Month: May 2014

  • முக்கோணக் கிளிகள் படக்கதை – 2

     

     

    image

    முக்கோணக் கிளிகள்
    (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

    படக்கதை – 2​

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
    வசனம், வடிவமைப்பு : வையவன்
    ஓவியர் : தமிழ்

    ​இணைக்கப்பட்டுள்ளன.

    ​+++++++++++++++​

    jay1

    jay2

    jay3

    jay4

    Share
  • பிறவி வேண்டும்

     

     
    பிச்சினிக்காடு இளங்கோ
    இன்னொரு பிறவிவேண்டும்
    இழந்ததை ஈட்டவேண்டும்

    தூங்கித் தூங்கிக்
    கழித்த பொழுதைத்
    துடிப்பாய் விழித்துச்
    செயல்படவேண்டும்

    ஏங்கி ஏங்கிக்
    கரைந்த காதல்
    மீண்டும் பூக்க
    நீர்விட வேண்டும்

    குடித்துக் குடித்துக்
    களித்த பொழுதைப்
    படித்துப் படித்துப்
    பயனுற வேண்டும்

    எல்லாம் செய்யும்
    பொருளைச் செய்து
    ஏக்கம் இன்றி
    எல்லாம் செய்ய

    இன்னொரு பிறவிவேண்டும்
    இழந்ததை மீட்கவேண்டும்

    விழித்துத் தூங்கும்
    இடைவெளி எல்லாம்
    விழிப்பாய் இருந்து
    செயல்பட வேண்டும்( 07.12.2011)

    மானுடம் வாழ
    மனிதம் செழிக்க
    உடல்பொருள் ஆவி
    உருகிட வேண்டும்

    அன்பால் கலந்து
    அன்பில் கரைந்து
    மலராய்ச் சிரித்து
    மகிழ்ந்திட வேண்டும்

    உயிர்கள் அனைத்தும்
    ஒன்றென எண்ணி
    உள்ளம் கரைந்து
    வாழ்ந்திட வேண்டும்

    இன்னொரு பிறவிவேண்டும்
    இழந்ததை மீடகவேண்டும்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (106)

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் கூடிய மடலுடன் உங்கள் முன்னே மற்றொரு வாரத்தில் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன். நான் இந்த மடலை எழுதிக் கொண்டிருக்கும் இன்று மே மாதம் முதலாம் திகதி. உழைப்பவர்களின் மகத்துவத்தைப் போற்றும் உன்னதமான தினம். வாழ்க்கை முழுவதும் உழைத்து உருக்குலைவோருக்காய் உலகம் முழுவதும் அவர்களை உயர்த்திப் பிடிக்கும் ஒரு தினம்.

    உழைப்பு என்பது எத்தனை மகத்தானதோ உழைப்பதற்காய் எமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களும் அத்தனை மகத்தானவையே. தொழிலாளி எனும் திரைப்படத்தில் கவிஞர் ஆலங்குடி சோமு அவர்களின் வரிகளில் டி.எம்,எஸ் இன் கணீர் குரலில் மக்கள் திலகம் நடித்திருந்த பாடல்,

    ஆண்டவன் உலகத்தின் முதலாளி
    அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
    அன்னை உலகின் மடியின் மேலே
    அனைவரும் எனது கூட்டாளி

    எனும் பாடல் மிகவும் அர்த்தம் வாய்ந்த பாடலாகும். உழைப்பு எனும் பதம் என் வாழ்வில் எடுத்த பங்குகளை நான் ஒரு கணம் திரும்பிப் பார்க்கிறேன். எனது 18வது வயது வரை நான்கு பிள்ளைகள் உள்ள ஒரு குடும்பத்தில் கடைசிச் செல்லப்பிள்ளையாக வளர்ந்த நான் ஈழத்திலிருந்து இங்கிலாந்து மண்ணிலே போடப்பட்ட போது எனக்கு வயதோ வெறும் 181/2 யே. மாணவனாக இங்கிலாந்துக்குள் காலடி வைத்த நான் அந்நாளைய வழக்கப்படி பகுதிநேர வேலையோடு கூடிய முழுநேர மாணவனாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகினேன். உழைப்பின் மகத்துவம் அப்போதுதான் எனக்கு மெதுவாகப் புரிய ஆரம்பித்தது. வாழ்க்கையின் புதிர்களும் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கியது உழைப்பு என்பது வெறும் உதியத்திற்காக செய்வது மட்டுமல்ல ஒரு மாணவனாக நான் வந்த லட்ச்சியத்தை நிறைவேற்றுவதற்காக அஏஏஇய மொழியில் கல்வி கற்பது கூட ஒருவகை உழைப்பே என்பது புரிய ஆரம்பித்தது. உழைப்பின் பலனின் ஆனந்தமும் அப்போதுதான் விளங்க ஆரம்பித்தது. வார விடுமுறைகளில் கட்டிடங்களில் காவல்காரனாகப் பணிபுரிந்து கொண்டு வார நாட்களில் முழுநேர மாண்வனாக வாழ்ந்து கொண்டிருக்கும் போதுதான் என் ஒருவனின் வாழ்ப்வாத்ரத்திற்காகவே இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டுமானல் நான்கு பிளளைகளை வளர்த்தெடுக்க என் பெற்றோர் செய்திருக்கக்கூடிய உழைப்பின் கடினம் புரிய ஆரம்பித்தது. எனது பெர்றோர் எனக்காக செய்தவைகள் ஏதோ அவர்களது கடமை என்ற வகையில் அதுவரைகாலமும் வாழ்ந்து முடித்த என் வாழ்க்கையின் தன்னலத்தை எண்ணியபோது என்மீது எனக்கே வெறுப்பு ஏற்பட்ட கணங்கள் எண்ணிலடங்காதவை.

    மாணவனாக இருக்கும் போதே மணமுடித்துக் கொண்ட எனது கல்வியை முடித்துக் கொள்வதற்காக என் அன்புக்குரிய என் மனைவி செய்த கடுமையான உழைப்பு , ஒரு மகனை ஈன்ற பின்னும் கூட முழுநேர பணியுடன் இரவு நேர கல்லூரிப் படிப்பின் மூலம் தனது கல்வித்தகமைகளைப் பெற்றுப் பட்டம் வாங்கிய என் மனைவியின் கடின உழைப்பு எனக்கு மேலும் பல பாடங்களைப் புகட்டியது.

    இந்த உழைப்பாளர் தினம் என்பதெல்லாம் எதற்காக என்று எண்ணும் பலர் இருக்கிறார்கள். இதை எமது வாழ்நாளில் நாம் செய்த உழைப்பினை அல்லது செய்திருக்கக்கூடிய செய்யாமல் விட்டுப்போன உழைப்பினை மீள்பரீசீலிப்பதற்கான ஒருநாளாகக் கூட எடுத்துக் கொள்ளலாம் தானே !

    இன்று என் கண்முன்னே நான் காணும் பலவகை மனிதர்கள். தமக்குக் கொடுக்கப்பட்ட நேரம் அனைத்தையும் கடும் உழைப்பில் பயன்படுத்தித் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவைத்துக் கொண்டிருப்போர் ஒருபுறம், தாம் உழைக்காமல் இருப்பதனை நியாயப்படுத்தப் பலவிதமான காரணங்களைக் கண்டுபிடித்துச் சோம்பலில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒருபுறம், உழைக்க வேண்டும் எனும் அவா இருந்து உழைக்க முடியமால் வேதனையுறும் உடல் ஊனமுற்றோர் ஒருபுறம் என எத்தனையோ வகையினர்.

