தி.சுபாஷிணி

வழக்கத்திற்கு மாறாக, வாசற்படிகள் உயரமாய்த் தோன்றின. கால்களின் கனமும், மனத்தின் கனமும் அழுத்த ஏறுவதில் மயக்கதயக்கங்கள் ஏற்பட்டன. சில நிமிடங்கள் அவற்றைப் பார்த்ததில் கழிந்தன. “அம்மா! ஏதாவது பிரச்சினையா? நான் உதவட்டுமா?” என-, என்னை இறக்கிவிட்ட ஆட்டோக்காரர் வினவினார். “இல்லைங்க” என தலையசைத்தேன். மனமில்லாதுதான் ஆட்டோ நகன்றது. எப்படியோ படிகளில் ஏறி, வீட்டிற்குள் நுழைந்துவிட்டேன். நீண்ட குறுகிய பாதை, என்மேல் ஒரு இறுக்கத்தைப் பாய்ச்சியது. இதன் முடிவில் ஒரு உயரமான படி. அதில் தடுக்கி, தடுமாறி விழப்போனேன்!

“அடவந்துவிட்டாயா? பார்த்து வரக்கூடாதா?” என்கின்ற குரல், என்னைச் சரியாக, விழாமல் காப்பாற்றியது. இந்தக் குரல் இங்கு எப்படி-?

tkc“கலவரப்படாதே சுபா! நான் உடல் தேறிவிட்டேன்! அனாவசியமாக வேலை தடைபடக்கூடாது என மோகனையும், அண்ணாமலையையும் கூட்டத்திற்கு அனுப்பிவிட்டேன். இப்போது காந்தியைப் பற்றிக் கூறிக் கொண்டிருப்பார்கள்” என்றார். பக்கத்தில் பிரேமா, தலைமாட்டில் செண்பகவல்லி, பக்கவாட்டில் என் அத்தை. இன்னும் சில பேர்கள் இருந்தனர். நான் நன்றாகத் தேறிவிட்டேன். என்ன கொண்டு வந்திருக்கின்றாய் எனக்கு? கேட்டுவிட்டு ஏதோ சொல்கிறார். அங்கு சிரிப்பு அலை அடித்து மோதுகிறது. சட்டென்று, அப்பா யாரையோ அழைப்பதுபோல் கையை தூக்குகிறார். பின் இரு கைகளையும் தூக்கி, எதையோ பற்றுகிறார். ஆனால் அது முடியவில்லை. அலைபாய்கிறது. உடம்பு தூக்கிப்போடுகிறது. சூழ்நிலையின் மாற்றம் புரிந்து, மருத்துவரை அழைக்க சில நொடிகள் ஆகிறது. மருத்துவர் வருகிறார். அவர் இதயத்தைப் பிசைகிறார். நெஞ்சில் குத்துகிறார். அவ்வளவுதான், எல்லாம் சில நிமிடங்கள்தான். இயக்கம் நின்றுவிடுகிறது. “மாஸிவ் ஹார்ட் அட்டாக்” என்று கூறிவிட்டு மருத்துவர் வெளியேறுகிறார்.

‘அப்பா’ என அவரைப் பிடிக்க கைநீட்டுகின்றேன். காற்றுதான் என் கையில் அகப்பட்டது. கைககள் திண்ணையில் விழுந்தன. அத்திண்ணை காலியாகக் கிடக்கின்றது-. மெதுவாக ஏறி அமர்கின்றேன். முன் தெரிந்த முற்றம், என் குழப்பத்தை இன்னமும் விரிவாக்கி, இருபக்கமும் பூட்டிய கதவுகள் அமைதியின் அழுத்தத்தை மேலும் கனமாக்கின. சில நிமிடங்கள் கழிகின்றன.

திண்ணையை விட்டு இறங்கி முற்றம் முடியும் இடத்தில் ஏறி, இடப்பக்கம் ‘21ணி’ என்னும் இலக்கம் உள்ள கதவைப் பார்க்கின்றேன். பல நாட்கள் மூடிய இறுக்கம் அதில் தெரிகின்றது. கதவையொட்டிய சன்னலைக் கவனிக்கின்றேன். கதவில் இலேசான இடைவெளி காணப்படுகின்றது. சன்னல் கம்பிகளின் இடையே கையால் கதவைத் தள்ளுகின்றேன். அதன் பழமையின் ஸ்பரிசத்தை உணர்கின்றேன். கதவு திறக்கின்றது. காட்சி விரிகின்றது.

