு உதவும் குணம் இருந்தாலும், மற்றவர்கள் உங்களை ஏமாற்ற இடம் கொடாதீர்கள். இந்த வாரம் மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் கிட்டும். வியாபாரிகள் தேவையான இடங்களில் கனிவையும், பணிவையும் பயன்படுத்தினால், அதிக லாபம் பெறலாம். பெண்கள் இழுபறியான காரியங்களை கையில் எடுக்கும் முன் தேவையான செய்திகளையும், பலத்தையும் திரட்டிக் கொண்டு செயல்படுவது நல்லது. வியாபாரிகள் ஏற்ற இறக்கமுள்ள பங்குச் சந்தையில் அகலக் கால் வைக்க வேண்டாம்.

ரிஷபம்: வியாபாரிகளுக்கு கிடப்பில் கிடந்த நல்லத் திட்டங்களை மீண்டும் செயலாற்றும் வாய்ப்பு கிட்டும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமையால், மன இறுக்கம் தோன்றி மறையும்.கலைஞர்கள் தேவையற்ற விமர்சனங்களைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம். மாணவர்கள் காரியங்கள் முடியும் வரை கவனச்சிதறலுக்கு இடம் தராமலிருப்பது நல்லது. பெண்கள் உறவுகளை அனுசரித்து நடந்து கொண்டால், அதிக ஆதாயம் இருக்கும். அடிக்கடி வெளியூர் செல்பவர்கள் பயணங்களில் கவனமாக இருப்பது அவசியம். பெற்றோர்கள்பிள்ளைகள் தொடர்பான நல்ல விஷயங்களை உடன் முடித்து விடுவது நல்லது.

மிதுனம்: சுய தொழில் புரிபவர்கள் சிறந்த திட்டங்களைத் தீட்டி அதன் படி நடந்தால், அதிக லாபம் பெறலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் லட்சியங்களை நிறைவேற்ற அயராமல் பாடுபடுவர். குடும்ப அமைதிக்குப் பங்கம் வராமலிருக்க, பெண்கள் முக்கிய விஷயங்களை குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையுடன் செயல்படுத்துவது அவசியம். இந்த வாரம் கை வேலைகளில் ஈடுபடுபவர்களின் பொருளுக்கு நல்ல லாபம் கிட்டும். பெற்றோர்கள் பிள்ளைகளின் கையில் அதிக பணம் தருவதைத் தவிர்த்தல் நலம். மாணவர்கள் தீய பழக்கங்களின் பக்கம் திரும்பாமலிருந்தால், நல்லோரின் ஆதரவு நிலையாக இருக்கும்.

கடகம்: கலைஞர்கள் உங்கள் திறமையால் விசேஷ சலுகைகளை பெறுவீர்கள். மாணவர்கள் உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தால், தடைகளை எளிதில் தாண்டி விடலாம். பெண்கள் சிறு பூசல்களை பெரிதாக்காமல் இருப்பது புத்திசாலித்தனம். பெற்றோர்கள் பிள்ளைகளின் பற்களின் பராமரிப்பில் கவனமாய் இருந்தால், மருத்துவச் செலவுகளை குறைத்து விடலாம். பொது வாழ்வில் உள்ளவர்கள் சில நிர்ப்பந்தங்களுக்கு அடிபணியாமலிருந்தால், உங்கள் நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்வது கடினமாய் இராது. இந்த வாரம் வீடு மனை வாங்க எடுக்கும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபடுவீர்கள்.

சிம்மம்: கலைஞர்கள் புதிய முயற்சிகளில் வெற்றி பெற ஆக்கத்துடனும், ஊக்கத்துடனும் உழைப்பீர்கள். இந்த வாரம் வியாபாரிகள் சரக்கு விநியோகத்தில் குளறுபடி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.வியாபாரத்தில் தொய்விராது. மாணவர்கள் நேர்வழியில் போட்டிகளை எதிர்கொண்டால், எதிலும் வெற்றி பெறலாம். பெண்கள் பொது விழாக்கள், விருந்து ஆகியவற்றில் பக்குவமாக நடந்து கொண்டால், நட்பும், உறவும் கசக்காமல் இருக்கும். பணியில் இருப்பவர்கள் பிரச்னைக்குரிய விஷயங்கள், பிரச்னைக்குரிய நபர்கள் ஆகிய இரண்டிலிருந்தும் விலகி இருந்தால், அமைதியாய் செயல்பட முடியும்.

கன்னி: அதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்களுக்கு அனுகூலமாக அமைவதால், உங்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, நினைத்த காரியத்தை முடிப்பதில் குறியாய் இருப்பீர்கள் இந்த வாரம் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பெண்கள் பொது இடங்களில் பிறரின் நிறை குறைகளை அலசாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் வீண் செலவுகளுக்கு வழி வகுக்கும் இடங்களுக்கு செல்லாமலிருப்பதே புத்திசாலித் தனமாகும். கலைஞர்கள் மன வருத்தங்களை வெளிப்படுத்த முடியாத சூழல் இருக்கும்.. நெருங்கிப் பழகிய பங்குதாரர்கள் சிறு பிணக்குகள் காரணமாகப் பிரிந்து போக நேரலாம்.