    இவ்வாழ்க்கை எமக்குக் கிடைத்த மகத்தான வரப்பிரசாதம். எமக்குக் கிடைக்கும் தருணங்களைப் பயன்படுத்தி எமது உழைப்பின் மூலம் எமது நிலையை உயர்த்துவதோடு எம்மால் உதவக்கூடியவர்களுக்கு உதவும் மனப்பான்மையோடு வாழ்வதே இவ்வாழ்க்கையை எமக்குக் கொடுத்த அந்த அனைவருக்கும் பொதுவான சக்திக்கு நாம் செய்யும் கைமாறாகும்.

    எனது அன்பினிய உறவுகள் அனைத்திற்கும் எனது அன்பான உழைப்பளர் தின வாழ்த்துகள்

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • ஓர் அந்தியின் சந்திப்பில்…

    தி.சுபாஷிணி

    வழக்கத்திற்கு மாறாக, வாசற்படிகள் உயரமாய்த் தோன்றின. கால்களின் கனமும், மனத்தின் கனமும் அழுத்த ஏறுவதில் மயக்கதயக்கங்கள் ஏற்பட்டன. சில நிமிடங்கள் அவற்றைப் பார்த்ததில் கழிந்தன. “அம்மா! ஏதாவது பிரச்சினையா? நான் உதவட்டுமா?” என-, என்னை இறக்கிவிட்ட ஆட்டோக்காரர் வினவினார். “இல்லைங்க” என தலையசைத்தேன். மனமில்லாதுதான் ஆட்டோ நகன்றது. எப்படியோ படிகளில் ஏறி, வீட்டிற்குள் நுழைந்துவிட்டேன். நீண்ட குறுகிய பாதை, என்மேல் ஒரு இறுக்கத்தைப் பாய்ச்சியது. இதன் முடிவில் ஒரு உயரமான படி. அதில் தடுக்கி, தடுமாறி விழப்போனேன்!

    “அடவந்துவிட்டாயா? பார்த்து வரக்கூடாதா?” என்கின்ற குரல், என்னைச் சரியாக, விழாமல் காப்பாற்றியது. இந்தக் குரல் இங்கு எப்படி-?

    tkc“கலவரப்படாதே சுபா! நான் உடல் தேறிவிட்டேன்! அனாவசியமாக வேலை தடைபடக்கூடாது என மோகனையும், அண்ணாமலையையும் கூட்டத்திற்கு அனுப்பிவிட்டேன். இப்போது காந்தியைப் பற்றிக் கூறிக் கொண்டிருப்பார்கள்” என்றார். பக்கத்தில் பிரேமா, தலைமாட்டில் செண்பகவல்லி, பக்கவாட்டில் என் அத்தை. இன்னும் சில பேர்கள் இருந்தனர். நான் நன்றாகத் தேறிவிட்டேன். என்ன கொண்டு வந்திருக்கின்றாய் எனக்கு? கேட்டுவிட்டு ஏதோ சொல்கிறார். அங்கு சிரிப்பு அலை அடித்து மோதுகிறது. சட்டென்று, அப்பா யாரையோ அழைப்பதுபோல் கையை தூக்குகிறார். பின் இரு கைகளையும் தூக்கி, எதையோ பற்றுகிறார். ஆனால் அது முடியவில்லை. அலைபாய்கிறது. உடம்பு தூக்கிப்போடுகிறது. சூழ்நிலையின் மாற்றம் புரிந்து, மருத்துவரை அழைக்க சில நொடிகள் ஆகிறது. மருத்துவர் வருகிறார். அவர் இதயத்தைப் பிசைகிறார். நெஞ்சில் குத்துகிறார். அவ்வளவுதான், எல்லாம் சில நிமிடங்கள்தான். இயக்கம் நின்றுவிடுகிறது. “மாஸிவ் ஹார்ட் அட்டாக்” என்று கூறிவிட்டு மருத்துவர் வெளியேறுகிறார்.

    ‘அப்பா’ என அவரைப் பிடிக்க கைநீட்டுகின்றேன். காற்றுதான் என் கையில் அகப்பட்டது. கைககள் திண்ணையில் விழுந்தன. அத்திண்ணை காலியாகக் கிடக்கின்றது-. மெதுவாக ஏறி அமர்கின்றேன். முன் தெரிந்த முற்றம், என் குழப்பத்தை இன்னமும் விரிவாக்கி, இருபக்கமும் பூட்டிய கதவுகள் அமைதியின் அழுத்தத்தை மேலும் கனமாக்கின. சில நிமிடங்கள் கழிகின்றன.

    திண்ணையை விட்டு இறங்கி முற்றம் முடியும் இடத்தில் ஏறி, இடப்பக்கம் ‘21ணி’ என்னும் இலக்கம் உள்ள கதவைப் பார்க்கின்றேன். பல நாட்கள் மூடிய இறுக்கம் அதில் தெரிகின்றது. கதவையொட்டிய சன்னலைக் கவனிக்கின்றேன். கதவில் இலேசான இடைவெளி காணப்படுகின்றது. சன்னல் கம்பிகளின் இடையே கையால் கதவைத் தள்ளுகின்றேன். அதன் பழமையின் ஸ்பரிசத்தை உணர்கின்றேன். கதவு திறக்கின்றது. காட்சி விரிகின்றது.

    பல பத்திரிகைகள், இதழ்கள், மௌனித்துக் கிடக்கின்றன. அவைகள் பிரிக்கப்படாத ஏக்கக் குவியல்களுக்குள் தங்களை மறைத்துக் கொண்டிருக்கின்றன. பிரிக்கப்படாத தபால்களும், படிக்கப்படாத கார்டுகளும் எவற்றைத் தாங்கி நிற்கின்றனவோ! அதன் பதில்களைத் தாங்கிவரும் என தூதனுப்பிய நெஞ்சங்களின் காத்திருப்பு அவற்றில் தெரிகின்றன.

    புத்தகங்கள் நிறைந்த மேஜை. பக்கத்தில் காலியான அந்தக் காலத்து நாற்காலி. அதன்மேல் இருந்த துண்டு பல நாட்களாக மாற்றாததை அறிவிக்கின்றது. பக்கத்தில் சாய்வு நாற்காலி. மேலே, சுவரைப் பார்க்கின்றேன். “என் குருநாதர் வல்லிக்கண்ணன்” என என் காதில் குரல் ஒன்று ஒலிக்கின்றது. அந்த அறையின் இடதுபக்க ஒற்றைப் பெஞ்சில் கிடந்த பழைய செய்தித்தாள்கள், பத்திரிகைகள் தோழர். பால்முகம்மது வீட்டிற்கு வந்து வெகுநாட்களாகிவிட்டன என பறைசாற்றுகின்றதே என எண்ணிக் கொண்டிருந்த வேளையில், “ஏதாவது ஷூட்டிங்குக்குப் போய் இருப்பான்” என்று என் காதில் ஒரு குரல் சொல்லிப் போயிற்று.