பல பத்திரிகைகள், இதழ்கள், மௌனித்துக் கிடக்கின்றன. அவைகள் பிரிக்கப்படாத ஏக்கக் குவியல்களுக்குள் தங்களை மறைத்துக் கொண்டிருக்கின்றன. பிரிக்கப்படாத தபால்களும், படிக்கப்படாத கார்டுகளும் எவற்றைத் தாங்கி நிற்கின்றனவோ! அதன் பதில்களைத் தாங்கிவரும் என தூதனுப்பிய நெஞ்சங்களின் காத்திருப்பு அவற்றில் தெரிகின்றன.

புத்தகங்கள் நிறைந்த மேஜை. பக்கத்தில் காலியான அந்தக் காலத்து நாற்காலி. அதன்மேல் இருந்த துண்டு பல நாட்களாக மாற்றாததை அறிவிக்கின்றது. பக்கத்தில் சாய்வு நாற்காலி. மேலே, சுவரைப் பார்க்கின்றேன். “என் குருநாதர் வல்லிக்கண்ணன்” என என் காதில் குரல் ஒன்று ஒலிக்கின்றது. அந்த அறையின் இடதுபக்க ஒற்றைப் பெஞ்சில் கிடந்த பழைய செய்தித்தாள்கள், பத்திரிகைகள் தோழர். பால்முகம்மது வீட்டிற்கு வந்து வெகுநாட்களாகிவிட்டன என பறைசாற்றுகின்றதே என எண்ணிக் கொண்டிருந்த வேளையில், “ஏதாவது ஷூட்டிங்குக்குப் போய் இருப்பான்” என்று என் காதில் ஒரு குரல் சொல்லிப் போயிற்று.

ஏன் கண்ணாடி மேசைமேல் விரித்து வைத்த வண்ணம் இருக்கின்றது! டெலிபோன் எண்கள் எழுதி வைக்கப்பட்ட நோட்டில் ஒரு பென்ஸிலை வைத்து திறந்து கிடக்கின்றது. தொடுகை இல்லா தொலைபேசி வாட்டமோடு அமர்ந்திருக்கின்றது. கொடியில் லாவண்டர் கலர் சட்டையும், ஒரு துண்டும் தொங்கிக் கொண்டிருக்கின்றது. அதன்கீழே கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் எவர்சில்வர் சாடி, டம்ளருடன் ஏதோ மௌனத்தில் உரையாடிக் கொண்டிருக்கின்றது போல் ஒரு உணர்வு.

கண்கள் பரந்து பார்க்கப்பார்க்க, அந்த அறையின் இன்மையைப் பகர்கின்றது. இன்மையின் வெறுமையும், தனிமையும் என்னை மீண்டும் அந்த திண்ணையில் அமரச் செய்கின்றது.

இவ்வீட்டை ஆட்சி செய்த ‘தி.க.சி.’ என்கின்ற ஆளுமை தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பட்ட ஆளுமைகளையும், இந்த முற்றம் தாண்டி, இடதுபக்க அறைக்கு வரச்செய்கின்றது என்றால், அந்த ஆளுமையின் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கின்றதே! அந்த பிரமிப்பின் சுழற்சியின் ஆழத்திற்குள் சென்று கொண்டிருக்கையில்,

“அம்மா! எப்ப வந்தீங்க! வந்து ரொம்ப நேரமாகிவிட்டதா. வாங்க போகலாம்! ஆட்டோ கொண்டு வந்திருக்கின்றேன்” என விளித்தது, அந்த பிரமிப்பிலிருந்து என்னை விடுவித்தான் அந்த அருமையான அன்பன் சரவணன். பாரதிக்கு கண்ணன். தி.க.சி.க்கு சரவணன். இருவரும் கொடுத்து வைத்தவர்கள்.

‘இதோ’ எனத் திண்ணையைவிட்டு இறங்குகின்றேன். ‘போகிறாயா! பார்த்துப் போய்விட்டு வா’ என்றது… அப்பாவின் குரல்… மீண்டும் அப்பா! இங்கு எப்படி? புதிரிலிருந்து விடுபடுமுன் சரவணன் ஆட்டோ முன் நின்றுவிட்டான். ஆட்டோவில் அமர்கின்றேன். ஆட்டோ பெருமாள்புரம் நோக்கிச் செல்கின்றது. ஆமாம்! எப்படி அப்பா இங்குவந்தார்? இன்னமும் கேள்விச் சூழலில் நான் இருக்கின்றேன்.