துலாம்: .மாணவர்கள் தங்கள் ஒப்பனை, உடை அலங்காரம் ஆகியவை கண்ணியமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நலம். சக கலைஞர்களின் ஆலோசனையால் கலைஞர்கள் தங்கள் திறமைகளை மெருகேற்றிக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். கடன் தொல்லைகளினால் பெண்களுக்கு சிறிது மன சஞ்சலம் ஏற்பட்டாலும், செலவுகளைச் சமாளிக்க சேமிப்பு கைகொடுக்கும். மாணவர்கள் பாடங்களை கவனமாக பயில்வதன் மூலம் கடைசி நேர பதற்றத்தைக் குறைத்துக் கொள்ளலாம். நிர்வாகத்தில் உள்ளவர்கள் சோம்பலையும், பணிகளை தள்ளிப் போடுதலையும் தவிர்த்தால், நல்ல வாய்ப்புகளைப் பெறலாம்.

விருச்சிகம்: இதமான அணுகுமுறை மூலம் வியாபாரிகள் பாக்கிகளை எளிதில் வசூலிக்கலாம். இந்த வாரம் உறவுகள் பாராமுகமாய் இருந்த போதிலும், அவர்களின் சுப நிகழ்ச்சிகளுக்கென்று பணமும், நேரமும் செலவு செய்யும் நிர்ப்பந்தமிருக்கும். முதியவர்கள் கண் சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனிப்பது நல்லது. வீட்டை விரிவுபடுத்துவதில் அதிக பணம் முடங்கும். பெண்கள் இதமாகப் பேசினால் உறவுகள் தொடர்கதையாகும் என்பதை அவ்வப்போது நினவில் கொள்வது நல்லது. விலை உயர்ந்த ஆடைவகைகள், நவீன பொருட்கள் ஆகியவை மாணவர்கள் வசமாகும்.

தனுசு: வேலை செய்யும் இடங்களில் மன உறுதியுடன் செயல்பட்டு வாருங்கள். குறை சொல்பவர்களின் எண்ணிக்கை தானே குறைந்து விடும்.இந்த வாரம் சரளமான பண வரவு இருந்தாலும், வீண் செலவுக்கு ஆசைப்பட வேண்டாம். வியாபாரிகள் ,யோசனை செய்த பின் பிறர்க்கு வாக்குறுதிகளை அளியுங்கள்.பணியில் உள்ளவர்கள் அதிகார எல்லையைக் குறைத்துக் கொண்டால், அன்பு வட்டம் தானே விரியும். செய்தொழிலில் சில பிரச்னைகள் இருந்தாலும், உங்கள் வளர்ச்சி சீராக இருக்கும். நன்மைகள் பல கலைஞர்களை நாடி வர, வீண் கௌரவத்திற்கும், ஆணவத்திற்கும் இடம் தராமலிருப்பது நல்லது.

மகரம்: மாணவர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும். இந்த வாரம் சொந்த பந்தங்கள் கேளாமலேயே உதவி செய்து உங்களை மகிழ்விப்பார்கள். பெண்கள் குடும்ப விவகாரத்தில் அடுத்தவர் தலையீட்டிற்கு இடம்கொடாமலிருந்தாலே கருத்து வேற்றுமைகள் தானாய் விலகிவிடும். மேலும் அறிமுகமில்லாத இடங்களில் உரையாடல்கள் அளவாக இருப்பது அவசியம். உயர் படிப்பிற்காக வெளியிடம் செல்பவர்கள் எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நன்மை தரும். கலைஞர்கள் சேமிப்பைக் கரைக்கும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுதல் மூலம், மன உளைச்சலைத் தவிர்க்கலாம்.

கும்பம்: வியாபாரிகள் பணியாளர்கள் கொடுத்த பொறுப்புகளை சரிவரச் செய்கிறார்களா என்று கவனித்துக் கொண்டால், பணமும், பொருளும் வீணாவதைத் தவிர்த்து விடலாம். கலைஞர்கள் தங்கள் பேச்சாற்றலை நல்ல முறையில் பயன்படுத்தினால், பல ஒப்பந்தங்கள் உங்கள் பக்கமே! பணியில் உள்ளவர்கள் நிதி நிலவரத்தை அனுமானித்தபின் காசோலைகளை பிறர்க்கு வழங்குவது நல்லது. பெண்கள் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால், வேண்டிய காரியங்களை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளலாம். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையாமல் பார்த்துக் கொண்டால் வேலைகள் சீராக நடக்கும்.

மீனம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் மனோபாவத்தை உணர்ந்து அதற்கேற்றவாறு உங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டால், அவர்களிடமிருந்து நல்ல பெயரை பெற்றுவிடலாம். சுய தொழில் புரிபவர்கள் சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், உங்கள் அந்தஸ்து உயர்ந்து விடும். பெண்கள் வாக்குவாதங்களை வளர விடாமலிருந்தால், வீண் தொல்லைகளும் வளராது. பொது வாழ்வில் உள்ளவர்கள் எதிரிகள் வகையில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நலம். கலைஞர்கள் தங்கள் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுபவர்களிடமிருந்து விலகி இருந்தால், உங்களுக்குரிய அங்கீகாரம் கிட்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.