    ஏன் கண்ணாடி மேசைமேல் விரித்து வைத்த வண்ணம் இருக்கின்றது! டெலிபோன் எண்கள் எழுதி வைக்கப்பட்ட நோட்டில் ஒரு பென்ஸிலை வைத்து திறந்து கிடக்கின்றது. தொடுகை இல்லா தொலைபேசி வாட்டமோடு அமர்ந்திருக்கின்றது. கொடியில் லாவண்டர் கலர் சட்டையும், ஒரு துண்டும் தொங்கிக் கொண்டிருக்கின்றது. அதன்கீழே கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் எவர்சில்வர் சாடி, டம்ளருடன் ஏதோ மௌனத்தில் உரையாடிக் கொண்டிருக்கின்றது போல் ஒரு உணர்வு.

    கண்கள் பரந்து பார்க்கப்பார்க்க, அந்த அறையின் இன்மையைப் பகர்கின்றது. இன்மையின் வெறுமையும், தனிமையும் என்னை மீண்டும் அந்த திண்ணையில் அமரச் செய்கின்றது.

    இவ்வீட்டை ஆட்சி செய்த ‘தி.க.சி.’ என்கின்ற ஆளுமை தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பட்ட ஆளுமைகளையும், இந்த முற்றம் தாண்டி, இடதுபக்க அறைக்கு வரச்செய்கின்றது என்றால், அந்த ஆளுமையின் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கின்றதே! அந்த பிரமிப்பின் சுழற்சியின் ஆழத்திற்குள் சென்று கொண்டிருக்கையில்,

    “அம்மா! எப்ப வந்தீங்க! வந்து ரொம்ப நேரமாகிவிட்டதா. வாங்க போகலாம்! ஆட்டோ கொண்டு வந்திருக்கின்றேன்” என விளித்தது, அந்த பிரமிப்பிலிருந்து என்னை விடுவித்தான் அந்த அருமையான அன்பன் சரவணன். பாரதிக்கு கண்ணன். தி.க.சி.க்கு சரவணன். இருவரும் கொடுத்து வைத்தவர்கள்.

    ‘இதோ’ எனத் திண்ணையைவிட்டு இறங்குகின்றேன். ‘போகிறாயா! பார்த்துப் போய்விட்டு வா’ என்றது… அப்பாவின் குரல்… மீண்டும் அப்பா! இங்கு எப்படி? புதிரிலிருந்து விடுபடுமுன் சரவணன் ஆட்டோ முன் நின்றுவிட்டான். ஆட்டோவில் அமர்கின்றேன். ஆட்டோ பெருமாள்புரம் நோக்கிச் செல்கின்றது. ஆமாம்! எப்படி அப்பா இங்குவந்தார்? இன்னமும் கேள்விச் சூழலில் நான் இருக்கின்றேன்.

    19சி, பெருமாள்புரம் & “அங்கு வரவா” என வினவியதற்கு 21ணி, சுடலைமாடன் கோவில் தெருவைக் கைகாட்டியது 19சி பெருமாள்புரம்& ஒரு கார் நுழையும் அளவு பெரிய கேட். அது வசதியாகச் செல்வதற்கு ஒரு ‘சரிவை’ கொத்தனார் கட்டிக்கொண்டிருந்தார். உள்ளே நுழைந்ததும் நன்றியாய் அவ்வீட்டைப் பார்க்கின்றேன்.

    “வாருங்கள்! மாமா அந்த அறையில் இருக்கிறார்கள்” என வரவேற்றார் அவரது மருமகள். எப்போதும் தன் மருமகளைச் சொல்லும்போதெல்லாம் ‘பிரியமானவள்’ என்று சொல்லுவார்.

    நானும், சரவணனும் தயங்குகின்றோம். ‘மாமாவை எழுப்பலாம், எழுப்புங்கள்’ என்றார். வண்ணதாசனும் வந்து, ‘உள்ளே போங்கள்’ என்றார்.

    தூக்கமாகத் தெரியவில்லை. உடம்பின் நோய்மையின் ஆயாசத்தில் படுத்திருப்பது தெரிகின்றது. சரவணன் அவரைத் தொட்டு எழுப்பி, உட்கார வைத்தான்.

    ‘சுபாஷிணி வந்திருக்கின்றேன்’ என்றேன். (அதுசரி! அந்த வீட்டில் ஏன் என் அப்பா இருந்தார்?). ‘வாம்மா! வந்துவிட்டாயா? பிரயாணம் வசதியாக இருந்ததா? சாப்பிட்டாயா?’ என்றார் தி.க.சி. எப்படி இவரால் எந்த நிலையிலும் இப்படி அன்பாக இருக்க முடிகின்றது?

    அவர் உடலின் ஆயாசம் வெளிப்படையாகத் தெரிகின்றது. அதையும் மீறி, அவரது இயல்புக்கு மீறி மனச்சோர்வு தெரிகின்றது. இது என்னுள் ஒருவித அச்சத்தைக் கிளறுகிறது. அந்த அறை அவ்வளவு வெளிச்சத்தையும், நவீனத்தின் ஒழுங்கைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும், மீறித் தெறித்த பதட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டது.

    ‘மி ணீனீ sவீஸீளீவீஸீரீ’ என்று அவரிடமிருந்து விழுந்த வார்த்தைகள்… என்னெஞ்சையும் வயிற்றையும் கலக்கியது. நான் சரவணனைப் பார்க்கின்றேன். அவன் அன்பின் குழந்தை. கலவரமாய் என்னைப் பார்க்கிறான்.

    ‘சரவணா! அந்த அலமாரியிலிருந்து அந்த நாட்குறிப்புப் புத்தகம் ஒன்றை எடு. அதில் என்றென்றும் அன்புடன் என்று எழுதி என்னிடம் கொடு’ என்றார். அவன் எழுதிக்கொடுத்தவுடன் ‘தி.க.சி.’ எனக் கையொப்பமிட்டுக் கொடுத்தார். அதுதான் அவரது கடைசி கையெழுத்து என்றும், எனக்குக் கொடுக்கப்பட்ட கடைசி புத்தகம் என்றும் நான் அறியவில்லை.

    “பார்த்தாயா! சந்தியாப் பதிப்பகம் நேற்றே அனுப்பிவிட்டார்கள்” என்று சந்தோஷமாய் சிரித்தார். அவருக்கு என் நன்றியைச் சொல் என்றார்.

    ஆமாம்! சந்தியா சௌந்திரராஜனுக்கும், நடராஜனுக்கும் தி.க.சி. அன்பர்கள் கடன்பட்டவர்களே!

    அய்யா புத்தகம் கொடுப்பதையும், நான் அவரிடமிருந்து வாங்கிக் கொள்வதையும் என் அலைபேசிக் கேமிராவில் சரவணன் பதிவு செய்து கொண்டார். ஏதோ வேலையிலிருந்த வண்ணதாசன் அறைக்குள் வந்து வாங்க என அழைத்து, விசாரித்துவிட்டுப் போனார்.

    ஆமாம்! என் அப்பா எப்படி அந்த வீட்டில் இருந்தார்? மனம் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.

    “அம்மா! செம்மொழிக் கூட்டத்திற்குப் போனாயா? ஜனனேசனைப் பார்த்தாய் என்றாய்! எங்கு பார்த்தாய்?” எனக் கேட்டார். நானும் அதற்குப் பதிலிறுத்தேன். அப்போதுகூட நான் வித்தியாசமாய் உணரவில்லை.

     “அம்மா! இந்த பி.ஏ. கிருஷ்ணன், ஐன்ஸ்டீன் பற்றி எழுதியது படித்தாயா? சே! என்னமா எழுதியிருக்கின்றார். என்னைப் பற்றி கணையாழியில் பேரா.எஸ்.தோத்திரி குறிப்பிட்டு இருக்கிறார். அவருக்கு என் நன்றியைச் சொல்லு”. (ஆனால் அப்போதுகூட அறியவில்லை. பேரா.எஸ்.தோத்தரி கூடிய விரைவில் அய்யாவிற்கு நினைவுக் கட்டுரை தினமணியில் எழுதுவார் என்று). அவர் கூறிய நன்றியை இவரிடம் சொல்லலாம். ஆனால் பேரா.தோத்தரி எழுதிய கட்டுரை பற்றி அய்யாவிடம் எப்படி சொல்வது? யார் சொல்வது? தெரியலியே! ஆனால் என் அப்பா! ஏன் என்னுடனே வந்து கொண்டிருப்பதுபோல் இருக்கின்றது!

    “ரொம்ப களைப்பாக இருக்கின்றது, படுத்துக்கட்டுமா?” என்று கேட்டவர், மேலும் பேச்சைத் தொடங்கினார்.

    அவர் முகம் கறுத்து இருக்கின்றது. கால்கள் வீங்கி இருக்கின்றன. கைகளும் வீக்கத்தின் தொடக்கத்தில் இருக்கின்றன. இப்படி அய்யாவைப் பார்த்ததும் எனக்கு என்னவோ பண்ணியது. வலித்தது & தலையிலிருந்து கால் விரல் வரை ஒவ்வொரு அசைவும் வலித்தது. சரவணனுக்கு நம்பிக்கை இருக்கின்றது, “அம்மா! அய்யா கெதியாத்தான் இருக்கார். கவலைப்படாதீங்க!” என்கின்றான்.

    அன்று இரவு ஒரு மணிக்கு கால் தடுமாறி கீழே விழுந்த தி.க.சி. தானே எழுந்து வீட்டிற்குள் வந்து நாற்காலியில் அமர்கின்றார். பின் ஒடிந்து தொங்கிய கையைத் துண்டால், மறுகையின் உதவிகொண்டு கட்டிவிட்டு வலியைப் பொறுத்துக்கொண்டு காலை 5 மணிக்காகக் காத்திருந்தார். பின் ஓவியர் பொன். வள்ளிநாயகத்திற்குப் போன் செய்திருக்கின்றார். பக்கத்து வீட்டிலிருக்கும் சுந்தரிக்குக்கூட அவர் சொல்லவில்லை. அகால வேளையில் யாரையும் தன்பொருட்டுத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அந்த வலி இருந்த அந்திக்காலையில்கூட டெலிபோனில், “கவலைப்படாதே! நான் கையை சரி பண்ணிக்கொண்டு வருகின்றேன்” என்று பேசிவிட்டுப்போன தி.க.சி.யா இன்று இல்லை எனத் தோன்றுகின்றது.

    “இறப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அது இயற்கையான நிகழ்வு. அதைப்பற்றி பரவாயில்லை. என் ஞான ஆசான் பாரதி வழிதான் நான் வாழ்ந்திருக்கின்றேன். என் குருநாதர் வல்லிக்கண்ணன், பாரதிதாசன், வள்ளலார் இப்படியான சத்குருவோடுதான் என் வாழ்க்கை. நவீன அரசியலில் அறநெறி இல்லாமல் போய்விட்டது. எல்லாவற்றிற்கும் அறம்தான் முக்கியம். அம்மா! எனக்கும் பலவீனங்கள் இருந்திருக்கலாம். சில தவறுகள் செய்திருக்கலாம். ஆனால் நான் தமிழுக்கு ஒரு சில துளிகளாவது செய்து இருக்கின்றேன். தமிழனாய்ச் சாகின்றேன். வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! வாழ்க பாரத மணித்திருநாடு!” என்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறார்.

    தமிழ் வாழும்! சுபாஷிணிகள் வாழ்வார்கள்! சரவணன்கள் வாழ்வார்கள்!

    நண்பர்களே! வாழ்வின் அந்தியில் யாராவது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவார்களா? நம் அய்யா பாடுகிறார். எண்ணம் முழுவதும் தமிழ்தான். கலை, இலக்கியம் அறத்தை அளித்து, வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும் கூறினார்.

    (100% உண்மை என்று என் காதில் ஒரு குரல். அட அப்பாவுடையது).

    பின், தன் இருகரங்களையும் கூப்பி, கண்ணீர் மல்க, “நினைவுகள் அழிவதில்லை, நினைவுகள் அழிவதில்லை. சரி, விடைபெறுகின்றேன்” என்கின்றார்.

    “சரவணன்! என்ன அய்யா, இப்படிச் சொல்கிறார்!” என்கின்றேன்.

    அவனும் சொல்வது அறியாக் குழந்தையாய் நிற்கின்றான்.

    பின், “படுத்துக் கொள்கின்றேன்” என்கின்றார். “நாங்கள் கிளம்புகின்றோம்” என்றோம். “அவர்கள் வேலையாய் இருந்தாலும் சொல்லிக் கொண்டு போங்கள்” என்கிறார்.

    அந்தவேளையிலும், எப்படி வழிநடத்துகிறார் பாருங்கள் நண்பர்களே!

    என்னிலை, எங்கள் நிலை & இரண்டும் வார்த்தைகளில் வடித்திட இயலாது.

    நாங்கள் அருந்திய காப்பிக் கோப்பைகளை, அய்யாவின் மருமகள் வள்ளி அவர்களிடம் கொடுத்துவிட்டு, ‘போய் வருகின்றோம்’ என்று அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டோம். நாங்கள் வந்த ஆட்டோ வாசலில் காத்திருந்தது. ஏறி அமர்ந்து கொண்டோம். ஆட்டோ புறப்பட்டது. நாங்கள் பேசிக் கொள்ளவில்¬லை. மௌனம் வியாபித்தது. ஆனால், மௌனத்தின் அலைகளை விலக்கி மூன்றாவது ஒருவர் என்னுடன் பயணிப்பதை உணர்ந்தேன்.

    “கவலைப்படாதே! அவரும் உன்னுடன் இருப்பார்” என்று உட்குரலாய் ஒலித்தார்.

    மீண்டும் அய்யாவைப் பார்ப்பது சாத்தியமில்லை என உணர்த்தியது. அந்தக் கண்ணீரும் கைக்கூப்பின நெகிழ்ச்சியான விடைபெறுதலும் என்னுடன் பயணித்தது. நாங்கள் இப்போது நால்வரானோம். நண்பர்களே!

    ஆட்டோ போய்க் கொண்டிருக்கின்றது. அது சுடலைமாடன் கோவிலுக்குப் போகாவிட்டாலும், நாங்கள் எங்கிருக்கின்றோமோ அங்கே, அந்த இடத்தை “21, சுடலைமாடன் கோவில் தெரு” என்று, அய்யாவின் உகந்த இடமாக்கிடுவோம்! என்று நான் நினைத்ததற்கு, “அப்படியே செய்யுங்கள்” என்று இருகுரல்கள் ஒலித்தன.

    “ஹலோ! சுபாஷிணியா! அம்மா! நல்லா இருக்கீங்களா? இப்போது பேசலாமா? (இந்த வினயம் யாருக்கு வரும்?) இன்று தினமணியில் பேரா.ஞானசுந்தரம் நீதியரசர் மகராஜன் பற்றிக் கட்டுரை படித்தாயா? என் கடிதமும் வந்திருக்கின்றது. எனக்குத் தெரியும். நீ அதைப் படிக்கமாட்டாய் என்று! ‘ஹாஹா’ என வாய் கொள்ளாச் சிரிப்பு! பேரன், மகள்கள் எல்லோரையும் கேட்டதாகச் சொல்லு!” – தொலைபேசியின் தொடர்பு அறுகிறது. நான் திகைத்துப்போய் நிற்கின்றேன்.  0462 2333456 & என்று கைகள் என்னையறியாது எண்களை வருடுகின்றன. என்னையறியாது விரல்களின் அழுத்தத்தில் அழைப்பு போய்விடுகிறது. அந்தப் பக்கம் “ஹலோ! தி.க.சி. வீடுங்க? தி.க.சி. வீடுங்க” என்னும் குரல். வண்ணதாசன் குரலாக இருக்கலாம். இல்லை, அவர் தம்பி சேதுவின் குரலாகக்கூட இருக்கலாம்.

    என்னால் பதில் பேசமுடியவில்லை. வாய் உலர்ந்து மேல் அன்னமும், கீழ் அன்னமும் ஒட்டிக் கொண்டன. இதயம், இதுகண்டு நெகிழ்ந்து கண்ணீரை அனுப்புகின்றது.

    Share
  • குறளின் கதிர்களாய்…(26)

     

    செண்பக ஜெகதீசன்

         

    உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்

    கச்சாணி யன்னா ருடைத்து.

          -திருக்குறள் -667(வினைத் திட்பம்)

     

    புதுக் கவிதையில்…

    உருளும் பெரிய தேரும்

    உருண்டோடிச் சென்றிடத்

    தேவை,

    உருவில் சிறிய அச்சாணி..

     

    இதுபோல் திடமொடு

    மாந்தர்

    அகிலத்திலுண்டு..

     

    அதனாலவர்

    உருவத்தை வைத்து

    எள்ளி நகையாடுதல்

    ஏற்றதல்ல…!

     

    குறும்பாவில்…

    பெருந்தேருக்கு சிறு அச்சாணிபோல்

    புவியில் மாந்தர் உளதால்,

    உருவம் கண்டு எள்ளல் உதவாது…!

     

        மரபுக் கவிதையில்…

    தேரது பெரிதாய் இருந்தாலும்,

         திடமாய்த் தெருவில் ஓடிடவே

    வேரதாய் வேண்டும் நிச்சயமாய்

         உருவில் சிறிய அச்சாணி,

    பாரது சிறந்திட உருசிறிதாய்ப்

         பல்லோர் இங்கே உளதாலே

    நேரதாய்க் கொண்டிடு உள்ளத்திலே,

         நீக்கிடு சிறிதெனும் நினைவினையே…!

     

    லிமரைக்கூ…

    சிறிய அச்சாணியால் ஓடுது தேர்,

    குறைவாய் எண்ணாதே..

    சிறிய உருவினிலும் சிறப்புடையோர் பார்…!

     

    கிராமிய பாணியில்…

    தேரோட்டம் தேரோட்டம்

    தெருவுலத்தான் தேரோட்டம்..

     

    பாருபாரு பெரிய தேரு

    சீரா ஓட சின்ன அச்சாணி..

     

    தேரோட்டம் தேரோட்டம்

    தெருவுலத்தான் தேரோட்டம்..

     

    அதால,

    ஆளப்பாத்து உருவம்பாத்து

    எடபோடாத,

    அச்சிபோலச் சின்னவரும்

    அறிவு தெறம உள்ளவுருதான்..

     

    அந்த

    ஆளப்பாத்து உருவம்பாத்து

    கொறசொல்லாத..

     

    தேரோட்டம் தேரோட்டம்

    தெருவுலத்தான் தேரோட்டம்…!

     

    -செண்பக ஜெகதீசன்…

     

     

     

    Share
  • நினைப்பது நிறைவேறும்.. நீயிருந்தால் என்னோடு

    நினைப்பது நிறைவேறும்.. நீயிருந்தால் என்னோடு –  (கவிஞர் மணி)

    கவிஞர் காவிரி மைந்தன்

    ஒரு திரைப்படத்திற்கு என்ன பெயரிடுகிறோமோ என்பது மிக முக்கியமான விஷயம்! அப்பெயர் சூட்டப்பட்டபின் – பாடல்கள் பிறக்கும்பொழுது படத்தின் பெயர் பாடலாசிரியருக்கு நினைவுக்கு வரும்! அப்படி வந்த நினைவையே பல்லவியாக்கி இனியதொரு பாடல் இதோ வருகிறது!

    ‘நினபை்பது நிறைவேறும்’ திரைப்படத்திற்காக எம்.எல்.ஸ்ரீகாந்த் – இசையமைத்து வாணிஜெயராம் அவர்களுடன் பாடிய பாடல்! கவிஞர் மணி என்பவர் எழுதிய பாடல் என்பது புதிய செய்தி!! இனிமைதவழும் கானமாய் இளமையை ஏந்திவருகிறது! கவிதை கால் முளைத்து வரும் அழகைப்போல!!

    ஒருவரில் ஒருவர் ஒன்றிக் கலக்கும் உன்னத உறவினையும் அதில் பிரிவுவந்தால் தாங்கிட இயலாத் தன்மையையும் கவித்துவமொழியல் கலந்து தருகிறார் பாடலாசிரியர்!

    தெள்ளுத்தமிழ் உள்ளமதை கொள்ளை கொள்ள முயலும் என்பதனை சரணத்தில் ஒய்யாரமாய் சொல்லியிருக்கும் அழகில் நாம் சொக்கிப்போகிறோம்!

    காதலர்கள் நினைப்பது நிறைவேற வேண்டும் என்பதும் அவர்கள் நலம்பெற வாழ வேண்டும் என்பதும் விழைவாகிறது! எப்போது தெரியுமா?
    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு…

    படம்: நினைப்பது நிறைவேறும்
    குரல்கள்: M.L ஸ்ரீகாந்த், வாணி ஜெயராம்
    இசை: M.L.ஸ்ரீகாந்த் பாடல்: மணி

    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு…
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு…
    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு…
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

    இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..
    இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு..
    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

    ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்..
    ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்..
    ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்..
    ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்..

    தனிமை உனக்கேது…தாங்கும் இதயம் எனக்கேது..
    தனிமை உனக்கேது…தாங்கும் இதயம் எனக்கேது..
    உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு..
    உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு..

    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..
    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

    தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி..
    இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்..
    தேன் சுவைத்தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி..
    இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்..

    காதல் கவிபாடு…காலமெல்லாம் உறவாடு..
    காதல் கவிபாடு…காலமெல்லாம் உறவாடு..
    மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது..
    மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது..

    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..
    இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு..
    இன்றுபோல் வாழ்ந்திடலாம் பண்போடு..

    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு..
    நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு..

    நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் – Ninaipathu Niraiverum – YouTube – Google+ – M.L. Srikanth
    Share
  • திருமால் திருப்புகழ் (72)

     

    கிரேசி மோகன்

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ———————————————————-
    ’’கண்ணனை நெஞ்சே கருது’’
    ——————————————————-

    ஓவியம்  : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

     

     

    காதுகண்வாய் மூக்குடல், பூதப் புலனைந்தும்,
    ஏது உனக்கென்று எண்ணினையோ, – சூதிலன்று
    பெண்ணவள் பாஞ்சாலி இன்னல் களைந்தவனை
    கண்ணனை நெஞ்சே கருது….

    கரம்தயிர் வெண்ணை கவர்ந்தவர் வீட்டில்,
    அறம்பொருள் இன்பம் அனைத்தும் – தரும்பரம்,
    பின்னிவைகள் எச்சமுற, முன்னிருத்தும் மோட்ஷமதை,
    கண்ணனை நெஞ்சே கருது….

    கிளரொளி இன்பம் இளமையில் தங்கும்,
    தளரளி மூப்பதில் தேயும், – மலரளித்(து),
    உன்னகத்தை பக்தி உணர்வால் உருமாற்ற,
    கண்ணனை நெஞ்சே கருது….

    தூய யமுனைத் துறைவனை, நந்தகோபன்
    ஆயர் குலம்குதித்த ஆரமுதை, -சேயாக,
    இன்னமுதாய் பேய்ச்சி இருமுலை உண்டவனை,
    கண்ணனை நெஞ்சே கருது….

     
    “நாணல், யமுனா நதிநெல் நிமிர்தலாய்,
    கூனல் அர்ஜுனரை கீதையால்,-நாணதிர,
    விண்ணென்று காண்டீப வில்லெடுக்க வைத்தவனை,
    கண்ணனை நெஞ்சே கருது”!!

    ————————————————————————————————————–

    படங்களுக்கு நன்றி

    Share
  • மே தின வாழ்த்துகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    மே தினம் என்றால் பொதுவுடமைக் கட்சி போன்ற ஒரு சில கட்சிகளின் பாற்பட்டது என்று கருதிக் கொண்டிருக்கிறோம். இதையும் தவிர்த்து சில அரசியல் கட்சிகள் மே தினத்தைக் கொண்டாடுகின்றன. வழக்கம் போல ‘ஒரு நாள் விடுமுறை மறுநாள் பணி’ என்ற நிலையே இன்றும் இருக்கிறது. இன்று நாம் தொழிலாளர்கள் நல்வாழ்வைப் பற்றி சிந்திப்பதே இல்லை. மேலே குறிப்பிட்டுள்ள கட்சிகளிலும் கூட தொழிலாளர் நலம் பற்றியும் அவர்தம் சிரமங்கள் பற்றியும் அதிகம் அக்கறை கொள்ளாத சூழ்நிலையே காணப்படுகிறது. இந்தியா போன்ற கீழ்திசை நாடுகளில் மே 1ம் தேதி மே தினமாகவும், அமெரிக்காவில் செப்டம்பர் 1 ம்தேதி தொழிலாளர் தினமாகவும் கொண்டாடப்படுகின்றன. முதலாளித்துவ நாடாகிய அமெரிக்காவில் கூட ஒபாமா தலைமையில் இயங்கக் கூடிய அமெரிக்க அரசு ஒரு மணி நேரத்திற்கு 10. 1 டாலராக ஊதியம் நிர்ணயம் செய்துள்ளது. இது முந்தைய நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தைக் காட்டிலும் 30 சதவிகிதம் அதிகமான ஊதியமாக நிர்ணயம் செய்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் நமது கீழ்திசை நாடுகளிலோ தொழிலாளர்களுடைய நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வே இருப்பதாகத் தெரியவில்லை. வங்காள தேசத்தின் தலை நகரில் சமீபத்தில் நடந்த தீ விபத்தில் பல நூறு தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி மாண்டுள்ளனர் என்பது வேதனைக்குரிய விசயம். பாதுகாப்பற்ற சூழ்நிலையே தொழிலாளர்களின் வாழ்வில் உள்ளது. இது அங்குமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் நாடான சீனாவிலும், கொரியாவிலும், நம் இந்தியாவிலும்கூட இது போன்ற நிலையே காணப்படுகின்றன. அது வெறும் உதாரணம் மட்டும்தான். இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் சூழ்நிலைகளின்பால் சென்றுள்ள நாம் தனி மனித வளங்களை மட்டுமே, பேணுகின்றோம். அந்த ஒரு சில மனிதர்களின் வாழ்விற்கு அடித்தளமாக இருக்கக்கூடிய தொழிலாளர்களின் நிலை இன்றும் அவலமாகவே உள்ளது. கனிம வளங்கள் நிறைந்த சுரங்கங்களில் பணிபுரிபவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் போன்றோரின் நிலையும் போற்றப்படுவதாக இல்லாதிருப்பது வேதனைக்குரியது. மழை பொய்த்தால் உயிர் மாய்த்தலும், சுரங்கங்களில் மாட்டிக்கொண்டால் மடிதலும் வெளி உலகிற்குத் தெரியாமலே நடைபெற்றுக் கொண்டிருக்கிற தினசரி அவலங்கள். இந்த நிலையிலிருந்து நாம் மாறி, ஆட்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கியக் காரணமாக இருக்கக்கூடிய தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைக் காப்போம், அதனைப் பெருமளவில் பெருக்குவோம். இன்று இந்தியா பொருளாதாரத்தில் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே மூன்றாவது பெரும் பொருளாதார நாடாக மாறி தனிப்பெரும் சிறப்புப் பெற்றுள்ளது. நாம் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டுமென்றால் இதற்குக் காரணமான நம் தொழிலாளர் சகோதரர்களின் உழைப்பைப் போற்றும் வகையில் உழைப்பாளர் தினத்தைப் போற்றுவோம். உழைப்பவருக்கு உரிய பங்கினை மறுக்காது அளிப்போம். காகங்களைப் போல பகிர்ந்து உண்டு வாழ்வோம். ஜெய்ஹிந்த்!

    Share
  • மே தின வாழ்த்துகள்

     

    2692154989_b627746930

    உழைப்பாளர் தினம் என்று உரக்கச் சொல்லி..

    உலகம் மகிழ்கின்ற திருநாளிது!

    உழைப்பின்பின் உழல்வதால்தானே

    உயரங்களை நாம் எட்ட முடிகிறது!

    அளவிலாத் துயரங்கள் அடிமைகளாய் வாழ்க்கை

    நெடுநாளாய்த் தொடர்ந்திருந்த பெரும்கதையை மாற்றி

    உரிமைக்குக் குரல் கொடுக்கும் தோழர்களால் ..

    உயிர் பெற்று வந்ததிந்த மேதினமாம்!!

    புவியெங்கும் வாழ்கின்ற மாந்தரெல்லாம்

    ஏதோ ஒரு விதத்தில் உழைப்பவர்தாம்!

    உழைக்காத எவருமிங்கே தேவையில்லை!

    மணிநேரக் கணக்கினிலும் வரைமுறைகள்

    வாரத்தில் ஒரு சில விடுமுறைகள்..

    வகுத்தளித்த நல்லோர்க்கு நன்றி சொல்வோம்!!

    கடமைகளும் உரிமைகளும் சரிநிகர்தான் எனும்

    தத்துவத்தை என்றும் நாம் போற்றி வைப்போம்!!

    உழைப்பாளர் தினத்தின் பெருமைதனை பறைசாற்றி

    உயர்ந்துநின்று ஒருமித்தக் குரலிடுவோம்!!

    உழைப்பாளர் தின வாழ்த்துகள்!..

    அன்புடன்..

    காவிரிமைந்தன்

    படத்திற்கு நன்றி

    Share
  • புரட்சிக் கவி!

    – மேகலா இராமமூர்த்தி

     Bharathidasan Thamizvazhtu

     ’பில்கணீயம்’ என்ற வடமொழி நூலைத் தழுவித் தமிழில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய காவியம் ‘புரட்சிக் கவி’. புரட்சிச் சிந்தனைகளும், பொதுவுடைமைச் சித்தாந்தங்களும் நிறைந்த இந்நூல் படிப்பதற்கு மிகவும் சுவையானது; ஆண்டான் அடிமையெனும் நடைமுறை ஒழியவேண்டும் என வலியுறுத்துவது.

    அவ்வினிய காவியத்தின் சுருக்கத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்…

    தன்மகள் அமுதவல்லி தமிழில் சிறந்த புலமையடைய வேண்டும்; கவி புனையும் ஆற்றல் பெறவேண்டும் என்று விரும்புகின்ற மன்னன் ஒருவன், ”அவள் தமிழிலக்கணம் கற்கத் தக்கதோர் புலவனைத் தேடுக!” என்று தன் அமைச்சனிடம் கூறுகின்றான்.

    அதுகேட்ட அமைச்சன், ”மிகச் சிறந்த தமிழ்ப் புலவனும் கவிஞனுமாகிய உதாரனே நம் அமுதவல்லிக்குத் தமிழ் கற்பிக்க ஏற்றவன்; ஆயினும் அவன் இளவயதும் அழகும் வாய்ந்தவன். அவனைக் கல்வி கற்பிக்க நியமிப்பதால் ஏதேனும் குறை வந்து சேராமல் இருக்கவேண்டுமே என்றுதான் யோசிக்கிறேன்” எனப் பதிலளிக்கிறான்.

    ”இதற்கு என்ன செய்வது?” என்று மன்னன் கவலையோடு வினவ, ”கண்டுபிடித்துவிட்டேன் உபாயம் ஒன்று!” என்று குதூகலித்தான் அமைச்சன்.

    ”என்ன….என்ன?” என்று மன்னன் பரபரக்க, தன் திட்டத்தை விவரிக்கிறான் அமைச்சன்….”அரசே! அமுதவல்லிக்கும் உதாரனுக்கும் இடையே பெரிய திரை ஒன்றை இட்டுவிடுவோம். ஏனென்று இருவரும் காரணம் கேட்டால்…உதாரன் குருடன் என்று அமுதவல்லியிடமும், அமுதவல்லி பெருநோய் உடையவள்; அவளைப் பார்ப்பது ஆபத்து என்று உதாரனிடமும் சொல்லிவிடுவோம்…எப்படி என் யோசனை?” என்றான்.

    ”பிரமாதம்!” என்று பாராட்டினான் அரசன்.

    அவர்கள் திட்டப்படியே தமிழ் வகுப்பு ஆரம்பமாயிற்று. சில நாட்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் வகுப்புச் சுமுகமாகவே சென்றுகொண்டிருந்தது. ஆயினும், அரசனும் அமைச்சனும் சேர்ந்து நடத்திய கபட நாடகத்திற்கோர் முற்றுப்புள்ளி வைப்பதற்கென்றே ஓர் முழுமதி நாளும் வந்தது!

    வானிலே அழகை வாரி இறைத்தபடி உலா வந்துகொண்டிருந்த நிலாவைக் கண்டதும் கவிஞனான உதாரனுக்குக் கற்பனை வெள்ளம் மடைதிறந்தது. “நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலா என்று உன் ஒளி முகத்தைக் காட்டுகின்றாயே! உன் கோலம் முழுவதையும் நீ காட்டிவிட்டால் உன்மீது காதல்பித்துக் கொண்டு அலையும் இவ்வுலகமே மடிந்துபோய்விடுமோ? நீ வானச் சோலையிலே பூத்த தனிப்பூவோ? பாற்குடமோ? அமுத ஊற்றோ?” என்றெல்லாம் விரிகின்ற அவன் கற்பனைச் சிறகில் பொதுவுடைமைத் தத்துவங்களும் தீப்பொறியாய்ச் சிதறுகின்றன. ”எம் நாட்டு ஏழை மக்கள் நித்தமும் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்தும் அவர்தம் தரித்திரம் தீராமல் பசித்த வயிற்றோடு உண்ணச் சிறிது கூழ் தேடும்போது, ஒரு பானை நிறைய வெண்சோற்றைக் காணும்போது அடையும் இன்பத்தை உனைக் காணும்போது அல்லவோ பெறுகின்றனர்!!” என்கிறான் இந்தப் புதுமைச் சிந்தனையாளன்.

    மிகவும் புகழ்பெற்ற அவ்வழகிய பாடல்…

    நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து
    நிலாவென்று காட்டுகின்றாய்  ஒளிமு கத்தைக்
    கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
    கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
    சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
    சொக்கவெள்ளிப் பாற்குடமோ அமுத ஊற்றோ!

    …………………………………………………………..

       நித்திய தரித்திரராய் உழைத் துழைத்துத்
    தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
    சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
    கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
    கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!  

    இப்பாடலைத் திரையின் மறுபுறம் அமர்ந்திருந்த அமுதவல்லி கேட்டு வியப்பில் ஆழ்ந்தாள். “ஓர் குருடன் முழுமதியின் அழகை எங்ஙனம் காணமுடியும்? காணாமலே….இவ்வளவு அழகாய்க் கவிபுனைவதும் சாத்தியமா?” என்று ஐயுற்றுத் திரையை விலக்கினாள்.

    அங்கே வானை நோக்கிக் கொண்டிருந்த வாலிபனைக் கண்டாள். வானை நோக்கிக் கொண்டிருந்த கவிஞனும் இப்போது தன் முகத்தைத் திருப்பி அருகிலிருந்த மானை நோக்கினான். ”அடடா! வானில் இதுவரை பவனி வந்த நிலா எப்போது இந்த அவனி வந்தது?” என்று ஐயுற்று மீண்டும் அந்தப் பெண்ணிலவைப் பார்த்தான். அவன் குருடனில்லை என்பதை அவள் கண்டாள்; அவள் பெருநோயாளி இல்லை என்பதை அவனும் உணர்ந்தான். இவையெல்லாம் தாங்கள் ஒருவரை ஒருவர் காணக்கூடாது என்பதற்காகப் பின்னப்பட்டச் சூழ்ச்சி வலையே என்பதை உணர்ந்தனர் இருவரும். பின்பு அங்கே தமிழ்ப் பாடம் முடிவுற்றுக் காதல் பாடம் தொடங்கிற்று என்பதை நான் நவிலவும் வேண்டுமோ?

    தன் மகளுக்கும் கவிஞனுக்கும் இடையே மலர்ந்திருந்த காதலைச் சிறிது நாட்களிலேயே அறிந்தான் மன்னன். “அரசனிடம் கைகட்டிச் சேவகம் செய்யும் ஒரு சாதாரணக் கவிஞன் அவன் மகளைக் காதலிப்பதா?” என வெகுண்டான். “கவிஞனைச் சிரச்சேதம் செய்யுங்கள்!” என்று தன் வீரர்களுக்கு உத்தரவிட்டான்.

    இக்கொடுஞ்செய்தியைக் கேட்டு நிலைகுலைந்த அமுதவல்லி அதைத் தடுப்பதற்காக உதாரன் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த இடத்திற்கு ஓடிவந்தாள். இதனால் மன்னனின் சீற்றம் மேலும் அதிகரித்தது. ”இவளை இழுத்துச் சென்று சிறையில் அடையுங்கள்!” எனக் கட்டளையிட்டான். அதுகேட்ட அமுதவல்லி, ”என் ஆருயிர்க் காதலன் இறந்துபட்டபின் நான் மட்டும் உயிர் வாழ்வேனோ? என்னுயிர் ஒன்றும் எனக்கு வெல்லமன்று!” என்று வீரத்தோடு செப்ப, கோபத்தில் சிவந்தன மன்னனின் விழிகள்.  ”இவளையும் அந்தக் கவிஞனுடனே சேர்த்துக் கொலை செய்யுங்கள்!” என்றான் வெறியோடு!

    உதாரனையும், அமுதவல்லியையும் அரசன் கொல்லப்போகும் செய்தி அறிந்து ஊரே அந்தக் கொலைக்களத்திற்கு அருகில் திரண்டிருந்தது. கடைசியாகச் சிலவார்த்தைகள் பேசும் வாய்ப்பினைப் பெற்றிருந்த உதாரனின் வீர உரை உழைக்கும் வர்க்கத்தின் சிறப்பினைப் பேசும் அற்புத உரை எனில் சற்றும் மிகையில்லை…

    கனல் கக்கும் அவன் பேச்சிலிருந்து ஒரு பகுதி…

    ”பேரன்புகொண்ட பெரியோரே, தாய்மாரே! இளஞ்சிங்கங்களே!

    காடுகொன்று நாடாக்கி, நிலந்திருத்திப் பாழ்நிலம் புதுக்கி அழகு நகராக்கியது யார்?

    வாய்க்காலையும், வயல்களையும் வகைப்படுத்தி உழவுத்தொழில் செய்து உலக மக்களுக்கு உண்டி கொடுக்க உழைக்கும் தோள்கள் எவரின் தோள்கள்?

    கல்லையும் மலையையும் பிளந்து சுரங்கங்களை வெட்டிப் பல்வேறு கருவிகளையும் செய்துதரும் கைகள் யாருடைய கைகள்?

    பொன்னையும் மணியையும் முத்தையும் எடுப்பதற்காக அடக்கிய மூச்சு எவருடைய மூச்சு?

    ”உழைக்கும் வர்க்கங்காள்! நீங்கள் எலிபோன்று பதுங்கிக் கிடப்பதால் அல்லவோ நாம் ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன் புலிவேஷம் போடுகின்றான்! உங்களைப் புல் என மதிக்கின்றான்! நீங்கள் என்னைக் காக்க வேண்டாம்! இதோ என்னைக் காதலித்த குற்றத்துக்காக என்னோடு உயிர்விடப் போகும் அரசன் மகளை…அமுதனைய அமுதவல்லியைக் காப்பீர்!” என இடிபோல் முழங்கினான்.”

    இதோ பாவேந்தரின் வைர வரிகள்…

    பேரன்பு கொண்டவரே, பெரியோ ரேஎன்
    பெற்றதாய் மாரே, நல் இளஞ்சிங் கங்காள்!
    நீரோடை நிலங்கிழிக்க, நெடுமரங்கள்
    நிறைந்துபெருங் காடாக்க, பெருவிலங்கு
    நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்
    நெடுங்குன்றில் பிலஞ்சேரப், பாம்புக் கூட்டம்
    போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்
    புதுக்கியவர் யார்? அழகு நகருண் டாக்கி!


    சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு
    தேக்கியநல் வாய்க்காலும், வகைப் படுத்தி
    நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
    நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?


    கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
    கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
    பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
    போய்எடுக்க அடக்கியமூச்சு எவரின் மூச்சு?

    அவனுடைய வீரமொழிகளால், மக்களின் ஆவேசமும், விடுதலை உணர்ச்சியும் விழிப்புற்றன. வீறு கொண்டு எழுந்த மக்கள் கொலைஞர்கள் கையில் இருந்த கொலைக்கருவிகளைப் பிடுங்கி எறிந்தனர். உதாரனையும் அமுதவல்லியையும் விடுவித்தனர். மன்னனிடமிருந்து முடியாட்சி பறிக்கப்பட்டது; நானிலத்தோர் அனைவரும் பயன்பெறும் வகையில் நாட்டின் செல்வங்கள் பொதுவுடைமை ஆக்கப்பட்டன. வீழ்ந்தது மன்னராட்சி! மலர்ந்தது சமதர்ம மக்களாட்சி!

    இதுவே புரட்சிக் கவியெனும் காவியம் நமக்குத் தரும் செய்தி! இத்தகைய அற்புதமான புரட்சிக் கவியைப் படைத்த புரட்சிக் கவிஞரைத் தொழிலாளர் தின நன்னாளில் நன்றியோடு நினைவுகூர்வோம்!

    Share
  • இன்னொரு புரட்சி

     

    மு.கோபி சரபோஜி

    img4831ng6

    மேதைகளின்
    வழிகாட்டல்களில்
    உழைப்பாளர்களாய்
    ஒன்றுபட்டோம்.

    முதலாளித்துவத்தின்
    முகமூடிகளை – நம்
    தோள் வலிமை கொண்டு
    கிழித்தெறிந்தோம்.

    கண்ணீர் சிந்தியே
    பழக்கப்பட்ட நாம்
    செந்நீர் சிந்தி
    ஜெயித்துக் காட்டினோம்.

    வியர்வையின்
    விளைச்சலை
    நாடுதோறும்
    நட்டு வைத்தோம்.

    எல்லைகள் கடந்து
    எதிரிகள் மறந்து
    மே தினமாய் – நம்மை
    அடையாளமிட்டுக் கொண்டோம்.

    அன்று
    வீரியமாய் நின்ற அடையாள தினமோ
    இன்று
    வெறும் விடுமுறை தினமாகிப் போனது

    விடுமுறையும்
    வாழ்த்தும் போதுமென
    வீரிய வித்துக்களை

    அழுகச்செய்து விட்டோம்.
    நடந்தவை உணர்ந்து
    நடப்பவை அறிந்து
    இனி ஒரு
    புரட்சிக்குத் தயாராவோம் – அது
    இன்னொரு
    மே தினமாய் இல்லாமல் – நம்மை
    மேம்படுத்தும் தினமாய் இருக்கட்டும்.
    ————————————————–

    Share