19சி, பெருமாள்புரம் & “அங்கு வரவா” என வினவியதற்கு 21ணி, சுடலைமாடன் கோவில் தெருவைக் கைகாட்டியது 19சி பெருமாள்புரம்& ஒரு கார் நுழையும் அளவு பெரிய கேட். அது வசதியாகச் செல்வதற்கு ஒரு ‘சரிவை’ கொத்தனார் கட்டிக்கொண்டிருந்தார். உள்ளே நுழைந்ததும் நன்றியாய் அவ்வீட்டைப் பார்க்கின்றேன்.

“வாருங்கள்! மாமா அந்த அறையில் இருக்கிறார்கள்” என வரவேற்றார் அவரது மருமகள். எப்போதும் தன் மருமகளைச் சொல்லும்போதெல்லாம் ‘பிரியமானவள்’ என்று சொல்லுவார்.

நானும், சரவணனும் தயங்குகின்றோம். ‘மாமாவை எழுப்பலாம், எழுப்புங்கள்’ என்றார். வண்ணதாசனும் வந்து, ‘உள்ளே போங்கள்’ என்றார்.

தூக்கமாகத் தெரியவில்லை. உடம்பின் நோய்மையின் ஆயாசத்தில் படுத்திருப்பது தெரிகின்றது. சரவணன் அவரைத் தொட்டு எழுப்பி, உட்கார வைத்தான்.

‘சுபாஷிணி வந்திருக்கின்றேன்’ என்றேன். (அதுசரி! அந்த வீட்டில் ஏன் என் அப்பா இருந்தார்?). ‘வாம்மா! வந்துவிட்டாயா? பிரயாணம் வசதியாக இருந்ததா? சாப்பிட்டாயா?’ என்றார் தி.க.சி. எப்படி இவரால் எந்த நிலையிலும் இப்படி அன்பாக இருக்க முடிகின்றது?

அவர் உடலின் ஆயாசம் வெளிப்படையாகத் தெரிகின்றது. அதையும் மீறி, அவரது இயல்புக்கு மீறி மனச்சோர்வு தெரிகின்றது. இது என்னுள் ஒருவித அச்சத்தைக் கிளறுகிறது. அந்த அறை அவ்வளவு வெளிச்சத்தையும், நவீனத்தின் ஒழுங்கைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும், மீறித் தெறித்த பதட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டது.

‘மி ணீனீ sவீஸீளீவீஸீரீ’ என்று அவரிடமிருந்து விழுந்த வார்த்தைகள்… என்னெஞ்சையும் வயிற்றையும் கலக்கியது. நான் சரவணனைப் பார்க்கின்றேன். அவன் அன்பின் குழந்தை. கலவரமாய் என்னைப் பார்க்கிறான்.

‘சரவணா! அந்த அலமாரியிலிருந்து அந்த நாட்குறிப்புப் புத்தகம் ஒன்றை எடு. அதில் என்றென்றும் அன்புடன் என்று எழுதி என்னிடம் கொடு’ என்றார். அவன் எழுதிக்கொடுத்தவுடன் ‘தி.க.சி.’ எனக் கையொப்பமிட்டுக் கொடுத்தார். அதுதான் அவரது கடைசி கையெழுத்து என்றும், எனக்குக் கொடுக்கப்பட்ட கடைசி புத்தகம் என்றும் நான் அறியவில்லை.

“பார்த்தாயா! சந்தியாப் பதிப்பகம் நேற்றே அனுப்பிவிட்டார்கள்” என்று சந்தோஷமாய் சிரித்தார். அவருக்கு என் நன்றியைச் சொல் என்றார்.

ஆமாம்! சந்தியா சௌந்திரராஜனுக்கும், நடராஜனுக்கும் தி.க.சி. அன்பர்கள் கடன்பட்டவர்களே!

அய்யா புத்தகம் கொடுப்பதையும், நான் அவரிடமிருந்து வாங்கிக் கொள்வதையும் என் அலைபேசிக் கேமிராவில் சரவணன் பதிவு செய்து கொண்டார். ஏதோ வேலையிலிருந்த வண்ணதாசன் அறைக்குள் வந்து வாங்க என அழைத்து, விசாரித்துவிட்டுப் போனார்.

ஆமாம்! என் அப்பா எப்படி அந்த வீட்டில் இருந்தார்? மனம் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.

“அம்மா! செம்மொழிக் கூட்டத்திற்குப் போனாயா? ஜனனேசனைப் பார்த்தாய் என்றாய்! எங்கு பார்த்தாய்?” எனக் கேட்டார். நானும் அதற்குப் பதிலிறுத்தேன். அப்போதுகூட நான் வித்தியாசமாய் உணரவில்லை.

 “அம்மா! இந்த பி.ஏ. கிருஷ்ணன், ஐன்ஸ்டீன் பற்றி எழுதியது படித்தாயா? சே! என்னமா எழுதியிருக்கின்றார். என்னைப் பற்றி கணையாழியில் பேரா.எஸ்.தோத்திரி குறிப்பிட்டு இருக்கிறார். அவருக்கு என் நன்றியைச் சொல்லு”. (ஆனால் அப்போதுகூட அறியவில்லை. பேரா.எஸ்.தோத்தரி கூடிய விரைவில் அய்யாவிற்கு நினைவுக் கட்டுரை தினமணியில் எழுதுவார் என்று). அவர் கூறிய நன்றியை இவரிடம் சொல்லலாம். ஆனால் பேரா.தோத்தரி எழுதிய கட்டுரை பற்றி அய்யாவிடம் எப்படி சொல்வது? யார் சொல்வது? தெரியலியே! ஆனால் என் அப்பா! ஏன் என்னுடனே வந்து கொண்டிருப்பதுபோல் இருக்கின்றது!

“ரொம்ப களைப்பாக இருக்கின்றது, படுத்துக்கட்டுமா?” என்று கேட்டவர், மேலும் பேச்சைத் தொடங்கினார்.

அவர் முகம் கறுத்து இருக்கின்றது. கால்கள் வீங்கி இருக்கின்றன. கைகளும் வீக்கத்தின் தொடக்கத்தில் இருக்கின்றன. இப்படி அய்யாவைப் பார்த்ததும் எனக்கு என்னவோ பண்ணியது. வலித்தது & தலையிலிருந்து கால் விரல் வரை ஒவ்வொரு அசைவும் வலித்தது. சரவணனுக்கு நம்பிக்கை இருக்கின்றது, “அம்மா! அய்யா கெதியாத்தான் இருக்கார். கவலைப்படாதீங்க!” என்கின்றான்.

அன்று இரவு ஒரு மணிக்கு கால் தடுமாறி கீழே விழுந்த தி.க.சி. தானே எழுந்து வீட்டிற்குள் வந்து நாற்காலியில் அமர்கின்றார். பின் ஒடிந்து தொங்கிய கையைத் துண்டால், மறுகையின் உதவிகொண்டு கட்டிவிட்டு வலியைப் பொறுத்துக்கொண்டு காலை 5 மணிக்காகக் காத்திருந்தார். பின் ஓவியர் பொன். வள்ளிநாயகத்திற்குப் போன் செய்திருக்கின்றார். பக்கத்து வீட்டிலிருக்கும் சுந்தரிக்குக்கூட அவர் சொல்லவில்லை. அகால வேளையில் யாரையும் தன்பொருட்டுத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அந்த வலி இருந்த அந்திக்காலையில்கூட டெலிபோனில், “கவலைப்படாதே! நான் கையை சரி பண்ணிக்கொண்டு வருகின்றேன்” என்று பேசிவிட்டுப்போன தி.க.சி.யா இன்று இல்லை எனத் தோன்றுகின்றது.

“இறப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அது இயற்கையான நிகழ்வு. அதைப்பற்றி பரவாயில்லை. என் ஞான ஆசான் பாரதி வழிதான் நான் வாழ்ந்திருக்கின்றேன். என் குருநாதர் வல்லிக்கண்ணன், பாரதிதாசன், வள்ளலார் இப்படியான சத்குருவோடுதான் என் வாழ்க்கை. நவீன அரசியலில் அறநெறி இல்லாமல் போய்விட்டது. எல்லாவற்றிற்கும் அறம்தான் முக்கியம். அம்மா! எனக்கும் பலவீனங்கள் இருந்திருக்கலாம். சில தவறுகள் செய்திருக்கலாம். ஆனால் நான் தமிழுக்கு ஒரு சில துளிகளாவது செய்து இருக்கின்றேன். தமிழனாய்ச் சாகின்றேன். வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! வாழ்க பாரத மணித்திருநாடு!” என்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறார்.

தமிழ் வாழும்! சுபாஷிணிகள் வாழ்வார்கள்! சரவணன்கள் வாழ்வார்கள்!

நண்பர்களே! வாழ்வின் அந்தியில் யாராவது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவார்களா? நம் அய்யா பாடுகிறார். எண்ணம் முழுவதும் தமிழ்தான். கலை, இலக்கியம் அறத்தை அளித்து, வாழ்க்கையை மேம்படுத்தும் என்றும் கூறினார்.

(100% உண்மை என்று என் காதில் ஒரு குரல். அட அப்பாவுடையது).

பின், தன் இருகரங்களையும் கூப்பி, கண்ணீர் மல்க, “நினைவுகள் அழிவதில்லை, நினைவுகள் அழிவதில்லை. சரி, விடைபெறுகின்றேன்” என்கின்றார்.

“சரவணன்! என்ன அய்யா, இப்படிச் சொல்கிறார்!” என்கின்றேன்.

அவனும் சொல்வது அறியாக் குழந்தையாய் நிற்கின்றான்.

பின், “படுத்துக் கொள்கின்றேன்” என்கின்றார். “நாங்கள் கிளம்புகின்றோம்” என்றோம். “அவர்கள் வேலையாய் இருந்தாலும் சொல்லிக் கொண்டு போங்கள்” என்கிறார்.

அந்தவேளையிலும், எப்படி வழிநடத்துகிறார் பாருங்கள் நண்பர்களே!

என்னிலை, எங்கள் நிலை & இரண்டும் வார்த்தைகளில் வடித்திட இயலாது.

நாங்கள் அருந்திய காப்பிக் கோப்பைகளை, அய்யாவின் மருமகள் வள்ளி அவர்களிடம் கொடுத்துவிட்டு, ‘போய் வருகின்றோம்’ என்று அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டோம். நாங்கள் வந்த ஆட்டோ வாசலில் காத்திருந்தது. ஏறி அமர்ந்து கொண்டோம். ஆட்டோ புறப்பட்டது. நாங்கள் பேசிக் கொள்ளவில்¬லை. மௌனம் வியாபித்தது. ஆனால், மௌனத்தின் அலைகளை விலக்கி மூன்றாவது ஒருவர் என்னுடன் பயணிப்பதை உணர்ந்தேன்.

“கவலைப்படாதே! அவரும் உன்னுடன் இருப்பார்” என்று உட்குரலாய் ஒலித்தார்.

மீண்டும் அய்யாவைப் பார்ப்பது சாத்தியமில்லை என உணர்த்தியது. அந்தக் கண்ணீரும் கைக்கூப்பின நெகிழ்ச்சியான விடைபெறுதலும் என்னுடன் பயணித்தது. நாங்கள் இப்போது நால்வரானோம். நண்பர்களே!

ஆட்டோ போய்க் கொண்டிருக்கின்றது. அது சுடலைமாடன் கோவிலுக்குப் போகாவிட்டாலும், நாங்கள் எங்கிருக்கின்றோமோ அங்கே, அந்த இடத்தை “21, சுடலைமாடன் கோவில் தெரு” என்று, அய்யாவின் உகந்த இடமாக்கிடுவோம்! என்று நான் நினைத்ததற்கு, “அப்படியே செய்யுங்கள்” என்று இருகுரல்கள் ஒலித்தன.

“ஹலோ! சுபாஷிணியா! அம்மா! நல்லா இருக்கீங்களா? இப்போது பேசலாமா? (இந்த வினயம் யாருக்கு வரும்?) இன்று தினமணியில் பேரா.ஞானசுந்தரம் நீதியரசர் மகராஜன் பற்றிக் கட்டுரை படித்தாயா? என் கடிதமும் வந்திருக்கின்றது. எனக்குத் தெரியும். நீ அதைப் படிக்கமாட்டாய் என்று! ‘ஹாஹா’ என வாய் கொள்ளாச் சிரிப்பு! பேரன், மகள்கள் எல்லோரையும் கேட்டதாகச் சொல்லு!” – தொலைபேசியின் தொடர்பு அறுகிறது. நான் திகைத்துப்போய் நிற்கின்றேன்.  0462 2333456 & என்று கைகள் என்னையறியாது எண்களை வருடுகின்றன. என்னையறியாது விரல்களின் அழுத்தத்தில் அழைப்பு போய்விடுகிறது. அந்தப் பக்கம் “ஹலோ! தி.க.சி. வீடுங்க? தி.க.சி. வீடுங்க” என்னும் குரல். வண்ணதாசன் குரலாக இருக்கலாம். இல்லை, அவர் தம்பி சேதுவின் குரலாகக்கூட இருக்கலாம்.

என்னால் பதில் பேசமுடியவில்லை. வாய் உலர்ந்து மேல் அன்னமும், கீழ் அன்னமும் ஒட்டிக் கொண்டன. இதயம், இதுகண்டு நெகிழ்ந்து கண்ணீரை அனுப்புகின்றது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *