பவள சங்கரி

தலையங்கம்

மே தினம் என்றால் பொதுவுடமைக் கட்சி போன்ற ஒரு சில கட்சிகளின் பாற்பட்டது என்று கருதிக் கொண்டிருக்கிறோம். இதையும் தவிர்த்து சில அரசியல் கட்சிகள் மே தினத்தைக் கொண்டாடுகின்றன. வழக்கம் போல ‘ஒரு நாள் விடுமுறை மறுநாள் பணி’ என்ற நிலையே இன்றும் இருக்கிறது. இன்று நாம் தொழிலாளர்கள் நல்வாழ்வைப் பற்றி சிந்திப்பதே இல்லை. மேலே குறிப்பிட்டுள்ள கட்சிகளிலும் கூட தொழிலாளர் நலம் பற்றியும் அவர்தம் சிரமங்கள் பற்றியும் அதிகம் அக்கறை கொள்ளாத சூழ்நிலையே காணப்படுகிறது. இந்தியா போன்ற கீழ்திசை நாடுகளில் மே 1ம் தேதி மே தினமாகவும், அமெரிக்காவில் செப்டம்பர் 1 ம்தேதி தொழிலாளர் தினமாகவும் கொண்டாடப்படுகின்றன. முதலாளித்துவ நாடாகிய அமெரிக்காவில் கூட ஒபாமா தலைமையில் இயங்கக் கூடிய அமெரிக்க அரசு ஒரு மணி நேரத்திற்கு 10. 1 டாலராக ஊதியம் நிர்ணயம் செய்துள்ளது. இது முந்தைய நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தைக் காட்டிலும் 30 சதவிகிதம் அதிகமான ஊதியமாக நிர்ணயம் செய்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் நமது கீழ்திசை நாடுகளிலோ தொழிலாளர்களுடைய நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வே இருப்பதாகத் தெரியவில்லை. வங்காள தேசத்தின் தலை நகரில் சமீபத்தில் நடந்த தீ விபத்தில் பல நூறு தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி மாண்டுள்ளனர் என்பது வேதனைக்குரிய விசயம். பாதுகாப்பற்ற சூழ்நிலையே தொழிலாளர்களின் வாழ்வில் உள்ளது. இது அங்குமட்டுமல்ல, கம்யூனிஸ்ட் நாடான சீனாவிலும், கொரியாவிலும், நம் இந்தியாவிலும்கூட இது போன்ற நிலையே காணப்படுகின்றன. அது வெறும் உதாரணம் மட்டும்தான். இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் சூழ்நிலைகளின்பால் சென்றுள்ள நாம் தனி மனித வளங்களை மட்டுமே, பேணுகின்றோம். அந்த ஒரு சில மனிதர்களின் வாழ்விற்கு அடித்தளமாக இருக்கக்கூடிய தொழிலாளர்களின் நிலை இன்றும் அவலமாகவே உள்ளது. கனிம வளங்கள் நிறைந்த சுரங்கங்களில் பணிபுரிபவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் போன்றோரின் நிலையும் போற்றப்படுவதாக இல்லாதிருப்பது வேதனைக்குரியது. மழை பொய்த்தால் உயிர் மாய்த்தலும், சுரங்கங்களில் மாட்டிக்கொண்டால் மடிதலும் வெளி உலகிற்குத் தெரியாமலே நடைபெற்றுக் கொண்டிருக்கிற தினசரி அவலங்கள். இந்த நிலையிலிருந்து நாம் மாறி, ஆட்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கியக் காரணமாக இருக்கக்கூடிய தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைக் காப்போம், அதனைப் பெருமளவில் பெருக்குவோம். இன்று இந்தியா பொருளாதாரத்தில் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக உலகிலேயே மூன்றாவது பெரும் பொருளாதார நாடாக மாறி தனிப்பெரும் சிறப்புப் பெற்றுள்ளது. நாம் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டுமென்றால் இதற்குக் காரணமான நம் தொழிலாளர் சகோதரர்களின் உழைப்பைப் போற்றும் வகையில் உழைப்பாளர் தினத்தைப் போற்றுவோம். உழைப்பவருக்கு உரிய பங்கினை மறுக்காது அளிப்போம். காகங்களைப் போல பகிர்ந்து உண்டு வாழ்வோம். ஜெய்ஹிந்த்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *